Home

Wednesday, 12 August 2020

வாசனை - சிறுகதை

 

சந்தனநிறச் சட்டை. தீபாவளிக்கு எடுத்தது. அலமாரியிலிருந்து எடுத்து வைக்கும்போதே பாச்சா உருண்டையின் மணம் எழுந்தது. மேல்சட்டைப் பையின் மேல்விளிம்பில் எம்ப்ராய்டர் வேலையால் உருவாக்கப்பட்ட ஆங்கில எஸ் எழுத்து மட்டும் அடர்பழுப்பு நிறத்தில் இருந்தது. அடர் பழுப்பு நிறப் பேண்ட்டுக்குப் பொருத்தமான சட்டை.

சிவபாலன் அந்தச் சட்டையையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். தயக்கத்துடன் திரும்பி வெள்ளைக்கோடும் நீலக்கோடும் கட்டங்களாகக் காட்சியளிக்கும் மற்றொரு சட்டையை எடுத்து சந்தனநிறச் சட்டைக்குப் பக்கத்தில் வைத்தான். இரண்டையும் மாறிமாறிப் பார்த்தான்.

டேய் பாலா, சீக்கிரமா கெளம்பாம இன்னும் என்னடா செய்யற இங்க? வண்டி வேற வந்துட்டுதுஎன்றபடியே அறைக்குள் தம்பிதுரை வந்தான். வந்த வேகத்தில் தான் அணிந்திருந்த ஆடைகளை ஒரு நொடியில் களைந்து ஆணியில் மாட்டிவிட்டு அலமாரிக்குப் பக்கத்தில் வைத்திருந்த பெட்டியைத் திறந்து தன் புதுச்சட்டைகளை எடுத்து அணியத் தொடங்கினான்.

இப்ப கெளம்பனாத்தான் நாம ஒரு மணிக்குள்ளயாவது போய் சேரமுடியும் பாலா. காஞ்சிபுரம் என்ன பக்கத்துலயா இருக்குது? நூத்தி இருவது கிலோமீட்டர் போவணுமேஎன்றபடி கண்ணாடியைப் பார்த்து தலைசீவிக் கொண்டான். “என்ன இது, ஏதோ ஒரு வாசன புதுசா இருக்குது ஒன் ரூம்லஎன்று கேட்டான்.

வாசனயா, எனக்கு ஒன்னும் தெரியலயே. பாச்சா உண்ட வாசனயா இருக்கும். இப்பதான் அலமாரிய தெறந்தேன்என்று பதில் சொன்னான் சிவபாலன். ”அந்த வாசன எனக்குத் தெரியாதா? இது என்னமோ புதுசா ஒரு வாசனஎன்று மறுபடியும் மூச்சை இழுத்து வாசனையை நுகர்ந்தான்

சரி, வாசன இருக்கட்டும், இந்த ரெண்டுல எந்த சட்டைய போட்டுக்கலாம்? கொஞ்சம் பாத்து சொல்லுஎன்று கேட்டான் சிவபாலன்.

தம்பிதுரை திரும்பி கட்டில்மேல் வைக்கப்பட்டிருந்த இரண்டு சட்டைகளையும் ஒருகணம் பார்த்தான். மறுகணமேஅந்த கட்டம் போட்ட சட்டைய போட்டுக்கடாஎன்றான்.

அப்ப இது வேணாமா?” சிவபாலன் சந்தனநிறச் சட்டையைத் தொட்டுக் காட்டினான். அவன் குரலில் சற்றே ஏமாற்றம் தெரிந்தது. “ஒனக்கு இருவத்திநாலு மணி நேரமும் ஸ்கூல் வாத்தியாருங்கற நெனப்புதானா? பொண்ணுக்கு கல்யாணப்பொடவ எடுக்கப் போறம்டா. அத ஞாபகத்துல வச்சிக்க. பாத்தாவே பளிச்சினு தெரியறமாதிரி ஒரு மாப்ள எடுப்பா இருக்கவேணாமா?” என்றபடி சிவபாலனின் தோளைத் தட்டினான் தம்பிதுரை. பெட்டியிலிருந்து மணிபர்சை எடுத்துக்கொண்டு மீண்டுமொரு முறை கண்ணாடியைப் பார்த்து தலைமுடியைப் படியவைத்தபடியே வெளியே சென்றான்.

சட்டையை அணிந்து பெல்பாட்டத்துக்குள் இன் செய்துகொண்டு பெல்ட் போட்டபடி தன்னைத்தானே ஒருமுறை நிலைக்கண்ணாடியில் பார்த்துக்கொண்டான் சிவபாலன். தலையணைக்குப் பக்கத்தில் இஸ்திரி போட்டு மடித்துவைக்கப்பட்டிருந்த வெள்ளைக் கைக்குட்டையை எடுத்து கன்னத்தில் தெரிந்த பவுடர் பூச்சைத் துடைத்துக்கொண்டு வெளியே நடந்தான்.

திண்ணையில் முருகேசன் மாமாவும் தேவனாதன் பெரியப்பாவும் தினத்தந்தியைப் பிரித்து வைத்து படித்துக்கொண்டிருந்தார்கள். சொக்கலிங்கம் சித்தப்பாவும் நல்லசிவம் மாமாவும் கரும்புவெட்டுக்கு ஆள் கிடைக்காத குறையைப் பேசித் தணித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் குடித்துவிட்டு வைத்த டீத்தம்ளர்களை சித்தி பெண் ரேவதி எடுத்துக்கொண்டு சென்றாள். வண்டியைத் துடைத்துக்கொண்டிருந்த டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்தார் அப்பா.

 என்ன மச்சான். பேப்பர்ல என்ன போட்டிருக்கான். ஒரு எழுத்து உடாம படிச்சிட்டிருக்கிங்க?”

இந்த ஜனதா ஆளுங்க கெடச்ச வாய்ப்ப கோட்ட உட்டுடுவானுங்க போல. சரியான மடப்பசங்க. நான் பெரிய ஆளு நீ பெரிய ஆளுனு இவனுங்களுக்குள்ளயே ஓயாத சண்ட. போற போக்குல அந்த பொம்பளதான் மறுபடியும் ஆட்சிக்கு வரும் போல்ருக்கு.”

நாடா இருந்தாலும் சரி, ஊடா இருந்தாலும் சரி. ஒத்துமயா இருந்தாதான் வாழமுடியும் மச்சான். இல்லைன்னா காலம் முழுக்க கண்ண கசக்கிகினே இருக்கவேண்டிதுதான்.”

அம்மாவின் முகம் தெரிந்ததும் பேச்சு நின்றது. “இங்கயே சாமி கும்புட்டுட்டு கெளம்புவமா, இல்ல போற வழியில மாரியாத்தா கோயில்ல கும்புட்டுக்கலாமா?” என்று வாசக்கால் பக்கமாக நின்று திண்ணையில் இருந்தவர்களைப் பார்த்து பொதுவாகக் கேட்டாள். “இங்கயே கும்புட்டுக்கலாம்மா வள்ளி. கோயில் வாசல்ல எல்லாரும் ஒரு தரம் மறுபடியும் எறங்கி ஏறணும்ன்னா நேரம்தான் வீணாவும்என்றார் தேவனாதன் பெரியப்பா.

