Home

Thursday 30 April 2020

தாய்மையின் அழகு - கட்டுரை




குன்றோரமாக இருந்த விடுதியில் இரவைக் கழிக்க ஏற்பாடு செய்திருந்தார் நண்பர். பொழுது சாயும் நேரத்துக்குள் சேர்ந்துவிடவேண்டும் என்பதுதான் திட்டம். ஆனால் வழியில் வாகனத்தில் ஒரு சக்கரம் பழுதாகிவிட்டது. அதைச் சரிப்படுத்திக்கொண்டு கிளம்பும் சமயத்தில் மழை பிடித்துவிட்டது. வாகனத்தை மெதுவாகத்தான் நண்பரால் ஓட்டிவர முடிந்தது. விடுதியை அடையும்போது இரவு மணி ஒன்பது.


குன்றிருக்கும் பக்கமாக இடி இடிக்கும் சத்தம் கேட்டது. தடதடவென்று பாறைகள் உருண்டுவருவதுபோல இருந்தது. வெள்ளைப்பாம்புகள் நெளிந்தேறுவதுபோல வானத்தில் மின்னல் மின்னியது. அந்த ஒருகண வெளிச்சத்தில் குன்றின் உருவத்தைப் பார்த்துவிட்டேன். தலைமுடி பறக்க நிலைகொள்ள முடியாமல் வெறியின் உச்சத்தில் உடலைச் சுழற்றும் பெண்ணைப்போலத் தோன்றியது.

எங்களுக்கான உணவை அறைக்குள்ளேயே கொண்டுவந்து கொடுத்தார் விடுதிக்காரர். சூடும் சுவையும் மிக்க உணவு. உண்டுமுடித்து கைகளைக் கழுவிய பின்னர் மழைவழியும் குன்றைப் பார்க்கும் ஆவலில் ஜன்னல் கதவின் கம்பிகளை விலக்கி மெதுவாகத் திறந்தேன். என் கண்கள் இருள்வெளியில் குன்றின் உருவத்தைத் தேடிய அதே கணத்தில் என் காதுகள் விசித்திரமான ஓர் இசைத்துணுக்கைக் கேட்டன. உடலும் மனமும் ஒருகணம் குழைந்து அடங்கின. காற்றின் பாடல்.

இடைவெளிக்குள் புகுந்துசெல்லும் கணத்தில் இசையாக உருமாறிப் பொங்கி வழிந்துவிட்டுச் சென்றது காற்று. கேட்டது கணநேரமே என்றபோதும் அந்த இசையை அதே லயத்துடன் திரும்பிப் பாடிவிட முடியும் என்கிற அளவுக்கு இசையின் இழை மனத்தில் பதிந்துவிட்டது. நான் சட்டென திரும்பி நண்பரிடம்சற்றுமுன்பு ஓர் இசை ஒலித்ததே கேட்டீர்களா?” என்று கேட்டேன். அவர் உதட்டைப் பிதுக்கினார். என் நெஞ்சுக்குள் ஒலித்தபடியே இருந்த அந்த இசையை என்னால் அவரும் கேட்கும்படியாகச் செய்ய இயலவில்லை. ஜன்னல் கதவை பலமுறை பல கோணங்களில் வைத்துப் பார்த்தும்கூட முதலில் கேட்ட இசையையும் ஒலிக்கவைக்க இயலவில்லை.

நான் அதைக் கேட்டேன். ஐயமே இல்லை. நம்புங்கள். நெஞ்சை அள்ளும் ராகம்என்று நண்பரிடம் பரவசத்துடன் சொன்னேன். அவர் என் குரலில் தொனித்த மாற்றத்தை வைத்துநான் நம்புகிறேன். நீங்கள் கொடுத்துவைத்தவர். உங்களுக்குக் கிட்டிய பேறு எனக்குக் கிட்டவில்லைஎன்றபடி என் தோளைத் தொட்டார். நான் அவர் காதில் மட்டும் விழும்படி அந்த ராகத்துக்கு ஓரளவு இசைவாக ஒலியெழுப்பிக் காட்டினேன். அவர் புன்னகைத்தார். நான் விழிமூடி மீண்டும் மீண்டும் அதே லயத்தில் ஒலியெழுப்பி என் நெஞ்சிலிருக்கும் இசையின் சாயலைக் கொண்டுவரமுடியுமா என்று முயற்சி செய்தபடி இருந்தேன்.

