தினத்தந்தி நாளேட்டில் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளரான ஐ.சண்முகநாதன் தனது 90வது வயதில் 03.05.2024 அன்று இயற்கையெய்தினார். பதினெட்டு வயதில் தினத்தந்தி அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த சண்முகநாதனை, வழக்கமான பணிநிறைவுக்காலத்துக்குப் பிறகு அவருடைய இறுதிக்காலம் வரைக்கும் தினத்தந்தி நிர்வாகம் தன் குழுமத்தில் ஒருவராகவே மதிப்புடன் வைத்திருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிற மாநிலங்களில் கூட இப்படி பத்திரிகையாசிரியர் ஒருவரை ஒரு பத்திரிகை நிறுவனம் கொண்டாடியிருக்குமா என்பது ஐயத்துக்குரிய செய்திதான். அந்த அளவுக்கு நிறுவனத்தின் மீது பற்றுள்ளவராக சண்முகநாதனும் அவர்மீது பற்றுள்ளவர்களாக நிறுவனத்தினரும் நடந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு விதையை மண்ணில் ஊன்றி முளைக்கவைத்து, செடியாக்கி, மரமாக்கி, ஓங்கி உயர்ந்து நிற்கவைப்பதுபோல தினத்தந்தியின் திருச்சி பதிப்பை மக்கள் நெஞ்சில் நிலைநிறுத்திவர் சண்முகநாதன்.
சண்முகநாதன் தன் இறுதிக்காலத்தில் தினத்தந்தி
கால அனுபவங்களைத் தொகுத்து ஒரு நூலாக எழுதும் எண்ணம் கொண்டிருக்கவேண்டும். அதன் விளைவாக
ஒரு சில கட்டுரைகளை எழுதத் தொடங்கியிருக்கிறார். ’உலக வரலாற்றுக் களஞ்சியம்’, ‘வரலாற்றுச்சுவடுகள்’ ‘ஒரு தமிழன் பார்வையில் இருபதாம் நூற்றாண்டு வரலாறு’
என அவரே இதற்குமுன் எழுதிய நூல்களின் வரிசையில் அமையும் வகையில் அந்த அனுபவக்குறிப்புகளையும்
நூலாக்க வேண்டும் என்றொரு திட்டம் அவருடைய
மனத்தில் தோன்றியிருக்கலாம். கெடுவாய்ப்பாக, இருபத்தைந்து அத்தியாயங்களுக்குப் பிறகு அவரால் எழுத முடியாதபடி அவருடைய ஆயுட்காலம்
முடிந்துவிட்டது. ஒருவேளை, ஒருசில ஆண்டுகளுக்கு முன்பே இந்த முயற்சியை அவர் தொடங்கியிருந்தால்,
அவருடைய தன்வரலாறும் தினத்தந்தியின் திருச்சி பதிப்பின் வரலாறும் இணைந்த ஒரு தொகைநூல்
தமிழுக்குக் கிடைத்திருக்கக்கூடும்.
அந்தக் கனவு நிறைவேறவில்லை. இருப்பினும், அதுவரை அவர் எழுதி வைத்த குறிப்புகளை
மட்டும் தொகுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தழல் பதிப்பகம் வைரமுத்துவின்
முன்னுரையுடன் ஒரு சிறு நூலாக இப்போது கொண்டுவந்துள்ளது. சண்முகநாதனுடைய அனுபவக்குறிப்புகளும்
சமூகச்செய்திகளும் இணைந்திருப்பதால், இந்நூலுக்கு இயல்பாகவே ஓர் ஆவணத்தன்மை அமைந்திருக்கிறது.
1953ஆம் ஆண்டில் மே மாதத்தில் எஸ்.எஸ்.எல்.சி.
தேர்வில் வெற்றி பெற்றார் சண்முகநாதன். அப்போது அவருக்கு பதினெட்டு வயது. அவருடைய தந்தையார்
திருச்சி நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் நிலையத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றி
ஓய்வு பெற்றவர். முப்பதாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவரின் மகன் என்கிற முறையில்
அவருக்கு நகராட்சி அலுவலகத்திலேயே எழுத்தர் வேலையை அளிக்க நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்திருந்தது.
