Home

Monday, 25 October 2021

வெறுப்பின் தொடக்கமும் முடிவும்

 

ஜெயமோகன் எழுதிய அமுதம் என்ற சிறுகதையை கடந்த ஆண்டில் படித்தேன். தமிழ்ச்சிறுகதைகளில் அக்கதைக்கு சிறப்பானதொரு இடமுண்டு. ஒரு மலையோரக் கிராமம். பால்மணத்தையே அறியாது அது வறுமையில் மூழ்கியிருக்கிறது. அங்கிருக்கும் அனைத்துப் பசுக்களும் மடி வற்றியவை.  ஒருநாள் அக்கிராமத்துக்கு காட்டிலிருந்து ஒரு பசு வந்து சேர்கிறது. அது வழங்கும் பாலால் கிராமத்துக் குழந்தைகள் ஊட்டமடைகிறார்கள். பெண்களும் பெரியவர்களும் ஊட்டமடைகிறார்கள். பெண்களின் கண்களில் நிறைவும் நம்பிக்கையும் பரவுகின்றன. அந்தப் பசுவின் பாலால் அவர்களுடைய ஆற்றலும் பெருகுகிறது. ஆண்களின் ஆற்றலைவிட பெண்களின் ஆற்றல் மேலோங்கிச் செழிக்கிறது.

அந்தக் கிராமத்துக்கே அமுதம் வழங்கிய பசு தன்னைச் சேரவரும் காளைகளை மிதித்துக் கொன்று உண்பதைப் பார்த்ததாக ஒருநாள் ஊருக்குள் ஒருவன் வந்து சொல்கிறான். அந்தப் பசுவைக் கொல்ல அனைவரும் அந்த வீட்டுத் தொழுவத்தின் முன்னால் கூடுகிறார்கள். அந்த வீட்டுப் பெண்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பசுவைக் கொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டு காட்டுக்குள் பசுவை அழைத்துச் சென்று விடும் ஏற்பாட்டுக்கு ஒப்புதல் கொடுக்கிறார்கள். ஊரில் வசிக்கும் ஆண்மக்கள் அனைவரும் அந்தப் பசுவை காட்டுக்கு ஓட்டிக்கொண்டு செல்கிறார்கள். காட்டின் மையப்பகுதியை நெருங்க நெருங்க, அந்தப் பசுவை அவர்கள் வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்கள். பிறகு அடிக்கிறார்கள். இறுதியில் நடந்துபோகும் அந்தப் பசுவைச் சுற்றி அடர்த்தியாக வளர்ந்திருக்கும் நாணல் புதருக்கு தீவைத்துவிடுகிறார்கள். எரியும் தீயில் அந்தப் பசு சாபக்குரல் எழுப்பாது மெளனமாக நின்று உயிரை விடுகிறது.

பால்மணத்தையே அறியாத ஊருக்கு திகட்டத்திகட்ட அமுதத்தை வழங்கியது அந்தப் பசு. அவர்களுடைய பிள்ளைகள் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியத்துடன் வளர்வதற்கு காரணமாக இருந்தது அந்தப் பசு. இருப்பினும் அந்தப் பசுவை அவர்கள் ஏன் வெறுத்தார்கள் என்றும், கொல்லவேண்டும் என்னும் அளவுக்கு அவர்களுக்குள் மூர்க்கத்தை எது எழுப்பியது என்றும் நெடுநேரம் யோசனையில் மூழ்கியிருந்தேன்.

ஊரில் உள்ள ஒவ்வொரு ஆண்மகனும் தன் மனைவி ஊட்டம் கொண்டு செழிப்போடு நடமாடுவதை விரும்புகிறான். ஆனால் அதே சமயத்தில் அவளிடம் ஊறிப் பெருகும் ஆற்றலைக் கண்டு அஞ்சுகிறான். பெண்மைக்குள் ஊறும் ஆண்மையைக் கண்டு அவன் அச்சம் கொள்கிறார். அந்த அச்சமே அவனுடைய மூர்க்கத்துக்கு அடிப்படைக் காரணம். அந்தப் பெண்ணுக்கு தினமும் கிட்டும் பாலைக் கிட்டாமல் செய்துவிட்டால் அவர்களுடைய ஆற்றல் அழியத் தொடங்கி, மெல்ல மெல்ல தனக்கு அடிபணிந்தவளாக மாறுவாள் என ஆணின் மனம் கணக்குப் போடுகிறது. ஆகவே அந்தப் பசுவைக் கொல்ல அற்பத்தனமானதொரு காரணம் கிடைத்ததும் ஆண்கள் அனைவரும் சேர்ந்து பசுவை காட்டுக்கு அழைத்துச் சென்று நெருப்புக்கு இரையாக்கிவிடுகிறார்கள்.