விடிந்தபோது மழை இல்லை. இது மழைபெய்த இடம் என்று சொன்னால் நம்பமுடியாத அளவுக்கு வெயில் சுள்ளென்று அடித்தது. நண்பர் இன்னும் அசதியில் உறங்கிக்கொண்டிருந்தார். அவரை எழுப்ப மனமில்லாமல் வெளியே வந்தேன். பச்சைப்பசேலென்ற குன்று ஒரு மாபெரும் இலைக்கட்டுபோல காணப்பட்டது. இரவெல்லாம் மனம் அசைபோட்ட இசையின் துணுக்கை நினைவு மீட்டியபடியே இருந்தது. உற்சாகத்தில் குன்றின்மீது வளைந்துசெல்லும் பாதையில் நடக்கத் தொடங்கினேன்.

ஆறேழு மைனாக்கள் ஒரு திருப்பத்தில் காணப்பட்ட புங்கமரத்தடியில் தாழ்வாகப் பறந்து இடம்மாறி இடம்மாறி அமர்ந்தன. அலகோரம் படிந்திருந்த மஞ்சள் வட்டம் அந்தக் குருவிகளின் உடல்வாகுக்கு அழகாக இருந்தது. மஞ்சள் இழைத்த சாந்தில் அலகைத் தேய்த்துவிட்டு வந்ததைப்போன்ற கோலம். ஒரு இடத்தில் நிலைகொள்ள விரும்பாத பரவசம். அமர்வதும் எழுவதுமாக இருந்தன.

ஒரு திருப்பத்தில் செங்கொன்றைமரம் நின்றிருந்தது. ஒவ்வொரு கிளையிலும் கொன்றைப்பூக்கள் அடர்ந்து பூத்திருந்தன. அந்த நெடுமரமே காற்றிலசையும் ஒரு பெரிய தழல்போலக் காணப்பட்டது. காற்றிலசைந்த ஒரு கிளையின் விளிம்பில் ஒரு குயில் கூவிக்கொண்டிருந்தது.. விழிமூடிய ஒருகணம் நிகழ்காலத்தின் திரையைக் கடந்து சங்ககாலத்து வேளிர்கள் வாழ்ந்துவந்த காலத்துக்குள் சென்றுவிட்டதுபோலத் தோன்றியது.

அப்போதுதான் ஒரு மாமரத்திலிருந்து ஒன்றையடுத்து ஒன்றாகக் குதித்து இறங்கிவந்த குரங்குகளைப் பார்த்தேன். பத்துக்கும் மேற்பட்ட குரங்குகள். அனைத்துமே இளமைத்தோற்றம் கொண்டவை. உரித்த கிழங்குபோன்ற நிறம். உடல்முழுதும் அரும்பி அடர்ந்த தளிர்முடி. மைபூசியதுபோன்ற இமைகளுக்கிடையில் வெளுத்த எருக்கம்பூபோன்ற உருண்ட விழிகள். மூன்று குரங்குகள் ஒன்றன் பின்னால் ஒன்றென ஊர்வலத்துக்குப் புறப்பட்டதுபோல நடந்துவந்தன. அவற்றைவிட வயதில் குறைந்த பிற குரங்குகள் சட்டென முன்னால் வெகுதொலைவு ஓடிச் சென்று, அங்கிருந்து திரும்பி நோக்கியபடி சில கணங்கள் நின்றிருந்துவிட்டு, மீண்டும் ஓடிவந்து பெரிய குரங்குகளோடு சேர்ந்துகொண்டன. எனக்கும் அந்தக் குரங்குகளுக்கும் இடையில் ஒரு பத்தடி தொலைவுதான் இருக்கும். ஆனால் ஒரு குரங்குகூட என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை.

