பேருந்து நிறுத்தத்தில் எலும்பும் தோலுமாக ஒரு பசு நின்றிருந்தது. வெள்ளைத்தாளில் திட்டுத்திட்டாக கரிய மையைச் சிந்தியமாதிரி இருந்தது அதன் நிறம். அதன் வாயிலிருந்து நூல்போல எச்சில் வழிந்தது. பசுவுக்குப் பக்கத்தில் நின்றிருந்தவன் அதன் கழுத்தின் இருந்த கயிற்றை இழுத்து அந்த இடத்திலிருந்து விலக்கி ஓட்டிச் செல்ல முயற்சி செய்தான். பசு அசைந்துகொடுக்காததால் நாக்கைத் தட்டி ஓசையெழுப்பியபடி கொம்பைப் பிடித்து இழுத்தான். பிறகு வாலை முறுக்கிவிட்டு பின்பக்கம் முதுகில் கைவைத்து தள்ளினான். ஆனால் பசு ஒரு அங்குலம் கூட நகரவில்லை. நின்ற இடத்திலேயே நின்றபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தது.
பேருந்திலிருந்து இறங்கிய மீனாட்சி, ஒதுங்கி ஓரமாக நின்று அந்தப் பசுவையே சிறிது நேரம் பார்த்தாள். அதன்மீது அவளுக்கு பரிதாபம் பொங்கியது. அவள் தன் அப்பாவை திடீரென நினைத்துக்கொண்டாள். அந்தப் பசுக்கள் எதற்காக அழைத்துச் செல்லப்படுகின்றன என்பதைப்பற்றி அவர் சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தபோது, ஒருகணம் மயக்கமே வருவதுபோல உணர்ந்தாள். மூன்று கிலோமீட்டர் நீளும் அந்தச் சாலையைக் கடந்ததும் ஒரு சோதனைச்சாவடி உண்டு. அதைக் கடந்ததும் ஒரு பெரிய தெலுங்குக்காரர் தாபா. கேரளா, கர்நாடகா,
ஆந்திராவுக்குச்
செல்லும் வாகனங்களில் வந்தவர்கள், அங்கே கட்டில்களில் உட்கார்ந்து நீளமான மரப்பலகையில் தட்டுவைத்து, கோழிக்கறி பிரியாணி சாப்பிடுவார்கள். அவர்களிடையே இருக்கும் வியாபாரிகளிடம், சாப்பிட உட்கார்வதுபோல உட்கார்ந்து மரத்தோடு கட்டப்பட்டிருக்கும் பசுவைச் சுட்டிக் காட்டி வியாபாரம் பேசிவிடுவார்கள். வியாபாரிகள்
பசுக்களோடு சென்றுவிடுவார்கள். இவர்கள் பணத்தோடு திரும்பிவிடுவார்கள்.
மணிக்கூண்டு சத்தத்தைக் கேட்டதும் ஒன்றரை மணியாகிவிட்டதை உணர்ந்தவளாக வீட்டைநோக்கி வேகவேகமாக நடந்தாள் மீனாட்சி. அப்பாவின்
ஞாபகத்தை அவளால் விலக்கவே முடியவில்லை. அவர் நினைவுகள் வந்ததுமே மனத்தில் பாரம் குவிவதை உணர்ந்தாள். மூத்தபெண் என்பதால் அவள்மீது அப்பாவுக்கு அளவுகடந்த பாசம் இருந்தது. அவளை எப்படியாவது பெரிய படிப்பு படிக்க வைத்து ஆளாக்கிப் பார்க்கும் விருப்பத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் விதைத்துக்கொண்டே இருந்தார் அவர். “நீ ஒரு டீச்சரா வரணும்மா. ஏழை புள்ளைங்களுக்கெல்லாம் நீ சும்மாவே சொல்லிக்குடுக்கணும்” என்று ஒருமுறை சொன்னார். அன்று இரவே, “நீ தாசில்தார் ஆபீஸ்ல டைப்பு அடிக்கறதுக்கு போ” என்றார். “வேணாம் வேணாம், பேங்க்ல காஷியர் வேலை ஒனக்கு பொருத்தமா இருக்கும்” “பேசாம போலீஸ் வேலைக்கு போய்டும்மா. ஒன் அதிகாரத்துல எல்லாரயும் கட்டுப்படுத்தி வைக்கணும்” “ரேஷன் கட ஆபீஸராய்டு. ஒரொருத்தனும் எப்படிலாம் கொள்ள அடிக்கறானுங்க தெரியுமா? எல்லாரயும் புடிச்சி நீ உள்ள அனுப்பணும்” என்று மாற்றிமாற்றி அலுப்பே இல்லாமல் சொன்னார். “ஒரு ஆள் எத்தன வேலைக்கு போவமுடியும்பா” என்ற கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் விழுந்துவிழுந்து சிரித்தார். அப்புறம், “சரிசரி, ஒனக்கு எது புடிக்குமோ, அந்த வேலைக்கு போ” என்று கடைசியாகச் சொன்னார். தொடர்ந்து மெதுவான குரலில் ”அந்த காலத்துல என்ன படிடா படிடான்னு தலபாடா அடிச்சிகிட்டாரு எங்கப்பா. எதுவுமே இந்த மரஎண்டையில ஏறல. பள்ளிக்கூடம் போறன்னு பொய்சொல்லிட்டு ஏரி கொளம் தோப்புன்னு பசங்க கூட திரிஞ்சி என்
வாழ்க்கய நானே அழிச்சிகினன்” என்றார். கடைசியில் பெருமூச்சோடு ”ஒரு படிப்பும் ஒரு வேலயும் ஒன்ன அப்படியே தூக்கிம்போயி இருபத்தஞ்சி வருஷத்தத் தாண்டி உக்காரவச்சிரும்மா” என்று சொன்னார்.
ஒருநாள் புது கட்டடத்தில் ஆறாவது மாடியில் சாரம் கட்டுகிற இடத்திலிருந்து அவர் விழுந்து மரணமடைந்ததும் எல்லாமே நிலைகுலைந்துவிட்டது. ப்ளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்த சமயம் அது. ஆயிரத்து அறுபத்தெட்டு மதிப்பெண்களை வைத்துக்கொண்டு, அடுத்து என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நின்றுவிட்டாள். ஏழாவதிலும் நாலாவதிலும் படிக்கும் தம்பிகளைக் தொடர்ந்து படிக்கவைக்கவேண்டியிருந்தது. வீட்டு வாடகை, சாப்பாட்டுச்செலவு, துணிமணி என்று ஏராளமான செலவுகள். எல்லா பாரங்களும் அம்மாவின் தலையில் விழுந்துவிட்டது. ஐந்தரை மணிக்கு ஒரு வீடு, அப்புறம் ஆறரைக்கு, ஏழரைக்கு, எட்டரைக்கு என அடுத்தடுத்து மூன்றுவீடுகளில் வாசல் பெருக்கி, பாத்திரம் தேய்த்து துணிதுவைப்பதை வேலையாகக் கொண்டிருந்தாள் அவள். சாயங்காலத்திலும் இரண்டு வீடுகளில் சமையல் வேலை. அவள் கொண்டுவரும் ஆறாயிரம் ரூபாய்தான் ஒரே ஆதாரம். தனது படிப்பைத் தொடரமுடியாது என்பது அவளுக்குத் தெளிவாகவே தெரிந்துவிட்டது.
தான் வேலை செய்யும் அடுக்ககத்திலேயே உள்ள வேறு வீடுகளில் எப்படியாவது பேசி மீனாட்சியை வேலைக்கு வைத்துவிடலாம் என்று கனவுகண்ட அம்மாவின் திட்டங்களுக்கு அவள் உடன்படவில்லை. வேறு ஏதேனும் வேலையைத் தேடிக்கொள்வதாகச் சொல்லி தன் அம்மாவை ஏற்றுக்கொள்ளும்படி செய்தாள். எந்த நிறுவனமாக இருந்தாலும், கேட்டதும் தன்னை உடனடியாக வேலைக்கு எடுத்துக்கொள்வார்கள் என அவள் நினைத்திருந்தாள். ஆனால், பல படிகளில் ஏறி இறங்கிவிட்டாள். பலரையும் சந்தித்து கேட்டுப் பார்த்துவிட்டாள். ஒரு
மாதம் இடைவிடாத
அலைச்சல். ஆனால் ஒரு இடத்திலும் அவளுக்கு வாய்ப்பு சரியாக அமையவில்லை. மறைமுகமாக அதுவரைக்கும் முணுமுணுத்துக்கொண்டிருந்த அம்மா, அதற்குப் பிறகு வெளிப்படையாகவே வார்த்தைகளைக் கொட்டினாள்.
