இன்றைய உலகளாவிய
நெருக்கடி பல அடுக்குகளைக் கொண்டது. அரசியல் தலைமையிலும் அறத்தலைமையிலும் உள்ள வெற்றிடத்தின்
காரணமாக சமூகமெங்கும் பரவிவரும் கோவிட்-19, பொருளாதாரத் தேக்கம்,
வெப்பமயமாகும் உலகம் ஆகிய அனைத்துப் பிரச்சினைகளும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துவிட்டன.
இன்றைய நெருக்கடி நிலையைச் சந்திக்க நேர்ந்திருந்தால் காந்தியடிகள் என்ன
செய்திருக்கக்கூடும்?
அவருடைய தீர்வுகள்
சில பொது அம்சங்களைக் கொண்டிருக்கும். அவர் வெறும் ஆலோசனை வழங்குபவராக மட்டும் தன்னை
நிறுத்திக்கொள்ள மாட்டார் என்பது முதல் அம்சம். செயல்படுபவராகவும்
தன்னைத் தகவமைத்துக்கொண்டிருப்பார். அந்த வகையில் அவர் வாழ்ந்ததால்தான்
“என் வாழ்வே என் செய்தி” என்று அவரால் அறிவிக்க
முடிந்தது. அதைப்போல நம்மால் இருக்கமுடியாது. முதலில் தன்னைச் சுற்றியுள்ள இடத்திலிருந்து அவர் தொடங்கியிருப்பாரே தவிர,
மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும்படி உலகத்துக்கு நெருக்கடி அளித்திருக்கமாட்டார்
என்பது இரண்டாவது அம்சம். ஒரு தானியமணியில் உலகத்தையே பார்க்கும்
ஆற்றல் உள்ளவர் அவர் என்பது அனைவரும் அறிந்த செய்தியே. சின்னஞ்சிறிய
அளவிலும் பார்ப்பதற்கு அற்பமாகத் தோன்றுகிற அளவிலும் உள்ள மிகச்சிறிய செயல்பாடுகளிலிருந்தே
முதலில் தன் செயல்திட்டத்தை அவர் தொடங்கியிருப்பார் என்பது மூன்றாவது அம்சம்.
எடுத்துக்காட்டாக, கையளவு உப்பை அள்ளிய செயல்பாட்டின்
வழியாக இந்திய வரலாறு மாறிவிட்டது என்பதை நாம்
அறிவோம்.
காந்தியடிகள்
என்ன செய்திருக்கக் கூடும் என்கிற கேள்வியை ஒட்டி எழுந்த எண்ணங்களின் ஆய்வு ஒன்பது
அம்சத் திட்டமொன்றாக மலர்ந்தது.
அச்சத்திலிருந்து
விடுதலை: கொரோனா கிருமியைவிட கடுமையான அச்சமென்னும் கிருமியிடம் நாம்
அனைவரும் சிக்கிக்கொண்டிருக்கிறோம். இந்த அச்சம் எங்கெங்கும் பரவி உலகத்தையே முடக்கிவைத்திருக்கிறது.
ஆங்கிலேயர்கள் என்னும் அச்சத்தை உதறும்படி இந்தியர்களிடம் கேட்டுக்கொண்டதுபோல
காந்தியடிகள் இந்த அச்சத்தை உதறும்படி முதலில் நம்மைக் கேட்டுக்கொள்வார். அந்த அச்சம் ஒரு மாயை என்பதால் அது தானாகவே கரைந்துபோகத் தொடங்கிவிடும்.
உடல்நலம் குன்றியவர்களைக்
கவனித்துக்கொள்தல்: உடல்நலம் குன்றியவர்களை அக்கறையோடு கவனித்துக்கொள்வது
என்பது அவருடைய இயல்பான உணர்வு. போயர் யுத்தம், முதலாம் உலகப்போர் தொடங்கி இந்தியாவில் தொற்றுநோய் பரவிய காலம் வரைக்கும் பல
தருணங்களில் உடல்நலம் குன்றியவர்களுக்கு அக்கறையுடன் சேவையாற்றியிருக்கிறார்.
