Home

Monday, 25 October 2021

செவிடி - சிறுகதை

 

மாநிலம் தாண்டி மாநிலம் செல்கிற ரயிலில் நிம்மதியுடன் மிக சமீபத்தில் உறங்கும் புதிய மனைவியின் முகப் பிரகாசத்தையும் காற்றில் நெளிந்துநெளிந்து அலைகிற அவள் கூந்தலையும் பார்த்தபடி ஊரில் நடந்ததையெல்லாம் ஒன்றுமாற்றி ஒன்று யோசித்தபோது செவிடி என்கிற தளர்ந்த அந்தக் கிழவியின் ஞாபகம் வந்தது.

கல்யாணத்துக்குக்கூட செவிடி வரவில்லை. ஒரு வாரத்துக்குப் பிறகு ஊருக்குப் புறப்படுதலைச் சொல்லிக் கொள்வதற்காக பழனி வீட்டுக்கும் மோகன் வீட்டுக்கும் போயிருந்த தருணத்தில் கல்யாண விஷயம் எதுவுமே தெரியாமல் தெருவுக்குள் நுழையும் போதெல்லாம் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போகிற ஒரு சுபாவமான பழக்கத்துடன் வந்திருக்கிறாள். இன்னும் பிரிக்காத வாசல் பந்தல், தோரணம், வதங்கிய பூச்சரம், நடை, முதல் கட்டு, இரண்டாம் கட்டு முழுக்க இருந்த மாவுக் கோலம், புதுச் சுண்ணாம்பு பூசிக் கொண்ட சுவர், கதவில் பளீரென்று அப்பி இருந்த மஞ்சள் குங்குமம் எல்லாம் கூடி ஒரு ஆச்சரியமான பரவசத்தை உண்டாக்கி அம்மாவைப் பார்த்து இன்னா விசேஷம்என்று சைகையால் கேட்டு அப்புறந்தான் தெரிந்து கொண்டிருக்கிறாள். நம்ம தம்பிக்கா? இவ்ளோத்தம் இருந்தானேஎன்று பத்து வயசு உயரத்துக்கு கையைக் காட்டி ஒரு சந்தோஷமான பொங்குதலோடு கேட்டிருக்கிறாள்? ‘எங்க காணம்?’ என்று. பார்க்க ஆசைப்பட்டவளை சிநேகக்காரங்க ஊட்டுக்குப் போயிருக்காங்க. கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க இருஎன்று சொல்லி அம்மாதான் உட்கார வைத்திருக்கிறாள் கொஞ்ச நேரம் என்பது ஏறத்தாழ இரண்டு மணி நேரத்துக்கு நீண்ட பிறகு அடுத்த தெரு வரிக்கும் போய்ட்டு வந்துர்றன். வந்தா இருக்கச் சொல்லுஎன்று சொல்லிக்கொண்டு நகர்ந்திருக்கிறாள். இதெல்லாம் நடந்து பத்துப் பதினைந்து நிமிஷத்துக்குப் பிறகுதான் நாங்கள் வந்தோம். வந்ததும் செவிடி விஷயம் ஞாபகப் படுத்தப்பட்டது.

செவிடியைப் பற்றி ஆரம்பத்திலிருந்தே தெரியும் என்றாலும் இரண்டாவது தம்பி பிறந்த பிறகு பழக்கமான செவிடியைத்தான் நன்றாகத் தெரியும். குள்ளம், ஒடிசலான உடம்பு, பொறுமைசாலி என்று எழுதி ஒட்டிய முகம், சுருக்கம் விழுந்த உடல் இதெல்லாம்தான் செவிடி. செவிடாக இருப்பவர்கள் எல்லாரும் சத்தமாய்ப் பேசுவதுண்டு என்பார்கள். இதற்கு நேர்மாறாய் ரகசியம்மாதிரி மெதுவான குரலில் பேசுவாள் செவிடி.

