Home

Wednesday, 22 July 2020

கோவை ஞானியின் பார்வை - விதையும் உரமும்


1957ஆம் ஆண்டில் முதல் ஐந்து தமிழ் நாவல்கள் என்னும் தலைப்பில் ஒரு கட்டுரைத்தொடரை குமுதம் இதழில் க.நா.சு. எழுதினார். பிறகு அமுதநிலையம் அக்கட்டுரைகளை ஒரு நூலாக வெளியிட்டது.  வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம், பி.ஆர்.ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம், அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம், எஸ்.எம்.நடேச சாஸ்திரியின் தீனதயாளு, தி.ம.பொன்னுசாமிப்பிள்ளையின் கமலாட்சி ஆகிய நாவல்களை முன்வைத்து இக்கட்டுரைகள் எழுதப்பட்டன. அந்தக் காலத்தில் நாவல் கலை என்பது தமிழுக்குப் புதிது. அதற்கு ஒரு மரபை ஏற்படுத்தித் தரமுயன்றவர்கள் இந்த நாவல்களின் படைப்பாளிகள். இலக்கியத்திலே எந்த ஒரு முயற்சிக்கும் மரபு என்பதுதான் ஆணிவேர். இன்று தமிழ்க்கலையுலகில் நாவல் என்னும் ஆலமரம் எல்லாத் திசைகளிலும் விழுதுவிட்டு வேரூன்றி உறுதியாக நிற்கிறது. அதற்கு வழிசெய்து கொடுத்தவர்கள் இந்த நாவல் முன்னோடிகள் என்கிற மதிப்புள்ளவராக இருந்தார் க.நா.சு. அவர்களுடைய முயற்சிகளை வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்கிற எண்ணத்தோடு இந்தத் தொடரை எழுதியதாக அந்தப் புத்தகத்துக்காக எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார் க.நா.சு.


நாவல் விமர்சன மரபை க.நா.சு. இந்த நூலின் வழியாகத் தொடங்கிவைத்தார் என்றே சொல்லவேண்டும். புத்தக விற்பனை என்பது, அப்புத்தகத்தை மதிப்பீடு செய்ய உதவக்கூடிய அளவுகோலே அல்ல என்பதை தொடக்கத்திலேயே நிராகரிக்கும் க.நா.சு. விமர்சகனின் உள்ளத்தெளிவுக்கும் உண்மைநாட்டத்துக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறார். நமக்குள்ள விருப்பு வெறுப்பைக் கடந்து, ஒரு நாவல் முன்வைக்கக்கூடிய அனுபவத்தில் உள்ள உண்மைக்கும் அதை நாம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிற எண்ணத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பவராக ஒரு விமர்சகன் செயல்படவேண்டும் என்பது க.நா.சு.வின் வரையறையாக இருந்தது.  முதல் ஐந்து நாவல்களையும் விரிவான ஆய்வுக்குட்படுத்திய க.நா.சு. அந்த ஐந்து நாவல்களையும் ஐந்து வழிமுறைகளாக வகைப்படுத்தியுள்ளார். ஐம்பதுகள் வரையில் எழுதப்பட்ட நாவல்களில் எந்தெந்த நாவல் எந்தெந்த வழிமுறையின்கீழ் வகைப்படுத்தமுடியும் என்கிற வரையறையையும் செய்துகாட்டினார். ஐந்து வழிமுறைகளில் ராஜம் ஐயரின் நாவல் போக்கையே சிறந்த போக்கு என்றும் இலக்கியத்தன்மை கொண்டதென்றும் முன்னிலைப்படுத்தினார் க.நா.சு. அடுத்ததாக அ.மாதவையாவின் வழிமுறையை முன்னிலைப்படுத்தினார். ஆர்.ஷண்முகசுந்தரம், சிதம்பர சுப்பிரமணியன், சங்கரராம் முதலானவர்களை ராஜம் ஐயரின் போக்கிலும் முற்போக்கு எழுத்தாளர்களையும் வ.ரா., முடிவுறாத சந்திரிகையின் கதையை எழுதிய பாரதியார் ஆகியோரையும் திராவிட இயக்க எழுத்தாளர்களையும் மாதவையாவின் போக்கிலும் எழுதியவர்களாக வகைப்படுத்தினார். பொழுதுபோக்கு எழுத்துகளின் ஊற்றுக்கண்ணாக பொன்னுரங்கம் பிள்ளையின் போக்கையும் கருத்து எழுத்துகளின் ஊற்றுக்கண்ணாக வேதநாயகம்பிள்ளையின் போக்கையும் குடும்ப எழுத்துகளின் ஊற்றுக்கண்ணாக நடேச சாஸ்திரியின் போக்கையும் அடையாளப்படுத்தினார்.
