Home

Thursday 28 May 2020

ஒரு கோடி குரல்கள் - கட்டுரை




அறுபதுகளில் எங்கள் வீட்டில் ஒரு ரேடியோ இருந்தது. கூரைமீது ஒரு நீளமான குச்சியை நிற்கவைத்து, அதன் நுனியிலிருந்து ஏரியல் கம்பியை இழுத்துவந்து ரேடியோவுடன் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். “இந்தக் கம்பி வழியாத்தான்டா வானம் வழியா ஒலிபரப்பாகிற பாட்டும் நாடகமும் ரேடியோவுக்கு வந்து சேருதுஎன்று சொன்னார் எங்கள் அப்பா. மேல்விளக்கத்துக்காக நான் எங்கள் பள்ளிக்கூட ஆசிரியர் ராமசாமி சாரிடம் போய் நின்றேன். அவர் வானொலி இயங்கும் விதத்தை படம் போட்டு விளக்கினார். இறுதியாகஒவ்வொரு நொடிக்கும் கோடிக்கணக்கான குரல்கள் அலையலையா இந்த வானம் வழியா போயிட்டே இருக்குதுஎன்று சொன்னார்.


இளமை நாட்களில் வானொலியில் கேட்ட குரல்கள் அனைத்துமே ஞாபகத்தில் பதிந்துகிடக்கின்றன. திரையிசைப் பாடகர்களின் குரல்கள் மட்டுமல்ல. செய்திகள் வாசித்த சரோஜ் நாராயணஸ்வாமி, நிகழ்ச்சி அறிவிப்பாளர்களின் குரல்கள், நேயர் விருப்பம் தெரிவிப்பவர்களின் பெயர்களை மூச்சுவிடாமல் படித்த குரல்கள்,  நாடக நடிகர்களின் குரல்கள், கூத்தபிரான், இலங்கை விவதபாரதியின் கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீத், மயில்வாகனன் என பெயர்களை நினைக்கும்போதே அவர்களுடைய குரல்களும் அலையெனப் பொங்கியெழுகின்றன. இசை பழகிய பிறகு மதுரை சோமு, எம்.டி.ராமனாதன், தண்டபானி தேசிகர், மகாராஜபுரம் சந்தானம், சஞ்சய் சுப்பிரமணியன், எம்.எஸ்., டி.கே.பட்டம்மாள், அருணா சாயிராம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றோரின் குரல்களைக் கேட்கக் கேட்க மொழியழகு பற்றிய வியப்பு பெருகியபடி இருக்கிறது. 

குரல்களை நினைவில் நிறுத்த முகங்கள் தெரிந்திருக்கவேண்டிய அவசியமே இல்லை. இதை எனக்குச் சொன்னவர் சின்னதுரை. அவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட டி.டி.கே. கேசெட்டுகள் இருந்தன. அனைத்தும் பாடல்களால் நிறைந்தவை. அவற்றைப் பாடியவர்கள் அனைவரும் மிக எளிய மனிதர்கள். அவற்றைப் பதிவு செய்தவர் அவர்தான். ஆனால் ஒரு முகமும் தன் நினைவில் இல்லை என்று சொன்னார். ஒவ்வொரு குரலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். வீட்டிலிருக்கும் பொழுதுகளை அவற்றை ஓடவிட்டு, அப்பாடல்களில் லயித்தபடி கழிப்பதில் விருப்பம் கொண்டவர் அவர்.

