Home

Friday 15 May 2020

நாடு, இலட்சியவாதம், மாற்றம் - கட்டுரை




பள்ளிப்பருவத்தில் மனப்பாடச்செய்யுளாக இருந்தயாதும் ஊரே யாவரும் கேளிர்என்னும் புறநானூற்றுப்பாடலை எனக்கு மிகவும் பிடிக்கும். எதிலும் பற்று கொள்ளாத, ஆசை வைக்காத, அதனாலேயே எந்தத் துன்பத்திலும் அகப்பட்டுக்கொள்ளாத, அனைத்தையும் ஏற்றுக்கொள்கிற ஒரு வாழ்க்கையை அது முன்வைப்பதாக எங்கள் ஆசிரியர் அதற்குப் பொருள் சொன்னார். அவருடைய பேச்சுத்திறமையின் காரணமாகநீர்வழிப் படூஉம் புணைபோலஎன்னும் உவமை அன்றே மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஆற்றின் போக்கில் அசைந்துபோகும் தெப்பத்தைப்போல இயற்கையின் வழியில் வாழ்க்கை மனிதகுலத்தை அழைத்துச் செல்கிறது என அன்று அவர் வழங்கிய தத்துவ விளக்கத்தைக் கேட்டு மயங்கிவிட்டேன். பிறகு காலப்போக்கில் அந்த உவமையை நானே பல இடங்களில் அவரைப்போலவே எடுத்துரைக்கத் தொடங்கினேன்.

ஒருமுறை நர்மதை ஆற்றின் பள்ளத்தாக்குப் பகுதியில் படகுப்பயணம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. உயர்வான ஒரு புள்ளியிலிருந்து தாழ்வான இடத்தை நோக்கி இருபுறமும் ஓங்கிய மலைகளுக்கு நடுவில் சீறிக்கொண்டு ஓடியது நர்மதை நதி.  படகு மிதக்கத் தொடங்கிய கணத்திலிருந்தே அது ஆடத் தொடங்கிவிட்டது. ஒருபக்கம் ஆறு இழுக்கிறது. காற்றின் விசையோ இன்னொரு திசையில் தள்ளுகிறது. இடையிடையே கருத்த யானைகளென நிற்கும் பாறைகள். மோதிச் சிதறிவிடுமோ என அச்சம் கவ்விக்கொண்டது. ஆனால் படகோட்டி மிகவும் லாவகமாக வளைத்து வளைத்து எங்களை அழைத்துச் சென்றார். அந்தப் பயணம் கணியன் பூங்குன்றனார் பயன்படுத்திய உவமையின் முழுப்பொருளையும் உணர்த்திவிட்டது. ஆறு தன் போக்கில் தெப்பத்தை இழுத்துச் செல்லவில்லை. மாறாக, ஆற்றின் ஓட்டத்தில் மோதிக்கொண்டும் தடுமாறிக்கொண்டும் வளைந்தும் நெளிந்தும் செல்கிறது தெப்பம்.
தமிழ்நாடு காந்தி நினைவுநிதி அமைப்பின் தலைவராகவும் சர்வோதய சங்கத் தலைவராகவும் கிராம ராஜ்ஜியம் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றிய காந்தியத் தொண்டரான வீ.செல்வராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துமுடித்ததுமே நீர்வழிப்படூஉம் புணை உவமைதான் நினைவுக்கு வந்தது.  அவ்வளவு திருப்பங்களும் நெருக்கடிகளும் கொண்டதாக இருக்கிறது அவர் வாழ்க்கை.