செவிடியோடு பிரியமாக இருக்க நேர்ந்ததற்கு நிறைய காரணங்கள் உண்டு. அம்மாவோடு சம்பந்தப்பட்ட பாட்டியானாலும் அப்பாவோடு சம்பந்தப்பட்ட பாட்டியானாலும் யாரும் எங்களோடு இருந்ததில்லை. இல்லாத அந்தக் குறையை செவிடிதான் தீர்த்தாள். எந்தக் கோயிலில் சுண்டல் கொழுக்கட்டை கொடுத்தாலும் எனக்கென்று முந்தானையில் முடிந்துவைத்திருந்து தந்தாள். நாவல் பழம் பொறுக்கி வந்து தின்னக் கொடுத்தாள். எப்பவாச்சும் பையில் முடிந்து வைத்திருக்கிற காலணாவையோ அரையணாவையோ தந்து முறுக்கு வாங்கித் தின்னச் சொன்னாள். அம்மா ஆஸ்பத்திரியில் இருந்த சமயத்திலும் பாண்டிச்சேரிக்கு பாப்பாவோடு போய்விடுகிற சமயத்திலும் எனக்கும் அப்பாவுக்கும் அக்கறையோடு சோறாக்கினாள். அம்மா மாதிரி ஆம்பள பையனுக்கு சமையல் வேல எதுக்கு. அந்தாண்ட போடாஎன்றெல்லாம் அதட்டி விரட்டாமல் என்னையும் சமையலுக்கு சகாயமாய்ச் சேர்த்துக்கொண்டாள். ஜான் வீட்டிலிருந்தும் தமிழரசி அக்கா வீட்டிலிருந்தும் தண்ணீர் பிடித்துக்கொண்டு தலையில் தவலையை சுமந்தபடி வரும் போது வாசலிலேயே நின்று தவலையை வாங்கினாள். தண்ணீர் வேலை முடிந்த கையோடு ஆடப்போகிற அவசரத்தில் கஜேந்திரனோடு ஓடும்போதெல்லாம் மொதல்ல தலைய தொவட்டுப்பா என்று இழுத்து வைத்து துண்டால் துவட்டினாள்.

செவிடியின் எல்லா நடவடிக்கைகளிலும் நிஜமான ஒரு ஈடுபாடும் பிரியமும் இருக்கும். சாப்பாட்டுக்கு அண்டி இருக்கிறோம். போடுகிற மட்டும் செய்வோம் என்றெல்லாம் கிடையாது. இத்தனைக்கும் செவிடிக்கென்று ஒரு மகளும், அவள் ஏதோ ஒரு வெறுப்பில் அவர்களையெல்லாம் உதறி எங்களோடு இருந்தாள். எப்பவாச்சும் நரிக்குறவர்கள் இழுத்து வந்து போடுகிற வேலங்கிளையைக் கழிப்பதில் செவிடிக்கு என்று தனிநேர்த்தி உண்டு. அளவுவாரியாக நறுக்கி அடுக்குவாள். குச்சி குச்சியாய் இருக்கும் நுனிக்கிளை ஒரு ரகம். கொஞ்சம் தடித்து முள் வளர்ந்த கட்டை ஒரு ரகம். மண்வெட்டிக் காம்பு அளவுக்கு இருக்கிற கட்டைகள் ஒரு ரகம் எல்லாம் தனித்தனியாக அடுக்கி வேலம்பட்டையை உரித்தே அளவு பிசகாமல் கட்டுவாள். கட்டு தனித்தனியே இருக்கிற மாதிரியே தனித்தனி உபயோகமும் உண்டு. குச்சிக் கட்டு குளிக்கிற தண்ணீர் சுட வைப்பதற்கு. மற்ற கட்டைகள் சமைப்பதற்கு. இதே போலவே பாகீரதி வீட்டிலிருந்து அம்மா வாங்கி வருகிற சவுக்கமிளார்களையும் அளவு வாரியாய்த்தான் கழிப்பாள். சவுக்கமிளார் எப்போதும் நெல் அவிக்க உபயோகம் தரும். கொஞ்சம் தடிப்புடன் நீளமான கட்டை இருந்தால் அவரைப்பந்தலுக்கு உபயோகமாகும். எல்லாக் கட்டுகளும் திண்ணையில் ஒன்றோடு ஒன்று கலக்காமல் எடுத்தாள சுலபமாகிற விதத்தில் திண்ணையில் அடுக்குவாள். விறகு இருப்பது யாருக்கும் தெரியக்கூடாது என்கிற மாதிரி கூரையில் இருந்து நேரே இறங்கிய மாதிரி சாக்குப்படுதாவைக் கட்டுவாள்.