நான் குரங்குகளைக் கண்டு முதலில் சற்றே மிரட்சியுற்றவனாக ஒதுங்கி நின்றேன். வேகமாக நடந்து சென்று அந்த இடத்தையே கடந்துவிடலாமா என்றொரு எண்ணம் கூட எழுந்தது.  அப்போதுதான் அவை கொஞ்சம் கூட என் இருப்பைக் கணக்கிலெடுத்துக்கொள்ளவில்லை என்பது உறைத்தது.  நான் வேண்டுமென்றே எதையோ தேடிச் செல்பவன்போல தரையைப் பார்த்தபடியே அவற்றுக்கு அருகில் சென்றேன். அப்போது கூட அவை என்னைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் எல்லாக் குரங்குகளும் என்னைப் பார்த்துவிட்டன என்பதை எப்படியோ நான் புரிந்துகொண்டேன்.

ஒரு குரங்கு மெதுவாக என் பக்கமாக வந்து என் உயரமே இருந்த ஒரு பாறைமீது தாவியேறி அமர்ந்துகொண்டு என்னைப் பார்த்தது. தலையை இப்படியும் அப்படியுமாக நாலைந்து முறை அசைத்துவிட்டு கனைப்பதுபோல மெதுவாக குரலெழுப்பியது.  என்ன வேலையாக இங்கு வந்தாய்?” என்று கேட்பதுபோல இருந்தது அதன் பார்வை. அன்றைய அதிகாலையை அந்தக் குறும்பு இன்னும் அழகாக்கிவிட்டது. நான் புன்னகைத்தபடி அதற்கு கைகளைக் கூப்பி வணக்கம் சொன்னேன். அது சட்டென வெட்கம் கொண்டு அங்கிருந்து இரண்டே எட்டில் தாவி கூட்டத்தோடு சேர்ந்துகொண்டது.

சில கணங்களில் நான்கு குரங்குகள் ஓர் அணியாக என்னை நோக்கி நடந்து வந்தன. அவற்றுக்குக் கொடுக்க என் கையில் ஒன்றுமில்லையே என வருத்தமாக இருந்தது. எதிரும்புதிருமாக நான்கு குரங்குகளும் என்னைச் சுற்றிச்சுற்றி வந்து என்னையே வெவ்வேறு கோணங்களில் வேடிக்கை பார்த்தன. பதற்றமெல்லாம் விலகிவிட, எனக்கும் சற்றே துணிச்சல் பிறந்த்து. வேலா, பாலா, சூர்யா, மீரா என்று அவை ஒவ்வொன்றுக்கும் சூட்டுவதற்கு மனத்தில் பெயர்கள் உதித்தன. அந்தப் பெயராலேயே அவற்றை அழைத்தபடி கைகளை நீட்டினேன். அவை கர்முர் என்று ஓசையெழுப்பின. அந்த அணியிலிருந்து விலகிச் செல்வதுபோல இரு குரங்குகள் வாலையசைத்தபடி சிறிது தூரம் ஓடி, பக்கத்திலிருந்த அரசமரக் கிளைக்குத் தாவி கண்பார்வையிலிருந்து மறைந்து, சில கணங்களிலேயே வேறொரு திசைவழியாக ஓடி வந்து ஒவ்வொன்றாக பக்கத்தில் அமர்ந்தன. ஒளிரும் கூழாங்கற்களென அவற்றின் கண்கள் சுடர்விட்டன.

மடியில் குட்டியைச் சுமந்தபடி நடந்து வந்த குரங்கை அப்போதுதான் நான் பார்த்தேன். உடல்வெளுத்து, தன் வலிமையையெல்லாம் அந்தக் குட்டியை ஈன்றெடுத்ததில் தொலைத்ததுபோல மெலிந்து காணப்பட்டது. மேடைபோல தானாகவே அமைந்திருந்த அரசமரத்தின் வேர்மீது அமர்ந்துஇங்கே பாரடி செல்லம்என்று தன் குட்டியிடம் சொல்வதுபோல அதன் உச்சந்தலையைத் தொட்டு வருடியது. சின்னஞ்சிறு பொம்மைபோல இருந்த குட்டிக்குரங்கு ஒரு மொச்சை அளவே இருந்த தன் விழிகளை உருட்டியுருட்டி வேடிக்கை பார்த்தது. தன் தாயின் முகத்தைத் தொடுவதற்கு உயர்ந்த அதன் விரல்கள் ஒரு மலர்க்கொத்தின் அரும்புகளென அசைந்தன.

