சூரியன் மறைந்து சரியத் தொடங்கிய வேளையில் காலணிகள் அழுத்தமாகப் பதிந்து
நெருங்கி வரும் ஓசை கேட்டது. தலையைத் திருப்பி ஓசை வந்த திசையில் பார்க்க
முயன்றான் துரியோதனன். பிடறி நரம்புகள் முறுக்கிக் கொண்டதில் வலி தாளாமல் உதட்டைக்
கடித்தான். அதற்குள் நெருங்கி வந்துவிட்ட அஸ்வத்தாமன் அவன் தோள்களைப் பற்றினான்.
வலியில் சரிந்த துரியோதனனின் கண்களைச் சில கணங்களுக்கு மேல் பார்க்க இயலாமல்
பதற்றத்துடன் “துரியோதனா”
என்றபடி தரையில்
உட்கார்ந்தான். புன்னகையுடன் “நீ
பிழைத்திருக்கிறாயா அஸ்வத்தாமா?” என்று கேட்டான்
துரியோதனன்.
அதற்குள் அவன் நெஞ்சு உலர்ந்துவிட்டது. ஈரத்தைத் திரட்ட நெஞ்சுக் குழி ஏறி
இறங்கித் துடித்தது. தலை முழுக்கவும் வெப்பம் பரவிக் கொதித்தது. கண்கள் எரிந்தன.
பிளந்த தொடைகளின் அருகில் ரத்தம் சேறாகத் தேங்கியிருந்தது. பிதுங்கிய சதைத்
திரட்சியில் உடைந்த எலும்பு நுனிகளில் ரத்தம் சொட்டியபடி இருந்தது-. அதன் நெடி மூச்சை
அடைத்துக் குமட்டியது. தொடைகளுக்கு மேல் இடுப்பிலும் முதுகிலும் வலி பெருகியது.
உடலின் மற்ற ஒவ்வொரு பாகத்திலும் அந்த வலி எதிரொலித்தது. தொடைகளை அசைத்துப்
பார்த்தான் துரியோதனன். நரம்புகள் அதிரத் தொடங்கின. உடைந்த எலும்புகளுக்குக் கீழே
உள்ள பகுதி அவன் இச்சைக்குக் கீழ்ப்படிய மறுத்தது. கைகளை ஊன்றி இடுப்பை அசைத்துப்
பின் பக்கமாக நகாந்தான். தொடையின் கீழுள்ள பகுதிகள் கட்டி இழுத்துச் செல்லப்படும்
உடைபட்ட தேரின் இழுபட்டன. நெற்றி வரை வலி ஏறியது. ஒரு பெரிய மிருகம் ஏறிப்
படுத்ததுபோல வலி உடலை அழுத்தியது. வானத்தைப் பார்க்கப்பார்க்கத் தன் வலியே வானம்
போல விரிந்திருப்பதாகத் தோன்றியது. வேகவேகமாக நெஞ்சு எரிந்து ஆவியாவதுபோல
இருந்தது. கண்கள் தாமாக மூடிக்கொண்டன. அவன் கன்னம் துடிப்பது தெரிந்தது.
“வலி பொறுக்க முடியவில்லையா துரியோதனா-” என்று தாழ்ந்த குரலில் கேட்டான் அஸ்வத்தாமன்.
வலியை ஒரு ஆபரணம் போலக் கழற்றிக் கொடுத்தால் வாங்கிக்கொள்ளத் தயாராக இருப்பதுபோல
ஒலித்தது அவன் குரல்.
கண்களை ஒரு முறை மூடித் தலையை அசைத்தான் துரியோதனன். “ரத்தச் சேற்றில் உன்னைப் பார்க்கப் பொறுக்கவில்லை
துரியோதனா. தோல்வி உன்னைத் தீண்டக் கூடாது என்று உள்ளூர விரும்புகிறவன் நான்.
இதற்குப் பழிவாங்கத் துடிக்கிறது என் மனம். அந்தத் தந்திரக்காரப் பீமனை நான் விடப்
போவதில்லை” அஸ்வத்தாமன்
குமுறினான்.
