இந்தியா முழுதும் மக்கள் ஆதரவுடன் ஒத்துழையாமை இயக்கம் பரவி நன்கு வேரூன்றிவிட்ட தருணத்தில் காந்தியடிகள் 15.09.1921 அன்று சென்னைக்கு வந்தார். அடுத்தநாள் மாலை கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பங்கேற்று, கதராடைகளை அணிதல், வெளிநாட்டுத் துணிகளை விலக்குதல், தீண்டாமை ஒழிப்பு, மது விலக்கு ஆகிய திட்டங்களைப்பற்றி விரிவாக உரையாற்றினார். ”நம்மிடையே வாழும் ஐந்தில் ஒரு பகுதியினரை நாம் தீண்டத்தகாதவர்களாக நடத்துவதை விட்டொழிக்கும்போதுதான் உலகம் முழுவதும் நம்மைத் தீண்டத்தகாத தொழுநோயர்களைப்போல நடத்தும் முறையும் ஒழியும்” என்று உறுதியான குரலில் தெரிவித்தார்.
அச்சமயத்தில் பக்கிங்காம், கர்னாடிக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில்
ஈடுபட்டிருந்தார்கள். ஒரே நோக்கத்துக்கான போராட்டமாக இருந்தபோதும், தொழிலாளர்கள் சாதி
அடிப்படையில் பிரிந்திருந்திருந்தார்கள். அந்த அம்சத்தைத் தொட்டுப் பேசிய காந்தியடிகள்
சாதியப்பிரிவினைக்கு இடம்தராமல் ஒன்றிணைந்து பாடுபடுவதால் மட்டுமே வெற்றியை ஈட்டமுடியும்
என்று குறிப்பிட்டார். தீண்டாமை ஒழிப்புக்கான முனைப்பு சமூகத்தில் எல்லா நிலைகளிலும்
உருவானால் மட்டுமே நாம் விரும்பும் மாற்றத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
17.09.1921 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டு விழுப்புரம்,
பரங்கிப்பேட்டை, பண்ருட்டி வழியாகப் பயணம் செய்து கடலூரை இரவு எட்டு மணியளவில் வந்தடைந்தார்
காந்தியடிகள். கெடிலம் ஆற்றங்கரையில் அவருடைய வருகைக்காக பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர்
ஆவலோடு காத்திருந்தனர். காந்திடியடிகளைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் அவரை வாழ்த்திக்
குரலெழுப்பினர். தென்னார்க்காடு மாவட்டத்தின்
சார்பாக ஒரு வரவேற்பு மடலை கிருஷ்ணசாமி செட்டியாரும் மாதர்கள் சார்பாக ஒரு வரவேற்பு
மடலை அசலாம்பிகை அம்மையாரும் வாசித்து அளித்தனர். சாரங்க செட்டியார் பணமுடிப்பை அளித்தார்.
காந்தியடிகள் உரையாற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில்
ஏறி நின்று மக்களைப் பார்த்து கையசைத்து அமைதி காக்கும்படி குரல் கொடுத்ததும் ஒரே கணத்தில்
ஆரவாரம் அடங்கி முழு அமைதி நிலவியது. சென்னையில் உரையாற்றியதன் தொடர்ச்சியாக காந்தியடிகள்
அகிம்சை, ஒத்துழையாமை, கட்டுப்பாடு, கதர், இராட்டை, சுதேசி, இந்து முஸ்லிம் ஒற்றுமை,
தீண்டாமை ஒழிப்பு போன்ற விஷயங்களைக் குறித்து சுருக்கமாக உரையாற்றினார். அவருடைய உரையை
எம்.கே.ஆச்சார்யா தமிழில் மொழிபெயர்த்தார்.
அந்த ஆற்றங்கரையில் அவருடைய ஒவ்வொரு சொல்லையும் ஆழ்ந்த கவனத்துடன் கேட்டபடி
கூட்டத்தின் முன்வரிசையில் அமர்ந்திருந்தார் ஒரு பெண்மணி. ஒருசில நாட்களுக்கு முன்பாக அறிய நேர்ந்த பாரதியாரின்
மறைவுச்செய்தியால் சோர்வுற்றிருந்த அவருடைய மனத்தை காந்தியடிகளின் சொற்கள் ஊக்கம் கொள்ளவைத்தன.
அவர் அஞ்சலை அம்மாள்.
தேசபக்தன், நவசக்தி, லோகோபகாரி என பத்திரிகைகளை வாங்கி ஒவ்வொரு
நாளும் பொதுமக்களிடையில் விநியோகம் செய்வதைத் தினசரிக்கடமையாகக் கொண்டவர் அஞ்சலை அம்மாள்.
ஓய்வு நேரங்களில் அப்பத்திரிகைகளில் வெளிவரும் அரசியல் செய்திகளையும் கட்டுரைகளையும்
வாசிக்கும் பழக்கமும் அவருக்கு இருந்தது. அந்த
வாசிப்பு, அவருக்கு நாடெங்கும் நடைபெற்று வந்த சுதந்திரப்போராட்ட நடவடிக்கைகளைப்பற்றித்
தெரிந்துகொள்ள உதவியது. திண்ணைப்பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரையில் மட்டுமே
படித்திருந்தபோதும் தொடர்ச்சியான பத்திரிகை வாசிப்பு அவரைத் தேர்ந்த வாசகராகவும் அரசியல்
தெளிவு கொண்டவராகவும் உருமாற்றிவிட்டது. பெரிய
தலைவர்களைப்போல தாமும் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு தம்மால் இயன்றவகையில் நாட்டுக்குத் தொண்டாற்ற வேண்டும்
என்னும் ஆர்வத்தையும் தூண்டியது. அப்படிப்பட்ட தருணத்தில்தான் கெடிலம் ஆற்றங்கரையில்
ஆயிரக்கணக்கான மக்களுக்கு நடுவில் முன்வரிசையில் அமர்ந்து காந்தியடிகளின் உரையைக் கேட்டார்.