இப்படியெல்லாம் ஒரு வெறுப்பு உருவாகுமா என்பதும் அந்த வெறுப்பினால் தூண்டப்படும் மனிதர்கள் இப்படியெல்லாம் வினையாற்றுவார்களா என்பதும் முக்கியமான கேள்விகள். அவற்றை நம்புவதற்கு நமக்கு தயக்கமும் இருக்கலாம். ஆனால், எதார்த்தத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள்தானே மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன.

பெண்களுக்குள் உருவாகும் ஆண்மையைக் கண்டு அச்சம் கொள்ளும் மனிதர்களைப்போலவே ஆண்களுக்குள் நிறைந்திருக்கும் பெண்மையைக் கண்டு அருவருப்படைபவர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். காந்தியடிகளை விமர்சிக்கிற பலரும் அவருடைய செயல்பாடுகளில் படிந்திருக்கும் பெண்மை சார்ந்த அணுகுமுறை சார்ந்த ஒவ்வாமையோடு விமர்சிப்பதை நானே பல இடங்களில் கேட்டிருக்கிறேன். ஆண் என்பவன் வெளிப்படையாகவே எதிரிக்கு அறைகூவல் விடுப்பவனாக இருக்கவேண்டும், மோதி மிதிப்பவனாக இருக்கவேண்டும் என்பது அவர்களுடைய எண்ணமாக இருக்கிறது.  அதுபோலவே எதிர்ப்பை மெளனமாக தெரிவிப்பது, உண்ணாவிரதம் இருப்பது, எதிரியிடம் நட்பு பாராட்ட நினைப்பது ஆகிய அனைத்தும் பெண்களுக்குரிய செயல்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். காந்தி வாழ்நாள் முழுவதும் பெண்களுக்குரிய அணுகுமுறையையே கையாண்டவர். அந்தப் பெண்மை வெளிப்பாடுகளால் காந்தியடிகள் பலராலும் வெறுக்கப்பட்டார்.

பெண்மையில் நிறைந்திருக்கும் ஆண்மையும் ஆண்மையில் நிறைந்திருக்கும் பெண்மையும்  செயல்படும் விதங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அளவுக்கு விரிவாக எழுதவேண்டியிருந்தது. இதைப் புரிந்துகொண்டால்தான் பாகன் நாவலின் மையத்துக்கும் இந்தப் புள்ளிக்கும் உள்ள நெருக்கமான தொடர்பைப் புரிந்துகொள்ள முடியும்.

ஒரு மகன் தன் தந்தையை வெறுப்பது சாத்தியம்தானா என்பது முக்கியமானதொரு கேள்வி. பாகன் நாவலில் இடம்பெறும் கஜேந்திரன் என்னும் மகன் செல்வம் என்னும் தன் தந்தையை வெறுக்கிறான். செல்வம் நல்ல மனிதர். பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருப்பவர். சமூகத்தில் அவருக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. வசதியாக வசிக்க ஒரு வீட்டை கட்டியெழுப்பி வைத்திருக்கிறார். வேளை தவறாமல் நல்ல சாப்பாடு கிடைக்கிறது. நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்திருக்கிறார். சுதந்திரம் கொடுத்து வளர்ப்பவராகவும் இருக்கிறார். ஆயினும்,  அந்த மகன் தன் தந்தையை வெறுக்கிறான். விலகிச் செல்ல ஒரு வாய்ப்பு அமைந்ததும் வீட்டைவிட்டே வெளியேறிவிடுகிறான். அவருடைய மரணம் வரைக்கும் அவரை அவன் திரும்பிப் பார்ப்பதே இல்லை. அவன் வெறுப்புக்கு ஒரே ஒரு காரணம்தான். தன் அப்பா, ஓர் ஆண்மகன்போல நடந்துகொள்ளவில்லை என்று அவன் நினைக்கிறான். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையில் நடக்கும் சண்டைகளில் அவர் ஓர் ஆண்மகனைப்போல நடந்துகொள்ளாமல் ஒரு பெண்ணைப்போல அமைதி காத்து ஒவ்வொரு முறையும் தோல்வியைத் தழுவுகிறார். கோபத்தை வெளியே காட்டாமல் நியாயம் பேசி தன் தரப்பை நிறுவுவதற்கு  முற்படுகிறார். அம்மாவிடம் அறைபடுகிறார். அம்மா தன் கழுத்திலிருக்கும் தாலிக்கயிற்றை அறுத்து அவர் முகத்தில் வீசியெறியும்போது கூட அவரால் அமைதியாக தலைகுனிந்து நிற்கத்தான் முடிகிறது. அவமானம் பெருகும் கணத்தில் கூட பொங்கியெழாமல் ஒரு பெண்ணைப்போல தலைகுனிந்து நிற்கிறார். அந்தப் பெண்மையைத்தான் அவன் வெறுத்து வீட்டைவிட்டு வெளியேறும் முடிவை எடுக்கிறான்.

