மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை வீட்டைவிட்டுக் கிளம்பிச் சென்று காடு, மலை, ஏரி, ஆறு என சுற்றியலைந்துவிட்டுத் திரும்பும் பழக்கமுள்ளவர் முத்துராமன். பறவைகளைத் தேடித்தேடிச் சென்று பார்ப்பதிலும் படமெடுப்பதிலும் ஆர்வமுள்ளவர் அவர். ஒவ்வொரு பயணத்திலும் அவர் எடுத்த படங்கள் ஐநூறு, அறுநூறைத் தாண்டும். அவை அனைத்தையும் ஒரு குறுந்தகடில் பதிவு செய்து அழியா மைப்பேனாவால் அதன் மீது பயணம் செய்த ஊரின் பெயர், பயணநாள், பறவையின் பெயர் என எல்லாத் தகவல்களையும் எழுதி உறையிலிட்டு வைத்துவிடுவார். என்றாவது ஒருநாள் மாலையில் அவரைச் சந்திக்கச் செல்லும் வேளையில் அந்தப் படங்களை நான் பார்ப்பதுண்டு.
அடுத்தடுத்து பறவைகளின் படங்களைத் தொடர்ச்சியாகப் பார்ப்பது என்பது பரவசமூட்டும் அனுபவம். ஒரு தொகுப்பு முழுதும் குயில்களின் படங்களைப் பார்த்து முடித்ததும் இந்த உலகமே குயில்களால் நிரம்பிவிட்டதுபோலத் தோன்றும். காதால் கேட்காத அதன் குரல் நெஞ்சில் எதிரொலித்து நிரம்பிவிட்டதுபோல இருக்கும்.
வானை நோக்கி சிறகுவிரித்துப் பறக்கும் ஒரு பறவையின் படத்தைப் பார்க்கும்போதெல்லாம், அவற்றின் சிறகோரமாக நாமும் தொத்திக்கொண்டு பறப்பதுபோன்றதொரு உணர்ச்சி எழுவதை உணர்ந்திருக்கிறேன். நம் விழிகள் பறவையின் சிறகில் பதிந்திருக்கும்போதே, நம் மனம் அச்சிறகிலேறி மேகங்களைத் தொட்டுப் பறக்கத் தொடங்கியிருக்கும்.
ஒருமுறை முத்துராமன் எனக்கு மேசைமீது வைத்துப் பார்க்கும்படியான ஒரு நாட்காட்டித் தொகுப்பை அன்பளிப்பாகக் கொடுத்தார். அவரே எடுத்த பன்னிரண்டு பறவைகளின் படங்களை சற்றே உறுதிமிக்க தாளில் அச்சிட்டுக் கோர்த்து உருவாக்கிய தொகுப்பு அது. ஒவ்வொரு படத்திலும் வலதுபக்க மூலையில் ஒவ்வொரு மாதத்தைப்பற்றிய தேதி, கிழமை விவரங்கள் அடங்கியிருந்தன.
மரங்கொத்தி, சிட்டுக்குருவி, குயில், புறா, கொக்கு போன்ற வழக்கமான பறவைகளின் படங்களுக்கு நடுவில் விசித்திரமான ஒரு பறவையின் படத்தைப் பார்த்துவிட்டு, அதன் பெயர் தெரியாமல் சில கணங்கள் தடுமாறினேன். நீண்டு மெலிந்த கால்கள். வெள்ளைவெளேரென உருட்டிவைத்த பஞ்சுப்பொதிபோல உடல். வித்தியாசமான கருத்த பட்டையான அலகுகள். ஒன்றுமீது ஒன்றாக அடுக்கப்பட்ட ஐஸ்கிரீம் கடை மரக்கரண்டிகள்போல அவை இருந்தன. ஒரு கோணத்தில் கொக்குபோலத் தெரிந்தது. இன்னொரு கோணத்தில் வாத்துபோலத் தெரிந்தது.
