Home

Wednesday, 12 August 2020

சா.கந்தசாமி : வற்றாத சிந்தனை நதி - அஞ்சலி

 

வாசகர் வட்டம் அறுபதுகளில் வெளியிட்ட நூல்களில் ஏராளமான பிரதிகள் எஞ்சியிருக்கின்றன என்றும் விருப்பப்பட்டவர்கள் வந்து வாங்கிச் செல்லலாம் என்றும் பிரசுரமாகியிருந்த ஓர் அறிவிப்பை ஒருமுறை பார்த்தேன். அந்த முகவரியை உடனடியாக என் குறிப்பேட்டில் எழுதிவைத்துக்கொண்டேன். அப்போது  நான் கர்நாடகத்தில் ஹொஸ்பேட் என்னும் இடத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை ஊருக்கு வந்து செல்வேன். ஹொஸ்பேட்டிலிருந்து குண்டக்கல் வரைக்கும் ஒரு ரயில்பயணம். பிறகு குண்டக்கல்லிலிருந்து சென்னை வரைக்கும் மற்றொரு ரயில் பயணம். சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு பேருந்துப்பயணம். போக ஒரு நாள், திரும்பி வர ஒரு நாள் பயணத்திலேயே கழிந்துவிடும்.

ஒருமுறை ஊருக்குச் சென்று திரும்பிவரும் வழியில் சென்னையில் வாசகர் வட்டம் முகவரிக்குச் சென்றேன். அந்த வீட்டிலிருந்தவர் என்னிடம்எந்த புத்தகம் வேணும்?” என்று கேட்டார். நான் ஏதேனும் ஒரு புத்தகத்தின் தலைப்பைச் சொல்லக்கூடும் என்று அவர் எதிர்பார்த்தார். ”ஒருதரம் எல்லாத்தயும் பார்த்துக்கறேன்என்று நான் தயக்கத்தோடு சொன்னேன். அவர் அமைதியாக ஓர் அடுக்கிலிருந்த புத்தகங்களைக் காட்டினார். நான் அதிலிருந்து பதினைந்து புத்தகங்களை எடுத்து தனியாக வைத்துஇதயெல்லாம் எடுத்துக்கறேன்என்றேன். அவருக்கு ஆச்சரியம். அவர் என்னைப்பற்றிய விவரங்களைக் கேட்டார். நான் சிறுகதைகளை எழுத ஆரம்பித்திருந்த காலம் அது. என் பெயரைச் சொன்னதுமேகணையாழியில உங்க கதையைப் படிச்ச்சிருக்கேன்என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். எல்லாப் புத்தகங்களையும் அழகாக அடுக்கி ஒரு பெரிய பைக்குள் போட்டுக் கொடுத்தார். குறைவாகத்தான் பணம் வாங்கிக்கொண்டார். அந்தப் புத்தகங்களில் ஒன்று சாயாவனம். எழுத்தாளர் சா.கந்தசாமி. அந்தப் பெயரை அன்றுதான் நான் முதன்முதலாக அறிந்துகொண்டேன்.

ஹொஸ்பேட்டுக்குத் திரும்பியதுமே சாயாவனத்தைப் படித்துமுடித்தேன். எனக்கு அந்த நாவல் மிகவும் பிடித்திருந்தது. ஒரு பெரிய புளியந்தோப்பை அழித்து கரும்பு ஆலையை கட்டியெழுப்பும் சித்திரத்தை அந்த நாவல் தீட்டிக் காட்டியிருந்தது. ஒரு காலமாற்றத்தின் பதிவாக அது காட்சியளித்தது.  நேற்றிருந்தது, இன்றில்லை என்பதையும் அது தவிர்க்கமுடியாதது என்பதையும் உணர்த்துவதுபோல இருந்தது. விவசாயம் மட்டுமே இருந்த ஒரு வாழ்க்கைக்குள் எந்திரங்களுக்கும் ஒரு இடம் உருவாகிறது.

