Home

Monday 11 October 2021

திருவள்ளுவரும் காந்தியடிகளும்

  

     கல்வித்தகுதி, செல்வநிலை. ஆடம்பரம், பழகும் முறை, பேச்சுமுறை என ஒருவரை இன்னொருவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் கூறுகள் எண்ணற்றவை. ஆனால் ஒருவரை ஒட்டுமொத்தமாக மதிப்பிடவேண்டும் என்ற நிலை வரும்போது, அவற்றில் எதையுமே அவரை மதிப்பிடும் அளவுகோலாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர் இம்மண்ணில் ஆற்றிய செயல்கள் மட்டுமே மதிப்பிட உதவும் அளவுகோலாகக் கருதப்படும்.  ஒருவருடைய பெருமையையும் சிறுமையையும் அத்தகு செயல்கள் வழியாகவே இந்த உலகம் வரையறுக்கும். ஒவ்வொரு செயலும் ஏதோ ஒருவகையில் உரைகல். இதை மனத்தில் கொண்டே  எண்ணித் துணிக கருமம் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். ’பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்என்பது வள்ளுவர் வகுத்திருக்கும் பொதுநெறி. அந்த நெறியே மனித வாழ்க்கையை மதிப்பிட உதவும் அடிப்படை அளவுகோல்.

     காந்தியடிகள் தமிழகத்தில் மேற்கொண்ட பயணங்களைப்பற்றிய எல்லாத் தகவல்களையும் பாடுபட்டுத் தேடித் தொகுத்த வரலாற்று ஆய்வாளரான .இராமசாமி தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் வாழ்வில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து,  அத்தருணங்களில் அவரிடமிருந்து வெளிப்படும் பண்புநலன்களில் வள்ளுவர் வகுத்தளித்த நெறி எப்படி இரண்டறக் கலந்திருக்கிறது என்பதை ஆய்வுசெய்து வெளிப்படுத்துகிறார்.

     வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்என்று உரைக்கும் திருவள்ளுவர் வாய்மையையே வாழ்வின் அடிப்படை அறமாக முன்வைக்கிறார். சத்தியத்தையே தன் வழியாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவர் காந்தியடிகள். வள்ளுவர் வகுத்த வாழ்க்கைநெறிகள் காந்தியடிகளின் வாழ்வில் மிக இயல்பான வகையில் வெளிப்படுவதை இருபத்தாறு வெவ்வேறு நிகழ்ச்சிகள் வழியாக எடுத்துக்காட்டி நிறுவுகிறார் ஆய்வாளர் .இராமசாமி. ஆய்வுநூல் என்றாலும் ஒரே மூச்சில் படிக்கத்தக்க அளவில் சுவாரசியமான மொழியில் எழுதியிருக்கிறார். நாற்பதாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட இக்கட்டுரைகளைத் தேடிப் பதிப்பித்து, வாசகர்களின் கவனத்துக்கு மீண்டும்  கொண்டுவந்திருக்கும் சந்தியா பதிப்பகத்தின் முயற்சி பாராட்டுக்குரியது.

     தென்னாப்பிரிக்காவுக்கு ஒப்பந்தத்தொழிலாளியாகச் சென்ற பாலசுந்தரத்துக்கு நீதி கிடைக்க காந்தியடிகள் போராடி வென்ற நிகழ்ச்சியையே புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருக்கிறார் இராமசாமி. ஒரு தொழிலாளி தான் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தக்காலம்  முழுவதும் தன்னுடைய முதலாளியிடம் உழைக்கவேண்டும். ஒப்பந்தக்காலம் முடிவடைந்ததும் குறிப்பிட்ட தொழிலாளிக்கு அவனுடைய முதலாளி சில சலுகைகளை வழங்கவேண்டும். ஒருவேளை ஒப்பந்தக்காலம் முடிவதற்குள் அத்தொழிலாளி வெளியேறிவிட்டால் அவனுக்கு எவ்விதமான சலுகையையும் அளிக்கத் தேவையில்லை. மேலும் அவன் மீது முதலாளி கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டனையையும் வாங்கித் தரமுடியும். இப்படிப்பட்ட விதிகள் நடைமுறையில் இருந்த சூழலில், பாலசுந்தரத்துக்கு எந்தச் சலுகையையும் வழங்காமல் தண்டனை   வாங்கித் தர திட்டமிட்ட முதலாளி, பாலசுந்தரம் தானாகவே வேலையைவிட்டு வெளியேறிவிடும் வண்ணம் கடுமையாகத் தாக்கி ரத்தக்காயங்களை உண்டாக்குகிறார்.