“இதன் பெயர் துடுப்புவாயன்” என்று புன்னகைத்தார் முத்துராமன். தன்னிச்சையாக என் உதடுகள் அப்பெயரை இரண்டுமூன்று முறை உச்சரித்தன. “பொருத்தமான பெயர்” என்றபடி அதன் அலகுகளை மீண்டுமொரு முறை பல கோணங்களில் பார்த்தேன். “சில ஊர்களில் கரண்டிவாயன்னு கூட சொல்வாங்க”
ஒரு நிமிடம்
அடுத்த அறைக்குச் சென்று
ஒரு குறுந்தகட்டை எடுத்து வந்து கணிப்பொறியில் செருகி, அதன் படங்களை ஓடவிட்டார் முத்துராமன். நூற்றுக்கணக்கான படங்கள். எல்லாமே துடுப்புவாயன் படங்கள். பிரிந்த அலகுகளுடன் அடிமேல் அடிவைத்து தண்ணீரில் நடக்கும் கோலம், நாணல்புதரோரம் நின்று சூரியன் மின்னும் தண்ணீர்ப்பரப்பை வேடிக்கை பார்க்கும் கோலம். ஒரு மரக்கிளையில் நின்று சிறகுவிரிக்கும் கோலம். அலகுபிரித்து வானை நோக்கிக் குரலெழுப்பியபடி நிற்கும் கோலம். ஒற்றைக்காலில் நிற்கும் கோலம். ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி முத்துராமன் சில விளக்கங்களைச் சொல்லிக்கொண்டே இருந்தார். பரவசத்தில் எனக்கு மனம் குழைந்தது.
”இதையெல்லாம் எங்க எடுத்திங்க? என்று ஆவலோடு கேட்டேன். “நம்ம கோடிக்கரை பக்கமா ரெண்டுமூணு நாளு தங்கியிருந்தேன். அப்ப எடுத்தது” என்றார் முத்துராமன். ஏக்கம் நிறைந்த விழிகளுடன் அப்பறவைகளின் படங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பதைக் கவனித்ததும் “ஒருநாள் என்னோட வாங்க, போய் பார்த்துட்டு வரலாம்” என்றொரு அழைப்பை முன்வைத்தார். “நிச்சயமா உங்களோடு வருவேன். இந்த துடுப்புவாயன் பார்த்த நிமிஷத்திலேருந்து என் நெஞ்சுக்குள்ள துடுப்பு போட்டபடியே இருக்குது” என்றேன்.
இரண்டு வாரம் கழித்து இருவரும் கோடிக்கரைக்குச் சென்றோம். அங்கே குமாரசாமி என்றொரு நண்பர் எங்களுக்காகக் காத்திருந்தார். அவர்தான் வழிகாட்டி. துடுப்புவாயன் காத்திருக்கும் இடம், ஓய்வெடுக்கும் இடம், கூடு கட்டியிருக்கும் இடம் என அனைத்தும் தெரிந்தவராக இருந்தார் அவர்.
பறவையைப் பார்த்த முதல் கணத்திலிருந்தே முத்துராமனின் கேமிரா இயங்கத் தொடங்கிவிட்டது. பறவையின் பார்வையில் பட்டுவிடாதபடி புதரோரமாகவும் மரங்களுக்குப் பின்னாலும் நாங்கள் மறைந்து நின்றிருந்தோம். துடுப்புவாயன் தன் நீண்ட காலை உயர்த்தி அடிமேல் அடிவைத்து உடல்குலுங்க நடந்துசெல்லும் அழகை முத்துராமன் தொடர்ச்சியான படத்தொகுப்பாகவே எடுத்தார்.
ஒரு திருப்பத்தில் வாதுமை மரத்தடியில் உட்கார்ந்திருந்த நான்கு பேர் கொண்ட குழு குமாரசாமியின் முகத்தைப் பார்த்ததும் பின்வாங்கி மறைய முனைந்தது. ஆனால் அதை அவர் கண்கள் பார்த்துவிட்டன. சட்டென பதற்றம் கொண்டு எங்களை அதே இடத்தில்
நிற்கும்படி சைகை காட்டிவிட்டு வாதுமை மரத்தை நோக்கி ஓடினார். அவர் ஓடி வருவதைப் பார்த்ததும் அந்தக் குழு தப்பிக்க முனைந்தது. எல்லாருமே பதின்ம வயதுக்காரர்கள். அவர் குறுக்கில் புகுந்து அவர்களைத் தடுத்து நிறுத்தினார். கடுமையான சொற்களால் திட்டி எச்சரிக்கையோடு அனுப்பிவைத்தார்.