வேப்பமரத்தின் நிழலில் சாக்கு விரித்து உட்கார்ந்து அரிவாள்மனையில் புளி ஆய்ந்துகொண்டிருந்தாள் ஆயா. பத்து பன்னிரண்டு கோழிகள் அவளைச் சுற்றி நடமாடிக்கொண்டிருந்தன. “ஆயா, நீயும் வா ஆயா, வண்டிலதான போறம். அங்க வந்தா நீயும் பொண்ண பாத்தமாதிரி இருக்குமில்லஎன்றான் சிவபாலன்.

அதான் போட்டாவுலயே பாத்தனே. அப்பறம் என்ன கண்ணு? நம்ம ஊட்டுக்கு வரப்போற பொண்ணுதான? அப்ப பாத்துக்கறன்என்று வெற்றிலைக்கறையேறிய பற்களைக் காட்டிச் சிரித்தாள் ஆயா. ஆயாவுக்கு அருகில் கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்திருந்த தாத்தாநாயப்படி பாத்தா கல்யாணப்பொடவ எடுக்கற வேலையில ஒனக்கு பங்கே கெடயாது தெரியுமா? என்னமோ நம்ம செல்லப்புள்ளனு ஒன்ன கூப்ட்டும் போறாங்கஎன்றார்.

போ தாத்தா, ஒனக்கு ஒன்னுமே தெரில. இப்ப காலம் எவ்ளோ மாறி போச்சி

ஒங்க ஆயாவ தாலி கட்டற அன்னிக்குத்தான் நான் அந்த காலத்துல பாத்தன் தெரிமா. பொண்ணு பாக்கறதுக்கு கூட எங்கப்பா என்ன கூப்ட்டும் போவல. புடிக்குதா புடிக்கலயானு கூட கேக்கலை.”

அதெல்லாம் அந்தக் காலம். இப்பலாம் பொண்ணும் புள்ளையும் சம்மதம்னு சொன்னாதான் கல்யாணம்.”

தம்பிதுரையும் வண்டி டிரைவரும் சேர்ந்து தோட்டத்திலிருந்து கீற்றுகளைக் கொண்டுவந்து வேனுக்குள் ஒன்றின்மீது ஒன்றாகப் பரப்பிவைத்து அதன்மீது சமுக்காளங்களை விரித்தார்கள். டிரைவர் ஒரு படிக்கட்டுப் பலகையை எடுத்து கால்வைத்து ஏறுவதற்கு வசதியாக வண்டியோடு ஒட்டியபடி வைத்தார்.

ஆம்பளயாளுங்க எல்லாம் ஒவ்வொருத்தவங்களா வந்து ஏறுங்க. பொம்பளைங்க சாமி கும்புட்டுட்டு வருவாங்க. வாங்க.”

அப்ப நாங்க?” என்று படிக்கட்டுக்கு அருகில் வந்து சின்னப் பிள்ளைகள் அனைவரும் நின்றார்கள்.

நீங்க இல்ல செல்லங்களா. பெரியவங்க மட்டும்தான்என்றான் தம்பிதுரை. அவர்கள் முகம் உடனே வாடிவிட்டன. வேகமாக அவர்கள் அருகில் சென்றுஆத்துத் திருழாக்கு அன்னிக்கு போனமே, அதுமாதிரினு நெனச்சிட்டிங்களா?” என்று கேட்டான் சிவபாலன். அவர்கள் ஆமாம் என்பதுபோல தலையசைத்தார்கள்.

வண்டி இப்ப திருழாவுக்கு போகல. கடைக்கு போவுது. இப்ப முழு பரீச்ச லீவு வருமில்லல. அப்ப நாம எல்லாம் சேந்து மெட்ராஸ்க்கு போவலாம். சரியா? அங்க பீச்சு, ஜூ, கலங்கரைவிளக்கம்லாம் இருக்குது

பெரிய பீச்சா? கடலூரு பீச்சவிட ரொம்ப பெரிசா இருக்குமா?”

ஆமாம். ரொம்ப நீளமா இருக்கும்.”

சரி, கடயிலேந்து வரும்போது எங்களுக்கு ஏதாச்சிம் வாங்கியாறிங்களா?”

என்ன வேணும் ஒனக்கு? காராசேவு வாங்கியாரட்டுமா?”

லட்டும் காராசேவும்.”

அண்ணா, எனக்கு பூந்தி.”

சித்தப்பா, பெரியப்பா, மாமாக்கள் அனைவரும் ஒவ்வொருவராக வண்டிக்குள் ஏறி உட்கார்ந்தார்கள்.

நல்லா மெத்மெத்துனு செஞ்சி வச்சிட்டான் நம்ம தொர. ஆளு தெறமசாலிப்பா.”

மச்சான். அவனும் வளந்து நிக்கறானில்ல. அவனுக்கும் ஒரு பொண்ண பாருங்க. சீக்கிரமா கல்யாணத்த பண்ணிடுவம்…”

நானா பண்ணமாட்டறன்? சுத்துவழி சொந்தத்திலயே மூனு பொண்ணுங்க இருக்குது. இவன் யார காட்டனாலும் சரி. அப்பவே முடிச்சிடலாம். அவுங்க குடுக்க தயாராதான் இருக்கறாங்க. கைக்கு ஒரு வேல அமையட்டும், அப்பறம் பாக்கலாம்னு இவன்தான் இழுக்கறான்…”

அவன் சொல்றதும் ஞாயம்தான? கல்யாணத்துக்கப்பறம் பொண்டாட்டிய வச்சிகினு ஒங்கிட்ட வந்து நூற குடு எரநூற குடுன்னு கேக்க முடியுமா? ஒருநாளு ரெண்டுநாளு குடுப்ப. அப்பறம் அலுப்புசலிப்புல எதயாவது சொல்வ? அதெல்லாம் தேவையா? சொந்த சம்பாத்தியம்னு ஒன்னு இருந்தா, அவனுக்கு நல்லதுதான?”

நான் ஒன்னும் தப்பு சொல்லலியே. சர்க்காரு வேல கெடச்ச பிறகுதான் கல்யாணம் செஞ்சிக்குவன்னு ஒத்தக் கால்ல நிக்கறான் அவன். நான் என்ன செய்யமுடியும் சொல்லு.?”

நம்ம சிவபாலனவிட தம்பிதொர பெரியவனில்ல?”

ஆமா. ஒரு வருசம் மூத்தவன்.”

அந்த ரயில்வே வேல என்னாச்சி? போன மாசம் இன்டர்வ்யூ இருக்குதுனு மெட்ராஸ்க்கு போய்வந்தான?”

அந்த முடிவு இன்னும் தெரில. எல்லாம் கூடி வந்தா அடுத்த தைக்குள்ள முடிச்சிடலாம்.”

அம்மா, சித்தி, பெரியம்மா, அத்தை அனைவரும் கதவைப் பூட்டிக்கொண்டு தாத்தாவிடமும் ஆயாவிடமும்  சொல்லிக்கொண்டு வந்து வண்டியில் ஏறினார்கள்.

பிரித்திருந்த தடுப்புப்பலகையை நிமிர்த்தி கொண்டியில் பொருத்தி சங்கிலி போட்டுக் கட்டிவிட்டு படிக்கட்டுப் பலகையை எடுத்து வண்டிக்குள் ஓரமாக வைத்தான் சிவபாலன்.

நானும் சித்தப்பாவும் முன்னால ஒக்காந்துக்கறம். நீ பின்னால எடம் பாத்து உக்காதுக்கடா.”

சிவபாலன் வேப்பரமத்தடிக்குச் சென்றான். ஆயா, தாத்தாவிடம்   விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான். தடுப்புப்பலகையில் விளிம்பில் கால்வைத்து மேலே தொங்கிய கயிற்றைப் பிடித்துக்கொண்டு தாவி வண்டிக்குள் ஏறினான். சின்னப்பிள்ளைகள் அனைவரும் அவனைப் பார்த்து கையசைத்தார்கள்.