தொழுநோயால் பாதிக்கப்பட்ட பர்ச்சுரி சாஸ்திரி என்னும் சமஸ்கிருதப் பேராசிரியரை
ஆசிரமத்தில் வைத்திருந்து மருத்துவம் பார்த்து குணப்படுத்தியதும் உண்டு. கோவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான
பேர்களுக்கும் சரியான மருத்துவ உதவியும் உரிய கவனிப்பும் உதவியும் தேவைப்படுகின்றன.
சிறிதுகூட அச்சமின்றி காந்தியடிகள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில்
நெருங்கி கவனித்துக்கொள்வார். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல்,
தன்னை சுத்தமாக வைத்துக்கொள்தல், கை கழுவுதல்,
முகக்கவசம் பயன்படுத்துதல் ஆகிய அனைத்து அம்சங்களிலும் கறாராக கவனமெடுத்துக்கொள்வார்.
இந்த மருத்துவமுறை மட்டுமே கோவிட்-19 தொற்றை ஒழிப்பதற்கான
மருத்துவம் என இன்னும் நிரூபிக்கப்படாத நிலையில் காந்தியடிகள் தனக்குப் பிடித்தமான
இயற்கை மருத்துவம் முறைகளையும் தொடங்கியிருப்பார். அதாவது உடல் தன் இயற்கையான எதிர்ப்பாற்றல்
வழியாக தானாகவே மீண்டு வருவதற்கான வழிமுறைகளில் இறங்கியிருக்கக்கூடும்.
கோவிட்-19 கிருமியின் தொற்று காரணமாக ஏராளமான பேர்கள் மருத்துவமனையில் திரண்டிருக்கும்
நிலையில் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்ட பிற நோயாளிகளை கவனித்துக்கொள்ள யாரும் இல்லாத
சூழல் உருவாகிவிட்டது. சீரான உடல்நலத்துக்கு உறுதுணையாக இருக்கவேண்டிய
மருத்துவ சேவைகளின் போதாமையை இன்றைய சூழல் வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டது. காந்தியடிகள் முதன்மைப்படுத்திப் பேசி வந்த ஆரோக்கியமான வாழ்க்கைமுறை,
தன் உடல்நலத்தை நல்லமுறையில் பேணிக்கொள்ளும் முனைப்பு, பொதுசுகாதாரம் ஆகிய விஷயங்கள் எந்த அளவுக்குப் பொருளார்ந்தவை என்பதை நாம் புரிந்துகொள்ள
வேண்டும்.
புதிய தண்டி
யாத்திரை: மிகமிக மோசமான நிலையிலும் ஆதரவற்ற நிலையிலும் வாழ்ந்தபடி நம்
முன்னால் தோற்றமளிக்கும் ஓர் எளிய மனிதனையே எப்போதும் எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளும்
அவருடைய அணுகுமுறை ஆச்சரியமானது. உள்ளுணர்வு சார்ந்தும் தாமதிக்காமலும் அவர்
அந்த வழிமுறையை மேற்கொள்வார். அது நமக்கு மிகச்சரியாக உதாரண மனிதனைச்
சுட்டிக்காட்டும். மனித குலத்தின் அடையாளமாக அவனைக் கண்டடைவதன்
வழியாக நம் கடமை உணர்த்தப்பட்டுவிடும். அப்படிப்பட்ட ஓர் அடையாளமாக
காந்தியடிகள் இன்று யாரைச் சுட்டிக் காட்டுவார்? அவமானங்களையும்
பசியையும் சுமந்துகொண்டு, என்றோ புறப்பட்டு வந்த சொந்த கிராமங்களை
நோக்கி நடக்கத் தொடங்கி, வழியிலேயே உயிரழந்து மறையும் புலம்பெயர்ந்த
நகரத் தொழிலாளர்களையே காந்தியடிகள் அடையாள மனிதர்களாகக் கண்டடைவார். தேசப்பிரிவினையின்போது, புலம்பெயர்ந்து வந்த லட்சக்கணக்கான மக்களிடையில் கழித்த வாழ்க்கையின் இறுதிநாட்கள்
வழியாக அத்தகையோரின் துயரங்கள் என்ன என்பது காந்தியடிகளுக்கு நன்றாகவே தெரியும்.
