Home

Sunday, 16 June 2024

எண்ணற்ற நிறங்கள்

  

வெ.சாமிநாத சர்மா எழுதியஎனது பர்மா வழிநடைப்பயணம்புத்தகத்தைப் படித்துமுடித்ததும் மனம் கனத்துவிட்டது. இன்று, இரண்டாம் உலகப்போர் என்பது நம்மைப் பொறுத்தவரையில் ஒரு வரலாற்றுத்தகவல். ஆனால் போர் நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கோ உயிர்ப்பிரச்சினை. ஜப்பானிய போர்விமானங்கள் ரங்கூன் நகரத்தின் மீது குண்டுவீசித் தாக்கியபோது, அங்கே வாழ்ந்துவந்த ஏராளமான தமிழர்கள் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நகரத்தைவிட்டு உடனடியாக வெளியேறி பதுங்கு குழிகளில் வாசம் செய்தனர். பிறகு அகதிகளாக அங்கிருந்து தப்பினார்கள். ஆங்கில ஆட்சிக்கு நெருக்கமானவர்கள் விமானம் வழியாகவும் கப்பல் வழியாகவும் வெளியேற, எந்தத் தொடர்புமற்றவர்கள் நடந்தே வெளியேறினார்கள். கடுமையான குளிரில் காட்டுப்பகுதி வழியாக இரண்டு மாதம் பயணம் செய்து கல்கத்தாவுக்குள் நுழைந்தனர். அகதியோடு அகதியாக பர்மாவிலிருந்து வெளியேறியவர்களில்  வெ.சாமிநாதசர்மாவின் குடும்பமும் ஒன்று. தம் சொந்த வாழ்வனுபவத்தையே அவர் நூலாக எழுதியுள்ளார்.

படிக்கப்படிக்க ஒவ்வொரு நிகழ்ச்சியும் கண்முன்னால் நிகழ்வதுபோல இருந்தது. இனியொரு போர்க்காலம் இந்த மண்மீது எந்த நாட்டிலும் நிகழவேண்டாம் என நினைத்துக்கொண்டேன். இப்படி மனபாரம் மிகுந்து தவிக்கும்போதெல்லாம் எங்காவது நடந்துவிட்டுத் திரும்பலாம் என்று மனம் விரும்புகிறது. தொலைதூரத்தில் ஏதேனும் ஒரு கோபுரம், ஒரு மரம், ஒரு பாழடைந்த மதில் அல்லது வீடு என ஏதேனும் ஒன்றை இலக்காகக் கொண்டு போய்க்கொண்டே இருக்கவேண்டும். இறுதிக்கணத்தில் எஞ்சும் நிம்மதியுணர்வைப் பெறவே இத்தனை ஏற்பாடுகள்.

இலக்கில்லாத நடையில் நடைப்பயணத்தில் சாமிநாத சர்மா சித்தரித்த பல நிகழ்ச்சிகளை நினைத்துக்கொண்டேன். சில நிகழ்ச்சிகள் துயரம் நிரம்பியவை. சில நிகழ்ச்சிகள் மனத்தைத் தொட்டு நெகிழவைப்பவை.

தப்பித்துச் செல்லும் வழியில் டாமு என்னும் அஞ்சல் நிலையத்தில் ஒருநாள் அவர்கள் தங்க நேர்கிறது. அந்த நிலையத்தின் அதிகாரி ரங்கூனில் ஏற்கனவே பணிசெய்து வந்த காலத்தில் சர்மாவின் நண்பராக இருந்தவர். அவர் சர்மாவை அடையாளம் கண்டுபிடித்து, நல்லவிதமாகக் கவனித்துக்கொள்கிறார். இரவு உணவுக்கும் தங்குவதற்கும் தகுந்த ஏற்பாடுகளைச் செய்கிறார். ஆபத்து சூழ்ந்த காலத்தில் அஞ்சல் அதிகாரியின் குடும்பமும் இந்தியாவுக்குச் சென்றுவிடவேண்டும் என நினைக்கிறது. ஆனால் அரசு வேலை என்பதால் கணவரால் உதறிவிட்டு வரமுடியாத சூழல். அதனால் மனைவியை அழைத்துச் சென்று காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறார் கணவர். அந்தக் கோரிக்கையை ஏற்று தம் குடும்பத்தோடேயே அழைத்து வந்து காப்பாற்றுகிறார் சர்மா. போர்க்கால வேதனைகளுக்கு நடுவில் இந்த இருவருடைய முகங்களும் மிதந்து வருகின்றன.