ஏன் பாலா, மதியச் சாப்பாடு எங்க?” என்று கேட்டார் முருகேசன் மாமா. எல்லோரும் அதைக் கேட்டு சிரித்தார்கள்.

இன்னம் தெருவயே தாண்டல. அதுக்குள்ள மாமனுக்கு மதிய சாப்பாட்டு ஞாபகம் வந்துட்டுது.”

மீண்டும் சிரிப்பு அதிர்ந்தது.

நடுவுல எதாவது காரம் சாரமா உண்டானு தெரிஞ்சிக்கறதுக்காக கேட்டன்?” மறுபடியும் தொடங்கினார் முருகேசன் மாமா. அதைக் கேட்டதும் சிவகாமி அத்தைக்கு கோபத்தில் முகம் சிவந்தது. ”ஒரு ஈசிபேசி இல்லாம பேசுது பாரு. ஆளுதான் கெடாவாட்டம் வளந்திருக்குது. புத்தி வளரலைஎன்று முணுமுணுத்தாள். அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து சாலையின் பக்கமாகத் திரும்பிக்கொண்டாள்.

ம். ஏரிபட்டுல பச்சமொளகா சட்டினியும் ஒரு பாட்டிலும் குடுக்கறாங்களாம். எறங்கிக்கலாமா?”

நாம போற வேல என்ன, நீங்க பேசற பேச்சு என்ன? வேத்து மனுசங்க முன்னால நமக்கு ஒரு மரியாத வேணாமா? நேரம் காலம் தெரியாம எல்லா நேரத்துலயும் ஒரே பேச்சுதானா?”

நான் வந்தா மரியாதயா இருக்காதுன்னா, என்ன இங்கயே எறக்கி உட்டுடுங்க.”

ஐயய்ய. நீங்க ரெண்டு பேரும் இப்பிடி மாறிமாறி பேசிகிட்டா என்ன அர்த்தம்? பக்கத்துல பெரியவங்க சின்னவங்க இருக்காங்கங்கற நெனப்பு வேணாமா?” அம்மா பொதுவில் சத்தம் போட்டதும் பேச்சு நின்றது. சித்தி பேச்சை மாற்றும் விதமாக சிவபாலனைப் பார்த்துபொண்ணு ஊட்டுக்காரங்களும் இந்நேரத்துக்கு கெளம்பியிருப்பாங்க இல்ல?” என்று கேட்டாள்.

பன்னெண்டு மணிக்குலாம் பஸ் ஸ்டேன்ட்கிட்ட வந்துடுவம்ன்னு சொன்னாங்க சித்தி.”

அப்ப, அவுங்க வந்து மொத ஆளா நிப்பாங்கன்னு சொல்லு.”

நாமளும் போயிருக்கலாம். ஆனா நாம சொல்லிவச்ச வண்டி இப்பதான வந்தது? அதுல நம்ம தப்பு ஒன்னும் இல்லயே.”

சித்தி நிறுத்தியதும் கல்பனா அத்தை ஏன் பாலா, இங்க சிறுவந்தாடுதான நமக்கு பக்கம். பட்டுப்பொடவய இங்கயே எடுத்திருக்கலாமே. எதுக்கு காஞ்சீபுரம் வரைக்கும் போவணும்?” என்று தொடங்கினாள். “போவ வர ஒரு நாளு ஆயிடுமே

காஞ்சிபுரம் பட்டுன்னு சொன்னா ஒரு தனி கெளரவம்தான அத்த?”

எங்களுக்குலாம் சிறுவந்தாட்டுலதான் எடுத்தாங்க.”

கூட்டுரோடைத் தாண்டும்போது வண்டியை நிறுத்தி எல்லோரும் பூ வாங்கி வைத்துக்கொண்டார்கள். “பாப்பா, ரெண்டு ரூபாய்க்கி தனியா மல்லிப்பூ கட்டிக் குடும்மாஎன்று கேட்டு தனியாக வாங்கி வைத்துக்கொண்டாள் அம்மா. “அந்த ரஞ்சினி புள்ளைக்கு குடுத்தா சந்தோஷப்படும் இல்ல. ரஞ்சினிதானடா அந்த புள்ள பேரு?” என்று சிவபாலனைப் பார்த்தாள். சிவபாலன் வெட்கத்தில் முகம்சிவக்கம்என்றபடி குனிந்துகொண்டான்.

தம்பிதுரை பூவுக்கான பணத்தை எடுத்துக் கொடுத்ததும் வண்டி புறப்பட்டது.

அண்ணி, பாலா கல்யாணம் முடிஞ்ச கையோட ஐயனாருக்கு ஒரு கெடாவ வெட்டி பொங்கல் வைக்கணும்ண்ணி.”

குடும்பத்தோட போயி வச்சிட்டு வருவம். அதுக்கு முன்னால பத்திரிக அடிச்சி முடிச்சதும் மொத பத்திரிகய எடுத்தும் போயி அய்னாரு கால்ல வச்சி படச்சிட்டு வரணும்.”

அப்ப, அதுக்கும் ஒரு கெடா வெட்டுவமா?”

கெடாதான? வெட்டிடுவம்.”

நீங்க கோயிலுக்கு போற தேதி என்னன்னு மட்டும் எங்கிட்ட சொல்லுங்க. கெடா செலவ நான் ஏத்துக்கறேன். பொங்கல் வைக்கறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலயே வீட்டுல கொண்டாந்து எறக்கிடுவன். கண்டறகோட்ட கெடா. சும்மா சிங்கம்மாதிரி இருக்கும்.”

ஆட்டுக்காரன்கிட்ட சும்மா ஒரு வாய்வார்த்தயா சொல்லி வைங்க நீங்க. சித்திரமாசத்துலதான் தேதி குறிச்சி குடுத்திருக்காரு ஐயரு. நடுவுல நாள் நெறயா கெடயாது. பத்திரிகய அடிச்சி முடிச்சதும் போய் வந்துடலாம்.”

எதுக்கு அவ்ளோ நெருக்கடியில சித்திரயிலயே வச்சிட்டிங்க. கொஞ்சம் நாள் கழிச்சி வைகாசி ஆனியில வச்சிருக்கலாமே.”

மண்டபம் கெடக்கணுமே. இந்த சித்திரையிலதான் மண்டபம் கெடைச்சிது. இல்லன்னா ஆவணிக்கு தள்ளி போயிடும். சித்திரைன்னா புள்ளைங்களுக்கு லீவ் நாளில்லயா? ஊட்டோடயே இருக்கலாம். நிம்மதியா நாலு எடம் போய் வரலாம். அக்கடானு ஊட்டுல படுத்துங்கெடக்கலாம்.  வேணும்ன்னா கோயில் கொளத்துக்கும் போய்வரலாம். எல்லாத்துக்கும் வசதியா இருக்கும்.”

மாப்பளைக்கு பொண்ணு ஊட்டுல புல்லட்டு கில்லட்டுனு பெரிய வண்டி ஏதாச்சிம் குடுக்கறாங்களா?”

அதெல்லாம் ஒன்னும் கெடயாது. பாலா அதெல்லாம் எதயும் கேக்க கூடாதுனு கறாரா சொல்லிட்டான்.”

