கடைச்சாவியை மாடத்திலிருந்து எடுத்துக்கொண்டு புறப்படும் போதே புழக்கடையில் பாத்திரங்களைத் தேய்த்தபடி கமலா சொன்னதும் புசுபுசுவென்று கோபம்தான் வந்தது ராஜாராமனுக்கு. என்னமோ நான் நீ என்ற ஊரில் இருக்கிற ஜனங்கள் எல்லாம் நாள் தவறாமல் வேலையைக் கொண்டு வந்து குவித்துவிடுகிறமாதிரியும் செய்வதற்கு இஷ்டப்படாமல் வீம்பாக புறக்கணித்துவிட்டு தினமும் கடையில் -தூங்கி எழுந்து வருகிற மாதிரியும் பேசுகிறாளே என்று தோன்றியது. ஆனாலும் காலையிலேயே ஆரம்பிக்கவேண்டாமே என்ற சலிப்பும், -தூக்கம் குறித்து அவள் சொல்வதில் பொய் எதுவும் இல்லை என்கிற விஷயமுமே சும்மா இருக்கச் சொன்னது. முகத்தைக் கூடத் திருப்பாமல் புழக்கடையில் உட்கார்ந்திருப்பவளின் எலும்புத் தோளையே இரண்டு நிமிடம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஏறின கோபம் தானாக வடிந்தது. சொல்லிக்கொள்ளாமலேயே வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வெளியே வந்தான். அதிக வெளிச்சத்தில் கண்கூசி அரை நொடி நேரத்துக்கு பார்வையே மந்தமாகி அதற்கப்புறம் சரியானது. அதற்குப் பிறகு பாதையை நிதானித்து நடந்தான் ராஜாராமன்.
கமலாவைக் கோபித்துக்கொள்வதில் எந்த அர்த்தமும் கிடையாது.
கடையில் வருமானம் இல்லாமல் வெறுமனே திரும்புகிற பல நாள்களில் வைத்திக்கவுண்டர் ரைஸ் மில்லில் அரிசி புடைத்து கொண்டு வருகிற இரண்டு ரூபாயும் மூன்று ரூபாயும் தான் கஞ்சிக்கோ கூழுக்கோ வழி. அதுகூட இல்லாத நேரங்களில் ஏறாத வீடுகளுக்கெல்லாம் ஏறி இறங்கி புரட்டிக் கொண்டுவந்து போடுவதும் கூட அவள்தான். அவளே இல்லா விட்டால் இந்த நொள்ளைக்கண்ணையும் ஓட்டை தையல் மிஷினையும் வைத்துக்கொண்டு பிழைக்கிற பிழைப்புக்கு ஐந்து பிள்ளைகளுடன் மாசத்தில் பத்து நாள் தள்ளமுடியாது. போதாக் குறைச்சலுக்கு இந்த உடம்பு அசதி வேறு. உடம்பு முழுக்க கல்லைக் கட்டித் தொங்கவிட்டமாதிரி சதா காலத்துக்கும் இருக்கிற இந்த அசதிக்கு வழி தெரியாமல்தான் கடையிலேயும் பகலில் -தூங்கத் தொடங்கியது.
கடை வாசலிலேயே முரளி நின்றிருந்தான். ராஜாராமனைப் பார்த்ததும் ‘வணக்கம்ண்ணே’ என்றான். ராஜாராமனிடமிருந்து சாவியை வாங்கிக் கடையைத் திறந்தான். பெருக்கிச் சுத்தமாக்கி வெயிலுக்கு படுதாவெல்லாம் கட்டி பானை நிறைய தண்ணீர் பிடித்து வைத்தான். இரண்டு பேருமாய்ச் சேர்ந்து மிஷினைத் -தூக்கி வெளியே வைத்தார்கள்.
‘இன்னாடா சின்னப்பையா, இன்னிக்காச்சிம் ஏதாச்சிம் கெராக்கி கெடைக்குமா...’