அந்த உரை, அவருடைய நெஞ்சில் எழுச்சியை ஏற்படுத்தியது. அஞ்சலை அம்மாளுக்கும் அவருடைய
கணவரான முருகப் படையாட்சிக்கும் வீட்டில் தறி நெய்யும் பழக்கம் இருந்ததால், கதராடைகள்
மீது அவ்விருவருக்கும் இயல்பாகவே ஆர்வம் பிறந்துவிட்டது.
கதர் மட்டுமன்றி, தீண்டாமை ஒழிப்பு, அயல்நாட்டுத் துணிகளை
விலக்குதல் போன்ற செய்திகளில் அஞ்சலை அம்மாள் ஆர்வம் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் செய்தித்தாட்களில் அவை தொடர்பாக வெளிவரும்
செய்திக்குறிப்புகளில் முக்கியமான அம்சங்களை
வெள்ளைத்தாளில் தடித்த எழுத்துகளால் எழுதி பிரதியெடுத்து வைத்துக்கொண்டு துண்டுப்பிரசுரங்களைப்போல
ரயில் நிலையம், கடைத்தெரு, கோவில்கள் போன்ற மக்கள் கூடுமிடங்களில் நின்று அனைவருக்கும்
வழங்கினார். இதற்காக , யாருடைய உதவியையும்
நாடாமல், பிரதியெடுப்பது, விநியோகிப்பது என எல்லா வேலைகளையும் தனித்து நின்று செய்தார்.
நாளடைவில் செய்திக்குறிப்புகளை மட்டுமன்றி, காங்கிரஸ் கொள்கைகளையும் சுருக்கமாக பிரசுரங்களாக
எழுதி விநியோகிக்கத் தொடங்கினார்.
வாசிப்புப்பயிற்சியும் எழுத்துப்பயிற்சியும் அரசியல் சார்ந்த
செய்திகளை நினைவில் பதியவைத்துக்கொள்ள அஞ்சலை அம்மாளுக்குப் பேருதவியாக இருந்தன. நாட்டில்
நிலவும் வெவ்வேறு பிரச்சினைகள் சார்ந்து பல்வேறு அமைப்பினர் எதிர்வினை புரியும்போது,
அவற்றில் எது மக்கள்நலன் சார்ந்தது, எது மேலோட்டமானது என அவரால் எளிதாகப் பிரித்துணர
முடிந்தது. தன் மனம் உணர்ந்த கருத்துகளை அடுத்தவர்களிடம் விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் ஆற்றலும் இருந்தது. வழக்கம்போல காங்கிரஸ் சார்பாக
நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நிகழும் உரைகளைக் கேட்பதற்காகச் சென்ற அஞ்சலை அம்மாளை, அக்கூட்டத்தில்
அஞ்சலை அம்மாளின் அறிவாற்றலைப்பற்றி நன்கு அறிந்த ஓர் அமைப்பாளர் மேடைக்கு அழைத்து
உரையாற்றும்படி கேட்டுக்கொண்டார். சந்தர்ப்பவசத்தால் மேடையில் ஏறி நிற்க நேர்ந்தாலும்,
அனைவரும் புரிந்துக்கொள்ளும் வகையில் சொல்லவேண்டிய செய்திகளை சுருக்கமாகப் பேசிவிட்டு
அமர்ந்தார். அப்பேச்சு அனைவரையும் கவர்ந்துவிட்டதால், கூட்டங்களை ஏற்பாடு செய்யும்
அமைப்பாளர்கள் ஒவ்வொரு மேடையிலும் அஞ்சலை அம்மாளைப் பேசவைத்தனர். அஞ்சலை அம்மாள் தடுமாற்றமின்றி
அறிவாற்றலோடு பேசும் திறமைகொண்டவராக இருந்ததால், அவருடைய மேடைப்பேச்சை அனைவரும் விரும்பினர்.
மக்கள் ஆதரவின் காரணமாக மிகவிரைவிலேயே அஞ்சலை அம்மாள் காங்கிரஸ் அமைப்பாளர்களில் ஒருவரானார்.
கடலூர் மத்திய சிறையில் 20.11.1918 முதல் 14.12.1918 வரையில்
பாரதியார் அடைக்கப்பட்டிருந்தார். சி.பி.ராமசாமி ஐயர், அன்னிபெசன்ட் ஆகியோரின் தலையீட்டுக்குப்
பிறகு விடுதலை பெற்றார். அதற்குப் பிறகு அவர் சென்னையில் வாழ்ந்த காலத்தில் தண்டபானிப்பிள்ளை
என்பவருடன் சேர்ந்து சென்று சந்தித்து அறிமுகப்படுத்திக்கொண்டார். இந்திய சுதந்திரவேட்கையை
உருவாக்கும் எழுச்சிமிக்க பாரதியாருடைய பாடல்களைப் படிக்கும்போதும் கேட்கும்போதும் தன் மனம் அடையும் உத்வேகத்தை அவரிடம் மகிழ்ச்சியோடு
பகிர்ந்துகொண்டார். காங்கிரஸ் சார்பாக கடலூரில் ஏற்பாடு செய்யவிருக்கும் ஒரு கூட்டத்தில்
உரையாற்றவேண்டுமென அன்று அஞ்சலை அம்மாள் முன்வைத்த கோரிக்கையை பாரதியார் ஏற்றுக்கொண்டார்.
