Home

Monday, 3 August 2020

ஒரே உண்மை, வெவ்வேறு சொற்கள் - கட்டுரை




30.01.1948 அன்று மாலை, தன்னுடைய இருப்பிடத்திலிருந்து  பிரார்த்தனைக் கூடத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த காந்தியடிகள் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகி  மண்ணில் சாய்ந்தார். அன்று இரவு வானொலி வழியாக பிரதமராக இருந்த நேரு முதன்முதலாக தன் இரங்கலுரையை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து அன்றும் அதற்கடுத்த நாட்களிலும் சர்தார் வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், ஜகஜீவன்ராம், கிருபளானி, சரோஜினி நாயுடு, ராஜாஜி போன்ற பல தலைவர்களும் ஹோரஸ் அலெக்சான்டர், நார்மல் கிளிஃப் போன்ற அயல்நாட்டுப் பத்திரிகையாளர்களும் சி,வி,ராமன், தேவதாஸ் காந்தி, ஜி.டி.பிர்லா போன்றோரும் தொடர்ச்சியாக அஞ்சலியுரையை நிகழ்த்தினர். அவ்வுரைகளில் 33 ஆளுமைகளின் அஞ்சலியுரைகள் தொகுக்கப்பட்டு நேருவின் முன்னுரையோடு பப்ளிகேஷன் டிவிஷன் வழியாக நூலாக வெளிவந்தது. ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் புத்தகம் தமிழில் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டு சமீபத்தில் வெளிவந்தது.

ஒவ்வொரு அஞ்சலியுரையும் தேசத்துக்குத் தொண்டாற்றுவதில் காந்தியடிகளுக்கு இருந்த அர்ப்பணிப்புணர்வையும் வேகத்தையும் சுட்டிக்காட்டுகிறது. நாட்டு விடுதலைக்கு அப்பால் தேச முன்னேற்றம் சார்ந்து அவருக்கிருந்த எண்ணற்ற அக்கறைகளையும் ஆர்வங்களையும் விவரிக்கின்றது. ஏழை எளிய மக்களின் நம்பிக்கைக்கு உகந்த மனிதராக அவர் விளங்கியதையும் எடுத்துக்காட்டுகிறது.
இந்த உரைகள் வழங்கும் சித்திரங்கள் வழியாக, காந்தியடிகளைக் குறிக்கும் ஒற்றைச்சொல்லொன்றை உருவாக்கிக்கொள்ள முடிகிறது. நல்லிணக்கம் நாடியவர் என்பதுதான் அச்சொல். அவருடைய ஆழ்மனம் நல்லிணக்க நாட்டம் நிறைந்தது. அவருடைய பிரார்த்தனைக்கூடத்தில் பாடப்படும்ரகுபதி ராகவ ராஜாராம்பாட்டிலும் அது வெளிப்படுகிறது. ‘சப்கோ சன்மதி தே பகவான்என்னும் வரியில் உள்ள சன்மதி என்னும் சொல் நல்லிணக்க விழைவையே முன்வைக்கிறது. அது அனைவரிடமும் தோன்றிப் பெருகட்டும் என அவர் இறைவனிடம் மன்றாடுகிறார். அதை வெறும் மதநல்லிணக்கம் என்னும் வட்டத்துக்குள் மட்டும் நிறுத்திப் புரிந்துகொள்ளத் தேவையில்லை. சாதி வேறுபாடுகளைக் கடந்து மக்களோடு பழகுகிற பார்வையையும் ஏழை பணக்காரன் வேறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டுப் பழகுகிற பார்வையையும் படித்தவன் படிக்காதவன் என்னும் வேறுபாடுகளை உதறிவிட்டு அனைவரோடும் கலந்து பழகுகிற பார்வையையும் வேலையில் இருப்பவன், வேலையற்றவன் என்னும் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் சேர்ந்து ஒற்றுமையாக நிற்கும் பார்வையையும்  அந்தச் சொல் குறிக்கிறது. சொந்த நாட்டவன், அயல்நாட்டவன் என்னும் வேறுபாட்டைக்கூட அது பொருட்படுத்தவில்லை. அனைவரும் சமம் என ஒரே கோட்டில் எல்லோரையும் நிறுத்தி அவர்களோடு இணைந்து கொள்கிறது.  இந்த நல்லிணக்கப்பார்வையைத்தான் காந்தியடிகளின் பிரார்த்தனைப் பாடலில் உள்ளசன்மதிமுன்வைக்கிறது.
