சிம்னி விளக்கு வெளிச்சத்தில் பாய் மேலேயே துணியை விரித்துப் போட்டு உட்கார்ந்த வாக்கிலேயே எக்கிஎக்கி சுண்ணாம்புக் கட்டியால் அடையாளம் செய்வதும் அடையாளக்கோட்டின் மேலேயே நடுவில் நட்போல்ட் போட்டு முடுக்கிய கத்திரிக்கோலால் க்ரீக் க்ரீக் க்ரீக் என்று வெட்டுவதுமாய் இருந்த கோபாலைப் பார்த்தபோது சுந்தரிக்குப் பாவமாய் இருந்தது. நிமிஷத்துக்கொருதரம் நடுமரை தொளதொளத்துவிடுகிற கத்தரிக்கோலைத் திரும்பத் திரும்ப முடுக்கிக்கொண்டு வெட்டுகிற கோபாலுக்கு இப்போதே ஓடிப்போய் ஒரு புதுக் கத்திரிக்கோல் வாங்கி வந்து கையில் தரவேண்டும் என்று ஆசைப்பட்டாள் சுந்தரி.
சுந்தரிக்கு இந்தமாதிரி
இப்போதே ஓடிப்போய் வாங்கி வந்து அடுக்க வேண்டிய பொருள்கள் பற்றிய ஆசைகள் அடிக்கடி
வரும். துணி வெட்டும் மேஜை,
அடுக்குப் பெட்டி, சின்ன சைஸில்
பெட்ரோமாக்ஸ், நாற்காலி, ஸ்டூல்
பொத்தலில்லாத ஆயில் கேன்,
நாலைந்து விரல்
கவசம் என்ற ஒரு பட்டியலே அவ்வப்போதைய தேவைக்குத் தகுந்தமாதிரி நினைப்பாள். இவை
எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு மனசுக்குள் முட்டிக்கொண்டு நிற்பது
கத்தரிக்கோல் விஷயம்தான்.
இந்தக் கத்தரிக்கோல் கூட
நாலு வருஷத்துக்கு முன்பு கோபாலைக் கட்டிக்கொண்டு வரும்போது நன்றாய்த்தான்
இருந்தது. மரை முடுக்குகிற விவகாரமெல்லாம் இருந்ததில்லை. தொழில் கற்றுத் தந்த பழைய
முதலாளி தனிக்கடை வைத்தபோது தந்ததாகச் சொல்லி வைத்திருந்தான். கல்யாணம் ஆன
புதுசில் இவளுக்கென்று தாய் வீட்டில் எடுத்தந்திருந்த நாலைந்து ஜாக்கெட் துணிகளை
இவள் முன்னேயே விரித்துப் போட்டு க்ரீக் க்ரீக் என்று ஒரு கோலம் போடுகிற
லாவகத்தோடு கத்தரிக்கோலை ஓடவிட்டு வெட்டியது, இவளுக்கு காஜா எடுப்பது பழக்கமாக வேண்டுமென்பதற்காக துண்டு
துக்கடா துணியில் நுனிக்கத்தரிக்கோலால் ஒரு சாந்துப் பொட்டு அளவுக்கு வெட்டிக்
கொடுத்தது, ‘இந்த மாதிரி
வெட்ட ஒன்னால முடியுமா’ என்று கேலியாய்
அவன் ஒரு தரம் சொன்னதும் ‘பெரிய மலயா இது? என்னால முடியாதா? கண்ணு பாத்தா கை செய்யப் போவது’ என்று வீம்போடு கத்தரிக்கோலைப் பிடுங்கி
விரல்களில் பொருத்தித் துணிக்கிடையில் ஓடவிட்ட போது வெட்டுப் படாமல் பிசுக்கென்று
துணி கத்தரிக்கோலோடேயே ஒட்டிக் கொண்டு வந்தது. இரண்டு பிள்ளைகள் பெற்றுக் கொண்டது
எல்லாமே நேற்று நடந்த விஷயங்கள் மாதிரி இருந்தன. ஆறுமாசம் முன்பு கத்தரிக்கோல்
உடைந்த விஷயம் கூட நேற்று நடந்தமாதிரிதான் இன்று நினைப்பில் இருந்தது.