     அங்கிருந்து தப்பித்து ஓடிவந்து காந்தியடிகளைச் சந்தித்த பாலசுந்தரம் நடந்த நிகழ்ச்சிகளை காந்தியடிகளிடம் விவரிக்கிறார். உடனடியாக காந்தியடிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய மருத்துவம் செய்த பிறகு, அதே மருத்துவரிடம் அதற்குரிய சான்றிதழை வாங்கிக்கொண்டு காவல்துறையிடம் புகார் அளிக்கிறார். முதலாளி, நீதிமன்றத்துக்கு  விசாரணைக்காக வரவழைக்கப்படுகிறார். ஒப்பந்தத் தொழிலாளிகள் சட்டத்தில் தொழிலாளி விரும்பினால் வேறொரு முதலாளியின் கீழே வேலை செய்து தன் ஒப்பந்தக்காலத்தை முடிக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கும் விதியைப் பயன்படுத்தி வழக்கில் வெற்றி பெறுகிறார் காந்தியடிகள். இன்னொரு வெள்ளைக்கார முதலாளியை அவரே தேடிக் கண்டறிந்து அவரிடம் பாலசுந்தரத்தை ஒப்படைக்கிறார். தண்டனையிலிருந்து தப்பித்த பாலசுந்தரம் நிம்மதியாக வெளியேறுகிறார்.

     முன்னும் பின்னும் அறிமுகமில்லாத பாலசுந்தரத்துக்கு நீதி கிடைப்பதற்காக போராடி வெற்றி பெற்ற நிகழ்ச்சியின் வழியாக தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நெருக்கத்தையும் நம்பிக்கையையும் காந்தியடிகள் பெற்றார். மெல்ல மெல்ல அவருக்கு பொதுமக்கள் ஆதரவு பெருகுகிறது. இந்நிகழ்ச்சியை சுருக்கமாக விவரிக்கும் இராமசாமி, கட்டுரையின் முடிவில்கருமம்செய் ஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல்என்னும் குறள்நெறிக்கு இசைவாக மிக இயல்பாக அமைந்திருக்கும் காந்தியடிகளின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவி செய்கிறார்.

     ஜோகன்ஸ்பர்கில் வழக்கறிஞராக பணியாற்றி வரும்போதே, அவருடைய மனத்தில் ஓர் ஆசிரமம் அமைக்கும் கனவு இருந்தது. அதுவரை உலகம் அறிந்ததெல்லாம் பக்தி, ஞான, யோக ஆசிரமங்கள் மட்டுமே. காந்தியடிகள் கர்மயோகத்தை வழிமுறையாகக் கொண்ட ஆசிரமத்தை உத்தேசித்திருந்தார். அனைவரும் உழைத்து, அனைவரும் இணைந்து, அனைவரும் பகுத்துண்டு வாழும் ஆசிரமம். அதற்காக டர்பனிலிருந்து பதினைந்து மைல் தொலைவிலிருந்த இடத்தில் நூறு ஏக்கர் நிலத்தை ஆயிரம் பவுன் கொடுத்து வாங்கி போனிக்ஸ் பண்ணையை நிறுவினார். அவருடைய கொள்கைகளில் நம்பிக்கையுடைய பல நண்பர்கள் அங்கே குடியேறினர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் மூன்று ஏக்கர் நிலம் பிரித்தளிக்கப்பட்டது. விவசாயத்திலிருந்து வீட்டுப் பராமரிப்பு வரை எல்லா வேலைகளையும் அவரவர்களே மேற்கொண்டனர். இந்தியன் ஒப்பினியன் அச்சகத்தையும் அந்தப் பண்ணைக்கே மாற்றினார் காந்தியடிகள்.

