Home

Thursday, 25 April 2019

கருணையின் ஊற்று - கட்டுரை


பயணங்களில் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரிடம் உரையாடுவது என்பது ஒரு கலை. அதில் சாமிநாதன் தேர்ச்சி மிக்கவர். உரையாடுவதில் ஒருவருக்கு ஆர்வம் உண்டா இல்லையா என்பதை அவர் ஒரு பார்வையிலேயே கண்டுபிடித்துவிடுவார். அதற்குப் பிறகுதான் பேச்சையே தொடங்குவார். பேசிப்பேசி அவர்களுடைய மனத்தில் இடம் பிடித்துவிடுவார்.

அவருடன் செய்த பயணங்கள் எப்போதும் உரையாடல்களால் நிறைந்திருப்பதை பலமுறை மகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்திருக்கிறேன். சிறிதுகாலம் வரைக்கும் அந்த உரையாடல்களோடு அவற்றுக்குரிய முகங்களும் நினைவில் மிதப்பதுண்டு. பிறகு முகங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து  கரைந்து மறைய, குரல்கள் மட்டுமே நினைவிலிருந்து எழும்.
ஒருமுறை நானும் சாமிநாதனும் சேர்ந்து புதுச்சேரிக்குச் சென்றிருந்தோம். காலை முழுதும் கடற்கரையில் நடந்து கழித்தோம். பிறகு பகலில் பாரதியார், பாரதிதாசன் நினைவிடங்களைச் சென்று பார்த்தோம். மாலையில் நகரத்துக்கு வெளியே இருக்கிற உஷ்டேரி எனப்படும் ஏரிக்குச் சென்றோம். மிகவும் பெரிய ஏரி. கடலைப்போல கொந்தளித்தபடி இருந்தது. கரையோர மரக்கிளைகளில் கொக்குகள் அமர்ந்திருந்தன.
சாமிநாதன் உடனே தனது ஊர் ஏரியைப்பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார். ஒரே கணத்தில் நிகழ்காலத்தின் கதவுகளை திரைவிலக்குவதுபோல விலக்கி இறந்தகாலத்திற்குள் சென்றுவிட்டார்.  பால்ய கால நினைவுகள் மழையெனப் பொழியத் தொடங்கின. ஒரு கரையிலிருந்து மறுகரை வரைக்கும் தினந்தோறும் நீந்திப் பழகிய இளமை நாட்களைப்பற்றிப் பேசும்போது அவர் விழிகள் சுடர்விட்டன.
மதகோரத்தில் இரண்டுபேர் தூண்டில் வீசிவிட்டு அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் சாமிநாதனுக்கு உற்சாகம் பெருகிவிட்டது. அவர்களுக்கு அருகில் சென்று அமர்ந்து மிகவும் இயல்பாக உரையாடத் தொடங்கினார். கரைக்கு மறுபக்கத்தில் இருவருக்குமே சொந்தமான வயல்கள் இருந்தன. மிளகாய் பயிரிட்டிருந்தார்கள். மதகிலிருந்து பிரிந்து செல்லும் கால்வாய்ப் பாசனப் பரப்புக்குள் அந்த வயல்கள் இருந்தன. வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை முடிந்துவிட்டது. பொழுதுபோக்காக பழைய கதை பேசியபடி மீன் பிடிப்பதாகச் சொன்னார்கள்.
ஆண்டு முழுதும் இந்த ஏரியில் தண்ணீர் இருக்குமா?” என்று சாமிநாதன் கேட்ட கேள்விக்குஇது ஒருபோதும் வற்றாத ஏரிஎன்று பதில் சொன்னார் தூண்டில்காரர். சாமிநாதன் அவரையும் என்னையும் மாறிமாறிப் பார்த்தபடி பெருமையோடு மீசையை வருடிக்கொண்டார். தொடர்ந்துதாசி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அந்தக் காலத்தில் இந்த மண்ணுக்கு அளித்த கொடை இதுஎன்று சொல்லிவிட்டு பழைய காலத்துக் கதையை ஒரு புராணக்கதையைச் சொல்வதுபோலச் சொன்னார்.
புதுச்சேரியைச் சுற்றி பல இடங்களில் தாசிகளால் உருவாக்கப்பட்ட ஏரிகளும் குளங்களும் ஏராளமாக இருப்பதாகச் சொன்னார் தூண்டில்காரர். ஒரு காலத்தில் ஆலயச் சேவைகளோடு தொடர்புடையவர்களாக இருந்தார்கள் அவர்கள். சமூகம் அவர்களை மதித்துப் போற்றியது. தம்மை ஆதரித்த சமூகத்துக்கு நன்றிக்கடனாக அவர்கள் ஏரிகளை வெட்டி அளித்தார்கள்.
மதிலின் மறுபக்கக் கட்டையோரமாக ஆறேழு காகங்கள் ஒன்றையடுத்து ஒன்றாகப் பறந்துவந்து அமர்ந்து கரைந்தன. எங்களிடம் உரையாடியபடியே தூண்டில்காரர் தன்னுடைய பறியிலிருந்து இரண்டு மீன்களை எடுத்து காகங்களை நோக்கி வீசினார். காகங்கள் அவற்றை ஆவலோடு கொத்தித் தின்னத் தொடங்கின.