‘கெடைக்கும்ண்ணே...’
‘நேத்து ஒன்னுமே வரலியேடா...’
‘இன்னிக்கு வரும்ண்ணே’
‘ஜவுளிக்கடைப்பக்கம் நின்று பாக்கறியா’
‘ம்ண்ணே’
‘கண்ணபிரான் சில்க் ஸ்டோர்ஸ்கிட்டயே நின்னுகினிருக்காத. பத்து நிமிஷம் பாஞ்சிநிமிஷம் பாரு. ஒன்னும் சாயலன்னா அந்தண்ட இந்தண்ட சி. என். ஆர். ஷாப், அப்பாராஜி புள்ள கடன்னு ஒரு சுத்து சுத்தி வா. அப்பதா ஏதாச்சிம் கெடைக்கும் புரிதா?
‘சரிண்ணே’
பையன் கிளம்பிப் போனதும் மிஷின் தலையை நிமிர்த்தி வைத்துக்கொண்டு ஆயில்கானை உதறி உதறி எண்ணெய் ஊற்றினான் ராஜாராமன், பாபின் மாட்டும் பாகத்தில் புகைமாதிரி படிந்திருந்த -தூசை துண்டுத் துணியைக் குச்சியில் சுருட்டி
அழுத்தித் துடைத்தான். இரண்டு நிமிஷம் மூன்று நிமிஷம் கூட ஆகி இருக்காது அதற்குள் கண்ணுக்குள் புகை கட்டியது. பாபின் துளைகூட மறைந்து எல்லாமே தட்டையாய்த் தெரிந்தது. மிஷின் தலையை அப்படியே தொங்குமுகமாக வைத்து விட்டு நிமிர்ந்து கண்ணை மூடிக்கொண்டான். ஐந்து நிமிஷத்துக்குப் பிறகுதான் மங்கல் தணிந்தது. சக்கரத்தில் பெல்ட்டை மாட்டி விட்டு வெள்ளோட்டமாய் ஒரு துண்டுத் துணியில் தையல் இடைவெளி சரியாய் விழுகிறதா எனத் தைத்துப் பார்த்த பிறகு துணியை நறுக்கவும் மனசில்லாமல் அப்படியே விட்டான்.
கண் பிரச்சனை வந்ததில் இருந்து கிராக்கிகள் போக்கு வரவு கொஞ்சம் மட்டுப்பட்டுத்தான் போய்விட்டது. அதுவும் அக்ரஹாரத்தில் டீச்சர் வீட்டு ஜாக்கெட்டை ஏதோ கண்மங்கலில் உள்பக்கம் வெளிப்பக்கம் மாற்றித் தைத்துவிட்டு அந்த அம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்டதில் இருந்து அக்ரஹாரத்து கிராக்கிகளே சுத்தமாய் இல்லை. கடையைத் தாண்டி நடக்கும் போது கூட வேறு திசையில் முகத்தைத் திருப்பி நடக்கத் தொடங்கிவிட்டார்கள். எல்லாம் கண்ணால் வந்த வினை.
