ஒன்று
கீழுதட்டை விரலால் மடித்து இழுப்பதையும் விடுவிப்பதையும் ஒரு விளையாட்டு மாதிரி செய்தபடி ஒர்க்ஷாப் பின் வாசலில் நின்றிருந்தான் குமரேசன்.
குமரேசன் நாலு அடி உயரம். முருங்கைக்காய் மாதிரி மெலிந்த உடம்பு. படியாமல் சிலுப்பிக் கிடக்கிற தலைமயிர். உலகத்துத் துயரத்தையெல்லாம் தலையில் வைத்துச் சுமக்கிற மாதிரி இடிந்த முகம். கண்கொள்ளாமல் அடைத்திருக்கிற கருப்பு விழி. உடம்பின் கருப்பை இன்னும் கூட்டிக் காட்டும் அழுக்குச்சட்டை. ஆளைக் கெஞ்சி இரக்கம் சுரக்க வைக்கும் பார்வை. இழுத்து இழுத்து விட்டுக் கொண்ட உதட்டுக் கோடிகளில் லேசான வாய்ப்புண்கள். ரொம்ப நேரமாய் நிற்கிறதைப்பாத்து விட்டு ஒர்க்ஷாப் பையன் கேட்டான்.
‘இன்னா...?’
‘ஒன்னுமில்ல...’
‘பின்ன எதுக்கு நிக்கற...?’
‘சும்மா’...
‘சும்மாதா எதுக்கு நிக்கற...?’
‘வேடிக்க பாக்கறன்’...
‘இங்க இன்னா சினிமாவா நடக்குது பெரிசா வேடிக்க பாக்கற’
‘சும்மாதா’...
ஒர்க்ஷாப் பையன் கையில் இருந்த ஸ்பேனரைச் சுழற்றியபடியே உள்ளே சென்றான்.
இன்னும் கூட ஏழெட்டுப் பையன்கள் எண்ணெய் பிசு பிசுக்கு மிக்க அழுக்குச் சட்டையணிந்தபடி வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஆ வென்று முதலை மாதிரி வாயைத் திறந்திருக்கிற கார்க்குள் தலையைக் கொடுத்து சாமான்களை முடுக்குவதும் பிரிப்பதுமாய் இருந்தவர்களின் இயக்கம் அதிசயமாய் இருந்தது. ட்ட்ட்ட் என்று நெடுநேரத்துக்கு அடித்துக் கொண்டு புறப்படாமல் போகிற கார்களின் சத்தம் திகிலாய்க் கேட்டது. பெரிய பெரிய தகரத் தட்டுக்களில் பெட்ரோலிலும் ஆயிலிலும் சர்வசாதாரணமாய் கையை விட்டு குழப்பிக்குழப்பி ஸ்பேர் பார்ட்ஸ் கழுவுகிற பொடிப் பையன்களின் சுறுசுறுப்பு ஆச்சர்யமாய் இருந்தது. ஆ வென்று வாயைப் பிளந்துகொண்டு நின்றிருந்தான் குமரேசன்.
பரக்கப்பரக்கப் பார்த்துக்கொண்டிருந்தவன் முன்பு மறுபடியும் பழைய பையனே வந்து நின்றான். தோளில் அழகிய பூக்களின் படம் வரைந்த காப்பி பிளாஸ்க் இருந்தது. பிளாஸ்க் பட்டியில் கருப்பு ஆயில் திட்டுத் திட்டாய் இருந்தது.
‘இன்னம் எதுக்கு இங்கயே நிக்கற...?’
‘சும்மாதா....’
‘சும்மா எதுக்கு நிக்கணும்? அதோ அந்தக் கல்ல -தூக்கி தலைல வச்கிக்னு சொமந்துக்னுதா நில்லு...’ குமரேசன் சிரித்தான். அந்தப் பையனும் சிரித்துக்கொண்டபடி போய் விட்டான்.
மீண்டும் ஒர்க்ஷாப்புக்குள் பார்வையை ஓட்டினான் குமரேசன்.
