Home

Thursday, 21 May 2020

ஆனந்த நிலையம் - சிறுகதை




நீங்க ஊடு வாங்கற எடம் ரொம்ப ராசியான எடம் சார். ஜெயநகர்தான் பாண்டிச்சேரிலயே பெஸ்ட் ப்ளேஸ்என்று நான் சொன்னேன். பூவரச மரங்களின் நிழல் விரிந்திருந்ததால் நின்று பேச வசதியாக இருந்தது. பத்திரப்பதிவு செய்ய வந்தவர்களுடைய நான்கு சக்கர வாகனங்களும் இரண்டு சக்கர வாகனங்களும் பல இடங்களில் நின்றிருந்தன. நான் சொல்வதை காதுகொடுத்துக் கேட்பது போலவும் கேட்காததுபோலவுமான ஒரு பார்வையோடு தாமோதரன் நின்றிருந்தார். பக்கத்தில் அவர் மனைவியும் மகனும் நின்றிருந்தார்கள்.
இந்த பக்கம் நடந்து போனா ரிலைன்ஸ். மோரு. அந்தப் பக்கம் போனா போத்தீஸ். உழவர் சந்தை. எதுக்கும் நீங்க சிட்டிக்கு போவற வேலயே கெடையாது. இப்பிடி ஒரு எடம் எங்கயும் அமயாது பாத்துக்குங்க. நல்ல யோகக்காரர்தான் நீங்க

சட்டென்று தாமோதரனின் மனைவி குறுக்கிட்டு குமரன் சில்க் அவுஸ் இருக்குதுன்னு சொன்னாரு இவரு…” என்று சொன்னார். அது எனக்கு பேசுவதற்கான உற்சாகத்தை அளித்தது.
கிழக்கு பக்கத்துல அதுவும் இருக்குங்க மேடம்என்று சிரித்தேன். “மகாலட்சுமி ஆஸ்பத்திரி, ஈஸ்ட் கோஸ்ட் ஆஸ்பத்திரி, ஜவஹர் ஸ்கூல் எல்லாமே பக்கத்துல பக்கத்துலதான் மேடம். எங்க வேணும்ன்னாலும் சொடக்கு போடற நேரத்துல நடந்து போயிடலாம்.”
கோயில்ங்க இல்லயா?”
கோயிலுக்கு பஞ்சமே இல்ல மேடம். இந்தப் பக்கம் புதுநகர்ல முருகன் கோவில். அந்தப் பக்கம் கம்பன் நகர்ல மகாலட்சுமி கோயில், அய்யனார் கோயில். மூலகுளத்துல அம்மன் கோவில். மோட்டுபாளயத்துல ஆஞ்சநேயர் கோயில். எல்லாத்துக்கும் வசதி இருக்குது மேடம். வாக்கிங் பார்க் கூட பக்கத்துலதான். எட்டு போடறதுக்குன்னு தனியா ட்ராக் கூட போட்டிருக்காங்க.”
கிரிக்கெட் க்ரவுண்ட் இருக்குதா?” தாமோதரனின் மகனுடைய கேள்வி என் உற்சாகத்தை இரண்டு மடங்காக்கியது.
ஒரு மேட்சே நடத்தலாம் தம்பி. அவ்ளோ பெரிய க்ரவுண்ட் இருக்குது. போன மாசம் கூட புதுநகர் டீமுக்கும் உழவர் கர டீமுக்கும் ஒரு மேட்ச் நடந்திச்சி.”
தாமோதரன் அலுவலகத்துக்குள் செல்பவர்களையும் வெளியே வருகிறவர்களையும் பதற்றத்தோடு பார்த்தபடி இருந்தார். அடிக்கடி கைக்கடிகாரத்தை திருப்பிப் பார்த்தார். காதுக்குக் கீழே ஆட்காட்டி விரலால் தேய்த்தபடி வாசலை அடிக்கடி பார்த்தார்.
ஏன் உங்க ஞானவேலு இன்னும் வரலை? உள்ள பதிவுக்கு ஏற்பாடு பண்ணியிருக்காரா இல்லையான்னே ஒன்னும் புரியலை. எங்கள பதினோரு மணிக்கு வரச் சொல்லிட்டு அவரு எங்க போயிட்டாரு? இன்னும் எவ்ளோ நேரம் இங்கயே நிக்கறது?”
அவருடைய சலிப்பை எப்படியாவது போக்கி நம்பிக்கையூட்ட வேண்டும் என்று தோன்றியது. ஞானவேலு அண்ணனை அழைப்பதற்காக பையில் இருந்த கைபேசியை எடுத்தேன். எண்களைத் தேடியெடுக்கும் முன்பாகவே அவர் பத்து தரம் போட்டு பாத்துட்டன். எடுக்கமாட்டேங்கறாருஎன்று சொன்னார். நான் உடனே சமாளித்து ட்ரைவிங்ல இருப்பாரு சார். இல்லைன்னா சிக்னல்ல எங்கனாச்சிம் நின்னுட்டிருப்பாரு. அப்ப வர நேரம்தான் சார்என்று பதில் சொன்னேன். அவர் எனக்குப் பதில் சொல்லாமல் திரும்பி பக்கத்தில் இருந்த மற்றொரு மரத்தடிக்குச் சென்றார்.
அதற்கு மேல் எனக்கும் அங்கு நின்று பேச வழியில்லாமல் போய்விட்டது. ஒன்றரை கோடி கொடுத்து வீடு வாங்குகிறார். பெரிய கை. ரைஸ் மில் ஓனர். பேச்சு வழியாக மனத்தில் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டால் பதிவு முடிந்து புறப்படும்போது சந்தோஷத்தின் அடையாளமாக நூறோ இருநூறோ கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். அது நடக்காதென்று இப்போது புரிந்துவிட்டது.
நான் வாசலுக்குச் சென்று ஞானவேலு அண்ணனின் கரும்பச்சை டி.வி.எஸ். வருகிறதா என்று பார்த்தேன். அங்கு பீடி குடித்துக்கொண்டிருந்த ஆபீஸ் பாய் என் தோளைத் தொட்டு என்ன கருவண்டு, பாத்தும் பாக்காத மாதிரி நிக்கற?” என்று கேட்டார். அப்போதுதான் நான் முழுதாக அவரைக் கவனித்தேன். அவர் குனிந்து தரையை நோக்கி புகையை   விட்டுவிட்டு என்ன என்பது போல என்னை நிமிர்ந்து பார்த்தார்.
 நீங்களாண்ணா? ஐயோ, கவனிக்கவே இல்லைங்ணா. ஞானவேலு அண்ணன இன்னும் காணோம்ண்ணே. பார்ட்டி வேற அவசரப்படுது. அதான் பாக்கலாம்ன்னு இப்பிடி வந்தன். நீங்க நிக்கறத கவனிக்கல
மொதலாளியும் தொழிலாளியுமா சேந்து ஒரு பெரிய கையா புடிச்சிட்டிங்க போல. இன்னிக்கு ஒரு பெரிய நோட்டு கேரன்டினு சொல்லு. ஒன் காட்டுல மழதான்.”