அவர் ஒரு சுற்றுலா மையத்தில் வேலை செய்துவந்தார்.  சமையல் தொழில். தென்னிந்திய சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் பேருந்துகளில் சமையல் குழுவோடு செல்வார். ஆரம்ப காலத்தில் பெங்களூரில் குடும்பத்தோடுதான் இருந்திருக்கிறார். தாயும் தங்கைகளும் கிராமத்தில் இருந்தார்கள். பத்தாண்டு கால உழைப்பில் மூன்று தங்கைகளுக்குத் திருமணம் செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்பிவைத்தார். தங்கைகள் வெளியேறிய பிறகு கிராமத்து வீட்டில் தாயார் தனிமையில் வாழ வேண்டியிருந்தது. நகரத்திற்கு வந்து மகனோடு வாழ அவருக்கு விருப்பமில்லை. அதனால்  தாய்க்குத் துணையாக மனைவியையும் இரு பிள்ளைகளையும் கிராமத்துக்கு அனுப்பிவைத்துவிட்டு தனிமையில் வசிக்கப் பழகிக்கொண்டார். சின்ன வயதிலிருந்தே இருந்த இசைநாட்டம் அவருடைய தனிமையின் அழுத்தத்தைக் குறைக்க உதவியது.

செல்லும் இடங்களிலெல்லாம் தன்னுடைய ஒலிநாடாப் பெட்டியையும் சில புதிய கேசெட்டுகளையும் தவறாமல் எடுத்துச் செல்வார் சின்னதுரை. இரவுத்தங்கல் எப்போதும் மிகப்பெரிய கூடமுடைய விடுதியாகத்தான் இருக்கும். அனைவரும் அமர்ந்து உண்ணவும் பேசவும் இளைப்பாறவும் அந்த ஏற்பாடு. உண்டு முடித்து தாம்பூலத்தட்டோடு எல்லோரும் கதை பேச உட்காரும் நேரத்தில் சின்னதுரை தன் ஒலிநாடாப் பெட்டியில் பாட்டு போடுவார்.

ஒன்றிரண்டு பாடல்களைத் தொடர்ந்து அனைவருடைய கவனமும் பாடலின் மீது பதியும். அதற்குள் பாடல் வரிகளில் லயித்து முணுமுணுத்தபடி பின்தொடரும் ஒன்றிரண்டு முகங்களை கூட்டத்தில் கண்டுபிடித்துவிடுவார். உற்சாகத்தைத் தூண்டுவதுபோல பேசி அவர்களைப் பாட வைத்துவிடுவார்.  அவற்றை அப்படியே பதிவு செய்வார். ஒரு பாட்டின் பதிவு முடிந்ததுமே, அதை அனைவரும் கேட்கும் வகையில் ஒலிக்கவிடுவார். சூழல் மெல்ல மெல்ல கனிந்துவரத் தொடங்கியதும் தானாகவே ஒன்றிரண்டு பேர்கள் பாடுவதற்கு முன்வருவார்கள். அவை அனைத்தையும் பதிவு செய்துகொள்வார். ஒன்றிரண்டு வாரங்கள் பயணம் முடித்து திரும்பும்போது அவரிடம் பத்து பன்னிரண்டு கேசெட்டுகளின் பதிவு சேர்ந்துவிடும்.

ஒருமுறை ஆந்திரப்பயணம் சென்றபோது அவரோடு நானும் சென்றிருந்தேன். முதல் தங்கல் அனந்தப்பூரில் ஏற்பாடாகியிருந்தது. அன்று மாலை அந்தி கவியும் நேரத்தில்தான் லேபாக்ஷி கோவிலைப் பார்த்திருந்தோம். விஜயநகரப் பேரரசு நிலவிய காலத்தில் கட்டப்பட்ட கோவில் அது. அதற்கருகிலேயே கோவிலுக்காகவோ அல்லது மண்டபத்துக்காகவோ மண்ணில் ஆழ ஊன்றி நிறுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கல்தூண்கள் நின்றிருந்தன. ஒவ்வொரு தூணும் சிற்பங்களால் நிறைந்திருந்தது.

ஒரு தூணில் சிவனுடைய தலையிலிருந்து கங்கை இறங்கிச் செல்வதுபோன்ற சிற்பம். அதையே பார்த்தபடி நின்றிருந்த ஒரு பெரியவர் சட்டென்று மனமுருகப் பாடத் தொடங்கிவிட்டார்.  ஒரு தெலுங்குப்பாடல். நான் சின்னதுரையின் கையைப் பற்றி அழுத்தி அந்தப் பெரியவரைக் கவனிக்கும்படி தூண்டினேன். பெரியவரின் குரலைக் கேட்டு சில கணங்கள் மெய்ம்மறந்து நின்றுவிட்டார் சின்னதுரை.

