உதடு குவித்து முகத்தைப் பறக்கவிட்ட மோகனின் உருவம் ஒரே கணத்தில்
மறைந்துபோனது. வெறுமை படர்ந்த கணிப்பொறித் திரையை பெருமூச்சுடன் பார்த்தாள் ராதா.
மெதுவாக சுவர்க்கடிகாரத்தை அண்ணாந்து நோக்கினாள். ஐந்து. ஜன்னல் வழியாக குளுமை
படித்த காற்று வீசியது. அவன் பேசத் தொடங்கியபோது கடிகாரமுள் மூன்றில் இருந்தது.
ஏறத்தாழ இரண்டுமணிநேரம் நீண்ட பேச்சு.
வார நாட்களில் வழக்கமாக அவன் பேச்சு அரைமணிநேரம் தான் நீடிக்கும். சரியாகச்
சொன்னால் ஐந்து முதல் ஐந்தரைவரை. அல்லது ஐந்தரைமுதல் ஆறுவரை. முதலில் கைப்பேசியில்
அவன் அழைப்பு வரும். அவனுடைய அழைப்பை உடனடியாக அடையாளம் கண்டுபிடிப்பதற்காகவே
ஆண்டாள் பாடலொன்றை ரிங்டோனுக்குப் பதிலாக பதிவு செய்திருந்தாள் ராதா ‘மத்தளம் கொட்ட
வரிசங்கம் நின்றூத’ என்ற இனிய குரல்
அறையில் தவழத்தொடங்கியதுமே அவளுக்கு விழிப்பு வந்துவிடும். அந்தப் பாடல் ஒலித்தபடி
இருக்கும்போதே அவள் எழுந்து படுக்கைக்கு அருகிலேயே இருந்த கணிப்பொறியை இயக்கத்
தொடங்குவாள். மின்சாரம் பாய்ந்ததும் வெளிர்நீலத்தில் திரை ஒளிர ஆரம்பிக்கும். வெப்
கேமிராவின் முன் நின்று புன்னகைத்தபடி அகலப்பாட்டையின் வழியாக இணையத்துக்குள்
செல்ல முயற்சி செய்வாள். மௌஸ் உருண்டபடி இருக்கும்போதே “ஹாய் ராதா” என்ற அவன் குரல்
பக்கத்திலிருந்து அழைக்கிறமாதிரி இருக்கும். கணிப்பொறித் திரையில் அவன் முகம்
சிரிப்பும் சந்தோஷமுமாகத் தெரியும். ஒழுங்காக வாரப்பட்ட தலையோடும்
மடிப்புக்குலையாத ஆடைகளோடும் நாற்காலியில் உட்கார்ந்திருப்பான் அவன். எல்லா
நேரங்களிலும் அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தபடி இருக்கும். அன்று அலுவலகத்தில்
நடந்த ஏதாவது ஒரு சின்ன சம்பவம் அல்லது வழியில் பார்த்த பள்ளத்தாக்கு அல்லது வார
இறுதியில் பார்ப்பதற்காக குறித்து வைத்திருக்கிற நீர்வீழ்ச்சி அல்லது அலுவலக
ஜன்னலோரம் வந்து உட்கார்ந்த வண்ணத்துப்பூச்சி என்று ஏதாவது ஒன்றைப்பற்றிப்
பேசுவான். தன்னுடைய ப்ராஜெக்ட் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பதைப்
பற்றியும் அந்த மண்ணில் அயல்நாட்டு மனிதர்கள் தரும் ஒத்துழைப்பைப் பற்றியும் சொல்வான். பல சமயங்களில் அவளைத் தனிமையில் விட்டுவிட்டு வந்ததைப் பற்றி வருத்தப்படுவான்.
மெல்லமெல்ல அவர்களுடைய இல்வாழ்க்கையின் தொடக்கக்கால அனுபவங்களை நினைவிலிருந்து
சொல்லி மீண்டும் மீண்டும் அசைபோடுவான். ஊடல்கள், பயணங்கள், நடைகள், சிரிப்பு. எல்லாமே அவன்
உரையாடல்களில் வந்துவந்து மோதும். ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட சமயத்தில்
என்ன நிறத்தல் சூடிதார் போட்டிருந்தாள் அல்லது புடவை கட்டியிருந்தாள்
என்பதெல்லாம்கூட அவன் நினைவில் அழுத்தமாகப் பதிந்திருக்கும். அந்த நீண்ட ஞாபக
அசைபோடல்களோடு அக்கணங்களின் கொஞ்சல்களையும் சந்தோஷங்களையும் சொற்களையும் அசை
போடுவான். அத்துடன் நேரம் முடிந்துவிடும். “குட்நைட் ராதா, சீக்கிரம் தூங்கப் போவணும். ரொம்ப அசதியா
இருக்குது...” என்று முத்தத்தைப்
பறக்கவிட்டபடி திரையிலிருந்து மறந்துவிடுவான். கனவு கண்டதுபோன்ற அந்த உரையாடலை
மறுபடியும் ஞாபகப் படுத்தியபடி மின்விசிறியையும் ஜன்னல் கம்பிகளையும் வெறித்தபடி
படுத்திருப்பாள். அவன் மனம் தனிமையின் குகைக்குள் ஒவ்வொரு படியாக இறங்கிச்
செல்லும். இறுதிப்படியைத் தொட்டு நீளும் குளிர்ச்சிபடர்ந்த தளத்தையடைந்ததும்
எவ்விதப் பரபரப்புமின்றி தரையில் சரிந்து விடுவாள். பாரங்கள் எல்லாம்
உதிர்ந்துவிட்ட ஒரு வண்ணத்துப்பூச்சியைப்போல தன்னை உணர்வாள். பாரம் தாங்காமல்
தளர்ந்து நிற்கிற ஒரு குதிரையப்போலவும் சிற்சில சமயங்களில் தோன்றும்.
மறுநாள் விடுமுறை என்பதால் விரைவாகவே அழைத்துவிட்டான். பேச்சும் வெகுநேரம் நீண்டுவிட்டது.
