Home

Thursday, 21 May 2020

கூடு - சிறுகதை



மெழுகுவர்த்தி நிறத்தில் பனிப்புகை அடர்ந்திருந்தது. ஜன்னல் திரைச்சீலைக்கு அப்பால் எதுவுமே தெரியவில்லை. தோட்டத்தில் நந்தியாவட்டையின் பச்சைக்கிளைகள் கோணல் மாணலாக இழுக்கப்பட்ட கோடுபோல மங்கலாகத் தெரிந்தன. இறகுப்பந்தாட்ட வலைக்கம்பம் அசைவே இல்லாத ஒரு கொடிபோல காணப்பட்டது. குரோட்டன் செடித் தொட்டிகள் உறைந்து நின்றன. பெரியப்பா பெரியப்பாஎன இரவெல்லாம் அரற்றிவிட்டு அதிகாலையில்தான் உறங்கத் தொடங்கிய மஞ்சுக்குட்டியின் தலையை தொடையிலிருந்து மெதுவாக இறக்கி தலையணையின்மீது வைத்தான் ராகவன். கடுமையான தலைவலியின் காரணமாக நெற்றியில் இறுக்கமாகக் கட்டப்பட்ட துணியுடன் இரண்டு தலையணைகளை அடுக்கி உயரமாக்கி அதன்மீது தலைவைத்து சுருண்டு படுத்திருக்கும் ரேவதியின் இடுப்புக்குக் கீழே அகப்பட்டுக் கொண்ட லுங்கியின் முனையை சத்தம் காட்டாமல் மெதுவாக உருவியெடுத்துக் கொண்டு கட்டிலிலிருந்து இறங்கினான். ஒருகணம் கைகளை உயர்த்தி உதறினான். 


மூட்டுகள் இறுக்கம் தளர்ந்துகொண்ட போது ஏதோ படிகளில் விழுந்து உருண்டு உடையும் சத்தம் எழுந்தது. இரவு விளக்கு மேடைக்கு அருகே மூடிவைக்கப்பட்டிருந்த கண்ணாடித் தம்ளரில் மிச்சமிருந்த தண்ணீர் குளிர்பானத்தைப்போல சில்லென்றிருந்தது. அருந்துவதற்காக கண்ணாடித் தம்ளரை எடுத்து ஓரிரு கணங்கள் கையில் வைத்திருந்துவிட்டு பிறகு எடுத்த இடத்திலேயே வைத்து மூடினான். ஜன்னல் அருகே வந்து கொஞ்சமாக கதவைத் திறந்தான். மழைச்சாரல்போல் பனி முகத்தில் படிந்தது. வீட்டையொட்டி இருந்த சாலையில் செல்லும் வாகனத்தின் விளக்கு வெளிச்சம் வேகமாக பனியை ஊடுருவிப் படர்ந்து தன்னை உணர்த்திவிட்டு மறைந்தது. மிதிவண்டிகளின் மணியோசையும் இடைவிடாது குரைக்கும் ஒரு நாயின் சத்தமும் பனியைத் துளைத்து மிதந்து வந்தன.

பனி பழகப்பழக அதை ஊடுருவிக் காணத்தக்க பாதையை கண்களால் எளிதில் வகுத்துக்கொள்ள முடிந்தது. வீட்டின் சுற்றுச்சுவர்களும் முருங்கை மரங்களும் கம்பிக் கதவும் தெரிந்தன. வீட்டுக்கும் சுற்றுச்சுவருக்கும் இடைப்பட்ட இடம்தான் இறகுப் பந்தாட்டத்துக்கான இடம். அதற்குப் பக்கத்தில் வட்டமாக நாலைந்து பேர் உட்கார்ந்து பேசுவதற்கு வசதியாக புதைக்கப்பட்ட கற்பீடங்கள். அடிமரம் போன்ற அமைப்பில் அவை மழமழப்பாக்கப்பட்டவை. அவற்றின் கருமையை பனியில் பார்த்தபோது கவிழ்த்து வைக்கப்பட்ட இரும்புப் பீப்பாய்கள்போல காணப்பட்டன. எல்லாமே சாமிநாதனின் உருவாக்கம். அவற்றைப் பார்த்ததும் வியர்வை வழியும் கழுத்தை துண்டால் துடைத்தபடி அந்தக் கல் இருக்கையில் உட்கார்ந்து கோப்பையிலிருந்து தேநீரை அவர் உறிஞ்சிக் குடிக்கிற காட்சிதான் சட்டென மனத்தில் எழுந்தது. சாமிநாதனின் நினைவுகளிலிருந்து மீள்வது மிகவும் சிரமமென்று நினைத்தான் ராகவன்.

சாமிநாதனின் உயிர் பிரிந்து ஆறு நாட்கள் ஓடிவிட்டன. மறைந்த அன்று, மாலைநடைக்காக வெளியே சென்றுவிட்டு திரும்பினார். கூடத்தில் வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருக்கும் மஞ்சுக்குட்டிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து ஆகா, குட்டி கையெழுத்து இன்னைக்கு ரொம்ப நல்லா இருக்குதே. படம் வரையக் கத்துக்கோடி குட்டி. ஒனக்கு நல்லா வரும்னு தோணுதுஎன்று சொன்னார். பேச்சுக்கு இடையே ரேவதி கொண்டுவந்து தந்த தேநீரை உற்சாகத்துடன் வாங்கி இரண்டு மிடறு உறிஞ்சிக் குடித்தார். மூன்றாவது மிடறு அருந்தும்பொழுது எதிர்பாராமல் புரைக்கேறிவிட்டது. கூடவே இருமலும் சேர்ந்துகொண்டது. இடைவிடாத இருமல். இருமுவதை நிறுத்தி மூச்சை வாங்கிவிட எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிய, சிறிதும் எதிர்பாராத வகையில் சுருண்டு விழுந்தார். ரேவதியும் மஞ்சுவும் எழுப்பிய சத்தத்தில் அக்கம் பக்கத்தவர்கள் உதவிக்கு ஓடிவந்தார்கள். எழுப்பி உட்கார வைக்கவும் தண்ணீர் தெளித்து மயக்கத்திலிருந்து விடுவிக்கவும் முயற்சி செய்துகொண்டிருக்கும்போதே கைப்பேசியின் மூலம் அருகிலிருந்த மருத்துவமனைக்குப் பேசி அவசர மருத்துவ வாகனத்தை வரவழைக்க ஏற்பாடு செய்தார் ஒருவர். தகவல் தெரிந்து ராகவனும் மருத்துவமனைக்கு ஓடி வந்தான். ஆனால் அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டிருந்தது. கடுமையான மாரடைப்பு என்றார்கள். இறந்த நிலையில் அழைத்து வரப்பட்ட நோயாளி என்ற குறிப்பெழுதியிருந்தார் மருத்துவர்.