அப்படியா பாலா? என்ன பாலா இது ? உலகம் தெரியாத பச்ச புள்ளயா இருக்கியேப்பா. ஊர்ல பத்து ரூபா சொந்தமா சம்பாதிக்க தெரியாதவனெல்லாம் கூட நான் பெரிய ரியல் எஸ்டேட், நான் பெரிய பைனாசியர்னு பொய்ய சொல்லிட்டு பொண்ணு ஊட்டுக் காரங்ககிட்டேர்ந்து புடுங்கிட்டு ஓடறானுங்க. நீ ஒரு ஸ்கூல் டீச்சர். சர்க்கார் வேல. மூச்சு இருக்கற காலம் வரைக்கும் உனக்கு சம்பளம் உண்டு. பென்ஷன் உண்டு. நீ எதயும் கேக்கலைன்னா எப்பிடி?”

சிவபாலனுக்கு எரிச்சலாக இருந்தது. ”வரதட்சணை வாங்கறதும் குற்றம், குடுக்கறதும் குற்றம். அப்படித்தான் சட்டம் சொல்லுது.”

தட்சணயின்னா என்ன நினைச்சிட்ட நீ? அது ஒரு அன்பளிப்பு. ஒரு காணிக்கை. பொண்ண காலம் முழுக்க வச்சி காப்பாத்தற பையனுக்கு பொண்ணு ஊட்டுக்காரங்க மனப்பூர்வமா குடுக்கற அன்பளிப்பு.”

அதெல்லாம் நாமாவே நினைச்சிக்கற கற்பனை. இப்ப அது சட்டப்படி குற்றம்.”  

வண்டி வேகமாகச் சென்றது. திண்டிவனத்தைத் தாண்டியதும் ஒரு இடத்தில் மட்டும் தேநீர் அருந்துவதற்காக பத்து நிமிடம் நிறுத்தினார்கள். அதற்குப் பிறகு இறக்கை முளைத்ததுபோல பறந்து சென்றது வண்டி.

சிவபாலன் மனமெல்லாம் காஞ்சிபுரத்திலேயே இருந்தது. ரஞ்சனி வந்த வண்டி வந்திருக்குமா, காஞ்சிபுரத்தில் இறங்கியதும் அவளால் தன்னைக் கண்டுபிடித்துவிட முடியுமா, நெருங்கி வந்து பேசுவதற்கு நேரமிருக்குமா என்றெல்லாம் நினைவுகள் அலைபாய்ந்தன.

பெரியப்பாவிடமிருந்து தினத்தந்தியை வாங்கி நாலாக மடித்துவைத்துக்கொண்டு ஒவ்வொரு செய்தியாக சத்தம் போட்டு படித்தாள் அத்தை.

காஞ்சிபுரம் பஸ் ஸ்டான்டில் இறங்கும்போது மணி ஒன்றரையாகிவிட்டது. பெண்வீட்டு வண்டி கண்பார்வையில் படும்படியே நிறுத்தப்பட்டிருந்தது. அதற்குப் பக்கத்திலேயே சென்று வண்டியை நிறுத்தவைத்தான் தம்பிதுரை. வேகமாக இறங்கி அங்கிருந்தவர்களையெல்லாம் பார்த்து கைகுவித்து வணங்கினான். ரஞ்சினியின் முகம் சிவபாலனைத் தேடியது.

மாப்பள பின்னால வெயில் படாம உக்காந்து வராருதம்பிதுரையின் சொற்களைக் கேட்டு வெட்கம் கொண்டு வேகமாக நகர்ந்து சென்று தன் வண்டியோடு ஒட்டிக்கொண்டு நின்றாள் ரஞ்சினி.

வண்டியிலிருந்து கடைசியாக இறங்கி உடைகளை சீர்படுத்தியபடியே வந்த சிவபாலன் அவளை நிமிர்ந்து பார்க்கும் விதமாக தொண்டையைச் செருமினான். அவள் திரும்பி அவனைப் பார்த்து திகைத்து, பிறகு மகிழ்ந்து புன்னகைத்தாள். ஆகாய நீல நிறத்தில் அவள் புடவை உடுத்தியிருந்தாள். வெட்கத்தில் அவள் முகம் சிவப்பது அழகாக இருந்தது. அவன் அவசரமாக அவளைப் பார்த்து ரொம்ப அழகா இருக்குதுஎன்று சொன்னான். அவள் சிறுநகை தேங்கிய உதடுகளுடன் வெட்கத்தில் முகம் சிவக்க ம்?” என்று கண்களைச் சுருக்கியபடி கேட்டாள். “புடவை, புடவைஎன்று பதில் சொன்னான். பிறகு அவனாகவே எட்டு மணிக்கே வரேன்னு சொன்ன வண்டிக்காரு பத்து மணிக்குதான் வந்தாரு. அதான் லேட்என்று சொன்னான். அதற்குள் பாலாஎன்ற தம்பிதுரையின் குரல் கேட்டு முன்னால் ஓடினான்.

பாலா, வந்த வேலய மொதல்ல முடிக்கலாம்ன்னு அம்மா சொல்றாங்க. மாமா, பெரிப்பாவுக்கெல்லாம் பசிக்குதான். நான் ஆம்பள ஆளுங்களயெல்லாம் அழச்சிகிட்டு ஓட்டலுக்கு போறன். நீ பொம்பளயாளுங்கள அழச்சிகிட்டு பொடவைக்கடைக்குப் போ. சரியா?”

அதோ அந்த மகாலட்சுமி பட்டு சென்டருக்கு போகலாம். ரஞ்சினி அக்காவுக்கு கூட அங்கதான் எடுத்தம். ரொம்ப ராசியான கட. வெலயும் நமக்கு கட்டுப்படியாவறமாதிரி இருக்கும்ரஞ்சனியின் அப்பா சிவபாலனின் அம்மாவிடம் சொன்னார். ”அங்கயே போவலாம்ங்கஎன்றார் அம்மா.

நடந்துபோகும்போதே அம்மா தன் பையிலிருந்த பூ பொட்டலத்தை எடுத்து ரஞ்சினியிடம் கொடுத்தார். “வச்சிக்க கண்ணுஎன்றார். ரஞ்சினி பொட்டலத்தைப் பிரித்து அதிலிருந்த மல்லிகைச்சரத்தை தன் தலையில் அப்போதே சூடியபடி அம்மாவிடம் தேங்க்ஸ்மாஎன்றாள். அவள் விழிகள் சிவபாலனைத் தேடின. சிவபாலன் எல்லோருக்கும் கடைசி ஆளாக வந்துகொண்டிருந்தான். கடைக்குள் செல்வதற்கு முன்னால் அவள் அவனைப் பார்த்துவிட்டாள். அவனைப் பார்த்தபடி பின்னலை முன்பக்கமாக எடுத்து  மீண்டும் பின்பக்கமாகப் போட்டாள். அதற்குள் அவன் அந்தப் பூச்சரத்தைப் பார்த்துவிட்டான். கண்களை ஒருகணம் மூடி புன்னகையுடன் தலையை மகிழ்ச்சியுடன் அசைத்தான். அதற்குப் பிறகு அவள் வேகமாக அடிவைத்து துள்ளலோடு சென்று  பெண்கள் வரிசைக்குள் சேர்ந்துகொண்டாள்.

இருவர் பக்கமிருந்தும் பத்து பெண்கள் இருந்தார்கள். கடைச்சிப்பந்தி அவர்களைப் பார்த்ததும் எழுந்து வந்து உள்ளே அழைத்துச் சென்றான்.