சட்டென நினைவுக்கு வந்தவராக தன் பையிலிருந்த ஒலிநாடாப்பெட்டியை வெளியே எடுத்தபடி என்னிடம் சைகையிலேயேபதிவு செய்யட்டுமா?” என்று சம்மதம் கேட்பதுபோலக் கேட்டார். அந்த உருக்கமான குரலைக் கேட்ட கணத்திலேயே அவருக்கும் பிடித்துவிட்டது. நான் வேகமாக தலையசைத்ததும் புது நாடாவை பெட்டிக்குள் செருகி பதிவு வேலையைத் தொடங்கிவிட்டார்.

இரண்டு பாடல்களுக்குப் பிறகு அந்தப் பெரியவர் பாடுவதை நிறுத்திவிட்டு சின்னதுரையைப் பார்த்தார். அதற்குள் அவரை நெருங்கிவிட்ட சின்னதுரை அவருடைய பாடல்களைப்பற்றி தெலுங்கிலேயே அவரிடம் பேசத் தொடங்கிவிட்டார். அவர் பாடி முடித்த சிவ அம்ருதவாணியின் வரிகள் அவரை எழுச்சிகொள்ள வைத்துவிட்டன. விலகிநின்று பார்க்கும்போது பக்திப்பாடல்கள் குறித்து ஆழ்ந்த இசைஞானத்தோடு விவாதிப்பவர்களாகவே இருவரும் காணப்பட்டார்கள்.

இந்தியாவில் உள்ள எல்லாச் சிவாலயங்களையும் நேரில் பார்க்கவேண்டும் என்பது எனக்குள் நான் வளர்த்துக்கொண்ட கனவு. என் குடும்பக்கடமைகள் முடியட்டும் என்றுதான் இவ்வளவு காலம் காத்திருந்து தொடங்கினேன்என்றார் பெரியவர்.

சின்னதுரை அவரிடம் மேலும் தொடர்ந்து பல கேள்விகளைக் கேட்டு விளக்கங்களைப் பெற்றபடி இருந்தார். அவருக்குப் பிடித்தமான பாடல்களின் வரிகளைச் சொல்லி அவற்றைப் பாடும்படி கேட்டு பதிவு செய்துகொண்டார். அரைமணி நேரப் பழக்கத்துக்குள் அவர்கள் இருவரும் அறுபதாண்டு நண்பர்கள்போல மாறிவிட்டார்கள்.  முடிவில், “இந்தப் பயணம் சுதந்திரமாக இருக்கிறது. ஒரு வருஷத்துக்குள் எல்லாவற்றையும் பார்த்துவிடுவேன். பிறகு ஊருக்குத் திரும்பி குடும்பத்தாரோடு சேர்ந்துகொள்வேன்என்றார். அந்தத் தூணிலிருந்து விலகி பெரியவர் நடந்த திசையில் அவரும் சென்றார்.

மூன்று ஆட்கள் உயரத்துக்கு பத்திவிரித்த நாகத்தையே குடையாகக் கொண்டு நிறுவப்பட்டிருந்த சிவலிங்கத்தின் மீது வைத்த விழியை எடுக்கமுடியவில்லை. ஒருவித மங்கலான செம்மண் நிறம். அந்தியின் நிறமே நாகத்தின் மீது வழிவதுபோல இருந்தது. அந்த இடத்திலும் பெரியவர் பாட்டொன்றைப் பாடினார். ஊரின் எல்லையில் மிகப்பெரிய நந்தி. அதுதான் அந்த ஊருக்குள்  நுழைபவர்களை வரவேற்கிறது. அல்லது சென்று வருக என்று விடைகொடுக்கிறது. ஒரே கல்லில் வடிக்கப்பட்ட மாபெரும் சிற்பம்.