கண்ணாஸ்பத்திரிக்குப் போய்க் காட்டிப் பரிசோதனை செய்தால் சரியாய்ப் போகும் என்ற நிறையப் பேர் சொல்லியாகி விட்டது. ‘தடவித்தடவிகினு எதுக்குயா அவஸ்தப்படற. போய் ஆஸ்பத்திரில காட்டக் கூடாதா’ என்று கமலா கூட சொன்னதுண்டு. ஆனாலும் செலவுக்குப் பயந்து கொண்டுதான் சும்மா இருந்தது. விழுப்புரம், திண்டிவனம் என்று ஆஸ்பத்திரி இருக்கிற இடங்களுக்குப் போகிற பஸ் செலவு ஒரு பக்கம் இருந்தாலும் ஆப்பரேஷன், அது இது என்று பெரிசாய்ச் செலவு வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற பயம்தான் அந்த நினைப்பையே -தூரமாய்த் தள்ளி விட்டது. ஆனாலும் எப்பவாவது ஒன்றாய் டீ குடிக்க நேர்கிற சமயங்களில் தெய்வநாயகம் டைலர் பாண்டிச்சேரி பெரியாஸ்பத்திரியில் சும்மாவே ஆப்பரேஷன் செய்கிறார்கள் என்றும் நன்றாகவே பார்த்து மருந்து மாத்திரைகள் தருகிறார்கள் என்றும் சொன்னதில் இருந்து போய்ப் பார்த்தால்தான் என்ன என்கிற ஆசை மனத்தில் தோன்றியதுண்டு. அப்புறம்தான் பத்துப்பதினைந்து நாள் என்று ஆஸ்பத்திரிக்குப் போய் படுத்துக் கொண்டால் வீடு என்ன கதிக்குப் போகும் என்கிற யோசனை வந்தது. அதனால் இருக்கிற பார்வையைக் கொண்டு சமாளிக்கலாம் என்று சமாதானம் செய்துகொண்டான்.
பார்வை கூட இப்போது இரண்டாம் பட்சம்தான். உடம்பு அசதியும் -தூக்கமும்தான் பெரிய பிரச்சனை. வேலை அவ்வளவாய்க் குவியாத சந்தர்ப்பமும் உடம்பில் அசதி யானையாய் அழுத்துகிற சந்தர்ப்பமும் ஒரு சில வருஷங்களுக்கு முன்பு ஒன்றாகச் சேர்ந்தபோது கொஞ்சம் -தூங்கி எழுந்திருக்கலாமே என்று ஆரம்பித்த பழக்கம் போகப்போக விடவே முடியாத ஒன்றாக மாறிவிட்டது. சூடான டீ, தளரச் சுண்ணாம்பு தடவிய வெற்றிலை பாக்கு என்கிற கலவை எதுவுமே கூட இந்த -தூக்கத்தை விரட்டமுடியவில்லை முக்கால்வாசி வாடிக்கைக்காரர்களை கண் பிரச்சனையால் இழக்க மீதி இருந்த வாடிக்கைகளையும் -தூக்கப்பழக்கத்தால் இழக்க நேர்ந்தது. அவ்வப்போது கடைப்பையன் ஜவுளிக் கடையில் காத்திருந்து அழைத்து வருகிற கிராக்கிகள் தவிர, ஓரம் அடிக்க, லேஸ் வைக்க, கிழிசல் தைக்க என்று அவ்வப்போது வருகிற சிறிய உருப்படிகள் தான் தற்சமயத்துக்கு வருமானத்துக்கு வழியாய் இருந்தது.
-தூக்கம் கண்களை அழுத்த -தூங்கி விடப்போகிறோமே என்ற பயத்தில் எழுந்து பானையில் இருந்த தண்ணீரை அள்ளி முகத்தை அழுத்திக் கழுவிக் கொண்டான். மீண்டும் உட்கார்தலை தவிர்த்து பக்கத்துக் கடையில் எண்ணெய்ப்பிண்ணாக்கு விற்கும் செட்டியாரோடு வலியப் பேச ஆரம்பித்தான். சும்மாவாச்சும் எண்ணெய் விலை, புண்ணாக்கு விலை, சூர்யகாந்தியிலிருந்தும், பனையில் இருந்தும் வர ஆரம்பித்திருக்கும் புதுரக எண்ணெய்கள், அதன் ருசி, உபயோகம் என்று ஒரு இலக்கில்லாமல் பேச்சை இழுத்து இழுத்துப் பேசிக்கொண்டிருந்த போது வாசலில் ஒரு பெண்மணி வந்து நின்றாள்.
‘ஒரு பொடவ ஓரம் அடிக்கணும்’
பேச்சையெல்லாம் அறுத்துக்கொண்டு சட்டென்று முக்காலியில் அமர்ந்தான் ராஜாராமன்.
