Home

Sunday, 17 October 2021

சாட்சி - சிறுகதை

 

பெங்களூர்க்கு மாற்றலாகிப் போகிறேன் என்றதும் அவசியமா எம்.ஜி.ரோட்டப் போய்ப் பாருஎன்றான் சினேகிதன். என்னடா விசேஷம்?’ என்றதற்கு பாத்தா நீயே புரிஞ்சிக்குவஎன்றான். சொன்னதெல்லாம் வாஸ்தவம்தான் என்று வந்தபிறகு புரிந்தது. 

ஒருபக்கம் கண்ணைப் பறிக்கிற அலங்காரங்களோடும் வளைவுகளோடும் நெருக்கிநின்று நெஞ்சை நிமிர்த்துகிற கட்டடங்களும், இன்னொரு பக்கம் பத்தடி உயரத்துக்குத் தரையிலிருந்து மேலெழும்பி பூ, செடி, கொடி, மரங்கள் என்று பசுமையான கலவையின் அடர்த்தியாக இருந்தவிதமும் பரவசப்படுத்தத்தான் செய்தது. பார்க்கப்பார்க்க ஆனந்தமாய் இருந்தது. ஆனாலும் தினசரி புடலங்காய்த் தொங்கலாய் டவுன் பஸ்ஸில் பிரயாணிக்கிற சங்கடங்களுக்கு நடுவில் ரசனை பெருக பார்ப்பது என்கிற விஷயம் சாத்தியமற்றிருந்தது. மாசத்துக்கு மூணு அல்லது நாலு நாள்கள் மட்டும்தான் விதிவிலக்கு. அப்போது அனுபவிக்கிற ஆனந்தத்துக்கு அளவே இல்லை. அதுகூட நான் மெம்பராயிருக்கிற சினிமா க்ளப், கப்பன் பார்க்கிற்குள் இருக்கிற ஹாலுக்குள் சினிமாக்களுக்கு ஏற்பாடு செய்கிற புண்ணியத்தால்தான். சினிமா ஒன்பது அல்லது ஒன்பதரை மணிக்கு முடியும். அதற்குப் பிறகு விக்டோரியா மகாராணி சிலையைத் தாண்டி எம்.ஜி.ரோட்டில் காலாற குதூகலமான நடைதான். அன்றைக்கும் அப்படித்தான் நடந்து கொண்டிருந்தேன்.

குளுகுளுவென்ற காற்று முகத்தைத் தழுவி நகர்ந்தது. மெர்க்குரி விளக்குகளின் வெளிச்சம் பூக்களின் நிறத்தையே மாற்றிக் காட்டியது. புல்தரையும், மண்ணில் படர்ந்த கொடிகளும் ஏதோ மெத்தை விரித்தமாதிரி இருந்தது. புல்தரைக்கு அருகில் ஒரு வேர்க்கடலை வண்டி நின்றிருந்தது.

ஸ்ஸ்...என்ற சத்தத்துடன் ஸ்டவ் எரிய வாணலியில் மணலும் கடலைகளுமான கலவை வறுபட்டுக் கொண்டிருந்தது. கடலைகளுக்குப் பக்கத்தில் ஒரு கைக்குழந்தை தூங்கியது. ஸ்டவ் அனலுக்கோ, காற்றுக்கோ போர்த்திய மாதிரி குழந்தையின்மேல் கந்தல் துணி கிடந்தது. நின்று எட்டணாவுக்குக் கடலை வாங்கிக்கொண்டு நகர்கிற வரைக்கும் குழந்தையின் இருப்பில் எந்த அசைவும் இல்லை.

பத்துக்கு கிட்டத்தட்ட நேரம் நெருங்கி இருந்ததால் தெருவில் இரைச்சல் எதுவும் இல்லை. எப்போதா உறுமிக்கொண்டு போகிற ஆட்டோ சத்தம்தான், கடைகளெல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. விட்டுவிட்டு எரிகிற முகப்பு விளக்குகள் மாத்திரம் ப்ரஜாவாணிபத்திரிகைக் கட்டடத்தில் மேல் எரிந்து கொண்டிருந்தது. நடைபாதையிலும் பாதசாரிகள் அதிகமில்லை. யார்மேலும் இடிபடாமல் சுதந்திரமாய் கையையும் காலையும் அசைத்து நடப்பதில் சந்தோஷமாய் இருந்தது. சீக்கிரமாய்ப் போகாவிடில் பஸ் தவறிப் போகும் என்கிற பயம் உள்ளூர இருந்தாலும் மனசில்லாமல் ரெண்டுங்கெட்டான் நடையில் நடந்து கொண்டிருந்தேன்.

சிமெண்ட் பெஞ்ச்களிலும் புல்தரையிலும் ஒன்றிரண்டு ஜோடிகள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு கொன்றை மரத்தின் கீழ் நாலைந்து இளைஞர்கள் வட்டமாய் உட்கார்ந்து ஆனந்தமாய்ப் புகைத்து ஊதினார்கள். மடியில் நாயை உட்கார்த்தித் தலையைத் தடவிக்கொண்டிருந்தார் ஒரு கிழவர்.