கோட்டக்குப்பத்திலிருந்து
கோபாலுக்கு அக்காக்காரி வந்திருந்த சமயம். அப்போது வந்ததும் வராததுமாய் நடு
வாசலில் உட்கார்ந்துகொண்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டாள். கல்யாணத்துச் சமயம்
போடவேண்டிய கம்மல் மூன்று வருஷமாய், எதற்காகப் போடாமல் இருக்கிறாய் என்றும், இதைச்
சொல்லிச்சொல்லியே புருஷன் வீட்டு ஜனங்கள் தன்னைச் சிறுமைப் படுத்துகிறார்கள்
என்றும், ஒரு தம்பிக்காரனா
இருந்து ஒன்னால இன்னா புரோஜனம். எனக்கு ஒரு அப்பா உயிரோட இருந்தா என்ன இந்தக் கதில
உட்டிருப்பாரா என்றும் சொல்லி ஓ என்று அழ ஆரம்பித்து விட்டாள். அழுகைக் குரல்
கேட்டு உள்ளிருந்து வந்த கோபாலின் அம்மா ‘நல்லா சொல்லுடி இவளே, புத்தில ஒறைக்கறமாதிரி நல்லா சொல்லு. நானும் ஒரு நாளக்கி
நாப்பதுதரம் சொல்றன். வாழப் போயிருக்கிற பொண்ணுக்கு வார்த்த மாறாம நடந்துடணும்னு. ஒரு ஆத்தாளேச்சேன்னு என் பேச்ச
மதிக்கிறானா? எப்பபாரு, பொண்டாட்டி
பின்னால சுத்தறான்’ என்று அவள்
பங்குக்கு ஆரம்பித்தாள். இரண்டு பேர் பேச்சும் அழுகையும் கோபாலுக்கு ஆத்திரத்தைக்
கொடுக்க, திண்ணையில்
மிஷினில் உட்கார்ந்த நிலையிலேயே வாசப்படில ‘இன்னாடி அழுக பொட்டக்கழுதைங்களா’ என்று விசையோடு
கைக்கு அகப்பட்ட கத்தரிக்கோலை அவர்களை நோக்கி வீசினான். அக்காவும் அம்மாவும்
மிரண்டு ஒதுங்கிக்கொள்ள விரைவுடன் வந்த கத்தரிக்கோல் பக்கத்தில் இருந்த
குண்டுக்கல்லில் பட்டு நடு ரிவிட் உடைய இரண்டு துண்டுகளாய் விழுந்தது
கத்தரிக்கோல். எந்தச் செலவையாவது மிச்சப்படுத்தி ஒரு கத்தரிக்கோலை வாங்கி
அவனுக்குத் தந்துவிட வேண்டும் என்று ஆசையாய் இருந்தது சுந்தரிக்கு. இந்த
விஷயத்துக்காகவே கம்புப்பானைக்குள் ரகசியமாய் ஒரு டப்பியை வைத்து நாலணா எட்டணா
என்று கையில் மிச்சமாகிற சந்தர்ப்பங்களில் எல்லாம் எடுத்துப்போட்டு வந்தாள்.
