Home

Monday, 24 August 2020

ஓவியத்திலிருந்து இலக்கியம்வரைக்கும் - விட்டல்ராவ் நேர்காணல்

 பன்முக ஆளுமை கொண்ட எழுத்தாளர் விட்டல்ராவ். நல்ல சிறுகதையாசிரியர். நாவலாசிரியர். ஓவியர். திரைப்பட விமர்சகர். வரலாற்று ஆர்வலர். எல்லாத் தளங்களிலும் எழுபதுகளிலிருந்து தொடர்ச்சியாக பங்களிப்பு செய்துவருபவர். போக்கிடம், நதிமூலம், வண்ண முகங்கள் ஆகிய மூன்றும் அவருடைய எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டான நாவல்கள். தமிழகக்கோட்டைகள் அருமையான ஒரு வரலாற்று ஆவணம். சமூக வரலாற்றையும் மனித உறவுகளையும் இணைத்து தன்வரலாற்றுச் சாயலோடு விட்டல்ராவ் முன்வைத்திருக்கும் வாழ்விலே சில உன்னதங்கள்கட்டுரைத்தொகுப்புக்கு தேசிய அளவில் குசுமாஞ்சலி விருது இந்த ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐம்பதாண்டு கன்னட கலைப்பட வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் சுட்டிக்காட்டும் மிக முக்கியமான ஆவணநூலானகன்னட நவீன சினிமாகடந்த ஆண்டு வெளிவந்தது. ஈடுபட்ட எல்லாத் துறைகளிலும் தன் அழுத்தமான தடங்களைப் பதித்தவர் விட்டல்ராவ்.  ’பாரத சஞ்சார் நிகம்நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வுபெற்று தற்போது பெங்களூரில் வசித்துவருகிறார். மாதத்தில் ஒருநாள் அவரை நானும் நண்பர் திருஞானசம்பந்தமும் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். நடமாடும் தகவல் களஞ்சியம் என்றே அவரைச் சொல்லலாம். ஒவ்வொரு விஷயம்சார்ந்தும் நம்மிடம் பகிர்ந்துகொள்ள அவரிடம் ஏராளமான தகவல்கள் உள்ளன. அபாரமான அவர் நினைவாற்றலைக் கண்டு பல சந்தர்ப்பங்களில் ஆச்சரியங்களில் மூழ்கியிருக்கிறோம். வழக்கம்போல ஒருநாள் நாங்கள் உரையாடிக்கொண்டிருக்கும்போது, அது ஒரு நேர்காணலின் சாயலில் இருப்பதை தற்செயலாக உணர்ந்தோம். உடனே தனி நேர்காணலாகவே அமையும் விதமாக மேலும் பல கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றோம். தன் நெஞ்சிலும் நினைவிலும் சென்னை மாநகரத்தைச் சுமந்துகொண்டிருக்கும் அவருக்கு பெங்களூர்வாசம் ஒரு பெரிய சுமையாக இருப்பதை எங்களால் புரிந்துகொள்ளமுடிந்தது. சென்னையைப்பற்றி பேசத்தொடங்கினாலே அவர் முகத்தில் படரும் புன்னகையும் வெளிச்சமும் அவருடைய நேசத்தை உணர்த்தும் சான்றுகள். எழுபது வயதைக் கடந்த அவருக்கு, அவருடைய சென்னை நினைவுகளே அருந்துணையாக உள்ளன. இந்த நேர்காணலை 2017 ஆம் ஆண்டு நானும் நண்பர் திருஞானசம்பந்தமும் அவருடைய வீட்டில் உரையாடி பதிவு செய்தோம். அந்த நேர்காணல் தீராநதி இதழில் வெளியானது. தற்செயலாக என் சேமிப்பில் வேறு ஒரு கட்டுரையைத் தேடிக்கொண்டிருக்கும்போது, இந்தப் பதிவைக் கண்டுபிடித்தேன். நண்பர்கள் வாசிப்புக்காக இங்கு மீள்பதிவு செய்துவைக்கிறேன்.

உங்கள் குடும்பப்பின்னணி எப்படிப்பட்டது? உங்கள் அம்மா அப்பா எப்படிப்பட்டவர்கள்? உங்கள் அப்பாவுக்கும் உங்களுக்கும் இடையிலான உறவு எப்படி இருந்தது?

எங்கள் குடும்பம் ஒரு பெரிய ஏழைக்குடும்பம். அப்படிச் சொல்வதைவிட  மகாதரித்திரக்குடும்பம் என்று சொன்னால்தான் முழு அழுத்தமும் கிடைக்கும். இந்தத் தரித்திரம் என்பது பல வடிவங்களில் நான் சம்பாதிக்க ஆரம்பிக்கும்வரைக்கும் எங்கள் குடும்பத்தைக் கவ்வியிருந்தது. என்னுடைய தந்தையார் முதல் உலகப்போருக்காக பூனா முகாமில் பயிற்சி பெற்று, கப்பலேறி GUNNER-ஆக மெசப்பட்டோமியாவில் இன்றைய ஈரான்ஈராக் பகுதி) போர்க்களத்தில் இருந்தவர். கடைசி இரு ஆண்டுகளில் (1917-1918) ஓர் உயர்நிலை பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிக்கு அந்தரங்க ஹவில்தார் கிளார்க்காக சேவை செய்து ஓய்வுபெற்றவர். ஆங்கில அதிகாரியின் அந்தரங்க உதவியாளராக இருந்த அனுபவத்தால் அவர்களுக்கு இணையாக ஆங்கிலம் பேசக்க்கூடியவராக இருந்தார்.  கூடவே அரபி மொழியையும் உருது மொழியையும் மிக அருமையாகப் பேசக்கூடியவர். எங்கள் பள்ளிக்கூடப் படிப்புக்கு அப்பால் பல விதங்களிலும் அம்மொழியை எங்களுக்கு சீர்ப்படுத்தி மேம்படுத்தி புகட்டிவைத்தவர் அவர்தான். பள்ளிக்கூடப் புத்தகங்களோடு பழைய புத்தகக்கடைகளில் வாங்கிய நிறைய ஆங்கிலப் புத்தகங்களை எங்களிடம் தந்து படிக்கச் சொல்வார். உரக்கப் படிக்கச் சொல்வார். பள்ளியிறுதி நாட்களில் ஆங்கில நாடகங்களில் நடித்து பரிசும் பெறவைத்தவர். ஓர் ஆங்கிலவழிப் பள்ளியில் படித்துத் தேறிய அறிவை- லாவகத்தை எங்களுக்கு ஊட்டியவர். ராணுவத்தில் சேவை செய்ததால் அரசாங்க வேலையும் கிடைத்தது. மைசூர் ஸ்டேட் தமிழக எல்லைப்பகுதியில் இருந்த ஹொசூர்வாசியாக இருந்த நாங்கள் சேலம் ஜில்லாவின் விஸ்தாரப்பகுதிக்குக் குடிபெயர்ந்தோம். தாய்மொழி கன்னடம் மிகக்குறுகிய வட்டத்துக்குள் முடங்கிவிட, தமிழ்மொழியோடு ஆழமான உறவு ஏற்பட்டது. எங்கள் அப்பா, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களோடு பள்ளியில் படித்தவர். பொங்கலின்போது அவரிடமிருந்து கார்டில் அழைப்பு வரும். அப்பா என்னையும் என் அண்ணனையும் பிள்ளை அவர்களுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.