க.நா.சு.வின் நாவல் பார்வைகளை முற்றிலும் நிராகரித்து மாதவையாவின் போக்கை பிரதான போக்காகக் கொண்டு வேறொரு விதமான நாவல் பார்வையை முன்னிலைப்படுத்தி வளர்த்தெடுக்க முற்பட்டவராக கைலாசபதியாகச் சொல்லவேண்டும். முற்போக்கு நோக்கங்களைக் கொண்ட படைப்புகளுக்கு இலக்கியமுகத்தைத் தேடித் தருவதாக கைலாசபதியின் பார்வை இயங்கியது. இவ்விரண்டு பார்வைகளின் அடிப்படையில் விவாதங்கள் நிகழ்ந்தன. க.நா.சு.வின் தரப்பு வாதங்களை முற்றிலும் நிராகரிப்பவர்களாகச் செயல்பட்டார்கள் முற்போக்காளர்கள். முற்போக்காளர்களுக்கிருந்த அரசியல் சார்பும் கைலாசபதிக்கிருந்த கல்விப்பின்புலமும் அவர் பார்வைக்கு ஒரு விரிவான தளத்தை உருவாக்கித் தந்தது. கைலாசபதியின் கல்விப்பின்னணியை நினைத்தோ என்னமோ, தமிழகக் கல்வியாளர்கள் கைலாசபதியின் பார்வையையே தம் பார்வையாக கட்டமைத்துக்கொண்டார்கள். ஏராளமான கட்டுரைகள் அந்தப் பார்வையை ஒட்டி முன்வைக்கப்பட்டன. க.நா.சு. வளர்த்தெடுக்க நினைத்த பார்வை முழுக்கமுழுக்க ஒரு நிராகரிப்பையே சம்பாதித்தது. என்றாலும் சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி என அங்கங்கே சிற்சில குரல்களோடு, அது  தொடர்ச்சியாக ஒலித்தபடி இருந்தது. இக்குரல்களே, க.நா.சு.தரப்பை காலத்தைத் தாண்டி உயிர்ப்புடன் வைக்க உதவின.
க.நா.சு.வின் நாவல் பார்வையும் கைலாசபதியின் நாவல் பார்வையும் கோலோச்சிய அறுபதுகளில் ஒரு கவிஞராகவும் சிறந்த வாசகராகவும் மார்க்சியத் தத்துவத்தின்மீது ஆர்வம் உள்ளவராகவும் தன் இலக்கியப்பயணத்தைத் தொடங்கியவர் பழனிச்சாமி என்கிற ஞானி. அடிப்படையில் கவிஞராக இருந்தாலும் மண்மீதுள்ள ஒவ்வொன்றையும் கேள்விக்குட்படுத்தி மதிப்பிட்டுப் பார்க்கும்  அவருடைய இயல்பான ஆர்வத்தின் காரணமாக விமர்சனத்தையே தன் இயங்குதளமாக அமைத்துக்கொண்டார். இலக்கிய விமர்சனம், சமூக விமர்சனம், அரசியல் விமர்சனம், தத்துவ விமர்சனம் என பன்முகத் தளங்களைக் கொண்டதாக அவருடைய இயங்குதளம் அமைந்தது. அதே தருணத்தில் மரபான மார்க்சியத்தின் இறுக்கமான தன்மையை மாற்றி, நெகிழ்ச்சியான பார்வையுள்ள மாற்று மார்க்சியப் பார்வையை முன்வைத்த எஸ்.என்.நாகராசனின் வருகை ஞானியைப் புத்துணர்வு கொள்ளச் செய்தது. முற்போக்குச் சிந்தனையாளர்களின் புறக்கணிப்புகளைப் பொருட்படுத்தாத எஸ்.என்.நாகராசனின் தொடர் இயக்கம் மார்க்சியச் சிந்தனைத்தளத்தில் அழுத்தமான தடங்களை விட்டுச் சென்றன. இடைவிடாத ஈடுபாடும் அர்ப்பணிப்புணர்வும் மட்டுமே அந்தத் தரப்பைத் தொடர்ந்து முன்வைத்தது. அந்தத் தரப்பின் முன்னணிச் சிந்தனையாளர்களில் ஒருவரான ஞானி மாற்று மார்க்சியப் பார்வையை உள்வாங்கியவராக இருந்தார். தம் பார்வையை முன்வைத்து அவர் நிகழ்த்திய பல இலக்கிய ஆய்வுகள், புதிய வெளிச்சத்தை வழங்கின. கைலாசபதியின் பார்வைகளிலும் க.நா.சு.வின் பார்வைகளிலும் உள்ள செழுமையான பகுதிகளை ஞானி தன் பார்வையாக வளர்த்தெடுத்துக் கொண்டார். நாகராசனுக்கும் ஞானிக்கும் தமிழிலக்கிய உலகமும் சிந்தனையுலகமும் பெரிதும் கடமைப்பட்டிருக்கின்றன.