தேறுமா தேறாதோ தெரில. அந்த ஆளு மூஞ்சி குடுத்தே பேச மாட்றாரு. வெறுப்பாவே பாக்கறாரு.”
யாரு பார்ட்டி?”
தாமோதரன்னு பேரு. கரடிக்குப்பம். சிட்டில சிமெண்ட் கட வச்சிருக்காரு. புள்ளய இங்க மூலகொளத்து காலேஜ்ல சேத்திருக்காங்க போல. அதான் இங்க ஊடு எடுக்கறாங்க.”
சரி கருவண்டு. நான் உள்ள போறன். வேல முடிஞ்சதும் ஒங்க அண்ணன் அப்படியே  நைசா நழுவிடப் போறாரு. பாத்து கண்டுக்க சொல்லு, புரிதா?”
நான் தலையாட்டினேன். அவர் சென்ற பிறகு மெதுவாக தாமோதரனுக்கு அருகில் சென்று டைமிங்லாம் அண்ணன் போயிட்டுதான் போயிருக்காரு சார். சொன்ன நேரத்துல நடந்துடும். அதோ போறாரே, அவர்தான் நமக்காக எல்லாத்தயும் செய்யறவரு. எல்லாம் கணக்கா பாத்து செய்வாரு. டென்ஷன் எதுவும் வேணாம் சார் என்றேன்.
அவர் என்னைப் பார்க்காமல் டென்ஷன் பண்றதே நீங்கதான். ஃபோன் பண்ணா கூட எடுத்து பேச மாட்டறாரு ஒங்க ஞானவேலு. இதுல டென்ஷன் வேணாம்னா எப்பிடி முடியும்?” என்று சொன்னார். பதில் சொல்லாமல் நான் மறுபடியும் வாசல்பக்கம் வந்து நின்றுகொண்டேன்.
புதுநகரில் ஒரு ஓட்டுவீட்டில் வாடகைக்குக் குடியிருக்கிறேன் நான். மனைவியும் ஆறு பிள்ளைகளும். நான்கு பெண். இரண்டு ஆண். ஒரு பெண்ணும் ஒரு பையனும் மட்டும் பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள். மற்றவர்களுக்குப் படிப்பு வரவில்லை. பக்கத்தில் ரெடிமேட் தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள். மூத்தவளுக்கு கல்யாணம் செய்யவேண்டும். கையில் பணமில்லாமல் கல்யாணப் பேச்சை ஆரம்பிக்க தைரியம் இல்லை. மனைவி பத்தாயிரம் ரூபாய் சீட்டு ஒன்றில் சேர்ந்திருக்கிறாள். ஒவ்வொரு மாசமும் எப்படியாவது அவளுக்கு அந்தப் பணத்தைப் புரட்டித் தரவேண்டியது என் கடமை. ஞானவேல் அண்ணன் சம்பளமாக எதுவும் தரமாட்டார். இப்படி விற்பனை, பதிவு என்று வரும்போது மட்டும் ஒரு தொகை கொடுப்பார். அதுதான் என் வண்டிக்கு அச்சாணி. போன மாதம் காவேரி நகரில் ஐம்பது லட்ச ரூபாய்க்கு ஒரு வீட்டை கிரயம் செய்து கொடுத்தார். அண்ணன் எனக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தார். இது ஒன்றரை கோடி ரூபாய் வியாபாரம். இதில் கிடைக்கும் தொகை இந்த மாதத்தைத் தள்ளிவிட போதுமானதாக இருக்குமென நினைத்தேன்.
தொலைவில் சாலைத் திருப்பத்தில் ஞானவேலு அண்ணனின் டி.வி.எஸ். வண்டியைப் பார்த்தேன். நான் திரும்பி தாமோதரனின் பக்கம் திரும்பி கட்டைவிரலை உயர்த்திக் காட்டினேன். அவர் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் மெழுகு பொம்மைபோல நின்றிருந்தார்.
ஞானவேலு அண்ணன் வாசலருகில் வண்டியை நிறுத்தியதும்வணக்கம்ண்ணே, வாங்கஎன்று சொன்னேன். அண்ணன் சிரித்தபடியே வண்டியை விட்டு இறங்கினார். நான் ஓடிச் சென்று லாவகமாக அதை வாங்கிக்கொண்டேன். ”பார்ட்டி உங்கள காணம்னு ரொம்ப டென்ஷனா இருக்குதுண்ணே. எங்க எங்கனு இதுவரைக்கும் நூறு தரம் கேட்டுட்டாருஅதற்குள் அண்ணனும் தாமோதரனைப் பார்த்துவிட்டார்.
ஆனந்த நிலையம் பார்ட்டி வந்துட்டுதா?”
ஒருத்தரும் வரலைண்ணே.”
ஐயோ, மொதல்ல அவுங்கள புடி. அவுங்கதான முக்கியம். ஆறு குடும்பம். வந்து சேர்ரதுக்கே அரநாளு ஆயிடும்என்றபடி அவர்களுடைய எண்கள் அடங்கிய தாளை பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார். நான் அவரிடமிருந்த வண்டியை வாங்கிக்கொண்டதும் அவர் தாமோதரனைப் பார்த்துச் சென்றார்.
இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்துக்குச் சென்று டி.வி.எஸ்.ஸை நிறுத்திவிட்டு ஒரு மரத்தடிக்கு வந்தேன். தாளைப் பார்த்து முதலில் இருந்த நெம்பரை அழைத்தேன். நீண்ட மணியோசைக்குப் பிறகு யாரோ எடுத்தார்கள்.
வணக்கங்க. சத்தியமூர்த்தி சாருங்களா?”
ஆமாம். யாரு நீங்க?”
ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ்லேருந்து பேசறம். எப்ப வந்து சேருவீங்க ஆபீஸ்க்கு? எல்லாரும் காத்திருக்காங்க.”
இப்பதான் ஓட்டல்லேருந்து கெளம்பறம். இன்னும் ஒரு அரமணி நேரத்துல அங்க இருப்பம்.”
ஆறு பேரும்தான?”
ஆறு பேரா? அதப் பத்திலாம் எனக்குத் தெரியாது. நாங்க கெளம்பிட்டம். அவ்ளோதான்.”
இணைப்பை அவரே துண்டித்துவிட்டார். எனக்கு வேறு வழியில்லை. ஒவ்வொரு நெம்பராக அழைத்துத் தொடர்புகொண்டேன். எல்லோருமே வந்துகொண்டிருப்பதாகவே சொன்னார்கள். அவர்களாவது ஒரு ஆயிரம், ரெண்டாயிரம் கொடுத்தால் நல்லது என்ற எண்ணமே மனத்தில் மிதந்துகொண்டிருந்தது.
