கட்டைவண்டி போனால்கூட அதன் சத்தத்தைத் தெளிவாய் உணரமுடிகிற அளவுக்குப் பஞ்சாயத்து போர்டு தெருபக்கம்தான் என்றாலும் சத்தமும் காட்டாமல் ஒரு கோழி இறகுமாதிரி வந்து லாரி நின்றிருக்குமே எனச் சந்தேகப்பட்டாள் தேவானை. சந்தேகம் வலுக்க வலுக்க படபடப்பும் அதிகமானது. வாசலுக்கு வந்து பார்த்தாள். லாரி வந்து எதுவும் நிற்கிற மாதிரி தெரியவில்லை. நேற்று மத்தியானமே வந்து சேர்ந்த கேரளா லாரிதான் பதுமை மாதிரி நின்றிருந்தது.
ஆந்திராவிலிருந்து நேற்று
சாயங்காலமே புருஷனோடு வந்து சேர வேண்டிய லாரி இன்னும் காணவில்லை.
தேதி, கிழமை, நேரம் என்று
மெம்பர் வீட்டு முதலாளி திரும்பத்திரும்பச் சொன்னது நேற்றைய சாயங்காலம்
பற்றித்தான். நேற்றே இருட்டுகிறவரைக்கும் பார்த்திருந்து ஏமாற்றத்தோடும், பதற்றத்தோடும், ஒரு நடை மெம்பர்
வீடு வரைக்கும் வந்து விசாரித்தபோதுகூட ‘நானும் அதுக்குத்தாம்மா பாத்துக்கிட்டிருக்கன். வரக்காணம். எனக்கும் ஈரக்கொல நடுங்குது’ என்றுதான் சொன்னார். அதற்கப்புறம் ராத்திரி முழுக்கத்
தூங்கவில்லை. நாயின் நீளமான குரைப்புகள், நாலைந்து பேர்களாய் நடக்கிற கால் சத்தம், மெய்ன்ரோட்டில்
எந்த வண்டியாவது போகிற உறுமல் எல்லாவற்றுக்கும் பதறிப்பதறி எழுந்து கதவைத் திறந்து
வாசலில் நின்ற வேலைதான். காலையில் சாணம் தெளிக்க கதவைத் திறக்கிற சமயத்தில்கூட
சத்தம் காட்டாமல் வந்து திண்ணையில் ஆறுமுகம் படுத்துக்கிடப்பதுபோலவும் ‘எப்பய்யா வந்த? எழுந்து உள்ள வா’ என்று
தூக்கத்தில் இருப்பவனை உலுக்கு உலுக்கி எழுப்புவதுபோலவும், கண்ணைக்
கசக்கிக்கொண்டே எழுந்து உட்கார்கிறவனிடம் ‘கதவ தட்டனா தெறக்கமாட்டனா? இப்டியா குளுர்ல படுத்துக் கெடப்ப?’ என்று
கரிசனமாய்க் கேட்பதுபோலவும், ‘ரொம்பநேரம் தட்டனன் தேவான. சத்தத்தயே காணம். அப்பறம்தான்
இப்பிடி படுத்துக்கனன்’ என்று அவன்
சொல்கிறது போலவும் கற்பனைகள் மனசில் ஓட திண்ணையில் பார்த்தாள். இரவில் கோழிகளை
மூடிக் கவிழ்த்த கூடைதான் இருந்தது.
வாசலிலேயே நின்று
அக்கம்பக்கம் பார்த்துச் சலித்தவள் மாதிரி கொஞ்சம் முன்னுக்கு நடந்து பஞ்சாயத்து
போர்டு முனையில் ஒதிய மரத்தோரம் நிறுத்தப்பட்டிருந்த கட்டை வண்டியில் சாய்ந்து
நின்றாள். சின்னப்பிள்ளைகள் சத்தமிட்டு ஆடும் பம்பர ஆட்டம், வீட்டு வாசலிலேயே
ஜனகவல்லி நடத்துகிற இட்லி வியாபாரம், சைக்கிளில் சுற்றும் புடவை வியாபாரி என்று பார்வைகள் அப்படி
இப்படிச் சிதறினாலும் கவனம் முழுக்க வரப்போகிற லாரி மீதும் புருஷன் மீதும் மட்டுமே
குவிந்திருந்தது.