எந்த ஒரு நாவலையும் வாசகன் தனக்குள் வைத்து வாசிக்கவேண்டும் என்பது ஞானியின் வேண்டுகோள். நாவலில் வெளிப்படும் பலவகைப்பட்ட மனிதர்கள், நமக்கு வெளியில் மட்டுமில்லாமல் ஏதோ சில வடிவங்களில் நமக்குள்ளும் இருக்கிறார்கள். நாவலைப் படிக்கும்போது நாம் நம்மையும் வாசித்துக்கொள்கிறோம். இதுவரையில் நாம் பெற்ற வாழ்வியல் அனுபவங்கள், நமக்குள்ளிருந்து வெளிப்படுவதோடு அவை தமக்குள் இணைப்புகொண்டு, புதிய பொருளில் வாசிக்குமாறு நம் முன்னால் வந்து நிற்கின்றன. நாவலைப் படிக்கும்போது, அங்கங்கே நிறுத்தி, நம் நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.  நாவல் வாசிப்பு என்பதுகூட ஒருவகை கல்வியே என்பது ஞானியின் தரப்பு. ஒரு தறியில் நேரிழையும் குறுக்கிழையும் மாறிமாறி ஓடிகொண்டிருப்பதைப்போல, வாசிப்பின்போது, சொந்த அனுபவங்களும் நாவல் அனுபவங்களும் இணைந்தே நகர்கின்றன. அவருடைய கட்டுரைகளில் பயன்படுத்தப்படும் வாக்கிய அமைப்பைப் பார்க்கும்போதே அதை உணரலாம். ஒரு வாசகன் ஒரு படைப்பைப் படிக்கும்போது, அதை எழுதிய படைப்பாளியின் விரலைப் பற்றியபடி, கூடவே நடந்து செல்கிறான். நாவல் அனுபவங்களும் சொந்த அனுபவங்களும் இணைந்து ஒரு மகத்தான அனுபவமாக மாறுகிறது. அக்கணத்தின் உச்சத்தில் ஒரு வாசகன் படைப்பாளிக்கு நெருக்கமாகச் சென்றுவிடுகிறான்.
ஞானி மரபான மார்க்சியப்பார்வையோடு கொண்டிருந்த மாறுபாடு வெறும் அழகியல் சார்ந்ததுமட்டுமல்ல, வாழ்வியல்பார்வையையும் சார்ந்த ஒன்றாக இருந்தது. நாவல் முயற்சிகளை ஞானி கலை முயற்சிகளாகவே காண்கிறார். மிகச்சிறந்த கலைமுயற்சி என்பது மிகச்சிறந்த மனச்சமநிலையோடு முன்வைக்கப்படும் ஒரு மகத்தான அனுபவமாகும். ஒரு படைப்பாக்கம் என்பது மன எழுச்சிசார்ந்த ஒன்று என்றபோதும், அதைச் சமநிலையோடு நிகழ்த்தும் ஞானம் கலைஞனிடம் இயல்பாகவே உள்ளது. நாவல் மனிதனின் வாழ்வியலுக்கான அர்த்தத்தை உணர்த்தவேண்டும் அல்லது அர்த்தத்தைத் தேடும் முனைப்பைக் கொண்டிருக்கவேண்டும் என்பது ஞானியின் எதிர்பார்ப்பாக உள்ளது. மனச்சமநிலை இல்லாமல் இது ஒருபோதும் சாத்தியமில்லை. சமநிலையே நாவலாக்கத்தின் வெற்றிக்கு அடையாளம் என்பதுதான் ஞானியின் பார்வை. தமிழ்நாவல்கள் பற்றிய எல்லாக் கட்டுரைகளையும் ஒட்டுமொத்தமாகப் படித்துமுடித்த கணத்தில், நாவல்களில் அவர் வேண்டி நிற்பது இந்தச் சமநிலையைத்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தப் பார்வையைத்தான் அவர் வெவ்வேறு கோணங்களிலும் வெவ்வேறு சொற்களிலும்  தொடர்ச்சியாக முன்வைத்துவருகிறார்.