கிராமத்தில் பள்ளிப்படிப்பு. மதுரையில் இன்டர்மீடியட் படிப்பு. திருநெல்வேலியில் பட்டப்படிப்பு. அனைத்தையும் வெற்றிகரமாக முடித்து அரசு போட்டித் தேர்விலும் வெற்றி பெற்று சாத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக வேலைக்குச் சேர்கிறார் செல்வராஜ். அரசு வேலைக்குச் சென்றுவிட்ட மகன் குடும்பச்சுமையை ஏற்றுக்கொள்ள துணையிருப்பான் என தந்தையும் மற்றவர்களும் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், அந்த வேலை பிடிக்காமல் எட்டே நாட்களில் உதறிவிட்டு வெளியேறிவிடுகிறார் செல்வராஜ். அது முதல் திருப்பம்.
வெறும் கையோடு வீட்டுக்குத் திரும்ப மனமின்றி, ராணுவத்துக்கு ஆளெடுக்கும் திருச்சி முகாமுக்குச் சென்று சேர்கிறார். அவருடைய ஆங்கிலப் புலமையின் காரணமாக இந்திய விமானப்படையில் அவருக்கு வேலை கிடைக்கிறது. பெங்களூரிலும் செகந்திராபாத்திலும் பயிற்சிக்காலத்தை முடித்து கராச்சிக்குச் சென்று பணியில் சேர்கிறார். நேதாஜி மரணமடைந்திருந்த நேரம் அது. விசாரணை மன்றத்துக்கு நன்கொடை திரட்டி ரகசியமாக அனுப்பிவைக்கிறார் செல்வராஜ். மேலும் ஜெஹிந்த் என்னும் பெயரில் தமிழில் ஒரு கையெழுத்துப்பத்திரிகையை நடத்துகிறார். இருபது மாத காலத்தில் பத்து இதழ்கள் வெளிவருகின்றன. விமானப்படை தலைமை அதிகாரிக்குத் தகவல் கிடைத்ததும் அவர் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார். சட்டப்படி அவருடைய செயல்பாடுகள் கடுமையான சிறைத்தண்டனைக்குரிய குற்றங்கள். ஆனால் அவருடைய நன்னடத்தையின் காரணமாக தண்டனை எதுவுமின்றி அக்கணமே பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு உடனடியாக வெளியேற்றப்படுகிறார். அது இரண்டாவது திருப்பம்.
தமிழ்நாட்டுக்குத் திரும்பிய நேரத்தில் அவருடைய பழைய அறைநண்பரான கனகராஜைச் சந்திக்க நேர்கிறது. கல்லூரிக்காலத்தில் அவர்கள் இணைந்து நடத்திய ஞானரதம் என்னும் கையெழுத்துப் பத்திரிகையைப்பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். அப்போது அங்கிருந்த கனகராஜின் தந்தையாரும் தமிழார்வலருமான ஞானபண்டிதன் செட்டியார் கையெழுத்துப் பத்திரிகையை அச்சுப்பத்திரிகையாக கொண்டுவர உதவுவதாகச் சொல்கிறார். சொந்தமாகவே  அச்சகமொன்றை நிறுவி அதன் வழியாக பத்திரிகையைக் கொண்டுவரலாம் என்று தெரிவிக்கிறார். அக்கனவுத்திட்டத்தைச் செயற்படுத்த செல்வராஜின் உதவியை நாடுகிறார். அதற்காகவே அவருடன் இலங்கைக்குச் செல்கிறார். ஆயினும் செட்டியார் தொடர்ச்சியாக பயணத்திலேயே இருப்பதால் அச்சகம் நிறுவும் செயல் தாமதமாகிறது.  அதற்கிடையில் மலையகத்தமிழர்களை இலங்கைத்தமிழர்கள் நடத்தும் விதத்தையும் இலங்கைத்தமிழர்களை சிங்களர்கள் நடத்தும் விதத்தையும் கண்டு ஆழ்ந்த மனவேதனைக்கு ஆளாகிறார் செல்வராஜ். தற்செயலாக வந்து சேர்ந்த அப்பாவின் தந்தியைக் காரணமாக் காட்டிவிட்டு ஊருக்கே திரும்பி வந்துவிடுகிறார். அது மூன்றாவது திருப்பம்.