நான் அப்போதுதான் தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்கிய நிகேதனம் நாவலைப் படித்து முடித்திருந்தேன். அந்த நாவலில் மரபான ஆயுர்வேத மருத்துவமுறை, நவீன மருத்துவமுறை என இரு முறைகள் தொடர்பான மாறுபட்ட பல நிகழ்ச்சிகள் விவரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றும் தனக்கென நிறுவிக்கொள்ளும் எல்லைகளையும் அடையாளப்படுத்தியிருந்தது. ஒன்று தேய்ந்து மற்றொன்று எழுச்சி பெறும் காலம்.

எப்படியோ என் மனம் அந்தக் கருத்தியல் மையத்தின் நீட்சியாக சாயாவனம் நாவலை வகுத்துக்கொண்டது. பழமை எவ்வளவுதான் புனிதமானது, உயர்வானது என்றபோதும் அது நவீனத்தின் வரவை ஒருபோதும் தடுக்க முடியாது என்று புரிந்துகொண்டேன். முதலில் எதுவரைக்கும் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறதோ, அதுவரைக்கும் நாம் நவீனத்தை பயன்படுத்துவோம், பயனற்றதாக மாறும்போது விலக்கிவிடுவோம் என்றுதான் நம் மனம் தொடக்கத்தில் நினைக்கும். ஆனால் அதெல்லாம் மனம் நிகழ்த்தும் நாடகம். மெல்ல மெல்ல நவீனத்தின் வசதிகள் நம்மை ஈர்த்து திரும்பிவர முடியாத தொலைவுக்கு அழைத்துச் சென்றுவிடும். ஆலை என்பது நவீன யுகத்தின் அடையாளம். சாயாவனம், நவீனம் இந்த மண்ணில் காலூன்றத் தொடங்கிவிட்டது என்பதை சுட்டிக்காட்டும் நல்லதொரு படைப்பு என்பதே என் எண்ணமாக இருந்தது. அன்றிரவே நான் சாயாவனம் பற்றி ஒரு கடிதம் எழுதினேன். மறுநாள் கணையாழி அலுவலகத்துக்கு தொலைபேசி செய்து சா.கந்தசாமியின் முகவரியைப் பெற்று அந்தக் கடிதத்தை அனுப்பிவைத்தேன்.

இரண்டு வார இடைவெளியில் எனக்கு அவரிடமிருந்து கடிதம் வந்தது. அதுவரை நாவலைப்பற்றி பேசியவர்கள் யாரும் சாயாவனத்தையும் ஆரோக்கிய நிகேதனத்தையும் ஒப்பிட்டுப் பேசவில்லை என்றும், அந்த ஒப்பீட்டைக் குறிப்பிட்ட முதல் பதிவைப் படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் அவர் பதில் எழுதியிருந்தார். சென்னைக்கு வரும்போது சந்திக்கும்படி குறிப்பிட்டிருந்தார். எனக்கும் அவரைச் சந்திக்க ஆவலாகவே இருந்தது. ஒரு மூத்த படைப்பாளியை எப்படி அணுகுவது என்பதில் சற்றே தயக்கமாகவும் இருந்தது.

சென்னையில் பாலு என்றொரு நண்பர் வசித்துவந்தார். ஆந்திரவங்கியில் வேலை செய்துவந்தார். திருவல்லிக்கேணியில் முருகேசநாயகர் மேன்ஷனில் தங்கியிருந்தார்.  கடிதம் வழியாக அறிமுகமானவர். ஒருமுறை அவரோடு தொலைபேசியில் பேசும்போது சாயாவனம் பற்றியும் கந்தசாமி பற்றியும் சொன்னேன். இறுதியாக என் தயக்கத்தையும் சொன்னேன். அதைக் கேட்டு அவர் சிரித்தார். கந்தசாமி தன்னுடைய ஊர்க்காரர் என்றும் சென்னைக்கு வரும்போது தானே அழைத்துச் செல்வதாகவும் சொன்னார். தற்செயலாக இப்படி எல்லாமே கூடிவரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

அடுத்த சென்னை பயணத்தின்போது, பாலு என்னை கந்தசாமியிடம் அழைத்துச் சென்றார். நான் அவரை வணங்கினேன். “வாங்க வாங்கஎன்றபடி புன்னகைத்துக்கொண்டே என்னை தோளில் அழுத்தி நாற்காலியில் உட்காரச் செய்தார். ஜெயகாந்தனைப்போன்ற முடியமைப்புடன் காணப்பட்ட அவர் முகமும் உருவமும் என்னை முதல் கணத்திலேயே வசீகரித்தன. ”கணையாழியில உங்க கதைகள படிச்சிருக்கேன். அசோகமித்திரன் உங்கள பத்தி நல்லவிதமா சொன்னாருஎன்றார்.