-2-
நாவல் என்பது முதன்மையாக ஒரு கலைப்படைப்பு என்ற போதிலும் நாவலில் இடம்பெறும் மனிதர்களில் சமூக அனுபவங்களைச் சரியான வகையில்  சித்தரிப்பதன்மூலம், நாவல் ஒரு சமூக ஆவணமாகவும் உருவாகவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஞானியிடம் ஆழமான முறையில் இயங்குவதை அவருடைய எல்லாக் கட்டுரைகளிலும் காணமுடியும். இதன் இருப்பை அல்லது இல்லாமையையே அவர் ஒவ்வொரு நாவலிலும் கண்டடைய முனைகிறார். எழுபதுகளில் தமிழ்நாவல்கள், எண்பதுகளில் தமிழ்நாவல்கள், நாற்பத்தியேழுக்குப் பின் தமிழ் நாவல்கள்- படைப்பும் பார்வையும்- ஒரு சமதளப்பார்வை ஆகிய கட்டுரைகளில் ஞானியின் நோக்கும் போக்கும் அழுத்தமான வகையில் பதிவு பெற்றிருக்கிறது. கடந்த காலத்தில் வெளிவந்த படைப்புகளை முன்வைத்து அவற்றிலிருந்து பெற்றதையும் கற்றதையும் தொகுத்துச் செல்லும் போக்கில் நாவல் உலகில் தமக்குள்ள எதிர்ப்பார்ப்புகளையும் எழுதிச் செல்கிறார் ஞானி.  தொண்ணூறுகளிலும் புதிய நூற்றாண்டின் முதல் பத்திலும் வெளிவந்த படைப்புகளைப்பற்றிய தனது பார்வையை தனித்தனிக் கட்டுரைகள்வழியாக வெளிப்படுத்துகிறார்.  ஒவ்வொரு படைப்பிலும் தனக்கு உவப்பான பகுதியை அவர் கண்டறிகிறார். அந்த உச்சத்தைத் தொட இயலாத மற்ற பகுதிகளின் போதாமையையும் தொல்வியையும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் சுட்டிக் காட்டுகிறார். சங்கம் என்னும் நாவலில் கொல்லிமலைப்பகுதிகளில் வாழும் மக்களின் சங்கடங்களைத் தொகுத்துத் தந்திருக்கும் முறையைப் பாராட்டும் ஞானி, அந்த நாவலில் இயங்குவது முதலாளிக்குரல் மட்டுமே என்றும் அதை சோசலிசத்தின் குரல் என்று சொல்லமுடியாது எனவும் அடையாளப்படுத்தத் தயங்குவதில்லை. மனிதன் தனக்கு உண்மையானவனாக இருத்தல் வேண்டும், உணவு உறவுகளுக்கான நாட்டம் உள்ளவனாக இருக்கவேண்டும் என்கிற பார்வையைக் கொண்டிருப்பதற்காக ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலை உயர்வானதாகக் குறிப்பிடும் ஞானி, ஜே.ஜே. இன்னும் சற்றே ஆழமான அளவில் தன்னைத்தானே சுயவிமர்சனத்துக்கு உட்படுத்திக்கொண்டிருந்தால் பிரச்சினைகளின் ஆழத்துக்கு அவனால் போயிருக்கமுடியும். தான் கலைஞனாகவோ அல்லது கலைத்துறைச் சித்தாந்தியாகவோ இருப்பதன் பொய்மை தெரிந்திருக்கும். அதாவது முல்லைக்கல் ஒருவகை பொய்யன் என்றால், தானும் இன்னொருவகையில் பொய்யன்தான் என்பது புலப்பட்டிருக்கக்கூடும். ஆனால் அது நாவலில் நிகழவில்லை என்கிற தன் ஆதங்கத்தையும் பதிவு செய்கிறார் ஞானி..
உன்னதமான கலைப்படைப்புகளைக் கொண்டது நம் தமிழ். ஐம்பெருங்காப்பியங்களும் கம்பராமாயணமும் பக்தி இலக்கியங்களும் தமிழ் உருவாக்கிய சாதனை. கலை பேணக்கூடிய சமநிலை அந்தச் சாதனை உலகத்தில் நீக்கமற நிறைந்திருந்தது என்பது மிகப்பெரிய சாதனை. இத்தகு சக்திமிகுந்த பரம்பரையைக் கொண்ட தமிழில் எழுதப்பட்ட நாவல்களில், ஒரு கட்டத்தில் கலைத்தன்மை குறைந்துபோனது. கலைக்கு இருக்கவேண்டிய சமநிலையைப் புரிந்துகொள்ளும் முனைப்பு படைப்பாளிகளிடம் குறைந்துபோனது. பிரமாண எதிர்ப்பை முன்வைத்து சமூகத்தைக் கட்டமைக்கத் தொடங்கிய திராவிட இயக்கம் பிராமணியச் சார்புள்ளவை என அடையாளப்படுத்தி, காப்பியங்களையும் பக்தி இலக்கியங்களையும் உதறியது.  இந்த வெறுமை படைப்புகளை கேளிக்கை நிரம்பியவையாக மாற்றிவிட்டன.  கோஷங்கள் நிரம்பியவையாக மாற்றின. பிரச்சாரங்கள் ஒலிக்கும் மேடைகளாக உருமாற்றின. மனிதனை வரலாற்றில் வைத்துப் புரிந்துகொள்ளவேண்டிய அவசியமுள்ள மார்க்சிய இயக்கத்தின் நடவடிக்கைகளிலும் மாற்றம் நிகழவில்லை. கலையின் நுட்பத்தையும் ஆழத்தையும் பயிலவேண்டிய சூழலில் மார்க்சியப்படைப்புகள் பிரச்சாரத்தின் நிறத்தைமட்டுமே மாற்றியது.