ஒவ்வொருவரும் சத்தியத்தின் வழியில் நின்று நல்லிணக்கப் பார்வையோடு வாழவேண்டும் என்பதே காந்தியடிகளின் செய்தி. சொல்வது மட்டுமல்ல, சொல்வதைச் செய்துகாட்டிய தலைவராகவும் இருந்தார் காந்தியடிகள். இறுதிக்கணம் வரைக்கும் அவர் இந்த நல்லிணக்கப்பார்வைக்காகவே வாழ்ந்தார். முப்பதாண்டுகளுக்கும் அதிகமான உழைப்பின் விளைவாக அந்தப் பார்வை நம் நாட்டில் எண்ணற்றோர் இதயங்களில் ஒரு விதையாக விழுந்து செடியாகி மரமாகி வளரத் தொடங்கியது. அங்கங்கே ஒன்றிரண்டென வளரும் மரங்கள் செழித்து தோப்பாகவும் அடர்ந்த காடாகவும் மாறத் தொடங்கிய நேரத்தில், அப்படி மாறிவிடக்கூடாது என்கிற எண்ணமும் ஓங்கி வளர்ந்து நல்லிணக்கப்பார்வையை பழிக்கத் தொடங்கியது. இறுதியாக, நல்லிணக்கப்பார்வையை வலியுறுத்தி வந்த காந்தியடிகளின் உயிரையே பறித்துவிட்டது. தலைவர்களின் அஞ்சலியுரைகள் இந்த உண்மையையே உணர்த்துகிறது.
நம் வாழ்விலிருந்து ஒளி மறைந்துவிட்டது, எங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது என்று நேரு தன் உரையைத் தொடங்குகிறார். காந்தியடிகளை அவர் ஒளி என்று குறிப்பிடுவதை நாம் கவனிக்கவேண்டும். 1800 ஆம் ஆண்டில் நம் நாடு எப்படி இருந்தது, 1900 ஆம் ஆண்டில் நம் நாடு எப்படி இருந்தது என்ற சித்திரங்களுடன் காந்தியடிகளின் வருகைக்குப் பிறகான இந்தியாவின் சித்திரத்தை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் காந்தியடிகள் வழியாக இந்த நாட்டின் மீது எப்படிப்பட்ட வெளிச்சம் படர்ந்திருக்கிறது என்று புரிந்துகொள்ள முடியும். அறுநூறுக்கும் மேற்பட்ட சின்னச்சின்ன சமஸ்தானங்களாக சிதைந்து கிடந்தது இந்த நாடு. பகல் முழுதும் கடுமையான உழைப்பு, அதன் விளைவாக கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஒவ்வொரு நாளையும் கழிக்கவேண்டிய வாழ்க்கைமுறை என்கிற அளவில் மானுட வாழ்க்கை அமைந்திருந்தது. எட்டயபுரத்தைச் சேர்ந்த சமஸ்தானம் எப்படி இயங்கியது என்பதற்குச் சாட்சியாக பாரதியார் எழுதியிருக்கும் காட்சிச்சித்திரங்கள் (சின்னச்சங்கரன் கதை) இன்றும் நமக்குச் சாட்சியாக விளங்குகின்றன. ஒரு சமஸ்தானத்தை அக்கம்பக்கத்திலிருக்கிற சமஸ்தானங்கள் எப்படியெல்லாம் கூட்டுவைத்து தந்திரங்கள் செய்து வீழ்த்துகின்றன என்பதற்கு தாமஸ் மன்றோவின் ஆட்சிக்குறிப்புகளே சாட்சியாக இருக்கின்றன. திருப்பி அடைக்கமுடியாத அளவுக்கு கடன் வாங்கிவிட்டு, அதற்கு ஈடாக தன் கட்டுப்பாட்டில் இருக்கிற கிராமங்களிலிருந்து வரி வாங்கிக்கொள்ளும் உரிமையை ஒருவர் எழுதிக்கொடுத்த கதையையும் வரி கொடுக்க மறுத்தவருக்கு தூக்கு தண்டனை கொடுத்து கொல்லப்பட்ட கதையையும் நாம் மற்றொரு சாட்சியாக எடுத்துக்கொள்ளலாம். இந்தத் தேசம் இப்படிப்பட்ட இருளில்தான் மூழ்கியிருந்தது.