நான் பேச்சை சாயாவனத்தின் பக்கமாகவே திருப்பினேன். அது தன் சொந்த ஊர் என்றும் தன் இளமைப்பருவம் அந்தக் கிராமத்தில்தான் கழிந்தது என்றும் அவர் சொன்னார். இளமையிலேயே படிப்பதற்காகவும் வேலைக்காகவும் நகரத்தை நோக்கி வந்துவிட்டதாகச் சொன்னார். “அந்தத் தோப்பு உண்மையிலேயே அழிந்துவிட்டதா?” என்று நான் ஆவலோடு கேட்டேன். அவர் புன்னகைத்தபடியே இல்லையென்று தலையசைத்தார். ”சாயாவனத் தோப்பு அப்படியேதான் இருக்குது. ஆனா தஞ்சாவூர சுத்தி, கும்பகோணத்த சுத்தி நெறய தோப்புகள் அழிஞ்சியிருக்குது. தமிழ்நாடுன்னு எடுத்துகிட்டா, அப்படி அழிக்கப்பட்ட தோப்புகள் ஏராளம்என்றார். ஒருகணம் சாயாவனம் என்பது சாயாவனத்தின் கதை இல்லை என்பது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

அவர் அதை உடனே உணர்ந்துகொண்டார். ”எதார்த்தங்கறது எப்பவும் புள்ளிவிவரங்கள் சார்ந்த உண்மை கிடையாது. நிலவரங்கள் சார்ந்த ஒரு தொகுப்பு. ஒரு கிராமத்துடைய நிலவரம், ஒரு வட்டாரத்துடைய நிலவரம், ஒரு நகரத்துடைய நிலவரம் என்று பல நிலவரங்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி அடுக்கி வச்சிக்கிற அமைப்பு. ஒரு வீடு கட்ட தேவையான மண்ண ஒரு இடத்திலேருந்து, கல்ல ஒரு இடத்திலேருந்து, மூங்கில்,  கீற்றுங்கள ஒரு இடத்திலேருந்து, உத்திரத்துக்கான பனைமரத்தை ஒரு இடத்திலேருந்து கொண்டுவந்து சேத்து அடுக்கி கட்டறமாதிரிதான் இதுவும்  என்று மெதுவாகச் சொன்னார். அதற்குப் பிறகே நான் ஓரளவு தெளிவு பெற்றேன். எதார்த்தவாதம் சார்ந்து அவர் சொன்ன அந்தச் சிறிய விளக்கம் எனக்கு எதிர்காலத்தில் பேருதவியாக இருந்தது.

ஆரோக்கிய நிகேதனத்தையும் சாயாவனத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க உங்களை எது தூண்டியது?” என்று ஆவலோடு கேட்டார். “இங்க இருக்கிற யாருக்குமே அது தோணலை. எனக்கு அப்படி ஒரு யோசனை வந்ததே இல்லைஎன்று மறுபடியும் சொன்னார். நான் உடனேஅந்த யோசனை திட்டமிட்டு வரலை சார். சட்டுனுதான் அந்த யோசனை வந்ததுஎன்றேன். அதுதான் உண்மையும்கூட. அவருக்கு அதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி பெருகியது. “க்ரியேட்டிவான ஆளுங்களுக்கு எல்லாமே இப்படி சட்டுனுதான் தோணும். அது ரொம்ப நல்லதுய்யா. உட்டுடாத. க்ரியேட்டிவிட்டிக்கு அதுதான் நல்ல அடிப்படைஎன்று சொன்னார்.