ஒரு பெரிய அடுக்ககத்துக்கான கட்டுமான வேலை நிகழ்ந்துகொண்டிருந்த இடத்துக்கு அருகிலிருந்த சரக்கொன்றை மரத்தடியில் தானாகவே என் நடை நின்றுவிட்டது. அந்தக் கட்டுமானத்தை அண்ணாந்துதான் பார்க்கவேண்டியிருந்தது. ஏற்கனவே எட்டுத் தளங்கள் நின்றுகொண்டிருந்தன. ஒன்பதாவது தளத்துக்கு கீழேயிருந்து உருளையில் கலவையை அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

அங்கே நின்றபடி செல்வராஜ், திருச்சிற்றம்பலம், முருகேசன்,  வேல்முருகன், மோகனரங்கன், குமரவேல், சித்ரா என ஒவ்வொருவராக கைபேசியில் அழைத்து பர்மா நடைப்பயணக்கதையை விரிவாக எடுத்துச் சொல்லிவிட்டு நண்பனின் பொறுப்பில் மனைவியை நம்பிக்கையோடு அனுப்பிவைக்கும் சம்பவத்தையும் சொல்லிமுடித்தேன். அந்த நீண்ட உரையாடல்களுக்குப் பிறகுதான் மனம் சற்றே அடங்கியது.

அந்தக் கட்டுமானத்துக்கு அருகில் குன்றுபோல குவிக்கப்பட்டிருந்த மணலில் இரு சிறுவர்கள் கைகளை ஊன்றி ஊன்றி உச்சிவரைக்கும் ஏறுவதைப் பார்த்தேன். உச்சியைத் தொட்டதும் கைகளைத் தூக்கி உடலை வளைத்துவளைத்து சில கணங்கள் நடனமாடினார்கள். பிறகு உடலைத் திருப்பி உட்கார்ந்துகொண்டு காலை உந்தி ஓவென்ற ஓசையோடு சறுக்குமரத்தில் இறங்குவதுபோல இறங்கி வேகமாக தரைக்கு வந்தார்கள். பின்புறத்திலும் முதுகிலும் ஒட்டியிருந்த புழுதியையெல்லாம் துடைத்தபடி மறுபடியும் உச்சியை நோக்கி ஏறினார்கள்.

அந்தச் சிறுவர்களிடம் பேச்சுக் கொடுக்கலாம் என நினைத்த கணத்தில்மெஜஸ்டிக் எப்படி போவணும் சார்?” என்று கேள்வியோடு அருகில் நெருங்கி வந்தான் ஓர் இளைஞன். சற்றே கசங்கிய ஆடையில் அவன் மிகவும் மெலிந்து காணப்பட்டான். தலைமுடியும் கலைந்திருந்தது. அவனுக்கு அருகில் ஒரு பெண் நின்றிருந்தாள். கட்டுமானப்பகுதியில் மேல் தளத்துக்கு கலவைச்சாந்தைச் சுமந்துசெல்லும் எந்திரக்கூடையைப் பார்த்தபடி திரும்பியிருந்தாள் அவள்.

இதான் பஸ் ஸ்டாப். இங்கயே நிக்கலாம். நூத்திமுப்பத்தெட்டாம் நெம்பர் வரும். அதுல ஏறினா மெஜஸ்டிக் போயிடும்.”