சொன்ன தேதியில் கடலூருக்கு வந்து உரையாற்றிவிட்டுச்
சென்றார். அதற்குப் பிறகு ஒருசில மாதங்கள் மட்டுமே அவர் உயிர்வாழ்ந்து 12.09.1921 அன்று
இயற்கையெய்தினார். அவருடைய மரணம் தொடர்பான செய்தியை முழுமையான அளவில் தமிழர்கள் பொருட்படுத்தவில்லை
என்னும் வருத்தம் அஞ்சலை அம்மாளின் ஆழ்நெஞ்சை வருத்திக்கொண்டே இருந்தது.
12.09.1922 அன்று பாரதியார் மறைந்து ஓராண்டு நிறைவெய்திய
தினம். அவர் தொடர்பான நிகழ்ச்சியை ஊருக்குள் நிகழ்த்த பலரிடம் அப்போதும் தயக்கமாக இருந்தது.
ஆயினும் பாரதியார் நினைவு நிகழ்ச்சியை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த
அஞ்சலை அம்மாளின் நெஞ்சில் திடீரென ஒரு திட்டம் உதித்தது. அப்போது, பல ஊர்களில் கள்ளுக்கடை
மறியலில் ஈடுபட்டதற்காகவும் அந்நியத்துணிகளை வாங்கி ஆதரவளிக்கவேண்டாம் என துணிக்கடைகளின்
முன்னால் நின்று பொதுமக்களைச் சந்தித்து வேண்டுகோளை முன்வைத்ததற்காகவும் கைது செய்யப்பட்ட
சில தொண்டர்கள் கடலூர் மத்திய சிறையில் வைக்கபட்டிருந்தனர். அவர்களைச் சந்தித்து உரையாடுவதற்கான
அனுமதியைப் பெற்ற அஞ்சலை அம்மாள் சிறைவளாகத்துக்குச் சென்றார்.
அச்சந்திப்பின்போது எதிர்பாராத விதமாக அஞ்சலை அம்மாள் பாரதியார்
குறித்து சில நிமிடங்கள் அத்தொண்டர்களிடையில் உரையாற்றினார். அந்தச் சிறையில்தான் பாரதியாரும்
அடைக்கப்பட்டிருந்தார் என்பதால் அஞ்சலை அம்மாளுடைய பேச்சு அங்கிருந்தவர்களை நெகிழ வைத்துவிட்டது.
காவலர்களும் அதை எதிர்பார்க்கவில்லை. கைதிகளும் அதை எதிர்பார்க்கவில்லை. குறுகிய நேரத்துக்குள்
பாரதியாரின் மகத்துவத்தையும் இலட்சியத்தையும் கைதிகளிடம் எடுத்துரைத்துவிட்ட மன நிறைவுடன் அஞ்சலை அம்மாள் சிறையைவிட்டு வெளியே வந்துவிட்டார்.
அந்தக் காலத்தில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதற்காகவும்
அந்நியத்துணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காகவும் கர்நாடகப் பகுதியிலும் ஆந்திரப்பகுதியிலும் கைது
செய்யப்படும் காங்கிரஸ் போராட்டக்காரர்களை கடலூரில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கும்
வழக்கமிருந்தது. அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, உண்ணத்
தகுதியற்றதாக மிக மோசமான முறையில் தயாரிக்கப்பட்டதாகவும் இருந்தது. இது தொடர்பாக, சிறை அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்த போதும் அவர்களில்
ஒருவரும் அப்புகார்களைப் பொருட்படுத்தவில்லை.
ஒருமுறை அவர்களைச் சந்திப்பதற்காக
ஓமந்தூரார் சிறைக்கூடத்துக்கு வந்திருந்தார். அவர்கள் சொன்னதைக் கேட்டு
மனம்
பதைத்தார் ஓமந்தூரார். உணவு விநியோகம் தொடர்பாக உடனடியாக
வழக்குமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடுத்தார். அவ்வழக்கில்
தீர்ப்பு கிட்டும் வரையில் சிறைக்கைதிகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பை தம்மிடம் வழங்குமாறு விண்ணப்பம் கொடுத்து, உரிய
அனுமதியையும்
பெற்றார். அன்று உடனடியாக, அஞ்சலை அம்மாளைச் சந்தித்து சிறைக்கு அருகிலேயே ஒரு
சமையல்கூடத்தை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அஞ்சலை அம்மாள் மிகவேகமாகச்
செயல்பட்டு, தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்த்முடித்தார். அப்போதே சமையல் வேலை தொடங்கிவிட்டது. சில மணி
நேரங்களிலேயே எளிய, சுவையான உணவு தயாராகி, சிறையில் அடைபட்டிருந்த தொண்டர்களுக்கு
வழங்கப்பட்டது.
அன்று
மட்டுமன்றி, அஞ்சலை அம்மாள் உள்ளூர் தொண்டர்களின் துணையோடு ஒவ்வொரு நாளும் அனைத்துக் கைதிகளுக்கும் தேவையான உணவைத் தயாரித்து வழங்கத் தொடங்கினார். தினந்தோறும் இரண்டு வேளை இந்த
உணவு விநியோகம் நிகழ்ந்தது. ஓமந்தூரார் தொடர்ந்த வழக்கில் மூன்று மாதகாலம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, கைதிகளுக்கு வழங்கப்படும்
உணவில் சிறைநிர்வாகம் அளவையும் தரத்தையும் சீரானமுறையில் பின்பற்றவேண்டும் என்று தீர்ப்பு
வழங்கப்பட்டது. வழக்கு நடைபெற்ற மூன்று மாத காலமும் உணவு வழங்கும் பொறுப்பை
ஏற்றுக்கொண்ட அஞ்சலை அம்மாள், அதை சிறப்பான முறையில் நிறைவேற்றி
எல்லோருடைய மனத்திலும் இடம்பிடித்தார். அவருடைய பெயரும் புகழும் தமிழகமெங்கும் பரவியது.
ஒருமுறை
மதுரையில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும்
மேற்பட்ட தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்குத் தண்டனை வழங்கிய
நீதிபதி, அவர்களை கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கும்படி உத்தரவு வழங்கினார்.