சாயாவனத்தில் எனக்கு மிகவும் பிடித்த சில காட்சிகளைச் சொன்னேன். சிதம்பரம் தன் தாயின் மரணத்தைப்பற்றி பேசும்போது தாயின் உயிரற்ற உடலை வைத்துக்கொண்டு ஒரு நாள் முழுதும் தனியாக அமர்ந்திருந்ததையும் தெருவில் இருந்தவர்கள் அனைவரும் வேலைக்குச் சென்று திரும்பிவந்த பிறகே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் சொல்லும் காட்சி மிகவும் உருக்கமானது. ஒரு உரையாடல் வழியாக அந்தக் காட்சி தோன்றி மறைந்துவிடும். உயிரற்ற தாயின் உடலுக்கு அருகில் துயரத்தில் தலைகவிழ்ந்திருக்கும் மகனின் சித்திரத்தை அந்த உரையாடல் வழியாக நான் எடுத்துக்கொண்டேன். இன்னொரு காட்சியில் மரங்களைச் சுற்றியிருக்கும் கொடிகளை அறுத்து அகற்றும்போது ஒரு குருவிக்குஞ்சு முள்வேலியில் விழுந்து கதறும். அப்போது அந்த முட்புதர்களுக்கிடையில் வேகமாகச் செல்லும் சிதம்பரம் அந்த உயிரற்ற குஞ்சை எடுத்து வந்து மடியில் வைத்துக்கொண்டு தலைகவிழ்ந்து அழுவான். இதுவும் ஒரு நாலைந்து வரியில் நகர்ந்துபோகும் காட்சி. நான் இரு காட்சிகளையும் சொல்லிவிட்டு, “சிதம்பரம் அந்தக் குருவிக்குஞ்ச மடியில வச்சிருக்கும்போது தன் அம்மாவின் மரணத்த நினைச்சிருப்பானா சார்?” என்று கேட்டேன். அதைக் கேட்டு கந்தசாமிக்கு முகம் மலர்ந்து நின்றுவிட்டது. “நீங்க நினைக்கறதே சிதம்பரம் நெனச்சிக்கிறமாதிரிதான்என்று சிரித்தார்.

நாங்கள் விடைபெற்று எழுந்தோம். அவர் எங்களை வழியனுப்புவதற்காக வெளியே வந்தார். என்னென்ன புத்தகங்கள் படித்திருக்கிறேன் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு என்னென்ன படிக்கவேண்டும் என்று சொன்னார்.  கதை, நாவல்னு வெறும் ஃபிக்ஷன் மட்டும் படிக்கறதோட நிறுத்திக்காதிங்க. நிறைய நான்ஃபிக்ஷன் படிங்க. முக்கியமா வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை படிங்க. அது ரொம்ப ரொம்ப முக்கியம். .வே.சா.வுடைய என் சரித்திரம், நாமக்கல் கவிஞருடைய என் கதை, யதுகிரி அம்மாளுடைய பாரதி நினைவுகள் எல்லாத்தயும் படியுங்க. தேச வரலாறு என்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தனிமனிதர்கள் வரலாறும் முக்கியம்என்று சொன்னார். புறப்படும்போது நீங்க கசடதபற படிச்சிருக்கீங்களா? நாங்க நடத்தன பத்திரிகைஎன்று கேட்டார். இல்லை என்பதன் அடையாளமாக நான் தலையசைத்தேன். ”கேள்விப்பட்டிருக்கேனே தவிர படிச்சதில்லை சார். ப்ஃரெண்ட்ஸ்கிட்ட சொல்லி வச்சிருக்கேன் சார். கிடைச்சதும் படிப்பேன்என்றேன்.  

பொதுவாகவே நான் வாழ்க்கை வரலாற்று நூல்களை தேடித்தேடிப் படிக்கக்கூடியவன்.  கந்தசாமியின் சொற்கள் சரியான பாதையிலேயே நான் செல்வதை உறுதிப்படுத்திக்கொள்ள உதவின. ஊருக்குத் திரும்பிய பிறகு மேலும் வேகத்தோடு புத்தகங்களைத் தேடியெடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.

