Home

Monday, 24 August 2020

அகத்தில் நிகழும் விளையாட்டு - கல்யாண்ஜி கவிதைகள்

 

கல்யாண்ஜியின் கவிதைகள் காட்சித்தன்மை நிறைந்தவை. ஒருவகையில் நம் சங்கக்கவிதைகளை நினைவூட்டுபவை. உயிர்ப்பான அபூர்வமான தருணங்கள் அவை. அக்காட்சிகள் தன்னளவில் தீர்மானமான எந்தப் பொருளையும் சுட்டவில்லை. இனிப்பை விழுங்கிய பிறகு நாக்கைக் குழைத்துக்குழைத்து அசைபோட்டு, இனிப்பின் சுவையில் திளைப்பதுபோல கல்யாண்ஜி தீட்டிவைத்திருக்கும் காட்சிச்சித்திரங்களும் அசைபோட்டு திளைக்கத்தக்கவை. திளைக்கும்தோறும் அக்கவிதைகள் புதுப்புது அனுபவங்களையும் அர்த்தங்களையும் வழங்கிக்கொண்டே இருக்கின்றன.

மணல் உள்ள ஆறு என்னும் தொகுப்பில் கல்யாண்ஜி காக்கைமை என்றொரு புதிய சொல்லை உருவாக்கி அளித்துள்ளார். கூடி வாழ்கிற, மரணமடைந்துபோகும் ஒன்றைச் சுற்றி கரைந்துகரைந்து உருகுகிற அதன் அருங்குணத்துக்குத்தான் அவர் அப்படி ஒரு பெயரைச் சூட்டுகிறார். தன் இனத்தை விட்டுக்கொடுக்காத பற்றுக்கு அது ஓர் அடையாளம். ஆண்மை, பெண்மை போல காக்கைமை. காலம்காலமாகவே அந்த அருங்குணம் ஓர் ஐதிகமாகவே மானுட மனத்தில் பதிந்துகிடக்கிறது. ஆனால், அந்த நம்பிக்கை தன் கண்முன்னாலேயே உடைந்துபோவதைக் காணும்போது மனம் கொள்ளும் துயரம் அளவற்றது. கவிதையில் நிகழ்வது இதுதான். ஒருமுறை புங்கமரத்தடியில் ஒரு காக்கைக்குஞ்சு இறந்துகிடப்பதைக் காண நேர்கிறது. இன்னொரு நாள் ஒரு வீட்டின் ஓரமாக இரட்டைச் சிசுக்களின் மரணத்தைப்போல மேலும் இரண்டு காக்கைகள் இறந்துகிடப்பதையும் காண நேர்கிறது. ஆனால், தன்  இனத்தின் மரணம் மற்ற காக்கைகளிடம் எவ்விதமான பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. ஒவ்வொன்றும் தன் போக்கில் இயங்கியபடி இருக்கின்றன. காக்கைகள் இறந்ததைவிட, அதன் குணம் மறைந்துபோன தன்மைதான் துயரமளிப்பதாக உள்ளது என்று குறிப்பிடுகிறார் கல்யாண்ஜி.  அடிப்படையான அதன் பண்பைவிட, அன்றாட வாழ்க்கைக்கான அலைச்சலும் உணவுதேடுதலும் உயிர்தரித்தலுமே அதற்கு முக்கியமாக மாறிவிடுகிறது. தன் இனத்தை விட்டுக்கொடுக்காத பற்று என்பது பொய்யாய்ப் பழங்கதையாய் மாறிப் போவதைப்பற்றி எந்தக் காக்கைக்கும் கவலையில்லை. அன்றைய இருப்புக்காக அணிலை விரட்டிச் சோறு கொத்தித் திரிவதுதான் முக்கியமான கவலையாக இருக்கிறது. சோற்றுக்குத் திரியும் அலைச்சலில் ஒருவேளை எதிர்பாராமல் மரணமடைந்தால், தனக்கும் இதே புறக்கணிப்புதான் நேரும் என்பதை காக்கைகளும் அறிந்தே இருக்கக்கூடும் என்றுதான் தோன்றுகிறது. இறந்துபோன காக்கைகளையும் கண்டுகொள்ளாத காக்கைகளையும் கொண்ட காட்சியை முன்வைத்து, கவிதையை இன்னும் சற்றே விரிவாக்கிக்கொள்ளும்போது நமக்குக் கிடைக்கும் சித்திரத்தால் உருவாகும் துயரம் இன்னும் அழுத்தம் மிகுந்ததாக இருக்கிறது. இறந்துபோன காக்கைகளாக ஈழத்தமிழர்களையும் கண்டுகொள்ளாத காக்கைகளாக பிற உலகத்தவரையும் இணைத்து எண்ணிப் பார்க்கும்போது உருவாகும் தன்வெறுப்புக்கு எல்லையே இல்லை. இறந்துபோனது காக்கைமைமட்டுமல்ல, மனிதமும் அல்லவா? ”அறிவினால் ஆகுவதுண்டோ, பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றாக் கடைஎன்ற வள்ளுவரின் வரிகள் இந்த இடத்தில் இணைத்து நோக்கத்தக்கவை.  நமக்கு அறிவிருக்கிறது. வயிற்றுக்கு உணவைத் தேடுகிற அறிவு. பண்பாட்டைப் பற்றிக் கவலைப்படாத அறிவு. அந்த அறிவினால் ஒரு துளி பயனும் இல்லை. பாதிக்கப்பட்ட உலகத்தையும் அதைப்பற்றி சிறிதுகூட கவலைப்படாமல் இயங்கும் உலகத்தையும் அடையாளப்படுத்துவதாககாக்கைமையை உருமாற்றி வாசிக்கும்போது, அது ஓர் உலகக்கவிதையாகவே மாறிவிடுகிறது.