ஆறு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் வாடகைக்கு விடப்படும் என்று வாசல் கம்பிக்கதவில் தொங்கிய பலகையைப் பார்த்துவிட்டு வந்தவர்தான் சாமிநாதன். அது ராகவனும் ரேவதியும் இறகுப்பந்து ஆடிக்கொண்டிருந்த நேரம். ரேவதி அடித்த பந்து தவறான திசையில் தாவிச் சென்று வாசலில் விழுந்தது. கதவைத் திறந்து உள்ளே வந்த சாமிநாதன் தயக்கமே இல்லாமல் குனிந்து இறகுப்பந்தை எடுத்து ரேவதியின் பக்கமாக வீசிவிட்டு ரெண்டு பேருக்கும் வணக்கம். நான் சாமிநாதன்...என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பளீரென்ற வெள்ளைவேட்டியும் வெள்ளரிக்காய் நிறத்தில் ஒரு சட்டையும் அணிந்திருந்தார் அவர். முன்வழுக்கையையும் காதோர நரையையும் பார்த்தால் வயது அறுபது இருக்கலாம் என மதிக்கத்தக்க தோற்றம்.

பார்த்த முதல் கணமே அவரைப் பிடித்துவிட்டது. சில மாதங்கள் தங்கி ஒரு புத்தகம் எழுதும் ஆசையால் ஊர்விட்டு வந்திருப்பதாகத் தெரிவித்தார். நான்கு நாட்களாக நகரில் உள்ள விநாயகா விடுதியில் தங்கி வீடு தேடுவதாகச் சொன்னார். ஆளும் பேச்சும் பிடித்துவிட்டதால் மேற்கொண்டு விவரங்கள் இருவருக்குமே தேவையில்லாமல் போய்விட்டது. மறுநாள் காலையில் அந்த வீட்டு மாடிக்குக் குடிவந்தார் சாமிநாதன்.

ஒரே வாரத்துக்குள் எல்லாருடைய மனத்திலும் அவர் இடம்பிடித்துவிட்டார். மஞ்சுக்குட்டி மிகுந்த உரிமையுடன் பெரியப்பா என்று அழைத்தாள். சிறிதுநேர உரையாடலிலேயே இரண்டுபேருமே வருஷக்கணக்கில் பழகியவர்களைப்போல மாறிவிட்டார்கள். எந்தப் பாடம் குட்டிக்கு ரொம்ப பிடிக்கும்?” என்று கேட்டார் சாமிநாதன். சோஷியல்என்றாள் மஞ்சு. எந்தப் பாடம் ரொம்ப கசக்கும்?” என்று அதே உற்சாகத்துடன் கேட்டார். கணக்குசொல்லும்போதே சிரிப்பு வந்துவிட்டது மஞ்சுக்குட்டிக்கு. கசக்கறதுக்கு அது என்னடி வேப்பங்காயா? பாவக்காயா? அப்படியெல்லாம் நினைக்கக்கூடாதுடி. கணக்குன்னா மாம்பழம்டி. மல்கோவா மாம்பழம். அவ்வளவு இனிப்பு உண்டு கணக்குல. அதப்போயி யாராவது கசப்புன்னு சொல்வங்களா? இங்க வாடி, நான் சொல்லித்தரேன்என்று ஒவ்வொரு கணக்கையும் காகம் கதை, மான் கதை சொல்கிறமாதிரி சொல்லித் தந்ததில் மஞ்சுக்குட்டியின் மதிப்பெண்கள் திடீரென உயரத்தொடங்கின. ஒவ்வொரு கணக்கையும் ஒரு கதையோடு தொடங்கி ஒரு கதையோடு முடித்தார் அவர். அதுவரைக்கும் இந்தி எழுத்துகளை தாறுமாறாக உச்சரித்தவள் நாலே நாளில் நாக்கில் மந்திரம் எழுதப்பட்டவளைப்போல கச்சிதமாக உச்சரிக்க ஆரம்பித்தாள்.
அந்த வார இறுதியில் ரேவதியின் துணையோடு, இறகுப் பந்தாட்ட களத்துக்கும் சுற்றுச்சுவருக்கும் இடையில் இருந்த இடத்தைக் கொத்தி சரிப்படுத்தினார். பேச்சோடு பேச்சாக இங்க நாலு முருங்கய கொண்டாந்து வச்சா நல்லா இருக்கும்என்று சொன்னார்.

முருங்கயா? வேற ஏதாச்சிம் குரோட்டன்ஸ், குல்மொஹர், மார்னிங் ஸ்டார் அப்படி வைக்கலாமா? பெரியபெரிய ஊடுங்கள்ள அப்படித்தானே இருக்குது? ஓட்டல், பேங்க் வாசல்லகூட அப்படித்தானே இருக்கும்ரேவதி மெதுவாக தன் ஆலோசனைகளைச் சொன்னாள்.

முருங்கையில் இருக்கற அழகே தனிம்மா. எப்ப பாத்தாலும் பச்சைபசேல்னு அழகான இலைகள். பூக்கிற சமயத்தில் கிளைமுழுக்க வெள்ளித்தோடுகள் தொங்கறமாதிரி இருக்கும். அந்தப் பூ எவ்வளவு மணமா இருக்கும் தெரியுமா? காய் புடிச்சி தொங்க ஆரம்பிச்சிட்டா, பாக்க பாக்க கண்ணுக்கே குளிர்ச்சியா இருக்கும். இதுக்காக ரொம்ப நாள் காத்திருக்கணும் இல்ல. ஒரு ரெண்டு வருஷத்துல மடமடன்னு வளர்ந்து நின்னுடும்.