ஊரில் தங்கியிருந்த சமயத்தில் நடைபெற்ற திருவிழாவில் உயிர்ப்பலி கொடுப்பதைத் தடுக்க முயற்சி செய்கிறார் செல்வராஜ். அதற்கு வெற்றியும் கிடைக்கிறது. ஆனால் அவருடைய அப்பா கோவில் தலைமைப்பூசாரி என்பதால் தன் மகனே எதிர்ப்பியக்கத்தில் இருப்பது அவருக்கு ஒருவிதத்தில் இக்கட்டை ஏற்படுத்துகிறது. ஆயினும் அவர் மகனைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் மகனோ தன்னால்தானே தன் தந்தைக்கு தலைக்குனிவு என்று வருந்துகிறார். குடும்பத்திலும் உறவுவட்டத்திலும் கசப்பு வளர்கிறது. அதிலிருந்து அவரை மீட்டெடுக்கும் விதமாக, அதே கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடசாமிப் பாவலர் என்பவர் திருப்பத்தூர் கிறித்துகுல ஆசிரமத்துக்குச் சென்று சேர்ந்துகொள்ளும்படி ஓர் அறிமுகக் கடிதம் கொடுத்து அனுப்பிவைக்கிறார். அது நான்காவது திருப்பம்.
திருப்பத்தூர் கிறித்துகுல ஆசிரமம் கிராம மக்களிடையே மருத்துவப்பணிகளைச் செய்து வரும் ஆசிரமம். அங்கு மதமாற்றத்துக்கோ ஞானஸ்நானத்துக்கோ இடமில்லை. கர்நாடக இசையில் கிறித்துவைப் போற்றும் பிரார்த்தனைப் பாடல்களும் தேவாரமும் திருவாசகமும் இணைந்து ஒலிக்கும் இடம். அங்கு நடைபெற்று வந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் செல்வராஜ். ஏறத்தாழ மூன்றாண்டுக்காலம் அவருடைய சேவை அந்த ஆசிரமத்தில் நீடிக்கிறது.  அதே சமயத்தில்தான் முனிசாமி என்னும் இலக்கிய அன்பரோடு இணைந்து சிலம்பு என்னும் பெயரில் ஒரு பத்திரிகையைத் தொடங்கி நடத்துகிறார். இந்தியாவுக்கு விடுதலை கிடைத்ததும் காந்தியடிகள் துப்பாக்கிக்குண்டுக்கு இரையாகி மறைந்ததும் இந்தக் காலகட்டத்தின் முக்கியமான நிகழ்ச்சிகள். ஆசிரம விதிகளின்படி அங்கு சேர்ந்த மூன்றாண்டு காலத்துக்குள் பிரம்மச்சரிய விரதம் ஏற்றுக்கொள்கிறவர்களே அங்கு தொடர்ந்து தங்கியிருக்கமுடியும். செல்வராஜ் அந்த வாக்குறுதியை அளிக்கத் தயக்கமாக இருக்கிறது. அச்சமயத்தில் மதுரையை அடுத்த காந்திகிராமத்தில் கிராம நிர்மாண ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கும் விதமாக ஊழியரகம் உருவாக்கப்பட்டது. அதற்குப் பொறுப்பேற்றிருந்த கெய்த்தான் காந்திகிராம ஆசிரமத்துக்கு வந்து சேரும்படி செல்வராஜுக்கு அழைப்பு விடுக்கிறார். செல்வராஜ் அதை ஏற்றுக்கொண்டு திருப்பத்தூரிலிருந்து புறப்படுகிறார். அது ஐந்தாவது திருப்பம்.