தொண்டர்களுக்கு உணவு கூட வழங்காத காவல் துறையினர் உடனடியாக அவர்களை ரயிலில் ஏற்றி கடலூரை நோக்கிப்
புறப்பட்டுவிட்டனர். காவல்துறையினரின் அலட்சியப்போக்கை அருகிலிருந்து கவனித்த
சுதந்திர இயக்கத் தொண்டரான சோமயாஜுலு உடனடியாக கடலூரில் வசித்த அஞ்சலை அம்மாளுக்கு
விவரங்ககளைச் சுருக்கமாதத் தெரிவித்து ஒரு தந்தியை அனுப்பினார்.
பசியுடன்
ரயிலில் வரும் தொண்டர்களுக்கு நிலையத்திலேயே உணவு கிடைக்க வழி செய்யவேண்டும்
என்பதுதான் அத்தந்தியின் சாரம். காவல்துறை மீது சீற்றம் பொங்கினாலும், அதைப் பற்றி பேசி நேரத்தை வீணாக்க அஞ்சலை
அம்மாள் விரும்பவில்லை. நூறு பேர் உண்ணும் அளவுக்கு உணவைத் தயார் செய்யவேண்டும்
என்பதுதான் அவருடைய உடனடி நோக்கமாக இருந்தது. தன்னைப்போலவே நேர்மறை எண்ணமும்
தொண்டுள்ளமும் கொண்ட மூத்த தொண்டர்களான தெய்வநாயகம், சுதர்சனம் நாயுடு, தேவநாகையா
போன்றோரோடு இணைந்து சமையலுக்கான பொருட்களைத் திரட்டத் தொடங்கினார்.
அஞ்சலை
அம்மாளின் நோக்கத்தை அறிந்ததும் இரக்கமனம் கொண்ட பலர் தம்மாலான உதவிகளைச்
செய்தனர். தேவையான பொருட்களைத் திரட்டியதும் சமையல் வேலையைத் தொடங்கினர்.
குறிப்பிட்ட நேரத்துக்குள் சாப்பாட்டை தயார் செய்து எடுத்துக்கொண்டு ரயில் நிலைய
வாசலுக்கு வந்துவிட்டனர். ரயில் குறித்த நேரத்தைவிட மிகவும் தாமதமாக நள்ளிரவுக்கு
முன்னால்தான் வந்து சேர்ந்தது. மதுரையிலிருந்து அழைத்துவரப்பட்ட தொண்டர்களும்
காவலர்களும் ரயிலைவிட்டு இறங்கினர்.
காலையிலிருந்து
உணவின்றி வாடியிருந்தனர் தொண்டர்கள். வாசலில் அவர்களுடைய வருகைக்காகக் காத்திருந்த
அஞ்சலை அம்மாளும் பிற தொண்டர்களும் மதுரைக்காரர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும்
அவர்களுக்காகத் தேடி வந்து காத்திருப்பதை உணர்த்துவதற்காகவும் வந்தே மாதரம் என
முழக்கமிட்டனர். ஏதோ ஒரு மூலையிலிருந்து எழுந்த வந்தே மாதரம் முழக்கத்தைக் கேட்டு
சோர்வை உதறிய தொண்டர்கள் உற்சாகத்துடன் நின்ற நிலையிலேயே வந்தே மாதரம் என பதில்
முழக்கமிட்டனர். இரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொண்டனர்.
வந்தே மாதரம்
முழக்கத்தைக் கேட்டு காவலர்கள் திகைத்து செய்வதறியாமல் நின்றுவிட்டனர். ஆயினும்
கடலூர் தொண்டர்கள் அவர்களை நெருங்கவிடாமல் தடுத்தனர். அக்கணமே மதுரைத்தொண்டர்களை
அழைத்துக்கொண்டு கடலூர் நகரத்திலிருந்து வெகுதொலைவில் இருக்கும் கேப்பர் மலை
மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லவேண்டும் என பரபரத்தனர். கேப்பர் மலைக்கும் ரயில்
நிலையத்துக்கும் இடைப்பட்ட தொலைவு விவரத்தை அவர்களிடம் பொறுமையாக எடுத்துச் சொன்ன
அஞ்சலை அம்மாள் பசியோடு அந்த அகால நேரத்தில் அந்த வழியில் செல்வது
பாதுகாப்ப்பானதல்ல என்றும், காவலர்களுக்கும் சேர்த்தே உணவு கொண்டுவரப்பட்டுள்ளது
என்றும் எடுத்துரைத்தார்.
நீண்ட
பேச்சுவார்த்தைக்குப் பிறகு காவலர்கள் உணவு வழங்க ஒப்புக்கொண்டனர். நிலையத்திலேயே ஓரமாக
ஓரிடத்தில் அனைவரும் அமர்ந்துகொள்ள, அனைவருக்கும் அஞ்சலை அம்மாளும் பிற
தொண்டர்களும் உணவு பரிமாறினர். சாப்பிட்ட பிறகு, நிலைய வளாகத்திலேயே அனைவரும்
உறங்கி ஓய்வெடுத்துக்கொண்டனர். காலையில் எழுந்ததும் புறப்படுவதற்கு முனைந்தனர்
காவலர்கள். அப்போது ரயில் நிலையத்துக்கு வெளியே ஓட்டல் நடத்தி வந்த வெங்கட்ராவ்
என்னும் தொண்டர் அனைவருக்கும் காலைச்சிற்றுண்டி வழங்கும் பொறுப்பை
ஏற்றுக்கொண்டார். வேறு வழியின்றி காவலர்கள் அதற்கும் ஒப்புக்கொள்ள
வேண்டியதாயிற்று. அனைவரும் உண்டு பசியாறிய பிறகே காவலர்கள் மதுரைத் தொண்டர்களை
அழைத்துக்கொண்டு சிறைக்குச் சென்றனர்.