முருங்க அழகோ இல்லயோ, நீங்க சொல்றது அழகா இருக்குது.

அழகுமட்டுமில்ல, முருங்கையில நாம தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் நெறய இருக்குது. பூ, கீரை, காய் எல்லாமே நமக்கு உணவாகக்கூடியது. அது ஒரு பக்கம். இன்னொரு பக்கத்துல அழிவே இல்லாத மரம்மாஅது. அதுதான் முக்கியம். வேகமா காற்றடிச்சா கிளைங்களெல்லாம் உடைஞ்சி போவலாம். மரமே வேரோட சாஞ்சாலும் சாயலாம். ஆனா அதுக்கு அழிவு கெடையாது. ஒரே ஒரு துண்டு மரம் இருந்தா போதும். மரம் மறுபடியும் துளுத்துடும். எங்க எடுத்தும் போய் வச்சாலும் சரி, வச்ச எடம் முழுக்க மரமாய்டும். மொதல் முளைவிடற வரைக்கும் கொஞ்சம் தண்ணி, கொஞ்சம் பாதுகாப்பு வேணும். அப்புறம் மழைமட்டுமேகூட போதும்.

முருங்கைக்கு இவ்வளவு பெரிய வரலாறா?”

உண்மையிலேயே அது ஒரு பெரிய அதிசயம். அழிக்கவே முடியாதபடி ஒரு உயிர் காலம்காலமா அதுக்குள்ள மறஞ்சிருப்பது அதிசயமல்லவா? ஒரு திரியின் சுடர் மாடத்துக்குள்ள எரிஞ்சிகிட்டிருக்கறமாதிரி ஒரு உயிரின் கனல் முருங்கைக்குள்ள அடங்கியிருக்குது. கிட்டத்தட்ட உடம்புகள் மாறிமாறி மனித உயிர் வாழறமாதிரி இடம்மாறி இடம்மாறி முருங்கையும் வாழ்ந்துகிட்டே இருக்குது.

மணியடித்துக்கொண்டே மிதிவண்டியில் வாசல்வரை நெருங்கிய சிறுவனாருவன் கம்பிக் கதவுகளுக்கு நடுவே பால் பாக்கெட்டுகளையும் செய்தித்தாட்களையும் சாமர்த்தியமாக செருகிவிட்டுச் செல்வது தெரிந்தது. கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான் ராகவன். குளிர்ச்சியான காற்று நெஞ்சில் மோதியது. அதன் ஈரம் இதமாக இருந்தது. பட்டு ரோஜாக்கள் பூத்துக் குலுங்கும் பாதையில் நடந்துசென்று வாசல்கதவை அடைந்தான். பால் பாக்கெட்டுகளையும் செய்தித்தாளையும் எடுத்துக்கொண்டு சாலையில் ஏதேனும் நடமாட்டம் இருக்கிறதா என்று பார்த்தான். எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அங்கிருந்து பார்த்தபோது வீடு ஒரு ஓவியத்தைப் போல காட்சியளித்தது.

அனிச்சையாக மாடிக்குச் செல்கிற படிகள்மீதும் மூடியிருக்கும் கதவுகள்மீது ராகவன் பார்வை படிந்தது. மரத்திலிருந்து உதிர்ந்த இலைகள் படிகளெங்கும் உலர்ந்து கிடந்தன. சாமிநாதன் காலை நடைக்காக வழக்கமாக இறங்கிவரும் நேரம் அது எனத் தோன்றினாலும் இனம் புரியாத வெறுமையுடன் மனத்தில் ஒருவித பாரம் படர்வதை உணர்ந்தான். குறுகிய காலத்திலேயே ஒரு சகோதரனைவிட மேலாக நெருங்கிப் பழகிவிட்டவரின் இறுதிச் சடங்கு இத்தனை நாட்கள் தள்ளிப்போவது சகித்துக்கொள்ள முடியாததாக இருந்தது. இன்றுதான் காத்திருத்தலின் கடைசிநாள். உரிமைகோரி வருகிறவர்கள் யாராவது இருப்பின் இன்றைக்குள் வரவேண்டும். வரவில்லையென்றால், நாளைக்குக் காலையில் காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லிவிட்டு அவனே முன்னின்று அடக்கம் செய்துவிடலாம். பார்வை மறுபடியும் சாலையின் பக்கமாகத் திரும்பியது. யாராவது திடுதிப்பென்று வந்து நிற்பார்களா? நான்தான் அவர் மகன் அல்லது மகள் என்று சொல்லி சாமிநாதனை எடுத்துச் சென்றுவிடுவார்களா?

எல்லாமே அபத்தமாக இருப்பதாக நினைத்து பெருமூச்சு விட்டான் ராகவன். இந்த மாதிரியான தருணங்களில் நிகழ்கால எதார்த்தங்களில் இருந்து விலகிநிற்கும் வாழ்வின் வலியையும் வேதனையையும் உணரமுடிந்தது. காவல்நிலைய அதிகாரி கேட்ட கேள்விகளில் ஒரு கேள்விக்குக்கூட அவன் சரியான பதிலைச் சொல்லவில்லை. தெரியாது என்கிற பதிலையே எத்தனை முறைகள் திருப்பித்திருப்பிச் சொல்லமுடியும்? சொந்தக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? கடிதப் போக்குவரத்து உண்டா? தொலைபேசி அழைப்பு வருமா? வங்கிக்கணக்கு உண்டா? எந்த முகவரி கொடுத்திருந்தார்? வாடகைப் பத்திரம் ஏன் எழுதவில்லை? அவரது குடும்பச் செய்திகளை ஏன் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எப்படி பதில் சொல்வது? அவன் பணிபுரிந்த பன்னாட்டு நிறுவன அடையாள அட்டையும் உயர் அதிகாரியின் சாமர்த்தியமான உரையாடலும்தான் அவனைக் காப்பாற்றின. ஏராளமான நினைவுகள் பொங்கிப்பொங்கி வந்து மனத்தை நிரப்பின. வாய்விட்டு அழவேண்டும்போல இருந்தது. அதுகூட சாத்தியமாகவில்லை. உதட்டைக் கடித்துக்கடித்து புண்ணாக்கிக் கொண்டிருந்தான். மாடியறைக்குள் அவர்கள் நிகழ்த்திய சோதனையில் அவரைப்பற்றி ஒரு விவரத்தைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. புத்தகங்களிலும் குறிப்பேடுகளிலும் எழுதப்பட்ட அவருடைய பெயரை மட்டுமே அவர்களால் தெரிந்துகொள்ள முடிந்தது. மேசை இழுப்பறையில் கண்டெடுக்கப்பட்ட வங்கிச் சேமிப்பு கணக்குப் புத்தகத்தில் ராகவன் வீட்டு முகவரியைத் தவிர வேறெந்த விவரமும் இல்லை.