“ஊருக்குள்ள புதுசா சாராயக்கடை போட்டதிலேருந்து இத ஒரு பொழப்பா வச்சிக்க ஆரம்பிச்சிட்டானுங்க. கொக்கு, மடயான், கெளதாரி, காடை, துடுப்புவாயன்னு எது கெடச்சாலும் புடிச்சிட்டு போயிடுவானுங்க கொலைகாரப்பாவிங்க. அம்பது நூறுக்கு ஆசைப்பட்டு அலையறானுங்க. எத்தன தரம் விரட்டிவிட்டாலும் புத்தி வரமாட்டுது”
முத்துராமன் அந்த இளைஞர்களைப்பற்றி விசாரிக்கத் தொடங்கியதுமே குமாரசாமி தன் குமுறலைக் கொட்டத் தொடங்கிவிட்டார். ”பறவைகளும் நம்மமாதிரி ஒரு உயிர்தான சார். இந்த நிலத்தை, பயிரை, காட்டை காப்பாத்தறமாதிரி அதுங்களையும் காப்பாத்த வேண்டியது நம்ம கடமைன்னு ஏன் சார் இவனுங்களுக்கு தெரிய மாட்டுது? சின்ன வயசுல ஜெயில் ரெக்கார்ட்ல பேர் பதிஞ்சிட்டா, எதிர்காலம் முழுக்க ஜெயிலுக்கு போய்வரதிலயே அவனுங்க வாழ்க்கை காணாம போயிடும்” என்றார்.
பதற்றத்தில் குமாரசாமி தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தார். ”ஏதோ ஒரு நம்பிக்கையிலதான சார் இந்த பறவைகள் இந்த ஊரத் தேடி வருது? அத கொல்றது துரோகம்தான சார். மனுஷனுக்கு ஒரு நியாயம், பறவைக்கு ஒரு நியாயம்னு உலகத்துல இருக்கமுடியுமா?” என்றார். முத்துராமன்தான் அவரிடம் பேசிப்பேசி அமைதிப்படுத்தினார். அதற்குப் பிறகு இருட்டும்வரைக்கும் பல இடங்களுக்கு அவர் அழைத்துச் சென்று ஏராளமான துடுப்புவாயன்களைக் காட்டினார்.
ஒரு பாறையின் திருப்பத்தைக் கடக்கமுனைந்த நேரத்தில் சட்டென பின்வாங்கி அப்படியே கீழே அமரும்படி சைகை காட்டியபடி அவரும் உட்கார்ந்தார். சிறிது தொலைவில் நின்றிருந்த தேக்கு மரத்தைச் சுட்டிக் காட்டினார். ஒரு கிளையின் விளிம்பில் ஒன்றையடுத்து ஒன்றென துடுப்புவாயன்கள் அமர்ந்திருந்தன. “எந்த நிமிஷமும் பறக்கும்னு தோணுது. கேமிராவ ரெடியா வச்சிக்குங்க சார்” என்று ரகசியமான குரலில் சொன்னார். முத்துராமன் பின்வாங்கி வஜ்ஜிராசனத்தில் அமர்வதுபோல அமர்ந்து கேமிரா கோணத்தைச் சரிசெய்துவிட்டு வைத்த கண்ணை எடுக்காமல் காத்திருந்தார். எனக்கு எல்லாமே புதுமையாகத் தெரிந்தது. பிரமிப்போடு அவர்கள் இருவரையும் மாறிமாறிப் பார்த்தபடியும் தொலைவில் தெரியும் துடுப்புவாயனைக் கவனித்தபடியும் அமர்ந்திருந்தேன்.