ஆகாயத்தில் அரைநிலா மங்கலாய் ஊர்ந்து கொண்டிருந்தது. மரங்களின் ஊடே பாய்ந்த கதிர்கள் தரையிலும் பூவிலும் புல்லிலும் படிந்து கவர்ந்திழுத்தது. ஒரு சித்திரக்காரனைப்போல அனைத்தையும் மனசுக்குள் பதியவைத்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தேன்.

விசிறி வாழைக்குக் கீழே ஒரு சிமெண்ட் பெஞ்சைத் தாண்டுகிற சமயத்தில் சற்று உட்கார்ந்து போகலாம் என்று ஆசை மூண்டது. நெருங்கி உட்கார்ந்தேன். விசிறி வாழையின் இலை நுனிகள் உடம்பில் பட்டு கூச்சமுண்டாக்கியது. அதே தருணத்தில் பெஞ்சின் சில்லிப்பும் படிய உடம்பு முழுதும் ஒரு சிலிர்ப்பு பொங்கியடங்கியது. கிராமத்து ரயில்வே ஸ்டேஷனில் இருந்த சிமெண்ட் பெஞ்ச்களின் முகமும், மணிக்கணக்கில் இரவும் பகலும் அதில் உட்கார்ந்தும் மனசுக்கு இதமாய்ப் பேசுகிற சினேகிதனின் முகமும், பெஞ்ச்சுக்குப் பக்கத்தில் தாழ்வாய் வளைந்து காற்று தரும் மாமரத்தின் புகை படர்ந்த முகமும் புரண்டு மேலெழுந்து சிறுவயசு அனுபவங்களையெல்லாம் கண் முன்னால் நிறுத்திக்கொண்டேன். மனம் உருகி நெகிழ்வாய் இருந்தது.  நெகிழ்ச்சியும் ஆனந்தமும் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமானது. உடம்பும், முதுகும் உறைகிற மாதிரி குளிர் மெல்லப் பரவியது.

எதிர்த்திசையில் ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள். தோளில் துணிபோர்த்தி தாங்கலாய் கைகள் வைத்திருந்த விதம் ஒரு கைக்குழந்தையோடு வருகிற மாதிரி புலப்பட்டது. நடந்து வந்ததில் களைத்தவள்போல ஒரு மரத்தடியில் நின்று குழந்தையை அடுத்த தோளுக்கு மாற்றினாள். புல் தரையையொட்டியே இன்னும் கொஞ்சதூரம் நடந்து குரோட்டன்ஸ் வேலிப்பக்கம் வந்து நின்றாள். தெருவிளக்கின் வெளிச்சம் மரக்கிளைகளின் தடையால் நாலைந்து கீற்று மாத்திரம் அவள்மேல் விழுந்தது. நிழல் கவிந்த அவள் உருவம் பெரிதும் வசீகரத்துடன் இருந்தது. நின்று சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தாள். பத்துப் பதினைந்தடி தூரத்துக்குள்ளேயே விசிறிவாழையின் நிழலில் நான் உட்கார்ந்திருந்தது அவளுக்குப் புலப்படவில்லை. மீண்டும்மீண்டும் எல்லாப் பக்கங்களிலும் கண்களைச் சுழலவிட்டாள் அவள். திடுமென அவள் நடவடிக்கைகளைக் கவனிக்கும் அல்ப ஆசை மனசுக்குள் மூள சிறிதும் அசைவற்றவனாய் உட்கார்ந்துகொண்டு அவளையே நோக்கினேன்.

மெதுவாய்க் கீழே உட்கார்ந்தாள் அவள். குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டாள். சற்று நேரம் மௌனம்.

மெல்ல கையில் இருந்த குழந்தையை நெகிழ்த்தி தரையில் கிடத்தினாள். துணிகளை மார்பில் குறுக்கும் நெடுக்குமாய்ப் போட்டுவிட்டு உற்றுப் பார்த்தாள். குனிந்து குழந்தையின் முகத்தில் முத்தமிட்டாள். நிமிர்ந்த முகத்தில் கண்ணீர் வழிந்தது. துடைத்துக்கொண்டாள். கண்ணீருக்கு நடுவில் புன்னகைக்க முயன்றாள். அவள் புன்னகை பரிதாபமாக இருந்தது.

சற்று நேரம் கழிந்தது.

விருட்டென்று எழுந்து வந்த திசையிலேயே நடக்கத் தொடங்கினாள். உடனடியாய் எனக்கு எதுவும் புரியவில்லை. பத்துப் பதினைந்தடி தூரம் அவள் போன பிறகு கூட புத்திக்கு எதுவும் உறைக்கவில்லை. அப்புறம்தான் மின்சாரம் தாக்கியமாதிரி இருந்தது. சட்டென்று அந்தப் பெண்ணின் கையை இழுத்து குழந்தையை அவளிடம் திணிக்க வேண்டும்போல வேகம் கிளம்பியது. தடுமாறி எழுந்து ஓடினேன்.