படுதாவுக்கு பக்கத்தில் வெற்றிலை பாக்கு இடித்துக் கொண்டுதான் செவிடி எங்களுக்குக் கதை சொல்வாள். அவள் சொல்கிற கதை என்றும் முடிந்தது கிடையாது. ராஜா ஜெயலுக்குப் போகிற வரைக்கும் சொல்லி மீதி அடுத்தநாள் என்பாள். ஆனால் சொன்னபிரகாரம் அந்த கதையைத் தொடராமல் புதுசாய் வேறொன்றைத் தொடங்கி ராணிக்கு கண் அவிந்து போனதுவரை சொல்லி மறுதரமும் அடுத்த நாள் என்பாள்.

திடீர் திடீரென்று செவிடி மடியில் பொத்தி வைத்து எடுத்து வந்து கொய்யாப் பழங்கள் தின்னத் தருவாள். சமயங்களில் அணில் தின்று உதிர்ந்து போய் இருக்கிற மாம்பழங்கள், சப்போட்டாப் பழங்கள் என்று கொண்டு வந்து தருவாள். எங்களுக்காகவே செவிடி ஒரு தோட்டம் வைத்திருக்கிற மாதிரியும் அதிலிருந்து தினசரி எங்கள் சந்தோஷத்துக்காகவே பறித்துவந்து தருகிற மாதிரியும் நினைப்பது உண்டு. ஏதோ ஒரு தருணம் அம்மா கேட்ட போதுதான் அட பெங்களூர் ஐயரு ஊட்டு மதிலோரம் மரங்க தாழ கெடக்குது. பறிச்சேன் என்றாள். இவை எல்லாப் பழங்களையும்விட செவிடி கொண்டுவந்து தந்த கொடுக்காப்புளிதான் எனக்குப் பிடித்தது. இளஞ்சிவப்பான அதன் வர்ணமும் மிருதுவான இனிப்பும் எத்தனை தின்றாலும் சலித்ததில்லை.