பயணச்சீட்டுக்கான பணத்தை மிச்சப்படுத்தும் எண்ணத்தோடு, நகரிலிருந்து ஒருநாள் வீட்டுக்கு நடந்துவந்த சமயத்தில் இந்திராகாந்தி சிலைக்கு அருகில் தனது பள்ளியின் பழைய இங்கிலீஷ் சாரை தற்செயலாக சந்தித்தாள். மீனாட்சியின் நெருக்கடிகளைப் புரிந்துகொண்டு ஆதரவாகப்
பேசினார். பக்கத்தில் இருந்த ஒரு தேநீர்க்கடைக்கு அழைத்துச்சென்று தேநீர் வாங்கிக் கொடுத்தார். வெளியே வந்ததும், ஒரு ஆட்டோவில் புறநகரில் இருந்த ஒரு பள்ளிக்கு மீனாட்சியை அழைத்துச் சென்று, அதன் முதல்வரிடம் பேசி அவளுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். எல்.கே.ஜி., யு.கே.ஜி பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் வேலை. மாதத்துக்கு இரண்டாயிரம் ரூபாய் சம்பளம்.
அம்மாவுக்கு அதில் விருப்பமே இல்லை. ”இந்த ரெண்டாயிரத்துல நாக்கத்தான்டி வழிச்சிக்கணும். காலையில நாலு ஊடு சாயங்காலத்துல நாலு ஊடுன்னு வேல பார்த்தாவே சொளயா எட்டாயிரம் ரூபா கெடைக்கும். இவ்ளோ படிச்சவளுக்கு ரெண்டு பெரிசா, எட்டு பெரிசான்னுகூடவா தெரியலை?” என்று குத்திக்குத்திப் பேசினாள்.
மீனாட்சிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. “ஒரு புடிமானத்துக்குதாம்மா இந்த வேல. இதுல ஒட்டிகினே, இன்னும் கொஞ்சம் பெரிய சம்பளம் கெடைக்கறாப்புல வேற வேல தேடிக்குவன்” என்று சொன்னாள்.
“அது சரி” என்று அலுப்போடு எழுந்துபோனாள் அவள் அம்மா. மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
மீனாட்சி எதிர்பார்த்தபடி ஒரு வாய்ப்புகூட கூடிவரவில்லை. ஓய்விருக்கும் போதெல்லாம் பல புதிய பள்ளிகளின் படியேறிச் சென்று வேலை கேட்பதை ஒரு வேலையாகவே செய்தாள். சிலர் நேரிடையாகவே இல்லை என்று கைவிரித்தார்கள். சிலர் ”இன்னும் ரெண்டு மாசம் போவட்டும் பார்க்காலாம்..” என்று தட்டிக் கழித்தார்கள். ஒன்றிரண்டு இடங்களில் வேலை கொடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால் சம்பளம் இரண்டாயிரம்தான் தரமுடியும் என்று சொன்னார்கள். ப்ளஸ் டூ தகுதிக்கு அவ்வளவுதான் தருவார்கள் என்பது அவளுக்குத் தாமதமாகத்தான் புரிந்தது. இதற்கிடையில் அந்த வருஷமே முடிந்துபோய்விட்டது. கோடை விடுமுறை தொடங்கியபோது, அவள் வேலை பார்த்த பள்ளிக்கூடம் அவளை வேலையை விட்டு நீக்கிவிட்டது. இரண்டு மாத விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் தொடங்கும்போது புதிதாக வந்து சேர்ந்துகொள்ளலாம் என்று சொன்னார்கள். இரண்டுமாதம் சம்பளம் இல்லை என்பதைக் கேட்டு, அவள் மூச்சே நின்றுவிடும்போல இருந்தது.
அவள் வீட்டில் இருப்பதைப் பார்க்கப்பார்க்க, அவள் அம்மாவுக்கு ஆத்திரமாக
இருந்தது.
“பெரிய டாட்டா ஊட்டு பொண்ணுன்னு நெனப்பு. கையில அழுக்கு படாம காசி சம்பாதிக்கணும்ன்னு கெனா காணுது…..”
“நோவாம நோம்பு கும்புட எந்த சிறுக்கியாலயும் முடியாது…..”
“ஆச இருக்குதாம் தாசில் பண்ண…. அமுசம் இருக்குதாம் கழுத மேய்க்க….”
பார்வைகள் உரசிக்கொள்ளும்போதெல்லாம் கொதி உலையிலிருந்து குமிழியிட்டு பருக்கைகள் தெறிப்பதுபோல ஜாடைமாடையாக அவள் வார்த்தைகள் தெறித்தன.
எப்போதோ ஒரு நோட்டில் எழுதிவைத்திருந்த இங்கிலீஷ் சாரின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து விவரம் சொல்லி உதவி கேட்டாள். அன்று மாலையே தன்னை வந்து பார்க்கும்படி சொன்னார் அவர். குறித்த நேரத்துக்கு அரைமணிநேரம் முன்பாகவே அவருடைய வீட்டுக்குச் சென்றாள் மீனாட்சி. சார் தன் மனைவியிடம் அவளை அறிமுகப்படுத்தினார். பிறகு, ”சண்முகசுந்தரம் சார் ஹோம்ல கொஞ்சம் பேசிப் பாக்கறியா? பாவம், இவளுக்கு ஏதாச்சிம் ஒரு வேல கிடைச்சா நல்லது. ரொம்ப புத்திசாலியான பொண்ணு…….” என்று தூண்டினார். வேண்டுமென்றே அவளைச் சோதித்துப் பார்ப்பதுபோல ஆங்கிலத்தில் சில எளிய கேள்விகளைக் கேட்டார் சாரின் மனைவி, மீனாட்சியின் பதில்கள் அவருக்கு நிறைவை அளித்தன.
“அங்க போனபிறகு அது தெரியலை, இது தெரியலைன்னு சொல்லு வந்திடக்கூடாது பாரு, அதான் இப்ப நானே கேட்டு பார்த்தேன்” அவர் சிரித்தபடி கைப்பேசியை எடுத்துக்கொண்டு எண்களை அழுத்தியபடி அறைக்குள் சென்றுவிட்டார்.
மீனாட்சி குனிந்து தன் உள்ளங்கையைப் பார்த்துவிட்டு விரல்களை மடக்கிக்கொண்டாள். இந்த வேலை எப்படியாவது தனக்கு கிடைக்கவேண்டும் என்று மனசுக்குள்ளேயே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டாள். கிடைக்காமல் போய்விடுமோ என்கிற அச்சமும் அடியில் ஓடத் தொடங்கியது. உட்காரவே முடியவில்லை. மனம் படபடக்க கூடத்தை வேடிக்கை பார்த்தாள். பெரிய சோஃபா. சுவரோடு ஒட்டியபடி அகலத்திரை தொலக்காட்சி. ஏராளமான சாமி படங்கள். விதவிதமான பொம்மைகள் அடுக்கப்பட்ட கண்ணாடிப்பேழை. ஒரு அடுக்கில் சிறுவயதுத் தோற்றமுள்ள இரண்டு சிறுமிகளின் படங்கள் ஆறேழு இருந்தன. அடர்த்தியான புருவமும் அழகான கண்களும் கொண்டிருந்த அச்சிறுமிகளின் தோற்றம் மிகுந்த வசீகரமுடையதாக இருந்தது. ”எங்க டாட்டர்ஸ். ட்வின்ஸ். ரெண்டு பேருமே அந்த காலத்துல ப்ளஸ் டூ படிக்கும்போது ஸ்டேட் ரேங்க். இப்ப லண்டன்ல எம்.எஸ்.முடிச்சிட்டு அங்கயே
வேல செய்றாங்க” என்று சார் சொன்னதைக் கேட்ட பிறகுதான், வெகுநேரமாக அந்தப் படங்களையே தான் உற்றுப் பார்த்ததை உணர்ந்தாள். பிறகு புன்னகையோடு தலையசைத்தபடி “ரெண்டு பேருமே உங்களமாதிரியே இருக்காங்க சார்” என்று சொன்னாள்.