எல்லா விளக்குகளையும் எரியவிட்டு படுக்கையில் சாய்ந்து உரையாடல்களை அசைபோட்டபடி
மேடிட்டிருந்த வயிற்றைத் தடவினான். அவள் கண்கள் எதிரில் மேசையில் லேமினேஷன் செய்து
சரிந்தவாக்கில் வைக்கப்பட்டிருந்த நிழற்படத்தை வெறித்தன. கொடைக்கானல் பூங்காவில் இருவரும்
எடுத்துக்கொண்ட படம். யாரோ ஒரு வெளிநாட்டுப் பிரயாணியை எடுக்கச் சொல்லி கேமிராவைத்
தந்ததும் அவர் முன்வைத்த ஆலோசனையின்பேரில் அவளுடைய தோளில் முகத்தைச் சாய்த்தபடி
அவன் நின்றதும் ஞாபகம் வந்தது. அந்த நடைப்பூங்காவில் எப்போதும் ஒரு பகுதியில்
அடர்ந்திருக்கும் பனிமண்டலத்தின் விசித்திரத்தை நினைத்துக் கொண்டாள்.
எதிரில்
இருப்பதைக் காட்ட மறுத்து பிரம்மாண்டமான வெண்திரையை இழுத்துவைத்ததைப்போல பார்த்த
இடங்களிலெல்லாம் பனி.
ஜன்னல் வழியே தெரிந்த கருநீல வானத்தின்மீது அவள் வனம் மறுபடியும் திரும்பியது.
மேகங்கள் மௌனமாக ஊர்ந்து கொண்டிருந்தன. பாரமேற்றிய வண்டிகளைப் போல. எங்கோ ஒரு
தளத்திலிருந்து ஓசை கேட்டது. அவை குயில்கள்தானா என்பதில் உள்ளூர அவளுக்குச்
சந்தேகமிருந்தாலும் அதை யாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது என்று தெரியவில்லை. ஆறு
மாதங்களுக்கு முன்னர் திருமணமாகி இந்தத் தளத்துக்கு வந்த புதிதில் அவள் அந்த ஓசையை
உணரவில்லை. மோகன் அமெரிக்கா புறப்பட்டுப் போன பிறகுதான் தூக்கம் வராத அதிகாலையில்
முதன்முதலாக இந்த ஓசையைக் கேட்டாள். அந்த ஓசையும் இனிமையும் துல்லியமாக அதைக்க
குயிலோசை என்றே நம்பத் தூண்டியது அவள் மனம். எதிர்பாராத ஒரு கணத்தில் நினைவுகளின்
ஆழத்திலிருந்து “குழலூதும் கண்ணனுக்கு குயில்பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ” என்ற வரிகள் சட்டென
மிதந்துவந்து நாவில் புரண்டன. எவ்வளவு இனிய பாடல். எப்போதோ மறந்துபோன ஒரு வரியை
எப்படி தன் நினைவு மீட்டெடுத்தது என்று அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அந்த வரிகளை
ஆசையோடு இரண்டுமூன்று தரம் விட்டுவிட்டு அவள் உதடுகள் முணுமுணுத்தன. எவ்விதத்
தடுமாற்றமும் இல்லாமல் அடுத்தடுத்த வரிகள் நாவில் வெளிப்பட்டன. அவள் மனம்
மகிழ்ச்சியில் பொங்கியது.
எழுந்து கைவிரித்து ஆடவேண்டும் போல ஒரு வேகம்
கிளம்பியது. ஏதோ கூச்சம் தடுத்தது. அடுத்த கணமே அதை உடைத்து புதிய உற்சாகம்
கரைபுரண்டோடத் தொடங்கியது. படுக்கையைறைக் குள்ளேயே ஒரு நிமிடம் ஆடினாள். மீண்டும்
அவ்வரிகளை முணுமுணுத்தாள். தலைப்பின்னலை
அவிழ்த்து உதறினாள். கண்ணாடி முன் நின்று மறுபடியும் பின்னினாள். அவள் பார்வை
மறுபடியும் மேடிட்ட வயிற்றின்மீது படிந்தது. தடவியபடி “நீயும் குயில்போலக் கூவுவியா, குழலூதப் போயிடுவியா?”
என்று செல்லமாகத் தட்டினாள். இளகி உருகத் தொடங்கிய அவள் மனத்தில் ஒரே கணத்தில்
இளமை நினைவுகள் குவிந்துவிட்டன. சந்தானத்தை, அவனுடை குழலோசையை, இனிமை ததும்பும் அவன்
குரலை, காந்தம்போல இழுக்கும்
அவன் கண்களை, கருகருவென அடர்ந்து
சுருண்ட அவன் தலைமுடியை நினைவுக்கு கொண்டுவந்தது. இப்போது எங்கே இருப்பான்? எங்கேயாவது பாடகனாகி
மேடைமேடையாக ஏறி இறங்குகிறானா? பெரிய கலைஞனாக வளர்ந்திருப்பானா? ஏதாவது கல்லூரியில் சேர்ந்திருப்பானா? பிள்ளைக்குப் பாட்டுச்சொல்லிக் கொடுத்துச் சம்பாதிக்கிற நிலையில்தான் இன்னும்
இருக்கிறானா? அவளுக்கு தலை
குழம்பியது. “என் எதிர்காலம்
நிச்சயமில்லாத ஒன்று ராதா. உனக்கு இப்போது கிடைத்திருப்பது உறுதியான எதிர்காலம்.
நீ அவன தேர்ந்தெடுக்கறதுதான் பாதுகாப்பு” என்று அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவான குரலில் மறுபடியும் யாரோ
காதருகே வந்து சொன்னதைப்போல இருந்தது.