செவிடி எங்கள் வீட்டிலேயே அம்மாவோடு சாப்பிட்டாளே தவிர எதற்கும் காசு கேட்டுப் பார்த்ததில்லை. அம்மாவே காய்கறி வாங்கப் போகிற ஒவ்வொரு சாயங்காலங்களிலும் வெற்றிலை பாக்கு புகையிலை வாங்கி வந்து தருவாள். இதையெல்லாம் மொத்தமாய் முந்தானையில் முடிந்துகொள்ள செவிடி படுகிற சிரமத்தைப் பார்த்த பிறகுதான் எனக்கு வெற்றிலைப் பாக்குப்பை ஒன்று தைத்துத் தருகிற யோசனை வந்தது. தையற் கடை வைத்திருந்த அப்பாவிடம் சொன்னால் தைத்துத் தந்தாலும் தரலாம். இல்லையென்றால் கெடக்கறதல்லாம் கெடக்கட்டும் கெழவன தூக்கி மடீல வச்சிக்கன்னு வந்துட்டான் போடா போஎன்று விரட்டினாலும் விரட்டலாம். அதனால் பிரியத்துடன் நானே தைத்துத் தர வேண்டும் என்று அதற்கான சமயத்துக்குக் காத்திருந்தேன். கடைக்குச் சாப்பாடு கொண்டு போகிற ஒவ்வொரு மதிய நேரத்திலும் பைக்குத் தகுந்த மாதிரி சதுரத் துணியைச் சீய்த்துச் சீய்த்து தேடுவதிலிருந்தேன். அப்பா வெட்டிவெட்டிப் போட்ட துண்டுத்துணியை ஒரு மரப் பெட்டியில் குவித்திருந்தார். அதற்குள் கைவிட்டுத் தேடி இரண்டு துணிகளை எடுக்க ஒரு வாரமாயிற்று. இணைத்துத் தைக்க வேண்டியதுதான் பாக்கி. எட்டாம் நாள் சாப்பாடு கொடுத்துவிட்டு அப்பா எப்போது மிஷினைவிட்டுக் கீழே இறங்குவார் என்று உட்கார்ந்திருந்தேன். அப்பா எழுந்ததும் பையில் கவனமாய்ப் பாதுகாத்திருந்த துணிகளை எடுத்து அளவாய் நறுக்கித் தைக்க இருந்தேன். இன்னாடா இன்னாடாஎன்று வாய் நிறைய சோற்றோடு முதுகுப்பக்கம் திரும்பிக் கேட்ட அப்பாவுக்கு ஒண்ணுமில்லப்பாஎன்று பதில் சொன்னபடி கண்ணும் கருத்துமாய்ப் பை தைப்பதில் இருந்தேன். ஒரு கணம். பிசகிய அந்த ஒரு கணத்தில் ஓடிக் கொண்டிருந்த மிஷினை நிறுத்தத் தெரியாமல் இசகு பிசகில்லாமல் துணியை விலக்கப் போய் விரலில் நச்சென்று ஊசி இறங்கியது. அப்பா ஓடி வந்து ஊசியை விலக்கினார். சிவப்பு அமிலமாய் ரத்தம் ஒழுகியது. ஒழுகஒழுக ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனார். கட்டு கட்டினார்கள். பயத்தில் ராத்திரியெல்லாம் எனக்கு ஜுரமாகியது. ஜுரத்தில் நிறையப் பிதற்றல். விடிந்து அப்பா எதுக்கு மிஷினை நீ தொட்டஎன்றார். செவிடிக்குப் பை தைக்க என்றதும் சிரிப்பாய்ச் சிரித்தார்கள். எனக்கு நாணமாய் இருந்தது. விஷயம் தெரிந்து செவிடி என்னைக் கட்டிக் கொண்டு ரொம்ப நேரம் தலையை வருடிக் கொடுத்தாள். இந்த வெரல்தான் எனக்கு பை தைக்குமா, இந்த கைதான் என்ன காப்பாத்துமா, இந்த கைதான் எனக்கு சோறு போடுமாஎன்று மெல்லிய குரலில் பேசினாள். ராத்திரி வேலை முடித்து வரும் போது அப்பா பை தைத்து வந்து தந்தார்.