காந்திகிராம ஊழியரகம் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு பயிற்சி நிலையமாக இருக்குமென்ற எண்ணமே திருப்பத்தூரிலிருந்து புறப்படும் நேரத்தில் செல்வராஜின் மனத்தில் இருக்கிறது. ஆனால் காந்திகிராமத்துக்கு வந்த பிறகே ஊழியரகத்துக்குத் தேவையான  கட்டடப்பணிகள் நடைபெறுவதைப் பார்க்கிறார். அதை மேற்பார்வை செய்யும் வேலையை தன் நண்பரான குருசாமியோடு பகிர்ந்துகொள்கிறார். இது ஆறாவது திருப்பம். ஒருநாள் செல்வராஜை நா..ரா.சுப்பராமனிடம் அறிமுகப்படுத்துகிறார் ஜெகந்நாதன். அவர் இந்தியத் தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் சார்பாக மதுரையில்  தொடங்கவிருந்த கிளைக்கு உதவும் பொருட்டு ஜி.ராமானுஜத்திடம் அனுப்பிவைக்கிறார். பகலில் தொழிற்சங்க வேலையையும் இரவில் ஜெகந்நாதன் நடத்தி வந்த மாணவர் சேவா நிலையத்தின் வேலையையும் கவனித்துக்கொள்கிறார். தொழிற்சங்கம் சார்பாக உழவும் தொழிலும் என்னும் பெயரில் ஒரு பத்திரிகையைத் தொடங்கியபோது, அதன் பொறுப்பை மகிழ்ச்சியோடு ஏற்று செயல்படுகிறார். தொழிற்சங்க வேலைகள் அவரை சென்னையை நோக்கி அழைத்துச் செல்கிறது. அங்கும் சிரித்த முகத்தோடு சென்று பணியாற்றுகிறார். ஏறத்தாழ இரண்டாண்டு காலம் உருண்டோடி விடுகிறது. காந்திகிராம ஊழியரகத்தில் கட்டட வேலைகள் முற்றுப் பெற்றுவிட்டதும் கெய்த்தான் மீண்டும் அவரை காந்திகிராமுக்கு அழைத்துக்கொள்கிறார். இது ஏழாவது திருப்பம்.
மூன்றாண்டு காலம் கிராம நிர்மாணப்பணிகளில் தொடர்ந்து இயங்குகிறார் செல்வராஜ். 1951 ஆம் ஆண்டில் செளந்திரம் அம்மாள் தன்னுடைய மகளாக வளர்த்த ஒரு பெண்ணை அவருக்குத் திருமணம் செய்துவைக்கிறார். 1952இல் ஆசிரியர் பயிற்சிப்படிப்பைப் படிப்பதற்காக தன் செலவில் சென்னைக்கு அனுப்பிவைக்கிறார். முப்பது வயதைக் கடந்துவிட்டவர் என்பதால் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி நிலையம் அவருக்கு இடமளிக்க மறுத்துவிடுகிறது. அங்கிருந்த கெய்த்தான் உதவியால் சென்னையிலேயே இருந்த கிறிஸ்டபர் மெஸ்டன் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் இடம் கிடைக்கிறது. கல்லூரிக்கட்டணத்தையும் விடுதிக்கட்டணத்தையும் செளந்திரம் அம்மாள் செலுத்திவிடுகிறார். மாலை நேரங்களில் வீடு தேடிச் சென்று குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தந்து, அதன் வழியாகக் கிடைக்கும் சிறுதொகையை தன் சொந்தச் செலவுக்கு வைத்துக்கொள்கிறார். 1953ஆம் ஆண்டில் பட்டம் பெற்ற பிறகே சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார். தேவாங்கர் உயர்நிலைப்பள்ளியில் அவருக்கு ஆசிரியர் வேலை கிடைக்கிறது. உடனே அங்கு சென்று சேர்ந்து பணியாற்றத் தொடங்குகிறார். இது எட்டாவது திருப்பம்.