அம்மா நல்ல கதைசொல்லி. கடுமையான உழைப்பாளி. வீட்டுக்கு வரக்கூடிய தயிர்க்காரிகள், காய்கறிக்காரிகளோடு வேறுபாடு இல்லாமல் பழகக்கூடியவள். வீட்டில் உள்ள பழைய சோற்றை உள்ளன்போடு அவர்களுக்குக் கொடுப்பார். சாமையைக் குத்தி அரிசியாக்கவும், கம்பைக் குத்தி மாவெடுத்து கம்பங்களியைக் கிண்டவும் அவர்களிடம் கற்றுக்கொண்டாள். 1945,46,47 ஆம் ஆண்டுகளில் ரேஷன் தரித்திர காலத்தில் உருவான அரிசிப் பற்றாக்குறையின்போது இந்த அனுபவ அறிவு அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தது. அற்புதமான குரலில் பாடக்கூடியவள். அவளுக்கு அபார நினைவாற்றல் உண்டு. அரிய கைவினைக் கலைப்படைப்புகளைச் செய்தவள். 

எங்கள் அம்மாவைப்போலவே எங்கள் மூத்த சகோதரியான சாந்தம்மாவும் நன்றாக பாடக்கூடியவர். நல்ல அழகுள்ளவர். முறையாக நடனத்தையும் சாஸ்திரிய இசையையும் கற்றுக்கொண்டார். இதனால் சேலம் சினிமா ஸ்டுடியோவில் அவரால் எளிதாக அடியெடுத்துவைக்கமுடிந்தது. மாடர்ன் தியேட்டர்ஸாரின் 1946, 47, 48 காலத்தில் வெளிவந்த ஐந்தாறு தமிழ்ப்படங்களில் நடனவாய்ப்பும் மற்றும் சினன்ச்சின்ன பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தன. பிறகு, நடிகர் கல்யாண்குமாரின் மனைவியின் பரிந்துரையால் ஜூபிடர் கம்பெனியில் சேர்ந்தார். இதனால் சென்னை செல்லவேண்டியிருந்தது. ஜுபிடர் தயாரிப்பில் ரேவதியோடு இரண்டுமூன்று படங்களில் நடித்தார். பிறகு மைசூர்ப் பயணம். குப்பி வீரண்ணா நாடகக்கம்பெனியில் சேர்ந்து இருபத்தைந்து ஆண்டுகள் அங்கே கலைச்சேவை செய்தார். பிறகு ஹொன்னப்ப பாகவதர் கம்பெனியில் சில காலம் வேலை செய்தார். பல்வேறு நாடகக்கம்பெனிகளிலும் நடித்துப் பெயர் பெற்றார். துளு மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். நூற்றுக்கணக்கான கன்னட நாடகங்களில் நடித்த அக்கா ஏழெட்டு கன்னடத் திரைப்படங்களிலும் ஹொன்னப்ப பாகவதர், ஆர்.நாகேந்திரராவ், ஜெயம்மா. பண்டரிபாய், ராஜ்குமார், லோகேஷ் ஆகியோருடன் நடித்தவர். தன் 82 ஆம் வயதில், 2008ஆம் ஆண்டில் இயற்கையெய்தினார்.

மற்றபடி, அப்பாவுக்கும் எனக்குமான உறவு என்பது ஆசான்மாணாக்கன் நிலையில்தான் இருந்தது. தனக்குப் பிடித்ததையெல்லாம் படிக்கச் சொல்வார். நிறைய பழைய புத்தகங்களை எடுத்து வந்து தான் ரசித்த இடங்களை அடிக்கோடிட்டுப் படிக்கச் சொல்வார். தெரியாத சொற்களுக்குப் பொருள்சொல்லி விளங்கவைப்பார். என்னுடைய இளம்வயதிலேயே அவர் மறைந்துவிட்டார். இன்னும் சில ஆண்டுகள் அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்னும் பல விஷயங்களை அவரிடமிருந்து கற்றிருக்கமுடியும். அந்தப் பேறு எனக்கு வாய்க்கவில்லை.

உங்கள் அக்காவின் நாடக திரைப்பட ஆர்வம் உங்களைப் பாதித்ததுண்டா?

அக்காவின் கன்னட நாடகவாழ்க்கை மற்றும் சினிமா அனுபவம் குறித்து என்னுடைய சில நாவல்களில் எழுதியிருக்கிறேன். ஆனால் அவருடைய கலையார்வத்தால் நான் பாதிப்படைந்ததில்லை. எனது கலையார்வமும் கலையும் முற்றிலும் வேறு மாதிரியானது.

கன்னட நாடக உலகம் உங்கள் அக்காவை எப்படி ஏற்றுக்கொண்டது? அவரால் எந்த அளவுக்கு உயரமுடிந்தது?

என் சகோதரி கன்னட நாடக, திரைப்பட உலகில் அடியெடுத்துவைத்து நல்ல அறிமுகம் பெற்றிருந்தார். ஆனால் அந்தக் காலத்தில் நாடகங்களில் பிரமாத வரவேற்பு என்று எதையும் கூறமுடியாது. கம்பெனி நாடகங்களைப் பொருத்தவரை, ஒரு குறிப்பிட்ட நாடகம் வெற்றிபெற்றது என்று சொல்வார்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட நாடகம் தோல்வியுற்றது என்று சொல்வார்கள். மொத்த நாடகமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுத்தான் மதிப்பிடப்படும். ஒரு குறிப்பிட்ட நடிகர் அல்லது நடிகையைத் தனிமைப்படுத்தி உயர்த்திவைத்து, திரைப்படத்தைப்போலஅவரே-இவரேஎன்றெல்லாம்  ஆதரித்ததில்லை.

உங்கள் இளமைக்காலம் எப்படிக் கழிந்தது?