இந்தத் தருணத்தில் அப்பா ஒரு பசுவை வாங்கினார். சங்கிலி வாங்கித் தருவதாக கட்டிய சீட்டு விழுந்த கையோடு சங்கிலி பற்றிய அபிப்பராயத்தை மாற்றிக்கொண்டு பசுவை வாங்கி வந்தது அம்மாவுக்கு கொஞ்சமும் பிடித்தமில்லாமல் இருந்தது. இதனாலேயே அம்மா அதன் பக்கம் நெருங்கவில்லை. யாரும் நெருங்காத பசுவை செவிடியே பார்த்து வந்தாள். பசு வந்த பிறகு புல் அறுத்து வருவது செவிடிக்கு கூடுதலாய் ஒரு வேலையாயிற்று. புல்லுக்காக உறையூர்ப்பக்கமோ உடையார் பம்ப்செட் பக்கமோ போகும்போது துணைக்குப் போவது எனக்கும் கூடுதலான சந்தோஷமாயிற்று. செவிடி புல் அறுத்து முடிகிற வரைக்கும் பக்கத்தில் இருக்கிற ஏதாவது ஒரு கொல்லையில் இருந்து கரும்புகளை இஷ்டத்துக்குக் கடித்துக் கொண்டிருப்பேன். சோலையோடு சோலையாகப் படுத்துக் கிடந்த பாம்பை ஒருநாள் பார்க்க நேர்ந்ததற்குப் பிறகு கரும்புக் கொல்லை பயம் தந்தது. வரப்போரம் செவிடி அறுத்து வைக்கிற புல்லை அடுக்குகிற நல்ல பிள்ளையாய் மாறினேன். புல்லை உதறிப் போடுவது, கழுநீர் வைப்பது, குளிப்பாட்டுவது, சாணம் எடுப்பது பெருக்குவது எல்லாம் செவிடிதான். கன்று போடப் போகிறது என்பதால் அதன்பால் மிகவும் இரக்கமாகவும் பிரியமாகவும் இருந்தாள். கடைத்தெருவில் இருந்து திரும்பிய செவிடி ஒரு நாள் அகத்திக்கீரை வாங்கிவந்து இணுக்கி இணுக்கி பசுவுக்கு ஊட்டிக்கொண்டிருந்தாள். அமைதியாகத் தின்றுகொண்டிருந்த பசு திடீரென்று முரடாகி செவிடியை முட்டித் தள்ளியது. எதிர்பாராத தள்ளுதலில் சரிந்த செவிடி தொட்டியில் மோதி கையை உடைத்துக்கொண்டாள். நேரம் ஆக ஆக கையெல்லாம் பம்மென்று வீங்கியது. வலி தாளாமல் அழுதாள் செவிடி. ஆத்திரத்திற்கு ஏற்றமாதிரி அம்மா பசுவைத் திட்டினாள். நான்தான் கடைக்குப் போய் அப்பாவுக்கு சேதி சொன்னேன். அப்பா உடனே வந்து வாணியம்பாளையத்துக்கு செவிடியை அழைத்துப் போய் எலும்பு முறிவு கட்டு போட்டுக் கொண்டு வந்தார். பத்து நாள் பத்திய சாப்பாடு. எல்லாம் முடிந்து செவிடிக்கு கை ஆறுவதற்குள் அப்பா பசுவை விற்று விட்டு அம்மாவுக்கு சங்கிலி வாங்கி வந்தார்.

அநேகமாக இந்தச் சமயத்தில்தான் ஊருக்குள் தேர்தல் வந்தது. ஆறாவது வார்டு சார்பாக பஞ்சாயத்து போர்டு தெருவில் சாமிக்கண்ணு பெரியப்பாதான் நின்றார். குதிரை வீரன் சின்னம். உங்கள் ஓட்டு குதிரை வீரனுக்கே என்றும் சாமிக்கண்ணுவின் சேவை ஆறாவது வார்டுக்குத் தேவை என்றும் கோஷம் போட்டுக்கொண்டு கும்பலோடு கும்பலாக நானும் சுற்றினேன். சின்னம் வரைந்த அட்டையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு முஷ்டியை மடக்கிக் கோஷம் போடுவது கம்பீரமானதும் பெருமைப்படத் தக்கதுமான விஷயமாக இருந்தது. சாமிக்கண்ணு பெரியப்பா வீடு வீடாக ஓட்டுக் கேட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்தபோது திடீரென்று அவர் கையைப் பிடித்துகொண்டு செவிடி அழுதாள். ‘‘இருக்க ஊடில்லைப்பா. எங்கனாச்சும் ஒரு குடிசை போட்டுத்தா ராஜாஎன்று சின்னச் சின்ன வார்த்தைகளாய் மெதுவான குரலில் சொன்னாள். செவிடியின் அழுகையும் வேண்டுகோளும் எனக்கு விசித்திரமாய் இருந்தது. அடுத்த நாளே செவிடிக்கென்று ஏரிக்கரையோரம் ஒரு குடிசை தயாரானது. குடிசையைப் போய் பார்த்துவிட்டு வந்து செவிடி சாமிக்கண்ணு பெரியப்பாவின் கையைப் பிடித்து அழுதபடி தனது நன்றியைத் தெரிவித்தாள். தன் வீட்டிலேயே சாப்பிட வைத்து செவிடியை அனுப்பினார் சாமிக்கண்ணு பெரியப்பா. அதற்கப்புறம் தேர்தலில் இருபத்தியோரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுத்தான் போனார்.