நெஞ்சில் கருணையும் நேர்மையும் சேவையுணர்வும் எழுத்தார்வமும் கொண்டிருந்த செல்வராஜின் வாழ்க்கை இப்படி எண்ணற்ற திருப்பங்களைக் கடந்து தெப்பமென போய்க்கொண்டே இருக்கிறது. இன்று யோசிக்கும்போது இவையனைத்தும் ஏதோ ஒரு நாவலில் நிகழும் திருப்பங்களைப்போலக் காணப்படுகிறது. குழந்தைப்பருவம் முதல் கல்லூரிப்பருவம் வரைக்கும் படிப்பு படிப்பு என ஒருமுனைப்படுத்தப்பட்ட கவனத்துடன் செயல்பட்டு பெறும் ஒரு பட்டம், உடனடியாக அத்தகுதிக்குப் பொருத்தமான ஒரு வேலை, படிப்புக்கும் வேலைக்கும் வசதிக்கும் பொருத்தமான ஒரு பெண்ணோடு திருமணம், குழந்தைப்பேறு, பிறகு அக்குழந்தையை தன்னைப்போலவே ஒருமுனைப்படுத்தப்பட்ட கவனத்தோடு வளர்த்தெடுக்கும் முயற்சி என இயங்கும் இன்றைய உலகியலில் புழங்கும் கண்களுக்கு இதைப் புரிந்துகொள்வதில் சற்றே குழப்பம் ஏற்படலாம். ஆனால் அன்று அது மிக இயல்பான ஒன்றாகவே கருதப்பட்டது. இதன் பின்னணியில் உள்ள இலட்சியவாதத்தையும்  மன உறுதியையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.
அன்றைய தலைமுறையினரின் இலட்சியவாதத்துக்குப் பின்னணியாக இருந்த விசை காந்தியடிகள். சாதிகளையும் மதங்களையும் கடந்து ஒருவரை ஒருவர் நெருங்கிவர வைத்ததும் சேவை என்பதை தன் தலையாய கடமையாக ஒருவரை நினைக்கவைத்ததும் அவரே. காந்தியடிகளின் ஒரு சொல்லுக்குக் கட்டுப்பட்டு தன் வாழ்நாள் முழுதும் அவர் சுட்டிக்காட்டிய திசையில் ஓய்வின்றியும் துன்பத்தைப் பொருட்படுத்தாமலும் செயலாற்றியவர்கள் பலர். அவரை நேரில் பார்க்காதவர்கள் கூட, அவருடைய எழுத்தை உள்வாங்கி, அவர் சொல்லையே தன் வாழ்நாள் கடமையாக நினைத்து, அவர் சுட்டிக் காட்டிய பாதையில் நடக்கத் தொடங்கினர். அத்தகையக ஆளுமைகளில் ஒருவர் செல்வராஜ்.
அவர் 1921ஆம் ஆண்டில் அருப்புக்கோட்டை வட்டத்தில் புதுப்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தார். அவருடைய தந்தை வீரமாகாளி பண்டாரம் வடக்கு வாய்ச்செல்வி அம்மன் கோவில் பூசாரி. ஊருக்குஉழைக்க கோவில்பணி, வீட்டுக்கு உழைக்க விவசாயப்பணிஎன்று வாழ்ந்தவர். அவருடைய தாயார் இருளாயி. அவருக்கு பத்துப் பிள்ளைகள். அவர்களில் மூத்தமகனே செல்வராஜ். முதல் மனைவிக்குப் பிறந்த நான்கு பிள்ளைகளோடு மொத்தம் பதினான்கு பிள்ளைகள் இருந்தார்கள். ஒத்த கருத்துடையவர்கள் சேர்ந்து உரையாடும் இடமாக புதுப்பட்டியில் ஒரு தென்னந்தோப்பில் 1939இல் ஒரு குடில் கட்டியெழுப்பப்பட்டது. அதுவே சக்தி குடில். பின்னர் காந்திய நிர்மாணப் பணிகளுக்குரிய மையமாகவும் விளங்கியது. செல்வராஜ், குருசாமி, பழனிச்சாமி, பாலகிருஷ்ணன், சந்தானம், வேங்கடசாமிப்பாவலர் ஆகியோர் அனைவரும் அங்கு உருவானவர்களே. இவர்களுடைய சிந்தனைகளுக்குக் களமமைத்துக் கொடுத்தது, செல்வராஜின் பொறுப்பில் உருவான சக்தி விஜயம் என்னும் கையெழுத்துப்பத்திரிகை.