‘தச்சிர்லாம் குடுங்கம்மா’
‘எவ்ளோ வேணும்’
‘ஓரம்தானம்மா. ஒங்களுக்குத் தெரியாதா. பாத்துக் குடுங்கம்மா...’
‘நல்லா உருட்டித் தைக்கணும்’
‘தையலபத்தி கவலப்படாதீங்க. துணி கிழிஞ்சாலும் கிழியுமே தவிர தையல் உடாது. அதுக்கு நா கேரண்ட்டி.
‘இப்பவே வேணும்’
‘இப்பவே தரம்மா. குடுங்க’
தந்தாள். அவசரமாய் வாங்கிப் பிரித்தாலும் நிதானமாய் உற்று உற்றுப் பார்த்து மேல்பக்கம் அடிப்பக்கம் தீர்மானித்து ஓரங்களில் மடித்துக் கீறினான். நெடுக்கவும் கீறிக்கொண்டு முள்ளுக்குக் கீழே வைக்கும்போது பெண்மணி பதறியது போலப் பேசினாள்.
‘என்னங்க, வெள்ள -நூல்லயே தய்க்கறிங்க. கலர் -நூல் இல்லியா...’
‘மஞ்ச பொடவதான. வெள்ள-நூலு பொருத்தமா இருக்கும். ஒண்ணும் வித்தியாசம் தெரியாதுமா...’
‘ம்ஹும் வேணாம் வேணாம்’
‘தச்ச பின்னாடி நீங்க வேணா பாருங்கம்மா. ஒரு வித்தியாசம் தெரியாது’
‘எர-நூறுரூபா பொடவைங்க. வெள்ள-நூலு அசிங்கமா தெரியும். வேணாம். குடுத்துருங்க’
‘தெரியாதும்மா. சொன்னா நம்பமாட்றிங்களே’
‘வேணாம், வேணாம் குடுத்துருங்க’
அந்தப் பெண்மணி புடவையை எப்படியாவது திரும்பப் பெற்றுவிடுவதில் குறியாய் புடவைமேல் கையை வைத்தபடி பேசியதில் ராஜாராமனுக்கு வருத்தமாய் இருந்தது. காலை நேரத்தில் வருகிற முதல் வருமானத்தை இழந்து விட மனசு ஒப்பவில்லை. நிச்சயம் ஒரு ரூபாய் கிடைக்கும். ஒரு வேளை துரதிர்ஷ்டவசமாய் இந்தநாள் முழுக்கவே எந்த வேலையுமே இல்லாமல் போனாலும் கூட கமலாவைச் சமாதானப்படுத்தவாவது இந்த ரூபாய் உபகாரமாய் இருக்குமே என்று யோசனை படர்ந்தது. இழந்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தில் மிகவும் அடங்கிய குரலில் பேசத் தொடங்கினான் ராஜாராமன்.
‘கலர்-நூலு மூணு ரூபா நாலு ரூபா விக்குதும்மா. ஒரு பொடவய ஓரம் அடிச்சா ஒரு ரூபாயோ ஒன்னார் ரூபாயோ வரும். இதுக்காக ஒரு கலர்-நூலு வாங்க முடியுமா சொல்லுங்க...’
‘எல்லா -நூலையும் பொடவையிலேவா தக்கிறிங்க. ஒரு ஓட்டு ஓட்டிட்டா மீதி ஒங்ககிட்டதான இருக்கும்?...’
‘வாஸ்தவம்தாம்மா. ஆனாலும் மீதி வேஸ்ட்டுதான’
‘அது எப்டி வேஸ்ட்டாவும். வச்சிருந்து நாள பின்ன உபயோகப்படுத்த மாட்டிங்களா...’
‘அதுவரிக்கும் வேஸ்ட்தானம்மா...’