அறையிலிருந்து கால்கொலுசு ஒலிக்க சாரின் மனைவி வெளியே வந்தபடி “தரேன்னு சொல்லியிருக்காங்க. ஆனா, ஆள ஒருதரம் நேரா பார்த்துட்டுதான் முடிவா சொல்லமுடியும்ன்னு சொல்றாங்க” என்றார். அதைக் கேட்டு மீனாட்சியின் மனம் ஓரளவு நிம்மதியடைந்தது. “என்ன வேலை மேடம்?” என்று அவரை ஏறிட்டுப் பார்த்தாள்.
“படிக்கற வேலைதான். பயப்படாத. அந்த ஹோம் பார்வையில்லாதவங்களுக்கான எடம். அங்க இருக்கறவங்க எல்லாருமே பார்வையில்லாதவங்கதான். சில பேரு ஸ்டூடண்ட்ஸ். அவுங்களுக்கு தேவைப்பட்ட பாடங்கள பொறுமையா படிச்சிக் காட்டணும். பெரியவங்க சிலபேரும் இருக்காங்க. அவுங்களுக்கு அவுங்க விருப்பப்பட்ட புத்தகங்கள படிச்சிக் காட்டணும். அவ்ளோதான். செய்வியா…….?”
“செய்றேன் மேடம்”
“மொத்தத்துல நாலுமணிநேரம்தான் வேல இருக்கும். காலையிலோ, இல்ல மதியானமோ, ஏதாவது ஒரு நேரத்துல போனா போதும்.”
“சரிங்க மேடம்”
புன்னகையோடு அருகில் வந்து மீனாட்சியின் தோளில் தட்டிக்கொடுத்தார் அவர். பிறகு இங்கிலீஷ் சாரிடம் “இப்பவே ஒரு நடை வண்டியில அழச்சிம் போயி நேர்ல பேசிட்டு வரீங்களா?” என்று கேட்டார். ”சரி” என்றபடி அறைக்குள் சென்ற சார் உடைமாற்றிக்கொண்டு வந்தார். பிறகு, ஹோண்டாவின் சாவியை மேசையிலிருந்து எடுத்தபடி “வா மீனாட்சி” என்று அழைத்தார்.
குறிஞ்சி நகர் கடைசி தெருவில் ரயில் தண்டவாளங்களைப் பார்த்தபடி ஒரு பெரிய வீட்டுக்கு முன்னால் வண்டி நின்றது. திலகர் பார்வையற்றோர் இல்லம் என்கிற பெயர்ப்பலகை வாசலிலேயே காணப்பட்டது. சுற்றுச்சுவரை ஒட்டி ஏராளமான தென்னைமரங்களும் நெல்லிமரங்களும் இருந்தன. கதவைத் திறந்து உள்ளே சென்றதும், எங்கிருந்தோ மெல்லிய வயலின் இசை ஒலிப்பது கேட்டது. அதன் இனிமையில் பதற்றமெல்லாம் போன இடமே தெரியவில்லை. ஏதோ ஒரு கோயில் பிராகாரத்தில் நிற்பதுபோல இருந்தது. வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணிடம் தகவல் சொல்லிவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தார்கள். அங்கிருந்த பூத்தொட்டிகள், ஓவியங்கள், புத்தகப்பேழை, கணிப்பொறி, அச்சுப்பொறி, புத்தகங்கள், குறுந்தகடுகள், சுழல்நாற்காலிகள் என எல்லாவற்றிலும் அவள் பார்வை ஒருமுறை பதிந்து மீண்டது. அவளுடைய மன உறுதியை மீறி, அவள் கண்களில் ஒரு சின்ன பதற்றமும் கவலையும் புலப்பட்டன. சட்டென்று சுவரையொட்டி உள்முகமாகத் திறக்கப்பட்ட கதவைக் கடந்து அறைக்குள் வந்தார் ஒருவர். மீசையற்றிருந்த அவருடைய சிவந்த முகம், ஏதோ ஒரு நாடகநடிகரின் தோற்றத்தைப்போல இருந்தது. இங்கிலீஷ் சாரின் கைகளைப்பற்றி விசாரித்துவிட்டு ”இதுதான் அந்தப் பொண்ணா?” என்று கேட்டபடி தலையை அசைத்துக்கொண்டார். மீனாட்சி இரு கைகளையும் குவித்து தலைகுனிந்து வணங்கினாள்.
மெல்லிய குரலில் “பேர் என்னம்மா?” என்று கேட்டார் அவர்.
“எஸ்.மீனாட்சி சார்.”
“இங்க வேலை பாக்கறதுல ஒனக்கு ஏதாவது கஷ்டமா இருக்குமா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல சார். நான் செய்றேன் சார்.”
“காலையில அரநாளுமட்டும்தான் ஒனக்கு வேல. அப்புறம் நீ வீட்டுக்கு போயிடலாம்…”
ஒருகணம் அருகில் சாரின் பக்கம் திரும்பி நன்றியுடன் பார்த்துவிட்டு, “சரி சார்” என்றாள். மகிழ்ச்சியில் அவளுக்கு தன் இதயமே வெடித்துவிடும்போல இருந்தது.
“இந்த பக்கத்த ஒரு அஞ்சி நிமிஷம் படி, பாக்கலாம்” என்றபடி மேசையிலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து, ஏதோ ஒரு பக்கத்தைத் திருப்பி அவளிடம் கொடுத்தார். ஒரு
சின்ன தடுமாற்றம்கூட இல்லாமல் நிறுத்தி நிதானமாகவும் பொருத்தமான ஏற்ற இறக்கங்களோடும் மீனாட்சி படித்துமுடித்தாள். இங்கிலீஷ் சாரும் ஹோம் சாரும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர். ஹோம் சார் புத்தகத்தை மீனாட்சியிடமிருந்து வாங்கி மேசைமீது வைத்துவிட்டு, “நாளையிலேருந்து நீ வந்துரும்மா. ஒன்பது மணிலேருந்து ஒருமணி வரைக்கும் உன் வேலை நேரம்” என்றார். உடனே கண்கலங்கியபடி இரண்டு சார்களுக்கும் பொதுவாக “ரொம்ப நன்றி சார்” என்று சொன்னாள் மீனாட்சி. இங்கிலீஷ் சார் தணிந்த குரலில் சம்பளத்தைப்பற்றி நினைவூட்டியதும், “ஓ, சாரி. சாரி. மறந்துட்டேன்” என்று புன்னகைத்தார் ஹோம் சார். பிறகு, “தற்சமயத்துக்கு மூவாயிரம் ரூபாய் தரலாம்” என்றார். இங்கிலீஷ் சார் மீனாட்சியின் முகத்தைப் பார்த்தார். சரியென்று தலையசைத்தாள் மீனாட்சி.
அருகிலிருந்த பேருந்து நிறுத்தம் வரைக்கும் வண்டியிலேயே அழைத்து வந்தார் இங்கிலீஷ் சார். இறங்கிக்கொண்ட மீனாட்சி ”ரொம்ப நன்றி சார். மேடத்துகிட்டயும் சொல்லுங்க சார்” என்று சொன்னபோது அவள் கண்கள் கலங்கிவிட்டன. “மதியம் அரைநாளுக்கு செய்யறமாதிரி வேற ஏதாவது வேல கிடைக்குமான்னு நானும் பாக்கறேன் மீனாட்சி. ரெண்டு சம்பளமா இருந்தா கொஞ்சம் சவுகரியமா இருக்கும். அடிக்கடி பேசு….” என்று விடைகொடுத்துவிட்டுச் சென்றார்.
வீட்டுக்குத் திரும்பி தனக்கு வேலை கிடைத்திருக்கும் செய்தியை அம்மாவிடம் சொன்னாள். அவள் முகம் வழக்கம்போல இறுக்கமாகவே இருந்தது. நீண்ட நேரத்துக்குப் பிறகு மீனாட்சியைப் பார்த்து, “ஒரு விஷயம் சொல்றேன், புரிஞ்சிக்கறியா?” என்றாள்.
“என்னம்மா, சொல்லு?”
“இங்க பாருடி. இந்த மாதிரி சிங்காரிச்சிகிட்டு போவறது, ரெண்டாயிரத்துக்கும் மூவாயிரத்துக்கும் வேலை செஞ்சிட்டு வர்ரதுலாம் நம்மளாட்டம் அன்னாடங்காச்சிங்களுக்கு சரிப்பட்டு வராது, புரியுதா? ஒழுங்கா நான் சொல்ற பேச்ச கேட்டு ஊட்டுவேல, சமையல் வேலைன்னு எறங்கனாதான் நம்ம கையிலயும் நாலு காசி தங்கும்….”