தொலைந்துபோன காக்கைமையைப்போலவே, தொலைந்துபோன அர்ச்சனாவைப்பற்றிய சித்திரத்தை வழங்குகிறது இந்த அர்ச்சனாவுக்கு முந்திய அர்ச்சனாஎன்னும் கவிதை. போன கோடைவிடுமுறைக்கு வந்த அர்ச்சனாதான் இந்த விடுமுறைக்கும் வந்திருக்கிறாள். ஆனால் போன விடுமுறையின்போது கேட்ட எதுவுமே இப்போது அவள் நினைவில் இல்லை. அவளுடைய தேவைகள் இப்போது மாறிவிட்டன. இரண்டு கோடைகளுக்கிடையே அவளிடம் நிகழ்ந்துள்ள மாற்றத்தை அவளிடமே முன்வைப்பது அபத்தம். குழந்தைமையை அவள் இவ்வளவு விரைவில் கடந்துவிட்டாள் என்பது நம்ப முடியாத உண்மையாகவும் நம்பாமல் இருக்கமுடியாத உண்மையாகவும் இருக்கிறது. குழந்தைமை என்பது ஒரு பொற்காலம். அது அப்போது பேசும் சொற்கள் நம் மொழியைச் சேர்ந்தவைதான் என்றாலும் உண்மையில் அது மனிதமொழியல்ல, தேவதைகளின் மொழி. அதனாலேயே, அந்த மொழி குழலைவிட இனியது. யாழைவிட இனியது. அது வழங்கக்கூடிய ஆனந்தத்துக்கு அளவே இல்லை. வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த வாய்ப்பை மூன்றுமுறை வழங்குகிறது. அவனே குழந்தையாக இருக்கும்போது அந்த மொழியைப் பேசுவது ஒரு வாய்ப்பு. அவன் ஒரு தந்தையாக மாறி, தன் குழந்தை வழியாக அந்தத் தேவதையின் மொழியைக் கேட்டுக் கரைந்துபோவது இரண்டாவது வாய்ப்பு. அர்த்தமே இல்லாவிட்டாலும் குழந்தை குழறும் சொற்களையெல்லாம் தானும் குழறிக்குழறிப் பேசிப்பேசி ஒரு தந்தை பெறும் ஆனந்தம் அளவற்றது. அவன் ஒரு தாத்தாவாக மாறி, தன் மகன் அல்லது மகள்வயிற்றுப் பேரக்குழந்தையின் வழியாக அதே பழைய தேவதையின் மொழியைப் பேசிப் பழகும் வாய்ப்பு இறுதி வாய்ப்பு. தேவதையின் மொழியை உதறி, லெளகிக மொழியைப் பேச ஒரு குழந்தை தொடங்கும்போது, தாத்தாவான ஓர் ஆணுக்கிருந்த இறுதி வாய்ப்பு முடிவடைந்துவிடுகிறது. தொலைந்துபோன தேவதையின் மொழியைப்பற்றிய ஆதங்கத்தை ஒரு பாத்திரம் முன்வைக்கும்போது, தனக்கிருந்த இறுதிவாய்ப்பை இழந்துபோன துக்கமும் ஆற்றாமையும் அதில் கலந்தே இருக்கிறது.