முதல் சந்திப்பைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் நான் அவரை மறுபடியும் சந்தித்தேன். இந்த முறையும் பாலுதான் என்னை அழைத்துச் சென்றார். அப்போது என் முதல் சிறுகதைத்தொகுதி வெளிவந்திருந்தது. அதைக் கொடுத்துவிட்டு சிறிதுநேரம் உரையாடிக்கொண்டிருந்துவிட்டுத் திரும்பினேன். எனக்கு அவர் அப்போது அவருடைய சிறுகதைத்தொகுதியை எனக்கு கையெழுத்து போட்டுக் கொடுத்தார். வழக்கம்போல நான் ஊருக்குத் திரும்பியதும் அத்தொகுதியைப் பற்றி விரிவாகவே ஒரு கடிதம் எழுதினேன். நேரில் உரையாடுவதைவிட கடிதங்கள் எழுதுவது எனக்கு மிகவும் வசதியாக இருந்தது.

அடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் பெங்களூருக்கு மாற்றலாகி வந்தேன். இந்திய அறிவியல் கழகத்தில் நண்பர் சுந்தரமூர்த்தி நடத்திவந்த இலக்கியச்சந்திப்பின் வழியாக கிழார் என்னும் தமிழாசிரியரின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவரிடம் கசடதபற இதழ்கள் இருப்பதாகத் தெரிவித்தார். யாரோ என்னிடம் புதையல் இருக்குமிடத்தைச் சொன்னதைப்போல மகிழ்ச்சியாக இருந்தது.  அன்றே அவருடன் சென்று அவற்றை வாங்கிவந்து ஒளியச்சு நகல் எடுத்துக்கொண்டு திருப்பிக் கொடுத்தேன். ஏறத்தாழ இரு வார காலம் அவ்விதழ்களை ஒன்றுவிடாமல் படித்துமுடித்தேன். தமிழ்ச்சிந்தனைப்போக்கை வடிவமைப்பதில் அவ்விதழுக்குள்ள பங்கை என்னால் உணரமுடிந்தது. நான் உடனே வழக்கம்போல அவருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி அனுப்பிவைத்தேன்.

பெங்களூருக்கு வந்த பிறகு நான் சென்னை வழியாக ஊருக்குச் செல்லவேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது. அதனால் அவரைச் சந்திக்க இயலவில்லை. பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் அவருடைய நாவல்களும் சிறுகதைத்தொகுதிகளும் கிடைத்தன. நான் அவற்றையெல்லாம் விரும்பிப் படித்தேன். சாகித்ய அகாதெமி ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்துக்காக ஒருமுறை அவர் பெங்களூருக்கு வந்திருந்தார். அப்போது அவரைச் சந்திக்க காவ்யா சண்முகசுந்தரமும் தமிழவனும் சென்றார்கள். நானும் அவர்களோடு சென்று அவரைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தம் மகளுக்குத் திருமணம் முடித்து, அவரை குடியமர்த்துவதற்காக பெங்களூருக்கு வந்திருந்தார். வந்ததும் எனக்கு காலையிலேயே தொலைபேசியில் தகவலைச் சொன்னார். நான் அவர் தங்கியிருக்கும் முகவரியைக் கேட்டேன். அவர் சொன்ன இடம் எங்கள் வீடிருந்த தெருவுக்கு எதிர்ச்சாரியில் இருந்தது. ”இன்னும் அஞ்சே நிமிஷத்துல உங்கள வந்து பாக்கறேன் சார்என்றேன். “எப்படி?” என்று ஆச்சரியத்தோடு அவர் கேட்டார். “அந்த அளவுக்கு பக்கத்துலதான் சார் இருக்கேன்என்று சொல்லிவிட்டு சந்திக்கச் சென்றேன். மூன்று நாட்கள் அவர் அப்போது பெங்களூரில் தங்கியிருந்தார். எல்லா நாட்களிலும் மாலை வேளைகளில் சந்தித்து உரையாடினோம். நண்பர் காவ்யா சண்முகசுந்தரத்தின் வீடும் அருகிலேயே இருந்தது. அங்கு சென்று நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தோம்.