இந்த ஏமாற்றத்தின் விளைவு ஞானியிடம் மானுடத்தை அறிந்துகொள்ளும் ஆவலாக வெளிப்பட்டது. சமூக ஆய்வு இல்லாத நிலையில்தான் கதைபின்னுவதும் விவரங்களைத் தொகுப்பதும் கற்பனை மிகை உணர்வும் இங்கு நாவல்களாகக் காட்சியளிக்கின்றன. சமூக ஆய்வு என்பது ஒரு சரியான வரலாற்றுப்பார்வையோடும் தத்துவப்பார்வையோடும் உறவுடையது. இவ்வுணர்வு இருந்தால்தான் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட சூழலில் சில மனிதர்களோடு தொடங்கும் கதை, அவர்களைப்பற்றிய பல பரிமாணங்களாகவும் பல தலைமுறைகளில் வாழ்க்கை விரிவடையும்.  தமிழ் நாவல்கள் இத்தகைய பரிமாணத்தோடு உருவாகவேண்டும் என்னும் விழைவை ஏராளமான வரிகள் வழியாக தொடர்ச்சியாக ஞானி பல கட்டுரைகளில் பதிவு செய்கிறார். இலக்கியம் போதைப்பொருள் அல்ல, அது ஒரு பேராற்றல். மூன்றாம்தர அரசியல்வாதிகளுக்கு இலக்கியம் ஆள்பிடித்துக் கொடுக்கமுடியாதுஎன்பது சீற்றத்தின் உச்சத்தில் ஞானி எழுதிய ஒரு வரி. அதுவே ஞானியின் இலக்கியக் கோட்பாடு. துரதிருஷ்டவசமாக, அக்காலத்தில் அவர் எதிர்பார்த்த ஆதரவு எந்தத் தளத்திலும் உருவாகவில்லை. குறிப்பாக, கட்சி மார்க்சியம் அவரை முற்றிலும் புறக்கணிக்கவே முற்பட்டது. ஆனால் தன் முயற்சிகளில் சற்றும் பின்வாங்காத ஞானி, தமிழில் வெளிவந்த ஒவ்வொரு நாவலையும் முன்வைத்து தான் கற்றதையும் பெற்றதையும் போதும்போதாமைகளையும் மீண்டும்மீண்டும் பல நூறு வரிகளில் தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டே இருந்தார். சங்கம், சர்க்கரை, கொள்ளைக்காரர்கள், புதிய தரிசனங்கள் ஆகிய நாவல்கள் வெளிவந்த சமயங்களில் தம் வாசிப்பனுபவத்தை மிகநீண்ட கட்டுரைகளில் முன்வைத்து அவை ஏன் இலக்கியமாக மலரவில்லை என்பதையும் விரிவான வகையில் எழுதினார். புளியமரத்தின் கதை, சாயாவனம், ஜே.ஜே.சில குறிப்புகள், பசித்த மானுடம், அம்மா வந்தாள், நினைவுப்பாதை போன்ற நாவல்கள் வெளிவந்த சமயங்களில் அவை முன்வைத்த சிக்கல்களின் முக்கியத்துவத்தை அடையாளப்படுத்தி எழுதும்போது, அப்படைப்பாளிகள் பெற்றிருக்கவேண்டிய வரலாற்றுணர்வையும் தத்துவப்பார்வையையும் குறிப்பிட்டு எழுதினார். கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஓயாமல் ஒலித்துவரும் இந்த ஒற்றைக்குரலுக்கு உள்ள ஒரே ஒரு எதிர்பார்ப்பு கலையைப் பேராற்றலாக உணரக்கூடிய  ஒரு சமூகம் உருவாகவேண்டும் என்பதுதான். அதற்குத் தடையாக உள்ள அம்சங்களை அயராமல் அவர் சுட்டிக்காட்டியபடி இருந்தார். ஒரு படைப்பின் பல்வேறு தளங்களை மெல்லமெல்லக் கடந்து, ஒளிபெறச் செய்து தன் எண்ணங்கள்வழியாக அப்படைப்பைப் புத்தம்புதிய ஒன்றாக உணரவைக்கும் செயலை இடைவிடாத உற்சாகத்தோடும் ஊக்கத்தோடும் ஞானி செய்துவந்தார். ஒரு நாவல் விமர்சகராக அவர் ஆற்றிய இந்தப் பணி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த முயற்சியின் வழியாக அவர் இரண்டு பயன்களை எதிர்பார்க்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.  ஒரு வாசகனை இத்தகு பயிற்சிகள் வழியாக மேலான வாசகனாக மாற்றி அவனுடைய எதிர்பார்ப்பின் அளவை இன்னும் கூடுதலாக ஆக்குவது என்பது ஒரு பயன். ஒரு படைப்பாளி தன்னை மென்மேலும் கூர்மையுள்ளவனாக தகவமைத்துக்கொள்ளத் தூண்டுகோலாக அமையும் என்பது இன்னொரு பயன்.