பிரேம்சந்த் எழுதிய சத்கதி என்னும் சிறுகதையை இத்தருணத்தில் நினைத்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும். புல்லறுத்துச் சென்று சந்தையில் விற்றுப் பிழைக்கிற தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவன் தன் மகளுடைய திருமணத்துக்கு நல்ல நாள் பார்த்துச் சொல்லவேண்டும் என்னும் கோரிக்கையோடு, அந்த ஊரைச் சேர்ந்த சாஸ்திரியைச் சந்திக்கச் செல்கிறான். அந்த சாஸ்திரி தன்னுடைய வீட்டு தோட்டத்தையும்  தோட்டத்தையொட்டி தானியமூட்டைகளை அடுக்கிவைத்திருக்கும் சரக்குக்கூடத்தையும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளையும் பெருக்கிச் சுத்தப்படுத்தும்படி கட்டளையிடுகிறான். காலையில் எதுவும் சாப்பிடாமல் தன் வீட்டிலிருந்து நடந்தே வந்திருக்கும் அவன் தன் சோர்வைப் பொருட்படுத்தாமல் சாஸ்திரி சொன்ன வேலைகளையெல்லாம் செய்து முடிக்கிறான். சாஸ்திரி அத்துடன் விடுவதில்லை. அறுபட்டு பெரிய துண்டாகக் கிடக்கும் மரத்தை வெட்டி விறகாக்கக் கட்டளையிடுகிறான். அவனால் மறுக்கமுடியவில்லை. ஒரு பக்கம் பசி. மற்றொரு பக்கம் களைப்பு. இடைவிடாத உழைப்பின் காரணமாக அவன் மயங்கி விழுந்து உயிரை விடுகிறான். காந்தியடிகளுக்கு முந்தையை காலத்தில் நிலவிய தீண்டாமையையும் சுரண்டலையும் முன்வைக்கும் முக்கியமான சிறுகதை இது.
தீண்டாமையை உதறி, அனைவரோடும் இணைந்து வாழும் விருப்பமுடைய இளைஞனொருவனின் வாழ்க்கையை முன்வைக்கும் ஒரு சிறுகதையை ராஜாஜி எழுதியிருக்கிறார். அக்கதையின் பெயர் முகுந்தன். ஒரு கிராமத்தைச் சேர்ந்த பல சிறுவர்கள் ஒருநாள் மாலைப்பொழுதில் ஒன்றாக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு தோப்பில் அவர்கள் ஒரு குரங்குக்குட்டியைப் பார்த்துவிட்டு, அதனுடன் விளையாடி மகிழ்கிறார்கள். எங்கிருந்தோ அதைப் பார்த்துவிட்டு பாய்ந்துவரும் தாய்க்குரங்கு அனைவரையும் சீற்றத்துடன் தாக்குகிறது. எல்லோரும் திசைக்கு ஒருவராக ஓடிவிட குரங்கு ஒருவனை தாக்கி வீழ்த்துகிறது. அவன் பெயர் முகுந்தன். பிராமண வகுப்பைச் சேர்ந்தவன். அதைக் கண்ட மாரியும் சின்னானும் உடனே குட்டிக்குரங்கை தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடுகிறார்கள். அதைப் பார்த்த தாய்க்குரங்கு முகுந்தனை விட்டுவிட்டு அவர்களைத் துரத்திச் செல்கிறது. வெகுதொலைவு ஓடிய பிறகு மாரி அந்தக் குட்டிக்குரங்கை விட்டுவிட்டு விலகி வந்துவிடுகிறான். தாய்க்குரங்கு குட்டிக்குரங்கோடு சென்றுவிடுகிறது. மாரியும் சின்னானும் மீண்டும் தோப்புக்கு வந்து மயங்கிக் கிடக்கும் முகுந்தனை தூக்கிக்கொண்டு சென்று அவன் வீட்டில் சேர்க்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் தம் வீட்டுப்படியேறி வந்துவிட்டார்களே என்னும் சீற்றத்தில் முகுந்தனின் தாய் அந்தச் சிறுவர்களை கடுமையான சொற்களால் வசைபாடி அனுப்பிவிடுகிறாள்.