அதற்கு இணையான வகையில், துயரம் மிகுந்த இடப்பெயர்வுகளை
உருவாக்கிவிட்டதில் நமக்கும் பங்குண்டு. தில்லியின் புகழ்வெளிச்சத்தை
விலக்கிக்கொண்டு, காந்தியடிகள் அவரை நோக்கிச் சென்றிருப்பார்.
அவர்களுக்குத் தேவையான உணவுக்கும் தங்குமிடங்களுக்கும் மருத்துவ வசதிகளுக்கும்
வேண்டிய ஏற்பாடுகளை அவர் செய்திருப்பார். முக்கியமாக,
அவர்களுடைய கெளரவத்துக்கும் நம்பிக்கைக்கும் இழுக்கு வராமல் பார்த்துக்கொண்டிருப்பார்.
இறுதியாக, புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களுக்கு
நடுவில் ஒருவராக, ஒற்றுமையின் அடையாளமாகவும் அரசின் பொறுப்பின்மையையும்
அக்கறையின்மையையும் சுட்டிக் காட்டி கண்டிக்கும் அடையாளமாகவும் அவரும் நடந்து சென்றிருப்பார்.
அது அவருடைய புதிய தண்டி யாத்திரையாக அமையக்கூடும்.
பரஸ்பர நம்பிக்கையும்
சமூக ஒற்றுமையும்: இது காந்தியடிகளின் வாழ்வில் முழுமையடையாத ஓர்
அம்சம். வெறுப்பின் வழியாகவும் வன்முறையின் வழியாகவும் இந்துக்களும்
இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் எதிர்நிலையில் நின்று இந்தியாவின் பிரிவினைக்கு வழிவகுத்ததை
முன்னிட்டு அவர் மனத்தளவில் மிகவும் புண்பட்டிருந்தார். மனிதர்களின்
நுரையீரலையும் மூச்சுப்பாதையையும் பாதிக்கக்கூடிய கடுமையான கொரோனா கிருமி நம் வீட்டு
வாசல் வரைக்கும் வந்துவிட்ட நிலையில் கூட, சில தலைவர்கள் வகுப்புவாத
வெறுப்பை உமிழ்வதை நிறுத்தவில்லை. ஒரு குறிப்பிட்ட மதப்பிரிவைச்
சேர்ந்தவர்களே நோய்க்கிருமியின் சமூகப்பரவலுக்கு காரணமென உரைத்து அவர்களைத் தூற்றினர்.
இந்த மதப்பிரிவினைப் பார்வையை காந்தியடிகள் உரிய முக்கியத்துவத்துடன்
தெரிந்துகொண்டிருப்பார். இந்துக்கள், இஸ்லாமியர்கள்,
கிறித்துவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்க அவர் உடனே முயற்சிகளை மேற்கொள்வார்.
அவர்களுடைய வசிப்பிடங்களிலேயே அவரும் வசித்து, அவர்களில் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்து,
மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்யும் தொண்டர்களாக அவர்களை மாற்றி,
ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் குடியிருக்கும் பகுதியில் தொண்டாற்ற மற்றொரு
வகுப்பினரின் குழுவை அனுப்பிவைத்திருப்பார். அவர்களை ஒன்றிணைக்கும்
இத்தகு முயற்சிகள் அவருடைய உயிருக்கு ஆபத்தை விளவிக்கும் என்றாலும், தன் முடிவிலிருந்து பின்வாங்காமல் அவர் சேவை செய்வார்.