‘சும்மா எதுக்குங்க பேச்சு? பொடவய குடுத்துருங்க. நா வேற எடத்துல தச்சிக்கறன்’
திடமாய் அந்தப் பெண் பேசிய தொனி கொஞ்சம் பயம் தருகிற மாதிரியே இருந்தது. போதாக் குறைச்சலுக்கு கடைச்சந்து வழியே செட்டியார் வேறு சம்பாஷணையை உன்னிப்பாய்க் கேட்டபடி இந்தப்பக்கம் பார்த்துக் கொண்டிருந்தது அவமான உணர்வாய் இருந்தது.
‘கலர் -நூலால்தானம்மா தச்சிதரணும் கொஞ்சம் இருங்க. ஒங்க இஷ்டத்தையும் எதுக்கு கெடுக்கணும். இதோ வாங்கியாந்துர்றன்...’
‘நேரமாவும்னா வேணாம். நா போறேன்’
‘ஆச்சு, த இங்க எதுத்தாலப்தா கட. தும்மல் போடற நேரத்துல போய் வந்துருவன். நீங்க அப்பிடியே ஒக்காருங்க...’
எதிர்த்தாற்போல் ஸ்டுலைக் காட்டி உட்காரச் சொல்லிவிட்டு கடையிலிருந்து இறங்கிய ராஜாராமனுக்கு எதிரில் பஸ் வருவது தெரியாமல் நடுரோட்டில் போய் நின்று சடன்பிரேக் போட்ட டிரைவரிடம் திட்டு வாங்கிக்கொண்டு எதிரே தெய்வநாயகம் நடைக்குள் நுழைந்து நின்றான்.
‘இன்னா ராஜாராமா இப்பிடி ஓடியாற? ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிருந்தா இன்னா பண்ணுவ. மொதல்ல இந்த கண்ணப்போயி ஆஸ்பத்திரில காட்டுன்னு நானும் ஆயிரம்தரம் சொல்லிட்டன். நாங்கல்லாம் சொன்னா கேப்பியா...’
‘கேட்டா போச்சி தெய்வநாயகம். இப்ப ஒரு உபகாரம்’
‘இன்னாது’
‘கடைல ஒரு கிராக்கி. பொடவ ஓரம் அடிக்கணும். மஞ்ச -நூலாலதா அடிக்கணும்னு ஒரு புடிவாதம். எங்கிட்ட வெள்ளைய தவிர வேற எதுவும் இல்ல. ஒங்கிட்ட மஞ்ச- நூலு இருந்தா கொஞ்சம் தரியா...’
‘வெறும் ஓரம்தான. ஜாக்கெட் கீக்கட்டுன்னு ஒன்னும் இல்லயே...’
‘இல்ல தெய்வநாயகம். வெறும் ஓரம்தா...’
‘தப்பா எடுத்துக்காத ராஜாராமா. எதுக்குச் சொல்றன்னா அப்பன் புள்ளயா இருந்தா கூட வாயும் வயிறம் வேற வேறம்பாங்க. நாலு ரூபா கொடுத்துதா நானும் வாங்கறன். எனக்கும் நஷ்டமாய்டக் கூடாது பாரு. அதுக்காகச் சொல்றன்.’
‘எங்கிட்டயும் இல்லாத கொறதா தெய்வநாயகம்’
‘இந்தா’
-நூலை எடுத்துக் கொண்டு உற்றுஉற்று நிதானமாய்ப் பார்த்து பாதையைக் கடந்து கடைக்குள் வந்து உட்கார்ந்தான். மஞ்சள் -நூலை மாட்டி படாதபாடுபட்டு ஊசிக்குள் -நூலைக் கோர்த்தான். நிதானமாய்த் தைக்க ஆரம்பித்தான். உருட்டி மடிப்பில் சரியாய் முள் இறங்க வேண்டுமே என்றும், நடுவில் கண்ணில் மசமசப்பு தட்டி தையல் கோணல்மாணலாய்ப் போய்விடக் கூடாதே என்றும், கவலையாகவும் பயமாகவும் இருந்தது. ஒரு பெண்ணை முன்னால் நிற்க வைத்துக் கொண்டு தன் பலவீனத்தை வெளிப்படுத்திவிடக்கூடாதே என்றும் கூச்சமாய் இருந்தது.