தலையை உதறி அந்த வரிகளை உதிர்க்கவேண்டும்
என்று தோன்றியது. குளியலறைக்குச் சென்று திரும்பினாள். குளிர்ச்சியான தண்ணீர்
இதமாக இருந்தது. முகத்தைத் துடைத்துக்கொண்டு தலைவாரினாள். இரவு உடையைக் களைந்து
காலைநடைக்காக சூடிதார் அணிந்தாள். மணியைப் பார்த்தாள். இன்னும் ஆறாகவில்லை. அடுத்த
வீட்டிலிருந்து ஜெயந்தி வந்து அழைப்பதற்கு இன்னும் நேரமிருந்தது. அவள் கணவனும்
மோகனுடன் அமெரிக்கப் பயணத்திலிருந்தான். அவளுக்கு ஆறாவது மாதம். அவனுடைய அம்மாவும்
தங்கையும் அவளோடு இருப்பதற்காக வந்திருந்தார்கள்.
தன் எண்ணங்கள் ஏன் இன்று தறிகெட்டு அலைகின்றன என்று யோசித்தாள். கணிப்பொறி
கைக்கெட்டும் தொலைவில்தான் இருந்தது. மீண்டும் இயக்கி கேமிராமுன் நின்று
அமெரிக்காவில் படுக்கப்போய்விட்ட மோகனை அழைக்கலாமா என்று தோன்றியது. தன்னுடைய
கைப்பேசியில் அவளுடைய குரலை அடையாளப்படுத்துவதற்காக அவனும் ஏதாவது விசேஷ இசையைப்
பதிந்து வைத்திருக்கக்கூடுமோ என்றொரு கேள்வி எழுந்தது. ஒருநாளும் இதைப்பற்றி
அவனிடம் அவள் கேட்டதில்லை. இப்போது எழுப்பிக் கேட்டுவிடலாமா என்ற ஆவல் உந்தியது.
உடனடியாக அந்த நினைவை உதறிவிட்டாள். அவனாவது அமைதியாக தூங்கட்டும் என்று தனக்குள்
சொல்லிக்கொண்டாள். ஒரேஒரு நாள்தான் அப்படி தூக்கத்தில் எழுப்பும்படி நேர்ந்தது.
அவன் புறப்பட்டுப்போன புதிதில் நடந்தது. அன்று அதிகாலை அவள ஒரு கனவுகண்டாள்.
காட்டையொட்டிய ஒரு பூந்தோட்டம். அங்கே ஏராளமான வண்ணத்துப் பூச்சிகள்.
சுற்றிச்சுற்றி ஆடிக்கொண்டிருக்கிறாள் அவள். ஒரு பூச்சியை ஓசையில்லாமல் பின்னால்
சென்று பிடிப்பதும் பிறகு விடுவிப்பதுமாகத் தொடர்கிறது அவ்விளையாட்டு. அப்போது
திடுமென ஒரு யானை தோட்டத்துக்குள் நுழைந்துவிடுகிறது. ஒரு வண்ணத்துப்பூச்சியைப்
பிடிப்பதற்காக அவள் குனிந்திருக்கும்போது தும்பிக்கையை வளைத்து அவளைத் தூக்கிச்
சென்றுவிடுகிறது.
பதற்றத்துடன் அவள் அலறி எழுந்ததைக் கேட்டு அவனும் கவலைகொண்டான். “ராதா. வாயும் வயிறுமா
இருக்கற பொண்ணு தனியா இருக்கவேணாம். உங்க அம்மாவயோ எங்க அம்மாவயோ அழச்சி வந்து வச்சிக்கோன்னு
நான் எத்தனையோ தரம் சொல்லிட்டேன். நீதான் புடிவாதமா வேணாம் வேணாம்னு சொல்ற.
ஜெயந்திய பாத்தாவது நீ கத்துக்கக்கூடாதா? இப்ப கனவு அது இதுன்னு சொல்லும்போது கேக்கறதுக்கே கஷ்டமா இருக்குது தெரியுமா?” என்று சொல்லிக் கொண்டே
போனான். அன்று அவனை அமைதிப்படுத்துவதே பெரும்பாடாகிவிட்டது. அக்கணத்தில் இனிமேல்
எதையுமே பதற்றப்பட்டு சொல்லக்கூடாது என்று முடிவெடுத்தாள். ஒருநாளும் இல்லாமல் ஏன்
இந்தக் குழப்பம் என்று தோன்றியது அவளுக்கு. ஒளிரத் தொடங்கிய வானத்தைப் பார்த்தாள்.
குயிலோசை இப்போது நின்றுவிட்டிருந்தது. டுவ்வி டுவ்வி என்று குருவிகளின் இரைச்சல்
கேட்டது.
அழைப்புமணியின் சத்தம் கேட்டது. அதற்குக் கொடுக்கப்பட்ட அழுத்தத்திலிருந்தே
வந்திருப்பது ஜெயந்தி என்று புரிந்துவிட்டது. எழுந்துபோய் கதவைத் திறந்தால்.
அவளேதான். படிய வாரிய கூந்தல். உருண்டை களையான முகம். ஆரஞ்சுவண்ண சூடிதாரில் வெள்ளைத்
ப்பட்டா தோளில் தொங்க நின்றிருந்தாள். இருவரும் புன்னகையைப் பரிமாறிக் கொண்டார்கள்.
“இதோ வந்தட்டேன்...” என்றபடி உள்ளே சென்று
விளக்குகளை அணைத்துவிட்டு நடைக்கென்றே வைத்திருந்த காலணியை அணிந்தபடி வெளியே வந்து
கதவைச் சாத்தினாள். இருவரும் சேர்ந்து படியிறங்கத் தொடங்கினார்கள்.
இரண்டாவது தளத்தில் ஒரு வீட்டுக்கு முன்பு ஆண், பெண் குழந்தை என ஆறுபேர் கொண்ட குடும்பமொன்று நின்று மணியை அழுத்திக்
கொண்டிருந்தது. உள்ளிருந்து எந்தவிதமான அசைவும் இல்லை. வந்தவர்கள் அனைவரும் இரவுப்
பயணம் செய்து வந்தவர்களாக இருக்கலாம் என்று தோன்றியது. தலை கலைந்து முகங்களில்
சோர்வு படர்ந்திருந்தது. ஒரு பால்காரர் வந்து எல்லாருடைய வீட்டுக் கதவுகளிலும்
தொங்கிய பைகளில் பால் பாக்கெட்டுக்களைப் போட்டுவிட்டுப் போனார். வயதில் முதியவர்
ஒருவர் கீழ்த்தளத்திலிருந்து மெல்ல படியேறி வந்து கொண்டிருந்தார். அவர் கையில் செய்தித்தாட்களும்
காய்கறிப் பையும் இருந்தன.