ஒரு மனைவி தன் கணவனை வெறுப்பது சாத்தியம்தானா என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. இந்த நாவலில் கஜேந்திரன் தாயாரான பிரேமலதா தன் கணவரான செல்வத்தை அடியோடு வெறுத்து ஒதுக்கிவிட்டுச் செல்கிறாள். அவளுக்கு அவர் எல்லா வசதிகளையும் செய்து தருகிறார். அவளுடைய ஆடம்பர வாழ்க்கைக்கு அவர் ஒருபோதும் தடை சொல்வதில்லை. அவள் செலவுகளைப்பற்றி அவர் விமர்சனம் செய்வதில்லை. தன் சொந்த சகோதரியின் மகளுடைய திருமணத்துக்குப் போகக்கூடாது என புறப்படும் தருணத்தில் அவள் தடுக்கும்போது, அவள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு பயணத்தை ரத்து செய்துவிடுகிறார்.  வீட்டில் அவள் நினைக்கும் அளவுக்கு வசதிகளைச் செய்து தருகிறார்.

தாயில்லாமல் வளர்ந்த தன் பாலபருவத்தில் சமையலறையில் சகோதரியுடன் பொழுதைக் கழித்து, விளையாட்டாக கற்றுக்கொண்டுவிட்ட சமையல்கலையில் தேர்ச்சி பெறுவதை, செல்வம் தனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகவே கருதுகிறார். சமையல் ஒரு கலை. தன் சமையலை உண்டு நிறைவில் முகம் மலரும் கூட்டத்தினரை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க நேரும் ஒவ்வொரு முறையும்  அவர் அகமலர்ந்து போகிறார். ஆனால் செல்வத்தைச் சுற்றியிருக்கும் உலகம் அவரை சமையல்காரனாக மட்டுமே சுருக்கிப் பார்க்க முற்படுகிறது.

ஆசிரியராக இருந்தபோதும், பொழுதுபோக்குக்காக அக்கம்பக்க ஊர்களில் சிறுசிறு விசேஷங்களுக்கு சமையல்வேலைக்கான ஒப்பந்தங்களை செல்வம் ஏற்றுக்கொள்கிறார். ஆசிரியர் என்ற அடையாளத்தைவிட சமையல்காரன் என்னும் அடையாளம் அவர்மீது படிந்துவிடுகிறது. செல்வம் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் அதைப் பொருட்படுத்தி வேதனைப்படும் பிரேமலதா சீற்றமுற்று செல்வத்தை கொஞ்சம் கொஞ்சமாக காயப்படுத்தத் தொடங்குகிறாள். பல ஆண்டுகள் தொடர்ச்சியாக நிகழும் வாக்குவாதங்கள் முற்றி ஒருநாள் அவர்கள் பிரிந்துபோகிறார்கள்.

சமையல் கலை என்பதை சமூக மதிப்பில்லாத ஒரு கலையென்றும் அது பெண்கள் ஈடுபடும் ஒரு வேலையென்றும் அவளுடைய பொதுப்புத்தியில் உறைந்துபோயிருக்கிறது. அந்தக் கருத்தைச் சார்ந்து அவரிடம் உறைந்திருக்கும் பெண்மையை அவள் வெறுக்கிறாள். ஆணுக்குரிய வேலையை மட்டும் செய்யாமல் பெண்ணுக்குரிய வேலைகளில் ஈடுபட்டு ஏன் இழிவைத் தேடிக்கொள்ளவேண்டும் என்று மனம் குமுறுகிறாள். அந்தக் குமுறலின் வெளிப்பாடே, கணவனின் முகத்தில் தாலியைக் கழற்றி வீசிவிட்டு வீட்டைவிட்டுச் செல்ல அவள் எடுக்கும் முடிவு.

சமையலைவிட, சமைக்கப்பட்ட உணவை பிறர் உண்டு அடையும் முகமலர்ச்சியை கண்ணாரக் காண்பதுதான் செல்வத்துக்கு விருப்பமான செயல். அது அவரைப் பொறுத்தமட்டில் கிட்டத்தட்ட தெய்வ தரிசனத்துக்குச் சமம். துரதிருஷ்டவசமாக, மற்றவர் மனநிறைவில் தெய்வத்தைக் காணும் மனநிலை அவருக்கு வாய்த்ததைப்போல மற்றவர்களுக்கு வாய்க்கவில்லை. குறைந்தபட்சமாக, அதைப் புரிந்துகொள்ளக் கூட மற்றவர்கள் முன்வரவில்லை. அந்த ஈத்துவக்கும் இன்பத்தை ஒரு குறையாகவும் அவமானமாகவும் மட்டுமே மற்றவர்களுக்குப் பார்க்கத் தெரிந்திருக்கிறது.