கால ஓட்டத்தில் முகுந்தனின் குடும்பம் வடக்கே இடம்பெயர்ந்து செல்கிறது. அவன் தாயார் இறந்துவிடுகிறாள். முகுந்தன் பிறர் உதவியோடு மருத்துவப்படிப்பை படித்து முடிக்கிறான். தன் சொந்தக் கிராமத்து மக்களுக்கு உதவவேண்டும் என்னும் எண்ணத்தில் ஊருக்கே திரும்பிவந்து மருத்துவம் பார்க்கிறான். மாரியின் குடும்பமும் சிதைந்துவிடுகிறது. பஞ்சத்தின் விளைவாக இலங்கைக்குச் சென்று வேலை செய்கிறார்கள். மாரியின் தாயும் இறந்துவிடுகிறாள்.  கொஞ்சம் பணத்தோடு கிராமத்துக்குத் திரும்பிவந்து வண்டியோட்டிப் பிழைக்கிறான் மாரி. அவன் மனைவி பூவாயி பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்று அடிவாங்கிக்கொண்டு திரும்புகிறாள். அவளுக்கு மருத்துவம் செய்து பிழைக்கவைக்கிறான் முகுந்தன். இரு பழைய நண்பர்களும் ஒருவரையொருவர் அறிந்துகொள்கிறார்கள். முன்னொரு காலத்தில் தன் தாய் செய்த பிழையை மன்னித்துவிடும்படி மாரியிடம் கேட்டுக்கொள்கிறான் முகுந்தன். இருவர் நட்பும் தொடர்கிறது. காந்தியடிகளின் வருகைக்குப் பிறகான சமூகச்சூழலின் சித்திரம் இது.
காந்தியடிகளின் வருகையால் நிகழ்ந்த மாற்றங்கள் வெளிப்படையானவை. நூல் நூற்றல், கைத்தொழில், சாதிமத வேறுபாடுகளைத் துறந்து அனைவரும் ஒன்றிணைந்து நிற்றல் அனைத்தும் அவரால் சாத்தியமாயின. பொதுவாழ்க்கையில் பெண்கள் காட்டிய ஈடுபாடு காந்தியடிகளால் உருவான மாற்றம். இவற்றையே நேரு இந்த நாட்டில் சுடர்விட்டெரிந்த ஒளி என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார்.
உலக மக்கள் அனைவரும் நேசித்த ஓர் அன்புத்தலைவர் கொல்லப்பட்ட சூழலில், இந்தியாவின் முப்பதுகோடி மக்களும் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கிற தருணத்தில் பிரதமர் நேரு தன் உரையில் ஒவ்வொரு சொல்லையும் மிகுந்த கவனத்துடன் பயன்படுத்தியிருப்பதைப் பார்க்கலாம். உணர்வெழுச்சியோடு ஒவ்வொருவரும் தன்னிச்சையாகப் பொங்கிவிடக்கூடிய ஒரு தருணத்தை நேரு மிகுந்த விவேகத்தோடு கடந்துசெல்வதை அந்த உரையில் நாம் கவனிக்கலாம். காந்தியடிகளால் உருவாகிப் பெருகிய வெளிச்சம் ஒருபோதும் குன்றிவிடக்கூடாது என்னும் எச்சரிக்கையுணர்வோடும் அது இன்னும் ஓராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தேசத்தில் நிலவவேண்டும் என்னும் விருப்பத்தோடும் அன்று அவர் உரையாற்றினார்.
