Home

Thursday 28 May 2020

ஆயிரம் படிக்கட்டுகள் - கட்டுரை




1997 ஆம் ஆண்டில் கோபி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அவர் ஒருமுறை தம்மிடம் பயிலும் மாணவமாணவிகளை பெங்களூருக்கு அருகில் உள்ள நந்திமலை என்னும் சுற்றுலாத்தலத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பேச்சுத்துணைக்கு நானும் அவரோடு சேர்ந்துகொண்டேன். பெங்களூரிலிருந்து நந்திமலை வரைக்கும் அரசுப்பேருந்தில் பயணம். பிறகு மலையேற்றம். மலையுச்சியில் சுற்றிப் பார்த்துவிட்டு மாலையில் மீண்டும் இறங்கிவந்து பேருந்துபிடித்து ஊருக்குத் திரும்பிவிடலாம் என்பதுதான் திட்டம்.


நந்திமலையை அன்றுதான் முதலில் பார்த்தேன். தொலைவிலிருந்து பார்ப்பதற்கு ஒரு பெரிய காளை அமர்ந்திருப்பதைப்போன்ற தோற்றத்தோடு காணப்படுவதால்தான் அந்தக்குன்று அவ்வாறு அழைக்கப்பட்டது என ஒரு நம்பிக்கை உண்டு. அது முற்றிலும் உண்மை என்பதை குன்றைப் பார்த்த கணத்திலேயே உணர்ந்தேன். அதன் உச்சிப்பகுதியில் சற்றே பரந்துவிரிந்த சமவெளிப்பகுதி இருந்தது.

மரங்கள் சூழ்ந்த குன்றின்மீது நடந்துசெல்ல ஒரு சாலை வளைந்துவளைந்து போனது. உண்மையில் அது வாகனங்கள் ஏறிச் செல்வதற்காக போடப்பட்ட பாதை. பாதுகாப்பு கருதி பிள்ளைகளை ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நடக்கும்படி செய்துவிட்டு, அவர்களோடு நாங்களும் நடந்தோம். காற்று வீசியபடி இருந்தது. உயரம் கூடக்கூட குளிரும் கூடியது. அந்தக் குன்றின் மிகப்பெரிய கவர்ச்சியே அந்தக் குளிர்க்காற்றுதான்.

ஒரு திருப்பத்தில் ஏழெட்டு சப்போட்டா மரங்கள் காணப்பட்டன. மரத்தடியில் ஏராளமான பறவைகள். ஒருபுறம் மைனாக்கள். இன்னொரு புறம் வாலாட்டிக்குருவிகள். சற்றே தள்ளி மாமரங்கள் தெரிந்தன. அங்கும் பறவைகள் கீச்கீச்சென்று சத்தமெழுப்பியபடி இருந்தன.

எங்களைக் கடந்துசெல்லும் வாகனங்களிலிருந்து ஒருசிலர் சிறுவர்களை நோக்கிக் கையசைத்தபடி சென்றார்கள். அதனால் ஊக்கம் கொண்ட சிறுவர்கள் சத்தமெழுப்பியபடி துள்ளிக் குதித்தார்கள்.  சிரிப்பும் துள்ளலும் நடைக்களைப்புக்கு மருந்தாக அமைந்துவிட்டன. வாகனங்களின் பின்னால் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்களின் கூட்டுத்தொகை ஒற்றைப்படையா, இரட்டைப்படையா என பந்தயம் வைத்து விளையாடிக்கொண்டே நடந்தார்கள் சிறுவர்கள்.

உச்சியை நோக்கி நடக்க நடக்க காற்றில் படிந்திருந்த குளிர்த்தன்மை பெருகியது. யாரோ தீண்டுவதைப்போல ஒரு பரவசத்தை அளித்தது. அதை விரும்பாதவர்களே இருக்க முடியாது. குன்றின் உச்சியில் நிற்கும்போது ஒருகணம் மேகங்கள் சூழ நிற்கிறோமோ என்றொரு கற்பனை தானாகவே எழுந்தது.

சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு கோவில் இந்தக் குன்றில் உள்ளது. ஹைதர் அலியின் காலத்தில் கட்டியெழுப்பப்பட்டு, பிறகு திப்பு சுல்தானின் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட ஓய்வு மாளிகை வேறொரு திசையில் நின்றிருந்தது. உச்சிமலையில் அவர்கள் வெட்டிச் சீர்மைத்திருக்கும் குளம் அழகானதொரு அதிசயம். காற்று வீசும்போதெல்லாம் ஒரு புடவை நெளிந்து சுருள்வதைப்போல சுருண்டு புரளும் சிற்றலைகளின் அழகில் லயித்து நின்றிருப்பது பேரானந்தம். இம்மூன்றும் மூன்று தனித்தனி பகுதிகளில் அமைந்து பார்வையாளர்களை ஈர்த்தபடி இருந்தன.

இடையில் இருந்த பூங்காவில் அமர்ந்து சிறுவர்களோடு அமர்ந்து கட்டுசாதம் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வேடிக்கை பார்த்தபடி சுற்றினோம். ஏதோ ஒரு கல்லூரியின் பெயர் முதுகில் எழுதப்பட்ட சட்டையை அணிந்த இளம்பெண்கள் தனித்தனி கூட்டமாக அமர்ந்து கதை பேசியபடி  இருந்தார்கள். சுற்றியும் செறிவில்லாமல் சீரான இடைவெளியில் அமைந்திருந்த மரங்களிடையே நடப்பதும் ஓடுவதும் வசதியாக இருந்தது.

அழகும் தீராத வசீகரமும் நிறைந்த அந்தக் குன்றின் ஒரு விளிம்பு மிகப்பெரிய பள்ளம். யாரும் விளையாட்டாகக்கூட அங்கே நெருங்கிவிடக்கூடாது என்பதற்காக ஆளுயரச்சுவர் எழுப்பப்பட்டிருந்தது. பாறைகள் பதிக்கப்பட்ட சிறிய பாதையில் நடந்து அந்த நெடுஞ்சுவரைத் தொடவேண்டும். அங்கே ஒரு சிறிய இடைவெளி. திப்பு சுல்தான் ஆட்சி செய்த காலத்தில் மரணதண்டனைக்குரிய குற்றவாளிகளை அந்த இடைவெளி வழியாக கீழே உருட்டிவிட்டுக் கொன்றார்கள் என்று சொன்னார்கள். எச்சரிக்கையோடு விலகி நின்றபடி அந்த இடைவெளியில் எட்டிப் பார்த்தோம். பாறைகளும் முட்செடிகளும் அடர்ந்து கிடந்த அப்பள்ளத்தில் முட்டிமுட்டி மோதியபடி உருண்டோடும் ஒரு மனித உடலின் சித்திரம் கற்பனையில் விரிவதைத் தடுக்கமுடியவில்லை.

குளத்துக்கருகில் ஒரு மரத்தடியில் ஒரு பெரிய விரிப்பில்  பொம்மைக்கிளிகளை பரப்பிவைத்துக்கொண்டு விற்பனை செய்துகொண்டிருந்தார் ஒரு பெரியவர். எடுத்துப் பார்த்தேன். கைக்கு அடக்கமான பொம்மை. மெலிந்த மூங்கில் குச்சிகளை அழகழகாக வளைத்து பஞ்சைச் சுருட்டி நிரப்பி மெழுகி பச்சைவண்ணம் பூசப்பட்டவை. பிள்ளைகள் ஓடிச்சென்று சுற்றிநின்று வேடிக்கை பார்த்து ரசித்தன. ஒரு சிறுமி ஆசையில் ஒரு கிளியை எடுத்து உள்ளங்கையில் வைத்து ஊஞ்சலாட்டுவதுபோல அசைத்துக் காட்டி ரசித்தாள். கோபி தன் சொந்தச் செலவில் இருபது கிளிப்பொம்மைகளை வாங்கி ஆளுக்கொன்று கொடுத்தார்.