அவருக்கு எல்லாத் துறைசார்ந்தும் ஆர்வமிருந்தது. ஒவ்வொன்றைப்பற்றியும் ஒரு அரைமணி நேரமாவது பேசும் அளவுக்கு தெரிந்துவைத்திருந்தார். உலகவரலாறு அவருக்கு மனப்பாடம். கிரேக்க வரலாறு, செவ்விந்தியர் வரலாறு, ஆப்பிரிக்க வரலாறு என  பேச்சு எதைப்பற்றியதாக இருந்தாலும் உடனே உரையாடத் தொடங்கிவிடுவார். சாக்ரடீஸ், பிளாட்டோ, கலிலியோ போன்ற சிந்தனையாளர்களைப்பற்றி விரிவாகவே தெரிந்துவைத்திருந்தார். இவர்களைப்பற்றியெல்லாம் ஆங்கிலத்தில் என்ன புத்தகங்கள் வந்திருக்கின்றன, தமிழில் யார்யார் இவர்களைப்பற்றி எழுதியிருக்கிறார்கள் என்பதைப்போன்ற தகவல்களை எப்போது கேட்டாலும் சோர்வின்றி சொல்லக்கூடிய ஆற்றல் கந்தசாமிக்கு இருந்தது. ஓவியம், சிற்பம், ஆவணப்படம் போன்றவற்றிலும் அவருக்கு ஆர்வமிருந்தது.

எப்படியும் ஆண்டுக்கு இருமுறை அவர் பெங்களூருக்கு வரும்போதெல்லாம் சந்தித்துவிடுவேன். “புதுசா என்ன புத்தகங்கள் படிச்சீங்க?” என்றுதான் அவர் உரையாடலைத் தொடங்குவார். நம்மிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதும் தாம் படித்த புத்தகங்களைப்பற்றி சொல்வார். ஒருமுறை கூட புதிய புத்தகம் பற்றி அவர் பேசாமல் இருந்ததே இல்லை. ஒரு மாதத்தில் ஐந்து அல்லது ஆறு புதிய புத்தகங்களாவது படித்துவிடுவதாக அவர் சொன்னார். திடீரென அவர் யானைகள் பற்றிப் பேசுவார். பிறகு ஆறுகள், அருவிகள் பற்றிப் பேசுவார். உலகில் உள்ள எல்லாவற்றைப்பற்றியும் பேசக்கூடிய ஆற்றலும் ஞானமும் அவருக்கு இருந்தன என்பதுதான் உண்மை. கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா ஆகிய வற்றாத ஜீவநதிகள் போல, சா.கந்தசாமி வற்றாத  ஞானநதி.

27.05.2018 அன்று கவிக்கோ அரங்கில் சென்னையில் என்னைப்பற்றி நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் சிறப்புரையாற்றினார். மறுநாள் நான் தொலைபேசியில் அழைத்து அவருக்கு நன்றி சொன்னேன். ”உம்ம பத்தி பேச இப்படி ஒரு வாய்ப்பு அமைஞ்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்யாஎன்று அப்போது அவர் சொன்ன சொற்கள் இன்னும் என் காதில் ஒலிக்கின்றன.

அடுத்த ஆண்டில் அவர் பெங்களூரில் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது தமிழில் புதிதாக மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கும் ஓடை நாவலைப்பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். நாவலின் மொழிபெயர்ப்பாளர் நல்லதம்பியும் நண்பர் திருஞானசம்பந்தமும் அப்போது உடனிருந்தார்கள். நண்பகல் தொடங்கி ஏறத்தாழ ஆறேழு மணிநேரம் தொடர்ந்து அவர் உரையாடினார். தற்சமயம் நாம் படித்துக்கொண்டிருக்கும் மொழிபெயர்ப்புகள் எல்லாமே ஐம்பது அறுபது ஆண்டுகள் பழைமை மிக்கவை. அன்றைய காலகட்டத்து மொழியை உடையவை. அவற்றை இன்றைய மொழியில் மீண்டும் மொழிபெயர்ப்பது சரியாக இருக்குமா என்று கந்தசாமி கேட்டார். தாராளமாக செய்யலாம் என்பதே என் பதிலாக இருந்தது. உடனே தொகைநூல்களை உருவாக்குவது பற்றி பேசத் தொடங்கிவிட்டார்.