குமாரசாமி சொன்ன பொன்னான தருணம் வந்தது. தன் சிறகை விரித்து விசையோடு அடித்தபடி கிளையிலிருந்து வானத்தை நோக்கி ஒவ்வொன்றாகத் தாவின. வெட்டவெளிக்குள் அவை நுழையும் கணத்தை முத்துராமன் பதிவு செய்தார்.
அந்த முதல் பயணத்துக்குப் பிறகு என் உற்சாகமும் பெருகியது.
விடுமுறை, தொலைவு ஆகியவற்றுக்கு உட்பட்டு என்னால் முடிந்த அளவு நானும் அவருடன் பயணங்களில் கலந்துகொண்டேன். அவர் படமெடுப்பதைப் பார்ப்பதே ஒரு பெரிய கலை. ஒரு காட்சிக்காக மணிக்கணக்கில் கூட காத்திருப்பார். பறவைகளின் புதியபுதிய அசைவுகளையும் கோணங்களையும் மட்டுமே அவருக்கு முக்கியம்.
ஒரு சிறகு மட்டும் விரிந்தசைய, ஒரு சிறகை அசைக்காமலேயே ஒய்யாரமாக வானில் வட்டமடித்த ஒரு பறவையை அவர் படமாக்கிய விதத்தை ஒருபோதும் மறக்கவே முடியாது. அது ஒரு கிளாஸிக் படம். ஒருமுறை அதிகாலையில் கூட்டைவிட்டு வெளியே வந்து நிற்கும் பறவையின் தோற்றத்தை முதல் கணத்திலேயே படமெடுத்துவிடவேண்டும் என்பதற்காக கருக்கலிலிருந்தே காத்து நின்று, படமெடுத்த பிறகு மகிழ்ச்சியில் தலைகால் புரியாமல் உருண்டு தடுமாறி முட்புதரில் விழுந்ததும் உண்டு.
முத்துராமனுடன் செய்த பயணங்கள் வழியாக நான் பல பறவைகளைப்பற்றித் தெரிந்துகொண்டேன். கூழைக்கடா, நீர்க்காகம், சாம்பல்கொக்கு, மஞ்சள் கொக்கு, அரிவாள்மூக்குப் பறவை, செம்போத்து, விசிறிவால் குருவி என சொல்லிக்கொண்டே போகலாம். முத்துராமனின் குறுந்தகட்டுச் சேகரிப்பில் இவை ஒவ்வொன்றைப்பற்றியும் நூற்றுக்கணக்கான படங்கள் நிறைந்துள்ளன. ஒவ்வொரு படத்துக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.
ஒருமுறை கிருஷ்ணகிரிக்குச் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தோம். அன்று பார்த்த வாலாட்டிச்சிட்டு பற்றி உற்சாகமாக நான் சொல்லிக்கொண்டே வந்தேன். சட்டென ஒரு திருப்பத்தைக் கடக்கும் சமயத்தில் வண்டியை நிறுத்தச் சொன்ன முத்துராமன் அவசரமாக கீழே இறங்கினார். கேமிராவைத் திருப்பி கோணத்தைச் சரிப்படுத்தி வேகவேகமாக படங்களெடுத்தார். ஒரு பெரிய புதையலைப் பார்த்த பரவசம் அவர் முகத்தில் படர்ந்திருந்தது. ஒருகணம் திரும்பி ஆனந்தப் புன்னகையோடு என்னிடம் கேமிராவைக் கொடுத்து பார்க்கும்படி சொன்னார்.
வற்றிய ஏரியில் குட்டையாகத் தேங்கி நின்ற தண்ணீரின் ஓரத்தில் நான்கு நாரைகள் நின்றிருந்தன. பனங்கிழங்கு பிளந்ததுபோன்ற சிவந்த அலகுகள். சிவந்து நீண்ட கால்கள். செங்கால் நாரைகள்.
காணாததைக் கண்ட பரவசத்தில் எங்களுக்கு பேச்சே எழவில்லை. ஏதேதோ எண்ணங்கள் அலைமோத வானத்தைப் பார்த்தபடி அமர்ந்துவிட்டோம்.