“தந்திரக்காரப் பீமனா? அவன் சாப்பாட்டு
தடியன் அஸ்வத்தாமா. தந்திரத்தைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும்?” அந்த வலியிலும் கசப்புடன் சிரித்தான்
துரியோதனன்.
“உன் தொடைகள்...-?”
“அந்தக் கிருஷ்ணன் சொன்னான். இவன் செய்தான் அவ்வளவுதான்” துரியோதனனுக்கு மூச்சு வாங்கியது.
அஸ்வத்தாமன் பேச்சற்று நின்றிருந்தான்.
“இது தோல்வியல்ல அஸ்வத்தாமா. இது வெற்றி. இதுதான் நிஜமான வெற்றி தெரியுமா?
இந்த வலியிலும் என்
வெற்றியை அனுபவித்தபடி உள்ளேன். இந்த சாம்ராஜ்யம் எப்போதும் கௌரவர்களின்
சாம்ராஜ்யம்தான் புரிகிறதா?”
சற்று நேரம் கண்களை மூடித் திறந்தான் துரியோதனன். வானில் ஒரு பறவை
தன்னந்தனியாக உச்சியை நோக்கிப் பறப்பதைக் கண்டான். எங்கும் நீல வெளி, துண்டுத் துண்டான மேகங்கள். வானில் ஆழ்ந்த
தனிமை. தன்னந்தனியே சுழன்று நீந்தியது அந்தப் பறவை. அவன் மனம் சட்டெனப் பரவசத்தில்
ஆழ்ந்தது. ஒரு கணம் பெரிய நிம்மதியில் மனம் திளைத்து மீண்டது. ஏதோ எண்ணத்தில்
எழுந்திருக்க முயன்றான். முறிந்த வாழைத்தண்டுகள்போல தொடைக்குக் கீழே கால்கள்
தொங்கின.
“வெற்றி என்பது
என்ன தெரியுமா அஸ்வத்தாமா-” துரியோதனனின்
குரல் ஒருவித வேகத்ததுடன் எழுந்தது. பற்களைக் கடித்து வலியை விழுங்கினான். கேள்வியின்
அர்த்தம் புரியாமல் குழப்பத்துடன் துரியோதனனை ஏறிட்டுப் பார்த்தான் அஸ்வத்தாமன்.
உட்கார்ந்து அவனை மார்போடு சாய்த்துக் கொண்டான். ரத்தக் குழம்பின் அருகாமை
அருவருப்பூட்டியது.-
“என் தொடையை உடைத்தது வெற்றியல்ல அஸ்வத்தாமா? என் தொடை என்பது மட்டும் நான் அல்ல. என்
உயிரும் ஒருவகையில் நானல்ல. நான் என்பது என் கனவு. என் எண்ணம். என் வேட்கை. என்
அகங்காரம். இதில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட பீமனும் சரி, கிருஷ்ணனும் சரி அசைத்துப் பார்க்க
முடியவில்லை. பிறகு எப்படி வெற்றி அவர்களுடையதாகும்-?
துரியோதனனின் குரலில் திடுமென உறுதி ஏறியது. பீமனும் சரி, கிருஷ்ணனும் சரி அசைத்துப் பார்க்கமுடியவில்லை.
பிறகு எப்படி வெற்றி அவர்களுடையாதாகும்?
துரியோதனனின் குரலில் திடுமென உறுதி ஏறியது.
“நம் அணியில் பெரியவர் பீஷ்மர் முதல் கர்ணன், துச்சாதனன் வரை எல்லாரும் மரணமடைந்துவிட்டார்கள்
துரியோதனா” நிதானமான குரலில்
சொன்னான் அஸ்வத்தாமன்.
துரியோதனன் மறுபடியும் பதற்றமடைந்தான்.