மீனாட்சியின் மனம் உடைந்து கண்களில் நீர் தளும்பியது. “அந்த வழியில முன்னேறவே முடியாதும்மா. வெறும் பணம் கெடச்சா போதுமா?” என்றாள்.
“பணம் இல்லைன்னா நடுத்தெருவுலதான் நிக்கணும்டி. ஒன் வழியில போயி கொண்டாந்து கொட்டனதுலாம் தொம்பையில கெடந்து வழியுதுபோல….”
“ஸ்கூலு, பேங்க், ஆபீஸ்ல வேல தேடிக்கணும்ன்னு அப்பாதான் அடிக்கடி சொல்வாரு.”
”அந்த ஆளு ஒனக்கு செல்லம் குடுத்து செல்லம் குடுத்து ஒன் தலய கெடுத்துட்டு போயிட்டான். அதான் இந்த ஆட்டம் ஆடற….”
மீனாட்சியால் தொடர்ந்து பேசமுடியவில்லை. நெஞ்சிலிருந்த வார்த்தைகள் எல்லாம் காணாமல்போனதுபோல இருந்தது. தேம்பியபடி சுவரையொட்டி உட்கார்ந்துவிட்டாள். பசி கூட இல்லை. ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த தனது
பழைய புத்தகப்பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து குருட்டாம்போக்கில் ஒரு பக்கத்தைத் திருப்பிவைத்துக்கொண்டு படிக்கத் தொடங்கிவிட்டாள்.
திலகர் ஹோம் வேலை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அங்கிருப்பவர்களுடன் உரையாடிப் பழகிப்பழகி சின்னச்சின்ன ஆங்கில வாக்கியங்களை பிழையின்றிப் பேச அவள் தெரிந்துகொண்டாள். சாயங்காலம் தம்பிகளிடம் அவ்வாக்கியங்களைப் பேசிக் காட்டியபோது அவர்கள் ஆச்சரியத்தில் வாய் பிளந்தார்கள். “டி.வி.ல பேசறமாதிரி அழகா பேசறக்கா” என்று சிரித்தான் சின்னத்தம்பி.
இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. மதிய நேரத்தில் அவள் வீட்டில் வேலையின்றி புத்தகம் படித்தபடி பொழுதைக் கழிப்பதைப் பார்க்கும்போதெல்லாம் அவள் அம்மாவின் முகம் நெருப்புப் பிடித்ததுபோல மாறிவிடும். ”வக்கீல் ஊட்டுல ஆள் வேணுங்கறாங்க. டாக்டரு வீட்டுல ஆள் வேணுங்கறாங்க……” என்று தினந்தினமும் புதுப்புது தகவல்களை அறிந்துவந்து சொன்னாள். அவளைப் பார்க்கும்போதெல்லாம் ஒருபக்கம் பாவமாகவும் இன்னொரு பக்கம் பயமாகவும் இருந்தது. வாரத்துக்கு ஒருமுறையாவது அல்லது பத்துநாளைக்கு ஒருமுறையாவது இங்கிலீஷ் சாருடன் தொலைபேசியில் பேசி, பகுதிநேர வேலை வாய்ப்பைப் பற்றி நினைவூட்டியபடியே இருந்தாள். ஒருநாள் மாலை அவர் வீட்டுக்குச் சென்று பார்த்துவிட்டுத் திரும்பினாள்.
ஒருநாள் டெலிபோன் ஆபீசர் வீட்டில் ஐந்துமாதக் குழந்தையை மதியவேளையில்மட்டும் பார்த்துக்கொள்ள ஒரு ஆள் தேவைப்படும் செய்தி அவள் காதில் விழுந்துவிட்டது. அம்மா உடனே ஆபீசர் வீட்டுக்குச் சென்று விஷயத்தை உறுதிப்படுத்திக்கொண்டு, சம்பளவிஷயத்தையும் பேசிவிட்டு வந்தாள். அன்று மாலை வீட்டுக்குத் திரும்பியதுமே, ஏதோ ஒரு புத்தகத்தைப் புரட்டியபடி உட்கார்ந்திருந்த மீனாட்சியிடம் சொல்லி, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும்படி சொன்னாள். “அஞ்சாயிரம் கேட்டு, நாலாயிரத்துக்கு ஒத்துகிட்டாங்க. நாலாயிரம்ன்னா சின்ன பணமா? வேற எவளாவது தட்டிப் பறிச்சிக்கறதுக்கு முன்னால போய் பாருடி” என்று சொன்னபோது அவள் கண்கள் பிரகாசமாக ஒளிர்ந்தன. மீனாட்சி தனக்கு அந்த வேலை வேண்டவே வேண்டாம் என தீர்மானமாக மறுத்துவிட்டாள். ”வளர்ந்த புள்ளயாச்சேன்னு பார்க்கறன். இல்லைன்னா தோல உரிச்சி உப்புக்கண்டம் போட்டிருவன்” என பலவிதமாக மிரட்டி பணியவைக்க முயற்சி செய்தாள் அம்மா. ஆனால் அதுவும் பலிக்கவில்லை. அந்த மாதிரியான வேலைகளை ஏற்பதில்லை என மீனாட்சி உறுதியாகச் சொல்லிவிட்டாள். அம்மா கோபத்துடன் ஏதேதோ பேசத் தொடங்கினாள். மீனாட்சி சுவரோடு சரிந்து கண்களை மூடிக்கொண்டாள்.
நாளுக்குநாள் நிலைமை மோசமாகிக்கொண்டே வந்தது. ஒருநாள் தம்பிகள் கூடி அவளிடம் கெஞ்ச வந்துவிட்டார்கள். இன்னொருநாள் அந்த லைன்வீடுகளில் வாடகைக்கு வசிக்கிற ஒவ்வொருவரும் வந்து அம்மாவுக்காகப் பரிந்து பேசினார்கள். மற்றொரு நாள் ஆப்பக்கடை ஆயா வந்து புத்தி சொல்லிவிட்டுப் போனார். சோப்பு வாங்க கடைக்குப் போயிருந்த சமயத்தில், ஒரு நிமிஷம் அவளை நிற்கும்படி சொல்லிவிட்டு, கடைக்காரர் மாமா “அம்மா பேச்ச கேக்கக்கூடாதா கண்ணு?” என்று நயமாகப் பேசி அனுப்பினார். ஒருநாள்
முழுக்க பேசிப்பேசியே அம்மா அவளுக்கு நெருக்கடி கொடுத்தாள். மற்றொருநாள் எதுவுமே பேசாமல், மெளனமாகவே இருந்து அழுத்தம் கொடுத்தாள். மீனாட்சி அமைதியில்லாமல் தவித்தாள். ஒருமுறை தொலைபேசியில் சாரை அழைத்து விவரங்களைச் சொல்லி அழுதாள். “நாலஞ்சி எடத்துல சொல்லி வச்சிருக்கேம்மா. இன்னும் ரெண்டு நாள்ல எங்கயாவது ஒரு இடத்துல சீக்கிரம் அமைஞ்சிடும்மா” என அவர் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் அந்தச் சமயத்தில் தெம்பாக இருந்தன. மற்றபடி, வீட்டில் தங்கியிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவள் கொதிநிலையிலேயே இருந்தாள்.
யோசனைகளில் மூழ்கியபடி நடந்துவந்ததில் தெரு நெருங்கிவிட்டதே தெரியவில்லை. காமாட்சி அக்கா வீட்டிலிருந்து வந்த தொலைக்காட்சி சத்தத்தை வைத்து இரண்டுமணி சிரியல் தொடங்கிவிட்டதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. இன்றைக்கு எப்படியெல்லாம் அம்மா உரையாடலை உருவாக்கக்கூடுமோ என்று அஞ்சியபடி, பசியைக்கூட பொருட்படுத்தாமல் அவசரமே இல்லாமல் நடந்தாள்.