நாம் இழந்துவிட்டு நிற்கிறோம் என்பதைக் காரணமாகக் காட்டி  ஒருபோதும் நடத்தை மீறிவிடக்கூடாது என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறார் நேரு. இந்த மாபெரும் அழிவுக்குப் பிறகாவது நம் அற்பச்சிக்கல்கள், கருத்துமோதல்கள், முரண்கள் அனைத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து நாம் ஒருவரையொருவர் இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்கிறார். இந்தத் தேசத்தின் மகத்தான மனிதர் எந்த மகத்தான நோக்கத்துக்காக வாழ்ந்தாரோ அதற்காக நம்மை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்வோம் என உறுதிமொழி எடுத்துக்கொள்வதே மிகச்சிறந்த பிரார்த்தனையாக இருக்கமுடியும் என்று தன் உரையை நிறைவு செய்கிறார்.
வல்லபாய் படேல் தன் உரையில் நாட்டுமக்கள் அனைவரும் தம் சீற்றத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிடுகிறார். ஒருவேளை கட்டுப்படுத்திக்கொள்ள தவறினோமென்றால், நம் நேசத்துக்குரிய ஆசானின் பாடங்களை அவருடைய மரணத்துக்குப் பின் உடனடியாக மறந்துவிட்டோம் என்றே பொருள்படும் என்று எச்சரிக்கிறார் படேல். அவரைக் கொன்றவன் அவரைக் கொல்வதன் வழியாக அவருடைய மேன்மையான வாழ்க்கைப்பணியை அழித்துவிடலாம் என போட்டிருக்கும் தப்புக்கணக்கை தப்பு என சுட்டிக்காட்டும் பொறுப்புணர்வோடு நாம் நடந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதையே தன் வாழ்க்கைப்பணியாகக் கொண்டிருந்தவர் காந்தியடிகள். அந்தப் பொறுப்பை நாம் கையில் எடுத்துக்கொண்டு தொடர்வோமென அறிவிக்கிறார் படேல்.
.நாம் அனைவருமே காந்தியடிகளின் வாழும் சின்னங்கள். சத்தியத்தைப் பதாகையாகவும் அகிம்சையை கேடயமாகவும் தாங்கிக்கொண்டு முன்னேறும் படைவீரர்கள் என்று சொல்கிறார் சரோஜினி நாயுடு.
ராஜேந்திர பிரசாத் தன் உரையில் தியாகத்தின் பாதையில் நாம் இன்னும் நெடுந்தூரம் பயணம் செய்யவேண்டும் என்று குறிப்பிடுகிறார். அமைதியும் வளமும் நிறைந்த இடமாக நம் நாட்டை உருவாக்க நாம் துன்பங்களை ஏற்று தியாகங்கள் செய்யவேண்டும் இந்தியாவின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டி நிறுவ நமக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை நாம் தவறவிடக் கூடாது. ஆதாயங்கள் மீதான பற்றைத் துறந்து ஒவ்வொருவரும் செயலாற்றவேண்டும்  என்று வேண்டிக்கொள்கிறார்.
சுதந்திரப் போராட்ட வீர்ரான கே.எம்.முன்ஷி தன் உரையில் மனிதர்களின் சிந்தனையிலும் வாழ்விலும் பெரிய மாற்றங்களை உருவாக்கிய நான்கு ஆசான்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார். நால்வருமே அகால மரணமடைந்தவர்கள் என்பது ஆச்சரியமான ஒற்றுமை. ரோம் நகரைச் சேர்ந்த சாக்ரடீஸ் சொந்த நாட்டின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு நஞ்சருந்தி மரணமடையும்படி செய்யப்பட்டார். இயேசு சிலுவையில் அறையப்பட்டார். கீதையை அருளிய கிருஷ்ணன் ஒரு வேடனின் அம்புக்குப் பலியானார். காந்தியடிகள் துப்பாக்கிக்குண்டுக்கு இரயானார். நான்கு ஆசான்களுமே இயற்கையாக மரணமடையவில்லை.