இன்னும் ஒரு பத்துநாள் கழித்தால், வேலைக்கான ஆணைக்கடிதம் வந்துவிடும் என்னும் நிலையில்
தினத்தந்தி பத்திரிகைக்குத் துணையாசிரியர் தேவை என இந்து நாளிதழில் ஒரு விளம்பரம் வந்திருந்தது.
சண்முகநாதனின் நண்பர் அந்த விளம்பரத்தாளைக் கொண்டுவந்து அவரிடம் காட்டினார். அந்த விளம்பரம்
அவருடைய வாழ்வின் திசையையே மாற்றிவிட்டது.
எழுத்தாளனாகும் ஆசையில் சிறுகதை, கட்டுரை,
துணுக்கு என எல்லா வகைமையிலும் ஒற்றை ஆளாகவே எழுதிக் குவித்து வெண்ணிலா என்ற பெயரில்
கையெழுத்துப் பத்திரிகையை ஏற்கனவே நடத்திவந்த சண்முகநாதனுக்கு நண்பர் காட்டிய செய்தி
தேன்போல இனித்தது. உடனே முதல் வேலையாக, தன்னைப்பற்றிய எல்லா விவரங்களையும் குறிப்பிட்டு
இரண்டு பக்கத்துக்கு நீண்ட ஒரு விண்ணப்பத்தை எழுதி தினத்தந்தி அலுவலகத்துக்கு அஞ்சலில்
சேர்த்தார்.
ஒரு வார இடைவெளியிலேயே தினத்தந்தி அலுவலகத்திலிருந்து
அவருக்கு ஒரு கடிதம் வந்தது. நேர்காணலுக்கான
நேரமும் தேதியும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.
சென்னை, மதுரை நகரங்களைத் தொடர்ந்து திருச்சியில் ஒரு பதிப்பைத் தொடங்க நினைத்திருந்தது
தினத்தந்தி நிர்வாகம். ஏற்கனவே தினத்தூது என்னும் பெயரில் ஒரு செய்தித்தாளை நடத்தி
பத்திரிகைத்தாள் கட்டுப்பாட்டின் காரணமாக நிறுத்தியிருந்தார்கள். அதைப் புதுப்பிப்பதற்குப்
பதிலாக, தினத்தந்தி என்னும் பெயரிலேயே திருச்சியிலிருந்து பத்திரிகையை வெளியிடுவதற்கான
ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
நிரந்தரமான ஓர் அரசு வேலை கிடைக்கவிருக்கும்
நேரத்தில் இப்படி நிரந்தரமற்ற பத்திரிகைத்துறை வேலைக்கு அவர் செல்ல விரும்புவதை, முதலில்
அவருடைய குடும்பம் ஏற்க மறுத்தது. ஆயினும்
எழுத்துமுயற்சிகள் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக, அனுமதி அளித்தது.
நேர்காணலின் இறுதிச்சுற்றுக்கு சி.பா.ஆதித்தனாரே நேரில் வந்திருந்தார். சண்முகநாதனுடைய சுறுசுறுப்பையும் நேர்நிலை சிந்தனைகளையும்
எழுத்தாளுமையையும் அறிந்த சி.பா.ஆதித்தனார் நேர்காணலுக்கு வந்திருந்த பத்து பேரில்
அவருக்கே வேலை கிடைக்கும்படி செய்தார். திருச்சி பதிப்பு தொடங்கும் வரைக்கும் காத்திருக்காமல்,
சில மாதங்கள் சென்னைக்குச் சென்று பணிபுரிந்து அனுபவம் பெறுமாறு சொல்லிவிட்டுச் சென்றார்.
அன்று தொடங்கிய எழுத்துப்பணியை சண்முகநாதன் இறுதி மூச்சுள்ள வரைக்கும் செய்துகொண்டே
இருந்தார்.