ஒவ்வொருதரமும் காசு போடும்போது அழகான கத்தரிக்கோலின் மினுமினுப்பும் அதை லாவகமாய்
உபயோகப்படுத்தும் புருஷனின் கைவாகும் ஒரு முரட்டு சங்கீதம்மாதிரி கேட்கிற
கத்தரிக்கோலின் சத்தமும் மனசுக்குள் விரியும். பிடுங்கல் மிக்க வாழ்வில் இந்த
மாதிரி சின்னச்சின்ன சேகரிப்புக்குக்கூட இடமில்லாமல் நடுநடுவில் எடுத்து குடும்பக்
கஷ்டங்களுக்கு உபயோகப்படுத்த நேர்ந்தபோது அழத்தான் முடிந்தது. தாய் வீட்டுக்குப்
போகிற தருணத்தில் வறுமையோடு வறுமையாக இந்தக் கத்தரிக்கோல் ஒன்று வாங்கித் தந்தால்
நல்லது என்று சொல்லிவிட்டு வந்தாலும் அவர்களுக்கும் இயலாத விஷயமாகவே இது தொடர்ந்து
வருவதும் வருத்தமாய் இருந்தது. இதற்கெல்லாம் பார்த்துப் பார்த்து ஒன்றும் ஆகாது
என்று தோன்றிய பிறகுதான் தீபாவளி, பொங்கல் சமயத்தில் வருகிற கூடுதல் வருமானத்தில்
வாங்கிவிடலாம் என்று முடிவு கட்டினாள். ஒரு சின்ன சிம்னி விளக்கை இறவாணத்தில்
கட்டித் தொங்கவிட்டு அந்த வெளிச்சத்தில் தீபாவளிக்காக இரவும் பகலுமாய் வேலை செய்த
போதெல்லாம் கத்தரிக்கோல் கனவு வசப்பட்டுவிடுகிற ஒரு வெற்றியாகவே தெரிந்தது.
ஆனாலும் தீபாவளியைத் தொடர்ந்து வயிற்றுப்போக்கு என்று படுத்த கோபால் டைபாய்டு
ஜுரம் வந்து படுத்த படுக்கையாய் ஆனபோது வைத்தியத்துக்கு இதே பணத்தைத்தான்
பயன்படுத்த வேண்டி இருந்தது. முழுப்பணமும் செலவாகி சல்லிக்காசு இல்லாத நிலை
வரும்போது தான் உடம்புக்கு வந்த வியாதி போனது.
உடம்பெல்லாம் குணமாகி
மீண்டும் பழையபடி அதே ஓட்டைக் கத்தரிக்கோலை முடுக்கிமுடுக்கி வேலைசெய்ய
உட்கார்ந்தபோது அழுகை உடைத்துக்கொண்டு வந்தது சுந்தரிக்கு. ‘ஐயய்ய, இதுக்கெல்லாம் போய்
அழுவாங்களா, தீபாவளி இல்லன்னா
பொங்கல், பொங்கல் இல்லன்னா
தீபாவளி. அப்ப சம்பாரிச்சி வாங்கிகினா போச்சி. இதுக்கெல்லாம் அழலாமா சுந்தரி’ என்று அவன்
தைரியமாய் தேற்றியபோது இவளுக்கு இன்னும் மனசு இளகிஇளகி இத்தனை பிரியமாய் தன்னோடு
இருக்கிறவனுக்கு ஒரு கத்தரிக்கோலுக்கு வழி செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில்
மேலும் அழுகை கூடியது. ஆரம்பத்தில் அவ்வப்போது குடும்பக் கஷ்டங்களுக்காக விற்றுப்
பணமாக்கி மூக்கில் காதில் போட்டிருந்த தங்கம் வைரம் இருந்தால் கூட விற்றாவது
வாங்கித் தந்துவிடலாம் என்று நினைத்தாள்.
கோபால் மாதிரியே
பொங்கலுக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று சுந்தரியும் எண்ணி இருந்த சமயத்தில்
பெரிய பெண்ணுக்கு அம்மை போட்டது. ஒரு நிமிஷம்கூட அகலவிடவில்லை குழந்தை. குழந்தையையும்
பார்த்துக் கொண்டு கைவேலையையும் பார்த்துக்கொள்வது சுந்தரிக்கு முடியவில்லை, ஆஸ்பத்திரிக்கும்
போய்க்கொண்டு வேலையையும் பார்த்துக்கொள்வது கோபாலுக்கு முடியவில்லை. இதனாலேயே
பொங்கலுக்கு வந்த வேலைகளையெல்லாம் முடியாது முடியாது என்று திருப்பி
அனுப்பிவிட்டார்கள். பொங்கல் எல்லாம் போனபிற்பாடு ஏழாம் நாளோ எட்டாம் நாளோ
குழந்தைக்கு அம்மை இறங்கி முதல்நிலை தண்ணீர் ஊற்றினார்கள்.