இளமைக்காலம் எனக்கான அழகியல்இலக்கியப் படைப்புகளுக்கான மூலச்சுரங்கம் என்றே சொல்லவேண்டும். எனது வாழ்க்கையும் அதன் பரந்துபட்டு விரிந்த நூற்றுக்கணக்கான வினோத அனுபவங்களும் மட்டுமே எனக்கான பல்கலைக்கழகப்பட்டப்படிப்பு. என் இளமைக்காலம் கிட்டத்தட்ட வைக்கம் முகம்மது பஷீரின் இளமைக்கால அனுபவங்களுக்கு இணையானவை என்று சொல்லலாம். அந்த இளமைக்காலத்தின் பெரும்பகுதி சேலம், தருமபுரி மாவட்டங்கள், மதுரை நகர், குன்னூர், கர்னாடகத்தின் ஹாவேரி, கதக், ஷிமோகா, சித்ரதுர்க, அரிசிகெரெ ஆகிய இடங்களில் கழிந்தது. எனது வாழ்க்கையின் மொத்த அனுபவங்களைன் நான் உற்சாகத்தோடு கையாண்டால் இன்னும் பத்துப் பதினைந்து நாவல்கள், ஐம்பது சிறுகதைகள், நூறு கட்டுரைகள் உருவாகும். எனது வாழ்க்கை என்பது, என் ஓராசிரியர் பள்ளிக்கூடவேலை, ரேடியோகிராஃபர்   பயிற்சி மற்றும் மருத்துவமனைப்பணி, மின்சார விநியோகக் கம்பெனிப்பணி, தொலைபேசித் துறைப்பணி, ஓவியப்பயிற்சி, ஓவியக்காட்சிகள், பத்திரிகைகள், எழுத்து, கன்னட நாடகக்கம்பெனி நாட்கள், திரைப்பட உலகு, தென்னகத்துப் பல்வேறு மலைகள், மலைக்கோட்டைகள், மாளிகைகள், பல்லவர் குகைக்கோயில்கள், கற்றளிகள், சோழ விஜயநகரக் கோயில்கள் மற்றும் மாளிகைகள் என விரிந்து பரவிக் கிடப்பதாகும். கல்லூரியில் புகுமுகவகுப்பில் சேர்ந்து மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் என்னை வலுக்கட்டாயமாக இழுத்து திரைப்படத்தில் பின்னணிப்பாடகனாக்கும் ஒரு முயற்சி எடுக்கப்பட்ட சமயத்தில், சென்னை மருத்துவக் கல்லூரியின் பர்னார்டு இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரேடியாலஜியில் எக்ஸ்ரே டிப்ளமோ வகுப்பில் சேரும் வாய்ப்பும் கிடைத்தது. திரைப்பட உலகைப் புறந்தள்ளிவிட்டு மருத்துவத்துறையில் நுழைந்தேன். கடுமையான பயிற்சி. பாடங்களும் கடுமையானவை. பழைய இண்டர்மீடியட் பாடத்திட்டத்தைக் கொண்டது. பயிற்சிக்காலம் அதியற்புத அனுபவங்களைத் தந்தது. ஸ்டான்லி மருத்துவமனை, மதுரை அரசினர் எர்ஸ்கின் பொதுமருத்துவமனை (இன்றைய ராஜாஜி மருத்துவமனை) குன்னூர் அரசு பெண்ட்லாண்டு மருத்துவமனை என பல இடங்களில் வேலை செய்தேன். நெய்வேலியில் தற்காலிக எக்ஸ்ரே ரேடியோகிராபராக இருந்தபோதுதான், அது என் இயல்புக்கு ஒத்துவராத ஒன்று என முடிவெடுத்து, அதைவிட்டு விலகினேன். பிறகு சேலத்தில் ஓராண்டுக் காலம் எஸ்...டி. மின்சார விநியோகக் கம்பெனியில் பணியாற்றினேன். அப்போது என்னோடு பணியாற்றிய எழுத்தாளர் மகரிஷி அவர்களுடைய நட்பு கிடைத்தது. இத்தருணத்தில்தான் எனக்குள் இருந்த எழுதும் வேகம் அடியெடுத்தது எனலாம்.  ஆனாலும் ஓவியட்த்தில் கைப்பழக்கமுள்ள என்னால் அதைச் செம்மையாகப் பயிலவே துடித்தது. குப்பி நாடகக்கம்பெனியின் ஓவியர் லிங்காச்சார் என்னும் நண்பர் எனக்குள்ளிருந்த ஓவியத்திறமையைத் தூண்டிவிட்டவர். பள்ளிநாட்களில் ஓவியப்போட்டிகளில் பரிசுகள் பெற்றதுமுதல் கோயில் சிற்பங்கள், தேர்களில் உள்ள மரச்சிற்பங்கள் என் ஆர்வத்தை இன்னும் ஆழமாகத் தூண்டிவிட்டன.

உங்கள் ஓவியப்பயிற்சி எப்படி தொடங்கியது?

இளம்வயதில் நான் பார்த்த கோயில் சிற்பங்கள், ஓவியங்கள், ஊர்த் திருவிழாவில் நடைபெறும் பத்துநாள் தெருக்கூத்து, மற்றும் பத்திரிகைகளில் வெளிவரும் படங்கள் எல்லாமே உருவ-வண்ண ரீதியிலான உணர்வை ஆழமாக ஏற்படுத்தியவை. படம் வரைவது என்பது எனக்கு ஆனா-ஆவன்னா என கரும்பலகையில் எழுதிப் பழகும் முன்னரே  சாத்தியமாகி கைவந்த ஒன்றாகும். எக்ஸ்ரே பயிற்சிக் காலத்தில் ஒரு சில ஓவியக்காட்சிகளைப் பார்த்தேன். அன்றைக்கு சென்னையில் தனியார் ஓவிய காலரி ஒன்று கூட இல்லை.  மியூசியத்து நூற்றாண்டுக்கூடம் ஒன்றையே ஓவிய, சிற்பக் காட்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.  ஆங்கில ஆட்சியில் இந்தக் கூடம் மரமேடையாலான பால்ரூம் நடனக்கூடம். வெள்ளைக்காரச் சீமான்களும் சீமாட்டிகளும் கைகோர்த்து கால் தேயச் சுழன்றாடிய பால்ரூம் கூடம். பல கலைப்பெட்டகங்களின் காட்சிகள் வைக்கப்பட்டிருந்த இந்தக் கூடம்தான் எனக்கு ஓவியம் கற்கவேண்டுமென்ற உத்வேகத்தை உருவாக்கியது.  இங்கு நடைபெற்ற ஓவியக்காட்சியொன்றில், நவீன ஓவியரும் அன்றைக்கு சென்னை கலை-கைவினைப்பள்ளியின் முதல்வருமான கே.சி.எஸ்.பணிக்கரைச் சந்தித்திதேன். பள்ளியில் மாலை வகுப்பில் சர்டிஃபிகேட் பயிற்சியில் சேர்ந்து தேறினேன். பிறகு, அங்கிருந்த THE MADRAS ART CLUB இல் சேர்ந்து முக்கிய உறுப்பினனானேன். ஓவியம் பயிலும் ஆசையின் காரணமாகவே சென்னையில் நிரந்தரமாக இருக்க ஆசைப்பட்டேன். இதற்காகவே சென்னை தொலைபேசித் துறையில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது பம்பாய் டிவிஷன் ரெயில்வேயில் T.T.E. பணிக்கு நேர்காணலெல்லாம் முடிந்து பணி உத்தரவுகூட வந்துவிட்டது. ஆனால் அதை விடுத்து, தொலைபேசித் துறையைத் தேர்ந்தெடுத்தேன். அதற்கு ஒரே காரணம் ஓவியம் பயில வேண்டும் என்னும் ஆசைதான். 1963 முதல் 1980 வரைக்கும் ஓவியம்சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்ட நான், 1978 ஆம் ஆண்டில் என் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து எல்லாவற்றையும் நிறுத்தினேன். துரதிருஷ்டவசமாக அதை நிரந்தரமாக நிறுத்தும்படி நேர்ந்து விட்டது.