ஒரு விமர்சகராக ஞானியின் செயல்பாடுகள் அமைந்த விதத்தை இப்படி தொகுத்துக்கொள்ளலாம். பொன்னீலன், கு.சின்னப்ப பாரதி போன்ற மார்க்சியச் சார்புள்ள படைப்பாளிகளின் படைப்புகளைப் பொருட்படுத்தி ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறார். வ.ரா., க.நா.சு., சி.சு.செல்லப்பா, எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு போன்ற மூத்த தலைமுறைப் படைப்பாளிகளையும் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், சா.கந்தசாமி, பூமணி, ஆ.மாதவன், நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், விட்டல் ராவ், பெருமாள்முருகன், ஜெயமோகன் போன்றவர்களின் படைப்புகளையும் போதிய அளவில் கவனப்படுத்தியிருக்கிறார். தமிழில் தலித் இலக்கிய விவாதம் உருவான சூழலில் வெளிவந்த அறிவழகன், சிவகாமி போன்றவர்களின் படைப்புகளில் காணப்பட்ட கலைத்தன்மையை விரிவான விவாதத்துக்கு உட்படுத்தியது அவர் எழுத்து. தமிழவன், எம்.ஜி.சுரேஷ் போன்ரோரின் புதிய சோதனை முயற்சிகளுக்கும் உரிய அங்கீகாரம் அளித்து விமர்சனம் செய்யவும் அவர் தயங்கவில்லை. ஒவ்வொரு படைப்பிலும் முழுமையை நோக்கிய பாய்ச்சல்கள் ஓரளவு இருந்தன. அவை வேகம் கொண்டவையாக இருந்தன என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் உச்சப்புள்ளியைத் தொடும் வீச்சு கொண்டவையாக எழவில்லை  என்கிற ஞானியின் குரல் தொடர்ந்து ஒலித்தபடியே இருந்தது.

-3-
தமிழ் நாவல்களில் ஞானிக்குப் பிடித்தமான பாத்திரங்களைப்பற்றிய குறிப்புகள் சுவாரஸ்யமானவை. பிடித்தமான பாத்திரத்தைப்பற்றி எழுதும்போதெல்லாம் ஞானி சித்தன் என்றொரு சொல்லைப் பயன்படுத்துகிறார். ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்  நாவலின் ஹென்றியைப்பற்றி எழுதும்போதுதான் சித்தன் என்றொரு சொல்லை முதன்முதலாக ஞானி பயன்படுத்துகிறார். பிறகு அந்தச் சொல் பொய்த்தேவு நாவலின் பண்டாரம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவலின் கல்யாணி, மானசரோவர் நாவலின் காரைச்சித்தர், மானாவரி மனிதர்கள் நாவலின் கிழவர், ரப்பர் நாவலின் ஆதிவாசிக்கிழவர், புதிய தரிசனங்கள் நாவலின் பூரணி போன்றோரையும் சித்தர் பட்டத்துக்குப் பொருத்தமானவர்களாக முன்வைக்கிறார் ஞானி. இத்தகு மனிதர்களை வாழ்வின் அற்புதம் எனக் குறிப்பிடலாம் என்பது ஞானியின் எண்ணம். தமிழ்மரபின் அழகிய வெளிப்பாடு இவர்கள். பணத்தாலும் அதிகாரத்தாலும் தீண்டப்படமுடியாதவர்கள் இவர்கள். இவர்கள் அன்பில் நிறைந்திருக்கிறார்கள். ஏராளமான வாழ்வியல் ஏற்றத்தாழ்வுகளைப் பார்த்தவர்கள் இவர்கள். இறுதியில் எல்லாவற்றிலிருந்தும் விட்டுவிடுதலையாகி