     ஒருமுறை ஜோகன்ஸ்பர்கிலிருந்து டர்பனுக்குச் செல்ல அவர் ரயிலில் பயணம் செய்யத் தொடங்கியபோது, ரயில்நிலையம் வரைக்கும் அவரோடு வந்திருந்த ஒரு நண்பர் தன் கையிலிருந்த ஒரு புத்தகத்தை காந்தியடிகளிடம்  கொடுத்துவிட்டுச் சென்றார். அப்புத்தகத்தின் பெயர் UNTO THE LAST. ரஸ்கின் என்னும் எழுத்தாளர் எழுதியது. பயணநேரத்தில் அப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினார் காந்தியடிகள். தன் மனத்தில் இருந்த சில கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்களை அப்புத்தகத்தில் அவர் கண்டடைந்தார். அப்புத்தகம் வலியுறுத்திய மூன்று முக்கியமான உண்மைகள் அவர் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தன.         

     1.உன் நன்மை உலகின் நன்மையில் அடங்கியிருக்கிறது.   2.தம் தொழிலிலிருந்து தம் வாழ்க்கைக்குத் தேவையான ஊதியத்தைப் பெற ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. தொழிலில் மேல் கீழ் என்னும் பேதமில்லை. 3.உடலால் உழைத்து வாழ்பவரின் வாழ்க்கையே வாழத்தக்க உயர்ந்த வாழ்க்கை.

     வாழ்நாள் முழுதும் இந்த உண்மைகளை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார் காந்தியடிகள். இம்மூன்று உண்மைகளுமே வள்ளுவர் வெவ்வேறு அதிகாரங்களில் சுட்டிக்காட்டும் உண்மைகளே. ஒப்புரவு என்னும் அதிகாரத்தில் உள்ளஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்என்னும் குறளும் பெருமை என்னும் அதிகாரத்தில்பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்என்னும் குறளும் உழவு என்னும் அதிகாரத்தில் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்என்னும் குறளும் இடம்பெற்றிருக்கின்றன.

     ரஸ்கின் புத்தகத்தின் முக்கியத்துவம் கருதி, காந்தியடிகளே அப்புத்தகத்தை குஜராத்தி மொழ்யில் சர்வோதயம் என்னும் பெயரில் மொழிபெயர்த்தார். அந்நெறிகள் மீது ஆழ்ந்த பிடிப்புள்ளவராகவும் வாழ்ந்தார் காந்தியடிகள்.

     அந்தக் காலத்தில் டிரான்ஸ்வாலுக்குள் நுழைவதற்கு இந்தியர்கள் அனுமதிச்சீட்டு பெறவேண்டும் என்னும் விதி நடைமுறையில் இருந்தது. அனுமதிச்சீட்டை வழங்கும் பொறுப்பிலிருந்த அதிகாரிகள் பேராசை மிக்கவர்களாக இருந்தனர். ஒவ்வொரு அனுமதிச்சீட்டுக்கும் லஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்டனர். அனுமதிச்சீட்டு வழங்குவது பணமீட்டும் வழியாக மாறிவிட்டது. மக்கள் அக்கொடுமைச்செயலைப்பற்றிய செய்திகளை காந்தியடிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். உடனே, தனிப்பட்ட விசாரணைகள் வழியாக தகவல்களைத் திரட்டிக்கொண்ட காந்தியடிகள் தலைமை அதிகாரியைச் சந்தித்து புகார் கொடுத்தார். லஞ்சம் பெற்ற இரு அதிகாரிகளையும் நீதி மன்றம் அழைத்து விசாரணை செய்தது. குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளும் வெள்ளைக்கார்ரகள், விசாரிக்கும் நீதிபதியும் வெள்ளைக்காரர் என்பதால் விடுதலை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் வழக்கு விசாரணை பற்றிய செய்திகளை  தொடர்ச்சியாக கவனித்து வந்த டிரான்ஸ்வால் அரசாங்கம் அதிரடியாக அந்த அதிகாரிகளை வேலைநீக்கம் செய்து தண்டித்தது. நீதிமன்றத்தில் கிட்டாத நீதியை காந்தியடிகள் அரசிடமிருந்து பெற்றார்.

