Home

Friday, 5 April 2019

மறைந்து நகரும் நதி - கட்டுரை





ஒருவரைச் சந்தித்துவிட்டுப் பிரிகிற நேரத்தில் அவர்களுடைய பெயர்களையும் தொடர்பு எண்ணையும் கேட்டு எழுதிவைத்துக்கொள்வது என் பழக்கம். என் குறிப்பேட்டில் அப்படி எழுதப்பட்ட எண்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் ஒருமுறை கூட அவர்களை அழைத்துப் பேச முற்பட்டதில்லை. மறுமுனையில் யார் அது? ஞாபகமில்லையேஎன்று ஒருவேளை கேட்டுவிட்டால் என்ன செய்வது என நானாகவே நினைத்துக்கொண்டு தவிர்த்துவிடுவேன். ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரைக்கும் மட்டுமே அந்தப் பெயர்களும் எண்களும் நினைவில் இருக்கும். அதற்குப் பிறகு மெல்ல மெல்ல அவையும் மனசை விட்டு மறந்துவிடும். ஆனால் அந்த முகங்களையும் அனுபவங்களையும் ஒருநாளும் மறந்ததில்லை. ஏதோ ஒரு கணக்கில் அவை இணைந்து அப்படியே ஆழ்மனத்தில் தங்கிவிடும்.

ராஜேந்திரனும் பிரசன்னகுமாரும் நானும் ஒருமுறை குடகு மலையைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தோம். இந்தப் பயணத்துக்காகவே ராஜேந்திரன் குஜராத்திலிருந்து வந்திருந்தான். முன்பதிவு செய்யப்பட்ட ஒரு விடுதியில்தான் தங்கினோம். உண்மையில் அது விடுதி அல்ல, ஒரு வீடு. குடும்ப உறுப்பினர்களே சேர்ந்து அந்த விடுதியை நடத்திக்கொண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்ததுமே அருந்துவதற்கு அவர்கள் கொடுத்த சப்போட்டா பழச்சாறு சுவையாக இருந்தது.
சுற்றிப் பார்க்க கிளம்பும் முன்பு நடுவயதுள்ள இளைஞரொருவர் வந்துமதிய உணவுக்கு என்ன சமைக்கவேண்டும்? சைவமா, அசைவமாஎன்று கேட்டார். நான் எனக்கு மட்டும் சைவ உணவு சொன்னேன். அடுத்து ராஜேந்திரனின் பக்கம் இளைஞரின் பார்வை திரும்ப, அவன்இங்கே மீன் கிடைக்குமா? வஞ்சிரம் மீன்என்று கேட்டான். இளைஞன்எல்லா வகையான மீன்களும் இங்கேயே தாராளமாக கிடைக்கும். எல்லாமே மங்களூரிலிருந்து வந்துவிடுகின்றனஎன்று புன்னகைத்தார். அவன் உற்சாகமாகஅப்படியென்றால் வஞ்சிரம் குழம்பு, வஞ்சிரம் பொரியல் செய்துவிடுங்களேன்என்றான்.
சின்னதும் பெரிதுமாக ஒன்றையடுத்து ஒன்றென அடுக்கிவைக்கப்பட்ட பச்சைக்கூம்புகளைப்போல குன்றுகள் நின்றிருந்த குடகு ஒரு புது அனுபவம். மழைவருவதுபோல எல்லா சமயத்திலும் அடர்த்தியான குளிர். நழுவிப் பறக்கிற ஆடைகளென மேகங்கள் வெட்டவெளியெங்கும் உலவிக்கொண்டிருப்பதைப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.