‘எங்கனாச்சிம் போய் வரதுன்னா போய்வாங்களேன் முடிச்சி வய்க்கறன்...’
‘இல்ல இருந்தே வாங்கிப்போறன்’
அப்புறம் ஒன்னும் பேசாமல் சில நிமிஷங்கள் உன்னிப்பாய் தைத்து முடித்து புடவையை உதறி மடித்தவன் அந்தப்பெண் கொடுத்த காகிதப் பைக்குள்ளே கச்சிதமாய் போட்டு மடித்து நீட்டினான். வாங்கிக் கொண்ட பெண்மணி ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து மிஷின் பலகை மேலே வைத்தாள்.
‘இன்னம் எட்டணா இருந்தா குடுங்கம்மா...’
‘ஓரம் அடிக்கறதுக்கு ஒரு ரூபாதான...’
‘வெள்ள-நூலா இருந்தா பரவால்ல. கலர்-நூலு போட்டு தச்சா கூட குடுக்கணும்மா...’
‘நா எப்பவும் ஒரு ரூபாதா குடுக்கற பழக்கம்’
‘எர-நூறுரூபா போட்டு பொடவை எடுக்கறீங்க. ஒரு தையிக்காரனுக்கு எட்டணா தரக்கூடாதா?
வேண்டாவெறுப்பாய் இன்னும் ஒரு எட்டணாவை எடுத்து பலகையின்மேலே வைத்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் அந்தப் பெண் விடுவிடு என்று நடந்தாள்.
பணத்தை எடுத்து பையில் போட்டுக் கொண்டு ராஜாராமன் மிஷினிலிருந்து கலர்-நூலை மீண்டும் கழற்றி தெய்வநாயகம் கடைக்குப் போய்க் கொடுத்தான். இந்த தரம் பாதையைக் கடக்கும்போது இரண்டு பக்கங்களையும் சரியாய்ப் பார்த்தபடி கடந்தான்.
‘இன்னா ராஜாராமா, குடுத்துட்டு பேச்சு மூச்சில்லாம நழுவற’
‘சொல்லு தெய்வநாயகம்’
‘-நூலு வேணும்னா உரிமையா கேக்கறியே? உரிமையா ஒரு டீ வாங்கித்தரக் கூடாதா...’
ராஜாராமனுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. ஒரு நிமிடம் வாயடைந்து நின்றான். உடம்பெல்லாம் ஒரு கூச்ச உணர்வு வெட்டி அடித்தது.
‘சரி வா, தெய்வநாயகம்’
‘எங்க’
‘டீ குடிக்க’
‘சீசீசீ, சும்மா கிண்டலுக்கு சொன்னன் ராஜாராமா. நெஜமாவே வாங்கக் கௌம்பிட்டியா...’
‘நெஜமாத்தா தெய்வநாயகம். குடிக்கலாம் வா...’
கோபாலகிருஷ்ணன் கடை வரைக்கும் சென்று டீ குடித்தார்கள். கடையை விட்டு கிளம்பும் போதே கண்ணுக்குள் மசமசவென்று ஒரு திரை விழுகிறமாதிரி இருந்தது. உடம்பில் சாட்டையடி விழுகிறமாதிரி ஒரு அசதி கவ்வியது. தெய்வநாயகத்தோடு நெருங்கிப் பேசுகிறமாதிரி பக்கத்திலேயே ஒட்டி நடந்தபடி கடைக்கு வந்தான் ராஜாராமன். சட்டைப்பைக்குள் இருந்த எட்டணாவைத் தடவிப்பார்த்துக் கொண்டான். ஒரு நொடி நேரத்துக்கு கமலாவின் ஞாபகம் வந்தது.
