Home

Sunday, 30 June 2024

வாழ்வின் திசைகள் - 2

 

இரண்டு

முப்பத்தாறு நாற்பத்தியேழு சீரான வேகத்தில் திருப்பதிச் சாலையில் போய்க்கொண்டிருந்தது. மடங்கி மடங்கி நிழல்கள் விழுகிற இரவில் முதுகு வளைக்காமல் ஸ்டியரிங் முன்னால் அமர்ந்து வண்டி ஓட்டுகிற தாஸின் தோரணை ஒரு ரிஷிகுமாரனைப் போல இருந்தது குமரேசனுக்கு.

இரண்டே நாள்களில் தாஸ்க்குப் பிடித்த டீ வகை, பீடி  வகை, சிகரெட் பெயர் மனப்பாடமானது. நாலைந்து நாள்களில் லாரிக்கு சரக்கு ஏற்பாடு செய்யும் கிருஷ்ணா டிரான்ஸ்போர்ட் செட்டியாரும், மங்கம்மாள் புக்கிங் ஆபீஸ் வடிவேலுவும், லோக்கல் டிரிப்ஸ் ஏற்பாடு செய்யும் மனோகரனும் நடராஜன் மேஸ்திரியும் அறிமுகமானார்கள். ஒரு வாரத்தில் வண்டி ஓடுகிற லைன் விவகாரம் சுத்தமாய்த் தெரிந்தது. இரண்டாவது வாரம் இரவுக்கண் விழிப்பில் வயிற்று வலி வந்து வேதனையாய் இருந்தது. மூன்றாவது வாரம் இரவுப் பிரயாணமும் பகல் தூக்கமும் பழகிப் போனது. நாலாவது வாரத்தில் பண விவகாரமும் பங்கின் நீக்குப் போக்குகளும் புரிந்தன. டயர்களைத் தட்டிப் பார்த்து காற்றின் இருப்பு வித்தியாசம் காண முடிந்தது. நெருக்கமான பழக்கத்தாலும் நேர்மையாலும் சேவைகளாலும் தாஸின் நம்பிக்கைக்குரிய க்ளீனரானான் குமரேசன்.

குமரேசன் முதலில் கூச்சத்தை விட்டான். டீசல் அழுக்குக்கும் புழுதி அழுக்குக்கும் உடம்பைப் பழக்கினான். டீசல் நாற்றத்தைத் தாராளமாய் இழுத்து நுரையீரலில் நிரப்பினான். ஓட்டல் பரோட்டாவையும் மாமிசத்தையும் மனசார விரும்பிச் சாப்பிட்டான். தாஸ்க்குப் பிடித்த சாராயத்தையும் காரப்பட்டாணியையும் வாங்கி வந்து கொடுத்து விட்டு வெளியில் இறங்கி வேடிக்கை பார்த்தான்.

ஏதாச்சிம் சாப்டறியாடா குமரேசா...’

வேணாம்ண்ணே. இப்பதான திருத்தணில டீ குடிச்சம்

திருத்தணி டீ இன்னமாடா வவுத்துல இருக்குது...’

கொஞ்சம் இருக்குதுண்ணே...’

கொஞ்சம்தான? புத்தூர் போவறதுக்குள்ள கரஞ்சிடும். அங்க போயி சூடா எதுனாச்சிம் சாப்படலாம்...’

ம்ண்ணே...’

சிலுசிலுவென்ற காற்று சுகமாக இருந்தது. மார்புச் சட்டையைக் கிழித்து உள்ளே புகுகிற காற்று நெளிய வைத்தது. சிதறிய நிலா வெளிச்சத்தில் மடங்கிமடங்கி விழுகிற நிழல்கள் பார்க்கக் கவர்ச்சியாய் இருந்தது. தனித்து நீண்டு கிடக்கிற சாலையில் வண்டியின் ஊர்தலே ஆச்சரியமாய் இருந்தது. வர்ணக்கோடு மாதிரி நெளிந்த தார்ப்பாதையும் கோவை இலையால் துடைத்துக் கழுவிய கரும்பலகை மாதிரியான ஆகாயமும் இரவுப் பயணத்தை இன்னும்இன்னும் சந்தோஷமாக்கியது.

பாடத் தெரியுமா குமரேசனுக்கு...’

எந்தப்பாட்டுண்ணே...’

சினிமாப்பாட்டுதா’...

கொஞ்சம் கொஞ்சம் தெரியும்ண்ணே’...

பின்ன எதுக்கு சும்மா ஒக்காந்துக்ணு வர? தூக்கம் வருதா...?’