இதற்குப் பிறகு ஒரு
சந்தர்ப்பத்தில் தண்டல்காரனிடம் கடன் வாங்கி நல்ல முதல்தரமான ஒரு கத்தரிக்கோலை
பாண்டிச்சேரியிலோ விழுப்புரத்திலோ வாங்கிக் கொள்ளலாம் என்று யோசனை சொன்னாள்
சுந்தரி. அந்த யோசனையில் கோபாலுக்குத் துளியும் இஷ்டம் இல்லை. ‘தண்டல்ன்னா தெனம்
பணம் கட்டணும் சுந்தரி. கட்டறவரிக்கும் சிரிச்சிப் பேசுவாங்க. கட்டாத அன்னிக்கு புடுங்கி
எடுத்துடுவானுங்க. மானம் போறமாதிரி கேள்வி கேட்டுடுவானுங்க. நம்ம தொழில் ஒருநாள்
மாதிரி இன்னொரு நாளு இருக்காது. எதுக்கு சும்மா கஷ்டப்பட்டுக்கினு’ என்று
நிராகரித்தான். அதை மீறிப் பேச சுந்தரிக்கு நாக்கு இல்லை.
‘இன்னா சுந்தரி? அந்த ஜாக்கட்ட முடிச்சிட்டியா...?’ வெட்டுவதை
நிறுத்தி இவளைப் பார்த்த கோபால் கேட்கும் போதுதான் சுந்தரிக்கு சுயஉணர்வு
திரும்பியது. இவ்வளவு நேரமும் ஏதேதோ யோசனைகளில் ஆழ்ந்து போனதற்கு வெட்கப்பட்டுச்
சிரித்துக் கொண்டாள்.
‘இன்னா சுந்தரி, கேட்கறதுக்கு சிரிக்கற...?’
‘இன்னாங்க...?’
‘ஜாக்கட் வேலை ஆயிடுச்சான்னு கேட்டன்?’
‘ஆயிடுச்சிங்க’
‘அத சொல்லாம எதுக்குச் சிரிப்பு?’
‘ஒன்னுமில்லிங்க...’
‘எதுக்குச் சிரிப்புன்னா ஒன்னுமில்லையா...’
‘சும்மாதாங்க’
‘சும்மா ஒரு சிரிப்பு. சொமந்துகினு ஒரு சிரிப்பா...?’
ஒரு பதில்போல இதற்கும்
சுந்தரிக்குச் சிரிப்பு வந்தது. இவள் சிரிக்கக் கண்டு கோபாலும் சிரித்தான்.
சிரிப்பு இரண்டு பேருக்குமே அபூர்வமான ஒரு சந்தோஷத்தை முகத்தில் பூசிவிட்டுப்
போனது.
‘சரி,
சரி. அடுத்த வேலய
கவனி. நாயுடு ஏட்டு பொண்ணுங்க காலைல வந்து நிக்கும்.’
இதெல்லாம் நடந்து பத்து
பதினைந்து நாள் இருக்கும். மாசி மகத்துத் திருவிழாவுக்கு குடும்பத்தோடு
சென்றிருந்த போது அஜந்தா தியேட்டர் பக்கத்தில் ராஜாங்கம் மாமாவைப் பார்க்க
நேர்ந்தது. மாமா கொஞ்சம் வலுவான கை. சுந்தரியின் அப்பாமாதிரி நொடிப்பில்லை.