எழுத்து முயற்சிகளில் எப்போது ஈடுபட்டீர்கள்?

1964 ஆம் ஆண்டுமுதலாகவே எழுத்துமுயற்சிகளில் ஈடுபட்டிருந்தேன். தீபம் இதழுக்கும் கலைமகள் இதழுக்கும் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து படைப்புகளை அனுப்பிவைத்தும் அவை வெளிவரவில்லை. 1967 ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் இதழுக்கு ஒரு சிறுகதையை அனுப்பினேன். அது உடனடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமானது. அதுவே அச்சில் வெளிவந்த என் முதல் சிறுகதை.

சென்னைவாசத்தை எப்படி உணர்ந்தீர்கள்?

என்னைப் பொருத்தவரையில் சென்னைவாசம் என்பது சொர்க்கவாசமாகும். என் எழுத்துவாழ்க்கைக்கு, ஓவிய வாழ்க்கைக்கு, புகைப்படக் கலையனுபவத்துக்கு, வெவ்வேறு விதமான ஏராளமான வரலாறுகளில் துய்ப்பதற்கு, உலகைன் பல்வேறு மொழி திரைப்படங்களைக் கண்டு ரசிப்பதற்கு இன்னும் கலை இலக்கியம் சார்ந்த என் சகல பங்களிப்புகளுக்கும் களமளித்துத் தந்தது சென்னைவாசம்தான்.

கன்னட மொழியை நன்றாகப் பேசுகிற நீங்கள், அதைப் படிக்க முயற்சி செய்யவில்லையா?

தமிழ் மற்றும் ஆங்கிலம் மூலமாகவே கன்னட இலக்கியங்களை ஓரளவுக்கு அறிமுகம் செய்துகொள்ளமுடிந்தது. என்னால் கன்னடத்தைப் பிழையில்லாமல் பேசமுடியும் என்றாலும் படிக்கவோ எழுதவோ வராது. கன்னடப் பேரிலக்கியவாதிகளான சிவராம காரந்த், மாஸ்தி, இந்திரா, அனந்தமூர்த்தி, பைரப்பா, மகாதேவப்பா, சித்தலிங்கையா, குவெம்பு, பூரணசந்திர தேஜஸ்வி எல்லோரையும் ஆங்கிலம் வழியாகவே அறிந்துகொண்டேன். கன்னடத்தைக் கற்று, கன்னடத்திலேயே படித்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் எழுபது வயதைக் கடந்துவிட்ட சூழலில் அது சாத்தியமில்லாத காரியம்.

 

தமிழகம் முழுதும் அலைந்து திரிந்து பல வரலாற்றுத் தகவல்களைத் திரட்டி ஒரு ஆய்வாளனுக்கே உரிய அர்ப்பணிப்புணர்வோடு தமிழகக்கோட்டைகள் நூலை எழுதியுள்ளீர்கள்? சாதாரணமாக வரலாற்றுத்துறையினர் செய்யவேண்டிய ஒரு வேலையை ஒரு படைப்பாளியான நீங்கள் செய்துள்ளீர்கள்? இந்த முயற்சிக்கு எது உங்களைத் தூண்டியது?

ஓவியக்கலைப்பயிற்சியும் கலைரசனையுமே மூலகாரணம். சிற்பங்கள், கோயில்கள், மாளிகைகள், இவையனைத்தும் இடம்பெற்ற கோட்டைக்கட்டுமானங்கள் எல்லாமே மிக இயல்பாகவே என்னுள் ஆழமாகப் பதிந்துவிட்டன. எனது நாலாவது வயது முதலாக கோட்டைகளைப்பற்றிய பதிவுகள், வண்ணப்படங்கள்பற்றிய பதிவுகள், கோட்டைகள் இடம்பெறும் திரைப்படங்களைப்பற்றிய பதிவுகள் எல்லாமே இடம்பெறத் தொடங்கிவிட்டன.  சிறுவயதுமுதலாகவே, எந்த ஊருக்குப் போனாலும் நான் கேட்டறிந்து தேடிச் சென்று பார்க்கும் விஷயங்கள் இரண்டு.  ஒன்று கோட்டை. இன்னொன்று சினிமாக்கொட்டகை. பிறகு ஓவியக்கலை-புகைப்படக்கலைவரலாறு மூன்றும் இலக்கியத்தோடு கலந்து என்னுள் சங்கமித்த நிலையில் கல்கத்தா விக்டோரியா மெமோரியல் கலைக்கருவூலத்துக்கு நான் சென்ற அனுபவம். டேனியல்களின் ஓவியங்களால் பைத்தியமாகிப் போன நன் அவற்றையும் ஆய்வு செய்தேன். அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் பயணித்துப் பார்த்து ஆக்வாடிண்ட் படங்களாய் படைத்த மலைக்கோட்டைகளையும் தரைக்கோட்டைகளையும் புகைப்படக்கருவியோடு நானும் முடிந்த மட்டில் தேடியலைந்து கண்டேன். அவற்றின் முழு விவரங்களையும் படித்தறிவதில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள அற்புத நூலகமான மத்திய ஆர்க்கியாலஜிகல் நூலகம் மிகவும் உதவியாக இருந்தது. அதன் நூலகர் திரு.இராஜாவின் உதவிகளை எளிதில் மறக்கமுடியாது.