செவிடிக்குச் சொந்தமாய் ஒரு குடிசை என்று ஆனதும் மகளும் மருமகனும் அவளோடு ஒட்டிக்கொண்டார்கள். ஒருநாள் பள்ளிக்கூடம் விட்டு நான் வந்த சாயங்காலத்தில் அம்மாதான் பஞ்சாயத்து நடத்தி செவிடியை ராசியாக்கி மருமகனோடு அனுப்பி வைத்தாள். இந்த சந்தர்ப்பத்துக்குப் பிறகு செவிடியின் வருகை அபூர்வமானது.

பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு மேலே படிக்க பாண்டிச்சேரிக்குப் போனதற்குப் பிறகு கிராமத்துக்கு என்னுடைய வருகை மிகவும் குறைச்சலாய் நிகழ்ந்தது. அப்படி வர நேர்ந்த சொல்ப தினங்களுக்குக் கூட தூங்கும் நேரம் தவிர ஏனைய நேரத்தில் எல்லாம் கூட இருக்கிற சிநேகிதனாக பழனி இருந்தான். எட்டுத் திசையிலும் வாழ்க்கை உதைத்து என்னை எங்கெங்கேயோ தள்ளியது. ஏதோ ஒரு விசையான உதையில் இன்னொரு மொழி இன்னொரு கலாச்சாரம் என இப்போது பயணப்பட்டிருக்கிற மாநிலத்துக்குத் தள்ளியது. புதுமொழியும் புது ஜனங்களும் ஆரம்பத்தில் பிரமிப்பான விஷயங்களாகி மூன்று வருஷத்துக்குள் இயல்பானது. ஓட்டல் சாப்பாடு ஆரோக்கியத்தைக் கெடுத்தது. அப்புறம்தான் கல்யாண ஏற்பாடானது. இத்தனை வருஷங்களுக்கு இடையில் மிக அபூர்வமாய் ஒரு சில முறை செவிடியைப் பார்க்க நேர்ந்தது உண்டு. முற்றிலும் தளர்ந்து உடம்பு மிகவும் சுருங்கி வதங்கலாகிப் பலவீனமாக இருந்தாள். ஆனால் பிரியம் மட்டும் அவள் கண்ணில் ஒளியோடு இருந்தது. மீசை வளர்ந்து உடம்பு வாகாக பனியன் லுங்கியோடு ஒருநாள் கட்டைமேல் உட்கார்ந்திருக்கும் போது நம்ம தம்பியா என்று ஆச்சரியப்பட்டு மெலிசான அவள் கைகளால் தலையை வருடி திருஷ்டியாக கையைச்சுற்றி நெட்டிமுறித்தாள். அப்படியே பலராமன் மாதிரி இருக்கும்மாஎன்று அப்பா பெயரைச் சொல்லி ஆச்சரியப்பட்டாள். அந்தச் சூழல்தான் செவிடியை கல்யாணத்துக்கு முன்பு கடைசியாய்ப் பார்த்தது.