மலையின் அழகை அமர்ந்து ரசிப்பதற்காகவே அந்தக் காலத்து அரசகுடும்பத்துக்காகக் கட்டப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து வேடிக்கை பார்த்தோம். பிறகு கீழே இறங்கி கோட்டையைச் சுற்றினோம். பதினேழாம் நூற்றாண்டில் முத்துராஜா என்பவரால் கட்டியெழுப்பப்பட்ட கோட்டை அது. பிறகு திப்புசுல்தான் காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்பட்டு வலியூட்டப்பட்டது. எங்களுக்கு வழிகாட்டியாக வந்த பெரியவர் கோட்டையைப்பற்றியும் குடகுபற்றியும் ஏராளமான தகவல்களை எடுத்துரைத்தார்.
பிரசன்னகுமார் அங்கே காணப்பட்ட காப்பித்தோட்டத்தைப் பற்றி ஏதோ கேள்வி கேட்டதும் பெரியவரின் உற்சாகமான முகம் களையிழந்துவிட்டது. இந்தக் காப்பித்தோட்டங்களை உருவாக்குவதற்காக மாபெரும் செல்வமான காட்டை அழித்தது வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கரும்புள்ளி என்று வருத்தமுடன் சொன்னார். பாதிக்கப்பட்டவர்கள் உட்பட யாருக்குமே இதையொட்டி வருத்தமோ வேதனையோ இல்லை என்பதுதான் அவர் துயரம்.
பதினெட்டாம் நூற்றாண்டுவரை வாழ்ந்த குடகுமக்களோ இந்திய மக்களோ விடியும்போதே காப்பிக்கோப்பையைப் பார்த்தபடி எழுந்தவர்களா என்ன என்று படபடவென்று சொற்களைக் கொட்டினார் பெரியவர். யாரும் தட்டிக் கேட்க முடியாத இடத்தில் இருந்ததால் கிழக்கிந்தியக் கம்பெனி லாபநோக்கத்தோடு தன்னிச்சையாக செயல்பட்டு இந்த மலையையே அழித்துவிட்டது என்று பெருமூச்சுவிட்டார். குடகுமண்ணின் குரலுக்கு அரசாங்கத்தின் காதுகளைத் திருகி கேட்கவைக்கிற சக்தி இல்லையே, என்ன செய்ய என்று கைகளை விரித்தார்.
ஒருகணம் கழித்து ஒரு புதிய மாற்றத்தை இப்படித்தானே உருவாக்கமுடியும்? இந்தத் தோட்டங்களால் உருவான வேலைவாய்ப்புகளையும் வாழ்வில் உருவான மாற்றங்களையும் இல்லையென்று சொல்லமுடியுமா?” என்று ராஜேந்திரன் அந்தப் பெரியவரிடம் பொறுமையாகக் கேட்டான். “அடையாளத்தைத் துறந்து மந்தைமந்தையாக கூலிக்காரர்களாக மாறுவது எப்படி வளர்ச்சியாகுமோ, எனக்குத் தெரியவில்லைஎன்று உதடுகளைப் பிதுக்கினார் பெரியவர்.
மதிய உணவு தயாராகிவிட்டதாக விடுதிக்கார இளைஞர் கைபேசியில் அழைத்துச் சொன்னதால் உரையாடலை அத்துடன் நிறுத்திவிட்டு விடுதிக்குத் திரும்பத் தயாரானோம். பெரியவருக்குரிய கட்டணத்தை நான் கொடுத்தேன். அவர் தன் பையிலிருந்து ஒரு துண்டுச்சீட்டை எடுத்துக் கொடுத்தார். ”என் பேரும் நெம்பரும் இதுல இருக்குது. யாருக்காவது தேவைப்பட்டதுன்னா கொடுங்கஎன்றார்.