எடுத்தும் போயிடுங்கஎன்று சொன்ன கணமே வீட்டுக்கு எடுத்துவந்து அடக்கம் செய்திருக்கமுடியும். தட்டிக் கேட்க யாருமே இல்லை. ஆனால் ராகவனுக்கு அப்படி ஒரு முடிவுக்கு வருவதில் நிறைய தயக்கங்கள் இருந்தன. ஒரு வாரம்வரை மருத்துவமனையிலேயே கிடங்கில் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லி, அனுமதி வாங்கி வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாட்கள் என எல்லா ஊடகங்களிலும் செய்தியை அறிவிக்கச் செய்தான். அவருடைய குடும்பத்தினரிடம் அவரை ஒப்படைப்பது தன்னுடைய முக்கியமான கடமை என்று அக்கணத்தில் அவன் நினைத்தான்.

சமையலறைக்குள் வந்து பாலைக் காய்ச்சி தேநீர் தயாரித்தான். தேநீர் கொதிக்கும்போதே பல் தேய்த்து முகம் கழுவினான். அங்கேயே நாற்காலியில் உட்கார்ந்து தேநீரை உறிஞ்சிக் குடித்தான். கோப்பையைக் கழுவி கவிழ்த்துவைக்கும் போது பால் வந்திருச்சா ராகவன்?” என்று கேட்டபடி ரேவதி சமையலறைக்குள் வந்தாள். வந்திடுச்சி, இப்ப எதுக்கு நீ அவசரமா எழுந்து வந்தே? இப்படி அவசரம் அவசரமா எழுந்து எழுந்து பழகிட்டதாலதான் உன் தலவலி உன்னவிட்டு போகமாட்டுது. போய் தூங்கு போ...என்றான் ராகவன். ஒரு டீ போட்டுத் தரியா ராகவன். சூடா டீ குடிச்சா தலவலியெல்லாம் தானா சரியா போய்டும்என்று சிரித்தபடியே அவன் பக்கத்தில் வந்தாள். மீண்டும் அடுப்பைப் பற்றவைத்து அவளுக்காக தேநீர் தயாரிக்கத் தொடங்கினான் ராகவன்.

வார இறுதியில் குடும்பத்தோடு வெளியே செல்லும் பழக்கம் சாமிநாதன் தொடங்கிவைத்த ஒன்று. ஞாயிறு காலையில் இறகுப்பந்து. பிறகு சிற்றுண்டி. அதை முடித்த கையோடு கிளம்பிவிடவேண்டும். மாமல்லபுரம் சாலையில்தான் பெரும்பாலான சமயங்களில் அந்தப் பயணம் அமையும். பள்ளிக்கூடப் பிள்ளைகளின் விளையாட்டு இரைச்சலைப் போல தொலைவில் ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்ப்பதற்கு வசதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே காரை நிறுத்துவார். அடுத்து சவுக்குத் தோப்புக்குள் உட்கார்வதற்காக இடம் தேர்ந்தெடுக்கப்படும். சிறிதுநேரம் அரட்டை. சிறிது நேரம் விளையாட்டு. பிறகு கடற்கரைக் குளியல். மஞ்சுக்குட்டியும் அவரும் கரையோரமாகவே நடந்து கிளிஞ்சல் பொறுக்குவார்கள். மணலில் உட்கார்ந்து கோபுரம் கட்டியெழுப்புவார்கள். அப்போது கடற்கரை ஒரு ஆனந்தத்திடலாக மாறிவிடும். காதோரம் கேட்டுக்கொண்டே இருக்கும் அலையோசை. விளையாட்டின் உச்சமாக மனத்தில் தானாக தளும்பியெழும் இசையின் விசித்திர ஓசை. இரண்டையும் மாறிமாறித் துய்ப்பது வாழ்வின் தீராத ஆசையைத் தணித்துக்கொள்வதுபோலத் தோன்றும். மனமெங்கும் தேங்கி நிரம்பும் இன்பம் மாபெரும் அனுபவமாக நினைவுகளின் ஆழத்தில் பதிந்துவிடும். அந்த அனுபவத்தை மீண்டும்மீண்டும் துய்க்கும் விழைவு ஆழ்மனத்தில் தூண்டியபடியே இருக்கும். கடல், ஆறுகள், ஏரிகள், தோப்புகள், உப்பங்கழிகள், படகுப்பயணங்கள் என ஒவ்வொன்றாக சுற்றியலைந்துவிட்டு வாருவார்கள். அடுத்த திட்டத்தை உடனடியாகத் தீட்டிவிட்டு மறுபடியும் வார இறுதிக்காகக் காத்திருப்பார்கள்.

எத்தனை நல்ல மனிதர் சாமிநாதன். கைதேர்ந்த ஒரு மாலுமியைப்போல வாழ்க்கைப்படகின் போக்கையே மாற்றி விட்டு எதுவும் தெரியாதவராகப் போய்ச் சேர்ந்துவிட்டார். நேரம் காலம் தெரியாத அழைப்பு, பணம், முதலீடு, பங்குச் சந்தை, லாபம், கேளிக்கை என சொல்லிவைத்த திசையில் போய்க்கொண்டிருந்த வாழ்வை வேறொரு முனையைநோக்கி அழைத்துச்சென்று, அதன் வழியாக ரேவதியின் முகத்தில் நிறைவும் சிரிப்பும் குடிகொள்ள வைத்தவர். நினைக்கநினைக்க துக்கம் பொங்கியது. பெருமூச்சோடு கூடத்துக்கு வந்து மேலோட்டமாக செய்தித்தாளைப் புரட்டினான் ராகவன்.