தொலைந்துபோன ஆற்றையும் மணலையும் ஒவ்வொருவரையும் நினைத்துக்கொள்ளத் தூண்டும் கவிதைமணல் உள்ள ஆறு”. ஊரில் எல்லையில் ஓயாமல் இரைச்சலிட்டபடி ஆறு ஓடிக்கொண்டிருந்தது ஒரு காலம். பிறகு கோடையில் வற்றி, மழைநாட்களில் மட்டும் ஓடியது இன்னொரு காலம். அதுவும் வற்றி, ஒரு வாய்க்காலாக மாறியது மற்றொரு காலம். தண்ணீரைப் பறிகொடுத்த ஆறு மணலையும் பறிகொடுத்துவிட்டு பரிதாபமாக நிற்கிறது. ஆறு என்பது ஒரு பெயராக, திசையாக மாறிவிட்டது. அடுத்த தலைமுறையினருக்குக் காட்டுவதற்குக்கூட ஆறு என்னும் வடிவம் இருக்காதுபோல. அந்த அளவுக்கு வேகமாக அதை நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம். புகைப்பட ஆல்பத்தில் பழைய காலத்துப் படங்களைப் பார்த்துவிட்டு, கழிந்துபோன இளமையை, இழந்துபோன அழகை, மறைந்துபோன மனிதர்களை நினைத்துக்கொள்வதுபோல, ஆற்றின் அடையாளம் மிச்சமிருக்கிற ஒருசில பொருட்களைப் பார்த்து, ஆற்றைக் கண்டதுபோல ஆறுதலடைவதைத் தவிர வேறு வழியில்லை. இறந்துபோன ஆச்சியின் மர அலமாரியில் அவள் பயன்படுத்திய சோப்பு டப்பா தற்செயலாக ஒருநாள் கிடைக்கிறது. அதற்குள் இருந்த லைபாய் சோப்புத் துண்டில் எல்லாப் பக்கத்திலும் முள்முள்ளாக ஒட்டிய மணல்துகள்களைப் பார்க்கமுடிகிறது. மணலுள்ள ஆறு ஓடிக்கொண்டிருப்பதுபோன்ற கிளர்ச்சியோடு அதைப் புரட்டிப்புரட்டிப் பார்த்தபடி இருக்கிறான் மனிதன். ஆச்சி மறைந்ததுபோலவே ஆறும் மறைந்துபோய்விட்டது. மனித வாழ்வின் ஆயுள் ஓர் எல்லைக்குட்பட்டது. இயற்கையின் ஆயுளுக்கு அப்படி எந்த ஆயுளும் இல்லை. அது நேற்று இருந்தது. இன்று இருப்பது. நாளையும் இருக்கப்போவது. முக்காலத்துக்கும் உரிய பேராற்றல் அது. இயற்கையை அண்டி வாழலாமே தவிர, அதைச் சுரண்ட எண்ணுவது மிகப்பெரிய பேரழிவையே கொண்டுவரும். அது நமக்கு நாமே தேடிக்கொள்ளும் பேரழிவு என்பது காந்தியின் வரி. மனிதனின் சுரண்டல் எண்ணத்துக்கு பேராசைக்கும் எல்லையே இல்லாமல் போன தருணத்தில், நாம் ஏரியை இழந்தோம். குளங்களை இழந்தோம். தோப்புகளை இழந்தோம். காடுகளை இழந்தோம். குன்றுகளை இழந்தோம். ஆற்றுப்படுகைகளை இழந்தோம். இறுதியில் ஆற்றையே இழந்தோம். பாவ உணர்ச்சியும் குற்ற உணர்ச்சியும் இல்லாத தலைமுறையாக நாம் இருக்கிறோம். இதை நினைத்து வேதனைப்படும் மனத்தால் கவிதைமட்டுமே எழுதிவைக்க முடிகிறது.