 

தனிப்பட்டவகையில் உங்கள் ஓவியங்களைக் கொண்டு கண்காட்சி நடந்ததுண்டா?

ஏராளமான முறைகள் நடந்துள்ளன.  சென்னை மியுசியம் செண்டினரி ஹால், மாக்ஸ்முல்லர்பவன், பிரிட்டிஷ் கவுன்சில் ஆகிய மையங்களிலும் தனியார் காட்சிக்கூடங்கள், சரளா ஆர்ட் காலரி, மயூர் ஆர்ட் காலரி, தாஜ் கோரமண்டல் ஓட்டல் ஆகியவற்றிலும் பெங்களூர் மாக்ஸ்முல்லர் பவன், சித்ரகலாபரிஷத், மைசூர் தசரா கண்காட்சியிலும் ஐதராபாத் ஆர்ட் சொஸைட்டியிலும் சென்னை ஓவிய நுண்கலைக்கூடத்திலும் கலை-கைவினைக்கல்லூரியின் கலைக்கூடத்திலும் 1967 முதல் 1980 வரை நாற்பதுக்கும் அதிகமான காட்சிகளில் எனது ஓவியங்கள் பங்கேற்று பரிசுகள் பெற்றவை. இந்து நாளிதழ், மெயில், இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் அசைட் ஆகியவற்றில் கால்ஞ்சென்ற ஓவிய விமர்சகர்கள் திரு.ஜோசப் ஜேம்ஸ், பூவராகவன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். சென்னை ஆக்ஸ்போர்டு நிறுவனத்தில் இருந்தபோது எக்ஸ்பிரஸ் இதழுக்காக கிரீஷ் கார்னாட் என் ஓவியங்களைப்பற்றி எழுதியதுண்டு.

 

பழைய பாணியிலான ஓவியங்கள், நவீன ஓவியங்கள் இரண்டையும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பழைய நூல்கள், பழைய இதழ்கள், பழைய மனிதர்கள், பழைய உலகம் சார்ந்த ஆர்வம் எல்லாமே புதியவனற்றுக்கான ஊற்றுக்கண்கள்.  நவீன கலை இலக்கியத்தின் ஒர்யு முக்கியப் பிரிவாகக் கொள்ளப்பட்ட இன்றைய ABSTRACT ART பதினைந்தாம் நூற்றாண்டிலேயே லியர்னாடோ டாவின்சியின் சிந்தனையில் தோன்றியிருக்கிறது. இதை அவரது குறிப்புப்புத்தகத்தில் காணலாம். இந்த நவீன ஓவியத்தின் உச்சநிலைகளில் ஒன்றானதன்னிச்சையான இயங்கும் கொள்கை” (THE THEORTY AUTOMATISM) என்பதிலும் இது புலப்படும். கிறிஸ்துவின் பிறப்புக்கும் முன்னால் இந்த சிந்தனை, “கலைஞன் இயற்கையான உருவையும் அமைப்பையும் கூம்புகளாயும் சிலிண்டர்களாகவும் பிரமிட் உருவங்களாகவும் சிதைவுபடுத்தி உண்டாக்கிக் காட்டமுடியும். இதன்மூலம் அவன் தன்னுடைய கருத்து வெளிப்பாட்டை மேலும் உறுதியுடனும் ஆழமாகவும் சொல்லமுடியும்என்ற கொள்கை பிளேட்டோவின்கலைக்கொள்கையிலும் சாக்ரடீஸ் தன் மாணாக்கன் புரோடார்கள் என்பவனோடு ஃபிலிஸ்பஸ் என்னும் இடத்தில் நிகழ்த்திய உரையாடலிலும்  தெரியவருகிறது. இதைப்பற்றி ஏற்கனவே 1979 ஆம் ஆண்டில் வெளிவந்தஓவியக்கலை உலகில்என்னும் நூலில் விரிவாக எழுதியுள்ளேன். எனவே பழையது, புதியது என்பதே என் விஷயத்தில் இல்லை. எல்லாம் எல்லாமும்தான். இன்றைக்கான நவீனம் புராதனம் சார்ந்தே தோன்றுகிறது.  மீமெய்யீயமும் மாந்திரிக எதார்த்தமும் நமது ர்க

தமிழ் நாவல் வரலாற்றில் உங்களுடைய நதிமூலம் நாவலுக்கு மிகச்சிறப்பான இடமுண்டு. அந்தப் படைப்புக்கான கருவை உங்கள் மனம் எப்படிக் கண்டடைந்தது?

போக்கிடம்நாவல் வெளியீட்டு விழாவை இலக்கியச் சிந்தனை அமைப்பு நடத்தியபோது, நான் எங்கள் குடும்பத்தில் முப்பதுகளின்வாக்கில் வாழ்ந்த பழைய சுதந்திரப்போராட்ட வீரரும் தியாகியுமான ஒருவரைப்பற்றிக் குறிப்பிட்டுப் பேசினேன். இவர் என் தாயாரின் தாய்மாமன். அன்றைய பிரபல வழக்கறிஞர். என் பேச்சைக் கேட்டதும் எழுத்தாளர் சிட்டி, கண்பார்வை இழந்த ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அந்த முதியவர் தன்னை, நான் குறிப்பிட்ட சுதந்திரப் போராட்ட வீரரும் தியாகியுமான என் அம்மாவின் தாய்மாமனுக்குப் பள்ளித்தோழன் என்று சொல்லிக்கொண்டு என்னைத் தழுவினார். இதை நான் கலைஞன் பதிப்பக உரிமையாளர் திரு.மாசிலாமணி அவர்களிடம் சொன்னபோது வியப்புற்ற அவர் அதை நாவலாக விரிவுபடுத்த ஊக்குவித்தார். சிட்டியுடன் பல சந்திப்புகள், பெ.சு.மணி அவர்களோடு சில சந்திப்புகள், சிலை சத்தியாக்கிரகி தியாகி சோமயாஜுலு அவர்களோடு இரு சந்திப்புகள் எல்லாமே எனக்குப் பயனுள்ளவையாக அமைந்தன. இப்படியாகநதிமூலம்நாவல் கருக்கொண்டது.

 

இருபதாம் நூற்றாண்டின் சிறுகதைகள்என்னும் தலைப்பில் நீங்கள் தொகுத்த தொகுப்புகள் மிகமுக்கியமான ஓர் ஆவணம். இப்படி ஒரு தொகுப்பு முயற்சியில் உங்களைத் தூண்டியவர்கள் யார்? அந்த அனுபவம் எப்படி இருந்தது?