சொல்லுங்கம்மா, என்ன நெறத்துல பாக்கறிங்க, என்ன வெலையில பாக்கறிங்க. நம்மகிட்ட ரெண்டாயிரத்துலேருந்து ஒரு லட்சம் வரைக்கும் வகைவகையா புடவைங்க இருக்குது.”

அடுக்கிலிருந்து சில புடவைகளை எடுத்து மேசைமீது வைத்தார் சிப்பந்தி. ஒவ்வொரு புடவையின் நிறமும் சரிகைகளும் பளிச்சென்றிருந்தன.

அம்மா திரும்பி கண்ணு, இங்க வாம்மாஎன்று ரஞ்சினியை அழைத்தார். ரஞ்சினி திகைத்து நாக்கைக் கடித்தபடி அம்மாவின் அருகில் நின்றாள். “இதான் பொண்ணு. எங்க ஊட்டுக்கு வரப்போற பொண்ணு. அதுக்கு புடிச்ச நெறத்துல, புடிச்ச டிசைன்ல அவசரமில்லாம நிதானமா காட்டுங்க.”

சரிம்மா, ரேட்டு….?”

ஏழாயிரம் எட்டாயிரம் ஆனாலும் பரவாயில்ல. பொண்ணுக்கு புடிச்சிருக்கணும். அதான் முக்கியம்அம்மா தொடர்ந்து ரஞ்சினியிடம் நீ அவசரமில்லாம பாத்து சொல்லு கண்ணு என்றபடி அவள் தோளைத் தொட்டு அழுத்தினார். பக்கவாட்டில் திரும்புவதுபோல திரும்பிய ரஞ்சினி சிவபாலனைப் பார்த்தாள். அவள் கண்களில் நீர்க்கோடுகள் தெரிந்தன.

அதற்குள் அத்தைகள் அண்ணிஎன்று அவசரமாக அம்மாவைத் தடுக்க முயற்சி செய்தார்கள். ”அந்தக் காலத்துல அறநூறு எழுநூறு ரூபாய்லதான் எங்களுக்கு பொடவ எடுத்துக் குடுத்தாங்கஎன்று முணுமுணுத்தார்கள். சித்தியும் என்னக்கா இப்பிடி ஒரேடியா எட்டாயிரம்னு சொல்லிட்டிங்க?” என்று காதோரமாக வந்து சொன்னாள். நாக்கைத் தட்டி த்ச்என்ற ஒரே சத்தத்தால் அவர்களை அமைதிப்படுத்தினார் அம்மா. அடங்கிய குரலில் அது என்ன நம்மளாட்டம் ஊட்லயே இருக்கற பொண்ணாடி? டீச்சர் வேல பாக்கற பொண்ணு. அதுக்கேத்த மாதிரிதான துணிமணியும் இருக்கணும்என்றாள்.

கடைக்காரர் ரஞ்சினியிடம் எந்த மாதிரி நெறம் வேணும், சொல்லுங்கஎன்று கேட்டார். ரஞ்சினி அடுக்குகளில் வைக்கப்பட்டிருந்த எண்ணற்ற பட்டுப்புடவைகள் மீது பார்வையைப் படரவிட்ட பிறகு மெதுவாக மயில்கழுத்து நிறம்என்று பதில் சொன்னாள்.

கடைக்காரர் ஒரே நிறத்தில் வெவ்வேறு டிசைன்களில் உள்ள புடவைகளை எடுத்து மேசைமீது  பிரித்துவைத்தார். அனைவரும் ஒவ்வொரு புடவையையும் தொட்டும் தடவியும் பார்த்தார்கள். ரஞ்சினியின் அம்மா ஒரு புடவையை எடுத்து ரஞ்சினியின் தோள்மீது வைத்துப் பார்த்தார்.

கடைக்கு உள்பக்கமாகவே படியேறிச் செல்லக்கூடிய ஒரு மாடிப்பகுதி இருந்தது. முதலாளி கண்ணைக் காட்டியதும் ஒரு வேலைகாரர் மாடிக்குச் சென்று மயில்கழுத்துப் புடவைகள் மட்டுமே நிறைந்த ஒரு பெட்டியை எடுத்துவந்து மேசை மீது வைத்தார். சிப்பந்தி எல்லாப் புடவைகளையும் ஒவ்வொன்றாக வெளியே எடுத்து பிரித்துவைத்தார்.

மோர் நிறைந்த தம்ளர்கள் அடுக்கப்பட்ட ஒரு பெரிய தட்டை எடுத்துவந்த ஒரு சிப்பந்தி அம்மாவின் முன்னால் நின்று எடுத்துக்குங்க மாஎன்று சொன்னார். “எதுக்குங்க இதெல்லாம்?” என்று தயங்கினார் அம்மா.

எடுத்துக்குங்கம்மா. நல்ல வெயில் நேரம். தண்ணிக்கு பதிலா மோர். அவ்ளோதான். ஒங்க வீடுன்னு நெனச்சி எடுத்துக்குங்க.”

அம்மா ஒரு தம்ளரை எடுத்து ரஞ்சினியிடம் கொடுத்தார். பிறகு தானும் ஒரு தம்ளரை எடுத்துக்கொண்டார். ரஞ்சினி கண்களைச் சுழற்றி சிவபாலன் நின்றிருக்கும் இடத்தைப் பார்த்தாள். ”குடி குடிஎன்றபடி சைகை காட்டினான் அவன். அவள் ஒரே ஒரு மிடறு அருந்திவிட்டு நுனி நாக்கால் உதடுகளைத் தடவினாள். அத்தையின் பக்கம் அம்மா திரும்பிய ஒரு கணத்தில் மின்னல்போலத் திரும்பி மேசைமீது தேர்ந்தெடுத்து ஒதுக்கி வைத்திருந்த புடவைகளின் மீது விரல்வைத்து ஓகேவா?” என்பதுபோல கண்களால் கேட்டாள். அவற்றின் நிறம் உண்மையிலேயே மயிலின் கழுத்து நிறத்தில் இருந்தது. சரிகை வேலைகளும் அற்புதமாக இருந்தன. நன்றாக இருப்பதாக சிவபாலனும் கண்களாலேயே பதில் சொன்னான்.

மோர்த்தம்ளர்களை சிப்பந்தி வாங்கிச் சென்றார்.  சில கணங்களுக்குப் பிறகு ரஞ்சினி அங்கிருந்த புடவைகளைக் காட்டிஇந்த அஞ்சுமே ஓகேமா. இதுல ஒன்ன பெரியவங்க நீங்க பாத்து சொல்லுங்கஎன்றாள். “பாருடி என் தங்கத்த. சட்டுபுட்டுனு வேலய முடிச்சிட்டுது. அவ அவ ஊருல ஒரு பொடவய எடுக்க ஒரு நாள்பூரா பாத்துகினே இருக்கும். ஜோசிய அட்டைய கிளி எடுக்கறமாதிரி கண்ண மூடி கண்ண தெறக்கறதுக்குள்ள வேலய முடிச்சிட்டுதுஎன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அம்மா ரஞ்சினியின் அம்மாவை நோக்கிஇங்க வாங்கம்மா. இந்த அஞ்சில ரஞ்சினிக்கு எது ரொம்ப பொருத்தமா இருக்கும்? நீங்களே பாத்து சொல்லுங்கஎன்று கேட்டார். அந்த அம்மாவும் அவரோடு வந்திருந்தவர்களும் ஒருசேரக் கூடி பேசி, ஐந்தை இரண்டாகக் குறைத்தார்கள். பிறகு ரஞ்சினியிடம் திரும்பி அதுவா, இதுவா, நீயே சொல்லும்மா ரஞ்சினிஎன்று கொடுத்துவிட்டார்கள்.