“எல்லாமே உடல் மரணங்கள் அஸ்வத்தாமா? நான் பேசுவது எண்ணங்கள்பற்றி. கனவுகள்பற்றி. சமரசமற்றுப் பேராடிய துரோணர்
முதல் கர்ணன் வரையிலான வீரர்களின் எண்ணங்கள்பற்றி. அவற்றில் ஒன்றையேனும் வீழ்த்த
முடிந்ததா அவர்களால்? இந்த எண்ணங்கள்
சூட்சும வடிவிலாவது இந்த மண்ணில் உலவும். அவை இருக்கும் வரை இது கௌரவ சாம்ராஜ்யம
தான். சந்தனு முதல் துரியோதனன் வரை ஆண்ட கௌரவ சாம்ராஜ்யம்” அவன் உடம்பு நெருப்புப்போல கொதித்தது. எதுவும்
புரியாத அஸ்வத்தாமன் “இப்போது உனககு அமைதி
தேவை துரியோதனா” என்றான். அதைக்
காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை துரியோதனன். மீண்டும் வானில் அண்ணாந்து
சுற்றிச்சுற்றிப் பறக்கும் அந்த பறவையைப் பார்த்தான்.
“நாளையே என் எண்ணங்களால் -தூண்டப்படுகிற ஒரு வீரன் தனித்த படையொன்றைத் திரட்டி
அந்த ஐந்து பேரின் உயிரையும் பறித்துவிட்டால் சிம்மாசனம் மீட்கப்படும் இல்லையா?”
அஸ்வத்தாமன் மிகவும் சிரமத்துடன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு “ஆமாம்” என்றான். அப்படிச் சொல்வதைத் தவிர அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.
“அப்படி ஒரு வாய்ப்பு இருக்கும் வரை வெற்றியை நாம் இழந்ததாக ஏன் எண்ண வேண்டும்?”
அஸ்வத்தாமன் பதில் ஏதும் சொல்லாமல் துரியோதனனைப் பார்த்தபடி இருந்தான்.
“இன்று தரை மீது நான் கிடக்கலாம் அஸ்வத்தாமா. ஆனால் என் எண்ணங்களால் நான்
எப்போதும் கௌரவ சாம்ராஜ்யத்தின் பேரரசன்தான். புரிகிறதா?” அழுத்தமாகக் கேட்டான் துரியோதனன்.
“புரிகிறது துரியோதனா. இப்போது ஏன் அந்தப் பேச்செல்லாம்? உனக்கு தற்சமயம் அமைதிதான் தேவை” அவசரமாகப் பதில் சொன்னான் அஸ்வத்தாமன்.
“மழை வருகிறது. அடிமண்ணின் மீது புதுமண் படிகிறது. புதுமண் படிந்து
மாத்திரத்தில் அடிமண்ணே இல்லை என்று ஆகிவிடுமா?” அவன் கண்கள் மறுபடியும் வானில் அந்தப் பறவையைத்
தேடிக் கண்டுபிடித்துப் பதிந்தன.
துரியோதனனின் புலம்பல் வார்த்தைகளைக் கேட்கக்கேட்க சங்கடமாக இருந்தது
அஸ்வத்தாமனுக்கு. அவனுக்குப் புத்துணர்ச்சியை ஊட்டும் விதமாக எதையாவது உடனே சொல்லி
மனத்தின் வீழ்ச்சியிலிருந்து அவனை மீட்டெடுக்க வேண்டும் என்று பதறினான்
அஸ்வத்தாமன்.
“தந்திரத்தால் உன்னை வீழ்த்தியதைப்போல நானும் அவனை வெல்வேன் துரியோதனா. அவனை
மட்டுமல்ல, அந்தக் கும்பலையே
பூண்டோடு அழிப்பேன்”
துரியோதனனின் உதடுகள் வலியால் நெளிந்தன. நாக்கை நீட்டி உதட்டில் தடவி
ஈரப்படுத்திக்கொண்டான்.
“அவர்கள் உயிரோடு இருப்பதாக நீ எண்μகிறாயா? போய்ப் பார்.
அவனவனும் குற்ற உணர்ச்சியில் நொந்துபோய் மூலைக்கொருவராகக் கிடப்பார்கள்”.
“குற்ற உணர்ச்சியா?