பள்ளிக்கால நினைவுகளுக்குப் பதிலாக,
பள்ளிக்காலத்தில் சமூகத்தில் நடைபெற்ற முக்கியமான நிகழ்ச்சிகளைப்பற்றி கேட்டறிந்த தகவல்களை
மையப்படுத்தி, ஒரு பத்திரிகையாசிரியருக்கே உரிய நேர்த்தியோடு சில கட்டுரைகளை எழுதியிருக்கிறார்
சண்முகநாதன். முதல் கட்டுரையே இந்தியா சுதந்திரம் பெற்ற தினத்தில் நாடு எப்படி இருந்தது
என்பதைப் பற்றியது. ஒரு செய்திச்சித்திரம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சரியான
எடுத்துக்காட்டு இக்கட்டுரை. வசீகரமான நடையில் சுருக்கமும் எளிமையும் கொண்ட படைப்பு.
பாகிஸ்தானின் தந்தையாக ஜின்னா எப்படி
உருவானார் என்பதையும் ஜின்னா வாழ்வில் சந்தித்த துயரார்ந்த நிகழ்ச்சியொன்றையும் விவரிக்கும்
கட்டுரையொன்றும் இத்தொகுதியில் உள்ளது. மனைவியை இழந்த ஜின்னா தன் நாற்பத்துமூன்றாம்
வயதில் ரூட்டி என்னும் பெயருடைய பதினெட்டு வயது இளம்பெண்ணை மணந்துகொண்டார். அவர்களுக்கு
ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த வாழ்க்கை நீடிக்கவில்லை. பத்து ஆண்டுகளிலேயே
அவர்கள் பிரிந்துபோனார்கள். அடுத்த ஓராண்டுக்குப் பிறகு விடுதியில் அறையெடுத்துத் தங்கியிருந்த
ரூட்டி மரணமடைந்தார். அன்று அவருடைய இருபத்தொன்பதாவது பிறந்தநாள். தில்லியில் இருந்த
ஜின்னா செய்தி கிடைத்ததும் ரூட்டியைப் பார்ப்பதற்காக பம்பாய்க்கு வந்தார். தனிநாடு
என்னும் கோரிக்கையில் உறுதியான நிலைபாடு கொண்டிருந்த ஜின்னா, ரூட்டியின் உடல்பெட்டியைப்
பார்த்து தேம்பித்தேம்பி அழுதார்.
இருபதாண்டுகளுக்குப் பிறகு 1947இல்
ஜின்னாவுடைய உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர் சயரோக நோய்க்குரிய அடையாளங்களைக் கண்டுபிடித்து
உடனடியாக அவரை மருத்துவமனையில் சேருமாறு அறிவுரை வழங்கினார். ஆனால் ஜின்னா அந்த அறிவுரையைப்
பொருட்படுத்தவில்லை. ’எங்கோ ஒரு சயரோக ஆஸ்பத்திரியில்
நோயாளியாகக் கிடந்து சாவதைவிட, பாகிஸ்தான் கோரிக்கைகாகப் போராடி சாவதையே விரும்புகிறேன்’
என்று சொல்லிவிட்டார். அவர் சொன்னதைப்போலவே அவர் தன் மரணத்துக்கு முன்னால் பாகிஸ்தானை
அடைந்துவிட்டார். அடுத்த ஓராண்டிலேயே அவரும் மறைந்தார்.
சுதந்திரம் பெற்ற சமயத்தில் திருச்சி
இருந்த நிலையை ஒரு சொல்லோவியமாக ஒரு கட்டுரையில் தீட்டிக் காட்டியிருக்கிறார் சண்முகநாதன்.
திருச்சியில் அப்போதே விமான நிலையம் இருந்திருக்கிறது. திருச்சிக்கும் சென்னைக்கும்
இடையில் தினமும் விமானப் போக்குவரத்தும் நிகழ்ந்திருக்கிறது. விமானம் வானத்திலிருந்து
இறங்குவதையும் ஏறுவதையும் பார்ப்பது மிகப்பெரிய வேடிக்கையாக அமைந்திருக்கிறது. அதைப்
பார்ப்பதற்காக பள்ளி மாணவர்களை ஒரு சுற்றுலா போல ஆசிரியர்கள் அழைத்துச் சென்று காட்டியிருக்கிறார்கள்.