விடுதியில் மேசையில் அமரும்போதே ராஜேந்திரனை மீன்வாசனை தொட்டுவிட்டது. அப்படியே கண்மூடி அதை ஒருகணம் நுகர்ந்து அனுபவித்தான். ”நல்ல குழம்பு என்பதற்கு இந்த மணமே சாட்சிஎன்றபடி இரண்டு கைகளையும் சேர்த்துத் தேய்த்துக்கொண்டபோது அவன் கண்களும் முகமும் மலர்ந்தன. புன்னகைத்தபடிஇந்த வாசனை எங்க அம்மா வைக்கிற குழம்பை ஞாபகப்படுத்துதுஎன்றான். “நாங்கள்ளாம் கடலோரத்துக்காரங்க சார். காலையில படகு கரைசேரும்போதே கரையில காத்திருந்து மீன் வாங்கிட்டு வந்து சமைக்க ஆரம்பிச்சிடுவோம்என்று விவரிக்கத் தொடங்கினான்.
அந்த இளைஞர் புன்னகைத்தபடி உணவையெடுத்து பரிமாறத் தொடங்கினார். சோற்றையும் குழம்பையும் சேர்த்துப் பிசைந்து உண்டபடி பேசிக்கொண்டே இருந்தான் ராஜேந்திரன். அவன் மீனைத் துண்டுபோட்டு சாப்பிடும் விதத்திலேயே அவனுடைய  ருசியைப் புரிந்துகொண்டார் இளைஞர்.
எங்கோ ஒரு புள்ளியிலிருந்து தொடங்குவதுபோல இளைஞர் எங்க அப்பா தலைமுறையிலிருந்து ஓட்டல் நடத்திவந்த தொழில திடீர்னு நிறுத்தும்படி ஆயிட்டுது சார். அப்பாவுடைய குடும்பம் பெரிய குடும்பம்.  சொத்து பிரிச்சதுல எல்லாமே அத்தைங்க, பெரியப்பா சித்தப்பா பக்கமா போயிட்டுது. எங்க பங்குக்கு ரெண்டுமூணு வீடும் தோட்டமும்தான் கிடைச்சது...” என்று சொல்லிக்கொண்டே போனார்.
வழக்கமான குடும்பத் துரோகங்கள். ஏமாற்றங்கள். ஆயினும் யாரையும் பகைத்துக்கொள்ள முடியாது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு மங்களூர்பக்கமாகச் சென்றுவிடலாம் என்பது மனைவியின் எண்ணம். ஆனால் அது உடனடியாக முடிகிற செயலல்ல. பிள்ளைகள் இன்னும் படித்துக்கொண்டுள்ளார்கள். எனவே உடனடியாக வெளியேறுவது முடியாத காரியம். அதன்பிறகு மனைவி சொன்ன ஆலோசனையை ஏற்று தொடங்கப்பட்டதுதான் இந்த விடுதி என்றார்.   இறுதியில்இப்ப வியாபாரத்துல ஒரு குறையுமில்லை. நல்லா போவுது. உங்களப்போல வந்து தங்கிட்டு போற நாலு பேரு இண்டர்நெட்ல நல்ல வார்த்தைங்களா எழுதறாங்க. இதுக்கு மேல என்ன வேணும், சொல்லுங்கஎன்று சொல்லிவிட்டு நிறுத்தினார். அவர் முகம் உண்மையிலேயே நிறைவில் ததும்புவதைப் பார்த்தேன். 
சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு வாகனத்தில் தலைக்காவேரிக்குச் சென்றோம். வழியில் பாகமண்டலம் என்னும் இடத்தில் இறங்கினோம். வெவ்வேறு திசையிலிருந்து ஓடிவரும் கன்னிகை, சுஜோதி என்னும் கிளையாறுகள் காவிரியோடு இந்த இடத்தில் சங்கமிக்கின்றன. இந்த இடத்துக்கு திரிவேணிசங்கமம் என்று பெயர். நான் எப்போதோ படித்து தெரிந்துவைத்திருந்த தகவல்களை ராஜேந்திரனிடம் சொன்னேன்.