மகனும் மனைவியும் வெளியேறிய வீட்டில் தனிமையில் அடைபட்டுத் தவிக்கிறார் செல்வம். அவர்களிடம் தன்னைப்பற்றிய ஒரு நல்ல புரிதலை உருவாக்கமுடியாமல் அவர் தவிக்கிறார். அந்தத் தவிப்பிலிருந்து மரணம் வரை அவருக்கு மீட்சியே கிடைக்கவில்லை. ஆத்திரத்தில் அறுத்துவிட்ட மூக்கை ஆயிரம் முறை அன்பொழுகப் பேசினாலும் ஒட்டவைக்க முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ள நாட்டுப்புறக்கதைகள் ஏராளம். எந்தக் கதையிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள விரும்பாதவர்கள் அன்றுமுதல் இன்றுவரை அன்பை முறித்தபடியும், பற்றிய கையை உதறியபடியும், ஒன்றுபட்டு இனிதாகக் கழித்த கடந்தகால நினைவுகளையெல்லாம்  கணநேரத்தில் சீயென்று வெறுத்தொதுக்கி மறந்தபடியும் ஏராளமானவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியபடியே இருக்கிறார்கள். வீட்டைவிட்டு வெளியேறுவது எளிது. ஆனால் அதே வீட்டுக்கு திரும்பி வருவது எளிதல்ல. கிருஷ்ணமூர்த்தியின் புதிய நாவல் முயற்சியை நான் அப்படித்தான் புரிந்துகொள்கிறேன்.

கிருஷ்ணமூர்த்தி தன் நாவலுக்கு பாகன் என்று தலைப்பிட்டிருக்கிறார். மனைவியின் கட்டளைக்குப் பணிந்து பொதுவிசேஷங்களுக்கு சமைக்கச் செல்வதைத் தவிர்க்கும் செல்வம் சிறிது காலம் வீட்டிலேயே சமைத்து உணவுப்பொட்டலங்களை எடுத்துச் சென்று பாதையோரம் படுத்திருக்கும் ஆதரவில்லாதவர்களுக்கும் கோவில் யானைக்கும் பாகனுக்கும் கொடுத்து, அவர்கள் முகத்தில் படியும் மலர்ச்சியைப் பார்த்து மகிழ்கிறார். தேவையில்லாத பொருட்செல்வென்று அதையும் மனைவி தடுத்து நிறுத்த முயற்சி செய்யும்போதுதான் வாய்வார்த்தைகள் முற்றி மோதலாக வெடித்துவிடுகிறது.  இறந்துபோன செல்வத்தின் உடலைத் தூக்கி வாகனத்தில் ஏற்றும்போது யானையைப்போல கனப்பதாகச் சொல்கிறான் கஜேந்திரன். ஒடுங்கி உலர்ந்து மெலிந்திருக்கும் அவருடைய எடையை யானையைப்போல கனப்பதாகச் சொல்வதை ஆச்சரியத்துடன் கேட்டுக்கொள்கிறான் பக்கத்துவிட்டு அன்பு. யானை எடை என்பது அவருடைய எடையல்ல. மாறாக, வடிகால் இன்றி அவன் மனத்தில் அடைபட்டிருக்கும்  தந்தை குறித்த நினைவுகளே இறக்கிவைக்கமுடியாத பெரும்பாரம். அவர் யானை என்றால், அவன்தானே பாகனாக இருக்கமுடியும். அல்லது கஜேந்திரனான அவன் யானை என்றால், செல்வம் பாகனாக வேண்டும்.

யானைக்கும் பாகனுக்கும் உள்ள உறவு என்பது விசித்திரமானது. பாகனின் விருப்பத்துக்கும் கட்டளைக்கும் யானை அடிபணிந்து கட்டுப்படுகிறது. யானையின் விருப்பத்தை தருணமறிந்து பாகன் நிறைவேற்றிவைக்கிறான். இரு தரப்பிலும் மீறல் அல்லது உதறல் நிகழும் தருணம் எது என்பது இருவருக்குமே தெரியாது. அது தெய்வம் மட்டுமே அறிந்த தருணம். அப்படிப்பட்ட துரதிருஷ்டவசமான ஒரு தருணம்தான் செல்வத்தையும் கஜேந்திரனையும் பிரித்து, செல்வத்தையும் பிரேமலதாவையும் பிரித்து வைத்து சோழிகளை உருட்டி விளையாடுகிறது. சிக்கலான அந்த மர்மவிளையாட்டின் காட்சிகளை கச்சிதமாக தன் நாவலில் சித்தரித்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அவருக்கு என் வாழ்த்துகள்.

 

(கிருஷ்ணமூர்த்தியின் புதிய படைப்பான ‘பாகன்’ நாவலுக்கு எழுதிய முன்னுரை)