சண்முகநாதன் அந்த அனுபவத்தை மிகவும் சுவையோடு விவரித்திருக்கிறார்.
ஜெமினி நிறுவனம் நடத்திய ஒரு போட்டி
பற்றிய ஒரு தகவலை பிறிதொரு கட்டுரையில் சுவாரசியத்தோடு
குறிப்பிட்டிருக்கிறார் சண்முகநாதன். ஜெமினி நிறுவனத்தின் வெளியீடாக 1942இல் நந்தனார்
என்னும் திரைப்படம் வெளியானது. இதில் தண்டபானி தேசிகர் நந்தனாராக வேடம் தாங்கி, படம்
முழுதும் நான்குமுழத் துண்டையே வேட்டியாக அணிந்துகொண்டு நடித்தார். அப்படத்தில் ஏராளமான
பாடல்கள் அமைந்திருந்தன. ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக, மிகச்சிறந்த மூன்று பாடல்களைத் தேர்ந்தெடுக்க ஒரு போட்டியை அறிவித்தது
ஜெமினி நிறுவனம்.
திரைப்பட அரங்கில் நுழைவுச்சீட்டு கொடுக்கும்போதே,
ஒரு கூப்பனையும் இணைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கூப்பனில் பாடல்களின்
முதல் வரிகள் அச்சிடப்பட்டிருக்கும். ரசிகர்கள் படத்தைப் பார்த்து முடித்த பிறகு தமக்குப்
பிடித்த பாடல்களை அந்தக் கூப்பனில் அடையாளக்குறியிட்டு
வைக்கவேண்டும். பின்பு அந்தக் கூப்பனை அங்கிருந்த ஒரு பெட்டியில் போட்டுவிடவேண்டும்.
இப்படி தமிழ்நாட்டில் நந்தனார் திரையிடப்பட்ட எல்லாத் திரையரங்குகளிலிருந்தும் கூப்பன்கள்
நிறைந்த பெட்டிகள் வரவழைக்கப்பட்டன். பிறகு நடுவர்கள் முன்னிலையில் அவற்றைக் கலந்து
குலுக்கி, மூன்று கூப்பன்கள் எடுக்கப்பட்டன. அவற்றை எழுதியவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சென்னை விழாவில் கலந்துகொண்டு பரிசைப் பெற்றுக்கொண்டு திரும்பினர்.
திருச்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டதும்,
பத்திரிகைக்காக தான் எழுதிய முதல் செய்தி பற்றிய சண்முகநாதனின் கட்டுரையும் சுவாரசியமானது.
15.07.1953 அன்று தி.மு.க. ஒரு போராட்டத்தை அறிவித்திருந்தது. தி.மு.க. தலைவர்களில்
ஒருவரான கலைஞர் மு.கருணாநிதி , டால்மியாபுரம் என்னும் பெயரை கல்லக்குடி என மாற்றவேண்டும்
என்ற கோரிக்கையோடு ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து மறியல் செய்தார். காவல்துறையினர்
அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவருக்கு ஆறுமாதம் காவல்தண்டனை கிடைத்தது.
அவரோடு சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை
வெவ்வேறு வகையான காவல்தண்டனை கிடைத்தது.