ஆசையைக் காட்டி தூண்டிவிட்டவர்கள் இருவர். அமரர் மாசிலாமணியும் அவரது மைந்தன் நந்தனும்தான்.  எவ்வளவு மறுத்தும் விடாப்பிடியாக அந்தத் தொகுப்புப்பணியை இருவரும் ஏற்கச் செய்ததோடு அதன் ஆக்கத்தில் நான் வேண்டியதற்கிணங்கி முழுச் சுதந்திரமும் அளித்தார்கள். அதனால்தான்  அந்த மூன்று தொகுதிகளும் பல பார்வையில் வித்தியாசமானதாகக் கருதப்பட்டன. அடுத்து மூன்று பாகங்களை நானும் நவீன விருட்சம் இதழாசிரியரான அழகியசிங்கரும் இணைந்து தொகுத்தோம். முதல் மூன்று தொகுதிகளுக்கும் நானே முழுப்பொறுப்புடையவன். அனேகமாக எல்லாக் கதைகளுமே என் தேர்வுதான். தொகுப்புக்காலத்தில் கிடைத்த பல அனுபவங்கள் விசித்திரமானவை. ஓர் எழுத்தாளருடைய குறிப்பிட்ட சிறுகதையை அற்புதக்கதையென நினைத்து நான் அதைத் தேர்வு செய்வேன். ஆனால் அந்த எழுத்தாளருக்கு அதைவிட வேறொரு கதையைத் தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்குமே எனத் தோன்றும். பிறகு அவருடன் உரையாடி, என் தேர்வுக்கான காரணங்களைச் சொல்லி அவரை ஏற்றுக்கொள்ளும்படி செய்யவேண்டியிருந்தது. வேறொரு எழுத்தாளர் தன் சிறுகதையை தொகுப்பில் சேர்க்கும் தகுதி எனக்கில்லை என்று கிண்டல் செய்துவிட்டு அனுமதி தர மறுத்தார். இன்னொரு எழுத்தாளரிடம் அனுமதிக்காக அணுகியபோது, அவருடைய புத்தகத்தின் பதிப்பாளர் எனக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்புவதாகக் கூறித் திருப்பியனுப்பினார். ஒருசிலர்தான் இப்படி. பெரும்பாலானோர் மகிழ்ச்சியோடு அனுமதி வழங்கினார்கள். பல நல்ல மதிப்புரைகள் அவற்றுக்கு வந்தன. இன்றளவும் அத்தொகுதிகளைப் பாராட்டுணர்வோடு நினைத்துப் பலர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அத்தகு கணங்கள்வழியாக கசப்பான அனுபவங்களைக் கடந்துவந்துவிட்டேன்.

இலக்கிய இதழ்களிலும் வணிக இதழ்களிலும் இணையான அளவில் பங்களிப்பு செய்தவர் நீங்கள். வணிக இதழ்களில் உங்கள் எழுத்துக்கு வரவேற்பு எப்படி இருந்தது?

விகடனில் தொடங்கி குமுதம், அமுதசுரபி, குங்குமம், கல்கி, புதிய பார்வை, இந்தியா டுடே என்று வணிக இதழ்களில் நிறையவே எழுதியிருக்கிறேன். தினமணிக்கதிரின் ஆஸ்தான எழுத்தாளர்களில் ஒருவன் என முத்திரை  குத்தப்பட்ட நான் அவ்வார இதழில் தொடர்கதை ஒன்று உட்பட முப்பதுக்கும் மேலான சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். என் கதைகளுக்கு கதிரில் அதிகமாகப் படம் தீட்டியவர் கோபுலு. அதே சமயம் தீபம், கணையாழி, கனவு, நவீன விருட்சம், முகங்கள், கண்ணதாசன், மக்கள் சகாப்தம், சுதேசமித்திரன், சுபமங்களா, அம்ருதா, யுகமாயினி ஆகிய இலக்கிய மாத காலாண்டிதழ்களில் நிறையவே எழுதினேன். சர்வதேச சினிமா இதழான நிழல் பத்திரிகையில் தொடராக எழுதிவந்த கட்டுரைகள் தமிழ்ச்சினிமாவின் பரிமாணங்கள் என்றும் நவீன கன்னட சினிமா எனும் இரு நூல்களாகப் பிரசுரம் கண்டன. போகப்போக வணிக எழுத்துக்கு என்னால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சமீபத்தில் பிரபல வார இதழொன்று எழுபது வயதான என்னை காதல் கதைகள் எழுத முயற்சி செய்யவேண்டும் என்று ஆலோசனை கூறியது. காதலுக்கு கண்-மூக்கு- வாய்- வயது மூப்பு எதுவுமில்லை.

உங்கள் படைப்புகளைப் பிரசுரிப்பதில் ஏதேனும் எப்போதாவது சிரமம் நேர்ந்ததுண்டா?

இதுவரை அப்படி எதுவும் நேர்ந்ததில்லை. என் நூல்களைப் பிரசுரித்த அனைவருமே அற்புதமானவர்கள். அவர்களோடான என் உறவு ரம்மியமானது.

அசோகமித்திரன், சா.கந்தசாமி, ஜெயகாந்தன் ஆகிய மூவரும் உச்சத்தில் இருந்த காலத்தில் நீங்களும் எழுதிக்கொண்டிருந்தீர்கள். அவர்கள் மூவரையும் நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

இந்த மூன்று எழுத்தாளர்களுமே தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகள். மிக அற்புதமான படைப்பாளிகள். அசோகமித்திரனின் எழுத்துகள் எனக்கு டானிக் போன்றது. என்னை உற்சாகப்படுத்தவல்லது. மிகுந்த துயர்மிக்க நிகழ்வையும் நளினமானமிக உயர்ந்த நகைச்சுவை கூடிய எழுத்தால் தணியச் செய்யும் வகை எழுத்து. இந்திய எழுத்து மொத்தத்திலும் முதன்மையான- சொற்ப படைப்பாளிகைல் அசோகமித்திரன் ஒருவர், ஜெயகாந்தன்மீது எனக்கு மரியாதை உண்டு. அபார வீச்சும் ஆண்மையும் கொண்ட அவரது எழுத்து- படைப்புகள் பல  வீறுகொண்ட இளம்படைப்பாளிகளை உருவாக்கின என்றுகூடச் சொல்லலாம். ஜெயகாந்தனின் எழுத்து ஒரு கட்டத்தில்- காலத்தின் அவசியமாகத் தோன்றியது. அவை எல்லாமே காலத்தை எதிர்த்து நிற்பவையா என்று சொல்ல முடியவில்லை. காலம் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு போகிறபோது படைப்புகளும் மாற்றம் கொண்டுதான் இருக்கின்றன. சா.கந்தசாமி மேற்சொன்ன இருவரின் எழுத்துகளிலிருந்தும் மாறுபட்ட எழுத்தாளர். இன்னும் இளமையோடு இயங்கும் படைப்பாளி.  கதைகளிலிருந்து கதையை வெளியே தள்ளிவிட்டு சொல்லப்படுவதைவிட சொல்லாததையே யோசிக்கவைப்பவர். இம்மூன்று எழுத்தாளர்களின் படைப்புகளும் ஒரு வாசிப்போடு நின்றுவிடாமல், அடுத்தடுத்த வாசிப்புகளைக் கோருபவை. இவர்களில் ஜெயகாந்தனோடு எனக்குப் பழக்கமில்லை. அசோகமித்திரனும் கந்தசாமியும் மிக நெருக்கமான்வர்கள். மூவரும் ஒருசில கூட்டங்களிலும், கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டிருக்கிறோம். கந்தசாமியின் எழுத்து அவரைப்போலவே வெளிப்படையாக எதிர்த்து எதிர் கேள்வியும் எழுப்பவல்லது.