“ஆமாம். அர்ஜுனனுக்கு பீஷ்மரை எதிர்த்த குற்ற உணர்ச்சி தருமனுக்கு துரோணரைக்
கொன்ற குற்ற உணர்ச்சி. பீமனுக்கும் நகுலனுக்கும் சகதேவனுக்கும் கர்ணனிடம்
உயிர்ப்பிச்சை பெற்ற குற்ற உணர்ச்சி. கிருஷ்ணனுக்கு எல்லோரையம் கொல்வித்த குற்ற
உணர்ச்சி. அந்தப் பாஞ்சாலிக்கு எல்லாக் கொலைகளும் தன்னால்தான் என்ற குற்ற உணர்ச்சி”
அஸ்வத்தாமன் வாயடைத்து நின்றான்.
“ஆனால் எனக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை அஸ்வத்தாமா. தொடைகள் பிளந்து
கிடக்கிற இந்த நிலையில் கூட எனக்கு எந்த விதமான குற்ற உணர்ச்சியும் எழவில்லை. இது
எப்போதும் என் சாம்ராஜ்யம். கௌரவ சாம்ராஜ்யம். அந்த நினைவு மனத்தில் ஆழமாக
வேரோடியிருக்கிறது”
துரியோதனனுக்கு மூச்சு வாங்கியது. அவசரமான குரலில் அஸ்வத்தாமன் “கூடாரத்துக்குத் -தூக்கிச் செல்லட்டுமா?
அல்லது ஏதாவது பல்லக்கை
ஏற்பாடு செய்யட்டுமா-” என்று கேட்டான்.
துரியோதனன் தலையை அசைத்து மறுத்தான். சில கணங்களுக்குப் பிறகு “நகரத்துக்குப் போயிருந்தாயா?” என்று மெதுவாகக் கேட்டான். பதிலுக்காக
அஸ்வத்தாமனையே பார்த்தபடி இருந்தான். அவனது மூச்சின் வேகம் திடுமென
அதிகரிப்பதைப்போல இருந்தது. ஏறி இறங்கும் அவனது நெஞ்சைப் பார்க்கப் பரிதாபமாக
இருந்தது. சொல்ல வேண்டாம் என மனத்துக்குள் முடிவெடுத்திருந்தாலும் ஒவ்வொன்றையும்
தலைகுனிந்தபடி சொல்லத் தொடங்கினான்.
“நகரத்துக்குள் செல்லவே முடியவில்லை துரியோதனா. ஒரு பெரிய இழவு வீடு போல
இருக்கிறது நகரம். ஆண் வாடையே இல்லை. எங்கோ, ஏதோ சில வீடுகளில் சில வயதான கிழவர்கள்
உத்திரத்தை வெறித்தபடி உட்கார்ந்திருக்கிறார்கள். பார்த்த திசை முழுக்க விதவைப்
பெண்களின் அழுகை. ராணிகள் அழுவதை இந்தக் கண்ணால் பார்க்கமுடியவில்லை. ஒரு
வார்த்தைகூட அவர்கள் வாயிலிருந்து எழவில்லை. எல்லாச் செய்திகளும் அவர்களுக்கு உடனுக்குடன்
எப்படியோ கிடைத்துவிட்டிருக்கின்றன. அவர்களின் கண்களிலிருந்து வழியும் கண்ணீர் நு£ற்றுக்கணக்கான கேள்விகளை என் முன்னால்
வைப்பதுபோல இருந்தன. அந்த உக்கிரத்தை என்னால் தாங்கமுடியவில்லை. ஒரு கோழைபோல ஓடி
வந்துவிட்டேன்”-
அஸ்வத்தாமன் பேசியபடி இருக்க துரியோதனன் பார்வை யுத்த களத்தில் விரிந்தது.
குருஷேத்திரம் ஒரு பெரிய சுடுகாடாகக் காணப்பட்டது. பார்த்த இடங்களிலெல்லாம் உடல்கள்.
உடல் உறுப்புகள். சதைப்பிண்டங்கள், உடைந்த தேர்கள்,
குதிரைகள், யானைகள், மின்னும் வாள்கள், ஈட்டிகள், கேடயங்கள் எல்லாவற்றுக்கு மிடையே பறந்தலையும்
கழுகுகள். ஆள் நடமாட்டமே அற்ற வெட்டவெளியில் அத்தனை உடல்களையும் கழுகுகளையும்
பார்த்தபோது நெஞ்சு குமட்டியது. அடிவயிற்றில் ஒரு நெருப்பு மூண்டது.