கூடவேஒரு அழகான காட்சிக்கவிதை. ஒரு பேருந்து நிழற்குடையின் ஓரமாக மிதிவண்டியை நிறுத்திவிட்டு சாயங்கால நேரத்தில் காத்திருக்கிறார் ஒரு பெரியவர். யாரிடமும் அவர் மணி கேட்பதில்லை. பீடி புகைத்தபடியும் வேடிக்கை பார்த்தபடியும் பொழுதைக் கழிக்கிறார். குறிப்பிட்ட நேரத்தில் எதிர்பார்த்துக் காத்திருந்த பெண் ஒரு பேருந்தில் வந்து இறங்குகிறாள். நகலகக்கடையின் கழிவுத்தாளைப்போல கசங்கிய முகத்துடன் கைப்பேசியில் பேசியபடியே வந்து இறங்குகிறாள். ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த மிதிவண்டியில் ஏறி மிதித்துப் புறப்படுகிறாள். பின்னிருக்கையில் உட்கார்ந்த பெரியவர் இருமிக்கொண்டே செல்கிறார். இருட்டில் வழி காட்டுவதுபோல அவர் இருமல் சத்தம் ஒலிக்கிறது. ஒரு முதியவரை அமரவைத்து இளம்பெண்ணொருத்தி ஓட்டிச்செல்லும் சைக்கிள் இருளில் ஓடி மறையும் காட்சியை நம் மனத்தில் சித்திரமாக்கி அசைபோடும்போது அச்சித்திரம் பல பொருட்களைத் தனக்குள் வைத்திருப்பதை உணரலாம். வெளிச்சத்துக்காக ஏங்குகிறவர்கள்தான் அவர்கள். வெளிச்சத்துக்கான கனவோடுதான் அவள் உழைக்கிறாள். ஆனால் வாழ்வின் விதி அவளை வெளிச்சத்தின் திசையில் செலுத்தவில்லை. இருட்டைநோக்கியே செலுத்துகிறது. இது ஒரு கோணம். வெளிச்சத்துக்கான கனவிலிருந்து பொழியக்கூடிய ஒளிக்கற்றைகளின் துணையோடு அவள் இருளைக் கடந்து செல்கிறாள் என்பது இன்னொரு கோணம்.

நகர்வு கவிதையில்  ஆற்றங்கரைக்காட்சியொன்று சித்தரிக்கப்பட்டிருக்கிறது. எல்லோரும் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பூ அசைந்து மிதந்துவருகிறது. அது தன்னைநோக்கி வருவதாக எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், அந்தப் பூவோ தன் போக்கில் நகர்ந்துசென்று நீச்சல் தெரியாமல் ஆறு பார்த்து அமர்ந்திருக்கும் சிறுமியைநோக்கி தன் போக்கில் நகர்ந்து செல்கிறது. இந்த முரணே வாழ்வின் அழகு. இதுவே வாழ்வின் சிக்கலும்கூட.