கடலூரில் ஜமீன்தார் தோட்டம் தாண்டி ஒரு வீட்டை வாங்கி இருந்தார். சட்டென்று மாமாவை
பார்க்க நேர்ந்ததும் சுந்தரிக்கு சந்தோஷமாய் இருந்தது. மாமா குழந்தைகளுக்குக்
காராசேவ் பிஸ்கட் பலூன் எல்லாம் வாங்கித் தந்தார். ‘எதுக்கு மாமா சிரமம்?’ என்று இவள்
சங்கடத்துடன் கேட்டபோது,
‘இருக்கட்டும்மா கொழந்தைங்கதான என்று சிரித்தார்.’
‘துபாய்லேந்து கண்ணன் வராம்மா. வந்த கையோட அவனுக்கு ஒரு
முடிச்சு போட்டுர்லாம்னு நெனைக்கறன். இங்க ஒரு பொண்ணு பத்தி கடைகாரன் சொல்லியிருந்தான். அதான் பாக்கலாம்னு
வந்தன்...’
‘நாலு வருஷம் இருக்குமா மாமா, அவன் போயி? என் கல்யாணத்துக்கு மின்ன பாத்தது...’
‘அஞ்சி வருஷம் ஆயிடுச்சிம்மா’
‘என்னயெல்லாம் நெனப்பு வச்சிருக்கானோ இல்லியோ?’
‘வச்சில்லாம மறந்தா போயிடுவான்?’
‘கல்யாணப்பத்திரிக்க அனுப்பனதுக்குச் சந்தோஷம்னு ஒரு வரி
எழுதனானே, அதோட சரி மாமா’
‘இன்னோர் தரம் எழுதிப் பாரேம்மா’
‘எழுதறன். எழுதறன்’
வீட்டுக்கு வந்து நிறைய
தரம் யோசித்தபோது எழுதிப் பார்த்தால்தான் என்ன என்று தோன்றியது, கோபாலிடம் யோசனை
கேட்டபோது வருத்தமான குரலில் சொன்னான்.
‘அவுங்கள்ளாம் பெரிய கை. ஈரம் இருக்கறவங்க நம்மள மாதிரி தல
காய்ஞ்சவங்கள்ளாம் அவுங்க சம்பந்தத்துக்கு ஆசைப்படக்கூடாது சுந்தரி, மறந்துட்டு
சும்மா இரு’
‘அவனோட ஒறவா கொண்டாடப் போறம்? வரும்போது நல்லா ஒரு கத்தரிக்கோல் வாங்கி
வாடான்னு எழுதப் போறேன். எனக்காக அதுகூட செய்யமாட்டானா...?’
‘செய்வான்னு நீ நம்பறியா...?’
‘செய்வாங்க...’
‘ஒன்னிஷ்டம்’
ஒரு வார்த்தையோடு
ஒதுங்கிக்கொண்டான். இவள்தான் காசு சேர்த்து லெட்டர் வாங்கி கம்பௌண்டர் பெண்ணை
வைத்து எழுதிப் போட்டாள். ஒரு மாதம் வரைக்கும் பதில் தபால் வரும் வரும் என்று ஆவலாய்ப்
பார்த்துக்கொண்டிருந்தாள். போஸ்ட்மேனை அந்தத் தெருவில் பார்க்க நேரும்போதெல்லாம்
தன் வீட்டில் இதோ இறங்கி மடலைக் கொடுக்கப் போகிறார் என்கிறமாதிரியெல்லாம் கற்பனை
தோன்றும், ஆனால் எதுவும்
நடக்கவில்லை. கோபால் சொன்ன மாதிரி அடுத்தவன் செய்வான் என்று ஆசைப்பட்டது பிழையோ
என்று தோன்றியது. அதற்குப் பிறகு குடும்பச் சுமையில் அந்த விஷயத்தையே அடியோடு
மறந்துபோனாள்.