இதே மாதிரி ஒரு காலை
நேரத்தில்தான் போன தரம் லாரியில் கிளம்பிப் போனான் ஆறுமுகம். நாலு மாசமாவது
இருக்கும். போன கையோடு பெரிய உடையார் வீட்டு நிலத்தில் நட்ட நாற்று பயிராகி இரண்டு
வாரத்துக்கு முன்னால் அறுப்பு முடிந்து அடுத்த போகத்துக்கு சேடைகூட
ஓட்டியாகிவிட்டது. ‘இன்னம் இந்த ஆளக்
காணமே’ என்று
யோசித்திருந்த சந்தர்ப்பத்தில்தான் மெம்பர் வீட்டு ஆள் வந்து வண்டி வருகிற தகவலைச்
சொன்னான்.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி
என்று எல்லா ஊர்களிலும் டெலிபோன் டவர் கட்டுகிற வேலையை எடுத்திருந்தார் மெம்பர்.
முந்நூறு அடி முந்நூற்றி ஐம்பதடி என்று உயரமான டவர்கள் பூமியில் இருந்து இரும்புக்
கட்டைகளை முடுக்கிமுடுக்கிக் கட்டுகிற வேலை. ஒரு டவர் கட்ட இரண்டு வாரம் என்று
கணக்கு. அப்புறம் ஒரு வாரம் நட் போல்ட்களைப் பரிசோதிப்பது. அதற்கப்புறம் இன்னொரு ஊர், இன்னொரு டவர்
என்று தாவவேண்டியதுதான். ஊரிலிருந்தே இதற்காகக் கிளம்பி வந்த இருபது பேர்
சுற்றுகிறார்கள். கூடவே மெம்பர் வீட்டு மாப்பிள்ளை லீடர் மாதிரி சுற்றுகிறார்.
ஒவ்வொரு ஆளுக்கும் ஊரில் வைத்தே ஆயிரம் ரூபாய் முன்பணம் தரப்படும். அப்புறம் நாலு
மாசத்துக்கோ ஆறு மாசத்துக்கோ ஒரு தரம் ஊரிலிருந்து திரும்பும்போது வீட்டில் வைத்து
கணக்கு தீர்க்கப்படும். வேலை நடக்கிற இடத்தில் சாப்பாடு போட்ட கணக்கு, வைத்தியக் கணக்கு, ஊரில் பெண்டாட்டி
அவ்வப்போது அவசரத்துக்கு வாங்கி இருக்கிற கடன் பாக்கி எல்லாம் கூட்டிக் கழித்து
மிச்சம் தரப்படும். ஒரு வாரமோ பத்து நாளோ தள்ளிவிட்டு அடுத்த பிரயாணம்
தயாராகிவிடும். கூப்பிட்டுப் போக எந்த ஊரிலிருந்தாவது சர்க்கார் வண்டி வந்து
நின்றுவிடும். இந்தத் தரம்தான் ஒருநாள் கூட ஓய்வு இல்லாமல் ஆள்களைக்
கூட்டிக்கொண்டு போக கேரளா வண்டி வந்துவிட்டது.
குறிப்பிட்ட மாதிரி
நேற்றே வண்டி வந்திருந்தாலாவது ஒரு ராத்தியாவது தங்கினமாதிரி கணக்கிருக்கும்.