தண்டனைக்காலம் முடிந்து முதலில் விடுதலை
பெற்று வந்தவரை ஒரு நிரூபர் சந்தித்து ஒரு நேர்காணலை எடுத்துக்கொண்டு வந்தார். கருணாநிதி
விடுதலை பெற்று வெளிவந்ததும் பெயர்மாற்றம் பெறும் வரை மீண்டும் போராட்டம் தொடரும் என்று
அத்தொண்டர் கூறினார். அதுதான் செய்தியின் சாரம். அந்த நிரூபர் எழுதிக் கொண்டுவந்த செய்தியை,
செய்திகுழுவின் ஆசிரியர் சண்முகநாதனிடம் கொடுத்து அச்செய்தியை விறுவிறுப்பான நடையில் எழுதுமாறு கூறினார். ஒன்றுக்கு இரண்டுமுறையாக அச்செய்தியைப்
படித்த சண்முகநாதன் ‘கருணாநிதி சும்மா இருக்கமாட்டார் ! மீண்டும் போர்க்களம் புகுவார்
!! விடுதலை அடைந்த தொண்டர் பேட்டி’ என்று தலைப்பு கொடுத்து அதற்கு ஏற்றவகையில் செய்தியையும்
மெருகுபடுத்திக் கொடுத்தார். செய்தி ஆசிரியருக்கு அவர் அமைத்திருந்த செய்தி முறைமை
மிகவும் பிடித்திருந்தது. மனம்திறந்து பாராட்டிவிட்டு, எந்த மாற்றமும் செய்யாமல் அச்செய்தியை
அப்படியே அச்சுக்கு அனுப்பிவைத்தார். செய்திகளைச் சுவையாக எழுதவேண்டும் என்பதுதான்
பத்திரிகையின் பாலபாடம். அது சண்முகநாதனுக்கு இயல்பாகவே கைவந்த கலையாக இருந்தது.
சென்னை அலுவலகத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த
நிலையில் மதுரை அலுவலகத்துக்குச் செல்லவேண்டிய ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. நிர்வாகத்தின்
நெருக்கடியைப் புரிந்துகொண்டு சண்முகநாதனும் மதுரைக்குச் சென்று பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.
அங்கு இருவர் பகிர்ந்துகொள்ளும் ஒரு அறையில் வாடகைக்குத் தங்கினார். ஒரு மாத வாடகை
பதினைந்து ரூபாய். அப்போது அவருக்குச் சம்பளம் எண்பது ரூபாய். வாடகைக்கும் உணவுக்கும்
45 ரூபாய் போக 35 ரூபாய் மிஞ்சியது. கைச்செலவுக்கு 15 ரூபாயை எடுத்துக்கொண்டு இருபது
ரூபாயை தன் அப்பாவுக்கு அனுப்பிவைத்தார். முதல் மணியார்டரைப் பெற்றுக்கொண்ட அப்பா தன்
மகனுக்கு “உனக்காக உன் அம்மாதான் மிகவும் பாடுபட்டிருக்கிறார். அதனால் இனிமேல் அனுப்பும்
மணியார்டர்களை அவர் பெயருக்கே அனுப்பவும்” என அன்றே ஒரு கடிதம் எழுதினார். அப்போது
ஒரு பவுன் விலை ஐம்பது ரூபாய் என்று போகிறபோக்கில் குறிப்பிட்டிருக்கிறார் சண்முகநாதன்.
ஒரு பவுன் ஐம்பதாயிரத்துக்கும் மேல் விற்கிற இன்று இந்தச் சித்திரம் அளிக்கும் உணர்வை
விவரிக்க சொற்களில்லை.