நிற்பவர்கள் இவர்கள். ஒருவகையில் இவர்களைப் புனிதர்கள் என்றுதான் சொல்லவேண்டும். எளிய வாழ்க்கையே போதும் என்ற முடிவோடு உடைமைகளை உதறி நிற்கிறார்கள் இவர்கள். ஏழைகளோடு நெருக்கம் பாராட்டுகிறவர்கள். தன் நடவடிக்கைகள்மூலம் பலரை மனிதர்களாக மாற்றுகிறவர்கள். தன்னைக் கண்டுகொண்டவர்கள். தமிழிலக்கிய வரலாற்றில் கணியன் பூங்குன்றனார், பக்குடுக்கை நன்கணியார், வள்ளுவர், திருமூலர், வள்ளலார் ஆகியோரின் தொடர்ச்சிதான் இந்தச் சித்தன். வரலாற்றின் பரப்பில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே தனக்குள் உள்ள சித்தனை அடையாளம் கண்டுகொள்ளும்போது, அடையாளம் காணமுடியாதபடி எஞ்சியுள்ள கூட்டத்தினரின் பார்வை இருள் படிந்ததாக இருக்கிறது. அந்த இருட்டில் வெளிச்சத்தைப் பாய்ச்சி ஆய்வு செய்யும்போதுதான் வரலாற்றைத் துளைத்துச் செல்லும் பார்வையை அடையமுடியும் என்பது ஞானியின் நம்பிக்கை.
மனிதனிடம் குற்றம் கண்டுபிடிப்பதோ அல்லது குற்ற உணர்வில் மனிதனை அழுத்துவதோ சித்தன் பார்வை அல்ல. சித்தன் பார்வையில் குற்றம் என எதுவுமே இல்லை. எல்லாமே வாழ்வின் இயல்புகள். அந்த அளவுக்கு விரிந்த பார்வையை அது கொண்டிருக்கிறது. அது காற்று, நீர் போல மனிதனுக்குள் இயற்கையாகவே அன்பை இயங்கவைக்கிறது.
படைப்புகளுக்குள் இயங்கும் சித்தன் பார்வையைக் கண்டடையும்போது உருவாகும் பரவசத்துக்கு இணையானதாக, அத்தகு பார்வையற்றவர்களைக் காணும்போது வருத்தமும் சலிப்பும் ஞானியிடம் வெளிப்படுவதைக் காணலாம். நம் புறச்சமூகம் சிக்கல் தன்மை கொண்டதாக உள்ளது. பெருமளவுக்கு சீரழிந்து குலைந்துபோய்க்கொண்டிருக்கிறது. நன்மை, தீமை என்னும் வரையறைகள் அழிந்தும் அழிக்கப்பட்டும் வருகின்றன. வாழ்வியல் மதிப்பீடுகளுக்கு எள்ளளவு கூட மதிப்பும் மரியாதையும் இல்லாத சூழல் பெருகிவிட்டது. இந்த அழிவுச்சூழல் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தவேண்டி இருக்கிறது. முதலாளியம், அரச அதிகாரம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கும் சமூகச்சிதைவுகளுக்கும் உள்ள உறவை அலசவேண்டிய அவசியம் இருக்கிறது. பொழுதுபோக்கு, ஆடம்பரம், நுகர்வியம் அனைத்தும் மனித வாழ்வை மலினப்படுத்தி வைத்திருக்கிறது. அன்பு வெளிப்படுவதாகத் தோன்றும் இடங்கள் காயப்பட்டிருக்கின்றன. இயற்கைபோல மனிதர்களும் வறண்டுபோய் உள்ளார்கள். மொத்த உலகமும் சித்தன்பார்வையை தன் வாழ்வியல் அணுகுமுறையாகக் கொள்ளவேண்டிய நேரத்தில் ஒரே ஒருவனிடம்மட்டுமே அதைக் காணும்போது, இந்த ஒருவனிடமாவது இருக்கிறதே என ஆறுதல் கொள்வதா அல்லது மற்றவர்களிடம் ஏன் அது இடம்பெறவில்லை என்று வருத்தம் கொள்வதா என்கிற ஆற்றாமையை ஞானி தன் எல்லாக் கட்டுரைகளிலும் வெளிப்படுத்துகிறார்.