என்னுடைய பக்கத்துவீட்டிலிருப்பவர்களைக்
கவனித்துக்கொள்ளும் பொறுப்பு என்னைச் சார்ந்ததாகும்: கடுமையான
ஊரடங்கின் காரணமாக மக்கள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் அடைபட்டுப் போனார்கள்,
அக்கம்பக்கத்தில் இருப்பவர்களையும் தம் தொடர்பிலிருந்து விலக்கி வைத்தார்கள்.
காந்தியடிகள் உறுதியாக இதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார். “என் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு நானே பொறுப்பு. அதுவே என் சுதர்மம். இப்படியான நெருக்கடியான காலகட்டத்தில்
அவர்களை நேசிப்பதும் அவர்களுக்கு உதவிகள் செய்வதும் என்னுடைய கடமை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களோடு தொடர்பு கொள்ளாமல் எப்படி இருக்கமுடியும்?
பக்கத்து வீட்டில் இருப்பவர்களோடு பழகாமல் ஒரு சமூகம் எப்படி இயங்கமுடியும்?”
என்றெல்லாம் அவர் கேட்டிருப்பார். ஊரடங்கின் காரணமாக
குடிசைப்பகுதியினர் வாழ்வாதாரங்கள் சிதைவுண்டு போயிருக்கும் சூழலில், ஒத்துழையாமை நிலைபாட்டுக்கும் சத்தியாகிரக நிலைபாட்டுக்கும் கூட காந்தியடிகள்
சென்றிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.
அறம் சார்ந்த ஒரு நிலைபாட்டையே அவர் எடுப்பார். அவர் அப்படி ஒரு முடிவை எடுக்கும்போது, திரை தானாகவே விலகிவிடும்.
சமூக விலகலும் அச்சமும் ஒருவரையொருவர் விலக்கிவைக்கும் தீவிரத்தை ஒருவரால்
தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இன்றைய சூழல் இந்த நாட்டில்
ஒவ்வொருவரையும் தீண்டப்படாதவராக மாற்றிவிட்டது.
இமாலயத் தவறு: அவர்
எப்போதும் உண்மை சார்ந்து இயங்குபவராகவே இருந்தார். தம் தவறுகள்
சுட்டிக்காட்டப்படும்போது அவற்றை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருந்தார். 1920இல் ஆங்கில அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கி ஓர் இமாலயத்தவறு
செய்துவிட்டதாக அவர் வெளிப்படையாகவே அறிவிக்கும் துணிச்சல் கொண்டவராகவே அவர் இருந்தார்.
அகிம்சைப்பாதையை இந்தியர்கள் புரிந்துகொண்டார்கள் என உறுதியாக நம்பியதால்
இயக்கத்தைத் தொடங்கியதாக அவர் தெரிவித்தார். ஆனால் இந்தியர்கள்
அதைப் புரிந்துகொள்ளவில்லை. அது முழுக்கமுழுக்க தன் தவறே என அவர்
அறிவித்தார். அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதை உணர்ந்துகொண்டதாவும் தெரிவித்தார். முழு உலகே தன்னைவிட்டு விலகிச் செல்லும் என்று தெரிந்தபோதும், தேச அளவில் பரவிவிட்ட ஓர் இயக்கத்தை நிறுத்திவிட்டார். கோவிட்-19 கிருமியின் தொற்று பரவும் அச்சத்தின் காரணமாக,
உலக அளவிலும் தேசிய அளவிலும் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் எண்ணற்ற
பிழைகளைச் செய்து தன் தீர்மானங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தார்கள். தொற்றுகளைத் தவிர்த்தல் என்று தொடங்கி,
ஊரடங்கு என்று நீட்டி, வீட்டில் ஒதுங்கி விலகியிருக்கும்
காலத்தை மீண்டும் மீண்டும் அதிகரித்து, கொரோனாவுடன் சேர்ந்து
வாழ்வது பற்றிப் பேசுவது வரைக்கும் அறிவிப்புகள் மாறிக்கொண்டே இருந்தன. நோயின் தன்மையைப்பற்றி முழுமையான
தெளிவில்லாத சூழலில் தவறான முடிவுகளை நோக்கிச் செல்வது இயற்கையாக நடக்கக்கூடியதுதான்.