சாக்கடைப் பாலத்தைக் கடந்து நடக்கிற சமயத்தில்தான் தன் வீட்டு வாசலில் உட்கார்ந்து அம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பவரை மீனாட்சி பார்த்தாள். அந்த வழுக்கைத்தலையையும் வேட்டியையும் பார்த்ததுமே, வந்திருப்பவர் திருபுவனை மாமா என்று தெரிந்துவிட்டது. இது அம்மாவின் திட்டமேதான். மாமாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு பணிந்துவிடுவாள் என்று நினைத்து, அவரை வரவழைத்திருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். ஒரு கணம் தன் உடல் ரத்தமெல்லாம் வற்றி, ஒரு உலர்ந்த கொடியாக மாறிவிட்டதுபோல தோன்றியது. ஐம்பதடி தொலைவில் இருக்கும் வீட்டை அடைவதற்குள் ஐந்துமணி நேரம் நடந்ததுபோன்ற களைப்பில் சோர்ந்துவிட்டாள்.
“வாங்க மாமா, எப்ப வந்தீங்க? எப்படி இருக்கிங்க?” என்று விசாரித்தபடி வாசலை மிதித்தாள்.
“வந்து அரமணிநேரம் இருக்கும் மீனாட்சி. சிதம்பரத்துல ஒரு காதுகுத்துக்கு போயிருந்தன். திரும்பற வழியில ஒரு எட்டு ஒங்களயும் பாத்துட்டு போவலாம்ன்னு நெனச்சி ஓடியாந்தென். அவ வர நேரம்தான். பாத்துட்டு போலாம்ன்னு சொல்லிச்சி அக்கா. அதனால இப்படியே உக்கார்ந்திட்டேன்…..”
மீனாட்சி சிரித்தாள். “அத்த, புள்ளைங்கள்லாம் நல்லா இருக்காங்களா மாமா?”
“எல்லாரும் சவுகரியமா இருக்காங்கம்மா. சின்ன பையன்தான் இங்க வந்து ரெண்டுமூணு நாள் இருக்கணும்ன்னு சொல்லிட்டே கெடக்கறான். இந்த தீபாளி போவட்டும். அப்பறமா அத்தயயும் அவனையும் அனுப்பிவைக்கறேன்…”
‘சாப்ட்டிங்களா மாமா?”
“இப்பதான் முடிச்சிட்டு கை கழுவனேன். நீ போய் சாப்ட்டுட்டு வா. ஒங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்……”
அவள் பதில் சொல்லாமல் வீட்டுக்குள் சென்று முகம்கழுவி
உடைமாற்றி,
தட்டில் சோறுபோட்டுக்கொண்டு மெதுவாகச் சாப்பிட்டு முடித்தாள். பிறகு மெளனமாக வாசலுக்கு வந்து மாமாவுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டாள்.
மாமா அவளிடம் “எவ்ளோ பணம் சேர்த்து வச்சிருக்க மீனாட்சி?” என்று புன்னகையோடு கேட்டார். ஒருகணம் திகைத்து, பிறகு மீனாட்சியும் பதிலுக்கு புன்னகை செய்தாள்.
“எங்கிட்ட ஏது மாமா பணம்? கிடைக்கிற சம்பளத்தை அப்படியே அம்மாகிட்ட குடுத்துருவேன். நான் எதயும் வச்சிக்கிறதில்லையே...”
“அவுங்களும் கையில சல்லிக்காசு கிடையாதுன்னு சொல்றாங்க. வரவுபூரா குடும்பத்துக்கே சரியா போயிடுதாம்……”
மீனாட்சி குழப்பத்தோடு அவரை ஏறிட்டுப் பார்த்தார்.
“இங்க பாரு மீனாட்சி, இந்த குடும்பச்செலவு இருக்குதே, அது ஒரு பெரிய பள்ளத்த மண்ணள்ளிப் போட்டு மூடறமாதிரி. எவ்ளோ வாரி கொட்டனாலும் அடங்காது. நம்ம கையாலே எவ்ளோ முடியுமோ, அவ்ளோ வாரி வாரி அந்த பாதாளத்துல போட்டுகிட்டே இருக்கணும்……..”
மீனாட்சி உதடுகளைக் கடித்தபடி சுவர்ப்பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“நீ ஒரு நாலாயிரம் கொண்டாந்து குடுக்கற. அவ ஒரு ஆறாயிரத்த எப்படியோ பொரட்டறா. எல்லாமே அந்த பள்ளத்துலதான் உழுது. இன்னும் கொஞ்சம் கெடச்சி, எடுத்தாந்து கொட்டினா, நமக்குதானேம்மா நல்லது….”
மீனாட்சி கையிலிருந்த பிளாஸ்டிக் வளையல்களை உருட்டினாள்.
”என்னயே எடுத்துக்க. கம்பெனியில தச்சது போதும்ன்னு ஊட்டுல வந்து ஒக்காந்துகினா போதுமா? நம்ம ஊட்டு பள்ளம்தான் பெரும்பள்ளமா இருக்குதே? ஒரு சட்டைக்கு பத்து ரூபா குடுக்கறாங்க. வெட்டுதுணிய வாங்கியாந்து ஊட்டுல ஒரு மிஷின போட்டு தச்சி எடுத்தும்போயி குடுக்கறேன். அந்தப் பணமும் கையில பொரளறதால வண்டிய எப்படியோ ஓட்டமுடியுது…….”
ஒருகணம் நிமிர்ந்து மாமாவைப் பார்த்தாள். கருப்பும் வெள்ளையுமாக கலந்து முடிமுளைத்து அடர்த்தியாக இருந்த அவர் முகம் பாவமாக இருந்தது.
“ஒரு கொழந்தய பார்த்துக்க ஐயாயிரம் ரூபா தரேனு யாரோ ஒருத்தவங்க சொல்றாங்களாமே. இந்த காலத்துல ஐயாயிரம் ரூபா சின்ன பணமா மீனாட்சி, சொல்லும்மா? நாய் வித்த காசு கொறைக்கவா போவுது? உலகத்துல யாரயும் ஏமாத்தாம, யார்கிட்டயும் பொய் சொல்லாம நேர்மையான வழியில சம்பாதிக்கறதுல என்னம்மா தப்பு?”
மீனாட்சியின் கண்கள் தளும்பி நிறைந்தன.
“ஒங்க அம்மா மூஞ்சிய பார்த்தியா? எவ்ளோ கஷ்டத்துலயும் கலகலப்பா இருக்கற ஆளு காஞ்சிபோன கருவாடாட்டம் மாறிப் போயிட்டா. ஒங்கப்பா உயிரோடு இருந்த சமயத்துல, என்னைக்காவது படிச்சதுலாம் போதும், வேலைக்கு போன்னு சொல்லியிருக்காளா? யோசிச்சி பாரு. ஒன் இஷ்டத்துக்கு படிச்சிட்டுதான இருந்த? என்னமோ கெட்ட காலம், அவரு போயிட்டாரு. குடும்பத்த எடுத்து நிறுத்தறதுக்கு இப்ப ஒரு தூண் இல்ல. நீ ஒரு கை குடுத்தா நல்லதுன்னு நெனைக்கறா. அதுக்கு போயி மொரண்டு புடிக்கலாமா?......”
“அம்மாவுக்கு ஒருநாளும் கஷ்டம் குடுக்கமாட்டன் மாமா. எதாச்சிம் ஒரு வேலையில சீக்கிரம் சேந்துருவன் மாமா......”
“நாளைக்கி கெடைக்கற பலாக்காயவிட இன்னிக்கு கெடைக்கிற கெளாக்காயிய புடிச்சிக்கறதுதான புத்திசாலித்தனம்…….”
“மாமா”
“நீயா ஒன்ன மனசுல நெனச்சிகிட்டு, அப்பிடித்தான் நடக்கணும்ன்னு திக்குதெச தெரியாத வழியில போவ நெனைக்கற மாதிரி தெரியுது. வீம்புக்கு கல்ல கடிக்கறதுல என்ன லாபம்ன்னு சொல்லு? நான் சொல்றத கேளு. எல்லாமே ஒன் நல்லதுக்குத்தான். இன்னைக்குன் நான் சொல்ற்து எதிர்காலத்துலதான் ஒனக்கு புரியும். நாளையிலேருந்து……..”
“அவசரம் வேணாம் மாமா. கொஞ்சம் யோசிச்சிட்டு……..”
“இதுல யோசிக்கறதுக்கு என்னம்மா இருக்குது? ஒரு வாய்ப்பை வேணாம்ன்னு ஒதுக்கினா, நம்ம கீழ தள்ளிட்டு அத எடுத்துக்க பத்து பேரு எப்பவுமே தயாரா இருக்கறாங்க. அத ஞாபகத்துல வச்சிக்கணும்…..”