-4-
தன் எல்லா விமர்சனக் கட்டுரைகளிலும் முழுமைக்குள் வைத்து மானுடவாழ்க்கையை மதிப்பிடும்படி படைப்பாளிகளைநோக்கி மன்றாடாத குறையாக தொடர்ந்து கேட்டபடியே இருக்கிறார் ஞானி. தீராத வேட்கை உள்ள ஒருவருக்கு கொட்டாங்கச்சியில் தண்ணீர் கிடைப்பதுபோல தமிழ் நாவல்களில் அவரால் சின்னச்சின்ன வெளிச்சங்களைமட்டுமே காணமுடிகிறது. ஒரு கோணத்தில் உவகையையும் இன்னொரு கோணத்தில் சலிப்புணர்வையும் வெளிப்படுத்தினாலும் தம் எதிர்பார்ப்புக்கு உகந்த படைப்புகள் தமிழில் கண்டிப்பாக எழுதப்படும் என்கிற எதிர்பார்ப்பு நிரம்பியவராகவே இருக்கிறார் ஞானி.
புத்தாயிரத்தாண்டில் ஞானியின் எதிர்பார்ப்பின் எல்லைகள் நீண்டு தமிழ்மொழி, தமிழ் தேசியம் என விரிவுபெறத் தொடங்கியது. இதனால்தானோ என்னமோ, தமிழில் வெளிவரும் நாவல்களைக் கவனப்படுத்தி வாசித்து எழுதும் போக்கில் அவரிடம் உருவான தேக்கம் தவிர்க்கமுடியாததாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக, இப்பருவத்தில்தான் ஞானியின் எதிர்பார்ப்புகள் விதைகளைப்போலவும் உரத்தைப்போலவும் இந்த மண்ணுடன் கலந்து விளைச்சலை உருவாக்கியது என்று சொல்லலாம். அவருடைய பார்வையும் கனவும் விதையும் உரமுமாக மாறி தமிழ்ச்சூழலை விளைச்சல்பூமியாக மாற்றிவிட்டது. அவருடைய கைகள் தாங்கிவந்த சுடரை அடுத்த தலைமுறையின் கைகள் வாங்கிக்கொண்டன.
ஞானியைத் தன் ஆசானாக அடையாளப்படுத்திக்கொள்ளும் ஜெயமோகனின் பார்வை இந்த இடைப்பட்ட காலத்தில்தான் மெல்லமெல்ல உருவாகி அழுத்தம் பெற்றது. நாவல்கள் பற்றிய வரையறைகளை வகுத்து, தமிழ்நாவல்களை முன்வைத்து விவாதங்களைத் தொடங்கிவைத்த ஜெயமோகன் தனது விமர்சனப்பார்வையையும் அதன் வழியாக முன்வைத்து வளர்த்தெடுத்தார். வரலாற்றில் வைத்துப் பார்க்கக்கூடிய வாழ்க்கையின் முழுமையும் அதன் சுதந்திர இயக்கமும் மிக இயல்பான வகையில் அவர் பார்வைகளாகச் சுடர்விட்டன. அவரே எழுதிய காடு, கொற்றவை, ஜோடிகுரூஸ் எழுதிய ஆழிசூழ் உலகு, கொற்கை, வெங்கடேசனின் காவல் கோட்டம், எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம், எம்.கோபாலகிருஷ்ணனின் மணற்கடிகை, பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை, சோ.தருமனின் கூகை, உமா மகேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை, பூமணியின் அஞ்ஞாடி என ஒரு நீண்ட நாவல் வரிசையும் உருவாகிவிட்டது. என்னுடைய ஆய்வுக்கட்டுரைகளும் மோகனரங்கனின் ஆய்வுக்கட்டுரைகளும் எண்ணிக்கையில் குறைந்தவை என்றாலும் முழுமையை நாடும் பார்வையைக் கொண்டவை என்றே சொல்லலாம்.
ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலமாக ஒற்றை ஆள் படையாக ஞானியின் செயல்பாடுகள் அமைந்தன. ஒரு விமர்சகனாகவும் நல்ல வாசகனாகவும் தமிழ்ப்படைப்புகளில் தம் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை இடைவிடாமல் சொல்லிக்கொண்டே இருந்தார் அவர். நாவலின் தளம் மாற்றம் பெறவும் விரிவு பெறவும் அவருடைய பார்வை ஒரு சிலருக்கேனும் தூண்டுகோலாக அமைந்திருக்கக்கூடும். தன்னைப்போலவே வற்றாத வேட்கையோடு இன்னொரு தலைமுறையையும் அவர் இயங்கும்படி செய்தார். இதற்கு விதையாகவும் உரமாகவும் இருந்தது ஞானியின் பார்வை. அதுவே அவர் சாதனை.


(கோவை ஞானியின் படைப்புலகம் பற்றி கோவையில் 2012-ல் நிகழ்ந்த கருத்தரங்கில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம். உயிரெழுத்து இதழில் வெளிவந்தது)
(22.07.2020 அன்று கோவை ஞானி இயற்கையெய்திவிட்டார். அவர் நினைவாக இந்தக் கட்டுரை பதிவிடப்படுகிறது.)