“நம் படை முற்றிலும் அழிந்துவிட்டது அல்லவா?” தாழந்த குரலில் கேட்டான் துரியோதனன். அவன்
நெஞ்சின் ஆழத்திலிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது.
அஸ்வத்தாமன் குனிந்து அவன் கண்களைப் பார்த்தான்.
“அணிவகுப்பில் எத்தனை அக்குரோணி சேனை திரண்டிருந்தது, தெரியுமா உனக்கு?”
“இப்போது அந்தப் பேச்சு எதற்கு துரியோதனா? அமைதியாக இருக்க மாட்டாயா?” துரியோதனனின் தோள்களைத் தொட்டு அழுத்தினான்
அஸ்வத்தாமன்.
“ஒரு அக்குரோணிக்கு இருபத்து நாலாயிரம் தேர்கள், எண்பத்திரண்டாயிரம் குதிரைகள், எட்டாயிரம் யானைகள், எண்பத்தெட்டு லட்சம் காலாட்படை வீரர்கள்
என்றால் மொத்த சேனையின் கணக்கு மிகப் பெரியதல்லவா?” மறுபடியும் கேட்டான் துரியோதனன்.
“பொழுது சாய்ந்துவிட்டால் கூடாரத்துக்குத் திரும்புவது சிரமமாகிவிடும்
துரியோதனா, போகலாமா” பேச்சை மாற்ற முயற்சி செய்தான் அஸ்வத்தாமன்.
“ஒருவர் கூட எஞ்சாமல் எல்லாரும் மரணமடைந்து விட்டார்களா?-” பதிலுக்காக அஸ்வத்தாமனின் முகத்தை ஏறிட்டான்
துரியோதனன்.
“அதெல்லாம் இப்போது எதற்கு துரியோதனா. என் தோளை உறுதியாகப் பற்றிக்கொள். நான்
கூடாரம் வரை உன்னைத் -தூக்கியே செல்கிறேன்” அஸ்வத்தாமனின் குரல் தாழ்ந்து ஒலித்தது.
“இரு அஸ்வத்தாமா, மொத்தப் படையின்
பிணங்களும் இங்கு கிடக்கும்போது எனக்கு மட்டும் கூடாரம் எதற்கு?” கசப்புடன் அவன் வார்த்தைகள் வெளிப்பட்டன.
“இத்தனை மரணங்களும் என் வெற்றிக்கல்லவா? என் சாம்ராஜ்யமும் என் கனவும் என் அகங்காரமும்
அவர்களைப் பலி கொண்டுவிட்டதல்லவா-?”
துரியோதனனின் தலை தாழ்ந்தது. நெஞ்சு தழுதழுத்தது. கண்களில் கண்ணீர்
திரையிட்டது. பதினெட்டு நாட்கள் முன்னர் ஆரவாரத்தோடும் சங்கொலி முழுக்கங்களோடும்
களத்தை நாடி வந்த வீரர்களின் அணிவகுப்புச் சித்திரம் மனத்தில் தோன்றி மறைந்தது.
வலியாலும் துக்கத்தாலும் அவன் நெஞ்சு விம்மியது.
“சற்று முன்னர் எனக்குக் குற்ற உணர்ச்சியே இல்லையென்று சொன்னதை நினைத்து
வெட்கமாக இருக்கிறது அஸ்வத்தாமா. அளவிலடங்காத அக்ரோணி சேனைகளை என் வெற்று
அகங்காரத்துக்குப் பலியாக்கிவிட்டேன். நினைக்கநினைக்க அவமானமாக இருக்கிறது.
எவ்வளவு பெரிய சுயநலம். இந்தப் பலியைக் கொடுத்தா என் அகங்காரத்தை நிலைநிறுத்த
விரும்பினேன். ஐயா... நான் பாவி அஸ்வத்தாமா, நான் பாவி” அவன் மனம் கூச்சத்தால் சுருங்கியது.
அஸ்வத்தாமன் அவனைக் கூர்ந்து பார்த்தான். திரண்ட தோளும் விரிந்த மார்பும்
கொண்ட தேகம் நத்தையைப் போலச் சுருண்டது. அவனை அச்சம் கவ்வியது.
