இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேய அரசு வங்காள மாகாணத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு எடுத்த முயற்சி இந்திய விடுதலைப்போரில் ஒரு முக்கியமான திருப்புமுனை. விடுதலைக்காக ஆங்காங்கே உருவாகி வந்த எழுச்சிகளிடையே ஒரு குவிமையம் உருவாவதற்கு அது ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், விபின் சந்திரபால், கோகலே போன்ற மூத்த விடுதலை வீரர்கள் வரிசை அப்போதுதான் உருவானது. இந்த ஆளுமைகளை முன்மாதிரியாகக் கொண்டு தம் வாழ்க்கையை வாழ நினைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தியாவில் உருவானார்கள். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மெட்ரிகுலேஷன் படிப்பை வெற்றிகரமாக முடித்திருந்த கிருஷ்ண சுவாமி சர்மா என்னும் இளைஞரும் அவர்களில் ஒருவர்.