ஊசியும் கையுமாய் ஒரு நாள்
திண்ணையில் உட்கார்ந்திருந்தபோது அம்மா வந்தாள். ‘வாம்மா’ என்று அழைத்தாள் சுந்தரி. ‘வா அத்த’ என்று கோபாலும் சிரித்துக்கொண்டே சொன்னான். அம்மா
சிரிப்பைச் சிந்திக் கொண்டே திண்ணையில் உட்கார்ந்தாள். சுந்தரி உள்ளே சென்று ஒரு
செம்பு தண்ணீர் கொண்டுவந்து தந்தாள். தாகம் அடங்க குடித்துவிட்டு வாயைத் துடைத்தாள்
அம்மா, மேற்கொண்டு ஊர்
சௌகரியம் பற்றி கோபால் கேட்டதற்கெல்லாம் அவள் பதில் சொல்லிக்கொண்டே கைப்பையில்
இருந்து ஒரு புடவையை வெளியே எடுத்து வைத்தாள்.
‘புதுசா இருக்குது?’
புடவையை இழுத்து சுந்தரி
ஆசையுடன் பார்த்து அதன் ஒரு பாகத்தைப் பிரித்து மடிப்போடேயே மார்பிலும் தோளிலுமாய்ப்
படரவிட்டாள். ஏலம் விடுகிறவள்மாதிரி கையில் பிடித்துக் கொண்டே முழுப்புடவையையும்
பிரித்து, அதன் அழகிலும்
கொடி கொடியாப் பிரிந்து பூத்திருக்கும் பூக்களோடு அச்சாகி இருந்த
வேலைப்பாடுகளிலும் பார்வையை ஓட விட்டாள்.
‘புதுசுதான்டி. ராஜாங்கம் மாமன் மொவன் வந்திருந்தான். துபாய்லேந்து
வந்துட்டானாம். நீ இன்னமோ லெட்டர் போட்டியாமே. பதில் போடறதுக்கு நேரமில்லியாம்.
இந்தப் பொடவய நா குடுத்தேன்னு குடுத்துடு அத்தன்னு சொன்னான். என்னமோ கத்தரிக்கோலு
வாங்கியான்னு எழுதினியாமே. அங்க விசாரிச்சானாம். எல்லா எடத்துலயும் அமெரிக்கா
கத்தரிக்கோல்தான் இருந்திச்சாம். அதுங்க அவ்ளோ நல்லா இருக்காதாம். ஜப்பானுதுதான், நல்லா
ஒழைக்குமாம். தேடித் தேடி பாத்தானாம். அது எங்கயும் கெடைக்கலியாம். அதான், வாங்காம
வந்துட்டானாம். சொல்லச் சொன்னான்...’
அம்மா சொல்லிக்கொண்டே
இருந்தாள். சுந்தரிக்கு அதற்குமேல் கேட்கவே பிரியமில்லை. இப்படியெல்லாம் கூட ஜனங்கள்
இருப்பார்களா என்று ஆச்சரியமாய் இருந்தது. லெட்டர்க்குப் பதில் லெட்டர் போடத்தான்
முடியவில்லை என்றாலும் கூட ஊருக்குள்ளேயே இருந்து கொண்டு பார்க்க வராத அளவுக்கு
பொருளாதாரத்தில் தான் இருக்கிற பாதாளத்தட்டு ஆக்கி வைத்திருப்பதை நினைத்து
வருத்தமாய் இருந்தது. கையில் இருந்த புடவையை சட்டென்று உதறினாள். அதைத் தொடவே
கூடாது என்று சட்டென்று வைராக்கியம் ஓடியது. ஏமாற்றத்தோடு கோபாலை நிமிர்ந்து
பார்த்தாள். கழன்றுகழன்று விடுகிற கத்தரிக்கோலின் நடுமரையை முடுக்கிக்கொண்டு
பரபரப்பே இல்லாமல் புதுத்துணி ஒன்றை வெட்டிக்கொண்டிருந்தான் அவன்.
வரப்போகிற தீபாவளி
பொங்கல் சமயங்களிலாவது எப்படியாகிலும் கொஞ்சம் மிச்சம்பிடித்து ஒரு கத்தரிக்கோலை
வாங்க வழி செய்யவேண்டும் என்று நினைத்தாள் சுந்தரி.
(கேரளத்தமிழ் -1989)