அஞ்சலை அம்மாள் பிற தொண்டர்களுடன் இணைந்து ஒருமுறை ஊர்வலமாகச்
சென்று கள்ளுக்கடையின் முன்னால் நின்று மறியிலில்
ஈடுபட்டார். ’கள்ளைக் குடிக்காதே’ என அவரே கையால் எழுதிய பதாகைகளை உயர்த்திப் பிடித்தபடி
நின்ற தொண்டர்கள் மதுவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி கடையை நோக்கி வருபவர்களின்
கவனத்தை ஈர்த்தனர். சிலர் அப்பெண்களின் முகங்களைப் பார்த்ததுமே கடைக்குள் செல்லாமல்
நாணத்துடன் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
“பாழான கள்ளைக் குடிக்காதே
பவிசை இழந்து துடிக்காதே”
“ஆசை மனைவியை அடிக்காதே
ஆண்மைத் திமிரில் திரியாதே”
“இழவு கள்ளைக் குடிக்காதே
இடுப்பு வேட்டியை இழக்காதே”
என நாள்முழுதும் முழக்கமிட்டபடி இருந்தனர் தொண்டர்கள். ஒவ்வொரு
நாளும் இப்படி தொடரும் மறியல்களால் கடைக்காரர்கள் வெகுண்டெழுந்தனர். காவல்துறையில்
புகார் செய்து, பொய்சாட்சிகளையும் ஏற்பாடு செய்து அஞ்சலை அம்மாளையும் பிற தொண்டர்களையும்
கைது செய்ய வைத்தனர். பெயருக்கு ஒரு விசாரணையோடு, அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போது சென்னையின் மையப்பகுதியில் ஸ்பென்சர் கம்பெனி கட்டடத்துக்கு
எதிரில் நீல் என்னும் ஆங்கிலேய அதிகாரியின் சிலை அரசாங்கத்தால் நிறுவப்பட்டிருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக 1857இல் வட இந்தியாவில் ஜான்ஸி ராணியின் தலைமையில் நடைபெற்ற
இந்தியப்புரட்சியை அடக்கி, ஏராளமானவர்கள் சுட்டுக்கொல்லப்படவும் தூக்கிலிடப்படவும்
காரணமாக இருந்தவரே அந்த நீல். அவமானச்சின்னமான அச்சிலையை அங்கிருந்து அகற்றவேண்டும்
என்ற நோக்கத்துடன் 1927இல் ஒரு போராட்டத்தை மதுரைத்தொண்டர்கள் தொடங்கினர். அதற்குத்
தலைமை தாங்கியவர் சோமயாஜுலு. அவருடைய தலைமையில் திருநெல்வேலி சுப்பராயலு நாயுடுவும்
இராமநாதபுரம் முகம்மது சாலியும் மதராஸுக்குச் சென்று சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.
11.08.1927 அன்று சுப்பராயலு நாயுடுவும் முகம்மது சாலியும் சிலையின் பீடத்தில் ஏறி
நின்றுகொண்டு சம்மட்டியால் அடித்து சிலையைச் சேதப்படுத்தினர். உடனே காவலர்கள் அவ்விருவரையும்
கைது செய்து சிறையில் அடைத்தனர். இருவருக்கும் ஆறு மாத தண்டனை விதிக்கப்பட்டது.
தற்செயலாக 06.09.1927 அன்று சென்னைக்கு வந்த காந்தியடிகளை
சோமயாஜுலு, சத்தியமூர்த்தி, குழந்தை போன்ற
தலைவர்கள் சந்தித்து நீல் சிலை அகற்றுவது தொடர்பாக உரையாடினர். போராட்டத்தை ஒட்டி எடுக்கப்படும்
சட்ட நடவடிக்கைகள் தேசிய இயக்கமான காங்கிரஸைப் பாதிக்காமல் இருப்பது மிகமுக்கியம் என்பதால்
சிலை அகற்றும் போராட்டத்தை காங்கிரஸ் சார்பாக நடத்தவேண்டாம் என்று அவர்களைக் கேட்டுக்கொண்டார் காந்தியடிகள். சோமயாஜுலுவும்
பிற இளைஞர்களும் அவருடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு, தனிப்பட்ட முயற்சியாக நீல் சிலையை
அகற்றும் சத்தியாகிரகத்தைத் தொடர்ந்தனர்
சோமயாஜுலுவுக்குப் பெருகிவரும் ஆதரவை முளையிலேயே கிள்ளியெறிய
விரும்பிய காவல் துறையினர் அவரை உடனடியாகக் கைது செய்தனர். அவருக்கு பதினைந்து மாதம்
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து அஞ்சலை அம்மாள் ஒன்பது வயது மகளான
அம்மாக்கண்ணுவுடன் சென்னைக்கு வந்து சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். அவருக்கு நீதிமன்றம்
ஒருநாள் சிறைத்தண்டனையையும் இருபத்தைந்து ரூபாய் அபராதத்தையும் விதித்தது. அபராதத்தொகையைக்
கட்ட அஞ்சலை அம்மாள் மறுத்ததால் ஆறுமாத காலம் கூடுதலாக சிறைத்தண்டனையை அளித்தது. அவர்
மகளான அம்மாக்கண்ணு சிறார் சிறையில் நான்கு ஆண்டுகள் தங்கியிருக்கும் வகையில் தீர்ப்பு
வழங்கியது. அஞ்சலை அம்மாள் சிறைக்குச் சென்ற மறுநாள், அவருடைய கணவரான முருகப் படையாட்சியும்
சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு கைதானார். அவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனையும் ஐம்பது
ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த மறுத்ததால், கூடுதலாக மூன்று மாத
சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டடது.