“குட் மார்னிங் மேடம்”
கீழே வாசலருகில் கிரில் கேட்டைத் திறந்தவிட்ட காவலர் வணங்கி நிமிர்ந்தார். ‘கஸ்தூரி நிவாஸ்’ என்று சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டிருந்த
தொகுப்புவீட்டின் பெயர்ப்பலகையின்மீது படிந்திருந்த அழுக்கை துடைத்துக்கொண்டிருந்தார்
இன்னொருவர். இருவரும் சிரித்த குரலில் “என்ன மாணிக்கம், காப்பிக்கு போகலையா?” என்றபடி அவர்களைக்
கடந்து போனார்கள்.
சாலையோர மரங்களில் காக்கைகள் அமர்ந்திருந்தன. எல்லாருடைய வீட்டு முன்னாலும்
ஏதாவது ஒரு செடி பூத்திருந்தது. செம்பருத்தி, சாமந்தி, ரோஜா, நந்தியாவட்டை. ஒரு
மதிலோரம் இரண்டு ராமனாத்திக் குருவிகள் நடை பழகிக் கொண்டிருந்தன. ஒரு
வேப்பமரத்தில் குயிலோசை கேட்டது. அந்த ஓசையை வைத்து குயிலின் உருவத்தைக் கண்டறிய
நடந்தபடியே அவள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. அந்த ஓசைதான் அவள்
நெஞ்சில் திரும்பத்திரும்ப எதிரொலித்தபடி இருந்தது.
“ரெண்டரை மணிநேரம்
பேசனாரு இன்னிக்கு” ஜெயந்தி மகிழ்ச்சியோடு
சொன்னாள்.
“இவரும் பேசனாரு, ரெண்டு மணிநேரம்.”
“வாரக்கடைசி இல்லையா, அங்க மக்களுக்கு நிலை
கொள்ளலைபோல இருக்குது” ஜெயந்தியின் முகத்தில்
பூரிப்பு தவழ்ந்தது.
“நேத்து செக்கப் போனியா? என்ன சொன்னாரு டாக்டரு?”
“ஸ்கேன் பண்ணி
பாத்தாரு. பேபி க்ரோத் நார்மலா இருக்குதுன்னாங்க. வைட்டமின் மாத்திரைங்கதான்
கொடுத்திருக்காங்க” நீ என்னைக்குப் போவணும்?”
“வர பதினாறாம்தேதி.”
“போகும்போது கூப்புடு.
நாளும் வரேன்.”
இருவரும் நடைப்பூங்காவுக்குள் நுழைந்து கைவீசி நடக்கத் தொடங்கினார்கள். இருபது
இருபத்தைந்து பேர்களாவது முன்னால் நடந்தார்கள். இரண்டு சிறுமிகள் இறகுப்பந்து
ஆடினார்கள். இன்னும் இரண்டு சிறுமிகள் சறுக்குமரத்தில் ஏறி சர்ரென்று கை வீசியபடி
இறங்கினார்கள். ஊஞ்சலில் உட்கார்ந்தபடி வயதான பெண்மணி ஒருவர்
இளைப்பாறிக்கொண்டிருந்தார்.
இருவரும் நடையில் வேகத்தையும் கூட்டினார்கள். துப்பட்டா துணியை மார்பின்
குறுக்கில் போட்டு முடிச்சிட்டுக் கொண்டாள் ராதா. சாலையில் மெல்ல மெல்ல படியத்
தொடங்கிய வெளிச்சத்தின்மீது படிந்திருந்தது அவள் பார்வை.
ஐந்தாவது சுற்றின்போது “கண்டதுண்டோ கண்ணன் போல...” என்ற பாடலின் வரிகள் மிதந்து வந்ததை அவள் உணர்ந்தாள். முதலில் அது தன் கற்பனை
என்றுதான் நினைத்து உள்ளூரச் சிரித்துக் கொண்டாள். சற்றுத்தள்ளி புல்தரையில்
உட்கார்ந்து இரண்டு சிறுமிகள் பாடுவதை ஜெயந்தி சுட்டிக்காட்டிய பிறகுதான் அவளுக்கு
நம்பிக்கை வந்தது. அந்த வரிகளை உள்வாங்கி அசைபோட்டபடி நடை வட்டத்தில் தொடர்ந்து
நடந்தாள். அவள் கால்களில் ஒரு புத்துணர்ச்சி ஓடிப் பரவியதைப்போல இருந்தது. ஒரு
பறவையாக மாறிப் பறந்துவிடுவோமோ என்று தோன்றியது. கோலாட்டம் ஆடிக் குதித்தபடி
பூங்காவையே சுற்றிச்சுற்றி வரவேண்டும் என்ற ஆவலெழுந்தது. என்று முணராத ஒரு ஆனந்தம்
நெஞ்சில் வேகவேகமாக நிறைந்தது. அந்தப் பாட்டைத் தொடர்ந்து சிறுமிகள் “ஆசைமுகம் மறந்து
போச்சே...” என்று தொடங்கினார்கள்.
மொத்த உடலும் உருகி வழிந்துவிடும்போல இருந்தது. அந்த வரிகளை ஒவ்வொன்றாக வாங்கி அவள்
நெஞ்சம் மீண்டும் இசைத்தது. அவள் முகத்தில் திடீரென படர்ந்த வெளிச்சத்தைக் கண்டு
ஆச்சரியப்பட்டாள் ஜெயந்தி.
“என்ன ராதா, சந்தோஷத்துல
மிதக்கறமாதிரி இருக்குது.”