ஞானவேலு அண்ணனுக்காக என் கண்கள் தேடின. அவர் மரத்தடியில் தாமோதரன் சாருக்கு அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அவரை நெருங்கி ஆனந்த நிலையம் பார்ட்டிகள் தனித்தனியாக வந்துகொண்டிருக்கும் தகவலைச் சொன்னேன். அவர் தலையாட்டியபடி தாமோதரன் சாரிடம் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
உள்ள நம்ம ஆளுங்க இருக்காங்க சார். நமக்காக அங்க இருந்து வேல செய்றவங்க அவுங்க. ஐடி கார்ட் காப்பி, ஆதார் கார்ட் காப்பி எல்லாத்தயுமே ரெண்டு நாளைக்கு முன்னாலயே வந்து குடுத்துட்டு போயிட்டன் சார். எல்லாமே மடமடனு நடக்கும். ஒரு பதினஞ்சாயிரம், ஒரு அஞ்சாயிரம், ஒரு மூவாயிரம் தனித்தனியா எடுத்து வைங்க. நான் யாருகிட்ட குடுங்கனு சொல்றனோ, அப்ப அவுங்ககிட்ட கொடுங்க.”
தனியா டிடி வச்சிருக்கமே.”
அது ஆபீஸ் கணக்குக்கு, இது அவுங்க கணக்கு. புரியுதுங்களா?” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து, “சரி, நான் உள்ள போறேன். ஆனந்தநிலையம் பார்ட்டி வந்ததும் இங்கயே நிழல்ல நிக்க வச்சிட்டு எனக்கு ஒரே ஒரு மிஸ் கால் குடு. போதும். சரியா?” என்று சொல்லிவிட்டு அலுவலகத்துக்குள் சென்றுவிட்டார்.
ஒரு வெள்ளைநிற டாக்சி  வாசலைத் தாண்டி உள்ளே நுழைந்து ஒரு வட்டமடித்து ரிவர்ஸ் எடுத்து நின்றது. நான் தொலைவிலேயே பார்த்துவிட்டேன். ஆனந்த நிலையத்தின் மூத்த மகன். அடையாள அட்டையில் அவரைப் பார்த்த ஞாபகம் இருந்தது. அந்த வண்டியை நோக்கி வேகமாகச் சென்றேன். நான் வண்டியை நெருங்குவதற்குள் ஒரு பெண்மணி இறங்கினாள். நான் அவரைப் பார்த்துவணக்கம்மா வாங்கஎன்றேன். அவள் பதில் சொல்லாமல் என்னைப் பார்த்து ஒரு புன்னகையை மட்டும் சிந்தினாள். சாக்லெட் நிறத்தில் தலைமுடிக்குச் சாயம் பூசியிருந்தாள் அவள்.
டாக்சி டிரைவருக்கு பணம் கொடுத்துவிட்டுத் திரும்பினார் சத்தியமூர்த்தி. “இங்கதான?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார். “ஆமா சார். வாங்க சார், அவுங்க அங்க வெய்ட் பண்றாங்க போவலாம்என்றேன் நான். அப்போதுதான் வண்டியின் பின்கதவைத் திறந்துகொண்டு ஒரு இளைஞன் இறங்கி கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான். ”ஒய் சோ க்ரவுட்?” என்றபடி காதுகளை மூடியிருந்த ஹியரிங்க் செட்டை சரிப்படுத்திக்கொண்டான். அரைக்கால் சட்டை அணிந்திருந்ததால் அவன் கால்கள் பட்டை உரித்த விறகின் நிறத்தில் இருந்தது. அவர்களை அழைத்துச் சென்று தாமோதரனுக்கு அறிமுகப்படுத்தினேன்.
பதினோரு மணிலேருந்து வெய்ட் பண்ணிட்டிருக்கம். மத்தவங்க வரலையா?”
சாரி, பதினொன்னுன்னுதான் ஞானவேலு சொன்னாரு. ஆனா இன்னைக்கு திங்கக்கெழம பத்தர பன்னெண்டு எமகண்டமாச்சே. அதனால பன்னெண்டுக்கு மேல போவலாம்ன்னு நெனச்சம்.”
பிரான்ஸ்ல இருக்கறவங்கதான நீங்க? நீங்க கூட ராகுகாலம் எமகண்டம் பாப்பிங்களா?”
எங்க இருந்தா என்ன சார்? ஏதோ வயித்துப் பொழைப்புக்கு போயிருக்கம். அதனால பழக்கத்த விட்டுட முடியுங்களா?”
தாமோதரன் சிரித்தார். அவர் சிரிப்பை முதன்முதலாகப் பார்த்தேன்.
சில கணங்களில் பெரிய கார் ஒன்று உள்ளே நுழைந்து நின்றது. ஏழு பேர் இறங்கினார்கள். இரண்டு ஜோடிகள். ஆண்கள் முகத்தில் சத்தியமூர்த்தியின் ஜாடை தெரிந்தது. அவருடைய சகோதரர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அவர்களுடைய மனைவிகள் ஆடம்பரமான பட்டுப்புடவை கட்டியிருந்தார்கள். ஒவ்வொருவரும் கழுத்தில் மூன்றுநான்கு விதமான சங்கிலிகள் அணிந்திருந்தார்கள். ஒவ்வொரு சங்கிலியையும் விற்றால், அந்தப் பணத்தில் ஒரு கல்யாணத்தையே நடத்திவிடலாம். அவ்வளவு தடிமனாக இருந்தது. பிள்ளைகளில் ஒருவர் மட்டும் அப்பாவின் முகத்தைக் கொண்டிருந்தார். மற்றவர்களிடம் அம்மாவின் சாயலே தெரிந்தது.
நான் ஓடிச் சென்று அவர்களுக்கு வணக்கம் சொன்னேன். அவர்களுடைய உடைகளிலிருந்து எழுந்த நறுமணத்தின் விளைவாக, அந்தத் திசையில் சென்றவர்கள் ஒவ்வொருவரும் அவர்களைத் திரும்பிப் பார்த்தபடி சென்றார்கள்.
வாங்க சார் வாங்க. குணசீலன் சார் அண்ணன்தான நீங்க? பாத்தாலே தெரியுதே. ஒரே அச்சில செஞ்ச சிலமாதிரி இருக்கிங்க. என் பேரு துளசிங்கம். ஞானவேலு அண்ணன்கிட்ட வேல செய்யறன்.”
அவர் எங்கே?”
உள்ள டாக்குமெண்ட் வேல நடந்திட்டிருக்குது. ஞானவேலு அண்ணன் போயிருக்காரு. வாங்க, அப்பிடி நிழல் பக்கமா போயிடலாம்.”
அப்போதுதான் காரின் கதவுப்பிடியை இறுக்கமாகப் பிடித்தபடி ஜீன்ஸும் டீஷர்ட்டும் அணிந்த ஒரு பெண் ஹைஹீல்ஸ் அணிந்த கால்களை வெளியே வைத்து மெதுவாக இறங்கினாள். கையில் சின்னதாக ஒரு பையை வைத்திருந்தாள். அவளிடமும் அப்பாவின் முகச்சாயல் தெரிந்தது. தலைக்கூந்தலின் நுனிப்பகுதியில் ஊதாநிறச் சாயம் படிந்திருந்தது. நெற்றியோரத்தில் முடிக்கற்றையை வெட்டியிருந்தாள். புருவத்தைத் தொட்டபடி அந்தக் கற்றை தொங்கியது.