வெயில்முடிவுகவிதையிலும் மூன்று புள்ளிகளால் ஆன காட்சியொன்று காணப்படுகிறது. எல்லா இலைகளையும் உதிர்த்துவிட்டு நிற்கிற செடி ஒரு புள்ளி. அச்செடியின் அருகில் நிற்கிற பூனை இரண்டாவது புள்ளி. செடியின்மீது ஊர்ந்துசெல்லும் வெயில் மூன்றாவது புள்ளி. ஆனால் கவிதை இப்புள்ளிகளை வெறும் புள்ளிகளாகமட்டும் சித்தரிக்கவில்லை. முடிவெடுக்கும் வேகத்தையும் தேவையையும் அப்புள்ளிகளோடு இணைத்துக் காட்டுகிறார். புள்ளிகளின் தனித்தன்மை இதனால் அதிகரிக்கிறது. செடி தன் இலைகளை உதிர்த்ததற்குப் பின்னால், அது தீர்மானமாக எடுத்துக்கொண்ட முடிவு காரணமாக இருக்கிறது. பூனை அசையாமல் அமர்ந்திருப்பதற்கு, முடிவு செய்யமுடியாத அதன் குழப்பம் அல்லது தயக்கம் காரணமாக இருக்கிறது. ஆனால் செடியின்மீது ஊர்கிற வெயிலுக்கு முடிவெடுக்க வேண்டிய அவசியமோ அல்லது தேவையோ இல்லை.

யாரோ அருகில் இருப்பதைப்போன்ற உணர்வைத் தருகிற நந்தியாவட்டைப்பூவின் மகத்துவத்தை முன்வைக்கிறது ஒரு கவிதை. ஒரு பூவின் அருகில் உறங்குகிறோம் என்கிற உணர்வு அளிக்கக்கூடிய பரவசமும் ஆனந்தமும் அளவற்றவை. மனிதன் ஒருபோதும் தனியனாகத் தன்னை உணரவேண்டிய அவசியமில்லை. உலகம் வேறு தான் வேறு என்கிற எண்ணமும் தன்முனைப்பும் நிறைந்திருக்கிறபோதுதான் அப்படி ஒரு கருத்து அவன் நெஞ்சில் நிரம்பியிருக்கிறது. பூ, காய், கனி, செடி, கொடி, ஆறு, கல், பாறை, மணல், விலங்கு, பறவை, மரம் என நீளும் உலக உயிர்ச்சங்கிலியில் அவனும் ஒரு கண்ணி. அவ்வளவுதான். பூ மட்டுமல்ல, இயற்கையின் எல்லா அம்சங்களும் அவனுக்கு உறுதுணையானவையே. தன்னை வேறுபடுத்திக் காட்டும் தன்முனைப்பின் காரணமாகவே அவன் அந்த உயிர்ச்சங்கிலியிடமிருந்து அறுத்துத் துண்டாக விழுந்துவிடுகிறான். தன்னை இந்த மண்ணில் நிறுவிக்கொள்ள அவன் நாள்தோறும் நிகழ்த்தும் தந்திரங்களும் வேடங்களும் ஏராளமானவை. ஆனாலும் உற்ற துணையைக் கண்டறிய முடியாத ஓர் உறுத்தல் அவனைத் தைத்துக்கொண்டே இருக்கிறது. ஒரு மறுகண்டுபிடிப்புபோல ஒரு மழைநாளில் அவன் கண்டடைவதுதான் நந்தியாவட்டைப்பூவின் துணை. அக்கணத்தில் அவன் அடையக்கூடிய நிறைவுணர்வு அவன் ஆழ்மனத்தில் உறைந்திருக்கும் ஆதியுணர்வைத் தட்டி எழுப்பக்கூடும்.