வெயில் ஏறுகிற வரைக்கும் வராததைவைத்து யோசிக்கும்போது இனிமேல் வந்தால்கூட நின்ற
மேனியில் பார்த்துவிட்டு அப்படியே அடுத்த வண்டிக்கு மாறி உட்கார்ந்து விடுவானோ
என்று பயமாய் இருந்தது தேவானைக்கு.
‘இன்னாடி தேவான இங்கவந்து நிக்கற?’
ஏரியில் இருந்து
சாணிக்கூடையோடு வந்த சுந்தரிப்பாளையம் கிழவி கேட்டாள்.
‘வண்டி வருதான்னு பாக்றன் ஆயா’
‘புருஷன் வறானா?’
‘ம்’
‘தோ ஒரு வண்டி நிக்குது’
‘இது இல்லை ஆயா. இது இன்னோர் வண்டி. இட்டும் போவறதுக்கு
வந்துக்குது’
‘நல்ல கதடி இது. போன ஆளுங்களே இன்னம் வந்து சேரல. அதுக்குள்ள
அடுத்த வண்டியா?’
‘எல்லாம் மெம்பரு வய்க்கற சட்டம் ஆயா. அவுரு வான்னா வரணும், போன்னா போவணும். இத்தினி மாசம் கழிச்சி வர்றவங்க பத்து
பாஞ்சி நாளு இருந்துட்டு வரட்டும்னு மனுஷனுக்கு கொஞ்சமாச்சிம் புத்தி வேணாம்.
வாசல்லயே இன்னோர் வண்டிய நிறுத்திக்கறாரு...’
‘அவன எதுக்குடி திட்டற? பத்து பாஞ்சி சம்பாதிச்சாலும் பொண்டாட்டி, புள்ளன்னு இருக்க
முடியாம ஆயிரம் வரும் ரெண்டாயிரம் வரும்னு அவன் பின்னாலே உழுந்தா இப்பிடிதா வண்டி
எப்ப வரும் புருஷன் எப்ப எறங்குவான்னு நாள எண்ணிக்குனு நாக்க நனச்சிக்னுதான்
கெடக்கணும்...?
‘எல்லாம் இல்லாத கொடுமைதா ஆயா’
‘அது இன்னா கொடுமையோ போங்கடி...’ என்று நகர்ந்தாள்
ஆயா. மறுபடியும் அண்ணாந்து மெய்ன்ரோட்டில் இருந்து வண்டி திரும்புகிற தடம்
தெரிகிறதா என்று பார்த்தாள் தேவனை. காணவில்லை.
‘ஏழுமல, இங்க வாடா...’
பம்பரம் ஆடிக்கொண்டிருந்த
பையனைக் கூப்பிட்டாள் தேவானை. நாலைந்து தரம் கூப்பிட்ட பிறகுதான் ஆடுகிற
உற்சாகத்தைக் கெடுத்துவிட்ட எரிச்சலோடு அங்கிருந்தபடியே ‘இன்னா’ என்று கேட்டான்
ஏழுமலை.
‘இங்க வாடா...’
‘இன்னா சொல்லு’
‘இங்க வா சொல்றன்’
கையையும் காலையும் உதைத்துக்கொண்டு
வந்தான்.
‘இன்னா?’
‘மெய்ன்ரோட்டுக்குப் போய் வண்டி வருதான்னு பாக்கறியா?’
‘போவமாட்டன் போ.’
‘போடா ராஜா...’
‘ம்க்கும், காலைலேந்து எத்தினிதரம் அனுப்புவ? பத்து தரம் போய்
வந்துட்டன். கால் வலிக்காதா எனக்கு?’
‘இந்த ஒருதரம் போய் வாடா கண்ணு, அப்பா வந்ததும் ஒனக்கு கால்சட்ட, மேல்சட்ட, செருப்பு எல்லாம்
புதுசா வாங்கித் தரச்சொல்றேன்...’
‘நெஜமா?’