இல்லண்ணே’...

அப்ப பாடு’...

எந்தப் பாட்டுண்ணே’...

ஏதாவது ஒனக்குப் புடிச்சதா பாடு’...

ராசாத்தி ஒன்ன...’ என்று குமரேசன் உற்சாகமாய் இழுத்துப்பாட ஆரம்பித்தான். ரெண்டு மூன்று வரிகளைப் பாடியதுமே மனசு முழுக்க முழுக்க பாடலின் உலகத்துக்குள் ஒட்டிக் கொண்டது. அடர்த்தியாய் பாதை ஓரங்களில் நிற்கும் மரங்களின் தொகுதியைப் பார்த்தபடி நல்ல பாவனை கொடுத்துப் பாட ஆரம்பித்தான். வண்டி அதிரலில் சற்றே குரல் தடுமாறினாலும் பிசிறு தட்டாமல் பாடினான்.

சபாஷ் நல்ல கொரல்டா ஒனக்கு...’

நீங்க ஒரு பாட்டு பாடுங்கண்ணே...’

நானா?’

கேக்க ஆசயா இருக்குண்ணே

பாடனா ரோட்ல கவனம் மாறிடும்டா...’

பொறுமையா பாடுங்கண்ணே...’

அரைப்பார்வையாய் குமரேசனைத் திரும்பிப் பார்த்து விட்டு மெதுவாய்ப் பாடினான் தாஸ். போனால் போகட்டும் போடா...’ என்று குரலை சோகமாக்கிப் பாடினான். அவன் குரல் மனசைப் பிழிவதாய் இருந்தது.

தூரத்தில் வெளிச்சம் புள்ளியாய் இருந்தது.

ஊரு வந்திருச்சிண்ணே...’

அதான்டா புத்தூரு. பெரிய செக்போஸ்ட். தமிழ்நாடு ஆந்திராவுக்கு நடுவுல மொதம செக்போஸ்ட் இதான். இதத்தாண்டித்தா எந்த சரக்கும் இங்கேர்ந்து அங்க போவணும். அங்கேர்ந்து இங்க வரணும். ரொம்ப கெடுபுடி.’

இதத் தாண்டிட்டா தப்பிச்ச மாதிரிதா...’

சொல்ல முடியாது. தப்பான சரக்க இங்கதான்னு இல்ல. எங்க வேணா புடிக்கலாம்.

இங்கதா முத்தர குத்தி அனுப்பிட்டாங்களே. அப்பறம் எப்படி புடிப்பாங்க...’

வண்டி நெம்பர வச்சி போன்ல இன்பர்மேஷன் போய்டும். அப்பறம் எப்படியும் எங்க இருந்தாலும் தொரத்திப் புடிச்சிடுவாங்க...’

அந்த மாதிரி கூட புடிப்பாங்களா...’

போன மாசம் கூட ஒர்த்தன பிடிச்சாங்களே. ஆந்திரா பக்கத்லேருந்து ஒர்த்தன் சந்தனக்கட்ட ஏத்தியாந்துக்னிருக்கான். உள்ள அழகா வத்தி அடுக்கற மாதிரி பாடி நடுவுல பிரமாதமா அடுக்கிட்டான். சுத்தி வெங்காய மூட்ட, வக்கப்போர் மாதிரி அடுக்கிகினு வௌச்சர்லாம் ரெடி பண்ணிக்னு வந்துட்டான். இதே செக்போஸ்ட்தா முத்திரக் குத்ததி அனுச்சிட்டாங்க. இது போனப்பறம் அரமணி நேரம் கழிச்சி போன் வருது. வண்டி நெம்பர சொல்லி வந்திருச்சான்னு கேட்டிருக்காங்க, ரெஜிஸ்டர பார்த்து இவுங்க போயி அரமணி நேரம் ஆய்டுச்சேன்னு சென்னாங்களாம். ஐயோ அதுல சந்தனம் போவுதுன்னு ஒரே கூச்சல். பத்து நிமிஷத்துல மூணு ஜீப் மூணு பக்கமும் பறக்குது. புத்தூர்லேந்து மெட்ராஸ்க்கு எத்தினி ரூட் இருக்குதோ அத்தினி ரூட்லயம் பறக்குது. வெடிய நாலுமணி இருக்கும்போது புடிச்சிட்டாங்க. வண்டி பேசின் பிரிட்ஜ் தாண்டும் போது மடக்கி இழுத்தாந்துட்டாங்க...’

ஆப்ட்டுக்னா புடிச்சி தாளிச்சிடுவாங்களா...’