ஆதியுணர்வை நோக்கி, யானையின் மூளை திரும்பிவிடக்கூடாது எனப் பதற்றமுறும் பாகனின் சித்திரத்தைஅப்பால்என்னும் கவிதையில் காணமுடிகிறது. தொலைத்த குரலைத் தேடியெடுத்து தும்பிக்கை உயர்த்திப் பிளிறுகிறது ஒரு கோவில்யானை. அப்பிளிறலால் கோயிலின் உட்பிராகாரமே நடுங்குகிறது. அச்சத்தத்தின் தொடர்ச்சியாக காட்டின் மணம் யானையின் மூளைக்குள் படர்ந்துவிடக்கூடாது என்று பதறுகிறான் பாகன். ஆனால் சீட்டிப் பாவாடையும் சிவப்புப் பலூனுமாக வருகிற சின்னப்பிள்ளையின் பரவசமாக முகத்தைப் பார்த்ததும் பிளிறல் அடங்கி, பழைய நினைவு அடங்கி, சாந்தமாகிவிடுகிறது யானை. யானை ஒரு வலிமையான விலங்கு. அதே சமயத்தில் குழந்தைமை ததும்பும் விலங்கும்கூட. வலிமையையும் குழந்தைமையையும் ஒருங்கே தக்கவைத்துக்கொண்டிருப்பதுதான் அதன் சிறப்பு. அதன் நெஞ்சில் நிறைந்திருக்கும் குழந்தைமையைத் தூண்டிவிடுகிறது, எதிரில் வந்து நின்ற குழந்தை. அது சாதுவாக மாறியதற்கு இது ஒரு காரணம். முதுமையுற்றாலும்கூட யானை ஒருபோதும் தன்னிடமுள்ள குழந்தைமையை உதறுவதில்லை. ஆனால் மனிதன் அப்படியல்ல. குழந்தைமையிடமிருந்து முழுக்கமுழுக்க தன்னைத் துண்டித்துக்கொண்டே வளர்கிறான் மனிதன். பாம்பு தன் சட்டையை உரித்துவிடுவதுபோல அவன் அதை உதிர்த்துவிடுகிறான். ஒரு குழந்தையின் . முன்னிலை அவனிடம் எந்த மாற்றத்தையும் விளைவிக்காமல் போவதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருக்கிறது.

வேப்பமரத்தடியில் நிகழும் நாய்களின் விளையாட்டுக்காட்சியொன்றை கல்யாண்ஜி ஒரு கவிதையில் தீட்டிக் காட்டுகிறார். அம்மரத்தின் நிழலில் விளையாடுபவை உணமையில் மூன்று நாய்கள்மட்டுமே. ஆனால் இல்லாத ஒரு நாயோடு விளையாடுவதுபோல அந்த ஆட்டம் இருக்கிறது. ஒரு நாலாவது நாய் அங்கே இருப்பதைப்போன்ற தோற்றத்தை, அந்த ஆட்டம் பார்வையாளனிடம் தோற்றுவிக்கிறது. இருவர் ஆடக்கூடிய கேரம் போர்டு  ஆட்டத்தை சில சமயம் ஒருவரே ஆடிக்கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். அந்தக் காலத்தில் மாதாந்திரத் தீட்டுக்கு சுவரோரமாக ஒதுங்கி உட்காரும் அக்காமார்கள் யாரோ இன்னொருவரோடு ஆடுவதாகக் கருதிக்கொண்டு தனியாக பல்லாங்குழி ஆடியதைப் பார்த்த நினைவிருக்கிறது. மனிதர்கள் நினைத்துக்கொள்வதுபோல நாய்களும் நினைத்துக்கொள்ளும்போலும். உண்மையில் நான்காவது நாய்க்கு பெளதிக இருப்பில்லை. சூட்சும இருப்புமட்டுமே இருக்கிறது. ஞாபகம் என்னும் சூட்சும இருப்போடு மனிதன் நிகழ்த்தக்கூடிய விளையாட்டுகூட ஒருவித கற்பனை விளையாட்டுதான். தொலைந்துபோன ஆறு, தொலைந்துபோன மணல், தொலைந்துபோன குழந்தைமை, தொலைந்துபோன அர்ச்சனாவின் கேள்விகள், தொலைந்துபோன அன்பு என ஒவ்வொன்றையும் அசைபோட்டு அசைபோட்டு அகத்தில் நிகழக்கூடிய விளையாட்டுதான் புறத்தில் நாய்களின் விளையாட்டாக உருப்பெற்றிருக்கிறது. நம் ஒவ்வொருவரின் அகத்திலும் அந்த அலகிலா விளையாட்டு ஒவ்வொரு கணமும் நிகழ்ந்தபடியே இருக்கிறது.

 

(மணல் உள்ள ஆறு. கல்யாண்ஜி. கவிதைகள். சந்தியா பதிப்பகம். சென்னை-83. விலை. ரூ.75)