‘ம்’
‘அப்றம் ஏமாத்தக் கூடாது’
‘ம்ஹும்’
பம்பரத்தைப் பையில்
போட்டுக்கொண்டு மெய்ன் ரோட் பக்கம் ஓடிய ஏழுமலை ஐந்து நிமிஷத்தில் திரும்பி வந்து ‘இன்னம் வரல’ என்றான்.
அலுப்போடு வீட்டுக்குத் திரும்பினாள் தேவானை.
**
‘தேவானை’ என்று கூப்பிட்டபடியே ஆறுமுகம் உள்ளே வந்ததும், கதவோரத்திலேயே
சாய்ந்து அளவுமீறிய அலுப்பில் சற்றே கண்ணைமூடிக் கிடந்தவள் வாரிச் சுருட்டி
எழுந்தாள். ஆறுமுகத்தைப் பார்த்த சந்தோஷத்தில் மனசு குளிர்ந்தது.
‘வா... உள்ளே வா’
‘நல்லா இருக்கியா தேவான...?’
‘ம். நீ நல்லா இருக்கியா...?’
‘எங்க ஏழுமலைய காணம்?’
‘அங்கதான் பஞ்சாயத்து போர்டுங்கிட்ட ஆடிக்கிட்டிருந்தான்.
பாக்கல?’
‘காணமே’
‘ஏரிக்கு கீரிக்கு ஆடப்போய்டுச்சோ இன்னமோ?’
தரையில் உட்கார்ந்து காலை
நீட்டிச் சுவரில் சாய்ந்தான் ஆறுமுகம். தூக்கி வந்த பையை தேவானையின் பக்கம்
தள்ளினான்.
‘அரிசியா வாங்கியாந்திருக்க?’
‘ம் ஆந்திரா அரிசி சலீசா, கெடைச்சிது. ஆளுக்குப் பத்து கிலோ வாங்கியாந்தம்’
‘நேத்தே வருவேன்னு சொன்னாரு மெம்பரு’
‘அத எதுக்கு கேக்கற தேவான. திருப்பதிகிட்ட வந்து
கிட்டிருக்கம். சாயங்காலம் மணி நாலஞ்சி இருக்கும். வண்டி நின்னுடுச்சி. க்ளச்
ப்ளேட் ஒடைஞ்சிடுச்சாம். அப்புறம் திருப்பதிக்கு ஆள் போயி மெக்கானிக்க கூட்டாந்து
சாமான மாத்தி வண்டி எடுக்க வெடிகால ஆய்டுச்சி...’
‘ஆளுங்க எறங்கறதுக்குள்ள இன்னோர் வண்டி தயார் பண்ணிட்டாரு
மெம்பரு...’
‘என்ன செய்றது தேவான? எரிச்சல்னா அவ்ளோ எரிச்சல். நிம்மதி இல்லாத பொழப்பு. அவன
உட்டா நமக்கும் விதியில்ல. அவன்கிட்டயே ஒட்டிக்னு இருக்க வேண்டிதா போச்சி’240 s பாவண்ணன்
தொகுப்பு பாகம் 2
‘இன்னா சொல்றாரு?’
‘உடனே கௌம்பணும் தேவான, சாப்ட்டுட்டு வாங்கடான்னு சொல்லி இருக்காரு’
‘நாளக்கி போலாம்ன்னு சொல்ல யாருக்குமா நாக்கு வரல...?’
‘அவ்ளோ பெரிய மனுஷன். குடும்பம்னா ஆயிரம் இருக்கும்னு கூட
தெரியாம பேசறாருன்னா யாரு இன்னா சொல்றது.’
‘தானா தெரியாத மனுஷனுக்குச் சொன்னாதா தெரியும்’
‘பூனைக்கி யாரு மணி கட்டறதுங்கற மாதிரிதா. யாரு போயி
அவருகிட்ட சொல்வாங்க?’