அவர்களை அழைத்துச் சென்று தாமோதரன் சாருக்கு அறிமுகப்படுத்தினேன். சத்தியமூர்த்தி குடும்பம் அவர்கள் பக்கம் திரும்பாமலேயே விலகி நிற்பதை அப்போதுதான் நான் கவனித்தேன்.  நான் அவசரமாகத் திரும்பி அந்த இளைஞனிடம்படிக்கிறிங்களா, வேலை செய்றிங்களா?” என்று கேட்டேன். அவன் சிரித்த முகத்துடன் உய் என்று பிரெஞ்சில் பதில் சொல்லத் தொடங்கி, பிறகு நிறுத்தி தமிழுக்கு மாறிபாரீஸ்ல ஐடி கம்பெனியில வேல செய்றேன்என்றான்.
இவுங்க விக்கறாங்க, அவுங்க வாங்கறாங்க. அவுங்க ரெண்டு பேரும்தான் கையெழுத்து போட்டா போதாதா? நாங்க ஏன் கையெழுத்து போடணும்?” என்று அவன் கேட்டான். அடிக்கடி பையிலிருந்து இன்ஹேலரை எடுத்து மூக்குக்கருகில் வைத்து ஆழ்ந்து இழுத்தான். “இங்க இந்த வெயில்ல அடிக்கடி எனக்கு மூக்குல ஒருபக்கம் அடச்சிக்குது
எனக்கு எப்படி அவனுக்கு விளக்கமாகச் சொல்வதென்று தெரியவில்லை. ஒருமாதிரி சொற்களை மனத்துக்குள் திரட்டியெடுத்து இங்க பாரு தம்பி, அவருக்கு நீங்கதான நேர் வாரிசு? இந்த விக்கறது வாங்கறதுல உங்களுக்கு எந்த விதமான ஆட்சேபணையும் இல்லைங்கறதுக்கு அடையாளம்தான் உங்க கையெழுத்துஅவன் அதைக் கேட்டுஎன்று தலையாட்டிக்கொண்டான்.
உங்க அப்பா செய்யக்கூடிய விஷயம், உங்களுக்கும் தெரிஞ்சிருக்குது, உங்களுக்கும் சம்மதம் இருக்குதுங்கறதுக்கு அது ஒரு அத்தாட்சி. அவ்ளோதான்.”
ஓக்கேஎன்று சிரித்தான் அவன்.
வெண்ணெய் நிறத்தில் ஒரு மெர்சிடெஸ் பென்ஸ் கார் வளாகத்துக்குள் மெதுவாக நுழைந்தது. அதைப் பார்த்ததுமேஅதோ, அத்தைங்களும் வந்துட்டாங்கம்மாஎன்று தன் அம்மாவைப் பார்த்துச் சொன்னான் அந்த இளைஞன். வேகத்தைக் குறைத்து மதிலோரமாகச் சென்று அக்கம்பக்கம் பார்த்து வண்டிய நிறுத்துவதற்குள் நான் வண்டிக்கு அருகில் சென்றுவிட்டேன். ”வணக்கம்மா, வாங்க. எல்லாரும் ஒங்களுக்காகத்தான் காத்திட்டிருக்காங்கஎன்று சொன்னேன்.
கதவைத் திறந்துகொண்டு முனகியபடியே காலை வெளியே வைத்து இறங்கிய பெண்மணி முகத்தைச் சுருக்கிப் பார்த்தபடியேநீ யாருப்பா புது கூஜா?” என்று கேட்டாள். அந்த மாதிரியான குத்தல் வார்த்தைகளெல்லாம் என் வாழ்க்கையில் என்றோ பழகிவிட்டன. இதைவிட பெரிய ஊசிகளும் ஆணிகளும் இதயத்தை ஊடுருவியிருந்ததால் நான் அந்த வார்த்தையை காதில் வாங்கியதாகவே காட்டிக்கொள்ளவில்லை.
வாங்கம்மா வாங்க. நான் துளசிங்கம். ஞானவேலு சார் அசிஸ்டென்ட். வாங்க, அந்த நெழலுக்கு போவலாம். அங்க எல்லாருமே நீங்க எப்ப வருவீங்கன்னு காத்திட்டிருக்காங்கஎன்றபடி அவர்கள் நின்றிருக்கும் திசையைச் சுட்டிக் காட்டினேன். அதற்குள் வேறொரு பெண்மணியும் இரு இளைஞர்களும் இறங்கிவிட்டனர். ஒருவன்அம்மா, கார்த்திக் வந்திருக்காம்மாஎன்று சொல்லிவிட்டு வேகமாக நடக்கத் தொடங்கிவிட்டான். அம்மாவிடமிருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்ட மற்றொரு இளைஞன்நம்ம வண்டி இந்த பக்கம் வரும்போது அகிலா என்ன நல்லா பாத்துதும்மா. இப்ப இந்தப் பக்கம் திரும்பாம வேற எங்கயோ பாக்கறமாதிரி பாத்துட்டிருக்குதும்மாஎன்று புகார் சொன்னான்.
காரிலிருந்து நாலடி தொலைவு செல்வதற்குள் மூத்த பெண்மணியின் முகத்தில் வேர்வை முத்துகள் அரும்பின. புறங்கையை உயர்த்தி முகத்தருகில் கொண்டு சென்று உதடு குவித்து ஊதிக்கொண்டாள். பிறகு கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தபடியேவரவர .சி. இல்லாம கொஞ்ச நேரம் கூட இருக்கமுடியலடி கல்யாணி. அப்பிடியே நெருப்புல நிக்கறமாதிரி இருக்குதுஎன்று சலித்துக்கொண்டாள். தொடர்ந்து  ஏம்பா குலசிங்கம், ஆபீஸ்க்குள்ளயாவது .சி. இருக்குதா?” என்று என்னைப் பார்த்து கேட்டாள்.
நான் துளசிங்கம்மா. ஆபீஸ்ல பெரியவரு ரூம்ல மட்டும் ஏசி இருக்கும். அவுரு முன்னாலதான் நீங்க கையெழுத்து போடணும்
எரிச்சல் தெரியும் முகத்துடன் பேச்சை மாற்றி இன்னைக்கே முடிஞ்சிடுமில்ல?” என்று கேட்டாள்.
இன்னும் அர மணி நேரத்துல முடிஞ்சிடும். அதுக்காகத்தான் அண்ணன் உள்ள போயிருக்காரு. சரியான நேரத்துக்கு நீங்க வந்துட்டிங்க.”
தவளகுப்பத்துல கெளம்பும்போது சரியான நேரத்துலதான் கெளம்பனம். இங்க மரப்பாலத்து சிக்னல்ல கொஞ்ச நேரம், இந்திராகாந்தி சிலை சிக்னல்ல கொஞ்ச நேரம்னு நிக்க வேண்டிதா போச்சி. இல்லைன்னா இன்னும் ஒரு பத்து நிமிஷம் முன்னாலயே வந்திருப்பம்.”
நான் இரு பெண்மணிகளையும் தாமோதரன் சாரிடம் அறிமுகப்படுத்தினேன். இளைஞர்கள் அத்தை என்றும் மாமா என்றும் உறவுகளோடு கலந்து பேசத் தொடங்கினார்கள்.