தெருக்கூத்து இடம்பெற்றிருக்கும் சிறுகதைகள், மரணச்சடங்கு இடம்பெற்றிருக்கும் சிறுகதைகள், திருமண மண்டபங்கள் இடம்பெற்றிருக்கும் சிறுகதைகள் என வெவ்வேறு களங்கள் சார்ந்து கதைகளைத் தொகுத்துப் பார்ப்பது ஆரோக்கியமாக இருக்கும் என்பது அவர் எண்ணம். நாம் இதுவரை அடைந்தது என்ன, அடைய மறந்தது என்ன என்னும் கேள்விக்கு இப்படிப்பட்ட தொகைநூல்களே விடைகளை வைத்திருக்கும் என்பது அவர் பார்வை.

எழுத்தாளர் விட்டல்ராவைப் பாராட்டும் விதமாக ஒருநாள் கருத்தரங்கமொன்றை பெங்களூரில் நிகழ்த்தும் திட்டமொன்றை நானும் திருஞானசம்பந்தமும் அவரிடம் பகிர்ந்துகொண்டோம். “நல்ல திட்டம்யா. அவருக்கு நாம கண்டிப்பா செய்யணும்என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “அடுத்த மாசம் கனடாவுக்கு போறேன். திரும்பிவர ஆறு மாசமாய்டும். வந்ததுமே நிகழ்ச்சிய வச்சிக்கலாம். நானே வந்து நடத்திக் கொடுக்கறேன்என்று தெரிவித்தார். அந்த ஊக்கம் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. நிகழ்ச்சியை எங்கு நடத்தலாம், எந்தெந்த அமர்வுகளுக்கு யார்யாரை அழைக்கலாம் என்றெல்லாம் பல திட்டங்கள் மனத்துக்குள்ளேயே எழுந்து அடங்கின. ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரும் கனடாவிலிருந்து திரும்பிவிட்டார். 2020 பிறந்த பிறகு ஒருமுறை அழைத்து எங்கள் திட்டத்தை மீண்டும் நினைவூட்டினேன். ஏதோ ஒரு எழுத்துவேலையில் இருப்பதாகவும் அதை முடித்துவிட்டு ஏப்ரல் வாக்கில் பெங்களூருக்கு வருவதாகவும் சொன்னார். துரதிருஷ்டவசமாக மார்ச் இறுதிவாரத்திலிருந்தே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்லமுடியாதபடி கோவிட் தீநுண்மி பரவல் அச்சம் அனைவரையும் தடுத்துவிட்டது. அவருக்கும் அது ஏமாற்றமளிப்பதாகவே இருந்தது. “இது ஓயட்டுமே, பிறகு பார்க்கலாம்என்று சொன்னார். அதற்குப் பிறகு அவருடன் தொலைபேசியில் உரையாடவே முடியவில்லை. உடல்நிலை வேகமாக சரிந்து 31.07.2020 அன்று உயிரைப் பறித்துவிட்டது.

உரையாடலில் எப்போது புதுப்புது கோணங்களை உருவாக்கி, அதை மேலும் மேலும் பேசி விரிவாக்கி, புதிய சிந்தனைகளை நோக்கி பெரும்பாய்ச்சல் நிகழ்த்துவது சா.கந்தசாமியின் வழிமுறை. அவர் உரையாடல்கள் ஒவ்வொன்றும் ஒருவகையில் விவாதம் நிகழ்த்துவதற்கான விதைகளைக் கொண்டவை. அதன் விளைச்சல் எப்போதும் தமிழ்ப்படைப்புலகுக்கு  பெருமை சேர்ப்பதாகவே இருந்தது. எதிர்பாராமல் நிகழ்ந்த அவர் மறைவு அந்த விதைகளை நம்மிடமிருந்து பறித்துவிட்டது. இது ஒருவரும் எதிர்பாராத பேரிழப்பு. சா.கந்தசாமிக்கு அஞ்சலிகள்.  

(புத்தகம் பேசுது - ஆகஸ்டு 2020 இதழில் பிரசுரமானது. )