ஆனால், தேர்ந்தெடுத்த வழிமுறை தோல்வியில் முடிவடைந்துவிட்டது
என நேர்மையாக ஏற்றுக்கொள்ளும் குணம் எங்கே போனது? அதை இன்று பார்க்கமுடியவில்லை.
காந்தியடிகள் திறந்த மனத்துடன் அதை ஏற்றுக்கொண்டிருப்பார். மக்கள் அவர்மீது நம்பிக்கை கொள்ள அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கும்.
கிராம சுயராஜ்ஜியம்
என்னும் பொருளாதாரச் சிற்றலகு: கடந்த 12 ஆண்டுகளாக, 2008 இல்
நிலவிய தேக்க காலம் முதல் பொருளாதார நெருக்கடி நிலவும் 2020 வரைக்கும்,
உலகளாவிய பொருளாதாரம் என்பது தொட்டால் உடைந்துநொறுங்கக்கூடிய அளவுக்கு
உறுதியற்ற நிலையில் உள்ளது. அது அமெரிக்க நில விற்பனை ஊழலில்
அல்லது வூஹனில் புதிய நோய்க்கிருமியின் தோற்றத்தில் வெளிப்படையாகவே தெரிகிறது.
காந்தியடிகள் இப்படிப்பட்ட தருணங்களில் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்வதன்
அவசியத்தை நினைவூட்டியிருப்பார். தடையற்ற உள்ளூர் உற்பத்தியையும்
உள்ளூர் நுகர்வையும் உள்ளூர் மக்களிடையில் நிலவவேண்டிய சீரான உறவையும் பற்றி சிந்திக்கத்
தூண்டியிருப்பார். அதை அவர் கிராம சுயராஜ்ஜியம் என்று அழைத்தார்.
பொருளாதாரத் தளத்தில் இத்தகு மாற்றங்கள் அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்கும்
முறைகள் வழியாகவே விளையும். உலகமயமாதல் அதிகாரம் வாய்ந்த அரசியல்
தலைமைகளையே எங்கெங்கும் உருவாக்கிவிட்டன. ஆனால் காந்தியடிகளைப்
பொறுத்தவரையில் உண்மையான ஜனநாயகமும் பொறுப்புணர்வும் சீரான உறவும் கிராம அளவில் நிலவவேண்டிய
அம்சங்களாகும்.
இந்த பூமியில்
தேவையான அனைத்தும் இருக்கிறது: “நம் தேவைகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
என்று உலகளாவிய உற்பத்திப்பொருட்களின் நவீன நுகர்வாளர்கள் கேள்வி எழுப்பக்கூடும்.
நுகர்வு சார்ந்த எல்லையற்ற ஆசைகளையும் இருபத்திநான்கு மணி நேரமும் கொண்டாட்டங்களில்
திளைத்திருப்பதற்கும் ஒருபோதும் மனநிறைவை உண்டாக்கமுடியாத புலனின்பங்களில் மூழ்கியிருப்பதற்கும்
எழுப்பும் கோரிக்கைகளையும் காந்தியடிகள் தேவைகள் என்றே கருதமாட்டார். மனத்தில் பதிக்கப்பட்ட இயற்கைக்கு மாறான பழக்கம் என்றும் செயற்கையாக உருவாக்கிக்கொண்ட
அம்சம் என்றும் மட்டுமே அவர் கருதுவார். இவற்றில் உண்மையான தேவைகள்
எவை? ஒவ்வொருவருடைய தேவைக்கும் போதுமான அனைத்தும் இந்த பூமியில்
உள்ளது. ஆனால் பேராசைக்கல்ல. தேவைகளையும்
பேராசையையும் பிரித்துப் பார்க்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளும் பாதையில் காந்தியடிகள்
நம்மை வழிநடத்தினார். ஒவ்வொருவருடைய தேவையையும் முழுமை செய்யும்
அளவுக்கு வழங்குவதற்கு ஏற்ற வகையில், பேராசையைக் கட்டுப்படுத்தும்
அளவுக்கு சுயகட்டுப்பாடும் திறமான சமூகப்பொருளாதார நடவடிக்கைகளும் உள்ளதொரு அமைப்பை
ஏற்படுத்தும் பாதையில் காந்தியடிகள் நம்மை வழிநடத்தினார். நாம்
நம் பேராசையைக் கட்டுப்படுத்திக்கொண்டோமெனில், அதிகமான உற்பத்தி,
தேவையற்ற நுகர்வு, அதீத புலனின்பங்களை நாடிச் செல்லும்
வீண்பயணங்கள், பைத்தியக்காரத்தனமான போக்குவரத்துச் சாதனங்கள்,
புகை, தூசு அனைத்தும் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும்.