     வேலையிலிருந்து நீக்கப்பட்ட அதிகாரிகள் ஜோகன்ஸ்பர்க் நகரசபைக்கு வேலை தேடி விண்ணப்பித்தனர். வேலை கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையும் அவர்களுக்கு இருந்தது. ஒருவேளை காந்தியடிகள் அங்கேயும் பழைய செய்தியைப் பரப்பி தம் பெயர்களுக்கு களங்கம் நேரும்படி செய்துவிடுவாரோ என நினைத்து அஞ்சினர். அதனால், இரு தரப்பினருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் வழியாக காந்தியடிகளுக்கு தம் கோரிக்கையை செய்தியாக அனுப்பிவைத்தனர். காந்தியடிகளும் அதை ஏற்றுக்கொண்டார். அந்த அதிகாரிகளுக்கும் வேலை கிடைத்தது. அவர்களுக்கும்இந்த மனிதர் நல்லவர், தக்க சமயத்தில் குற்றத்தை மன்னித்து உதவக்கூடியவர்  என்ற எண்ணம் ஏற்பட்டது.  தண்டனைக்கும் மன்னிப்புக்கும் இடையிலான எல்லைக்கோடு மிகவும் கடினமானது. மனிதன் வேறு, அவன் செயல் வேறு என்று பிரித்துப் பார்க்க அவரால் எப்போதும் முடிந்தது. தண்டனை அளவுக்கு மீறிச் சென்றுவிடக்கூடாது என்பதை வலியுறுத்தும்தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்துஎன்னும் திருக்குறளின் நெறியை இராமசாமி இப்பகுதியில் பொருத்தமாக இணைத்துக்காட்டுகிறார்.

     காந்தியடிகளின் வாழ்வில்  மன்னிக்கும் தருணங்கள் ஏராளமாக உள்ளன. தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள் அனைவரும் கைரேகை வைத்து பதிவு செய்துகொள்ளவேண்டும் என்றொரு கறுப்புச்சட்டம் தொடக்கத்தில் இருந்தது. காந்தியடிகள் இச்சட்டத்தை எதிர்த்தார். ஆனால் காந்தியடிகளை தவறாகப் புரிந்துகொண்ட மீர் ஆலம் என்பவர்இந்தியர்களைக் காட்டிக் கொடுத்தவர்என்று காந்தியடிகளைத் தாக்கிவிட்டு சிறைத்தண்டனை பெற்றார். அவர் விடுதலை பெற்ற காலத்தில் ஒரு மசூதிக்கு வெளியே மைதானமொன்றில் இந்தியர்களின் கூட்டமொன்றை கூட்டியிருந்தார் காந்தியடிகள். கறுப்புச்சட்டத்தைத் திரும்பப் பெறமுடியாது என ஸ்மட்ஸ் திட்டவட்டமாகக் கூறிவிட்டதால் அனைவரும் தம் பதிவுச்சான்றுகளை மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த அண்டாவில் போட்டு தீயிட்டுக் கொளுத்தினர். அக்காட்சியை நேருக்கு நேர் பார்த்த மீர் ஆலம் காந்தியடிகளை நெருங்கி அவருடைய கைகளைப் பற்றிக்கொண்டு மன்னிக்குமாறு கண்ணீர் பெருக கேட்டுக்கொண்டார்.  பிறகு அவர் முன்னிலையிலேயே தன் பதிவுச்சான்றிதழ்களை தீயிலிட்டுக் கொளுத்தினார். காந்தியடிகள் அவரை அணைத்துக்கொண்டு புன்னகைத்தார். இந்நிகழ்ச்சியை விவரிக்கும் இராமசாமிமிகுதியான் மிக்கவை செய்தாரை தாம்தம் தகுதியான் வென்றுவிடல்என்னும் குறள் வகுத்திருக்கும் நெறியை பொருத்தமான விதத்தில்  சுட்டிக்காட்டுகிறார்.

     இப்படி காந்தியடிகளின் தென்னாப்பிரிக்க வாழ்விலிருந்து இருபத்தியாறு நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் வெளிப்படும் காந்தியடிகளின் உயர்ந்த பண்புகளில் குறள்நெறி சுடர்விடுவதை அடையாளப்படுத்துகிறார் இராமசாமி. குறள்நெறி வகுத்திருக்கும் அடிப்படை அறமும் காந்தியடிகள் தம் இறுதிமூச்சு வரைக்கும் பேணிய அறமும் ஒன்றே தம் மதிப்பீட்டின் வழியாக உணர்த்துகிறார்.

 

(காந்தியின் கட்டளைக்கல். .இராமசாமி, 77, 53வது தெரு, 9வது அவென்யு, சந்தியா பதிப்பகம், சென்னை – 83. விலை. ரூ.95.)

 

(அம்ருதா – அக்டோபர் 2021 )