காலம் இப்போது மிகவும் கெட்டுவிட்டதுஎன்று நாக்கைச் சப்புக்கொட்டியபடி தலையை அசைத்தார் தூண்டில்காரர். தொடர்ந்துஒரு பெண்ணுக்கு அந்தக் காலத்தில் இருந்த நன்றியுணர்ச்சிகூட  இந்தக் காலத்தில் ஒரு நாகரிக மனிதனுக்கு இல்லைஎன்றபடி உதட்டைப் பிதுக்கினார்.
நன்றிகெட்ட குணத்தைப்பற்றிய பேச்சைத் தொடர்ந்து தூண்டில்காரருடைய குரலில் வேகம் கூடியது. ஊரைச் சுற்றி ஏராளமான மினரல் வாட்டர் ஆலைகளும் குளிர்பான நிறுவனங்களின் ஆலைகளும்  அல்லும்பகலும் ஓய்வே இல்லாமல் மண்ணிலிருந்து தண்ணீரை உறிஞ்சியபடி இருக்கிறது என்றார். அவர் குரலில் இயலாமையின் தொனி படிந்திருந்தது. ”வாழ்க்கை என்பது வாரிவாரி வைத்துக்கொள்வதற்காக மட்டுமில்லை. கொஞ்சமாவது கொடுக்கவும் பழகிக்கொள்ளவேண்டும்சாமிநாதன் அதைக் கேட்டுஉண்மைதான், உண்மைதான். நூற்றில் ஒரு சொல்என்று தலையசைத்தபடி சொன்னார்.
சாமிநாதனும் நானும் ஒருமுறை இரண்டு சக்கர வாகனத்தில் ஒருமுறை சிரவணபெலெகொலாவுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தோம். நல்ல பசி நேரம். வழியில் ஒரு உணவுக்கடை கூட தென்படவில்லை. ஒரு மரத்தடியில் ஒரு மூதாட்டி ஒரு கூடையோடு உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டோம். அவரிடமிருந்த வெள்ளரிப்பிஞ்சுகளை வாங்கி வயிறுநிறைய சாப்பிட்டோம். அதற்குப் பிறகுதான் எங்களுக்கு உடலில் தெம்பே பிறந்தது.
இளைப்பாறும் வகையில் நாங்களும் அந்த நிழலில் காலை நீட்டி சிறிதுநேரம் உட்கார்ந்தோம். “சமணச்சாமிய பாக்கவந்தீங்களா?” என்று கேட்டார் மூதாட்டி. தலை நரைத்திருந்தாலும் படிய வாரியிருந்தார். நெற்றியில் பெரிய வட்டமாக குங்குமப் பொட்டு வைத்திருந்தார். “ஆமாம் பாட்டிஎன்று புன்னகைத்தார் சாமிநாதன். பாட்டிக்கு அருகில் இருந்த பானையிலிருந்து தண்ணீரை எடுத்து நானும் அவரும் அருந்தினோம்.
எந்த ஊரு பாட்டி?” என்று மெதுவாகக் கேட்டார் சாமிநாதன். அருகில் இருந்த ஒரு கிராமத்தின் பெயரைச் சொன்னார் மூதாட்டி. தொடர்ந்து தன்னைப்பற்றி எல்லா விவரங்களையும் வித்தியாசம் பார்க்காமல்  தயக்கமில்லாமல் முன்வைத்தார். அவருடைய கணவர் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். உதவித்தொகை வருகிறது. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எல்லாருமே பெரியவர்களாகி சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். வெள்ளரிப்பிஞ்சு விற்றுத்தான் பிழைக்கவேண்டும் என்கிற கட்டாயம் எங்குமில்லை. ஆனாலும்அறுபது வருஷத்துக்கும் மேல இங்க வெள்ளரிப்பிஞ்ச வித்துட்டிருக்கேன். ஒரு பழக்கத்துல என்ன நம்பி யாராவது இங்க வந்தா ஏமாந்துறக்கூடாது இல்லையா?” என்றார்.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே தொலைவில் ஒரு திருப்பத்திலிருந்து சீருடை அணிந்த சிறுமிகளும் சிறுவர்களும் புத்தகப்பைகளை முதுகிலேந்தி வருவதைப் பார்த்தோம். அனைவரும் பாட்டியைச் சூழ்ந்துகொண்டார்கள். ஒவ்வொருவரும் சில்லறை கொடுத்துவிட்டு பிஞ்சுகளை வாங்கிக்கொண்டு மரத்தடியில் அமர்ந்து தின்றபடி கதைபேசத் தொடங்கினார்கள்.