-தூக்கம் மறுபடியும் மறுபடியும் கண்ணை வந்து அழுத்த படுத்தலில் விருப்பம் இல்லாமல் இரண்டு மூன்றுதரம் முகம் கழுவிக்கொண்டு வந்து உட்கார்ந்தான். கமலாவை மனசுக்குள் நினைத்த போது பாவமாய் இருந்தது. கடைப்பையன் எப்படியும் சாப்பாட்டு வேளையில் ஒரு கிராக்கியையாவது பிடித்து வருவான் என்று தனக்கும் மனசுக்குள் இருந்த கமலாவுக்கும் நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டான். பொங்கும் -தூக்கத்தையும், உடல் வலியையும் தவிர்க்க பக்கத்தில் செட்டியாரோடு அரசியல் பேசினான்.
சாப்பாட்டு நேரத்துக்கு கொஞ்சம் முன்னால்தான் கடைப்பையன் வந்தான்.
‘இன்னடா வெறுங்கையோட வர’
‘ஒண்ணும் கெடைக்கலண்ணே’
‘எல்லாக் கடைங்களையும் பார்த்தியாடா...?’
‘ம்ண்ணே’
‘ஒலகத்துல யாருமாடா இன்னிக்குத் துணி எடுக்கல’
‘எடுக்கறாங்கண்ணே. நா கூப்படறதுக்குத்தா யாரும் வரல’ ‘இன்னிக்கு கெடைக்கும்னு சொன்னியேடா...’ ‘கெடைக்குமண்ணே. மத்யானத்துக்கு மேல கண்டிப்பா கெடைக்கும்’
கொஞ்ச நேரம் அமைதியாய்க் கழிந்தது. கண்ணுக்குள் ஏதோ பூச்சி ஊர்கிறமாதிரி உறுத்தலில் மூடி மூடித் திறந்தான். வயிறு வேறு பசித்தது.
‘சரி போய் சாப்ட்டு வரியாடா...’
‘ம்ண்ணே’
‘அப்படியே நம்மூட்ல அண்ணிகிட்டபோயி ஏதாச்சிம் கூழு கீழு இருந்தா குடிக்க கேட்டார்னு கேட்டு வாங்கியாறியா?’
‘சரிண்ணே’
‘கேளு. குடுத்தா பாரு. இல்லன்னா பரவால்ல. வந்துரு...’
‘சரிண்ணே’
கீழே இறங்கி நடக்கத் தொடங்கிய பையனை அவசரமாய் மீண்டும் கூப்பிட்டான் ராஜாராமன். மீண்டும் வந்து மிஷின் முன்னால் நின்றான் பையன்.
‘இன்னிக்கும் -தூக்கம்தானாடா ஒங்க மொதலாளிக்குன்னு அண்ணி கேட்டா இல்லன்னு சொல்லு. வேல கூட எதுவும் வரலன்னு சொல்லாத. ஏதோ ஒண்ணு வந்திச்சி செய்றாருன்னு சொல்லு, புரிதா. சாயங்காலத்துக்குள்ள ஏதாச்சிம் கெடைக்காதா இன்னா பாப்பமே’
‘சரிண்ணே’
சின்னப் பையன் இறங்கிப்போன சிறிது நேரத்துக்குள்ளேயே பசியின் கிறக்கத்திலும் உடம்பு வலியிலும் அதிக நேரம் உட்கார முடியாமல் எழுந்து போய் துணி வெட்டும் மேசையில் ஏறி ஒருக்களித்துப் படுத்தான் ராஜாராமன். கண்களை மூடிக் கொண்டதும் லேசாய் உறுத்தல் தணிய ஆசுவாசமாய் உணர்ந்தான்.
(பிரசுரமாகாதது -1988)