டிரைவர்தான் சாவணும். கேஸ் போடுவாங்க. அடிப்பாங்க. லைசன்ஸ்ல என்ட்ரி ஆய்டும்...’

மொதலாளி மாட்ட மாட்டாரா...?’

நல்லவனாய்ருந்தா வந்து வாதாடி வழக்காடி டிரைவர் பக்கம் பேசுவான். அவனும் கெட்டவனாய்ருந்தா எனக்கும் இதுக்கும்  சம்பந்தமே இல்லன்னு சொல்லி கழட்டிக்குவான்...’

அது எப்படி கழட்டிக்குவான்...?’

ரொம்ப சுலபம். குறிப்பிட்ட வண்டி காணாம போயி ஒரு வாரம் ஆவுது, டிரைவரையும் காணம்னு எதுனாச்சிம் ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல பழய தேதில புகார் பண்ணிட்டா தீந்துரும்...’

ரெண்டு மூனு லட்ச ரூபா வண்டி போச்சின்னா நஷ்டமில்லயா...?’

மாட்டனா அதவிட ஜாஸ்தி நஷ்டமாவும். அபராதம் அது இதுன்னு தாளிச்சிடுவாங்க. நஷ்டம் ஒரு பக்கம், கடத்தல் வண்டிகாரன்னு அவமானம் ஒரு பக்கம்...’

புத்தூர் ரயில்வே கேட்டைத் தாண்டி இறக்கத்தில் வளைத்து செக் போஸ்ட்முத்திரை வாங்கி வண்டியை ஓரம் கட்டினார்கள். டயர் அடியில் கட்டை கொடுத்து நாலுபக்கமும் ஏறி கயிற்றின் இறுக்கத்தைச் சோதித்தான் குமரேசன். டயர்களைத் தட்டி காற்றைச் சோதித்துவிட்டு ஓரமாக இருந்த வாளிக்குள் ஆயில் டப்பாவை விட்டு தண்ணீர் எடுத்துக்கொண்டு இருளில் ஒதுங்கினான் தாஸ்.

குமரேசன் ஒவ்வொரு அடியாய் எடுத்துவைத்து பர பரப்பில்லாமல் பாதையின் அடுத்தபக்கம் வந்தான். சுற்றுமுற்றும் ஒரே கூச்சலாய் இருந்தது. கேஸ்லைட் விளக்கு வெளிச்சத்திலும் மின்சார விளக்கு வெளிச்சத்திலும் நிறைய இரவுக்கடைகள் இருந்தன. புலால்மணம் காற்றில் சுழன்று வந்தது. பதிவு செய்யபட்ட தெலுங்குப் பாடல்களின் ஓசை காதைக் கிழித்தது. வைக்கோல் பாரம் ஏற்றிய நாலைந்து மாட்டுவண்டிகள் தார்ச்சாலையை விட்டு மண்பகுதியில் ஊர்ந்து கொண்டிருந்தன, லாரிகளின் உறுமல் நறநறத்தது. சாப்பிட்டு ஓட்டலைவிட்டு வருபவர்கள் வெற்றிலைபாக்கு குதப்பித் துப்பினார்கள். குடித்துத் தள்ளாடிப் போகிறவனை விலகச்சொல்லி ஓயாமல் ஆரன் அடித்துக்கொண்டிருந்தது ஒரு லாரி. சத்தங்கள் பல தினுசுகளில் கூடியும் குறைந்தும் கலகலப்புண்டாக்கி இருந்தது. எந்தச் சத்தத்துக்கும் மசியாமல் ஒரு கடையின் ஓரம் இடுப்புத்துணி நழுவுவது தெரியாமல் விழுந்து கிடந்தான் ஒரு கிழவன்.

போலாமாடா...?’

ம்ண்ணே.’

தாஸும் இவனும் பக்கத்தில் இருந்த கடைக்குள் சென்றார்கள். புலால் உணவும் முட்டைக்கறியும் சாப்பிட்டார்கள். கை கழுவும்போது தான் தின்ற இறைச்சி எலும்புகளை வாரி வந்து தெருவில் நின்ற நாய்க்குப் போட்டான் குமரேசன். வெறியோடு இழுத்துக் கடித்துத் தின்றது நாய்.

குமரேசா ஒரு க்வார்ட்டர் வாங்கிக்னு வண்டிக்கு வந்துடு...’