அந்த உறவுகளை வரிசைப்படுத்தி அந்தக் குடும்பத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தபோது என்னோடு பிறந்தவர்களின் வரிசையை நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. எனக்கு ஒரு அண்ணன். ஒரு அக்கா. இரண்டு தம்பிகள். எல்லோருமே இதே பாண்டிச்சேரியில்தான் இருக்கிறார்கள். அண்ணன் கோர்ட்டில் பியுனாக இருக்கிறான். அக்கா ஜிப்மரில் ஆயா வேலை பார்க்கிறாள். ஒரு தம்பி எலெக்ட்ரிக்கல் ஷாப் வைத்திருக்கிறான். இன்னொரு தம்பி பெய்ன்ட்டிங் கான்ட்ராக்டராக வேலை செய்கிறான்.
நானும் ஒரு காலத்தில் போஸ்ட்மேனாக அரசாங்க வேலை பார்த்தவன்தான். ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்த பெண்ணின் மீது ஆசைப்பட்டு திருமணம் செய்துகொண்டேன். சாதி மாறி செய்துகொண்ட திருமணம் என்பதால் இரு தரப்புக் குடும்பங்களுமே என்னை ஒதுக்கிவிட்டன. தனியாக வாடகைக்கு ஒரு வீடு எடுத்து வாழ்க்கையைத் தொடங்கினோம். அவள் தலைப்பிரசவத்துக்குச் செலவு செய்யக்கூட என்னிடம் பணமில்லை. அன்று பட்டுவாடா செய்யவேண்டிய மணியார்டர் பணம் ஆயிரம் ரூபாய் கையிலிருந்தது. அன்றைக்கிருந்த சூழல் என்னைத் திருடனாக்கிவிட்டது. மொத்தமே மூன்று மணியார்டர்கள்தான். ஒரே வாரத்தில் நான் அகப்பட்டுவிட்டேன். என் வேலை போய்விட்டது.
அதற்கப்புறம் ஏதேதோ சில்லறை வேலைகள். பிள்ளைகள் அடுத்தடுத்துப் பிறந்தார்கள். வளர்ந்தார்கள். எங்கள் திருமணம் நடந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த நிமிஷம் வரைக்கும் என் மனைவி என்னைப் பார்த்து ஒரு வார்த்தை கூட தப்பாகச் சொன்னதில்லை. அவள் தங்கம். வைரம். வைடூரியம். எங்கோ  கோபுர உச்சியில் இருக்கவேண்டியவள் அவள். என்மீது ஆசைப்பட்டு இந்தக் குப்பைமேட்டுக்கு வந்துவிட்டாள். நான் ஒரு சாக்கடை. சேறு. வெறும் மண். இதே ஊரில் என் கூடப் பிறந்தவர்களின் பிள்ளைகளுக்குத் திருமணங்களும் சீமந்தங்களும் நடைபெற்றதெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் ஒரு விசேஷத்துக்குக்கூட எங்களை யாரும் அழைத்ததில்லை. அவர்கள் பார்வையில் நாங்கள் கெளரவமில்லாதவர்கள்.
புர்புர்ரென்று உறுமி புகைவிட்டபடி மெதுவாக வளைந்து அலுவலக வாசலைக் கடந்து ஒரு ஆட்டோ உள்ளே வருவதைக் கண்டதுமே, நான் ஆட்டோவுக்குள் உட்கார்ந்திருந்த குணசீலன் சாரைப் பார்த்துவிட்டேன். ஓடிச் சென்று அவரை வணங்கிவாங்க சார்என்றேன். “எப்படி இருக்கிங்க துளசிங்கம்?” என்று கேட்டவாறே வண்டியிலிருந்து இறங்கி என் தோள் மீது கையை வைத்து அழுத்தினார். ஆனந்த நிலையம் விற்பனைக்கான பேச்சுவார்த்தை தொடங்கியபோதிருந்த உடல்நிலை அவருக்கு இப்போது இல்லை. மெலிந்த தோற்றம். தலைமுடியும் பல இடங்களில் உதிர்ந்துவிட்டது. என் வயதுதான் அவருக்கு இருக்கும். ஆனால் பார்ப்பதற்கு என்னைவிட வயதானவராகத் தோற்றமளித்தார் அவர். குணசீலனைத் தொடர்ந்து அவருடைய மனைவி சாவித்திரியம்மாளும் மகனும் இறங்கினார்கள். மகன் கையில் ஒரு கட்டைப்பை இருந்தது. அதில் சில பழைய கோப்புகளும் தண்ணீர் பாட்டிலும் இருந்தன.
என்ன துளசிங்கம்? எல்லாரும் எனக்காகத்தான் வெய்ட்டிங்கா?” என்று புன்னகைத்தபடியே கேட்டார் குணசீலன். “உள்ள அண்ணன் போயிருக்காரு. டாக்குமென்ட் வேல நடந்திட்டிருக்குது சார். எல்லாரும் அடுத்தடுத்து இப்பதான் வந்தாங்கஎன்றேன்.
சாவித்திரியம்மாள் பெருமூச்சுடன் நடந்து சென்று பக்கத்தில் போடப்பட்டிருந்த கல்பெஞ்சில் உட்கார்ந்தாள். கூந்தலை பின்னால் தள்ளி கொண்டையாக முடித்துக்கொண்டாள்.
வீடு விற்பனை தொடர்பாக ஆறு மாதமாக நீண்டுவிட்ட  பேச்சுவார்த்தையின்போது அடிக்கடி அந்த வீட்டுக்குப் போய்வந்த பழக்கத்தால் அவரோடு நல்ல அறிமுகம் இருந்தது. இரண்டுமூன்று முறை அவர் வீட்டில் சாப்பிட்டதை என்னால் மறக்கமுடியாது. 
நீயும் வா சாவித்திரி. நீ பக்கத்துல நின்னா எனக்கு ஒரு தைரியமா இருக்கும்.”
தொணைக்குதான் ஒங்க புள்ள பக்கத்துல இருக்கானே, அப்பறம் என்ன? போய்ட்டு வாங்க. என்னமோ தல சுத்தறமாதிரி இருக்குது.  நான் இங்கயே ஒக்காந்திருக்கன். நீங்க கெளம்புங்க.”
மகனின் தோளைப் பற்றியபடி குணசீலன் மெல்லமெல்ல நடந்தார். அவர்களுக்குப் பின்னால் நடந்துகொண்டே ஞானவேலு அண்ணனுக்கு இரண்டு முறை மிஸ் கால் கொடுத்தேன்.
பூவரச மரத்தடியை நெருங்கி தாமோதரனுக்கு வணக்கம் சொல்லும் நேரத்தில் ஞானவேலு அண்ணன் வெளியே வந்துவிட்டார்.
எல்லாரும் வந்துட்டிங்களா, வாங்க வாங்க. எல்லாருக்கும் உள்ள போவலாம். உள்ள சார் ரூம் சின்ன ரூம்தான். கொஞ்ச நேரத்துல வேல முடிஞ்சிடும். அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க 
ஒவ்வொருவராக அலுவலகத்துக்குள் நடந்து சென்றார்கள்.
நீயும் வா உள்ள துளசிங்கம், உனக்கு வேற தனியா சொல்லணுமா?”