காந்தியடிகள் இறக்கலாம், காந்தியம் எப்போதும் வாழும் என்று  தம் உரையில் குறிப்பிடுகிறார் பட்டாபி சீத்தாரமையா. காந்தியம் என்னும் இலக்கை நோக்கிச் செல்லும் நூறுநூறு பாதைகளை அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்து இஸ்லாமிய ஒற்றுமை என்னும் பெரும்பணியைச் சுட்டிக்காட்டி, அந்தப் பணியில் சோர்வடையாமல் தொடர்வதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று குறிப்பிடுகிறார்.
நம்மை நஞ்சாக்கும் ஆதிபாவத்துக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறார் ராஜாஜி. நம்முடைய பிரியத்துக்குரிய தலைவரான காந்தியடிகள் நமக்காக விட்டுச் சென்ற அன்பு என்னும் ஞானத்தை, அவருடைய போதனைகளை,   வாழ்ந்த வாழ்வின் நினைவுகளை நாம் நம் நெஞ்சில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அன்பைக் கோராதே, அன்பு அவ்வழியில் எப்போதும் கிடைக்காது. அன்பு செய்யத் தொடங்குங்கள், உங்களை நோக்கி அன்பு பெருகிவரும். இது எந்தச் சட்டத்துக்கும் தர்க்கத்துக்கும் கட்டுப்பட்டதல்ல. இன்று காந்தியடிகள் இல்லை. ஆனால் அவர் கற்றுக்கொடுத்த வழி நம்மிடம் உள்ளது. அந்த வழியில் தொடர்ந்து நாம் நடப்பதொன்றே அவரை மானசிகமாக நம்முடன் நிறுத்திவைத்துக்கொள்ளும் வழியாகும் என்று குறிப்பிடுகிறார் ராஜாஜி.
மானுடத்துக்கு பல்வேறு தளங்கள் சார்ந்து சேவையாற்றவேண்டும் என விழைந்தவர் காந்தியடிகள் என்று குறிப்பிடுகிறார் ஜெயராம்தாஸ் தவுலத்ராம். அரசியலில் எந்த அளவுக்கு பொய்மையையும் தீமையையும் எதிர்த்துப் போராடினாரோ, அதே அளவுக்கு சமூக வாழ்விலும் அவர் போராடினார். ஒருவர் தன் மரணம் வரைக்கும் தீமையை எதிர்த்துப் போராடிக்கொண்டே இருக்கவேண்டும் என்றார் அவர். இன்று அவர் இல்லாத சூழலில், அவர் மேற்கொண்ட பணிகளை நாம் தொடர்ந்து மேற்கொள்வதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி ஆகும் என்று குறிப்பிட்டார். காந்தியடிகள் ஒளிபாய்ச்சிய பாதையில் ஒவ்வொரு அடியாக முன்னேற நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்தபடி இருக்கவேண்டும். நம் முன் உள்ள கடமைகளை எத்தனைக்கு எத்தனை கவனமாக நிறைவேற்றுகிறோமோ அத்தனைக்கு அத்தனை நம் மகத்தான தலைவரின் முதலும் கடைசியுமான விருப்பத்தை நிறைவேற்றியவர்கள் ஆவோம்.
எந்தத் தருணத்திலும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் எப்போதும் ஒரே மாதிரி இருந்ததே காந்தியடிகளுடைய ஆளுமையின் தனித்தன்மை என்று குறிப்பிடுகிறார் கிருஷ்ணலால் ஸ்ரீதரனி என்னும் குஜராத்தி எழுத்தாளர். வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டபோதும் சரி, ப்க்கிங்ஹாம் அரண்மனையில் அரசரைச் சந்திக்கச் சென்றபோதும் சரி, ஆசிரமத்தில் இருக்கும்போதும் சரி, எல்லாத் தருணங்களிலும் காந்தியடிகள் ஒரே மாதிரி இயல்பாகவே நடந்துகொண்டார். அவர் தன்னை ஏற்றுக்கொண்டவர்களையும் மறுத்தவர்களையும் ஒரே விதத்திலேயே நடத்தினார். தன் உறுதியான நிலைபாடுகளிலிருந்து அவர் ஒருபோதும் பின்வாங்கியதில்லை.