திருச்சி பதிப்புக்கு சண்முகநாதன் பொறுப்பேற்றுக்கொண்ட
சில மாதங்களிலேயே 24.11.1956 அன்று அரியலூர் ரயில் விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து நான்கு
நாட்கள் பெய்த மழையின் விளைவாக ரயில் பாலத்தில் அடியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
அதிகாலை ஐந்தரை மணியளவில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்லும் தூத்துக்குடி
எக்ஸ்பிரஸ் சென்றபோது பாலம் திடீரென இடிந்து விழுந்தது. ரயில் எஞ்சினும் 67 பெட்டிகளும்
ஆற்றுக்குள் விழுந்து மூழ்கின. 250க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துவிட்டனர். தொலைபேசி
வழியாக செய்தியை அறிந்துகொண்ட சண்முகநாதன் அவசரமாக அலுவலகத்துக்கு ஓடினார். பத்திரிகைகள்
தமக்கென தனி போட்டாகிராபர்களை வைத்துக்கொள்ளாத காலம் அது. அலுவலகத்துக்கு அருகிலேயே
இருந்த ஒரு போட்டா ஸ்டுடியோவுக்கு ஓடி அதன் உரிமையாளரை எழுப்பி செய்தியைத் தெரிவித்தார். ஒரு டாக்சியில் அவரையும் நிரூபரையும் விபத்து நடைபெற்ற
பகுதிக்கு அனுப்பிவைத்தார். நண்பகல் வாக்கில் அவர்கள் திரும்பி வந்தனர். அதற்குள் விரிவான
செய்தி எழுதப்பட்டு தயாராக இருந்தது. அச்சிட்டுக் கொடுத்த படங்களைப் பார்த்ததும் அனைவரும்
கண்ணீர் விட்டு அழுதனர். ஒரு செட் படங்கள் விமானம் வழியாக சென்னைக்குச் சென்றன. இன்னொரு
செட் படங்கள் பேருந்து வழியாக மதுரைக்குச் சென்றன. மறுநாள் காலையில் தினத்தந்தியின்
எல்லாப் பதிப்புகளிலும் ரயில்விபத்துச் செய்தி படங்களுடன் பிரசுரமானது. ஒரு வரலாற்றுத்தருணத்தின்
விவரணை எத்தனை சுருக்கமாகச் சொல்லப்பட்டபோதும் ஆழ்மனத்தில் உருவாகும் விளைவுகள் ஒருபோதும்
குறைவதில்லை.
கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியையும்
அக்காலத்தில் தினத்தந்தி பத்திரிகையில்தான் முதன்முதலாக வெளியானது. அந்தப் பின்னணியை
சண்முகநாதன் விரிவாகவே ஒரு கட்டுரையில் பகிர்ந்திருக்கிறார். 22.11.1963 அன்று அந்தச்
சம்பவம் நடைபெற்றது. வழக்கமாக எழுத்து வேலையும் வடிவமைக்கும் வேலையும் முடிந்து அச்சுக்கூடத்துக்குச்
சென்ற பிறகு எல்லோரும் வீட்டுக்குச் சென்றுவிடுவதுதான் பத்திரிகை உலகத்தின் வழக்கம்.
ஆனாலும் வேலையின் மீது கொண்ட பற்றின் காரணமாக இரவு 12 வரை அச்சிட்ட தாள் வெளியே வரும்வரை
காத்திருந்து பார்த்துவிட்டு வீட்டுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் சண்முகநாதன்.
அன்றும் அப்படித்தான் அச்சுக்கூடத்தில்
வேலை நடந்துகொண்டிருக்க, தன் அறையில் காத்திருந்தார் சண்முகநாதன். எதிர்பாராத விதமாக
பி.டி.ஐ. செய்திக்குரிய எந்திரம் மணியோசையை எழுப்பி இயங்கத் தொடங்கியது. ஏதோ ஆபத்தான
செய்தி என்பதை உணர்ந்த சண்முகநாதன் பதற்றத்துடன் அந்த எந்திரத்துக்கு அருகில் சென்று
பார்த்தார். தன் மனைவி ஜாக்குலினோடு ஊர்வலத்தில் சென்றுகொண்டிருந்த கென்னடியை தொலைவில்
இருந்து யாரோ ஒருவன் துப்பாக்கியால் சுட்டுவிட்டான். அடுத்தடுத்து ஒற்றை வரிச் செய்திகளாக
வந்துகொண்டே இருந்தன. ஆபத்தை உணர்ந்த சண்முகநாதன் அச்சிடத் தொடங்கிய செய்தித்தாள் வேலையை
நிறுத்துமாறு சொல்லிவிட்டு, எந்திரம் அளிக்கும் செய்திகளையே கவனித்தார். அதிகாலை இரண்டு
மணியளவில் கென்னடி மறைந்துவிட்ட செய்தி கிடைத்தது.