அவள் பக்கம் திரும்பி ஒரு சின்னப் புன்னகையை மட்டும் உதிர்த்தாள் ராதா. மேலும்
அவள் ஏதாவது சொல்லக்கூடும் என்று நினைத்த ஜெயந்தி ஏமாற்றத்துக்கு ஆளானாள். அவள்
தன் பக்கம் திரும்பும் ஒவ்வொரு கணமும் அந்த எண்ணம் எழுந்து சலிப்பில் முடிந்தது. “ஏன் பள்ளி கொண்டீர்
ஐயா?” என்ற மற்றொரு பாடலைத்
தொடங்கினார்கள் சிறுமிகள். ராதாவின் மனம் குழைந்தது. பத்து சுற்று வரைக்கும்
வாக்கமாகச் சுற்றக்கூடிய ராதா எட்டாவது சுற்றின் இறுதியிலேயே புல்தரையில்
உட்கார்ந்தாள். ஜெயந்தியைப் பார்த்து “உட்கார்” என்றாள். அப்போதாவது
அவள் ஏதாவது சொல்வாள் என்று எதிர்பார்த்தாள் ஜெயந்தி. ஆனால் பூங்காவின் நடுவில்
பாடிக் கொண்டிருந்த சிறுமிகள்மீது ஆழமாகக் கவனத்தைக் குவித்திருந்தாள் ராதா. நடை
வட்டத்துக்குள் இன்னும் பலர் நடந்து கொண்டிருந்தார்கள். இப்போது மூன்று இளம்பெண்கள்
ஓடத் தொடங்கியிருந்தார்கள்.
ராதாவின் முகத்தையே கூர்ந்து பார்த்தாள் ஜெயந்தி. அவள் இந்த உலகத்திலேயே
இல்லாததைப்போலக் காணப்பட்டாள். கண்கள் ஒருவித மயக்கத்தில் திளைத்திருந்தன.
குனிந்து புல்தரையில் விரல்களால் எதையோ எழுதிஎழுதி நிறுத்தினாள்.
பிறகு உள்ளங்கையைப் பரடவிட்டு புல்கற்றைகளை மடக்குவதும் நிமிர்த்துவதுமாக
இருந்தாள். சிறுமிகள் அப்போது “கண்ணன் வருகின்ற நேரம்...” தொடங்கியிருந்தார்கள். ராதாவின் தலை ஆடத் தொடங்கியது. புதுசாக அவள்
அணிந்திருந்த மூன்றடுக்கு ஜிமிக்கி அழகாக ஊஞ்சலைப்போல அசைந்தது. காதோர வியர்வையில்
முடி ஒட்டியிருப்பது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அவள் லயித்திருக்கக்கூடிய
ஆழத்தை உணரமுடிந்த ஜெயந்தி தனக்கு ஏன் அப்படி ஓர் உணர்வு எழவில்லை என்று
ஆச்சரியப்பட்டாள். ஒருமுறை தொண்டையைச் சரிசெய்வதுபோல செருமி நிறுத்தினாள். அக்குரலைக்
கேட்டு ஒரு கணம் அவளை நிமிர்ந்து பார்த்தாள் ராதா. ஆனால் எதுவும் பேசாமல்
புன்னகைத்தபடி மீண்டும் சிறுமிகளின் பக்கம் தன் கவனத்தைப் பதித்தாள்.
சிறுமிகள் சில கணங்கள் நிறுத்தினார்கள். பிறகு “ஸ்வாகதம் கிருஷ்ணா, சரணாகதம் கிருஷ்ணா...” என்று தொடங்கினார்கள்.
மோகன ராகம். கண்ணெதிரே ஒரு பல்லக்கு அசைந்து நிற்கிறது. அதைச்சுற்றி ஒரே மக்கள் வெள்ளம்.
ஊர்வலமாக அழைத்துவரப்படுகிறது அப்பல்லக்கு. ஊர்வலத்தின் ஓரத்தில் நின்று
ஆடுகிறார்கள் குழந்தைகள். தெருவின் இருபுறங்களிலும் ஒவ்வொரு வீடுதோறும்
கட்டப்பட்டிருந்த வண்ணவண்ண மாலைகளும் தோரணங்களும் அசைகின்றன. இசைத்தபடி
ஊர்வலத்துக்கு முன்னால் செல்கின்றது வாத்தியக்குழு. புத்தாடை அணிந்த சிறுமிகள்
முகமெல்லாம் சிரிப்பு பொங்க கும்மியடித்து வரவேற்கிறார்கள். பல்லக்கில் கிருஷ்ணன்
குழந்தைப் பார்வையுடன் உட்கார்ந்து வருகிறான். வருக கிருஷ்ணா வருக கிருஷ்ணா என்று
வயத வித்தியாசமில்லாமல் ஊரே திரண்டு வந்து எதிர்கொண்டு வரவேற்கிறது. பாடலின்
வசீகரம் மிகுந்த குரல் நெஞ்சில் கணீரென்று ஒலித்ததுமே காட்சிகள் வேகவேகமாக
நெஞ்சில் அசைந்து மாறின. மெல்லமெல்ல அக்குரலில் குழைவு கூடியபடி சென்றது. சின்னக்
கூச்சம். கெஞ்சல். மன்றாடல். இறைஞ்சல். உரிமையோடு கட்டளையிடுதல். எல்லாம்
அச்சிறுமிகளின் குரலிலிருந்து வெளிப்பட்டன.
தடுக்கமுடியாதபடி சந்தானத்தின் முகம் நெஞ்சில் படர்வதை உணர்ந்தாள் ராதா. “ஸ்வாகதம்னு வரவேற்பு
சொன்னதுமே நீயே சரணம்னு பாதத்தில் விழுந்திடறாங்க பாத்தியா. வந்தவன்கிட்ட என்னப்பா, எப்படி இருக்கே, என்ன வேணும்னு கேக்கலை. எனக்கு
இன்னது இன்னது வேணுமின்னும் சொல்லலை.