தொலைபேசியின் அழைப்பு அவன் சிந்தனையைக் கலைத்தது. வேகமாகச் சென்று எடுத்தான். காதோரம் வைப்பதற்குள் மறுமுனையில் குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. ஐயா வணக்கமுங்க. ராகவன் ஐயா இருக்காருங்களா?”

சொல்லுங்க. நான்தான் பேசறேன்.....

ஐயா, வணக்கம்ங்க. என் பேரு செல்வமணிங்க. சாமிநாதன்ங்கறவர பத்தி விவரம் குடுத்திருக்கிங்களே சார், அதப்பத்தி இன்னும் கொஞ்சம் விவரம் தெரிஞ்சிக்கலாம்ன்னுதான் போன் பண்ணேன் சார்...

என்ன தெரிஞ்சிக்கணும், கேளுங்க செல்வமணி...

பேருக்கு இனிஷியல் இல்லாததால, இங்க எல்லாருக்கும் ஒரு சின்ன கொழப்பங்க. என்ன இனிஷியல்னு தெரியுங்களா?”

தெரியாதுங்க செல்வமணி.

சிறிதுநேர மௌனத்துக்குப் பிறகு மறுமுனையில் குரல் மீண்டும் தொடர்ந்தது. எங்க அப்பா பேரும் சாமிநாதன்தாங்க. கா.சாமிநாதன். தாத்தா பேரு காளிமுத்துங்க. மூணு வருஷத்துக்கு முன்னால அறுவடை சமயத்துல ஒரு சின்ன மனஸ்தாபம் உண்டாச்சி. அதனால ஊட்டஉட்டு போயிட்டாருங்க. எல்லாம் ரெண்டு பொண்டாட்டி பிரச்சனதான். ரெண்டாம் தாரத்துப் புள்ளைங்களுக்கும் எங்களுக்கும் ஒன்னும் சரியா ஒத்துப் போவலைங்க. வாய்ச்சண்டையா இருந்தது அன்னைக்கு கைச்சண்டையா முத்திடுச்சி. அப்பாருக்கு அத பாக்க தாங்கமுடியலை. சொல்லாம கொள்ளாம ராவோட ராவா கௌம்பிப் போயிட்டாரு. இன்னிய தேதி வரைக்கும் ஒன்னும் தகவல் இல்லை. ஒங்க விளம்பரத்த பாத்ததும் ஒரு பதட்டமா இருந்திச்சி. போட்டாவுல அவரு ரொம்ப வயசானவரா தெரியறாரு. ஜாட ஒன்னும் சரியா புரிபடமாட்டுது. நீங்க வேற ஆறு மாசமாத்தான் அங்க இருக்கறதா சொல்றீங்க. எங்க ஊரு சேலம். சேலத்தபத்தி என்னைக்காவது பேசியிருக்காருங்களா?....”

நேரா வந்து ஒரு முறை பாருங்க செல்வமணி. கண்ணால பாத்தா உங்களுக்கே தெரியுமே.

சொத்துபத்தி ஏதாச்சிம் சொன்னதுண்டுங்களா?”

அதப்பத்தியெல்லாம் ஒன்னும் பேசனதில்ல.

குடும்பத்தபத்தி.

ம்ஹும்.

நாங்க அண்ணன்தம்பி மூணு பேருங்க. செல்வமணி. தங்கமணி. பிச்சைமணி. ரெண்டு தங்கச்சிங்க ஜெயலட்சுமி. மகாலட்சுமின்னு. பேச்சுவாக்கில எங்க பேருங்கள எப்பவாச்சிம் குறிப்பிட்டு சொன்னதா ஞாபகம் இருக்குதுங்களா? சும்மா ஒரு இதுக்குத்தான் கேக்கறேன். ஐயா தப்பா நெனைச்சிக்காதிங்க.

அப்படியெல்லாம் சொன்னதா ஞாபகமில்லிங்க செல்வமணி. சேலத்துலேருந்து பாண்டிச்சேரி ரொம்ப பக்கம்தானே? அஞ்சுமணிநேரத்துல வந்துடலாமே. ஒரு தரம் வந்து நேருக்கு நேர் பாத்தா உங்களுக்கே புரிஞ்சிடுமே...

அதுவும் நல்ல யோசனதான். வரமாதிரி இருந்தா உங்களுக்கு மறுபடியும் போன் போட்டு சொல்றங்க ஐயா. வச்சிரட்டுங்களா?”

தொலைபேசி துண்டிக்கப்பட்டது. ராகவனுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

விளம்பரம் வெளியான நாளிலிருந்தே தொலைபேசி அழைப்புகள் தொடங்கிவிட்டன. அகாலத்தில் வரும் அழைப்புகளைக்கூட தவிர்க்காமல் எடுத்து பொறுப்பாக பதில் சொன்னான். மறுமுனையின் விசாரிப்புகள் பெரிதும் அவனைச் சங்கடத்தில் ஆழ்த்துபவையாகவே இருந்தன. பெரும்பாலான கேள்விகள் உளவறியும் நோக்கத்திலேயே இருந்தன.

ரொக்கமா ஏதாச்சிம் வச்சிட்டு போயிருக்காரா?”

உயில் ஏதாச்சிம் இருக்குதான்னு தயவுசெஞ்சி பாத்து சொல்லமுடியுமா?”

எங்க அண்ணன் ஒருத்தர ஆறுமாசமா காணோம். படத்துல இருப்பவற பாத்தா அசப்புல அவரப்போலதான் தோணுது. அண்ணனுக்கு கொஞ்சம் மூளக்கோளாறு உண்டுங்க. கால் நடமாட்டத்த பத்தியெல்லாம் நீங்க சொல்லல. எப்படி இருந்திச்சிங்க? அண்ணாரு கொஞ்சம் இழுத்துஇழுத்து நடப்பாரு. அதான் சந்தேகமா இருக்குது. வரலாமா வேணாமான்னு யோசிக்கறம்.