அக்கணமே ஏற்கனவே அச்சாகியிருந்த தலைப்புச்
செய்தியை மாற்றி கென்னடி மரணம் தொடர்பாக பொருத்தமான வாக்கியங்களை எழுதி இடம் பெறச்
செய்து அச்சுவேலையைத் தொடரச் செய்தார். அது மட்டுமன்றி, பிற கிளைகளையும் தொலைபேசி வழியாகத்
தொடர்புகொண்டு செய்தியை மாற்றும்படி சொன்னார். அதிரடியாக இப்படி செய்தி மாற்றம் செய்வதை
நிறுவனர் என்னும் முறையில் ஆதித்தனாருக்குத் தெரிவிப்பது என்பது ஒரு மரபு. ஆனால் அன்று
அவர் ரயில் பயணத்தில் இருந்ததால், அவருக்குத் தெரிவிக்க முடியாமல் போய்விட்டது.
செய்தித்தாட்கள் அச்சடிக்கப்பட்டு தமிழ்நாடெங்கும்
சென்று சேர்ந்தன. அடுத்தநாள் காலையில் கோவையில் ரயில் நிலையத்தில் இறங்கிய ஆதித்தனார்
அங்குள்ள செய்தித்தாள் விற்கும் கடையில் வாங்கிப் பார்த்த பிறகே அவருக்கு செய்தி தெரிந்தது.
உடனே கோவையில் வெளியாகும் பிற பத்திரிகைகளையும் ஆங்கில நாளேடுகளையும் வாங்கிப் பார்த்தார்.
எதிலும் அச்செய்தி இடம்பெற்றிருக்கவில்லை. தினத்தந்தியில் வெளியான செய்தி சரிதானா என்பதில்
அவருக்குக் குழப்பம் உண்டாகிவிட்டது. தொலைபேசி வழியாக அலுவலகத்துக்குத் தொடர்புகொண்டு
கேட்ட பிறகுதான் அவருக்கு உண்மை புரிந்தது.
அன்று அச்செய்தியை வெளியிடுவதில் சண்முகநாதனுக்கு
முக்கியப்பங்கு இருந்தபோதும், துப்பறியும் புனைகதைக்குரிய விறுவிறுப்போடு விவரங்களைத்
தொகுத்துச் சொல்லும் போக்கில் அவர் தன்னை முன்னிறுத்தாமல் கட்டுரையை அழகாக எழுதியிருக்கும்
பாங்கு பாராட்டுக்குரியது. அவருடைய எழுத்துமுறைக்கு அது ஓர் எடுத்துக்காட்டு.
தியாகராஜ பாகவதரை தேர்தலில் நிறுத்த
நேரு நினைத்ததும் பாகவதர் நாகரிகமாக மறுத்ததுமான நிகழ்ச்சி, வள்ளுவர் கோட்டம் உருவானதன்
பின்னணி, எழுத்தாளர் சிங்காரத்துடனான உறவு என எண்ணற்ற செய்திச்சித்திரங்கள் இத்தொகுதியில்
உள்ளன. ஒவ்வொன்றும் படிக்கப்படிக்க சுவையாக உள்ளது. சண்முகநாதனுடைய வாழ்நாள் இன்னும்
ஓரிரு ஆண்டுகள் கூடுதலாக வாய்த்திருந்தால், இன்று நூறுபக்க அளவில் வந்திருக்கும் இந்நூல்
ஆயிரம் பக்க அளவில் வந்திருக்கக்கூடும். அந்தப் பேறு நமக்குக் கிடைக்கவில்லை.
(தினத்தந்தியுடன்
எனது பயணம் : ஐ.சண்முகநாதன். தழல் பதிப்பகம், 35, அண்ணாநகர் பிளாசா, சி.47, இரண்டாவது
நிழற்சாலை, அண்ணா நகர், சென்னை – 600040. விலை. ரூ.120)
(புக்
டே, இணைய இதழ், 11.06.2024)