கோபி பிள்ளைகளிடம் ஒரு கட்டிடத்தைச் சுட்டிக்காட்டிஇதுதான் ஒருகாலத்தில் காந்தி வந்து தங்கி ஓய்வெடுத்த இடம்என்று சொன்னார். பிறகு என் பக்கமாகத் திரும்பிகாகா காலேல்கரோ, மகாதேவ தேசாயோ அதைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். காந்தி வந்திருந்த அதே சமயத்தில் தொடர்ச்சியான சிறைவாசத்தால் மனம்நொந்த நீலகண்ட பிரம்மச்சாரி என்னும் சுதந்திரப் போராட்டக்காரர் துறவு மேற்கொண்டு இந்தக் குன்றின் பின்பக்கமாக ஒதுங்கி வாழ்ந்தார்என்று சொல்லிக்கொண்டே ஒரு திசையைக் காட்டினார்.

காந்தியின் காலடிகள் பதிந்த இடம் என்னும் தகவலே மெய் சிலிர்க்கவைத்தது. அந்த அறையின் கதவுகளைத் திறந்துகொண்டு காந்தி எந்நிமிடமும் வெளிப்படக்கூடும் என நினைப்பதுபோல பிள்ளைகள் ஆர்வத்துடன் அந்தத் திசையிலேயே பார்வை பதித்து நின்றார்கள்.

நான்குமணி வாக்கில் நாங்கள் குன்றிலிருந்து இறங்கத் தொடங்கினோம். கோபி எனக்கு துறவியாக வந்து சேர்ந்த போராளியைப்பற்றிய செய்திகளைச் சொல்லிக்கொண்டே வந்தார். ஆறேழு சிறுவர்கள் நடைக்களைப்பு தோன்றாதபடி உற்சாகமான குரலில் மாறிமாறி பாடிக்கொண்டே வந்தார்கள். அடிவாரத்தில் கோபி அனைவருக்கும் கருப்பஞ்சாறு வாங்கிக்கொடுத்தார். அந்தத் தருணத்தில் அது அமுதமாக இருந்தது.

அந்த முதல் பயணத்திலேயே நந்திமலை என் விருப்பத்துக்குரிய இடமாக மாறிவிட்டது. அன்றுமுதல் எப்படியும் ஆண்டுக்கு ஒருமுறையாவது செல்வது வழக்கமாகிவிட்டது. சாலை வசதிகள் இப்போது எவ்வளவோ மேம்பட்டுவிட்டது. புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது. சிறிதும் பெரிதுமாக தங்குவதற்கான விடுதிகள் முளைத்துவிட்டன. முழுநிலா அன்று மலையுச்சியில் தங்கி வேடிக்கை பார்த்தபடி பொழுதைப் போக்குவது என்பது ஒரு முழு அனுபவம். இரவெல்லாம் நிலவையும் விண்மீன்களையும் பார்த்தபடியே உரையாடிக்கொண்டு பாதையில் நடக்கும்போது, நாமும் ஒரு விண்மீனாக மாறி அந்த வானத்தில் ஒட்டிக்கொள்ள மாட்டோமா என்று தோன்ற வைத்துவிடும். கோபி எனக்கு அறிமுகப்படுத்தியதுபோல, நந்திமலையைப்பற்றி என்னிடம் உரையாடும் பல நண்பர்களிடம் எடுத்துச் சொல்லி அழைத்துச் சென்றிருக்கிறேன்.

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகமான நண்பர் மகேஷ். மலையாள நண்பர். இரண்டு சக்கர வாகனத்திலேயே எப்போதும் சுற்றிக்கொண்டிருப்பவர். மலையேற்றத்தில் ஆர்வமுள்ளவர். மலையேறாத ஒரு ஞாயிறுகூட அவர் வாழ்க்கையில் இல்லை என்றே சொல்லவேண்டும். சிவகங்கை, பாபாபுதனகிரி, சிக்கமகளூர், சித்ரதுர்கா  என தேடித்தேடிச் சென்று மலையேறிக்கொண்டே இருப்பவர். அவரோடு சென்ற நந்திமலைப்பயணம் முற்றிலும் புதிய அனுபவம்.