தமிழ்ச்சூழலில் உங்கள் படைப்புகள் போதிய கவனம் பெறவில்லை என்பது கசப்பான உண்மை. அதைப்பற்றிய வருத்தம் ஏதேனும் உண்டா?

எனது படைப்புகள் போதிய கவனம் கொள்ளவில்லை என்பதில் எனக்கு- எல்லாப் படைப்பாளிகளுக்கும் இருப்பதுபோல எனக்கும் வேதனையும் வருத்தமும் உண்டு. நேரில் சந்திக்கும்போது பாராட்டும் அன்பர்கள்கூட எழுதும்போது மட்டும் ஞாபகமாக மறந்துவிடுகிறார்கள். அது எப்படி என்பது புரிந்துகொள்ளமுடியாத ரகசியமாக இருக்கிறது.   நூறு வருட நாவல்கள், நூறு ஆண்டுச் சிறுகதைகள் என தமிழ் இலக்கியவரலாறாய் எழுதியிருக்கும் எத்தனைப் பெரியவர்கள் விட்டல்ராவின் நாவல்களையும  சிறுகதைளைப்பற்றியும் சொல்லியிருக்கி்றார்கள்?  ம்? சொல்லுங்கள்.

வண்ணமுகங்கள்நாவலை அடுத்து உங்கள் நாவல் முயற்சிகள் எப்படி இருந்தன?

வண்ண முகங்களையடுத்தும் ஒரு நாவல்காம்ரேடுகள்என்ற தலைப்பில் வெளிவந்தது.  அதற்குப் பிறகு நீண்ட இடைவெளியை அடுத்து என் புதிய நாவல் ஒன்று கையெழுத்து வடிவத்தில்தயாராக உள்ளது.

ஓவிய ஆதிமூலம் அவர்களுடன் உங்களுடைய உறவு எப்படி இருந்தது?

ஆதிமூலம் எனக்கு மூத்தவர், மிகமிக அன்பானவர். தலைசிறந்த ஓவியர். ஓவியத்தைப்பற்றியும் இக்லக்கியப்படைப்புகள்குறித்தும் கராறாக மதிப்பிடக்கூடியவர். தன்னைத் தேடி வந்து தம் நூலுக்கு அட்டைப்படமோ, உள்படங்களோ கேட்பவர்களுக்கெல்லாம் முடியாது என்று சொல்லாமல் அன்போடு தாராளமாக எடுத்துக்கொடுத்த அன்பு மனிதர் ஆதி.  அவர் என்னுடைய இரு நூல்களுக்கு (நதிமூலம், காலவெளி) அரிய முகப்போவியங்கள் அரைந்து தந்ததோடு காலவெளிக்கு நல்ல முன்னுரையையும் சக ஓவியன் என்றளவில் எழுதி வழங்கினார். Between the lines என்னும் அவரது கோட்டோவியப்படைப்பு நூலை ஓவிய நுண்கலை குழு அரங்கில் வெளியிட்டபோது நான் , தமிழ்நாடன், ஓவிய நெடுஞ்செழியன், விஸ்வம், சா.கந்தசாமி, பாரதிபுத்திரன் ஆகியோர் உரையாற்றினோம்.  சந்தானம், சாம் அடைக்கலசாமி, ட்ராட்ஸ்கி மருது ஆகிய மூவரும் நான் மட்றாஸ் ஆர்ட் கிளப்பில் இருந்தபோது மாணவர்கள்.  தோட்டாதரணியும் தொடக்கத்தில் ஆர்ட் கிளப் உறுப்பினர்தான். பிறகு கல்லூரியில் முழு நேர மாணவரானார்.  இன்று இன்ந்தியாவின் முன்னணி நவீன ஓவியர்களில் முக்கியமானவரும் ஆதிமூலத்தின் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருந்தவரும், ஆதியின் உற்ற நண்பருமான அச்சுதன் கூட என்னோடு நீண்ட காலம் மட்றாஸ் ஆர்ட் கிளப்பில் பயிற்சி பெற்றவர்தான். எல்லோரோடும் எப்போதுமே எனக்கு சுமுகமான உறவு தொடர்ந்துவருகிறது.

எழுத்துவாழ்க்கையில் நீங்கள் நிறைவாக உணரும் விஷயங்கள் உண்டா?

இரண்டு விஷயங்களைப்பற்றிச் சொல்லவேண்டும். முதலாவதாக உங்களையும் சேர்த்து, .நா.சு., அசோகமித்திரன், கந்தசாமி, ஞானக்கூத்தன், வைத்தீஸ்வரன், வெங்கட் சாமிநாதன்,, வெளி.ரங்கராஜன், திலகவதி,, கோமல்.சுவாமிநாதன், இதயன், அழகியசிங்கர், சாருகேசி, ரவி சுப்பிரமணியன், சி.எம்.முத்து, தேனுகா, கோபாலி ஆகிய அற்புதப் படைப்பாளிகள்விமர்சகர்களின் அறிமுகமும் பரிவும் அன்பும் கிடைத்த விஷயம் இந்தப் பிறவியில் நான் பெற்ற பெரும்பேறாகவும் எனது இலக்கிய வாழ்வில் கிடைத்த பெரும்பேறாகவும்  நினைக்கிறேன்.  1976, 1994 ஆம் ஆண்டுகளில் என் இரண்டு நாவல்களுக்கு இலக்கியச்சிந்தனை அமைப்பு விருதளித்து கெளரவித்ததையும் எனது சமீபத்தியவாழ்வின் சில உன்னதங்கள்நூலுக்கு தில்லியில் குசுமாஞ்சலி ஃபெளண்டேஷன் அளித்த குசுமாஞ்சலி சாகித்திய சம்மான் விருது வழங்கப்பட்டதையும் உயர்ந்த கெளரவங்களாகக் கருதுகிறேன்.