கண்களின் ஓரமாக கசிந்து இறங்கிய கண்ணீர்த்துளிகளை கைக்குட்டையால் துடைத்துவிட்டு மூக்கைப் பிழிந்தாள். மாமா அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்.
”மாமா” அவள் குரல் கரகரத்தது. “அப்பா சொல்லிச்சொல்லி எனக்குள்ள ஒரு செடிய வளர்க்கறமாதிரி ஒரு எண்ணத்த வளர்த்துட்டாரு. ஒரு டீச்சர் வேலைக்கு போயி ஏழ புள்ளைங்களுக்கு நல்லா சொல்லித் தரணும்….. ஒரு ஆபீஸ்ல வேலைக்கு சேர்ந்து ஊருஜனங்களுக்கு நல்லது செய்யணும்…… ஒவ்வொரு நாளும் அந்தக் கனவுதான் மாமா. சம்பளத்துக்காகமட்டும் வேலைன்னு இல்லாம, நாலு பேருக்கு உபயோகமா இருக்கறமாதிரி…….. நம்ம மனசுக்கு திருப்தியா இருக்கறமாதிரி……. எனக்கு சரியா சொல்லத் தெரியலை மாமா…….”
“அவரு இருந்திருந்தார்ன்னா, ஒன் வழியில ஒருத்தவங்ககூட குறுக்கில வரமாட்டாங்க மீனாட்சி. இல்லாத கொறய நீ புரிஞ்சிக்க மாட்டங்கறியேன்னுதான் சொல்லவேண்டிதா இருக்குது. ஒனக்கு கீழ இருக்கற பசங்கள மேல கொண்டுவரணும். அவனுங்கள பெரிய ஆளாக்கணும். அதெல்லாம் எவ்ளோ பெரிய பாரம். யோசிச்சி பாரு……”
மீனாட்சி தலையைக் குனிந்து பெருமூச்சு விட்டாள்.
“சரிம்மா, நீ படிச்ச பொண்ணு. பேசனதயே திரும்பத்திரும்ப பேசனா மனசு கஷ்டம்தான் அதிகமாவும். யோசிச்சி நல்ல முடிவா சீக்கிரமா எடு. ரெண்டுமூணு நாள்ல ஒன்னும் குடிமுழுவிடாது. ஒங்க அம்மாவே போயி அந்த ஊட்டுல சொல்லி வச்சிட்டு வரட்டும். நம்ம கஷ்டத்துக்கு ஐயாயிரம் ரூபா ரொம்ப ஏந்தலா இருக்கும்…..”
அதிகமாக வேறு எதுவும் பேசாமல் மாமா விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். அம்மா கதவருகிலேயே காலை நீட்டிப் படுத்துவிட்டாள். மீனாட்சி அறைக்குள் சென்று பெட்டி சந்தில் உட்கார்ந்துகொண்டாள். பெட்டியின்மீது தலைவைத்துச் சாய்ந்து கண்களை மூடினாள். வழக்கமாக அவள் காணும் கனவுக்காட்சியின் சித்திரங்கள் அசைவதைக் கவனித்தாள். அனைத்திலும் அவளே தெரிந்தாள். சின்னச்சின்ன படிகங்கள்போல. பதக்கங்கள்போல. பழக்கூடைபோல அவள் முகங்களால்மட்டுமே தன் மனம் நிரம்பியிருக்கிறதோ என நினைத்துக்கொண்டாள்.
மறுநாள் காலையில் வழக்கத்தைவிட முன்னாலேயே கிளம்பினாள் மீனாட்சி. இங்கிலீஷ்
சார் வீட்டுக்கு முதலில் சென்று, புதிய நெருக்கடிகளை எடுத்துச் சொன்னாள். அவள் சொல்வதையெல்லாம் அவர் ஆதரவோடு கேட்டுக்கொண்டார். சார் மனைவியும் அப்போது பக்கத்திலிருந்தார். “நீ ஹோமுக்கு போ. மதியம் நீ கெளம்பறதுக்குள்ள உன்ன அங்க வந்து பார்க்கறேன்……” என்று சொல்லி அனுப்பிவைத்தார். “கொஞ்சம் இரும்மா” என்றபடி அறைக்குள் சென்ற மேடம் மல்லிகைச்சரமொன்றை எடுத்து வந்து அவள் தலையில் வைத்துவிட்டாள். “எந்தக் கதவா இருந்தாலும் அது ஒனக்கு தெறக்கும். கவலைப்படாம போ. தெறக்கலைன்னு வை, தலையாலயே முட்டி ஒடைச்சி தெறக்கவச்சிடலாம்” என்று புன்சிரிப்போடு அனுப்பிவைத்தாள்.
ஹோமில் அன்று அவள் ஒரு மாணவருக்கு படித்துக் காட்டிய அறிவியல் பாடம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆற்றலுக்கும் பொருளின் எடைக்கும் வேகத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கும் பாடம். ஏற்கனவே பள்ளியில் படித்ததுதான் என்றாலும் அன்று அது புத்தம்புதிய கருத்தாகத் தெரிந்தது. எடை குறைவான பொருளின் இயக்கத்தில் வேகம் அதிகரிக்கும்போது ஆற்றல் அதிகமாகிறது. எடை அதிகமான பொருளின் இயக்கத்தில் அதே வேகம் இன்னும் கூடுதலான ஆற்றலை வழங்குகிறது. எடை மாற்றமில்லாத ஒன்றெனில் வேக அதிகரிப்புமட்டுமே ஆற்றலை அதிகப்படுத்தும் வழி. அன்றைய பாடங்களை அவள் உற்சாகத்தோடு படித்து, விளக்கங்களும் சொன்னாள். பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தின் சில பகுதிகளைப் படித்துக் காட்டும்படி கோரினார்கள் பெரியவர்கள். அதுவும் அவள் உத்வேகம் கொள்ள ஒரு காரணமாக இருந்தது.
வேலை முடியும் சமயத்தில் சார் வந்து வரவேற்பறையில் காத்திருப்பதாகச் செய்தி வந்தது. பத்து நிமிடத்தில் வேலையை முடித்துக்கொண்டு அவள் வரவேற்பறைக்கு வந்துவிட்டாள். சார்
முகம் மலர்ந்து “ஒனக்கு நல்ல நேரம்தான்” என்று சிரித்தார்.
“என்ன சார்?” என்று ஆவலோடு கேட்டாள் மீனாட்சி.
“ஒரு கம்பெனியில டேட்டா ஆப்பரேட்டர் வேலை. அவுங்க குடுக்கற விவரங்கள கம்ப்யூட்டர்ல பதிவு செய்யணும். அதுக்குதான் சொல்லிட்டு வந்திருக்கேன்….”
“ஐயையோ, எனக்கு கம்ப்யூட்டர் தெரியாதே சார்?”
“அதுக்கு ஏன் இந்த அளவுக்கு பதற்றம்? அவுங்களே ஒனக்கு ரெண்டு நாள் ட்ரெய்னிங் குடுப்பாங்க. நீ இருக்கிற வேகத்துக்கு ஒரு நாளே போதும்….” சார் மீண்டும் சிரித்தார்.
“நம்பவே முடியலை சார்….”
“ஆமாம். நம்ப முடியலைதான். நானும் ரெண்டு மாசமா சொல்லிட்டே இருந்தேன். பேசற சந்தர்ப்பத்துல எல்லாம் ஞாபகப்படுத்திகிட்டே இருந்தேன். ஒன்னுமே நடக்கலை. இன்னைக்கு திடீர்னு சொல்லிவச்ச மாதிரி நடந்துட்டுது. நல்ல நேரம்ன்னு ஒன்னு வந்தா எல்லாம் நல்லபடியா நடந்துடும்போல……… இனிமேல ஒன்னும் பயமில்லை. ஒனக்கு நல்ல நேரம்தான்…....” வரவேற்பறையில் இருந்தவரிடம் விடைபெற்றுக்கொண்டு எழுந்தார் சார்.
“சார்…” வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது மீனாட்சி மெதுவாக அழைத்தாள்.
“என்ன?”
”ஒன்னுமில்லை சார்….. சம்பளம்…..” என்று இழுத்தாள் மீனாட்சி.