ரஞ்சினியின் கண்கள் மீண்டும் சிவபாலனின் திசையில் திரும்பின. சொல் என்பதுபோல புருவத்தை உயர்த்தினாள். யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக விரலை காதோரமாக நகர்த்திச் சென்று கூந்தலை ஒதுக்கினாள். வலதுகையின் கட்டைவிரலை மட்டும் உயர்த்தி ஓகே என்பதன் அடையாளமாக தலையை மேலும் கீழும் அசைத்தான். அவள் அதை மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் அந்தப்புடவையை மட்டும் கையிலேந்தி இதுவா?” என்பது போல புருவத்தை உயர்த்திக் கேட்டாள். உதடுகளில் புன்முறுவலைத் தேக்கி அவன் விழி சுருங்க அவளைப் பார்த்தான்.

செலக்‌ஷன் முடிஞ்சிதாடா?” என்றபடி தம்பிதுரை உள்ளே நுழைந்து  சிவபாலனின் பக்கத்தில் வந்து நின்றான். அவனைத் தொடர்ந்து ஆண்கள் கூட்டமும் நுழைந்தது. அம்மாவுக்கு அருகில் சென்று நின்றார் அப்பா. “இதத்தான் செலக்ட் பண்ணியிருக்கம். நீங்களும் பாருங்கஎன்று அம்மா காட்டினார். “எனக்கு என்னம்மா தெரியும் புடவையைப் பத்தி. நீங்க எத முடிவு பண்றீங்களோ, அதுக்கு நான் பணத்த கட்டுவன்என்றார் அப்பா.

பணத்தைச் செலுத்தியதும் கடைக்காரர் பட்டுப்புடவையை ஒரு பையில் போட்டு ஒரு தட்டில் தேங்காய் வெற்றிலை பாக்கு  பூ எல்லாவற்றையும் வைத்துக் கொடுத்தார்.

எதுக்குங்க இதெல்லாம்?”

காலம் காலமா குடுக்கறதுதான்மா. இதெல்லாம் ஒரு ஐதீகம். திடீர்னு விட்டுடமுடியாது.”

ஜாக்கெட் தனியா எடுக்கணுமா?”

தேவையில்லைமா, புடவை கூடவே இருக்குது. டைலர்கிட்ட குடுத்திங்கன்னா அவுங்க பிரிச்சி தச்சி குடுத்துடுவாங்க.”

கடையை விட்டு வெளியே வந்தார்கள்.

பாலா, வெயிலா இருக்குது. நான் எல்லாரயும் வண்டிகிட்ட கூட்டிட்டு போறன். நீங்க போய் சாப்ட்டுட்டு வாங்க. அதோ அங்க போங்க. கிரிஜா பவன். அங்க நல்லா இருக்குது.”

கிரிஜா பவனுக்குள் சென்றார்கள். அந்த நேரத்திலும் கூட்டம் வழிந்தது. ஒருபக்கம் கோவில்களுக்கு வரும் கூட்டம். இன்னொரு பக்கம் பட்டுப்புடவைகள் எடுக்க வரும் கூட்டம். சிவபாலனும் அவன் வீட்டுப் பெண்களும் ஒரு வரிசையில் இரு மேசைகளில் உட்கார்ந்தார்கள். சுவரோரம் உள்ள மற்றொரு வரிசையில் ரஞ்சினியும் அவள் வீட்டுப் பெண்களும் சென்று அமர்ந்தார்கள்.

தொலைவான வரிசையில் அமர்ந்திருந்த ரஞ்சினியைப் பார்த்தான் அவன். ஒரு துளி ஈரம் பட்டுத் தெறித்ததுபோல அவளுடைய அழகிய கண்கள் ஒருகணம் அவனைத் தொட்டுச் சென்றன. அவள் குனிந்து இலையைப் பார்த்து சிரித்துக்கொண்டபோது அவள் கன்னத்தின் கீழ்த்தசையில் ஒரு கோடு விழுந்தது. அங்கே மிளகென உருண்ட ஒரு மச்சம் இருப்பதுபோலத் தோன்றியது. அவன் பார்வையைத் திருப்பி இலையைப் பார்த்தான்.

என்ன வைத்தார்கள், என்ன சாப்பிட்டோம் என்பதே அவனுக்குத் தெரியவில்லை. ஒருகணம் இலையைப் பார்ப்பதும் அடுத்த கணம் கண்களைத் திருப்பி ரஞ்சினியின் திசையில் பார்ப்பதுமாக நேரம் கரைந்தபடி இருந்தது.

என்னடா இது, கோழி கெளறர மாதிரி சாப்படற? ஒழுங்கா எடுத்து சாப்புடு.”

அம்மா அதட்டிய பிறகு ஒழுங்காக நாலு வாய் எடுத்துச் சாப்பிட்டான். அதற்கு மேல் முடியவில்லை. மீண்டும் விரல்களால் அளையத் தொடங்கினான். அக்கணத்தில்தான் ரஞ்சினி எழுந்து கைகழுவும் இடத்துக்குச் செல்வதைப் பார்த்தான். “போதும்மா, நீங்க சாப்புடுங்க. வயித்த பெரட்டறமாதிரி இருக்குதுஎன்றபடி எழுந்து வேகமாக கைகழுவும் இடத்துக்கு விரைந்தான்.

சுவரோரமாக இருந்த வாஷ் பேசினில் கைகழுவியபடியே கண்ணாடியில் முகம் பார்த்தவாறு நின்றிருந்தாள் ரஞ்சினி. கோதுமை நிறத்தில் நீண்டிருந்த அவள் விரல்களை எட்டிப் பற்றிக்கொள்ளவேண்டும் போல இருந்தது. விரல்களில் பட்டு ஓடைபோல ஓடியது நீர். சிவபாலன் இரண்டாவது பேசினில் கைகழுவியபடி அவளைப் பக்கவாட்டில் பார்த்தான். ஒரே நொடியில் அவன் உடலிலிருந்த ரத்தம் முழுவதும் முகத்தை நோக்கிப் பாய்வதுபோல இருந்தது. என்னென்னவோ பேசவேண்டும் போல ஆசை துடித்தது. ஒரு சொல்லும் கூடி வராமல் மனம் தவித்தது. தன் பையிலிருந்து கைக்குட்டையை எடுத்து அவளிடம்  நீட்டினான். வெட்கம் படர்ந்த புன்னகையுடன் அவனைத் திரும்பிப் பார்த்தபடி அவள் அதைப் பெற்றுக்கொண்டாள். பிரித்து விரல்களைத் துடைத்துக்கொண்டாள்.

நல்லா இருக்குதுஅவசரமாகச் சொன்னான்.

ம்?” அவள் விழி சுருக்கியபடி அவனைப் பார்த்தாள்.

ஜிமிக்கி, ஜிமிக்கி நல்லா இருக்குது

ம்

ஜிமிக்குக்குள்ள ஒரு சின்ன ஜிமிக்கி ஊஞ்சலாடறமாதிரி இருக்குது.”

மகிழம்பூ மாதிரி வட்டமா இருக்குது

ம்

இல்ல இல்ல. மரத்துல பன்னீர்ப்பூ தொங்குமே அந்த மாதிரி…”

ம்

ஐயோ, எதுவுமே எனக்கு சொல்லத் தெரியல. நீ ரொம்ப அழகா இருக்கே.”