 செல்வராஜ் தன் சுயசரிதைக்கு சக்தி குடில் என்றே பெயரிட்டுள்ளார். அதில் மூன்று பெண்மணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனித்தனி அத்தியாயங்களை எழுதியிருக்கிறார். ஒருவர் அவருடைய தாயார் இருளாயி அம்மாள். இன்னொருவர் அவருடைய இல்லத்தரசி  அமுதவல்லி. மற்றொருவர் அவரால் தெய்வத்தாய் என அழைக்கப்படுகிற செளந்திரம் அம்மாள்.  மூன்று பகுதிகளுமே இந்தச் சுயசரிதையின் முக்கியமான பகுதிகள்.
அமுதவல்லியின் வாழ்க்கை ஒரு காவியத்துக்கு இணையானது என்றே சொல்லவேண்டும். சின்ன காஞ்சிபுரத்தில் பார்த்தசாரதி ஐயங்காருக்கும் காந்தாமணி அம்மையாருக்கும் மகளாகப் பிறந்தவர் அமுதவல்லி. குழந்தையை ஈன்ற சில மாதங்களிலேயே காந்தாமணி அம்மையார் இறந்துவிட, சென்னை அடையாறில் அப்போது இயங்கிவந்த ஒளவை ஆசிரமம் என்னும் குழந்தைகள் விடுதியில் ஒப்படைக்கும் பார்த்தசாரதி மனம் வெறுத்து ராணுவவேலையில் சேர்ந்து ஊரைவிட்டே சென்றுவிடுகிறார். சமூக சேவகியான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் நடத்தி வந்த ஆசிரமம் அது. ஆண்டுவிடுப்பில் தமிழகத்துக்கு வரும்போது ஒருமுறை ஆசிரமத்துக்கு வந்து குழந்தையைப் பார்த்துவிட்டுச் செல்வதோடு நிறுத்திக்கொள்கிறார் பார்த்தசாரதி. குழந்தை ஆசிரமத்தின் பராமரிப்பில் நன்கு வளர்ந்து பெரியவளாகிறது. ஆசிரமப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படிக்கும் வசதி இருந்ததால் அதுவரையில் அவள் படித்துமுடிக்கிறாள்.
கஸ்தூர்பா மறைவுக்குப் பிறகு சென்னைக்கு வந்த காந்தியடிகள் பார்த்த இடங்களில் ஒன்று ஒளவை ஆசிரமம். அப்போது காந்தியடிகள் முன்னிலையில் மூன்று சிறுமிகள் சேர்ந்து பாட்டு பாடுகிறார்கள். அவர்களில் ஒருவர் அமுதவல்லி. கஸ்தூர்பாவைப்பற்றிய பாட்டு அது. அதைக் கேட்டு நெகிழ்ந்துவிடுகிறார் காந்தியடிகள். அமுதவல்லியையும் மற்ற சிறுமிகளையும் அருகில் அழைத்த காந்தியடிகள் முதுகில் தட்டிக்கொடுத்து ஆசி வழங்கி எலுமிச்சைச்சாறு நிரம்பிய தம்ளர்களை எடுத்துக்கொடுத்து அருந்தச் சொல்கிறார்.