“நீ பேரரசன் துரியோதனா... பேரரசனின் கனவு குடிமக்களின் கனவுமல்லவா?-”
“இருக்கலாம். குடிமக்களின் உயிரைக் காத்தல் வேந்தனின் கடமையல்லவா?”
“எல்லாம் நாமாகக் கொடுக்கிற அர்த்தம் தான் துரியோதனா. எதைஎதையோ போட்டுக்
குழப்பிக் கொள்ளாதே. நாம் கூடாரத்துக்குப் போகலாம். ராணியாரிடமும். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தால்
உன் மனம் ஆறுதல் பெறும் அதற்குள் நான் எந்த வைத்தியரையாவது...”
“இதோ, இந்தக் களத்தில்
விழுந்து கிடக்கிறவர்களுக்குக் கிட்டாத ஆறுதல் எனக்கு மட்டும் எதற்கு அஸ்வத்தாமா?
நான் பெரிய பாவி. அந்தத்
தடியன் என் தொடையில்தான் அடித்தான். நான் இவர்கள் நெஞ்சில் அல்லவா ஏறி
மிதிக்கிறேன்...”
“திடமாக இரு துரியோதனா... கௌரவ சாம்ராஜ்யப் பேரரசன் நீ. நீயே கலங்கலாமா?”
“சாமராஜ்யத்தைக் காப்பாற்றத் தெரியாத நான் என்ன பெரிய பேரரசன்?” தளர்ந்த குரலில் சொன்னான் துரியோதனன்.
குழப்பத்துடன் அவனைப் பார்த்தான் அஸ்வத்தாமன்.
“என் கனவும் அகங்காரமும் வெறியும் எதுவரை என்னை அழைத்து வந்திருக்கிறது
பார்த்தாயா? என் கண்
முன்னாலேயே பீஷ்மர் வீழ்ந்தார். துரோணர் வீழ்ந்தார். உயிருக்குயிரான கர்ணன்
நெஞ்சில் அம்பு தாங்கி ஒரு யானையைப் போல சரிந்து வீழ்ந்தான். அதையெல்லாம்
பார்த்தும் கூட ஏன் எனக்கு உறுதி தளரவில்லை? அப்போதெல்லாம் என் அகங்காரம் கூடிக் கொண்டல்லவா
போனது. எனக்குள் எரிந்த அகங்கார நெருப்புக்கு எல்லாரையும்
ஆகுதியாக்கியிருக்கிறேன். கடந்த நாழிகை வரை பொங்கியெரிந்த அகங்காரம் திடுமென
அவிந்து வெறுமை நிறைவதை இப்போது உணர்கிறேன் அஸ்வத்தாமா. எல்லாமே குழப்பமாக
இருக்கிறது”
“சரி சரி. அமைதியாக இரு துரியோதனா”
“நான் நினைத்திருந்தால் இந்த யுத்தமே நடக்காமல் தடுத்திருக்க முடியும். தாத்தா
அடிக்கடி அதைத்தான் சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் அப்படிச் செய்யவிடாமல்
தடுத்தது என் அகங்காரம் அல்லவா?”
“நடந்ததை நினைத்து உருகாதே துரியோதனா... எது நடக்க வேண்டுமோ, அதுதான் நடந்துகொண்டுள்ளது” அஸ்வத்தாமன் அவன் கண்ணீரைத் துடைத்துவிட்டான்.
துரியோதனன் அவன் கையைப் பற்றினான். சிரமத்துடன் கண்களைச் சுருக்கி அவனைப்
பார்த்துக் கேட்டான்.
“நான் பெரிய பாவி இல்லையா அஸ்வத்தாமா-?” அவனது தொண்டை வெகுவாக உலரத் தொடங்கியது.
நாவறட்சி அவனை வாட்டியெடுத்தது.
“அப்படி யாரும் உன்னைச் சொல்லவில்லை துரியோதனா”
“யாரும் கைநீட்டிச் சொல்லாவிட்டாலும் எனக்கே அப்படித் தோன்றுகிறதே அஸ்வத்தாமா.