“ஐயோ, நானும் கேட்டுக்கலைம்மா. அவுங்க சரின்னும் சொன்னதுமே, ஒன்ன கையோட கூப்டுகினு வந்துர்ரன்னு சொல்லிட்டு ஓடியாந்துட்டேன்…..” என்றபடி வண்டியை கிளப்பினார். மீனாட்சி பின்னால் உட்கார்ந்துகொண்டாள். வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போது “மூணு இல்ல நாலு கெடைக்கும்ன்னு நெனைக்கறேன்….. அரைநாள்தான் இல்லயா? முழு நாளா இருந்தா இன்னும் கொஞ்சம் கூட வரும்……” என்றார். மீனாட்சி தலையை அசைத்துக்கொண்டாள். ”மூணா நாலா” என்று அவள் மனம் இரு புள்ளிகளிலும் மாறிமாறி அலைந்தது.
ஹோமிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே இருந்தது அந்த நிறுவனம். நூறு பேருக்கும் மேல் அங்கே வேலை செய்துகொண்டிருந்தார்கள். அதன் மேலாளர் அவளிடம் கனிவாகப் பேசி, வேலையைப்பற்றி எடுத்துரைத்த விதம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலாளர்
ஒரு பொத்தானை அழுத்தி, ஒருவரை அழைத்து அவளுக்கு வேலை விவரங்களை விவரிக்கும்படி சொல்லி அனுப்பினார்.
எழுந்திருந்தபோது “இன்னைக்கே சேர்ந்துடறியாம்மா?” என்று கேட்டார் மேலாளர். அவள் உடனே ஒரு வேகத்தில் முதலில் “எஸ் சார்” என்றாள். மறுகணமே உதட்டைக் கடித்துவிட்டு அவசரமாக “நோ சார்” என்றாள்.
“என்ன குழப்பம்?” என்று புன்னகைத்தார் அவர்.
“அம்மாகிட்ட சொல்லிட்டு நாளையிலேருந்து வரேன் சார்.”
சம்மதம் என்பதுபோல அவர் தலையை அசைத்துக்கொண்டார். உதவியாளர் அவளை அழைத்துச் சென்று ஒரு கணிப்பொறியின் முன்னால் உட்காரவைத்தார். கணிப்பொறிக்குள் ஒரு மிகப்பெரிய உலகம் அவளுக்காக விரிந்திருப்பதைப்போல அவள் உணர்ந்தாள். அக்கணம் பரவசத்தில் அவளுக்கு இறகுகள் முளைத்ததுபோல இருந்தது. வானத்தில் தாவி, மேகங்களைத் தொட்டு, மேலே மேலே என பறந்துப்போவதுபோல தோன்றியது. அரைமணிநேரத்தில் அவள் செய்யவேண்டிய வேலை விவரங்களை பொறுமையாகச் சொல்லித்தந்தார் அந்த உதவியாளர்.
சார் வெளியே வரும்வரைக்கும் அவள் அங்கேயே காத்திருந்தாள். இந்தப் புதிய தகவல் அம்மாவிடம் எப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்கும் என்று கணிக்கமுடியாமல் குழப்பமாக இருந்தது.
“போவலாமா?” என்ற சாரின் குரலைக் கேட்ட பிறகுதான் அவள் நினைவுகள் கலைந்தன. “எஸ் சார்” என்று சட்டென்று எழுந்தாள். “என்ன, இன்னைக்கு பூரா எஸ் சார் நோ சார்னு ஒரே குழப்பம்?” என்று சிரித்தார் அவர். பதில் சொல்லாமல் அவளும் சிரித்துக்கொண்டாள்.
வண்டியை எடுக்கும் தருணத்தில் திடீரென நினைத்துக்கொண்டவளாக, ”தற்சமயத்துக்கு நாலு குடுக்கறதா சொன்னாங்க. போவப்போவ ஏத்திக்கலாம்ன்னாரு. சந்தோஷம்தான?” என்று கேட்டார். அதைக் கேட்ட நிம்மதியில் அவளிடமிருந்து முதலில் பெருமூச்சுதான் வெளிப்பட்டது. பூரித்த முகத்துடன் உடனே ‘எஸ் சார்” என்று சொல்லிவிட்டாள். மறுகணமே சார் சிரித்துவிட, அவள் நாக்கைக் கடித்துக்கொண்டாள்.
“ஏன் மீனாட்சி, எதுவாச்சிம் சாப்டுட்டு போறியா? ரொம்ப நேரமாய்டுச்சே”
‘வேணாம் சார், அம்மா எதிர்பார்த்துட்டிருப்பாங்க. இப்படி லேட்டாவும்ன்னு நான் சொல்லாமயே வந்துட்டேன். எதயாச்சிம் நெனச்சி கவலப்படுவாங்க”
சார் அவளை பேருந்து நிறுத்தம் வரைக்கும் அழைத்துவந்து இறக்கிவிட்டார். அவர் புறப்படும்போது “மேடம்க்கு தேங்ஸ் சொன்னன்னு சொல்லுங்க சார். அவுங்க பூ வச்சிவிட்ட அதிர்ஷ்டம்தான் இன்னைக்கு இந்த வேலை கெடைச்சிருக்குது….” என்று சொல்லி அனுப்பினாள்.
பேருந்து உடனே கிடைத்துவிட்டது. இருக்கையில் அமர்ந்திருக்கும்போது தன் முன்னால் ஒரு கணிப்பொறி இருப்பதுபோல ஒரு எண்ணம் அவள் மனத்தில் எழுந்து கலைந்தது. அவள் விரல்கள் தன்னிச்சையாக எழுத்துகளைத் தேடி ஆவலோடு அலைவதுபோல இருந்தது. வழக்கமான
நிறுத்தத்தில்
இறங்கி, வேகமாக நடந்து வீட்டை அடைந்தாள். அம்மா வாசல் கதவுக்கு அருகிலேயே அறிவுகால் கட்டையில் தலைவைத்து படுத்திருந்தாள். அவளை எழுப்பலாமா வேண்டாமா என்று ஒரு கணம் தயங்கி, பிறகு அவளைக் கடந்து உள்ளே சென்று துணிமாற்றினாள். உள்ளே சென்று முகம் கழுவிக்கொண்டு, குக்கரில் இருந்த சோற்றை தட்டில் எடுத்துப் போட்டுக்கொண்டு குழம்புடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டாள்.
வெளியே வந்தபோது, அம்மா எழுந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள். அவளைப் பார்த்ததும் “சாப்ட்டியா?” என்று கேட்டாள். “ம்” என்ற மீனாட்சி “நீ சாப்ட்டியாம்மா?” என்று கேட்டாள். “அந்த ஐயரு ஊட்டம்மா ரெண்டு அட குடுத்திச்சி. அத தின்னதிலிருந்தே வயிறு திம்முன்னு இருக்குது” என்றாள் அம்மா.
பேச்சை எப்படி தொடங்குவது என்று தெரியாமல் தவித்தபடி யோசனைகளில் மூழ்கியிருந்த சமயத்தில், “சாய்ங்காலமா அந்த டெலிபோன் ஆபீசரு ஊட்டுக்கு போவலாமா?” என்று அம்மாவே பேச்சை ஆரம்பித்தாள்.
“அம்மா, மதியானம் அரநாளு வேல செய்யறமாதிரி எனக்கு ஒரு வேல கெடைச்சிட்டுதும்மா. அங்க போய்ட்டு வந்ததுலதான் லேட்டாய்டுச்சி….” என்று பொறுமையாகச் சொல்லி முடித்தாள். அதைக் கேட்டதுமே அம்மாவின் முகம் மாறுவதைக் கவனித்தாள். அவள் எதையுமே பேசாததைக் கண்டு “கம்ப்யூட்டர்ல செய்ற வேலைம்மா. ரொம்ப நல்ல வேலைம்மா” என்று கூடுதலாக தகவல் சொன்னாள். அம்மாவின் கண்களில் ஒரு வேதனை பரவி அடங்குவதை ஒருவித இயலாமையோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஒன்ன சொல்லி என்னடி பிரயோஜனம்? நான் ஒன்னு நெனச்சா, அந்த தெய்வம் ஒன்ன நெனைக்குது….” பெருமூச்சுக்கிடையில் அவள் வார்த்தைகள் சிதறின.
“நான் சொன்ன வார்த்தய என் பொண்ணு மீறமாட்டாள்னு அந்த அம்மாகிட்ட பெரிசா சொல்லி நம்பிக்கை குடுத்துட்டு வந்தன். இப்ப போயி, நான் எந்த மூஞ்சியோட அந்த அம்மா முன்னால நிக்கமுடியும்? பெத்தவ கஷ்டம் என்னன்னு உனக்கு புரியவே புரியாது, போடி”. தலையை உதறி கொண்டையாகக் கட்டியபடி அம்மா முட்டியைப் பிடித்தபடி மெதுவாக எழுந்துகொண்டே சொன்னாள். அதைப் பார்க்க மீனாட்சிக்கு பாவமாக இருந்தது.