அவன் உடனடியாக அதை மறுப்பதைப்போல தலையசைத்தபடியேபஸ் வேணாம் சார், நடந்தே போயிடுவோம். வழி மட்டும் சொல்லுங்கஎன்றான். அதைக் கேட்டு ஒருகணம் திகைத்துவிட்டேன். மெதுவாக அவனுக்குப் புரியும் வகையில்அது நடக்கற தூரத்துல இல்ல தம்பி. ஒரு பத்து கிலோமீட்டர் தூரம் நடந்தாதான் போய் சேரமுடியும். டிக்கட் இருபது ரூபாதான். பேசாம பஸ்லயே போயிடுஎன்றேன்.

அவன் மறுபடியும் மறுப்பதுபோலவே தலையசைத்தான். “இல்ல சார், நடந்தே போய்டுவோம். நீங்க வழி மட்டும் சொல்லுங்க. அது போதும்என்றான். தொடர்ந்து அடங்கிய குரலில்சாப்பிடக்கூட எங்க கையில காசில்லை. இதுல பஸ் டிக்கட் வாங்க எங்க போகறது?” என்று முணுமுணுத்தான். வாகன இரைச்சலில் என் காதில் அவை விழ வாய்ப்பில்லை என அவன் நினைத்திருக்கக்கூடும். ஆனால் அரையும் குறையுமாக விழுந்த சொற்களையும் உதட்டசைவையும் முகக்குறிப்புகளையும் வைத்து எஞ்சிய சொற்களை என்னால் எளிதாக ஊகித்துக்கொள்ள முடிந்தது.

நான் சட்டென்று பையிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு நெருங்கிச் சென்றுபத்து கிலோமீட்டர் நடக்கறதுலாம் நீ நினைக்கிறமாதிரி சுலபமில்லை தம்பி. இந்த பணத்த வச்சிக்கோ. பேசாம பஸ்ல போஎன்று அவன் கையைப் பற்ற முனைந்தேன். அக்கணமே அவன் ஒரு புன்னகையோடு சட்டென பின்வாங்கினான். “எங்களால நடக்கமுடியும் சார், நீங்க வழியை மட்டும் சொல்லுங்கஎன்று சொன்னபடி மீண்டும் புன்னகைத்தான்.

நான் அவன் விழிகளைப் பார்த்தேன். அதில் ஆழ்ந்த உறுதி தெரிந்தது. என்னைப் பார்ப்பதையே தவிர்த்தபடி நிற்கும் அந்தப் பெண்ணையும் கவனித்தேன். பணத்தை அளிக்கும் முயற்சியை அக்கணமே நிறுத்திவிட்டு அந்த இடத்திலிருந்து கடைசிப்புள்ளி வரைக்குமான வழியையும் அடையாளக்குறிப்புகளையும் முழு அளவில் அவனிடம் பொறுமையாக விளக்கினேன். நன்றி சொல்லிவிட்டு சிரித்தபடியே அவன் திரும்பி நடந்தான். அந்தப் பெண்ணும் அவனுக்குப் பின்னால் சென்றாள். அவர்கள் இருவருமே செருப்பு அணிந்திருக்கவில்லை என்பதை அப்போதுதான் பார்த்தேன்.

வாகன ஓட்டம் குறைந்த நேரத்தில் சாலையைக் கடந்துசென்று பேருந்து நிறுத்தத்தில் போடப்பட்டிருந்த நிழற்குடை பெஞ்சில் உட்கார்ந்தேன். சிறிது நேரம் கழித்து என்னைக் கடந்துபோன ஒருவர் பத்து பதினைந்து அடி தொலைவு சென்றபிறகு எதையோ மறந்தவர்போல மீண்டும் திரும்பிவருவதைப் பார்த்தேன். அவர் கையில் பிடித்திருந்த ஜவ்வுத்தாள் பைநிறைய மஞ்சள், சிவப்பு, நீலம், ஆரஞ்சு, வெள்ளை என பல வண்ணங்களில் டேரா பூக்கள் இருந்தன. வசீகரமான அந்த நிறங்களையே நான் கவனித்துக்கொண்டிருந்ததால் அவர் எனக்குப் பக்கத்தில் வந்து வணக்கம் சொன்னபோது நம்பமுடியாமல் இருந்தது. ஒருகணம் தாமதமாக நானும் வணக்கம் சொல்வதற்குள் அவர் இரண்டாவது முறையாக வணக்கம் சொல்லிவிட்டு புன்னகைத்தார்.