என்ன புடிச்சிருக்குதா?”

ரொம்ப ரொம்ப புடிச்சிருக்குது. அது என்ன கழுத்துல, காதுக்குக் கீழ,, மச்சமா?”

அவள் விரல்கள் சட்டென உயர்ந்து அதை மறைத்தன. ”ஐயையோஎன்றாள். பிறகு நாணத்துடன் எப்ப பாத்திங்க?” என்றாள்.

இப்பதான். நீ சாப்ட்ட சமயத்துல

ம்

எதாவது பேசேன். ஏன் ஒன்னும் சொல்லமாட்டற?”

உங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்குது

நான் ஒன்ன பத்தி நெறய கவிதை எழுதி வச்சிருக்கேன்.”

உண்மையாவா?

நூறு நூத்தியம்பது கவிதை இருக்கும். ஒரு நோட்டு போட்டு எல்லாத்தயும் எழுதி வச்சிருக்கேன்.”

எனக்கு படிக்கணும் போல இருக்குது. இங்க கொண்டுவந்திருக்கீங்களா?”

ம்ஹூம். வீட்ல வச்சிருக்கேன். நான் அப்பறமா படிக்க குடுக்கறேன்.”

அப்புறம்னா?”

அப்பறம்னா அப்பறம்தான்...”

அதான் எப்பறம்?”

அப்ப்ப்ப்ப்ப்பறம்.”

ச்சீ என செல்லமாகச் சிணுங்கியபடி அவள் பேசினிலிருந்து விலகி செல்வதற்கு முனைந்தாள். அவன் கொடுத்த கைக்குட்டையை மடித்து உதட்டைத் துடைத்து கைக்குள் மூடி வைத்துக்கொண்டாள். பிறகு இடுப்பில் செருகியிருந்த தன் கைக்குட்டையை  எடுத்து புன்னகைத்தவாறே அவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

அவள் புன்னகை அவன் நெஞ்சை நிறைத்தது. கண்ணாடிச்சுவரைத் தழுவியிறங்கி நழுவியோடும் மழைச்சாரலென வயிற்றை நிறைத்து அதிரவைத்தது. நீண்ட நேரம் தாகத்துடன் நடந்துசெல்வதுபோல ஒரு தவிப்பை உணர்ந்தான்.

பூப்போட்ட கைக்குட்டையை மெதுவாகப் பிரித்தான். ஒரு சின்ன சதுரம் போன்ற கைக்குட்டை. இரு மூலைகளில் எஸ் என்னும் ஆங்கில எழுத்தும் மற்ற இரு மூலைகளில் ஆர் என்னும் ஆங்கில எழுத்தும் பின்னலால் பொறிக்கப்பட்டிருந்தன. அந்த எழுத்தை உயர்த்தி முத்தமிட்டான். மல்லிகைப்பூவின் மணம். வியர்வையின் மணம். ரஞ்சினி இன்னும் அந்த இடத்தில் நிற்பதுபோல நினைத்துக்கொண்டான். அக்கணமே வெட்கம் படர பேசினை விட்டு வெளியே வந்தான்.

என்னடா, என்ன செய்யுது? ஏன் இவ்ளோ நேரம்?” அம்மா கேட்டாள்.

தெரியலம்மா. காலயில சாப்ட்டது ஒத்துக்கல போல. வாந்தி வரமாதிரி இருக்குது. ஆனா வரலை.”

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை. மணி மூன்றாகிவிட்டது.

நாங்க கெளம்பட்டுமா சார்?”

ரஞ்சினியின் அப்பா வந்து சிவபாலனின் அப்பாவிடம் கேட்டார்.

நல்லதுங்க. அமாவாசக்குப் பிறகு ஒரு நல்ல நாளா பாத்து வரேன். அதுக்குள்ள நீங்க பத்திரிக மேட்டர எழுதி வைங்க. வந்து வாங்கிட்டு போறன். அடிச்சி முடிச்சிட்டா ஒரு பொங்கல வச்சி படயல போட்டுட்டு ஊருக்கு குடுக்க ஆரம்பிச்சிடலாம்.”

வரும்போது மறக்காம பொடவய எடுத்துட்டு வாங்க. அக்கம்பக்கத்து உறவுக்காரங்க பாக்கணும்ன்னு சொன்னாங்க…..” ரஞ்சினியின் அம்மா முன்னால் வந்து சிவபாலனின் அம்மாவிடம் சொன்னாள். அதற்குச் சம்மதம் என்பதுபோல அம்மா தலையசைத்தாள்.

அவர்கள் வண்டி புறப்பட்டது. ரஞ்சினி திரும்பிப் பார்ப்பதை அவன் உணர்ந்தான். “டேய், பொண்ணு ஒன்ன பாக்குதுடாஎன்று தம்பிதுரை சுட்டிக் காட்டியபோது வெட்கத்தோடு தலையைத் திருப்பிக்கொண்டான்.

நாமளும் கெளம்புவமா?”  

கோயில் இருக்கற ஊருக்கு வந்துட்டு, சாமிய பாக்காம போனா எப்பிடி சித்தி? நாலு மணிக்கு கோயில் தெறந்துருவாங்க. பாத்துட்டு போயிடலாம்என்றான் தம்பிதுரை.

என்னடா நீ என்ன சொல்ற?” என்று அம்மா சிவபாலனைக் கேட்டாள். அவன் இந்த உலகத்திலேயே இல்லாதவன் போல இருந்தான். அவனை உலுக்கி மறுபடியும் கேட்கவேண்டியதாக இருந்தது. சட்டென்று சுயநினைவுக்கு வந்து சரியென்று தலையாட்டினான்.

காமாட்சியம்மன் கோவிலையும் வரதராஜ பெருமாள் கோவிலையும் பார்த்துவிட்டு வெளியே வருவதற்குள் மணி ஆறாகிவிட்டது. சிவபாலனுக்கு கோவிலுக்குள் எந்த உருவத்தைப் பார்த்தாலும் ரஞ்சனியாகவே தெரிந்தது.

வண்டிக்குள் ஏறி அனைவரும் உட்காரும்போதுதான் முருகேசன் மாமாவைக் காணவில்லை என்பது தெரிந்தது.  நம்ம பின்னாலதான வந்துகினே இருந்தாரு? அதுக்குள்ள எங்கடா மாயமா போனாரு?” என்று ஆச்சரியப்பட்டான் தம்பிதுரை.

ம். அதுக்குள்ள எங்கயாவது வாசம் புடிச்சி போயிருப்பாரு. நாயக் குளிப்பாட்டி நடுவூட்டுல வச்சாலும் அது வால கொழச்சிகினு போவற எடத்துக்குத்தான் போவுமாம். அந்தக் கதைதான் இவரு கத. ஒன்னும் தேடவேணாம். அவுரா வருவாரு, ஏறி ஒக்காருங்க.”

சிவகாமி அத்தை எரிச்சலோடு சொன்னபடி படிக்கட்டுப்பலகையில் கால்வைத்து முதல் ஆளாக ஏறி வண்டிக்குள் உட்கார்ந்தாள். அவளைத் தொடர்ந்து அனைவரும் ஏறி உட்கார்ந்தனர்.

அதற்குள் துண்டால் சிரிப்பை மறைத்தபடி வண்டிக்கு அருகில் வந்துவிட்டார் முருகேசன் மாமா. “எனக்காகத்தான் வெய்ட்டிங்கா? சரி சரி போலாம் ரைட்என்ற வண்டியின் விலாப்புறத்தில் தட்டியபடி  உள்ளே ஏறி அமர்ந்தார்.