‘அவுர்கிட்டதா வேணாம். அவுரு மாப்பிள்ள கிட்டயாவது
சொல்லலாம்ல’
‘த்ச். ஒன்னும் ப்ரோசனமில்ல தேவான. எல்லாம் பேசிப்
பாத்தாச்சி’
தரையை வெறித்தபடி
இருந்தான் ஆறுமுகம். கருத்து மெலிந்த அவன் முகத்தை வாஞ்சையோடு பார்த்தாள் தேவானை.
மடியிலிருந்து குனிந்தவாக்கிலேயே பீடியை எடுத்து வாயில் பொருத்திப்
பற்றவைத்துக்கொண்டு நிமிர்ந்தவனின் பார்வை அவளின் பார்வையோடு மோதியது.
‘இன்னா தேவனா அப்பிடிப் பாக்கற?’
‘ஏன் பாக்கக் கூடாதா?’
‘தாராளமா பாரு. யாரு வேணாம்னு சொன்னாங்க’
‘பின்ன இன்னாய்யா நீ. ஒரு நாளு இருந்துட்டுப் போய்யான்னா
பெரிசா ராங்கி காட்டிக்கற’
‘ராங்கி காட்டறது நானா மெம்பரா?’
சொல்லிக்கொண்டே தேவானை
பேச்சில் இருந்த கிண்டலை ரொம்பவும் ரசித்தவனாய்ச் சிரித்தான் ஆறுமுகம். ‘சிரிக்கறத பாரு.
வயிறு எரியுது எனக்கு’ என்று சட்டென்று
இறவாணத்தில் இருந்த விசிறி மட்டையை உருவி அடிக்கிறமாதிரி பாவனையோடு வந்தவளைக்
கண்டு இன்னும் வேகமாய்ச் சிரிப்பு புறப்பட பொங்கிப்பொங்கிச் சிரித்தான். ‘எதுக்குய்யா
சிரிக்கற இப்ப?’ என்று அவன்
தலையைப் பிடித்துக் குலுக்கும் நேரம் ‘அப்பா’ என்று உள்ளே ஓடிவந்தான் ஏழுமலை. ஆறுமுகத்தின் தோளைக்
கட்டிக்கொண்டு 241 பாவண்ணன்
தொகுப்பு பாகம் 1 s
நாலு மாசமாய்ப்
பகிர்ந்துகொள்ள ஆர்வமாய் மனசுக்குள் தேக்கிவைத்திருந்த அனுபவங்களையெல்லாம்
அப்போதுதான் எல்லாமே நிகழ்ந்த மாதிரி ரசனையோடும் அபிநயத்தோடும் சொல்லத்
தொடங்கினான்.
**
‘சூடு போதுமா, பாரு’
வாளியில் தண்ணீரை
ஊற்றிவிட்டு நின்றாள் தேவானை. தொட்டுப் பார்த்துவிட்டு ‘அய்யோ கொதிக்குது
இன்னம் கொஞ்சம் பச்சத்தண்ணி ஊத்து’ என்றான் ஆறுமுகம்.
‘இந்த சூட்டுல கூட ஊத்திக்கலன்னா உடம்பு ஆயாசம் எப்டியா
போவும்?’
‘எல்லாம் போவும், ஊத்து’
‘இஷ்டப்படி இருந்துஇருந்து ஆளே மாறிட்ட நீ...’
‘ஐயோ. வளவளன்னு பேசாத, நேரமில்ல. ஊத்து’
இன்னொரு குடம் தண்ணீரை
ஊற்றி மிதமான வகையில் சூடாக்கினாள். குவளையில் மொண்டுமொண்டு தலையில்
ஊற்றிக்கொண்டான் ஆறுமுகம்.
‘ஒடம்புலாம் இப்படி கருத்துப்போயி கெடக்குதே. எந்நேரமும்
வெயில்லயே இருப்பியா’
‘நெழல்லயா டவர் கட்டுவாங்க. வெயில்லதா கட்டணும்.’