டிசம்பர் மாத இறுதிவரைக்கும் ஒவ்வொரு நாளும் அந்தச் சத்தியாகிரகத்தில்
ஈடுபட்டு, எண்ணற்றோர் சிறைக்குச் சென்றபடி இருந்தனர். ஒவ்வொரு நாளும் இரு தொண்டர்கள் கைதானபடி இருந்தனர்.
ஏற்கனவே தீர்மானித்திருந்தபடி டிசம்பர் மாத இறுதியில் நிகழவிருந்த இந்திய தேசிய காங்கிரஸ்
மாநாட்டுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கவேண்டியிருந்ததால், சத்தியாகிரகப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
சிறார் சிறையிலிருந்த அம்மாக்கண்ணுவை தண்டனைக்காலம் முடிவடைந்ததும்
அவரை சபர்மதி ஆசிரமத்துக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி காந்தியடிகள்
ராஜாஜியிடம் சொன்னார். அவருடைய கட்டளைப்படி அம்மாக்கண்ணுவின் விடுதலைக்குப் பிறகு அவர்
சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்று காந்தியடிகளின் நேரடி கண்காணிப்பில் வளர்ந்தார். காந்தியடிகள்
அவருக்கு லீலாவதி என பெயர் சூட்டி கல்வி கற்க ஏற்பாடு செய்தார்.
காந்தியடிகளின் தண்டி யாத்திரையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில்
இராஜாஜியின் தலைமையில் 12.04.1930 அன்று திருச்சியிலிருந்து நூறு தொண்டர்கள் இணைந்து
வேதாரண்யத்தை நோக்கி உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட புறப்பட்டனர். வேதாரண்யம் சென்று
உப்பு அள்ளும் வரை தமிழ்நாட்டில் வேறு எப்பகுதியிலும் யாரும் சத்தியாகிரகத்தில் ஈடுபடவேண்டாம்
என்று ராஜாஜி அறிவித்துவிட்டார். சென்னை நகரக் கடற்கரையில் சத்தியாகிரகம் செய்யத் தயாராக
இருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வேதனையில் ஆழ்ந்தனர். எதிர்பாராத விதமாக டி.பிரகாசம்
அத்தொண்டர்களுக்குத் தலைமையேற்க முன்வந்தார். ஸ்ரீகணேசன் நடத்திய சுதந்திரச்சங்கு பத்திரிகை
‘சென்னையின் மானம் காத்து பிரகாசம் தந்த பிரகாசம்’ என்று அத்தருணத்தைக் குறிப்பிட்டு
எழுதியது.
சென்னை காவல்துறைக்கு எழுத்து மூலமாக ஏற்கனவே அறிவித்த பின்னர்,
13.04.1930 அன்று டி.பிரகாசம் திலகர் கட்டத்தை அடைந்து நான்கு அடுப்புகளை அமைத்து உப்புக்
காய்ச்சினார். அதற்கு உரிமை உப்பு என்று பெயர் சூட்டினார். சத்தியாகிரகிகள் தயாரித்த
உப்பை விலைகொடுத்து வாங்குவது குற்றம் என்று தெரிந்திருந்தும் அன்று காய்ச்சப்பட்ட
உப்பை டங்கன் என்னும் ஆங்கிலேயர் உயர்ந்த விலைகொடுத்து வாங்கினார். ’பஞ்சாபில் வெள்ளை
இனத்தார் செய்த கொடுமைகளுக்குப் பிராயச்சித்தமாகவே இந்த உரிமை உப்பை விலைகொடுத்து வாங்குகிறேன்’
என்று கூறினார் அவர். அன்று காவல்துறை யாரையும் கைது செய்யவில்லை.
கிட்டத்தட்ட பத்துநாட்கள் வரை சத்தியாகிரகம் தொடர்ந்து நடைபெற்றபடி
இருந்தது. 23.04.1930 அன்று முதன்முறையாக குதிரைப்படையினரை
கூட்டத்தினரிடையே ஏவி விரட்டியது காவல்துறை. அதில் எண்ணற்றோர் காயமடைந்தனர். அன்றுமுதல்
கைது நடவடிக்கை தொடர்ந்தது. பிரகாசம், கே.நாகேஸ்வரராவ் பந்துலு, பாஷ்யம் செட்டியார் போன்றோர் முதலில் கைது செய்யப்பட்டனர்.
பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முன்னணித்தலைவரும் தொண்டர்களும் கைது செய்யப்படுவது தொடர்ந்தது.
சோழிங்கநல்லூரில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்ட அஞ்சலை அம்மாளும் கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தலைமையில் நாற்பதுக்கும் மேற்பட்ட தொண்டர்கள்
இணைந்து உருவாக்கியிருந்த உப்பளங்களைக் காவல்துறையினர் சிதைத்தனர். அஞ்சலை அம்மாளுக்கு
ஆறு மாத காலம் சிறைத்தண்டனை கிடைத்தது.
விடுதலையைத் தொடர்ந்து சிறிது காலம் சென்னையிலேயே தங்கியிருந்தார்
அஞ்சலை அம்மாள். ஒருசில துணிக்கடைக்காரர்கள் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்த காடாத்துணியை
சைதாப்பேட்டைக்கு அனுப்பி புது நிறங்களில் சாயம் தோய்த்து நவீன நிறங்களில் சேலைகளைத்
தயாரிப்பதாகவும் அச்சேலைகளின் தந்திரமாக காந்தியடிகளின் புகைப்படத்தை அச்சிட்டு இந்தியாவில்
தயாரான பருத்திப்புடவையைப் போல உருமாற்றி விற்பதாகவும் மக்களும் அவற்றை வாங்கி ஆதரவு
கொடுப்பதாகவும் ஒரு செய்தியைக் கேள்விப்பட்டார் அஞ்சலை அம்மாள். உடனே அவர் தன் தொண்டர்களுடன்
ஊர்வலமாகச் சென்று குறிப்பிட்ட கடையின் முன்னால் நின்று முழக்கமிட்டார். அந்தக் கடையில்
நிகழும் தில்லுமுல்லுகளை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் மீண்டும் மீண்டும் முழக்கமிட்டுக்கொண்டே
இருந்தார். அஞ்சலை அம்மாளின் சத்தியாகிரகத்தின்
விளைவாக மக்கள் உண்மையைப் புரிந்துகொண்டனர். அந்தக் கடையில் துணியெடுப்பதைத் தவிர்த்தனர்.