சாட்சி கையெழுத்துதானண்ணே. கடைசில வந்து போடறன். அங்க குணசீலன் சார் வீட்டம்மா தனியா உக்காந்திருக்காங்கண்ணே. நீங்க ஒரு மிஸ் கால் குடுங்க. அப்ப நான் ஓடி வந்துடுவேன்
எல்லோரும் அலுவலகத்துக்குள் சென்றுவிட்டார்கள். அப்போதுதான் ஒருவர்கூட குணசிலனுடன் உரையாடவில்லை என்பதைக் கவனித்தேன். மெதுவாக நடந்து சாவித்திரியம்மாள் உட்கார்ந்திருக்கும் கல்பெஞ்சுக்கு அருகில் வந்து நின்றேன். அவள் முகம் ஒடுங்கியிருந்தது. சொல்லொணா வேதனையை விழுங்கியதுபோல அவள் கண்கள் கலங்கியிருந்தன. விளிம்பில் நிறைந்த துளிகளை விரலால் தொட்டு துடைத்தபடிஎன்ன எல்லா கதயும் ஒரு அரமணி நேரத்துல முடிஞ்சிடுமா?” என்று கேட்டாள்.
முடிஞ்சிடும். எங்க ஞானவேல் அண்ணன் அங்க இருக்காரில்ல, எல்லாத்தயும் அவரு பாத்துக்குவாரு.”
அதுக்கப்பறம் வீட்ட ஒரு மாசத்துல காலி பண்ணனுமா, ரெண்டு மாசத்துல காலி பண்ணனுமா?”
அவர் எங்கே வருகிறார் என்பது புரிந்துவிட்டது.
ஃபுல் பேமெண்ட் பண்ணிடறதால, சாதாரணமா ஒரு மாசத்துக்குள்ள காலி பண்றதுதான் வழக்கம். ஒருவேள வாங்கனவங்க சம்மதிச்சா கூடுதலா ஒரு மாசம் இருந்துக்கலாம்.”
அதெல்லாம் எதுக்கு? ஒரு மாசத்துலயே சாவிய குடுத்துடலாம்.”
பேச்சை திசைதிருப்பும் வகையில் நான் மெதுவாக ஐயாவுடைய  அப்பாவுக்கு இது பூர்வீகமா கெடச்ச இடமா, இல்ல வாங்கி சேத்த சொத்தா? எதுவா இருந்தாலும் அந்த காலத்துலயே ஏழாயிரம் சதுர அடியில மண்ணும் எடமுமா வாழ்ந்திருக்காருன்னா பெரிய விஷயம்தான். அதனாலதான் வீட்டுக்கு ஆனந்த நிலையம்னு பேர் வச்சிட்டாரா?” என்றேன்.
சாவித்திரியம்மாள் இல்லையென்பதற்கு அடையாளமாக தலையை  அசைத்தாள். “பூர்விகம்லாம் கிடையாது. ஐயாவுடைய தாத்தா ஒரு சாதாரண விவசாயிதான். ஐயாவுடைய அப்பாதான் கல்வே காலேஜ்ல படிச்சிட்டு கோர்ட்ல குமாஸ்தாவா இருந்தாரு. ரொம்ப நேர்மையான மனுஷன். யாருகிட்டயும் ஒரு பைசாவுக்கு கைய நீட்டமாட்டாரு. சாய்ங்கால நேரத்துல ஜட்ஜ் ஊட்டுக்கு போயி ஒத்தாசயா இருப்பாரு. அந்த ஜட்ஜ் ஒரு பிரெஞ்ச்சுக்கார தொர. அவரு வாங்கி வச்சிருந்த மண்ணு இது. ஓய்வு காலத்துல இங்க ஊடு கட்டி வாழணும்ங்கற ஆசயில வாங்கினது. என்ன காரணத்தாலயோ அவரு பிரான்ஸ்க்கு திரும்பி போவறமாதிரியான நெலம வந்துட்டுது. கடைசி நேரத்துல இந்த மண்ண என் பரிசா நீ வச்சிக்கோ நல்லசிவம்னு இவருக்கு எழுதி குடுத்துட்டு போயிட்டாரு. அந்த தாய்ப்பத்திரம் இன்னும் இருக்குது. அவர் எடுத்தும் போன பைல்ல இருக்குது அந்தப் பத்திரம். அந்த ஜட்ஜ் பேரு ஆனா தே நெல்லா. இவரு ஐயாவுடைய அப்பா ஆனந்த நிலையம்னு தமிழாக்கிட்டாருஎன்று சொல்லிக்கொண்டே வந்தவர்இன்னையோட அந்தக் கதை மண்ணோடு மண்ணாய்டுச்சி. இனிமே ஆனந்தமும் இல்ல கீனந்தமும் இல்லஎன்று பெருமூச்சோடு சொல்லி முடித்தார்.
சில கணங்கள் எதையும் பேச சொற்கள் எழவில்லை. ஆயினும் சாவித்திரியம்மாளிடம் எதையாவது பேசத் தொடங்கி சோர்விலிருந்து மீட்கவேண்டும் என்ற எண்ணத்துடன் ஐயாவுக்கு கூடப் பொறந்தவங்க அஞ்சி பேருங்களாம்மா?” என்று பொதுவாகக் கேட்டேன்
ஆமா அஞ்சி பேரு. மூணு அண்ணன். ரெண்டு தங்கச்சிங்க.”
அண்ணன்மாருங்க மூணு பேரும் பிரான்ஸ் போன சமயத்துல ஐயா ஏன் போவலை?
அவுங்க பிரெஞ்சு ஒப்பிசம் இருக்கற பொண்ணுங்களா பாத்து கல்யாணம் பண்ணிகிட்டு அங்க போயிட்டாங்க. இவரு அம்மா அப்பாவ பாத்துக்கிடணுமேன்னு இங்கயே இருந்துட்டாரு.”
அதுவும் சரிதான். கடசி காலத்துல பெத்தவங்கள பாத்துக்கறது புள்ளயோட கடமதான?”
அத எல்லா புள்ளைங்களும் செஞ்சா பரவாயில்ல. இவர் ஒருத்தரே செய்யறதுன்னா?”
எதுவா இருந்தாலும் பகுந்துக்கறதுதான் மொற.”
நான் கல்யாணம் பண்ணிகினு இந்த ஊட்டுக்கு வந்து முப்பது வருஷம் ஆவுது. மூனு வருஷத்துக்கு முன்னாலதான் அவுங்க ரெண்டு பேரும் அடுத்தடுத்து காலமானாங்க. இருபத்தேழு வருஷம் நான்தான் அவுங்களுக்கு எல்லாம் செஞ்சன். குளுப்பாட்டனது, கழுவி விட்டது, வாரிப் போட்டது, சோறு ஊட்டனது எல்லாம் நான்தான். கட்டிம்போன பொம்பள புள்ளைங்க இதே ஊருல இருந்துகிட்டு ஒருத்தி கூட வந்து எட்டிப் பாக்கலை, தெரிமா?”
அப்பிடி என்ன மனக்கொற அவுங்களுக்கு?”