தாஸ் நீட்டிய பணத்தை வாங்கிக் கொண்டு கடைப் பக்கம் போனான் குமரேசன். வாங்கிக்கொண்டு திரும்பியபோது வண்டியில் தாஸ் இல்லை. விலகி வந்து குமரேசன் அவனைத் தேடினான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் தெரியாமல் போக அங்கேயே தரையில் உட்கார்ந்துகொண்டு எந்தப்பக்கத்தில் இருந்தாவது வருகிறானா என்று பார்த்தான். கால் மணி நேரத்துக்குப் பிறகு கைகளை அசைத்துஅசைத்துக் கொண்டு வந்தான் தாஸ்.

இன்னாடா தேடனியா...’

இருக்கறன்னு சொன்னவர காணமேன்னு பயந்துட்டன்

நம்ம பழய தோஸ்த் ஒர்த்தன் உருளக்கெழக்கு லோடு எடுத்தும் போறான். வர்ற வழியில கெடைச்சான். அதான் பேசிக்கிட்டிருந்தன்...’

ஓஹோ...’

அது சரி வாங்கியாந்தியா...’

ம்ண்ணே...’

பேப்பரில் சுற்றிய பாட்டிலைக் கொடுத்தான் குமரேசன் கொடுத்து விட்டு தூரத்தில் பாட்டுப்பாடும் கடைக்குச் சென்றான். ஸ்டாலில் வரிசையாய் அடுக்கி வைத்த கேசட்டுகளில் இருந்த நடிகர் நடிகைகளின் சித்திரங்களையும் ஒவ்வொன்றாய் அவசரமே இல்லாமல் பார்த்தான். மீசை இல்லாத இந்தி நடிகர்களின் முக அமைப்பு அவனுக்கு சிரிப்பு தருவதாய் இருந்தது. ஒரு பக்கமாய் ஒதுங்கியே நின்றிருந்தாலும் ஒரு பெண் இவனை இடித்துக்கொண்டு உள்ளே போனாள். இவன் இன்னும் ஒதுங்கி  கையை உதறிக்கொண்டான். உள்ளே போனவள் ஒயிலாய்த் திரும்பி இவனைப் பார்த்துச் சிரித்தாள். இவன் எந்தப் பாவனையும் இல்லாமல் வண்டிக்குத் திரும்பினான். அதற்குள் தாஸ் குடித்து முடித்துவிட்டு பீடி புகைத்துக்கொண்டிருந்தான்.

கௌம்பலாமா

ம்ண்ணே...’

டயர்க்கு முட்டுக் கொடுத்த கட்டையை விலக்கி உள்ளே போட்டுக் கொண்டு ஏறி உட்கார்ந்தான் குமரேசன். வண்டியைக் கிளப்பினான் தாஸ். கியர் மாற்றி ஓரம் பார்த்து வண்டியை தார்ப்பாதைக்கு ஏற்றி மறுதரமும் கியர் மாற்றி வேகப்படுத்தினான்.

திருப்பதிக்கு இன்னம் ஒரு மணி நேரமாவுமாண்ணே.

ஒன்ற மணிநேரம் ஆவும்டா

தூரமாண்ணே

தூரம் ஒரு பக்கம் இருந்தாலும் ரோடு இனிமே சரியா இருக்காது. சிங்கிள்ரோடு அதான் கொஞ்சம் லேட்டாவும்,

தாஸின் கணக்கையும் மீறி திருப்பதியைத் தொட இரண்டு மணி நேரம் ஆயிற்று. மார்க்கெட் ஓரம் நிறுத்தி இறங்கினான் தாஸ்.

வரிசையா வௌக்குங்க மலயில எரியுது பாரு. அதான் சின்ன திருப்பதியிலேந்து பெரிய திருப்பதிக்கு போறவழி. நடந்து போரவங்களுக்குத்தா இந்த வழி. பஸ்ல போவறதுக்கு வேற வழி, லைட் அரேஞ்மெண்ட் பாக்க ஜோரா இருக்குதில்ல. கோபுரம் மாதிரி இருக்குது பாரு. அதான் காளி கோபுரம் அதத்தாண்டி ஆறுமைல் நடக்கணும் கோயிலுக்கு...’

மலை உச்சியில் தெரிந்த கோயிலைக்காட்டி குமரேசனுக்குச் சொன்னான் தாஸ். பிரமிப்போடு அண்ணாந்து பார்த்தான் குமரேசன்.

ரொம்ப ஓயரம்ண்ணே

நாளாக்கிப் போறியா

ம்ஹும்

ஏன்டா?’

வேணாம்ண்ணே. எனக்குன்னு யாரு இருக்காங்க. யாருக்குன்னு போய் வேண்டிக்கணும்...’

(தொடரும்)