இத்தன காலம் தனியாவா இருந்தாரு? தொணைக்கு யாரும் இல்லிங்களா? எங்க சித்தப்பாவும் சாமிநாதன் சார். படத்த பாத்தா அசப்புல அவரமாதிரியே தான் இருக்குது. வயசுக் காலத்துல ஊருல ஒரு சின்னப் பொண்ணுமேல ஆசப்பட்டு பழகனாரு. கொழுப்பெடுத்த கழுததான் அதுவும். ஈஈன்னு இளிச்சிகிட்டு அவரு பின்னாலயே சுத்திச்சி. ஊருல ஒரே மானக்கேடா போயிடுச்சி. பெரிய புள்ளைக்கு கல்யாணத்த பண்ணி பேரப்புள்ள பாத்தவருங்க அவரு. அவரு போய் இப்படிப்பட்ட காரியத்த செய்யலாங்களா? புள்ளைங்கள்ளாம் சேந்து அடக்கனாங்க. அது புடிக்காம அந்த பொண்ண அழச்சிகிட்டு ஊர உட்டே போயிட்டாருங்க. அவரா இருக்குமோன்னு ஒரு சந்தேகம், அதான் கேட்டேன்.

முதல் நாள் தொடர்ச்சியாக பதில் சொல்வது பதற்றமாக இருந்தது. பதில் சொல்லமுடியாத கேள்விகள் முன்வைக்கப்பட்டபோது தடுமாற்றமாக இருந்தது. பேசி முடித்ததும் தலையில் அடித்துக் கொண்டான். என்ன ரேவதி, இப்படியெல்லாம் பேசறாங்க?” என்று சொல்லிச்சொல்லி வேதனைகளை ஆற்றிக்கொண்டான். அதான் உலகம். எல்லாரயும் நம்மப்போலவே எதிர்பார்க்க முடியுமா?” என்று ஆறுதலாக தோளைத் தட்டிக்கொடுத்தாள் ரேவதி.

இன்னையோட நம்ம கெடு முடியுது இல்லயா ராகவன்?” கூடத்துக்கு வந்த ரேவதி செய்தித்தாளை எடுத்துக்கொண்டு நாற்காலியில் சாய்ந்தாள். ராகவன் அமைதியாகி தலையசைத்தான்.

இன்னும் யாராவது வருவாங்களான்னு தோணலை. நாம இப்பவே அடக்கத்துக்கான எல்லா ஏற்பாடுகளுக்கும் தயாரா இருந்தாத்தானே நல்லது. காலையிலேயே நாம வேலய ஆரம்பிச்சிடலாம்.

ஏற்கனவே நம்ம சுந்தரத்துகிட்ட சொல்லி வச்சிருக்கேன் ரேவதி. ஒன்மேன் கான்ட்ராக்ட் மாதிரி. நெல்லித் தோப்புலதான் அவரு வீடு. எந்த நேரமா இருந்தாலும் ஒரு போன் போடுங்க சார். வந்துருவேன்னு சொல்லியிருக்காரு.

சிறிதுநேரம் மௌனம். ராகவனை நெருங்கிவந்து தோளைத் தொட்டடி நின்று, “அவரு படத்த கொஞ்சம் பெரிய சைஸ்க்கு மாத்தி லேமினேஷன் போட்டு மாட்டலாமா ராகவன்?” என்று கேட்டாள்.

செய்யலாம் ரேவதி.

மாடிப்பகுதிய இனிமே நாம யாருக்கும் வாடகைக்கு விடவேணாம்பா. இந்த வாடக வந்தா நாம சாப்படப் போறோம்? அப்படியே வச்சிக்கலாம். சாமிநாதன் சார் நினைவா. என்ன சொல்ற ராகவன்?”

சரிம்மா?” ரேவதியின் இடுப்போடு சாய்ந்தான் ராகவன்.

ராகவன் ரொம்ப நல்ல பையன்மா. அவன நல்லபடியா பாத்துக்கோ நல்லபடியா பாத்துக்கோன்னு எத்தன தரம் சொல்லியிருப்பாரு தெரியுமா? நம்ம அப்பா அம்மாகூட அப்படி ஒரு பாசத்தோட சொன்னதில்ல ராகவன். அவரு அவ்வளவு அழுத்தமா திரும்பத்திரும்ப சொன்னாரு. உண்மையிலேயே அவரு ரொம்ப பெரிய மனுஷன்...ரேவதியின் குரல் தழுதழுத்தது. ராகவன் அவளை இன்னும் நெருக்கமாக இழுத்துக்கொண்டான்.

இனிமே என் கையால யாருக்குமே டீ போட்டுத்தான்னு சொல்லாத ராகவன். ப்ளீஸ். துரதிர்ஷ்டம் புடிச்ச கை இது. குடிக்கும்போதே உயிரு போயிடும்ன்னு தெரிஞ்சிருந்தா அவருக்கு டீயே குடுத்திருக்கமாட்டேன். உனக்குக்கூட. இனிமே நீயே போட்டுக்கோ...திடுமென அவள் கண்கள் தளும்ப உதடுகளைக் கடித்துக்கொண்டு ராகவன்மீது சாய்ந்தாள்.

அது ஒரு தற்செயல் ரேவதி. அப்படியெல்லாம் நினைக்காதஅவள் தலையைச் சிறிது நேரம் தடவிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.

பகல்முழுக்க வெளியில் எங்கும் செல்லவில்லை. ஆறேழு தொலைபேசி அழைப்புகள். பெரும்பாலானவை நிறுவனத்திலிருந்து வந்த அழைப்புகள். ஒரே ஒரு அழைப்பு பெங்களூரிலிருந்து வந்தது. தயங்கித்தயங்கி அவர் ஐயரா சார்?” என்று கேட்டது. அதிர்ச்சியடைந்த ராகவன் தெரியாதுங்க...என்றான். இணைப்பு உடனே துண்டிக்கப்பட்டது. மனம் முற்றிலும் செயலிழந்த நிலையில் சோர்ந்திருந்தது.