என்ன மனக்கொற? இம்மாம்பெரிய ஊட்ட நீ ஒன்டியாதான அனுபவிக்கற, நீயே செய்ங்கற எண்ணம்தான், வேற என்ன?”
சொத்துல உரிம கேக்கறவங்க, கடமையிலயும் உரிமய பகுந்துக்கணும்…”
கெழவனும் கெழவியும் இருக்கறவரைக்கும் யாரும் எதுவும் பேசல. ரெண்டு பேரும் மண்டய போட்டதும், எல்லாருக்கும் சொத்து ஞாபகம் வந்துட்டுது…”
சாகறதுக்கு முன்னால யாருக்கு என்ன உண்டோ அத பெரியவரே சுமுகமா பிரிச்சி குடுத்திருக்கலாம்ல?”
அதான் பெரியவங்க செஞ்ச பெரிய தப்பு. கடசி மூச்சு இருக்கறவரைக்கும் அவரும் அத செய்யல. இவரும் அத பத்தி ஒரு வார்த்த கூட வாயத் தெறந்து கேக்கல. கேளுங்க கேளுங்கன்னு இவருகிட்ட தலபாடா அடிச்சிகிட்டன். நீ சும்மா இரும்மா, என் கூட பொறந்தவங்கள்ளாம் அப்பிடி இல்லம்மா. எல்லாருமே சொக்கத்தங்கம். எதுவும் கேக்கமாட்டாங்க. எல்லாருமே அந்த நாட்டுல ஊடு பங்களானு இருக்கறவங்க, இதுக்கு போயி பங்குக்கு வரப்போறாங்களான்னு மெதப்புலயே காலத்த தள்ளிட்டாரு. இப்ப என்ன சொல்றாங்க தெரியுமா?”
என்னவாம்?”
நீங்க முப்பது வருஷமா ஊட்ட நல்லா அனுபவிச்சிட்டிங்க, உங்களுக்கு எதுக்கு பாகம்னு ஒருத்தி கேக்கறா? நீங்க எல்லாத்தயும் உட்டுகுடுத்துட்டு போவறதுதான் நல்லதுன்னு நாயம் பேசறா இன்னொருத்தி
அட கடவுளே, இது எந்த ஊருல அடுக்கும்?”
அந்த காலத்துல எங்க அப்பா வெறும் அஞ்சி பவுன் நகை போட்டு கல்யாணம் செஞ்சி குடுத்து அனுப்பிட்டாரு. அத தவிர, இந்த இருபத்தஞ்சி வருஷத்துல தாய்வீட்டுப் பங்குன்னு எனக்கு என்ன கெடச்சிது? இந்த ஊட்டுல எனக்குன்னு ஒரு பங்கு வாங்கனாத்தான் புகுந்த ஊட்டுல எனக்கு ஒரு கெளரவம் கெடைக்கும்னு சொல்றாளுங்க.”
மத்த அண்ணன்மாருங்க அவுங்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடாதா?”
அவுங்க எப்பிடி எடுத்துச் சொல்வாங்க? அவுங்களும்தான பங்குக்கு நின்னாங்க?”
உடன்பிறப்புங்கற வார்த்தைக்கே இந்த காலத்துல அர்த்தமில்லம்மா
அதைக் கேட்டதும் சாவித்திரியம்மாள் பொங்கி எழுந்துவிட்டாள். சீற்றத்துடன்என்ன பெரிய உடன்பிறப்பு? மண்ணாங்கட்டி உடன்பிறப்பு.  ஒரே அம்மா அப்பானு சொன்னாலும் எல்லாருக்கும் வாயும் வயிறும் வேறவேறதான? ஒவ்வொரு ஆளும் பிரான்ஸ்ல ஊட்டு நாய்ங்களுக்குனு தனியா க்வார்ட்டர்ஸ் கட்டி வச்சிருக்கானுங்க. அதுவே பங்களாவாட்டம் இருக்குது. அத போட்டா புடிச்சாந்து நம்மகிட்டயே காட்டறாங்க. நாங்க பத்து ஊடு கூட கட்டிக்குவம், அது எங்க விஷயம். அம்மா அப்பா வாழ்ந்த வீட்டுலன்னு எங்களுக்கு ஒரு பங்கு வேணும், அத குடுங்கன்னு ஒத்த கால்ல நின்னாங்கஎன்றாள்.
கொதிக்கும் அவள் சொற்களுக்கு பதில் சொல்ல வழியில்லாமல் நான் மெளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
எல்லாரும் சட்டம் பேசறாங்க. நாயம் பேசறாங்க. அவுங்கவுங்க வசதிக்கு தகுந்தமாதிரி வளச்சி வளச்சி பேசறாங்க. ஆனா எல்லா நேரத்துலயும் அத பேசமுடியாது. எல்லாத்துக்கும் மேல  தர்மம்னு ஒன்னு இருக்குது. அதுக்கு பணிஞ்சிதான் அந்த சட்டத்தயும் நாயத்தையும் பேசணும். எல்லாத்தயும் விட காசிபணம் முக்கியமாய்டுமா. சொல்லு தம்பி. நாளைக்கி காசிபணம்தான் நம்ம பாடைய தூக்க வருமா, இல்ல நமக்கு கொள்ளி போட வருமா? அப்ப பக்கத்துல அண்ணன் தம்பிதான வேணும்.”
சாவித்திரியம்மாளின் சொற்களில் படிந்திருந்த உண்மையின் முன்னால் என்னால் வாயைத் திறக்கவே முடியவில்லை.
இவுங்க குடுத்த கொடச்சல்லியே இவருக்கு ஒடம்பு வீணா போச்சி. தெனமும் இதத்தான் ஒவ்வொரு நாளும் ஃபோன்ல பேசுவாங்க. பேசிப் பேசியே இவரு காயலாவ வரவச்சிகினாரு. ஒரு நாள் இல்ல, ரெண்டு நாள் இல்ல, ஒரு வருஷமா காயலா. படாத பாடு பட்டுட்டாரு. தண்ணி கூட குடிக்கமுடியலை. இருபத்திநாலு மணி நேரமும் வயித்து வலி. டாக்டருங்களாலயே அந்த வலி எதுக்காகன்னு கண்டுபுடிக்க முடியலை.  எத்தன டாக்டருங்க. எவ்ளோ மருந்து. கடைசியில ஜிப்மர்லதான் என்னென்னமோ சோதனைங்க செஞ்சி பாத்துட்டு புத்துநோய்னு சொன்னாங்க. ரெண்டு மாசமா சாப்படற மாத்திர மருந்துல  ஆளே ஒடுங்கிட்டாரு.”
அந்த அதிர்ச்சியை என்னால் தாங்கவே முடியவில்லை. மெதுவாகஇது அவருக்குத் தெரியுமா?” என்று கேட்டேன்.
தெரியும் தெரியும். அப்பிடிலாம் மறச்சி வச்சி இந்த காயலாவுக்கு மருந்து குடுக்கமுடியாது.”
அதான் இப்பிடி குச்சியாட்டம் எளச்சிட்டாரா? கடவுளே, என்ன சோதனையோ இது? எத்தன தரம் ஊட்டுக்கு வந்திருக்கேன். அவரு ஒரு வார்த்த கூட என்கிட்ட சொன்னதே இல்ல.”