வழக்கமாக ஒவ்வொருமுறையும் நடந்தோ, வாகனத்திலோ சென்ற பாதையில் மகேஷ் அழைத்துச் செல்லவில்லை. முற்றிலும் புதிய பாதை. மலையைச் சுற்றிக்கொண்டு, அடிவாரத்தில் உள்ள கிராமங்களையெல்லாம் கடந்து, எதிர்த்திசையில் சென்று, ஓம்கார சுவாமிகளின் மடத்தைக் கடந்து வண்டியை நிறுத்தினார். சரியாக மலையின் பின்புறம். அங்கிருந்து பார்க்கும்போது மலையுச்சி தெரிந்தது. அடர்த்தியான பசுமையான மரங்கள். அவற்றுக்கு நடுவில் வளைந்துவளைந்து செல்லும் படிக்கட்டுகள். அண்ணாந்து பார்த்தபோது நீண்டு வளைந்து தொங்கும் கொடிபோல இருந்தது அந்தப் படிகளின் தடம்.

எத்தனை படிக்கட்டுகள் இருக்கும் மகேஷ்?” என்று கேட்டேன். “ஏறத்தாழ ஆயிரம் படிக்கட்டுகள் இருக்கலாம்என்றார் அவர்.

ஒவ்வொரு படியாக ஏறி நடக்கத் தொடங்கினோம். மகேஷ் தன் சமீபத்திய நர்மதைப்பயணத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். அந்த இடத்தில் சந்திக்க நேர்ந்த வடநாட்டு நண்பரொருவர் வழியாக இந்தப் படிக்கட்டுப்பாதையைப்பற்றிய துப்பு கிடைத்தாகச் சொன்னார். யாருமே இல்லாத அந்தப் படிக்கட்டுச் சாலையில் நடக்கநடக்க என்னமோ நாங்களே அதைக் கண்டுபிடித்து நடப்பதுபோன்ற கற்பனையில் எங்கள் மனம் மிதந்தது. மகேஷ் அவ்வப்போது நின்று தன் கேமிராவைத் திறந்து மரங்களையும் கொடிகளையும் பறவைகளையும் படம் பிடித்தபடி வந்தார்.

எங்கள் மனம் அடைந்திருந்த உத்வேகத்தின் காரணமாக அன்றைய முழுநாளும் ஐந்துபத்து நிமிடங்களென கழிந்துவிட்டது. இறங்கிவர மனமில்லாமலேயே இறங்கினோம்.

அடிவாரத்தில் சாலையோரமாக ஏதோ கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் கூட்டமாக நின்றிருந்தார்கள். நாங்கள் அருகில் சென்று பார்த்தோம். உற்சவமூர்த்தியைச் சுமந்தபடி ஒரு வாகனம் முன்னே நிற்க, பின்னால் அரைவட்டத்தில் ஒரு களத்தை உருவாக்கி அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜாராணி ஒப்பனையில் இரு கலைஞர்கள் இரண்டடி உயரம் கொண்ட ஒரு கட்டையின் மீது நின்றபடி ஒருவரையொருவர் தொட்டு விளையாடுவதும் விலகி ஓடுவதுமாக நடித்துக்கொண்டிருக்க, மேளமும் தாளமும் அதன் உச்சக்கட்ட விசையில் ஒலித்தன. வேகவேகமாக தலையையும் உடலையும் மாறிமாறித் திருப்பி அசைத்து அவர்கள் செய்துகாட்டிய அசைவுகள் அற்புதமாக இருந்தன.

உயரமான கால்கள் என்பது  ஓர் எளிய குறியீடு மட்டுமே என்று தோன்றியது. உயர்வான ஒன்றோடு ஏதோ ஒருவகையில் நம்மை இணைத்துக்கொள்வதைத்தான் சற்றே கோமாளித்தனத்தோடும் நகைச்சுவையோடும் எடுத்துச் சொல்வதாக நினைத்துக்கொண்டேன்.