அத்தை உடனே வெடித்தாள். “அந்த நாத்தம் புடிச்ச தண்ணிய ஒருநாளு கூட குடிக்காம இருக்கமுடியாதா? எங்க எங்கன்னு மோப்பம் புடிச்சிட்டு போய் வந்துட்ட?”

அம்மா அத்தையின் தோளைப் பற்றி அழுத்தி பேச்சை நிறுத்தும்படி சொன்னாள்.

முருகேசன் மாமா நமுட்டுச் சிரிப்போடு சாலையில் செல்லும் வாகனங்களின் பக்கம் திரும்பிக்கொண்டார். “கெளம்பலாம் தொரஎன்று சொன்னபடி சிவபாலன் தடுப்புப்பலகையைத் தூக்கிப் பொருத்திவிட்டு கயிற்றைப் பிடித்து தாவி வண்டிக்குள் உட்கார்ந்தான். 

இருட்டு பரவத் தொடங்கியது. காற்றில் சற்றே குளுமை படர்ந்துவந்தது. வந்தவாசியைக் கடக்கும்போது முற்றிலும் இருள் சூழ்ந்துவிட்டது. முருகேசன் மாமா திடீரென அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்புஎன்று பாடத் தொடங்கிவிட்டார். அருமையான குரல். சரியான ஏற்ற இறக்கமுடன் எந்தப் பிசிறுமில்லாமல் அவர் குரல் ஒலித்தது. “வெக்கம் மானம் சூடு சொரண எதுவுமில்லாத ஆளுடி. பாட்டு பாடுது பாரு மானம் கெட்ட பாட்டுஎன்று முனகியபடி தோளை ஒடித்து முகம் திருப்பிக்கொண்டாள் சிவகாமி அத்தை. அந்தப் பாட்டு முடிந்ததுமே முருகேசன் மாமா உற்சாகத்தோடு ஓடும் மேகங்களேபாடத் தொடங்கினார். அவர் குரலில் மகிழ்ச்சி கூடிக்கொண்டே போனது. வளவனூர் வந்து சேர்கிறவரைக்கும் அவர் நாற்பது ஐம்பது பாடல்களாவது பாடியிருப்பார். கொஞ்சம் கூட களைப்பே இல்லை. அவ்வளவு பாடல்கள் அவருக்கு மனப்பாடமாக தெரியும் என்பதே அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியம் அளித்தது.

வீட்டுக்கு வந்ததும் வண்டிக்கு பணம் கொடுத்து அனுப்பினான் தம்பிதுரை. புடவைப்பையை நடுவீட்டுக்கு எடுத்துச் சென்ற அம்மா சாமிக்கு முன்னால் வைத்துவிட்டு கற்பூரம் ஏற்றி சில கணங்கள் கண்மூடிக் கும்பிட்டாள். பிறகு வெளியே எடுத்து வந்து ஆயாவிடமும் தாத்தாவிடமும் காட்டினாள்.

சரிசரி, பேசிட்டே ஒக்காந்துட்டிருக்காதீங்க. இட்லியோ தோசையோ எதயாவது ஊத்துங்க. காலையில கெளம்பணுமேங்கற பரபரப்புல சரியாவே தூக்கம் இல்ல. இன்னைக்காவது சீக்கிரம் தூங்கி எழுந்தாதான் நாளைய பொழுது நல்லா இருக்கும்

அப்பா சொன்னதும் பெரியம்மா, சித்தி, அத்தைகள் எல்லோரும் அடுப்படிக்குச் சென்றார்கள். எல்லோரும் சேர்ந்து பம்பரமென வேலை செய்வதை உட்கார்ந்த இடத்திலிருந்து அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தான் சிவபாலன். அவனுக்கு அருகில் அமர்ந்து தம்பிதுரை சொன்ன கதைகள் எதுவுமே அவன் மனத்தில் உறைக்கவில்லை.

இட்லித்தட்டு வைக்கப்பட்டதும் ஆவலோடு எல்லோரும் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார்கள். பொட்டுக்கடலை சட்டினியில் மிதந்த கறிவேப்பிலையின் கரிந்த மணம் நாசியை எட்டியபோதுதான் சிவபாலனுக்கு மதியச் சாப்பாடு நினைவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து ரஞ்சினியின் நினைவு வந்துவிட்டது. தனக்கு அருகில் ரஞ்சினி இல்லை என்கிற எண்ணம் அவனுக்கு வேதனையாக இருந்தது.  பேருக்கு இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு அறைக்குள் வந்தான். மேசைமீதிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து படிப்பதுபோல விரித்துவைத்துக்கொண்டு நினைவுகளில் மூழ்கினான். ரஞ்சினி இல்லாத உலகம் வெறுமை சூழ்ந்ததாக இருந்தது அவனுக்கு. அந்தப் புருவம். அவள் கண்கள். அவள் ஜிமிக்கி. அந்த மச்சம். எல்லாவற்றையும் துல்லியமாக நினைவுகூர்ந்தான்.

என்னடா போவலாமா?” என்றபடி அறைக்குள் வந்தான் தம்பிதுரை. எங்கே என்பது போல அவனைப் பார்த்தான் சிவபாலன்.

மொட்டமாடிக்குடா. என்ன முழிக்கற? அங்கதான நாம படுத்துக்குவம். வா. இன்னைக்கு காத்து நல்லா இருக்குது.”

மூலையில் சுருட்டிவைக்கப்பட்டிருந்த பாய்களையும் தலையணைகளையும் எடுத்தான்.

த்ச் என்று நாக்கு சப்புக்கொட்டியபடி நா வரலைடா. நீ போ. நான் இங்கயே படுத்துக்கறேன்என்றான் சிவபாலன். புதுசாகப் பார்ப்பதுபோல ஒருகணம் அவனை விசித்திரமாகப் பார்த்துவிட்டு பாய்மூட்டையோடு வெளியே போனான் தம்பிதுரை.

விளக்கை நிறுத்திவிட்டு படுக்கையில் சரிந்தான் சிவபாலன். நிலா வெளிச்சத்தில் வெள்ளித்தகடுகளென மின்னித் தொங்கும் தென்னங்கீற்றைப் பார்த்தபடியே படுத்திருந்தான். பேசின் குழாயில் தண்ணீரை வாங்கி வழியவிட்டபடி நீண்டிருந்த ரஞ்சினியின் விரல்கள் நினைவுக்கு வந்தன. அந்த விரல்கள் நீண்டு தன் கன்னத்தைத் தொடுவதுபோல நினைத்துக்கொண்டான்.

எதிர்பாராத கணத்தில் நினைவுக்கு வந்தவனாக எழுந்து ஆணியில் தொங்கிய பேண்டிலிருந்து சதுரக் கைக்குட்டையை எடுத்துக்கொண்டு படுத்தான். நிலவொளியில் ஆர் எழுத்துகளும் எஸ் எழுத்துகளும் மங்கலாகத் தெரிந்தன. அவற்றை தானாகவே அவன் விரல்கள் சில கணங்கள் வருடின. பிறகு அந்தக் கைக்குட்டையைப் பிரித்து முகத்தின் மீது விரித்துக்கொண்டான். மல்லிகைப்பூவின் மணம். வியர்வையின் மணம். ரஞ்சினி தனக்கு அருகிலேயே இருப்பதுபோல நினைத்துக்கொண்டான்.

 

(01.08.2020 பதாகை இணைய இதழில் வெளியான சிறுகதை)