தன் உரையில் தண்டி யாத்திரையின்போது நடைபெற்ற ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறார் கிருஷ்ணலால். சத்தியாக்கிரகிக்குழு கரதி என்னும் கிராமத்தில் ஒரு மாந்தோப்பில் தங்கியிருந்தபோது ஒருநாள் காலையில் கிராமத்தினர் ஊர்வலமாகத் திரண்டு அவரைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் அனைவரும் பழங்கள், மலர்கள், பணமுடிப்புகளைக் கொண்டுவந்து காந்தியடிகளின் காலடியில் காணிக்கையாக வைத்தார்கள். தம் கிராமத்துக் கிணறு இத்தனை ஆண்டுகளாக நீரின்றி வறண்டுபோயிருந்ததாகவும் காந்தியடிகள் அந்த ஊரில் காலடி எடுத்து வைத்ததுமே நீர் ஊற்றெடுத்து கிணறு நிரம்பிவிட்டது என்றும் சொல்லிவிட்டு அவருடைய காலில் விழவந்தார்கள். காந்தியடிகள் சீற்றத்தோடு அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு கிணறு நிரம்பியதற்கும் தனக்கும் ஒருவித தொடர்புமில்லை என்று எடுத்துரைத்தார். பனையோலையில் காக்கை அமரும்போது பனைமரம் விழுந்துவிட நேர்ந்தால், அது காக்கையின் எடை தாங்காதுதான் விழுந்தது என்று சொல்லமுடியுமா என்று அவர்களையே பார்த்துக் கேட்டார். இந்த மாதிரி அற்ப ஒற்றுமைகளைப்பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக நூல்நூற்பதிலில் நெசவு செய்வதிலும் நேரத்தைச் செலவு செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பிவைத்தார். மற்றவர்களைப்போலவே தானும் ஓர் எளிய மனிதன் என்பதையே காந்தியடிகள் தன் அடையாளமாகச் சொல்லிக்கொண்டார் என்கிறார் கிருஷ்ணலால்.
சத்தியத்தையே தன் மதமாகக் கொண்டவர் காந்தியடிகள் என்று குறிப்பிடுகிறார் சோபியா வாடியா. சத்தியம் எங்குள்ளதோ, அங்கே ஞானமும் உள்ளது. நம் செயல்பாடுகள் அனைத்தும் சத்தியத்தைச் சுற்றியே இருக்கவேண்டும். சத்தியத்தை அறிவதற்கான ஒரே வழிமுறை அகிம்சை மட்டுமே. காந்தியடிகளின் சத்தியமும் அன்பும் நம்மை தன்முனைப்பிலிருந்து விடுபடவைக்கும். அனைவரோடும் இணைந்து செயல்படும் ஆற்றலை அளிக்கும். நல்லிணக்கப்பார்வையுடன் அனைவரோடும் இணைந்திருந்ததாலேயே காந்தியத்தின் ஆற்றல் அளப்பரியதாக இருந்தது என்று குறிப்பிடுகிறார்.
ஏராளமான அஞ்சலியுரைகளில் 33 உரைகள் மட்டுமே இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு உரையும் காந்தியடிகளைப் புரிந்துகொள்ள ஏதோ ஒருவகையில் உதவியாக இருக்கின்றன. காந்தியத்தை நினைத்துக்கொள்வதல்ல, காந்தியத்தைப் பின்பற்றுவது ஒன்றே காந்தியத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும் வழியாகும்.  உரை நிகழ்த்திய ஒவ்வொருவருமே, அந்த உண்மையை வெவ்வேறு சொற்கள் வழியாகச் சொல்கிறார்கள் என்பது முக்கியமான ஒற்றுமை.

(மகாத்மாவுக்கு அஞ்சலி. தமிழில்: சுனில் கிருஷ்ணன். பப்ளிகேஷன் டிவிஷன், லோதி சாலை, புதுதில்லி-3. விலை. ரூ 220.)
(கிராம ராஜ்ஜியம் – ஜூன் 2020 இதழில் வெளிவந்த கட்டுரை)