நேரிடையா நீயே சரணம்னு விழுந்திடறாங்க. அப்படின்னா அவன் எந்த அளவுக்கு மாபெரும்
சக்தியா இருந்திருப்பான். நம்மகிட்ட இருக்கற சக்தி, நாம வளத்திருக்கிற திறமை எல்லாமே அவன் அளக்கறதுக்கில்லை. நம்மை நாமே
அளந்துக்கறதுக்கு. அந்தப் பிரம்மாண்டம் முன்னால நாம் ஒன்றுமில்லைன்னு உணர்வதற்கு.
அசைபிரித்து சீர்பிரித்து செய்யுளைச் சொல்வதைப்போல அவன் மெல்லிய குரலில் எப்போதோ
சொன்னது துல்லியமாக மறுபடியும் காதோரம் ஒலித்தது. அவள் நெஞ்சு விம்மியது.
தொண்டைக்குழல் வெடித்து விடும்போல இருந்தது. கட்டுப்பாட்டை மீறி இரண்டு சொட்டு
கண்ணீர் கண்களிலிருந்து வழிந்தது. தோள் குலுங்கியது. அருகிலிருந்த ஜெயந்திக்கு
ஆச்சரியமாக இருந்தது. அவளடைய தொடையை அழுத்தி உலுக்கியபிறகுதான் ராதா தன்னிலை
பெற்றாள். ஒரே கணத்தில் சமாளித்துக்கொண்டு பின்னலைத் தூக்கி முதுகுப்புறம் போட்டாள்.
எழுந்து நின்றாள். ஜெயந்தியும் எழுந்தாள். பாடல் நின்ற பிறகு சிறுமிகளை நோக்கி
நடந்தாள். ஜெயந்தியும்கூடவே செல்லவேண்டியதாயிற்று.
சிறுமிகளை நெருங்கியதும் ராதாவின் முகத்தில் புன்னகை களைகட்டியது.
“ரொம்ப நல்லா இருக்குது
உங்க குரல்வளம். உங்க பாட்டு” மகிழ்ச்சியுடன் சொன்னாள். சட்டென எழுந்த சிறுமிகள் “ரொம்ப தேங்ஸ் ஆன்ட்டி”
என்றார்கள்.
“எங்க இருக்கிங்க நீங்க?”
“இங்கதான் பக்கத்துல
ஆன்ட்டி, இந்திரா நகர்ல.2
“யார்கிட்ட
கத்துக்கிட்டீங்க?”
“வெளியில எங்கயும
கத்துக்க வசதியில்லை ஆன்ட்டி. அம்மா நல்லா பாடுவாங்க. அந்தக் காலத்துல ரேடியோவில
எல்லாம் பாடியிருக்காங்க. இந்திரா காந்திகிட்ட விருதுலாம் வாங்கனவங்க. அவங்கதான்
வீட்லயே சொல்லிக் கொடுத்தாங்க.”
“உன் பேரு?”
“நான் மகேஸ்வரி, அவள் ராஜேஸ்வரி.”
“உங்க குரல் போலவே
பேருங்களும் நல்லா இருக்குது.”
ராதாவின் பார்வை அச்சிறுமிகளின்மீத முழுக்கமுழுக்க படிந்திருக்க ஜெயந்தி சற்றே
விறைப்போடு பக்கத்திலேயே நின்றிருந்தாள். ஸ்வாகதம் கிருஷ்ணா பற்றி மறுபடியும்
பேச்சு வந்தது.
“இன்னும் என்னென்ன
பாட்டுங்க தெரியும்?”
“தாயே யசோதா, பால்வடியும் முகம், அலைபாயுதே, குழலூதி மனமெல்லாம், கனிகள் கொண்டு தரும், கண்ணனே என் கணவன், பச்சை மாமலை, கருணாநிதியே, பிள்ளைப் பிராயத்திலே
எத்தனை கோடி இன்பம்.. நெறைய தெரியும் ஆன்ட்டி.”
ராதாவின் புருவங்கள் உயர்ந்தன. நெருங்கி அச்சிருமிகளின் தோளைத் தொட்டு
அழுத்தினாள். ஜெயந்திக்கு விசித்திரமாக இருந்தது. மெதுவாக “போலாமா? இன்னம் காணமேன்னு
மாமியார் நெனைப்பாங்க” என்றாள் “போகலாம்” என்று
அவளைப்பார்த்துத் தலையாட்டினாள்.
சிறுமிகளிடம் விடைபெறத் திரும்பியபோது “ஆன்ட்டி, ஒரு சின்ன உதவி
ஆன்ட்டி” என்ற அச்சிறுமிகளின்
குரல் நிறுத்தியது, “என்னம்மா?” என்று கனிவோடு கேட்டாள்
ராதா.
“ஆன்ட்டி, அவள் பத்தாம் க்ளாஸ், நான் ப்ளஸ் டு. ஸ்கூல்
பீஸ் கட்டணும் ஆன்ட்டி, அம்மாவால முடியலை
ஆன்ட்டி.”
அந்தச் சிறுமிகளின் கண்கள் கலங்கிவிட்டன. சட்டென்று தரையைப் பார்த்தபடி
கண்களைத் துடைத்துக் கொண்டார்கள். ராதாவுக்கு மனம் பொங்கியது. கையிலிருந்து கேசட்
அளவிலான பர்ஸைத் திறந்து பார்த்தாள். ஐந்நூறு ரூபாய் நோட்டு ஒன்று மடிந்து
கிடந்தது. எப்போது வைத்தோம் என்பது அவளுக்கே ஞாபகமில்ல. அப்புறம் கொஞ்சம் சில்லறைகள்.
ராதா அவசரமாக அந்த ஐந்நூறு ரூபாய் நோட்டை எடுத்து “வச்சிக்கம்மா” என்று சிறுமியின்
கையில் வைத்து அழுத்தினாள். “தேங்க்ஸ் ஆன்ட்டி” அவள் கண்களில் நன்றி
மின்னியது. அவள் கன்னத்தைச் செல்லமாகத் தட்டினாள் ராதா.