“சம்பளம் நாலாயிரம்மா…”
அம்மா அவளை ஒருகணம் பார்த்துவிட்டு திரும்பி சமையலறைக்குள் சென்று முகம் கழுவிக்கொண்டு திரும்பினாள்.
“என்னம்மா, ஒன்னுமே சொல்லமாட்டற?”
”ஒன் இஷ்டம் போல செய்டி. நான் எதுக்கு ஒன்ன தடுக்கணும்? ஆயுசுமுழுக்க கரிசட்டி கழுவியும் தரையை தொடைச்சியும் காலத்த ஓட்டறதுல எனக்கு ஒரு கவலயும் இல்ல. அந்த ஆத்தா என் தேகத்துல சக்தி குடுக்கணும், அது போதும்.” அம்மா முகத்தைத் துடைத்துக்கொண்டு கட்டியிருந்த புடவையை அவிழ்த்து உதறி சரிப்படுத்திக்கொண்டாள். பிறகு, ‘நான் அந்த அம்மாகிட்ட போயி வேற ஆள பாத்துக்க தாயின்னு சொல்லிட்டு வரேன். இவ்ளோ காலம் காக்க வச்சதுக்கு, அதுங்கிட்ட என்னென்ன பாட்டு வாங்கணுமோ. அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஊட்ட பார்த்துக்கோ. அந்த பசங்க வந்ததுன்னா, குண்டான்ல கெழங்கு அவிச்சி வச்சிருக்கேன். எடுத்துக் குடு…..” என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டாள். ஒருகணம் திகைத்து வெறுமை சூழ்ந்த வீட்டைப் பார்த்தபடி நின்றாள். அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. சுவரில் மாலைபோட்டு மாட்டப்பட்டிருந்த அப்பாவின் படத்தைப் பார்த்ததும் அந்த அழுகை இன்னும் அதிகமானது. தேம்பித்தேம்பி அழுதாள். கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.
காய்கறி விற்பனை செய்யும் தள்ளுவண்டிக்காரனின் குரலைக் கேட்ட அதிர்ச்சியில்தான் அவள் விழித்தெழுந்தாள். அழுதபடியே துக்கத்தில் அமிழ்ந்து உறங்கிவிட்டதை அப்போதுதான் உணர்ந்தாள். அக்கணம் தன் மனம் துடைத்துவிட்டதுபோல தெளிவாக இருப்பதையும் உணர்ந்தாள். தம்பிகள்
வரக்கூடிய நேரம் என்று தோன்றியது. அவசரமாக எழுந்து பின்பக்கம்
சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தாள். நனைந்துபோன காதோர முடிகளில் இருந்து சொட்டுச்சொட்டாக இறங்கிய
நீர்த்துளிகள்
கழுத்தை அடைந்து ஆடையை நனைத்தது.
பத்து நாட்களுக்குப் பிறகு, வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிய சமயத்தில் மாமா வந்து தம்பிகளிடம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள் மீனாட்சி. குடிநீர்க்குழாயிலிருந்து நீர்நிரப்பிக் கொண்டுவந்த குடத்தை இடுப்பில் சுமந்தபடி வந்துகொண்டிருந்தார் அம்மா. “வாங்க மாமா, எப்ப வந்தீங்க?” என்று கேட்டாள்.
”வந்து ஒருமணி நேரம் ஆச்சி. ஒன்ன பார்த்துட்டு போவலாம்ன்னுதான் ஒக்காந்தன்…..” என்றார் மாமா. மீனாட்சி தம்பிகளுக்குப் பக்கத்தில் சென்று உட்கார்ந்துகொண்டாள்.
“நம்ம கம்பெனி கஸ்டமர் ஒருத்தவருக்கு இன்னைக்கு இந்த ஊருல ரிசப்ஷன். அதுக்காக வந்தன். அங்க போவறதுக்கு முன்னால இங்க வந்து பார்த்து பேசிட்டு போவலாம்ன்னு ஓடியாந்தன். என்னமோ ஒரு கம்பெனியில வேலைக்கு போறதா அம்மா சொன்னாங்க. எப்படி இருக்குது வேல?” என்று கேட்டார்.
“நல்லா இருக்குது மாமா. கம்ப்யூட்டர் முன்னால உட்கார்ந்தா நேரம் போவறதே தெரியறதில்லை மாமா…..”
அலுவலக விஷயங்களை அவள் சொல்லச்சொல்ல சின்னப்பிள்ளைகளோடு உட்கார்ந்துகொண்டு அவரும் ஆவலுடன் கேட்டார். அரைமணி நேரம் பொழுதுபோனதே தெரியவில்லை. இருட்டிவிட்டது. அம்மா வந்து ஸ்விட்சை அழுத்தி விளக்கை ஒளிரவிட்டுப் போனார்.
“சரி, நான் கெளம்பறேன்” என்றபடி மீனாட்சியிடமும் தம்பிகளிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார் மாமா. அம்மா அவர் பின்னாலேயே சென்று வாசலில் நின்றாள். “இந்தா, இத ஒன் பொண்டாட்டிகிட்ட குடு. மொடக்கத்தான் கீரை. கேவுருமாவுகூட சேத்து பெசஞ்சி அட சுட்டு சாப்டு. முட்டிவலிக்கு நல்லா கேக்கும்….” என்று கதவோரம் ஆணியில் தொங்கிய ஒரு மஞ்சள் பையை எடுத்துக் கொடுத்தாள்.
அடங்கிய குரலில் அவர்கள் பேசினாலும்கூட, உள்ளிருந்தபடியே அவர்களுடைய உரையாடலைக் கேட்கமுடிந்தது.
“அக்கா, இங்க பாரு, நீ சொன்ன வழியில அவ போவலைன்னு, அதயே நெனச்சிநெனச்சி வெசனப்படாத. இந்த காலத்து பொண்ணு அவ. அவ வேகத்த பத்தி நமக்கு என்ன தெரியும் சொல்லு? அவ வழியிலயே உடு…..” என்றது மாமாவின் குரல்.
“அது என்ன வழியோ, எனக்கு ஒன்னும் புரியமாட்டுது. சொளயா அஞ்சாயிரம் ரூபா கெடச்சிருக்கும். பாவி சிறுக்கி கோட்ட உட்டுட்டாளேன்னு வேதனயா இருக்குது. என் துக்கத்த புரிஞ்சிக்க உலகத்துல யாருமே இல்ல…” என்றது அம்மாவின் குரல்.
“நம்ம மீனாட்சியபத்தி அப்படி சுளுவா சொல்லாதக்கா. அதுக்கு எல்லா விவரமும் தெரியுது. இன்னைக்கி அஞ்சாயிரம் போச்சேன்னு கவலப்படாத. அந்த கொழந்த என்ன காலம்பூரா அஞ்சிமாச கொழந்தயாவே இருந்துருமா? வளந்து நின்னதும் வேலைக்கி ஆள் வேணாம்ன்னு சொன்னா என்னா செய்வ? அத கொஞ்சம் யோசிச்சி பாரு….”
“இன்னைய கதய பேசுடான்னா, நீ என்னமோ என்னைக்கோ நடக்கப்போவற கதய பேசுற?”
”நாலு கோணத்திலயும் யோசிச்சி பாத்தாதானக்கா நல்லது எது கெட்டது எதுன்னு தெரியும்? பார்த்துகிட்டே இரு, அது போற வேகத்துல, இருவது
முப்பது வருஷத்துக்கு முன்னால போயி நிக்கப்போவுது. அப்ப தெரியும், அவ வழி எப்படிப்பட்ட வழின்னு…..”
“சரி சரி. நீ கெளம்பு, என் வழி எனக்கு, அவ வழி அவளுக்கு”
மாமா கிளம்பிச் சென்றதற்கான அடையாளமாக, அவருடைய காலணிச்சத்தம் ஒலித்து அடங்கியது. சில கணங்களுக்குப் பிறகு உள்ளே வந்த அம்மா மீனாட்சியின் பக்கம் திரும்பிக்கூட பார்க்காமல் சமையலறைக்குள் சென்றாள்.