‘நல்லா டவர் கட்டி கிழிச்ச. திரும்பு, தேச்சி உடறன்’
திரும்பியவன் முதுகில்
ஜாண் அகலத்துக்கு தோல் கிழிந்து தையலிட்ட தழும்பைப் பார்த்து அதிர்ந்தாள் தேவானை.
‘இன்னாயா முதுவுல இது?’
‘வேல செய்யுபோது ஒரு ஆங்கிள் உழுந்து கிழிச்சிடுச்சி’
‘எலும்புல ஏதாவது அடியா?’
‘ச். சின்ன அடிதா’
‘வௌயாடறியா. வாளமீனு நீட்டுக்கு கிழிஞ்சிருக்குது. சின்ன
அடின்னு சொல்றியே...’
சின்னதோ பெரிசோ இப்ப
சரியா போச்சி தேவான. அப்றமின்னா? உடு’
‘சொல்லவே இல்ல எங்கிட்ட’
‘லெட்டர்ல எழுதனாங்களே, கெடைக்கலியா?’
‘இல்லயே’
‘மாப்ளகிட்ட சொல்லி இந்தமாதிரி எழுதுங்கன்னு சொன்னன்.
எழுதிர்றன்டான்னுதா அவுரும் சொன்னாரு’
‘எதுக்கு பொய் சொல்ற எங்கிட்ட?’
‘நெஜமாத்தான் தேவான. ஒங்கிட்ட எதுக்குப் பொய் சொல்லணும்’
‘முதுவுல மட்டும்தானா, இல்ல வேற எங்கயாச்சிம் அடியா?’
‘கால்ல கொஞ்சம். தலைல கொஞ்சம், எல்லாம் சரியாய்டுச்சி’
‘மாப்ளதா வைத்தியம் பாத்தாரா’
‘ம்’
‘அவரு செலவா ஒன் செலவா...?’
‘என் செலவுதான்...’
குளித்து உடம்பு
துவட்டும்போது மெம்பர் வீட்டிலிருந்து ஆள் வந்து கூப்பிட்டது. ‘சாட்டட்டு
வந்துர்றன் போடா’ என்று
அனுப்பிவைத்தான் ஆறுமுகம். சொல்லிக்கொண்டே பெட்டியில் இருக்கிற புதுவேட்டியை
எடுத்துக் கட்டிக்கொண்டான். ஏழுமலை வந்து பக்கத்தில் நின்றான்.
‘எனக்குகூட நீ வந்ததும் புதுத்துணிங்க வாங்கித்தரன்னு அம்மா
சொல்லிச்சி...’
‘அம்மாகிட்ட பணம் குடுத்துட்டுப் போறன். ஒனக்கு இன்னா வேணுமோ வாங்கிக்க’
‘சரி’
‘சாப்டலாமா நீயும் நானும்’
‘ம்’
இருவர்க்கும் தட்டுகளை
வைத்துப் பரிமாறினாள் தேவானை. கருவாட்டுக் குழம்போடு முருங்கைக் கீரை வதக்கி
வைத்திருந்தாள். அவசரமாய்ச் சாப்பிட்டான். ‘இன்னம் கொஞ்சம் போட்டுக்க’ என்று வந்தவளைத் தடுத்துவிட்டு நிமிர்ந்தான்.
‘இன்னாயா சாப்பாடு இது? அறியாப் புள்ள சாப்டற மாதிரி. இப்படி சாப்ட்டா
எங்கேர்ந்துய்யா சத்து வரும்’
‘எல்லாம் வரும்’
குறுஞ்சிரிப்போடு எழுந்து
பின்பக்கம்போய் கை கழுவிக் கொண்டு வந்து துணிகளை எடுத்து வைத்தான். இன்னொரு தரம்
வாசலில் வந்து கூப்பிட்டுவிட்டுப் போனது ஆள். பஞ்சாயத்து போர்டு பக்கத்தில்
இருந்து லாரி ஹாரன் சத்தம் கேட்டது.