யாருமா அங்க, நில்லு

அட, ஒன்னத்தாம்மா, நில்லு கொஞ்சம். கூப்டறது காதுல  உழல, நில்லு

நில்லுமா

மூன்றாம் குரலுக்கு அவள் நின்றுவிட்டாள். நானும் நெருங்கிவிட்டேன். நெஞ்சு படபடத்தது எனக்கு.

ஞாயமா நீ செய்யற வேல? கொழந்தய கொண்டாந்து தெருவுல போட்டுட்டு போவறியே. கொஞ்சமாச்சிம் புத்தி வேணாம்..

அந்தப் பெண் முறைத்துப் பார்த்தாள். சற்றுமுன் கண்ணீர் வழிந்த முகம் இல்லை அது. அதன் நிறமும் பாவனைகளும் மாறியிருந்தன. ஏதோ சம்பந்தப்படாத ஒன்றைக் கேட்டமாதிரி என்னை அக்கறையின்றிப் பார்த்தாள். கண்களில் எரிச்சல் வேறு,

யாருயா நீ

கொழந்தய ரோட்ல போட்டுட்டு போறியே, அத ரெண்டு கண்ணால பாத்த சாட்சி...

யாரு புள்ள? யாரு போட்டது? இன்னா வெளாயடறியா..?’

அவள் முறைப்பும் கேள்வியும் தடுமாற வைத்தது, நாக்கு குழறியது.

அது..? அந்த புள்ள...?’

தனியா பொம்பள போனா எது ஒணும்னா பேசலாம்ன்னு நெனப்பா? பெங்களூரு இது. ஒங்க மெட்ராஸ் கெடையாது. ஜாக்கரத. பல்லு பேந்துரும்

அந்த வேலிகிட்ட கொழந்தய வய்க்கல நீ?’

யாருயா வச்சிது

நீதா...

நீதா நீதான்னு சும்மா தவக்கள மாதிரி அடிச்சிக்காத. எவ கொழந்தயயோ கொண்டாந்து எந்தலைல கொண்டாந்து கட்டலாம்ன்னு பாக்கறியா? போ. போ. அதுக்கு வேற ஆளப்பாரு...

நீதா கொண்டாந்து வச்ச. நான்தா பாத்தனே.

இங்க பாரு. சும்மா கதயடிக்காத, இப்ப இன்னா ஓணும் ஒனக்கு? தைரியமிருந்தா நேரா வரியான்னு கூப்புடு. சுத்தி வளைக்காத. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசு அம்பது ரூபா எனக்கு. பணம் வச்சிக்கன்னா சொல்லு. இல்லன்னா நட...

மங்கிய வெளிச்சத்தில் அவளது கண்கள் மின்னின.

கொழந்த...?’

இன்னாயா மெரட்டறியா...?’

நீ...

வம்புக்கு வரியா, போலீச கூப்டட்டுமா? ஆறுமாசம் உள்ள வச்சிருவான். ஜாக்கிரத..

ஒருவழியும் அவசரத்தில் தோன்றவில்லை எனக்கு. சில கணங்கள் அதிர்ச்சியில் உறைந்து மீள்வதற்குள் உக்கிரமான முறைப்பை உதிர்த்துவிட்டு திரும்பிப் படபடப்போடு நடக்க ஆரம்பித்தாள் அவள்.

நில்லு

போடா பொறுக்கி. கிட்ட வந்த செருப்பு பிஞ்சிடும்.

மீண்டும் திரும்பி முறைத்து முகத்தில் துப்புகிறமாதிரி எச்சிலைத் துப்பிவிட்டு நடந்தாள். நாலு எட்டில் மெய்ன்ரோட்டில் இறங்கி உறுமலோடு வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறினாள். வினாடியில் ஆட்டோவும் மறைந்தது.

நடந்ததெல்லாம் கனவா நனவா என்றுகூடப் புரியவில்லை எனக்கு. ரொம்பவும் குழம்பிவிட்டது மனம். ஆட்டோ போன திசையை. கொஞ்ச நேரம் பார்த்துவிட்டுத் திரும்பும்போது குழந்தைச் சுருணை கண்ணில் பட்டது. நெருங்கிக் குனிந்து துணிகளை விலக்கினேன். குறைந்தபட்ச வெளிச்சத்தில் குழந்தையின் முகம் அழகாய் இருந்தது. கன்னத்தில் மெல்லத் தட்டினேன். எந்த அசைவுமின்றி அடுத்த பக்கத்தில் சரிந்தது தலை. மீண்டும் பயம் கவ்வ மார்பிலும் முகத்திலும் கையை வைத்துப் பார்த்தேன். ஐஸ்கட்டியைத் தொட்டமாதிரி சில்லென்றிருந்தது. சுவாசம் இல்லை. செத்திருந்தது.

ஐயையோ...

குப்பென்று வேர்வை பொங்கி வழிந்தது. கலங்கியும் தயங்கியும் திரும்பி நடந்தேன்.

 (மன ஓசை -1989)