அப்போது மருத்துவப்படிப்பில் பட்டம் பெற்ற செளந்திரம் அம்மாள் சமூகசேவைப்பயிற்சி பெறுவதற்காக முத்துலட்சுமி ரெட்டியிடம் வந்து சேர்கிறார். அங்கேயே தங்கி இலவச மருத்துவ சேவையையும் ஆற்றுகிறார். கஸ்தூர்பா காந்தி நினைவு நிதியின் தமிழ்நாட்டுக்கிளைக்குப் பொறுப்பாளராக கடமையாற்றும் பணியையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். அதனால் காந்திகிராமம் நிறுவும் நோக்கில் மதுரைக்கு அவசரமாகத் திரும்புகிறார். அப்போது ஒளவை ஆசிரமத்தில் உள்ள சில பெண்களையும் தம்மோடு அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறார். அப்போது அவர்களில் ஒருவராக அமுதவல்லியும் வந்து சேர்கிறார். வசதிகள் எதுவுமற்ற கிராமச்சூழலோடு ஒன்றிப் போகமுடியாமல் மற்ற பெண்கள் அனைவரும் ஓளவை ஆசிரமத்துக்கே திரும்பிவிட, அமுதவல்லி மட்டும் செளந்திரம் அம்மையாருடனேயே தங்கிவிடுகிறார். அங்கிருந்த சேவிகாசிரமத்திலேயே பூர்வாதார ஆசிரியர் பயிற்சியை முடிக்கிறார் அமுதவல்லி.
ஒருநாள் சந்திப்பில் செல்வராஜிடம் அமுதவல்லியைப்பற்றி எடுத்துச்சொல்லிஅவளை மணந்துகொள்வாயா?” என்று கேட்கிறார். செல்வராஜுக்கு அமுதவல்லியையும் அமுதவல்லிக்கு செல்வராஜையும் பிடித்துவிடுகிறது. பெற்றோரின் சம்மதத்தைப் பெற்று வரும்படி செல்வராஜை கிராமத்துக்கு அனுப்பிவைக்கிறார். சாதிவேறுபாடுகளைப் பொருட்படுத்தாத அவருடைய பெற்றோர்கள் செளந்திரம் அம்மாள் ஏற்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தனர். திருமணம் பற்றிய செய்தியை அமுதவல்லியின் அப்பாவுக்கும் முறைப்படி தெரிவித்தார் செளந்திரம் அம்மாள். அவர் உடனே காந்திகிராமத்துக்கு விரைந்து வந்து திருமணத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார். கலப்புமணத்தை அவர் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. செளந்திரம் அம்மாள்அமுதவல்லியின் சம்மதத்தின் பேரிலேயே இத்திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் அவளையே கேட்டுக்கொள்ளலாம்என்று தெரிவித்தார். அமுதவல்லியோ தன் அப்பாவிடம் நேரிடையாகவேஅம்மாவின் விருப்பமே என் விருப்பம்என்று சொல்லிவிட, அவர் வேறு வழியில்லாமல் திரும்ப நேர்ந்தது. 09.12.1951 அன்று காந்திகிராம சமுதாயம் சார்ந்த அனைவரும் சர்வ சமயப் பிரார்த்தனை நிகழ்த்த, கெய்த்தான், ஜெகந்நாதன், செளந்திரம் அம்மாள் முன்னிலையில் மணமக்களுக்கு திருமணம் நிகழ்ந்தது.
எழுத்தே தன் வழி என்பதை இளமையிலேயே கண்டுகொண்டவர் செல்வராஜ். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும்போதே கிராமராஜ்ஜியம் இதழுக்கு ஆசிரியராகவும் அவர் பணியாற்றினார். ஏராளமான கட்டுரைகளையும் கதைகளையும் அதில் எழுதி வெளியிட்டார். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதினார். சக்தி குடில் என்னும் அவருடைய தன்வரலாற்றுநூல் 55 அத்தியாயங்களைக் கொண்டது. அந்த அத்தியாயங்களின் வைப்புமுறையும் நிகழ்ச்சிகளை விவரிக்கும் கச்சிதமான பாங்கும் அவருடைய எழுத்தாளுமைக்குச் சான்றுகள்.