கடைக்காரரும் தன் தவறை உணர்ந்து மனம் மாறினார்.
அப்போது கிடங்குத்தெருவிலிருந்த அய்யண்ணன் செட்டியார் என்பவருடைய
துணிக்கடையில் லண்டனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விதேசித்துணிவகைகள் மட்டுமே விற்கப்பட்டு
வந்தன. அந்தக் கடையின் முன்னால் மறியல் நடைபெறும் என 08.01.1931 அன்று வெளியான இந்து செய்தித்தாளில்
சத்தியமூர்த்தி ஒரு பெட்டிச்செய்தியை வெளியிட்டிருந்தார். அஞ்சலை அம்மாள் தன் தொண்டர்களுடன்
ஓர் அணியாக தான் வசிக்கும் பகுதியிலிருந்து ஊர்வலமாக கிடங்குத்தெருவை நோக்கி வந்தார்.
அப்போது அவருக்கு மூன்று மாத கைக்குழந்தை இருந்தது. குழந்தையை இடுப்பில் சுமந்தபடியும்
வலதுகையில் கதர்க்கொடியை ஏந்தியபடியும் அஞ்சலை அம்மாள் ஊர்வலத்தில் நடந்தார்.
‘வாங்காதே வாங்காதே அந்நியத்துணியை வாங்காதே’ ‘உடுத்தாதே
உடுத்தாதே அந்நியத்துணியை உடுத்தாதே’ ‘கதரை வாங்கி உடுத்துங்க காந்தி மகான் சொல்லைக்
கேளுங்க’ என்ற முழக்கங்கள் விண்ணை எட்டின. இன்னொரு திசையிலிருந்து சத்தியமூர்த்தி தன்
தொண்டர்களுடன் வந்து கடையின் முன்னால் நின்று முழக்கமிட்டார். கடையிலிருந்து வெளியேறுபவர்களுக்கும்
கடைக்குள் செல்கிறவர்களுக்கும் எவ்விதமான இடையூறும் ஏற்படாத வகையில் போராட்டக்காரர்கள்
ஒதுங்கி நின்றே மறியலில் ஈடுபட்டனர்.
எதிர்பாராத விதமாக அங்கு வந்த துணை போலீஸ் கமிஷனர் அனைவரையும்
கலைந்துபோகும்படி அதிகாரத்துடன் கட்டளையிட்டார். அஞ்சலை அம்மாளும் சத்தியமூர்த்தியும்
பிற தொண்டர்களும் கமிஷனருடைய சொல்லுக்குக் கீழ்ப்படிய மறுத்து தொடர்ந்து முழக்கமிட்டபடி
இருந்தனர். அனைவரையும் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்று எழும்பூர் நீதிமன்றத்தில்
நிறுத்தினார் துணை போலீஸ் கமிஷனர். வழக்கு விசாரணையின் முடிவில் அஞ்சலை அம்மாளுக்கும்
சத்தியமூர்த்திக்கும் ஆறுமாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
தண்டனைக்காலம் முடிவடைந்து விடுதலையடைந்த பிறகு கடலூருக்கு
மீண்டும் சென்று குடியேறிய அஞ்சலை அம்மாள் வழக்கம்போல தன்னுடைய கதர்ப்பிரச்சாரத்திலும்
கள்ளுக்கடை மறியலிலும் மாலைப்பொழுதுகளில் தொண்டர்களிடையில் தீண்டாமை ஒழிப்பு குறித்து
சொற்பொழிவாற்றுவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். ஒருமுறை சில தொண்டர்களுடன் தேவனாம்பட்டினம்
கடற்கரைப்பகுதியை ஒட்டி செயல்பட்டு வந்த கள்ளுக்கடையின் முன்னால் நின்று மூவண்ணக்கொடியை
ஏந்தியபடி வழக்கம்போல கள்ளருந்துவதற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினார். கடைக்காரரின்
ஏற்பாட்டில் எங்கோ மறைந்திருந்த ஆட்கள் திடீரென வெளிப்பட்டு மறியலில் ஈடுபட்டிருந்த
அனைவரையும் தாக்கி கீழே வீழ்த்தினர். தாக்குதலுக்குள்ளாகி மயங்கி கீழே விழுந்துவிட்டபோதும்
அஞ்சலை அம்மாள் கொடியை விடாமல் உறுதியாகப் பிடித்திருந்தார். மயக்கம் தெளிந்ததும் மீண்டும்
துணிவுடன் எழுந்து நின்று எதிர்ப்பு முழக்கங்களை முழங்கினார். கடைக்காரரின் புகாரின்
பேரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொண்டர்கள் அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து
அழைத்துச் சென்றனர். அவர்களை விசாரித்த நீதிபதி அனைவருக்கும் மூன்று மாத சிறைத்தண்டனை
வழங்கினார். அஞ்சலை அம்மாளின் தொடர்ச்சியான
போராட்டங்களின் விளைவாகவும் பிரச்சாரத்தின் விளைவாகவும் கள்ளுக்கடைகளின் வியாபாரம்
குறைந்தது. லாபமின்றி கடை நடத்த விரும்பாத கடைக்காரர்கள் கடைகளை முடிவிட்டனர். கள்ளருந்தி
பழகிவிட்டவர்கள் உள்ளூர்க்கடைகள் மூடப்பட்டு விட்ட காரணத்தால் அருகிலேயே பிரெஞ்சு எல்லைக்கு
அருகில் இருந்த முள்ளோடை என்னும் கிராமத்துக்குச் சென்று சுதந்திரமாகக் குடிக்கத் தொடங்கினர்.