செவிடி வந்துட்டுப் போச்சுடாஎன்று வந்ததும் வராததுமாய் அம்மா ஞாபகப்படுத்தியதும் என் பிரியத்துக்குரிய அந்தப் பழைய கிழவியைப் பார்க்க எனக்கும் ஆசையானது. அவள் இடம் தேடி கல்யாண அழைப்புக் கொடுக்காததற்காக மிகவும் வருத்தப்பட்டேன். பிரயாணப் பொருட்களை அடுக்கிக் கொண்டும் கடைசி நேரத்தில் அறுந்துபோன தோல் பையைத் தைத்துக் கொண்டும் சமையலுக்காக மிளகாய்த்தூளைத் தனியே ஒரு டின்னில் போட்டு அடைத்துக் கொண்டும் நேரம் கழிந்தது. நடுவில் புதிய மனைவியுடன் செவிடியுடனான என் சகவாசத்தை உற்சாகத்துடன் விவரித்தேன். கடைசியில் செவிடி வந்தாள்.

மிகவும் மெலிந்திருந்தாள் செவிடி. தோள்பட்டையெல்லாம் சுருங்கித் தளர்ந்திருந்தாள். யாரோ அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிற மாதிரியும் பிடியிலிருந்து வெகு பிரயத்தனப்பட்டு மீளுகிற மாதிரியும் மிக மெதுவாக அடி அடியாக நடந்து வந்தாள். நாலடி தூரத்தில் அவள் இருக்கும்போதே நான் சிரித்தது அவளுக்குத் தெரியவில்லை போல. நானே எழுந்துபோய் அவள் கையைப் பற்றியதும்தான் உணர்ந்தாள். அவளைவிட கூடுதலாக உயரமாகிவிட்ட என்னை அப்படியே ஒரு கணம் கையைப் பிடித்துக்கொண்டே நின்றுவிட்டாள். பெயரைச் சொல்லி இரண்டு மூன்று தரம் கூப்பிட்டாள். அவளை நடத்திக் கட்டையில் உட்கார வைத்தேன் நான்.

நல்லா இருக்கியா ஆயா?’

மிக சத்தமாய் நான் கேட்டபோதுகூட அவளுக்குக் கேட்கவில்லை போல. தனக்குக் கண் மங்கிப் போன கதையைச் சொன்னாள். கண்ணே தெரியல தம்பி. ஒரே மசமசன்னு இருக்குது. எதப்பார்த்தாலும் பூச்சி பறக்கிற மாதிரி இருக்குது. வெளிச்சத்தையே பாக்க முடியல. உத்துப்பாத்தா தண்ணி ஒழுவுது. காலையிலே அம்மாவப் பாத்தனா, ஒனக்கு கல்யாணம்ணு சொல்லிச்சு. அதான் பாக்கணும் போல ஆசையா இருந்திச்சி. நல்லா இருக்கியாப்பா. ரொம்ப தொலைவு போய்ட்டியாமே. எதுக்கப்பா அவ்ளோ தூரம் அப்பா அம்மாவை உட்டுட்டுப்போன? இங்கியே கிட்டக்க எங்கனாச்சும் வேல பாத்துக்கக் கூடாது...

பேசிக்கொண்டே உள்ளங்கையில் தடவிக் கொடுத்தாள். இனம் புரியாமல் பொங்கிப் பொங்கி வழிந்த ஒரு சந்தோஷத்தில் எனக்கு உடம்பே குழைந்தது. கண்ணுக்குள் நீர் முட்டியது. நெற்றிக்குள் ஜில்லென்று ஒரு அருவி விழுந்தமாதிரி இருந்தது. திடீரென்று என் ஆகிருதியெல்லாம் இழந்து பத்து வயசுக்கு மாறி அவள் மடியில் இருக்கிறதைப் போல் தோன்றியது.