அவன் ஆச்சரியத்தோடு இது கன்னிகை. அது காவிரி. அப்படியென்றால் சுஜோதி எந்தப் பக்கத்திலிருந்து வருது?” என்று கேட்டபடி நான்கு திசையிலும் திரும்பித்திரும்பி பார்த்தான் பிரசன்னகுமார். அக்கணத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக தம்பி, அது கண்ணுக்குப் புலப்படாத நதி. அடியோட்டமா ஓடக்கூடியதுஎன்றபடி கரையோரத்திலிருந்து எங்களை நோக்கி ஒரு அம்மா வந்தார். நாங்கள் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தோம்.
எல்லாமே இந்த யானைமாதிரி கண்ணுக்குத் தெரியணுமா என்ன?” என்று அப்போதுதான் நீராடிவிட்டு பாகனின் வழிகாட்டலுக்குத் தகுந்தவிதமாக நதியிலிருந்து எழுந்து கரையில் நடந்துவரும் யானையைச் சுட்டிக்காட்டினார். அந்த அம்மாவின் முகத்தில் புன்னகை படர்ந்திருந்தது. மறுபுறம் துதிக்கையைச் சுழற்றிச்சுழற்றி அசைத்தபடி ஒரு சிறுமிபோல யானை உற்சாகமாகப் போய்க்கொண்டிருந்தது.
அம்மா கேட்ட கேள்வி சில கணங்களுக்குப் பிறகே உறைத்ததுபோலஎன்ன சொன்னிங்க?” என்றபடி திரும்பினான் பிரசன்னகுமார். அம்மா மறுபடியும்எல்லாமே இந்த யானைமாதிரி கண்ணுக்குத் தெரியணுமா என்ன?” என்று மறுபடியும் கேட்டார். இந்த முறை அவர் சொற்களில் கூடுதலான குறும்பு வெளிப்பட்டதை உணரமுடிந்தது. அரைக்கணம் இடைவெளிவிட்டுஅது உள்ளோட்டமா பூமிக்குள்ளேயே ஓடக்கூடிய ஆறு தம்பி. இப்படி பல ஆறுகள் பூமிக்குள்ளேயே ஓடுதுஎன்றார் அவர். ஒரு நதியின் ஓட்டத்தைச் சுட்டிக் காட்டுவதுபோல அவர் விரல்கள் மடிந்துமடிந்து நீண்டன.
பேச்சோடு பேச்சாக, ஏதேதோ கதைகள் சொன்னபடி அந்த அம்மா எங்களை அருகிலிருந்த பாகமண்டலேஸ்வர் ஆலயத்துக்குள் அழைத்துச் சென்றார். கேரளபாணியில் கட்டப்பட்ட ஆலயம் அது. இடைவெளிவிட்டு அடுக்கப்பட்ட கீற்றுபோல அதன் இறகுகள் காணப்பட்டன. எழுந்து பறக்க இறகுவிரித்து அமர்ந்த ஒரு பெரும்பறவை என எண்ணும்படியாக இருந்தது அதன் தோற்றம். எங்கள் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட பிறகு அவர் ஆலயம் பற்றியும் காவிரி பற்றியும் பல பழைய தகவல்களை ஞாபகப்படுத்திக்கொண்டு சொன்னார்.
உங்கள் பேச்சு உற்சாகமாக இருக்கிறது. நாங்கள் தலைக்காவிரிக்குச் செல்கிறோம். உங்களுக்கு விருப்பமிருந்தால் எங்களோடு வரமுடியுமா?” என்று ராஜேந்திரன் அவரிடம் கேட்டான். அந்த அம்மா எந்தத் தயக்கமும் இல்லாமல் வாகனத்திலேயே எங்களுடன் வந்தார். காவிரி தொடர்பாக இருக்கும் பல புராணக்கதைகளை அன்று நாங்கள் தெரிந்துகொண்டோம்.
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எவ்வளவோ ஆண்டுகள் நகர்ந்துவிட்டன. ஆனால் எதுவுமே மறக்கவில்லை. எல்லா முகங்களும் குரல்களும் சொற்களும் நினைவிலேயே உள்ளன. மறைந்து நகரும் நதிபோல.