நடைப் பூங்காவைவிட்டு வெளியே வந்தனர் இருவரும். சாலையோர மரங்களையும்
செடிகளையும் பார்த்தபடியே மௌனமாக நடந்தார்கள். மேலேமேலே மிதந்துவந்த சந்தானத்தின்
முகத்தைக் கடுமையான முயற்சியால் அழித்தாள் ராதா. எண்ணங்களின் போக்கை மாற்றுவதற்காக
“செக்அப் பத்தி
விசாரிச்சாரா ஆனந்த்?” என்று ஜெயந்தியிடம்
கேட்டாள்.
“அதப்பத்தித்தான் ஒரே
பேச்சு. குங்குமப்பூ சாப்பிடு. பால்ல கலந்து குடி. ஒரே அட்வைஸ். அவருக்குக்
குழந்தை செகப்பா பிறக்கணுமாம். அவுங்க
அம்மாவுக்கும் அதே எண்ணம்தான். இது வரைக்கும் ஆயிரம் தரம் சொல்லியாச்சி. நெறம்
குறைவா இருந்தா என்னயே விலக்கி வச்சிடுவாங்களோ என்னமோ” அவள் முகத்தில் வாட்டம் படிந்தது.
“பாட்டுன்னா உனக்கு ரொம்ப புடிக்குமா?” ஜெயந்தி மெதுவாகக் கேட்டாள்.
“ம்.”
“ஏதோ கிருஷ்ணான்னு
பாட்டு பாடனபோது உன் கண்ணுலாம் கலங்கனதப்
பாத்தேன். அந்த அளவுக்கு அதுல ஈடுபாடா?”
“ம்.” ராதா புன்னகையுடன்
தலையசைத்தாள்.
“பாட்ட கேட்டு
யாராச்சிம் இப்படி கண்கலங்குவாங்களா என்ன? என்னால நம்பவே முடியலை. ஆச்சரியமா இருந்திச்சி.”
“அப்படியா?”
“அதவிட ஆச்சரியம்
முன்னபின்ன தெரியாத அந்த பொண்ணுங்களுக்கு நீ சட்டுனு
ஐந்நூறு ரூபாய் எடுத்து குடுத்தது.”
“ஏதோ குடுக்கணும்னு தோணிச்சி.
அவ்வளவுதான்.”
“தரலாம்னு நானும்
நெனைச்சேன். பத்து அம்பதுன்னு சில்லறைகூட இருந்திச்சி.” ஜெயந்தியின் குரல்பிசிறுடன் வெளிப்பட்டது.
“அப்ப தரவேண்டியதுதானே?”
“நெனைச்சா தானம், நெனைச்சா தர்மம்னு
இருக்க இது என்ன நான் சொந்தமா சம்பாதிக்கற பணமா?” அவள் பார்வை செம்பழுப்பு நிறத்தில் முடியடர்ந்த
உயரமான நாயொன்றை இழுத்துச் செல்லும் இளம் பெண்ணொருத்தியின் மீது படிந்திருந்தது.
நாய் நிற்க விரும்புகிற இடத்தருகே அதை நிறுத்த விருப்பப்படாமல் சங்கிலியை இறுக்கி
இழுத்தாள் அந்தப் பெண். ஆங்கிலத்தில் வசை வார்த்தைகள் உதிர்ந்தன.
ஒருநாள் பேருந்து நிறுத்தத்தில் பணத்தைப் பறிகொடுத்து விட்டதாகவும்
காலையிலிருந்தே சாப்பிடவில்லை என்றும் ஊருக்குச் செல்லக்கூட காசில்லை என்றும்
நாலைந்து பிள்ளைகளோடும் பிள்ளைத்தாய்ச்சி மனைவியோடும் கையெடுத்துக் கும்பிட்டு
கண்கலங்கிய ஒருவனுக்கு மனமிரங்கி ஐம்பது ரூபாய் கொடுத்ததும் கூடவே வந்த மாமியார்
வழிநெடுக முணுமுணுத்தபடியே வந்ததாகவும்
அந்த வரிசையின் இறுதிக் கட்டமாக “நெனச்சாதானம், நெனச்சா தர்மம்னு
செலவு செய்ய இது என்ன நீ சம்பாதிச்ச பணமா?” என்று கேட்டதாகவும் சொன்னாள். அன்று இணையத்திலும்
அந்தச் செய்தி ஆனந்துக்குச் சொல்லப்பட்டு “நமக்கு உதவி செய்யணும்னுதானே அவுங்க
வந்திருக்காங்க. அவுங்க சொல்றத கேக்கக்கூடாதா கண்ணம்மா?” என்று பட்டும் படாமல் பேசிக் குழைந்து அவன்
அமைதிப்படுத்தியதையும் சொன்னாள்.
அந்தச் சம்பவம் ராதாவை ஆச்சரியப்படுத்தியது. அவன் மனத்தைத் திசைதிருப்ப “அது சரி, நேத்து ராத்திரி
சி.டி. வாங்கி வந்தியே, படம் நல்லா
இருந்திச்சா?” என்று கேட்டாள்.
பேச்சு உடனே படத்தின் நனைச்சுவைக் காட்சிகளின் திசையில் மாறியது. துப்பட்டாவால்
வேர்வையை அழுத்தித் துடைத்துக் கொண்டாள். கீரைக்கடையை நெருங்கும்வரை பேச்சு
எதுவும் நிகழவில்லை. அன்று மணத்தக்காளிக் கீரையும் புளிச்சக் கீரையும்
குவிக்கப்பட்டிருந்தன. ஆளுக்கொரு கட்டு வாங்கிக்கொண்டு நடையைத் தொடர்ந்தார்கள்.
ரத்த அழுத்ததுக்கும் சர்க்கரை நோய் நிவாரணத்துக்கும் விற்கப்படும் மூலிகைச்சாறுக்
கடையின்முன் ஏராளமான பேர்கள் நின்றிருந்தார்கள். கிரிக்கெட் மட்டையும் பந்துமாக
சிறுவர் பட்டாளமொன்று மைதானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
“குழந்தை சிவப்பா
பொறக்கலைன்னா என்ன செய்றது ராதா?”