318 பக்கங்களைக் கொண்ட சக்தி குடில் தன்வரலாற்றுநூலில் இந்தியத் தொழிற்சங்கம் உருவான வரலாறு, காந்திகிராமம் உருவான வரலாறு, ஒளவை ஆசிரமம்,  மீனாட்சி இல்லம் போன்றவை உருவான வரலாறு, பாண்டியராஜபுரம் கரும்பு சத்தியாகிரகம் என பல வரலாற்றுத்தகவல்கள் ஊடுபாவாக உள்ளன. வரலாற்றை புறவயமாக ஒரு செய்தியாக நாம் அறிவதற்கும் அதை உருவாக்குகிறவர்களின் வழியாகவே அதை அறிவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. வரலாற்றோடு தொடர்புடையவர்களின் உயிரோட்டமான சித்தரிப்பில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நம் நெஞ்சில் ஆழமாக இடம்பிடித்துவிடுகிறது. கெய்த்தான், ஜெகந்நாதன், சுப்பராமன், சபரிநாதன், பேட்டன், அருணாசலம், முத்துலட்சுமி ரெட்டி, செளந்திரம் அம்மாள் போன்ற ஆளுமைகளிடையே தொடக்கத்தில் ஓர் இளைஞனாக அர்ப்பணிப்புணர்வுடன் செயல்படத் தொடங்கும் செல்வராஜை மிகச்சிறந்த ஆளுமையாக மெல்லமெல்ல செதுக்குகிறது காலம். காந்திகிராமம் உருவாகத் தொடங்கும் ஒரு கட்டத்தில் அதற்குரிய ஊழியரகக் கட்டடப்பணிகளை மேற்பார்வை பார்ப்பவராகப் பணியாறுகிறார், இளமைத்துடிப்புள்ள செல்வராஜ். அவர் முதுமையைத் தொடும்போது, அதே காந்திகிராமப் பல்கலைக்கழகம் அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டமளித்துச் சிறப்பிக்கிறது.
தன் வாழ்க்கையையே தொண்டுக்காக அர்ப்பணித்துக்கொண்ட தியாகிகளின் வாழ்க்கைவரலாறுகளைப் படிக்கும்போதெல்லாம் மனம் விம்முகிறது. எப்படிப்பட்ட பெரியவர்களெல்லாம் நமக்காக ஓய்வின்றி உழைத்தபடி இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அத்தகையோரின் தியாகத்தால் உருவான மாற்றங்களையே இன்று நாம் காண்கிறோம். நம் நாட்டின் இலட்சியவாதத்தின் மைய விசையாகச் செயல்பட்ட காந்தியடிகள் கொல்லப்பட்டு எழுபத்திரண்டாண்டுகள் கடந்துவிட்டன. அவரால் செயலூக்கம் பெற்று வளர்ந்த ஆளுமைகளான கெய்த்தான், ஜெகந்நாதன், சுப்பராமன், செளந்திரம் அம்மாள் என ஒவ்வொருவராக நம்மைவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். சக்தி குடில் எழுதிய செல்வராஜும் இன்று நம்மிடையே இல்லை. இன்னும் வரவேண்டிய மாற்றங்கள் ஏராளமாக உள்ளன. நம் நாட்டில் இலட்சியவாதிகள் முற்றிலும் இல்லாமல் போகவில்லை என்பதும் தமக்குரிய வட்டத்தில் தம்மால் இயன்ற அளவுக்கு செயல்பட்டபடி இருக்கிறார்கள் என்பதும் மட்டுமே இன்றுள்ள ஒரே ஆறுதல்.

(சக்தி குடில்ஒரு காந்தியத்தொண்டரின் வாழ்க்கை வரலாறு. காந்திய இலக்கியச்சங்கம், தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, மதுரை -20 )


(சர்வோதயம் மலர்கிறது - மே 2020 இதழில் வெளிவந்த கட்டுரை )