பெரிய காம்பவுண்ட். அதற்கு மேல் கம்பம் நட்டு முள் வேலி. காம்பவுண்ட்டின் உள் பக்கம் கன்னங்கரேல் என்றிருந்தது. ஓரமாய்க் கிடந்த வேப்பமரத்தைக் கூட அந்தக் கருப்பு விட்டு வைக்கவில்லை. அங்கங்கே போடப்பட்டிருந்த ரெண்டு மூணு ஸ்டூல்கள், வண்டி கழுவப் போட்டிருக்கிற மேடை, தட்டி, டயர் தடம் படிந்த தரை என்று எல்லா இடத்திலும் ஒரு பொதுவான நிறம் போல கருப்பு வியாபித்திருந்தது. பையன்கள் சுழன்றுசுழன்று ஓடி வேலை செய்தார்கள். ஒரே வீச்சில் ஜாக்கி வைத்து சக்கரத்தைத் -தூக்கினார்கள். ஒரே மூச்சில் பெரியபெரிய பேட்டரிகளைச் சுமந்துகொண்டு நடந்தார்கள். ஒரே பீச்சலில் வண்டி அழுக்கு போக தண்ணீர் பாய்ச்சினார்கள். பழுது பார்த்த வண்டியை ஒரே கிக்கில் ஸ்டார்ட் செய்து ட்ரயல் பார்த்தார்கள். ஒரு நொடியில் ரிவர்ஸ் எடுத்து பத்து கெஜம் வந்து மறுபடியும் கியர் மாற்றி முன்னால் போனார்கள், வண்டி வேலை முடிந்து அப்பா...’ என்று கையை உதறி சந்தோஷத்துடன் விசிலடித்தபடி நடந்தார்கள். தரையில் கிடக்கிற வேஸ்ட் துணியை காலால் உதைத்துக் கையால் பற்றித் துடைத்தார்கள். அடுத்தவன் தோளைத் தட்டி சினிமாப் பாட்டு முணுமுணுத்தார்கள். சத்தம் அதிகமாக உள்ளிருந்து ஒரு அதட்டல் வர சட்டென்று அடக்கமாகி வரிசையில் நின்ற இன்னொரு வண்டியைப் பிரித்தார்கள்.
பளீரென்று முதுகில் அடி விழுந்தது. பதறிக் குமரேசன் திரும்ப காப்பி வாங்கப் போன பையன் நின்று கொண்டிருந்தான்.
‘இன்னாடா இன்னம் நிக்கற...?’
‘சும்மாதா’
‘ஏதாவது திருடிம்போவலாம்னு பாக்கிறியா...?’
‘ம்ஹும்...’
‘பின்ன...?’
‘ஒன்னுமில்ல...’
‘எந்த ஊரு ஒனக்கு?’
சொன்னான்.
‘இங்க எதுக்கு வந்த...?’
பதில் சொல்லாமல் நின்றிருந்தான்.
‘ஊட்ட உட்டு ஓடியாந்திட்டியா...?’
‘ம்’
‘இன்னா பேரு...?’
‘குமரேசன்...’
‘சாப்ட்டியா...?’
ஒரு நொடி கண்ணை இமைக்காமல் குமரேசன் அவன் மீது
பார்வையை நிறுத்தினான். பொசுபொசுவென்று அழுதான்.
‘சரி சரி அழாத...’
சட்டையைத் -தூக்கி கண்ணைத் துடைத்துக்கொண்டான்.
‘சாப்டறதுக்கு ஏதாச்சிம் காசி வேணுமா...’
‘ம்ஹும்...’
‘பின்ன...’
‘ஏதாச்சிம் வேல ஓணும்...’
‘இன்னா வேல செய்வ நீ-...?’
‘எது சொன்னாலும் செய்றன்’
‘எது சொன்னாலும் செய்வியா...’
‘ம்’
‘லாரியத்- தூக்கி தலைல வச்சிக்குவியா...’
சட்டென்று அதிர்ந்தான் இவன். இவனது அதிர்ச்சி அவனக்கு சிரிப்பாய் இருந்தது.
‘பயந்திட்டியா. வௌயாட்டுக்குச் சொன்னன். உள்ள மொதலாளி இருக்காரு. பாக்கறியா...?’