“பொறக்கும். வா”
“இந்த ஊருல எனக்குத்
தெரிஞ்ச ஒரே ஆளு நீதான். உங்கிட்டதான் மனசவிட்டு பேசமுடியுது. குழந்தை சிவப்பா
இல்லைன்னா ஏதாவது ஏடா கூடமா நடந்துடுமோன்று பயமா இருக்குது ராதா” ஜெயந்தியின் கண்கள்
கலவரம் தெரிந்தது.
“அட பைத்தியமே.
அதெல்லாம் உன் கையிலும் என் கையிலுமா இருக்குது. ஒன் நல்ல மனசுக்கு நீ ஆசப்பட்டதே
நடக்கும். வா” ராதாவின் ஆறுதலான
குரல் அவளுக்கு மிகவும் தெம்பாக இருந்தது.
“ஆனந்த நம்பவே முடியாது
ராதா. நம்மகூட இருக்கும்போது நமக்கு ஆதரவா பேசுவான். அவுங்க அம்மாகிட்ட
நாலுவார்த்த பேசிட்டு வந்தான்னா அவன் போக்கு முழுசா மாறிடும். அதான் பயமா
இருக்குது” அந்த அச்சம் தள்ளமுடியாத
ஒரு பெரிய பாரமாக நெஞ்சின் மீது அழுத்திக்கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது.
அந்தப்பயம் படரும் ஒவ்வொரு கணத்திலும் தன் அமைதி குலைந்து போவதை வேதனையுடன் நினைத்துக்
கொண்டாள். அக்கணத்தில் எதிர்பாராதவிதமாக அத்தை மகன் ராகவனுடைய ஞாபகம் வந்தது. அவனை
மணந்து கொண்டிருந்தால் இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு இடமே இல்லாமல் போயிருக்கும்.
அவனுக்கும் ஆசையிருந்தது. காற்றின் திசையில் பறக்கிற பட்டத்தைப்போல ஆசையின்
பாதையில் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் கழிந்திருக்கக்கூடும். எல்லாவற்றுக்கும்
அம்மாதான் காரணம். ராகவனைப் பிடிக்காமல் போவதற்கும் ஆனந்தைப் பிடித்ததற்கும்
அவளால் ஆயிரம் காரணங்களைக் கட்டியெழுப்ப முடிந்தது. அவள் முன்வைத்த காரணத்தைக்
காதுகொடுத்து கேட்கத்தான் யாரும் தயாராக இல்லை. அம்மாவின் பேச்சைத் தட்டாத அப்பா “இன்னைக்கு சிரமமா
இருந்தாலும் உன் எதிர்காலம் சிறப்பா இருக்கும்மா ஜெயந்தி” என்று தட்டிக்கொடுத்துவிட்டு திருமணத்தை நடத்திவிட்டார். இப்போது, சிவப்புக்குழந்தை பயம்
நெஞ்சில் படரும்போதெல்லாம் அவர்மீது கோபம் கோபமாக பொங்கியது.
“சும்மா அதயே போட்டு
உருட்டாத ஜெயந்தி. என்னைக்கோ
நடக்கப்போகிற விஷயத்துக்கு இப்பவே கவலைப்படணுமா? தைரியமா இரு.”
தெரு சந்தடி மிகுந்ததாக மாறிவிட்டது. ஆட்டோக்கள் சீறியபடி இடதும் வலதுமாகப்
பறந்தன. ஏழரைமணிப் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் சீருடையில் அப்பா அம்மாவின்
இரண்டு சக்கர வாகனங்களில் உட்கார்ந்திருந்தார்கள். எங்கெங்கும் தள்ளுவண்டிகள்.
இளநீர்க் குலைகள் சுமந்த சைக்கிள்கள். தவறான பாதையில் வந்துவிட்டு
திரும்பமுடியாமல் மெல்லமெல்லப் பின்வாங்கும் மணல் லாரி.
இருவரும் “கஸ்தூரி நிவாஸ்” வளாகத்துக்குள்
வந்தனர். காவலர் அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார். வளாகப் புல் தரைக்கு
பூவாளியால் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார் ஒருவர். தரையெங்கும் உதிர்ந்து
கிடந்த பழுத்த இலைகளைப் பெருக்கி ஒதுக்கினார் ஒருவர். கட்டிடங்களின்மீது இளம்வெயில்
படர்ந்து மின்னியது. பாதையின் ஓரமாக மாருதி காரை ஒருவர் தண்ணீர் ஊற்றிக் கழுவிக்
கொண்டிருந்தார்.
ராதாவுக்கு காலையில் கேட்ட குயிலோசை மறுபடியும் ஞாபகம் வந்தது. இப்போது
அந்தக்குயில்கள் எங்கே போயிருக்கக்கூடும் என்று தோன்றியது. குயிலோசையைத் தொடர்ந்து
சந்தானத்தின் முகமும் ஞாபகம் வந்தது. அவள் தலையை வேகமாக உதறினாள்.
மூன்றாம் தளத்துக்குச் சென்றபிறகு “சரி, அப்பறம் பாப்பமா?” என்று ஜெயந்தியிடம்
விடைபெற்றாள் ராதா. “எதயும் கொழப்பிக்காதே, தெளிவா இரு. பொறக்கற
குழந்தை சிவப்பா இருக்கறதவிட தெளிவா இரக்கிறது முக்கியம், தெரியுதா” என்றாள். தலையசைத்தபடி
தன் வீட்டு அழைப்புமணியை அழுத்திவிட்டு காத்திருந்தாள் ஜெயந்தி. துப்பட்டா முனையை
விரலால் சுற்றிச்சுற்றி விடுவித்தபடி தன் வீட்டைநோக்கி நடந்த ராதா சற்றுமுன்
தன்னிச்சையாக ஜெயந்திக்குச் சொன்ன ஆறுதல் வார்த்தைகளை ஒருகணம் அசைபோட்டாள். “தெளிவா இருக்கறது
முக்கியம்” என்று வாய்க்குள்ளாகவே
ஒருமுறை முணுமுணுத்துக் கொண்டாள். அவன்
உதடுகளில் புன்னகை நெளிந்தது.
(தீராநதி 2005 இதழில் வெளிவந்த சிறுகதை)