யாராக இருக்கக்கூடும் என்னும் கேள்வி, குழப்பத்தையையெல்லாம் அந்தப் புன்னகை விலக்கிவிட்டது. ”உக்காருங்க தம்பிஎன்று அவரிடம் பெஞ்சைக் காட்டினேன். அவர் அமர்ந்தபடியேஎழுத்தாளர்தான நீங்க?” என்று கேட்டார். நான் தலையசைத்ததுமேஒரு சந்தேகத்துல கேட்டுட்டேன். தப்பா எடுத்துக்காதிங்கஎன்றபடி பூப்பையை வைத்திருந்த கையை உயர்த்தி நடுநெஞ்சைத் தொட்டுக்கொண்டே சொன்னார். தொடர்ந்துஎப்படி சார் இருக்கிங்க?” என்று விசாரித்தார். அந்த விசாரிப்பில் வெளிப்பட்ட இயல்பான தன்மையையும் ஆவலையும் என்னால் உணரமுடிந்தது. பூ பையையும் தோளில் இருந்த இன்னொரு பையையும் பெஞ்சின் மீது வைத்தார்.

கொல்லிமலை கூட்டத்துலதான் உங்கள பார்த்தேன்.  வீட்டுக்கு வான்னு அட்ரஸ்லாம் எழுதி குடுத்திங்க. நாளைக்கி நாளைக்கின்னு தள்ளிப்போட்டு நாலஞ்சி வருஷங்கள் ஓடிப் போயிடுச்சி. எப்படி சார் இருக்கிங்க?” என்று மென்மையான சொற்களோடு என் கைகளைப் பற்றினார். அழுத்தமும் சூடும் நிறைந்த அவர் கை வழியாக என் உடலுக்குள் ஏதோ இறங்கிப் பரவுவதுபோல இருந்தது.

உலகப் புத்தகநாள் சமயத்துல ஒரு எழுத்தாளர பார்க்கறதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது சார். வாழ்த்துகள், வாழ்த்துகள் சார்என்றார் அவர். நானும் அவரை வாழ்த்தினேன்.

சமீபத்தில் நடந்துமுடிந்த கண்காட்சிக்குச் சென்றுவந்ததைப்பற்றி, படித்துமுடித்த நாவல்களைப்பற்றி என அவர் தடையில்லாமல் பேசினார். சட்டென பைக்குள் கைவிட்டு இரண்டு புத்தகங்களை எடுத்துபுத்தகநாள் பரிசா பிள்ளைகளுக்கு கொடுக்க வாங்கிட்டு வந்தேன். கையெழுத்து போட்டு கொடுங்க சார்என்றார். நான் பையிலிருந்து பேனாவை எடுத்தபடிபேர் சொல்லுங்க தம்பிஎன்றேன். “இளவரசி, எழிலரசிஎன்றார் அவர். ஒருசில வாழ்த்து வரிகளோடு கையெழுத்து போட்டு கொடுத்ததும் புன்னகை மாறாமல் வாங்கி பைக்குள் வைத்துக்கொண்டார். மூடிய பேனாவை சட்டென அவருடைய மேல்சட்டைப் பைக்குள் வைத்தபடிபுத்தகநாளுக்காக இது என் அன்பளிப்புஎன்று சொல்லிக்கொண்டே அவர் தோளை அழுத்தினேன்.

சம்மதம், சந்தோஷம் என்று சொல்வதற்கு அடையாளமாக அவர் தலை அசைந்தபடி இருக்க, “வரட்டுமா சார். இன்னும் ரொம்ப தூரம் நடக்கணும்என்றபடி எழுந்து விடைபெற்றுச் சென்றார். எதுவும் செய்வதற்கில்லாத ஒரு மனநிறைவில் நான் அவரையும் டேராப்பூக்களைக் கொண்ட ஜவ்வுத்தாள் பையையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.