‘ம்’
‘வா பின்னால...’
அறைக்குள் முதலாளி கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்தார். சுற்றிலும் நாலைந்து பேர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்கள். தொலைபேசியில் சத்தமாய்ப் பேசிக் கொண்டிருந்தார் ஒருவர். எல்லார்க்கும் நடுவில் இருந்த ஸ்டுலில் மிக்சர் எஞ்சிய தட்டு இருந்தது. பிளாஸ்க்கைக் கொண்டுபோய் அதே ஸ்டுலில் வைத்த பையனைப் பார்த்தது முதலாளி கூடநின்ற குமரேசனையும் பார்த்தார்.
‘யார்ரா அது...?’
‘தெரில. புதுப்பையன். வெளிய நின்னுகினு வேல கேட்டான், கூப்ட்டாந்தன்...’
‘அதெல்லாம் ஒன்னும் கெடையாது. போவச் சொல்லு.’ முரட்டுக்குரலில் முதலாளி சொன்னதும் குமரேசனைப் பார்த்து
அந்தப்பையன் உதட்டைப் பிதுக்கினான். கூடவே ‘நீயே கேளு என்கிற மாதிரி முகஜாடையால் செய்து காட்டினான். குமரேசன் கையைக் கட்டிக் கொண்டு இன்னும் ஓரடி முன்னால் சென்ற நின்றான். ‘ஏதாவது பாத்து செய்யுங்க மொதலாளி...’
‘இருக்கற ஆளுங்களுக்கே இங்க வேல இல்ல. இதுல நீ ஒன்னு. பேசாம போடா...’
‘எங்கியாவது இழுத்து உடுங்க மொலாளி...’
‘மொதல்ல எடத்த உட்டு நவுறுடா...’
‘மொதலாளி’
‘ஏண்டா ஒரு தரம் சொன்னா கேக்கமாட்ட. கழுத்த புடிச்சி வெளியே தள்ளனாத்தான் போவியா...’
‘மொதலாளி...’
குமரேசனைப் பார்த்துப் பேசுவதை விட்டு கப்களில் காப்பி ஊற்றிக்கொண்டிருந்த பையனைப் பார்த்து அதட்ட ஆரம்பித்தார் முதலாளி.
‘ஒனக்கு எத்தினிதரம் சொல்றதுடா முண்டம். சோறு துன்றியா இல்ல வேற எதயாச்சிம் துன்றியா. அறை வரிக்கும் யாரயும் இட்டாராதன்னு எத்தினிதரம் சொல்லி இருக்கன். மாடா மனுஷனா நீ, ஒரு வார்த்தைல சொன்னா தெரிஞ்சிக்க வேணாம்...’
காப்பி ஊற்றிய பையன் எந்தப்பதிலும் பேசாமல் கப்களையெல்லாம் நிரப்பிய பின்னர் வெறும் பிளாஸ்க்கோடு வெளியேறும் போது குமரேசனையும் இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.
‘இன்னாண்ணே இப்பிடி சொல்லிட்டாரு...’
‘கவலப்படாத. இன்னம் ஒரு மணி நேரத்துல வெளியே வருவாரு. டக்குன்னு கால்ல உழுந்து அழு. அப்பறம் பாக்கலாம்...’
‘கெடச்சிருமா...?’
‘மொதல்ல நா சொல்றமாதிரி செய்யி. அப்பறம் பாப்பம்’
‘சரி’
அடுத்த அரைமணி நேரத்துக்கு ஒர்க்ஷாப் வாசலிலேயே நின்றிருந்தான் குமரேசன். வெயில் ஏறும் ஆகாயத்தைப் பார்த்தான். பாதையின் இரண்டு பக்கமும் சீறிப் பாய்கிற வண்டிகளைப் பார்த்தான். சுவர்களில் போஸ்டர் தாள் கிழித்து சாக்குக்குள் திணிக்கும் சிறுவர்களைப் பார்த்தான். குப்பைத் தொட்டியில் தலையை விட்டுச் சீய்க்கிற நாயைப் பார்த்தான். நகரத்தின் அழகும் அசிங்கமும் ஒரே நேரத்தில் மனசைப் பாதிப்பதை உணர்ந்தான்.