அவரு எப்பவுமே அப்படித்தான். எல்லாத்தயும் நெஞ்சில போட்டு அடச்சி மூடி வச்சிக்குவாரு. நாலு பக்கத்து மதகுங்களயும் மூடி வச்ச ஏரி மாதிரி அவரு மனசு. மனசத் தெறந்து எதயும் பேசமாட்டாரு. நம்ம கஷ்டத்த வாய்விட்டு சொன்னாதாங்க நாலு பேருக்கு தெரியும்ன்னு நான்தான் தெனமும் சொல்லிச்சொல்லி கட்டாயப்படுத்தி ஒருநாள் அவுங்க அண்ணன்கிட்ட பேசச் சொன்னன்.”
பேசனாரா?”
பேசனாரு. பேசனாரு. ஆறு மாசமா சம்பளம் இல்ல. ஒன்னால இனிமே வேல செய்யமுடியாது, ரிட்டயர்மெண்ட் வாங்கிட்டு போன்னு ஸ்கூல்ல சொல்றாங்கண்ணே. சம்பளமும் இல்ல ஊடும் இல்லைன்னா ஒரு குடும்பத்த வச்சிகினு எப்பிடிண்ணே பொழைக்க முடியும்? இந்த ஊட்ட மட்டும் எனக்கு உட்டுடுங்கண்ணே, பின்னால ஆறாயிரம் சதுர அடி காலி மன இருக்குது.  அத நீங்க எல்லாரும் பிரிச்சிக்கிங்கண்ணேனு மூத்தவருகிட்ட கெஞ்சி கூட பாத்துட்டாரு. மூத்த அண்ணன் ரெண்டாவது அண்ணன்கிட்ட சொல்லுங்கறாரு. ரெண்டாவது அண்ணன் மூனாவது அண்ணன்கிட்ட சொல்லுங்கறாரு. கடைசியா மூத்த அண்ணன்கிட்ட எடுத்து சொன்னா, எல்லாரும் ஒத்துகிட்டா எனக்கொன்னும் பிரச்சின இல்ல, ஆனா எல்லாரயும் ஒத்துக்க வைக்கவேண்டிது ஒன் பொறுப்புன்னு கைகழுவிட்டாரு பெரிய அண்ணன். யாருமே அந்த திட்டத்துக்கு ஒத்துக்கலை.”
ஏன், அது நல்ல ஏற்பாடுதான?”
நமக்குத்தான் அது நல்ல ஏற்பாடு, அவுங்களுக்கு? பங்குன்னு வந்துட்டா எல்லாருக்கும் ஒரே பங்குதாம்பா. ஒருத்தவங்களுக்கு ஊடு, ஒருத்தவங்களுக்கு மண்ணுங்கற பேச்சே வேணாம். எல்லாருக்கும் சமபங்குனு ஒரே புடிவாதம். தெனம் போன்மேல போன போட்டு தொணதொணன்னு இவர புடுங்கி எடுத்துட்டாங்க. ஒரு கட்டத்துல வேற வழியில்லாமதான் ஞானவேலுகிட்ட சொன்னாரு.”
ஒங்க பங்குக்கு வெறும் இருபத்தஞ்சி லட்சம் கெடைக்கும், அத வச்சி என்ன பண்ணுவிங்க?”
என்ன செய்றதுன்னு எனக்கும்தான் புரியல. இவருக்கு வைத்தியம் பாப்பனா, இல்ல புள்ளை படிப்புக்கு செலவு செய்வனா, இல்ல வளர்ந்து நிக்கற பொண்ணுக்கு கல்யாண செலவுக்கு ஒதுக்குவனா, இல்ல வாழறதுக்கு ஒரு ஊட்டுக்கு ஏற்பாடு செய்வனா? அத நெனச்சாவே பைத்தியம் புடிக்கறமாதிரி இருக்குது. வெடவெடன்னு ஒடம்பு நடுங்குது.”
ஏழெட்டு லட்சம் செலவு செஞ்சா போக்கியத்துக்கு ஒரு நல்ல ஊடா  கம்பன் நகர்லயே பாத்து எடத்த மாத்துங்க மொதல்ல. அதுக்கப்பறம்  ஒன்னொன்னா பாத்துக்கலாம்.”
இவரு வைத்தியம் வேற இருக்குதே, இப்பதான் மூனு கீமோ முடிஞ்சிருக்குது. இதயே அவரால தாங்கமுடியல. இன்னும் பதினஞ்சி இருக்குது. எப்பிடி தாங்குவாரோ தெரியல.”
கடவுள்தான் அவருக்கு தாங்கற சக்திய குடுக்கணும்.”
இவரு கொஞ்சம் கூட எதுக்கும் ஒத்துழைக்கமாட்டறாரே.  நான் என்ன செய்யமுடியும்? என் காலம் முடிஞ்சி போச்சி, நான் எப்ப வேணாம் கெளம்பற ஆளு. நீ பணத்த வீண்செலவு செய்யாத. அத வச்சி புள்ளைங்கள நல்லபடியா காப்பாத்துன்னு என்கிட்டயே பாடம் படிக்கறாரு.”
எதிர்பாராத விதமாக அவர் குரல் உடைந்து குனிந்து விசும்பியபோது என் மனம் திகைத்தது. நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர் உதடுகள் துடிக்க அழத் தொடங்கினார். நான் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கண்ணீர் திரண்டு அவர் கன்னங்களில் வழிந்து விழுந்தது. என்ன செய்வது என்று புரியாமல் நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
அப்போது என் பையிலிருந்த கைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தேன். ஞானவேலு அண்ணனின் அழைப்பு. ஒரே ஒரு நீண்ட மணியோசைக்குப் பிறகு நின்றது. சில கணங்களுக்குப் பிறகு மீண்டும் அதே அழைப்பு. பிறகு நின்றது. நான் புறப்படவேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தேன்.
டீ ட்ரம்முடன் ஒரு சைக்கிள் அந்த பெஞ்சைக் கடந்துபோனது. சூடாக ஒரு டீ அருந்தினால் அந்த நேரத்துக்கு சற்றே தெம்பாக இருக்கும் என்று தோன்றியது. ஆனாலும் சைக்கிள்காரரை அழைக்க நாக்கு எழவில்லை. என்னால் எதையுமே யோசிக்கமுடியவில்லை. மீண்டும் மீண்டும் சாவித்திரியம்மாளின் அழுகையிலேயே கண்கள் குவிந்தன.
நீ எதுக்கு நிக்கற? கெளம்பு. அவுங்க காத்திருப்பாங்க இல்ல. வரும்போது ஐயாவ புடிச்சி அழச்சிகினு வா. பையனுக்கு சாமர்த்தியம் போதாது.”
என் உடல் நடுங்கியது. சாவித்திரியம்மாளை ஆழ்ந்த துயரத்துடன் ஒருமுறை பார்த்தேன். பிறகு வேகமாக அலுவலகத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.



சொல்வனம் -222 (09.05.2020) இதழில் வெளிவந்த சிறுகதை