1937இல் நடைபெற்ற தேர்தலில் கடலூர் பெண்கள் தொகுதியில் காங்கிரஸ்
கட்சியின் வேட்பாளராக அஞ்சலை அம்மாள் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனநாயகக்கட்சியின்
வேட்பாளரான ஆண்டாள் என்பவர் போட்டியிட்டார். நீதிக்கட்சியின் பெரிய தலைவரான முத்தைய
முதலியார், திருக்கண்டீஸ்வரம் பண்ணையாரான ஜம்புலிங்க முதலியார், ராவ் பகதூர் நடராஜ
பிள்ளை போன்றோர் அஞ்சலை அம்மாளுக்கு எதிராக கடுமையான பிரச்சாரம் செய்த போதும், பத்தாயிரத்துக்கும்
மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் அஞ்சலை அம்மாள்
வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தார். ஆயினும் அந்த ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
1939இல் இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது இந்தியாவும் போரில் பங்கேற்கும் என தன்னிச்சையாக
ஆங்கிலேய அரசு அறிவித்ததைக் கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பைத் துறந்து
வெளியேறியது.
எங்கெங்கும் யுத்த எதிர்ப்புப்பிரச்சாரம் தொடங்கியது. சத்தியாகிரகிகள்
தேர்ந்தெடுக்கப்பட்டு, நாடெங்கும் யுத்த எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி கைதாகி சிறைசெல்லத்
தொடங்கினர். முதல் சத்தியாகிரகியாக வினோபா பிரச்சாரத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றார்.
30.11.1940 அன்று கடலூரில் நடைபெற்ற யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் அஞ்சலை அம்மாள்
கலந்துகொண்டு அரசாங்கத்தைக் கண்டித்துப் பேசினார். அதன் விளைவாக அவருக்கு ஆறு மாத காலம்
கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
1946இல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் கடலூர் பெண்கள் தொகுதியில்
அஞ்சலை அம்மாள் போட்டியிட்டு வென்றார். ஒருமுறை பரங்கிப்பேட்டைக்கு அருகில் பயணம் செய்துகொண்டிருந்தபோது,
அந்த வட்டாரத்தைச் சேர்ந்த முட்லூர் அருகில் தீர்த்தாம்பாளையம் என்னும் கிராமத்தில்
போதிய பாசனவசதி இல்லாமல் விளைநிலங்கள் உலர்ந்து தரிசாகக் கிடப்பதைப் பார்த்து வேதனையில்
மூழ்கினார். அருகிலிருந்த நீர்நிலையிலிருந்து சில மைல் தொலைவு கால்வாய் வெட்டினால்
அந்தப் பகுதிக்கு பாசன வசதியை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருந்தும் சில உள்ளூர்க்காரர்களின்
பிடிவாதப் போக்கினால் அதைச் சாத்தியப்படுத்த முடியாமல் இருப்பதையும் அங்கிருப்பவர்கள்ள்
வழியாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
அடுத்த நாளே, துறை அதிகாரிகளோடு ஒரு கள ஆய்வையும் நிகழ்த்தி
ஒரு கனவுத்திட்டத்தை மேற்கொண்டார் அஞ்சலை அம்மாள். அதுவரை அத்திட்டத்தை நிகழவிடாமல்
தடுத்தவர்களை நேரில் சந்தித்து அவர்கள் மனமொப்பும்படி பேசித் திருத்தினார். ஒருசில
ஆண்டுகளிலேயே அந்தக் கால்வாயின் கட்டுமான வேலைகள் முடிவடைந்து, தீர்த்தாம்பாளையம் பகுதி
பாசன வசதி பெற்று பசுமையான பிரதேசமாகியது. அஞ்சலை அம்மாள் முயற்சியால் உருவானதால் தீர்த்தாம்பாளையம்
கால்வாய்க்கு அஞ்சலை அம்மாள் கால்வாய் என்ற பெயரே நிலைத்துவிட்டது.
( கடலூர்
முதுநகரில் 01.06.1890 அன்று அஞ்சலை அம்மாள் பிறந்தார். அவருடைய தந்தையார் பெயர் முத்துமாணிக்கம்.
தாயார் பெயர் அம்மாக்கண்ணு. அஞ்சலை அம்மாள்
ஐந்தாம் வகுப்பு வரையில் மட்டுமே படித்திருந்தபோதும், சமூக அக்கறை கொண்டவராக விளங்கினார்.
இளமையிலேயே காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு,
மேடைகளில் முழங்கத் தொடங்கினார். தமிழகத்தில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம். அந்நியத்
துணி எதிர்ப்புப் போராட்டம், நீல் சிலை அகற்றும் போராட்டம், கள்ளுக்கடை மறியல் போராட்டம்,
தனிநபர் சத்தியாகிரகம் என எல்லாவிதமான போராட்டங்களிலும் ஈடுபட்டு ஒன்பது முறை சிறைத்தண்டனை
பெற்று வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். ஏறத்தாழ ஆறாண்டு காலம் அவர் சிறையில்
கழித்தார். இருமுறை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காந்தியடிகளின்
மரணத்துக்குப் பிறகு மன வேதனையுடன் தீவிர அரசியலிலிருந்து விலகியே வாழ்ந்தார். முதுமையில்
உடல்நலக் குறைவின் காரணமாக 20.02.1961 அன்று மறைந்தார்.)
(சர்வோதயம் மலர்கிறது - மே – 2024)