‘இன்னாடா டெலிபோன்ஸ் வண்டி ரெடியாய்டுச்சா’ முதலாளியின் குரல் கேட்டதும் சிதற விட்ட கவனங்களைத் திரட்டிக் கொண்டு திரும்பினான் குமரேசன். முதலாளி ஒரு வண்டிக்குள் குனிந்து பார்க்க இரண்டு மெக்கானிக்குகள் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். வாட்சைக் கழற்றி பைக்குள் போட்டுக்கொண்டு முதலாளி குனிந்து எதையோ செய்தார்.
‘சீக்கிரம் வண்டியக் கழுவி ரெடியா வை. காலைலேந்து ஆயிரம்தரம் போன் பண்ணிட்டானுங்க...’
கையை வேஸ்ட் துணியால் துடைத்தபடி திரும்பிய தருணம் தடாலென்று அவர் காலில் விழுந்தான் குமரேசன். பாதத்தைத் தொட்டுக் கும்பிட்டான். சட்டென்று காலை பின்னுக்கு இழுத்தார் முதலாளி. ‘ஏந்துருடா... எதுக்குடா கால்ல உழுவுற? யார் செய்ய சொன்னா இந்த வேல...?’
‘வேல ஓணும் மொதலாளி...’
‘மொதல்ல கால உட்டு ஏந்துருடா...’
‘வேல மொதலாளி, ஊர்லேந்து ஓடியாந்துட்டன் மொதலாளி...’
‘சரி. மொதல்ல ஏந்து நில்லு...’
எழுந்து நின்றான்.
‘ஊர உட்டு எதுக்குடா வந்த...?’
‘ஊர்ல அப்பா செத்துட்டாரு மொதலாளி, அதான் வந்துட்டன்...’
‘நெஜமா பொய்யா...?’
‘சத்திமா செத்துட்டாரு மொதலாளி...’
‘இன்னா வேல தெரியும் ஒனக்கு...?’
‘எது சொன்னாலும் செய்றன் மொதலாளி...’
‘அந்த கார் முன்னால போய் உழுன்னு சொன்னா உழுவியா...’
ட்ரயல் பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ஒரு காரைக் காட்டிச் சொன்னார் முதலாளி. ரிவர்ஸில்போய் முன்னேறிக் கொண்டிருந்தது கார். எந்த யோசனையும் இல்லாமல் சட்டென்று கார் முன்னால் பாய்ந்தான் குமரேசன். தடாலென்ற விழுந்த பையனைப் பார்த்து மிரண்டு போன கார் டிரைவர் இம்மி கூட முன்னேறாத அளவுக்கு அழுத்தமாய் ப்ரேக் போட்டு பதறிப்போய் கீழே இறங்கினான். கைவேலை பார்த்துக்கொண்டிருந்த பையன்களும் ஓடி வந்து சேர்ந்தார்கள். முதலாளியும் சற்றே தேகம் நடுங்க வேகமாய் முன்னுக்கு வந்து கீழே கிடந்த பையனைத் தூக்கினார்.
‘எந்த ஊருடா சாமி நீ? எல்லாரயும் கொலகாரனா ஆக்கி இருப்பியே இந்நேரம்...’
‘வேல ஓணும் மொதலாளி...’
‘சும்மா உழுடான்னு வௌயாட்டுக்குச் சொன்னா இப்பிடியாடா உழுவ. கொஞ்சமாச்சிம் யோசன வேணாம்’
‘வேல ஓணும் மொதலாளி...’
‘சரி சரி கண்ணை தொடச்சிக்கோ...’
முதலாளி பக்கத்தில் வந்து அவன் முதுகில் தட்டினார். திரும்பி இன்னொரு மெக்கானிக்கைப் பார்த்துச் சொன்னார்.
‘முப்பத்தாறு நாப்பத்தேழு குண்டூர் போய்ருக்குது. வந்தா அதுல சேத்துரு வெங்கடேஷ். தாஸ்தான ஓடறான் அதுல. நா சொன்னன்னு சொல்லு...’
(தொடரும்)