அன்று இரவு தங்கியிருந்த மண்டபத்தில் கோவிலில் பதிவு செய்த பாடல்களையெல்லாம் மற்றவர்களுக்குப் போட்டுக் காட்டினார் சின்னதுரை. ஆரம்பமே களைகட்டிவிட்டது. ஒரு நடுவயதுப் பெண்மணி தானாகவே முன்வந்து ஒரு பாட்டைப் பாடினார். அம்ருதவாணி பாடல்களின் தொடர்ச்சிபோல இருந்தது அது. அவரைச் சுற்றி அமர்ந்திருந்த நான்கு பெண்கள் தனித்தனியாகவும் சேர்ந்தும் மனப்பாடமாகவே பாடினார்கள். எல்லாக் குரல்களையும் பெட்டிக்குள் பதிவு செய்துகொண்டார் சின்னதுரை.

பயணம் முடிந்து திரும்பி சில நாட்களுக்குப் பிறகு சின்னதுரையைப் பார்க்கச் சென்றிருந்தபோது, அந்தப் பாடல்களை இருவருமே ஒலிக்கவிட்டுக் கேட்டோம். பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்போதே அவ்வரிகளுக்கு வியாக்கியானம் அளிப்பதுபோல தனக்குத் தெரிந்த பழைய கதைகளையெல்லாம் சின்னதுரை இணைத்துச் சொல்வார். அது எனக்கு மிகவும் பிடிக்கும்.

அவர் அடுத்தடுத்து வடக்கிலும் தெற்கிலுமாக பயணங்கள் மேற்கொண்டபடி இருந்தார். என்னால்தான் அவரோடு இணைந்துகொள்ள முடியவில்லை. ஆயினும் அவர் ஒவ்வொரு பயணத்தின் இறுதியிலும் கொண்டுவரும் பாடல் கேசெட்டுகளைக் கேட்க ஒருபோதும் மறந்ததில்லை. ஒவ்வொரு இரவையும் இனிமை நிறைந்ததாக மாற்றும் தன்மையுடையது அந்த அனுபவம்.

ஒருநாள் வேலையிலிருந்து நின்றுவிட்டதாகச் சொல்லி திகைக்கவைத்தார் சின்னதுரை. தன் கிராமத்துக்குத் திரும்பிப் போவதில் அவர் மிகவும் ஆவல் கொண்டிருந்தார். பேச்சுவாக்கில் காரணம் கேட்டேன். தன் அம்மாவின் இறுதிக்கணம் நிகழும் சமயத்தில் அவருக்கருகில் இருக்கவேண்டும் என்று அவர் விழைந்தார். அந்த விழைவில் தொனித்த நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிந்ததால் நான் அவரைத் தடுக்க முயற்சி செய்யவில்லை.

அவருடைய வீட்டுச் சாமான்களுக்கு இணையாக அவருடைய கேசெட் சேமிப்புகள் இருந்தன. ஆறேழு பெட்டிகளில் அவற்றை நிரப்பி வண்டியில் ஏற்றிக்கொண்டார்.  புறப்படும்போதுஉங்களிடமும் கொஞ்சம் இருக்கட்டும்என்று ஒரு கைப்பையில் சில கேசெட்டுகளைப் போட்டுக்கொடுத்தார். சிறிதுகாலம் வரைக்கும் ஓய்விருக்கும்போதெல்லாம் அந்தப் பையிலிருந்து ஒன்றிரண்டு கேசெட்டுகளை எடுத்து ஒலிக்கவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்தேன். நாளடைவில் அவை எப்படியோ வீட்டுப் பொருட்களோடு பொருளாகக் கலந்து ஏதோ ஓர் அட்டைப்பெட்டிக்குள் அடங்கிவிட்டன.

ஒருநாள் காலை நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பிவரும்போது ஒரு வீட்டிலிருந்து யாரோ மனமுருகப் பாடும் குரல் கேட்டது. ஒரே கணத்தில் மனம் பல புள்ளிகளைத் தொட்டுத்தொட்டு தாவ, எண்ணற்ற குரல்கள் நெஞ்சில் எழுவதை உணர்ந்தேன்.