வானமும் ஆறுகளும் தூய்மையானதாகவும் நீலமயமானதாகவும் மாறும். நவீன உலகில் நாம் காணும் பல கூடுதல் விஷயங்கள் இல்லாமலேயே நம்மால் மகிழ்ச்சியாக
வாழமுடியும் என்பதை நாம் உணர்ந்துகொள்வோம். கடந்த இரு மாதங்களாக,
உலகமே உறைந்திருந்த காலத்தில் நாம் அதை நம் அனுபவத்திலேயே கண்டுணர்ந்ததை
மறந்துவிட முடியாது. அந்த நிலையிலேயே நாம் நீடித்து நிற்போம்.
உலகவெப்பம் தானாகவே குறையத் தொடங்கும்.
பிரார்த்தனை: இறுதியாக
அவர் நம்மை பிரார்த்தனை செய்ய அறிவுறுத்துவார். ஒவ்வொரு நாள்
முடிவிலும், நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்தபிறகு,
நம்முடைய எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திய பிறகு, நம்முடைய முழு ஆற்றலையும் செலவழித்த பிறகு, அமைதியாக
அமர்ந்து, எண்ணங்களை நிறுத்தி, நம்மை நாமே
காணிக்கையாக்குவோம். யாருக்குக் காணிக்கையாக்குவது என்ற கேள்வி
எழலாம். அது உங்கள் விருப்பம். நீங்கள்
விரும்பும் கடவுளுக்கு. அல்லது வாழ்க்கைக்கு. அல்லது இயற்கைக்கு. அல்லது உண்மைக்கு. அல்லது வரலாற்றுக்கு. காணிக்கையாக்கிச் சரணடைவோம்.
உங்களால் செய்யமுடிந்த அனைத்தையும் நீங்கள் செய்துவிட்டீர்கள்.
சுமைகளை மீண்டும் முதுகில் ஏற்றிக்கொள்ளத் தேவையில்லை. அது உங்களைக் கழுதையாக்கிவிடும். இந்த மாபெரும் அண்டத்தில்
உங்கள் முயற்சிகள் எவ்வளவு சிறியவை என்பதை உணருங்கள். அப்பொறுப்பை
அந்த ஆற்றலிடமே விட்டுவிடுங்கள். இன்ஷா அல்லா. ஹே ராம் என்பது துப்பாக்கிக்குண்டுகள் அவர்மீது பாய்ந்த சமயத்தில் அவர் சொன்ன
இறுதிச்சொற்கள். நாம்
காந்தியடிகளுக்காக காத்திருக்கக் கூடாது. அவர் என்ன செய்திருப்பாரோ,
அதை நாமே செய்யவேண்டும். நம் வழியில் நம்மை வெற்றிகொள்ள
ஒருவரும் வரமாட்டார்கள் என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.
(ஆங்கில மூலம்: அபய் பங்
தமிழில்: பாவண்ணன் )
(18.06.2020 அன்று லான்செட் என்னும் மருத்துவ இணைய இதழில் வெளியான கட்டுரை).
(சர்வோதயம் மலர்கிறது - ஜூலை 2020 இதழில் வெளிவந்த கட்டுரை )