வெயிலைப் பாரு பளபள
வெள்ளரிப்பிஞ்சு தளதள
காரத்தூள தொட்டுக்கோ
கடிச்சிகடிச்சி தின்னுக்கோ
ராகத்தோடு அவர்கள் பாடிய பாடலைக் கேட்டு பாட்டி சிரித்தார். கூட்டத்தில்  ஒரு சிறுமி மட்டும் எதுவும் வாங்காமல் மற்றொருத்தியின் தோளைத் தொட்டு பேசியபடியே கடந்துபோவதை அவர் கண்கள் கண்டுபிடித்துவிட்டன. அருகில் வரும்படி சைகையால் அழைத்து இரண்டு பிஞ்சுகளை எடுத்துக்கொடுத்தார். “எங்கிட்ட சில்லறை இல்லை பாட்டிஎன்றாள் அச்சிறுமி. “சரிதான் போடி பெரிய மனுஷிஎன்று அவள் கன்னத்தைக் கிள்ளி அனுப்பிவைத்தார்.
வீட்டுக்குத் திரும்பும் வழிமுழுதும் எங்கள் உரையாடல்கள் பாட்டி தொடர்பாகவே இருந்தன.  கருணை என்பது வற்றாத ஊற்று. எல்லா மனிதர்களும் அடிப்படையில் கருணை உள்ளவர்களே. பார்வைக்குத் தெரியும் தோற்றத்தை வைத்து ஒருவரை நாம் மதிப்பிடக்கூடாது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரியில் ஒரு நண்பருடைய திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிக்கொண்டிருந்தோம். எங்கள் இருக்கைக்கு எதிரில் அமர்ந்திருந்தவரின் மடியில் ஒரு பறவைக்கூண்டு இருந்தது. அதற்குள் இரு வண்ணப்பறவைகள் இருந்தன. நீலம், வெள்ளை, சிவப்பு என அவற்றின் இறகுகளில் படிந்திருந்த நிறங்கள் கண்ணைக் கவர்ந்தன. கழுத்துக்கடியில் மஞ்சளும் சந்தனமும் கலந்த கலவையான நிறம். அலகைச் சுற்றி அமைந்திருந்த வட்டம் தங்கத்தின் நிறம்.
எங்கே வாங்கியது? ரொம்ப அழகா இருக்குதுஎன்று ஆவலோடு கேட்டார் சாமிநாதன். கூண்டை மடியில் ஏந்தியவர் புன்னகைத்தபடிஇது வாங்கியதல்ல். எங்களுக்குச் சொந்தமானவை. ஒரு நண்பரின் மகளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க எடுத்துச் செல்கிறேன்என்றார். பிறகு கேள்வியும் பதிலுமாக உரையாடல் அவருடைய பறவை வளர்ப்பைப் பற்றியதாக மாறியது.
இளமையிலேயே அவருக்கு பறவை வளர்ப்பில் ஆர்வம் பிறந்துவிட்டது. பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் கூட்டிலிருந்து தப்பி விழுந்திருந்த ஒரு குருவிக்குஞ்சை வீட்டுக்கு எடுத்துவந்து வளர்த்த கணத்திலிருந்து தொடங்கிய பழக்கத்தை நாற்பது ஐம்பது ஆண்டுகளாக விடமுடியவில்லை. அவரைப்போலவே அவருடைய மனைவியும் பிள்ளைகளும் பறவைமீது நேசம் கொண்டவர்கள்.
பறவைகள் அவருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியை நிரப்பிய கணங்களுக்கு நிகராக துயரத்தை நிரப்பிய கணங்களும் இருந்தன. மிகப்பெரிய துயரம் அவருடைய மனைவியின் மரணம். அடிபட்டு விழும் குஞ்சுகளுக்கும் நோய்வாய்ப்படும் குஞ்சுகளுக்கும் மருத்துவம் மிகவும் அவசியம். அதில் தாமதம் இருக்கவே கூடாது. சில சமயங்களில் அலகைத் திறந்து மருந்தை உட்கொள்ள முடியாதபடி பிரக்ஞையே இல்லாமல் பறவைகள் கிடக்கும். அப்போது அவர் மனைவி கருணையின் அடிப்படையில் பறவைக்கு அளிக்கவேண்டிய மருந்தை தன் வாய்க்குள் முதலில் நிரப்பிக்கொண்டு பிறகு பறவையின் அலகைத் திறந்து அதன் வாய்க்குள் துளித்துளியாக விடுவார். மருத்துவர்கள் கைவிட்ட எண்ணற்ற பறவைகளை அவர் உயிர்பிழைக்க வைத்திருக்கிறார்.
அவருடைய கருணையே இறுதியில் அவர் மரணத்துக்குக் காரணமாக அமைந்துவிட்டது. பல ஆண்டு காலமாக அவருடைய வயிற்றில் தங்கிப் படிந்துவிட்ட நோய்முறி மருந்தின் துளிகள் அவரையறியாமலேயே அவருடைய ரத்தத்தில் கலந்து உயிரைக் குடித்துவிட்டன.
பறவைகளைப்பற்றி அவர் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் அனைத்தும் ஆச்சரியமளித்தன. இறுதியில் கூண்டின் கம்பிகளை விரல்களால் வருடியபடிஎங்கள் குடும்பத்தில் வாய்த்ததுபோலவே இந்தப் பறவைகளுக்கு அன்பும் ஆதரவும் புதிய குடும்பத்திலும் வாய்க்கவேண்டும்என்று சொன்னார்.