நான் பெரிய பாவியடா பாவி” அவன் குரல்
கம்மியது.
“நீயாக எதையும் கற்பனை செய்துகொள்ளாதே துரியோதனா” போர்க்கவசங்களுடன் தேரேறி வந்த துரியோதனனின்
கம்பீரமான தோற்றம் ஒரு முறை மனத்திரையில் படர்ந்து மறைந்தது.
“அஸ்வத்தாமா... நீ என்னைப் பார்த்து நிஜத்தைச் சொல். நான் பாவிதானே?” துரியோதனனின் கண்கள் பதிலுக்கு ஏங்கின.
அஸ்வத்தாமன் துரியோதனனின் முகத்தில் வழிந்த வேர்வையைத் துடைத்தான்.
“இல்லை துரியோதனா. நீ பேரரசன். கௌரவ சாம்ராஜ்யத்தின் அசைக்கமுடியாத பேரரசன்.
ஒரு பேரரசனுக்குத் தகுதியானதைத்
தான் நீ செய்தாய்” -தூது வந்த
கிருஷ்ணனின் முன்னால் யுத்தத்தால் தீர்வு என்ற துரியோதனனின் கர்ஜனனை திடுமென
மனத்தில் ஒலித்தது.
“உன் விசுவாசத்துக்கான தகுதியை எப்போதோ இழந்து விட்டேன் அஸ்வத்தாமா. இப்போது
புழுவைவிடக் கேவலமாக உணர்கிறேன்” உறுதி குலைந்த
துரியோதனனின் பேச்சும் முகமும் மனத்தைக் கரைய வைத்தன. பதில் பேச முடியவில்லை. கண்கள்
தளும்பின. நெஞ்சு பொங்கியது.
“துரியோதனா.... நீ...”
பேச்சு வராமல் அவனை மார்போடு தழுவி இறுக்கி அணைத்தான்.
“நான் பாவி அஸ்வத்தாமா, நான் பாவி”
துரியோதனன் மறுபடியும்
முனகினான். அவன் முனகல் கட்டுப்படுத்த முடியாத ஒரு பிதற்றலைப்போல இருந்தது. “அப்படிச் சொல்லாதே” என்று பல முறை அவனை உலுக்கியசைத்துப்
பார்த்தும் அப்பிதற்றலை நிறுத்தமுடியவில்லை. பார்வை தாழந்தபடி இருந்தது. யானையின்
மத்தகம்போன்ற அவன் தோளை ஓங்கி ஒருமுறை தட்டினான் அஸ்வத்தாமன். “துரியோதனா” என்று சத்தமிட்டு அதட்டினான். அதட்டல் குரலால்
அவன் முனகல் சட்டென நின்றது. மெல்ல கண்களை மேல்நோக்கித் திறந்து அவனைப் பார்த்து
விழித்தான். பிறகு “தண்ணீர்” என்றான். தொண்டைக்குழி மேலும் கீழும்
தடுமாறியது.
அவசரமாகச் சுற்றுமுற்றும் பார்த்தான் அஸ்வத்தாமன். எங்கெங்கும் அலைகளால்
அடித்து ஒதுக்கப்பட்ட சங்குகள் போலப் பிணங்களே தெரிந்தன. கூடாரமும் சரஸ்வதி
ஆற்றின் கரையும் அருகில் தெரிந்தன. ஓடிப்போய் கொண்டுவர அவன் மனமும் கால்களும்
பரபரத்தன.
“சற்று பொறு துரியோதனா, இதோ வருகிறேன்”
என்று ஆற்றை நோக்கி
ஓடினான். சிற்சில கணங்களுக்கொரு முறை திரும்பித்திரும்பிப் பார்த்தபடி வேகமாக
ஓடினான்.
துரியோதனனின் முனகல் அனிச்சையாக எழுந்தது,. உதடுகளைத் தொட நாக்கை நீட்டியபடி வானை நோக்கி
அண்ணாந்தான். விரிந்த நீலப்பரப்பில் சுற்றிச்சுற்றி வட்டமடித்த அந்தப் பறவையை அவன்
கண்கள் தேடின.
(இந்தியா டுடே, 2000)