சிறிது நேரத்தில் ஒரு சரிவிலிருந்து மேலேறி வந்த மற்றொரு தாய்க்குரங்கு ஏதோ தகவல் கிடைத்து வந்த விருந்தாளிபோல வந்து முதல் குரங்குக்குப் பக்கத்தில் அமர்ந்தது. “என்ன அக்கா, எப்படி இருக்கிறாய்?” என்று கேட்பதுபோல ஒருகணம் முதல் குரங்கின் பக்கம் பார்வையை ஓட்டியது. கன்றுக்குட்டி முட்டுவதுபோல அதன் குட்டி பாதுகாப்புப்பைக்குள் உட்கார்ந்த கோலத்திலேயே முட்டிமுட்டி குறும்பு செய்தபடி இருந்தது.

தேக்குமரக் கிளையிலிருந்து தாவி இறங்கிவந்த மற்றொரு தாய்க்குரங்கு மற்ற குரங்குகளுக்கு அருகில் வந்து நின்றது. உடலை சாய்த்துச்சாய்த்து நடந்த அதன் தோற்றம் அழகாக இருந்தது. மற்ற தாய்களைவிட இளமையான தாய் அது. அதன் முகத்தில் பொங்கிய எழிலும் தளதளப்பும் மிடுக்கும் வித்தியாசமாக இருந்தன. நெற்றியில் ஒரு சிறு பொட்டுப்போல இருந்த சின்ன மேடு அதன் முகத்துக்கு வசீகரமாக இருந்தது. மார்போடு அணைத்துக்கொண்டிருந்த குட்டியை உதறுவதுபோல நடிப்பதும், குட்டி நடுங்கிப் பதறி இறுக்கமாகத் தழுவிக்கொள்ளும்போது சிரிப்பதுமாக இருந்தது அக்குரங்கு.

மடியில் தன் குட்டியோடு குரங்குகள் அமர்ந்திருந்த தோற்றம் மனத்தைக் குழைய வைத்தது. மூன்று குரங்குகள். மூன்று அன்னையர். ஏற்கனவே பறக்கும் மனநிலையில் மிதந்தபடியிருந்த என்னை யாரோ இன்னும் உயரத்துக்கு சுமந்துசெல்வதுபோல இருந்தது. எங்கள் ஊர் பிரசவ மருத்துவமனையின் வாசலில் நின்றிருக்கும் குழந்தையைச் சுமந்த அன்னையின் உருவச்சிலையின் முகம் ஒருகணம் மனசுக்குள் தோன்றி மறைந்தது. எல்லா உயிர்களுக்கும் பொதுவான தாய்மை அந்தக் குரங்குகளின் விழிகளில் பொங்குவதை என்னால் உணரமுடிந்தது.

இரவு கேட்ட அபூர்வ ராகத்தை மறுபடியும் யாரோ மீட்டிவிட்டதுபோல இருந்தது. அந்த இனிமையில் ஆழ்ந்தபடி குரங்குகளைப் பார்த்தபடியே இருந்தேன். சில கணங்களே நீடித்த அக்காட்சி கலைந்தது. சபைக்கு வந்து திரும்பிச் செல்லும் இளவரசிகள்போல ஒவ்வொன்றும் இறங்கி திசைக்கொன்றாக நடந்துசென்றன. ”போய்வருக அம்மாமார்களேஎன்று அவற்றைப் பார்த்து வேகமாகச் சொன்னபடி கையசைத்தேன். நடக்கிற வேகத்திலேயே ஒரே ஒரு குரங்குமட்டும் என்னை ஒருகணம் திரும்பிப் பார்த்துவிட்டு ஓட்டமாக ஓடியது.