புதிய மனைவியை அழைத்து செவிடிக்கு அறிமுகம் செய்தேன். வளையல் குலுங்கும் அவளது சிவந்த கைகளையும் எனது கையையும் செவிடி சேர்த்துப் பிடித்தாள். சூரிய சந்திரரு மாதிரி நெலச்சி வாழுங்க கண்ணுஎன்று பரவசத்தோடு சொல்லி கை மணிக்கட்டில் முத்தமிட்டாள். கண்ணோரம் வழிந்த கண்ணீர் கையில் முத்து மாதிரி தெறிந்து சிலிர்ப்பையுண்டாக்கியது. மனைவி எழுந்து போய் பழம், இனிப்பு, வெற்றிலை&-பாக்கு எல்லாம் வைத்த தட்டில் தனது ஒரு புடவையையும் வைத்து செவிடியிடம் நீட்டி எடுத்துக்கொள்ளச் சொன்னாள். பூப்போட்ட அந்தப் புடவை அவளுக்குச் சிறிதும் பொருத்தமில்லை என்றாலும் ஒரு சந்தோஷத்தின் அடையாளமாய் அந்தப் புடவை இருந்தது. ஒரு பத்துரூபாய் நோட்டையும் எடுத்து வைத்தேன் நான். பல வருஷங்களுக்குப் பின்னோக்கி மனதைச் செலுத்துகிற மாதிரியும் அப்போதைய அடையாளங்களையும், அனுபவங்களையும் மீண்டும் தனக்குப் பொருத்திப் பார்த்துக்கொள்கிற மாதிரியும் செவிடி சில கணங்கள் தட்டின் மேல் பார்வை பொதிய இருந்தாள். எனக்கு எதுக்குடா ராஜா காசி? நீ வெச்சிக்கஎன்று சிரித்தபடி எடுத்துக் கொடுத்தாள். ஏதாவது வாங்கிச் சாப்புடுஎன்று சைகையுடன் சத்தம்போட்டுச் சொல்லி அவள் கையிலேயே திணித்தேன் நான். இல்ல ராஜா ஒன் கல்யாணத்துக்குக் குடுக்கிறதுக்கு எங்கிட்ட எதுவுமில்ல ராஜா. இதையே நான் குடுக்கிறதா நெனச்சி வச்சிக்கப்பாஎன்று தழுதழுக்கச் சொன்னாள். பரவாயில்ல பரவாயில்ல வச்சிக்கஎன்றபடி மீண்டும் ரூபாய் நோட்டை அவள் கையில் வைத்து அழுத்தினேன். நெகிழ்ச்சியோடும் பரவசத்தோடும் சூழ்ந்த அந்த ஒரு கண நேரத்தில் இருபது வயசு குறைந்து செவிடியின் பாதுகாப்பு வேண்டுகிற ஒரு சின்னப்பையனாக உணர்ந்தேன்.

இன்னும் தூக்கம் வரவில்லை எனக்கு.

திடீரென்று படுக்கைத் தட்டிலிருந்து சரிந்து விழுந்த ஒரு பெட்டியின் பெரிய சத்தத்தின் காரணமாக மனைவி எழுந்து விட்டாள். தூங்காதிருந்த என்னைப் பார்த்து நானும் அந்த சத்தத்தில்தான் எழுந்து விட்ட மாதிரி நினைத்துக் கொண்டு ஒரு மெல்லிதான சிரிப்பை உதிர்த்து விட்டு கண்ணை மூடிக்கொண்டாள். மீண்டும் அவளின் ஜொலிக்கிற முகத்தையும் நெளிகிற கூந்தலின் அழகையும் பார்ப்பது பரவசமாய் இருந்தது என்றாலும் அந்தத் தருணத்துக்கு செவியுடனான என் பழைய சகவாசத்தையெல்லாம் ஒட்டுமொத்தமாக ஞாபகப்படுத்திக் கொள்வது மனசுக்கு ஆறுதலாகவும் இருந்தது.

 

(அரும்பு - 1989)