‘சரி வா இங்க. இதுல ஆயிரம் ரூவா இருக்குது இப்ப குடுத்தது.
இன்னம் பழய கணக்கு தீக்கல. மொத்தமா அப்புறம் தீப்பாங்களாம். தீபாவளிக்கு முடிஞ்சா
வரன். எனக்காக பாக்காத. நல்ல துணிமணி எடுத்துக்க. புள்ளக்கிம் எடுத்துக்குடு.
எங்கூட்லேந்து யாராச்சிம் வந்தாங்கன்னா... அவுங்களுக்கும் எடுத்துக்குடு. இன்னா
புரிதா...’
‘ம்’
‘கூரைய பிரிச்சிட்டு வேற மாத்து. மழவந்தா தாங்காது. மூங்கில்
கழிவேணாம். நல்ல பனவாரயா பாத்து வாங்கி கட்டு...’
‘ம்’
‘எதுக்கு இப்ப மூஞ்சிய தூக்கி வச்சிக்ன...?’
‘ஒண்ணுமில்ல’
‘அடுத்த தரம் திருப்தியா ஒருமாசம் இருக்கறன் போதுமா’
‘எல்லாம் நீ இருக்கற ஆளுதான் தெரியும். இந்தா இதக் குடி...’
அடுக்குப்பானையின்
கீழிருந்து சின்ன பாட்டில் ஒன்றை எடுத்து நீட்டினாள் தேவானை.
‘இன்னாது தேவான?’
‘வாங்கித்தா பாரேன். வெஷமா குடுக்கறன். ராத்திரி வருவியே
கேப்பியோ இன்னமோன்னு வாங்கி வச்சன்...’
‘சாராயமா?’
‘ம்’
ஆவலாய் வாங்கி அவன்
குடிப்பதையே பார்த்தாள். சிறுசிறு முகச் சுளிப்புகளோடு ஒரு டீயைக்குடிக்கிற மாதிரி
அவன் குடித்த விதம்
ஆச்சரியமாய் இருந்தது.
‘எங்க வாங்கன...?’
‘ராக்கம்மாகிட்ட...’
வெற்றுப் பாட்டிலை
பானைக்கடியில் வைத்துவிட்டு துணிமூட்டையோடு நிமிர்ந்தான் ஆறுமுகம். ஓடிவந்து பையை
வாங்கிக்கொண்டு ‘போலாம் வாப்பா’ என்றான் ஏழுமலை.
‘வரட்டா?’
‘நா சொல்றத என்னிக்காவது கேக்கறியா நீ?’
‘இன்னா தேவான?’
‘நாளக்கி போ...’
‘அந்த மாதிரிலாம் மெம்பர் உடமாட்டான்டி’
‘சாப்ட்ட களப்புக்கு கொஞ்ச நேரம் அக்கடான்னு படுத்துங்
கெடந்தாச்சிம் ஏந்து போவறது. அதுக்குக் கூடவா ஒங்க மெம்பர் ஒத்துக்கமாட்டான்...
சின்னச் சின்னதாய்
உதிர்ந்த வார்த்தைகளின் கனம் மொத்தமாய் மனசில் இறங்க, வாசல் வரைக்கும்
போய்விட்டு ஆறுமுகம் முகம் வெளிற தேவானையைத் திரும்பிப் பார்த்தான். கண்களின்
கோடியில் நீர் தளும்ப நிற்கும் தேவானையைப் பார்க்க ஒருகனம் உடம்பு அதிர்ந்து
அடங்கியது.
‘வாப்பா போவலாம்’
விளையாட்டு ஆர்வமாய்
ஏழுமலை வெளியில் இருந்து கூப்பிட்டான் ‘வாப்பா போவலாம்’ என்று கூடவே இன்னொரு குரலும் கேட்டது.
(மன ஓசை -1988)