மாலையில் சிறிதுநேரம் மஞ்சுக்குட்டியோடு விளையாடினான். பள்ளிக்கூடம் செல்லாததால் நிறைய வீட்டுப்பாடங்கள் பாக்கி விழுந்துவிட்டன. அவற்றை முடிப்பதில் உதவி செய்தான். மருத்துவமனைக்குச் சென்று அவர்கள் கேட்டிருந்த கூடுதல் பணத்தைச் செலுத்திவிட்டு வந்தான்.

இருட்டத் தொடங்கிய நேரத்தில் மாடியறைக்குச் சென்று விளக்கைப் போட்டுவிட்டு சிறிது நேரம் உலவினான். அப்போது தான் கழுவித் துடைத்ததுபோல சமையலறை சுத்தமாக இருந்தது. காய்களும் கனிகளும் நிறைந்த கூடைகள் சுவரோரமாக காணப்பட்டன. பச்சைக்காய்களும் பழங்களும் பாலும் தான் அவருடைய உணவு. பால் காய்ச்சவும் வெந்நீர் வைக்கவும் மட்டுமே அவர் எரிவாயுவைப் பயன்படுத்தினார். கூடத்தில்
சாய்வுநாற்காலியில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டைப் பார்த்தபோது அவனையறியாமல் அவன் உதடுகளால் புன்னகை படர்ந்தது. அவர் எழுத நினைத்த புத்தகம் அந்தக் குறிப்பேட்டில்தான் உருவாக இருப்பதாக தொடக்கத்தில் சாமிநாதன் சொன்னதுண்டு. உண்மையில் ஒரே ஒரு பக்கம்கூட அவர் எழுதியதில்லை. பல வாரங்களுக்குப் பிறகு எழுத்துவேலை எதுவரைக்கும் வந்திருக்குது?” என்று விளையாட்டாகக் கேட்ட அன்றுதான் அந்தப் பதிலை அவரே சொல்வதைக் கேட்டான். அவசரமாக கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டை எடுத்து பக்கங்களைப் புரட்டிப் பார்த்தான். ஒரே ஒரு எழுத்துகூட இல்லை. அவர் பெயர்கூட எழுதப்படாத குறிப்பேடு. எழுதணும்ங்கற ஆச பொங்கிகிட்டே இருக்குது ராகவன். ஆனா எழுதலாம்னு உக்காந்தா போதும், ஒரு வரியக்கூட புடிக்கமுடியலை. வெடிசத்தம் கேட்டு பறவைங்கள்ளாம் ஓடிப்போறமாதிரி எல்லாமே மறஞ்சி போயிடுது. எங்க தொடங்கறது, எத எழுதறதுன்னு குழப்பமாய்டுது. அதுக்காக மனசு தளர்ந்துட்டதா நெனைக்கக்கூடாது. எழுத வராதான்னு எதிர்பார்த்து ஒவ்வொருநாளும் நோட்ட தொறந்துவச்சிகிட்டு கொஞ்சநேரம் காத்திருந்து பாக்கறதுண்டு...அப்பாவியாக அவர் சிரித்த காட்சி மனத்தில் மிதந்து வந்தது. அப்ப நீங்க எழுத்தாளர் இல்லயா?” என்று கேட்ட கேள்விக்கு யார் இல்லன்னு சொல்லமுடியும்? எழுதணும்ன்னு ஆச உள்ளவங்கள எழுத்தாளரா சேத்துக்கமாட்டாங்களா?” என்று பதில் சொன்னார் அவர். அப்போதும் அதே குழந்தைத்தனம் அவர் முகத்தில் படர்ந்திருந்தது. பழைய நினைவுகள் அலைமோத மேசையில் அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தான். எழுதவில்லையே தவிர, அவர் ஏராளமான அளவில் புத்தகங்கள் படிக்கிறவராகவே இருந்தார். நின்றவாக்கிலேயே ஒரு புத்தகத்தை எடுத்து விரல் தொட்டுத் திருப்பி கிடைத்த பக்கத்தை சிறிதுநேரம் படித்தான். ஆணியில் மாட்டியிருந்த சாமிநாதனின் மேல்சட்டை காற்றில் அசைந்தது. அதன் நிழல் புத்தகத்தில் படிந்து கலைந்தபோது நிமிர்ந்துப் பார்த்தான். அருகில் யாரோ நிற்பதுபோன்ற உணர்வு பொங்கியது. கழுத்தில் படிந்த வியர்வையைத் துடைத்தபடி புத்தகத்தை அடுக்கிலேயே வைத்துவிட்டு விளக்கை அணைத்துக்கொண்டு கீழே இறங்கினான்.

குளித்து உடைமாற்றியபிறகு சோர்வு குறைந்தமாதிரி தோன்றியது. தொலைபேசியில் சுந்தரத்தை அழைத்தான். இரண்டாவது மணி அடித்து ஓயும் முன்பாகவே அவன் பேசினான்.

சொல்லுங்க சார். குட் ஈவ்னிங்.


ஊருலதான இருக்கறீங்க? நாளைக்கு அடக்கம். அது விஷயமாத்தான் ஞாபகப்படுத்தலாம்ன்னு கூப்ட்டேன்.

ஏற்பாட்ட ஆரம்பிச்சிரலாம்ங்களா?”

இல்ல இல்ல, இப்பவே வேணாம்... நாளைக்கு காலையில நானே கூப்ட்டு சொல்றேன். சரியா?”

தொலைபேசியை வைக்கும்போது வாசலருகே ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. வாகனத்தின் முற்பகுதி விளக்குகள் சுடர்விட்டு எரிந்து அடங்கின. இந்த வீடுதான் சார்என்று யாரோ ஒரு இளைஞன் அடையாளம் சொல்லிவிட்டு நடப்பது தெரிந்தது. ராகவன் அவசரமாக வெளியே வந்தான். வேகமாகச் சென்று கதவைத் திறந்தான். நிறுத்தப்பட்ட காருக்குள்ளிருந்து ஏறத்தாழ முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞனொருவன் இறங்கி வந்தான். படிய வாரிய தலை. மடிப்பு குலையாத சட்டை. வகைப்படுத்த முடியாத பொதுப்பார்வை கொண்ட கண்கள்.