உங்களுடைய படைப்புகளில் உங்களுக்கு மனநிறைவை அளித்த படைப்புகள் எவை?

எல்லாப் படைப்புகளையும் சொல்லமுடியாவிட்டாலும் பல சிறுகதைகளில், நதிமூலம், வண்ணமுகங்கள் நாவல்களில் நவீன கன்னடச்சினிமா வாழ்வில் சில உன்னதங்கள் மற்றும் பல்வேறு கட்டுரைப்படைப்புகளைப்பற்றி நான் நிறைவுகொண்டவன் என்பதோடு பெருமையும் கொள்ளுபவன்.  தமிழகக் கோட்டைகள்நூல் எனக்கான மனநிறைவைத் தந்த மற்றொரு படைப்பு.

உங்கள் எழுத்து முயற்சிகளுக்கு யாரையாவது நீங்கள் முன்னோடியாக வரித்துக்கொண்டதுண்டா? உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார்?

என் இலக்கிய முயற்சிகளுக்கு நான் யாரையும் முன்னோடியாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்படி யாரையும் சொல்லிக்கொள்ளவும் எனக்கு அவசியமில்லை. என்னைக் கவர்ந்த வகையில், தமிழில் மிகச்சிறிய வயதுமுதல் இன்றுவரை அசாத்திய ஆச்ச்ரியங்களையும் ஆவலையும் அளித்துவரும் மகாபாரதம் முக்கியமானதொரு படைப்பு. அதற்கடுத்து தமிழில் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், சா.கந்தசாமி, தி.ஜானகிராமன், பிரமிள், ஜெயமோகன் மற்றும் உங்களுடைய எழுத்துகள் என்னைக் கவர்ந்தவை.  மற்றபடி இந்திய அளவில் தாராசங்கர் பானர்ஜி, கிஷண் சந்தர், குராதுலின் ஹைதர், மகாஸ்வேதா தேவி, இஸ்மத் சுக்தாய், முகுந்தன், வைக்கம் முகம்மது பஷீர், .வி.விஜயன், அனந்தமூர்த்தி, சிவராம காரந்த், பைரப்பா, மகாதேவப்பா ஆகியோரின் எழுத்துகளை என்னைக் கவர்ந்தவையாகச் சொல்லலாம். உலக அளவில் தாஸ்தாவெஸ்கி, செகாவ், எவ்டு ஷிங்கோ, குந்தர் கிராஸ், வில்லியம் சரோயன், ஜான் ஸ்டீபக், ஹெமிங்வே, ஆல்பெர் காம்யு ஆகியோரின் படைப்புகளை விரும்பிப் படித்திருக்கிறேன்.

உங்கள் புகைப்பட ஆர்வத்தைப்பற்றி எங்களோடு பகிர்ந்துகொள்ளமுடியுமா?

நிச்சயமாக. எங்கள் குடும்பத்தின் தூர உறவினரான சுப்பாராவ் அந்தக் காலத்தில் புகழ்பெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளர். தந்திரக்காட்சிகள் எடுப்பதில் வல்லவர்.  மாடர்ன் தியேட்டர்ஸாரின் பல படங்களில் இவருடைய காமிரா திறமையைக் காணலாம். அவரைப்பற்றிய நினைவு எனக்குள் காமிராவின் பக்கம் கவனம் கொள்ளவைத்தது. பதினைந்து வயதுமுதல் கோடக் ப்ரெளனி பாக்ஸ் காமிராவைக் கொண்டு படமெடுத்தேன். பிறகு நிறைய நண்பர்களிடமிருந்து உயர்ந்த காமிராக்கள் இரவல் பெற்று- எல்லாம் கருப்பு வெள்ளை- படமெடுப்பேன். சூப்பர் ஐக்காண்டா, ரோலிஃப்ளெக்ஸ், யாஷிகா Fx-3  என்று நிறைய காமிராக்கள்.  என்னிடம் படச்சுருள் போட்டு எடுக்கும் யாஷிகா மற்றும் விவிதார் 35 எம்.எம். எஸ் எல் ஆர் வகையான காமிராக்கள் அமைதியாகத் தூங்குகின்றன. தற்சமயம் நிக்கான் டிஜிடல் காமிரா ஒன்று வைத்திருக்கிரேன். ஏராளமான மலைக்கோட்டைகளை தமிழகம், கர்னாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளில் மலைமலையாக எனது 65வது வயதுவரை ஏறிச் சென்று படமெடுத்ததையும் பல சாகசமயமான அனுபவங்கள், ஆபத்தான அனுபவங்கள் பெற்றதையும் என்தமிழகக் கோட்டைகள்நூலில் பதிவாக்கியிருக்கிறேன். முந்நூறு வருடங்களுக்கு முன்பு கிழக்கிந்தியக் கம்பெனி கால ஓவியர்கள் பெற்ற சாகச பயண அனுபவத்தின் உயிருக்கு ஆபத்தான சந்தர்ப்பங்களை- நானும் என் காமிராவும் பெற்றிருக்கிறோம். தமிழ் விமர்சகர்கள்- அசோகமித்திரனையும் வெங்கட் சாமிநாதனையும் தவிர- யாருமே தமிழகக்கோட்டைகள் நூலைப்பற்றி ஒருவரிகூட குறிப்பிட்டது இல்லை. சமீபத்தில் சா.கந்தசாமி இதைப் படித்துவிட்டு பாராட்டியது ஆறுதலாக இருந்தது.

நாற்பதாண்டுகாலத்துக்கும் மேலாக சென்னையில் வசித்த நீங்கள் பெங்களூர் நகரத்துக்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்? இந்த நகர வாசத்தை எப்படி உணர்கிறீர்கள்?

சூழ்நிலை நெருக்கடி அந்த இடமாற்றத்தைச் செய்யவைத்துவிட்டது. மனத்தளவில் இந்த இடமாற்றம் பெரிதும் பாதித்துவிட்டது. இப்போதைய பெங்களூர் நடுத்தட்டு மனிதன்- அதுவும் ஓய்வுபெற்ற அரசூழியன் வெறும் ஓய்வூதியத்தை மட்டும் வைத்துக்கொண்டு காலம் தள்ளமுடியாது. என்னைப் பொருத்தவரையில் எனது கலை இலக்கியச் செயல்பாடுகளுக்கு இந்த நகரம் சரிப்பட்டு வராது. இங்கு வந்துவிட்டதற்காக நான் தினந்தினமும் பெரிதும் நொந்து வருந்துகிறேன்.