மிஸ்டர் ராகவன்?” ஆங்கிலத்தில் விசாரித்தபடி நிமிர்ந்து பார்த்தான். ஐயாம் ரகு.ராகவன் புன்னகையோடு அவனை வணங்கினான்.

தாமதமாக வந்ததற்கு முதலில் மன்னித்துவிடுங்கள் ராகவன். உங்கள் விளம்பரம் இரண்டு மூன்று நாள் கழிந்த நிலையில்தான் எங்கள் கவனத்துக்கு வந்தது. சாமிநாதன் எங்கள் அப்பா. பெங்களூருலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு டாக்சியில் வருகிறேன். நீங்க அறிவித்த அவகாசம் இன்றோடு முடிகிறது அல்லவா? அதுதான் இந்த அவசரம். வீட்டு மனைகளைப் பிரிக்கும் விவகாரத்தில் அப்பாவுக்கு ஒரு சின்ன மனஸ்தாபம். அதுதான் இந்த விபரீதத்துக்குக் காரணம். இது எங்க குடும்ப ஆல்பம். இது வாரிசுச் சான்றிதழ். இது அவருடைய தேர்தல் அட்டை. இது அவருடைய பாஸ்போர்ட். நான் அவருடைய மூத்த பிள்ளை. மருத்துவமனைக்கு நீங்களும் வந்தால் நல்லது. பார்மாலிட்டிஸ்களை சீக்கிரமாக முடித்துவிட்டால் சீக்கிரமாக இன்றைக்கே கிளம்பிவிடலாம்ஆங்கிலத்தில்தான் ரகுவால் இயல்பாக பேசமுடியும்போல தெரிந்தது.

அவர்தான்னு உறுதியாக நினைக்கிறீர்களா ரகு?” தயக்கத்தோடு கேட்டான் ராகவன். கேட்டபிறகுதான் அக்கேள்வி அவனுக்கே அபத்தமாகத் தெரிந்தது.

கொஞ்சம்கூட சந்தேகமே இல்லை மிஸ்டர் ராகவன். ஒரு தந்தையின் அடையாளம் மகனுக்குத் தெரியாமல் போய்விடுமா? நாங்கள் அவரைத் தேடாத இடமே இல்லை. இவ்வளவு தொலைவான இடத்தைத் தேடி எப்படி வந்தார் என்பதைத்தான் ஊகிக்கவே முடியவில்லை.

திடீரென தொண்டை வற்றிவிட்டதைப்போல உணர்ந்தான் ராகவன். நீட்டப்பட்ட சான்றுகளை வாங்கி மேலோட்டமாகப் பார்த்தான். முதல் பார்வையிலேயே புரிந்துவிட்டது. ரகுவின் ஏறுநெற்றி ஒன்றே போதும். அப்படியே சாமிநாதனை உரித்து வைத்திருந்தது. என்ன அவசரம்? நாளைக்கு காலையில் கிளம்பலாமே? இருட்டு நேரத்தில் இந்தப் பயணம் அவசியம்தானா?” தயக்கத்தோடு சொன்னான். அதற்குள் ரேவதி வாசலுக்கு வந்துவிட்டாள்.

சாரி, மிஸ்டர் ராகவன். நாளைக்கு காலையில் பெங்களூரில் இருப்பதாகத் திட்டம். அம்மா அங்கே காத்துக் கொண்டிருப்பார்கள்அவன் முகத்தில் அவசரம் தெரிந்தது.

அவர் தங்கியிருந்த அறையைப் பாக்கறிங்களா மிஸ்டர் ரகு?” மெதுவாகக் கேட்டான் ராகவன்.

அவசியமில்லை ராகவன். நாம் கிளம்புவோம்.

ராகவன் சிறிதுநேரம் பேச்சிழந்து நின்றுவிட்டான். மௌனமாக சில கணங்கள் ரேவதியை ஏறிட்டுப் பார்த்தான்.

மஞ்சுவயும் தூக்கிக்க ரேவதி. பெரியப்பாவ கடைசியா ஒருதரம் பாத்துக்கிடட்டும்.

ஏதோ சொல்ல வாயெடுத்து மௌனமாகி வீட்டுக்குச் சென்ற ரேவதி மஞ்சுக்குட்டியை அழைத்துக்கொண்டு வந்தாள். கதவைப் பூட்டிக்கொண்டு காரை அவளே ஸ்டார்ட் செய்தாள். ரிவர்ஸ் எடுத்து வாசலைநோக்கித் திருப்பி நிமிர்த்தினாள். முன்கதவைத் திறந்து ராகவன் உட்கார்ந்து கொண்டான்.

பெரியப்பாவ பாக்கவாப்பா போறோம்?” மஞ்சுக்குட்டி ராகவன் மடியில் உட்கார்ந்து அவனுடைய முகவாயைத் திருப்பியது. ஆமாம்டி குட்டிகுனிந்து மஞ்சுவின் நெற்றியில் முத்தமிட்டான் ராகவன். யாருப்பா அந்த அங்கிள்?” என்று உடனே மற்றொரு கேள்வியைக் கேட்டது. பெரியப்பாவ பாக்கத்தான் அவுங்களும் வந்திருக்காங்க.குட்டி மஞ்சுவின் கன்னத்தில் மெதுவாகத் தட்டினான் ராகவன். காத்து ரொம்ப குளிரா இருக்கும். கதவ சாத்திடலாமா?” அவள் கவனத்தைத் திருப்பி ஜன்னல் கதவை மேலே ஏற்றினான்.

முருங்கைகளையும் குரோட்டன்களையும் பளீரென மின்னவைத்த சோடியம் விளக்கு வெளிச்சம் பால்போல தரையெங்கும் பரவியது. பனிப்புகையின் அடர்த்தியில் மங்கலாகக் குழம்பித் தெரிந்த சாலையில் இரண்டு வாகனங்களும் மெதுவாக ஊர்ந்தன.

(வார்த்தை 2008)