வீரமுத்துவின் கண்கள் எங்கோ மறைந்துநின்றபடி என்னை உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன என்ற எண்ணத்தை ஒரு நம்பிக்கைபோல ஐம்பதாண்டு காலமாக என் மனத்தில் சுமந்துகொண்டிருக்கிறேன். ஏதோ ஒரு கணத்தில் சட்டென்று என் முன்னால் தோன்றி என் தோளைத் தொட்டு அவன் அழுத்துவான் என்னும் எதிர்பார்ப்பிலிருந்து என்னால் ஒரு கணம் கூட விடுபட முடிந்ததில்லை.
சிறிது நேரத்துக்கு முன்பாக நான் கண்ட துயர்மயமான கனவுக்கும் வீரமுத்துவுக்கும் எவ்விதமான தொடர்புமில்லை. ஆனால் அந்தக் கனவின் அழுத்தத்திலிருந்து மீள்வதற்காக நானேதான் அவனைப்பற்றிய நினைவுகளை இழுத்து அசைபோடத் தொடங்கினேன்.
ஒருநாள் நானும் அவனும் மடத்தார் தோப்புக்குள் கிழங்கு எடுத்தபிறகு ஆறப்போட்ட வயல்வெளிக்குள் அலைந்து தப்புக்கிழங்கு தேடியெடுத்து கால்வாய்த்தண்ணீரில் கழுவி கதைபேசியபடி கடித்துத் தின்றோம். அப்புறம் வீட்டுக்குத் திரும்பும் வழியில் பார்வையில் பட்ட நெல்லிமரத்திலிருந்து ஒரு கொத்து உருவியெடுத்துத் தின்றோம். கடைசியாக மதிலோரமாக விழுந்துகிடக்கும் கொடுக்காய்ப்புளிச் சுருளைப் பிரித்து சுளையெடுத்துத் தின்றோம். பிறகு வழக்கம்போல தூங்குமூஞ்சி மரப்பாலம் வரைக்கும் நடந்துவந்து அந்தத் திருப்பத்தில் விடைபெறும்போது என் தோளைத் தொட்டான் அவன்.
எதிர்பாராத கணத்தில் தன் கால்சட்டைப்பையிலிருந்து ’இரட்டைக்கிளி’ வத்திப்பெட்டியொன்றை எடுத்து ”இதை பத்திரமா வச்சிக்கோ. பத்து நாளுக்கு அப்புறம் தெறந்து பாரு. எல்லாமே தங்கக்கட்டியா மாறியிருக்கும். எல்லாத்தயும் நீயே எடுத்துக்கோ. எனக்கு வேணாம்……” என்று ரகசியமாகச் சொன்னபடி ஒரு புதையலை வைப்பதுபோல என் உள்ளங்கையில் வைத்து அழுத்தினான். பிறகு கண்களை உருட்டியபடி அடங்கிய குரலில் “அவசரப்பட்டு பத்துநாள் முடியறதுக்குள்ள தெறந்துட்டா, எல்லாமே பொசுங்கி சாம்பலாயிடும், புரியுதா?” என்று மீண்டும் மீண்டும் எச்சரித்தான்.
“எல்லாமே எனக்கெதுக்கு? ஒனக்கு வேணாமா?” என்று சந்தேகத்தோடு கேட்டேன் நான். “நானும் ஒரு பெட்டி வச்சிருக்கேன். இது உனக்கு. நீதான எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட். அதனாலதான் உனக்கும் ஒன்னு எடுத்தாந்தேன்…..”
சட்டென
காதோரமாக அந்த வத்திப்பெட்டியை உயர்த்தி ஆட்டிப் பார்த்தபடி “இதுக்குள்ள என்னடா இருக்குது?” என்று ஆவலோடு கேட்டேன். ஆனால் அவன் பேச்சை நிறுத்திவிட்டு கோபமாக என்னை நோக்கி முறைத்தபடி கைகளைப் பற்றினான். தொடர்ந்து அடங்கிய குரலில் ”உனக்கு தங்கம் வேணுமா, வேணாமா?” என்று அதட்டினான். அதற்குப் பிறகு நான் எதுவும் பேசவில்லை. அமைதியாக அவன் சொன்னதற்கெல்லாம் தலையாட்டினேன்.
சிறிது
நேரம் கழித்து “இதயெல்லாம் நீ எப்படித் தெரிஞ்சிகிட்ட?” என்று அவனிடம் கேட்டேன். சில கணங்கள் அவன் என்னை முறைத்தான். பிறகு மெதுவாக ”சந்தைத்தோப்புல ஒரு சாமியார பார்த்தன். அவருதான் இத எனக்கு கத்துக்குடுத்தாரு” என்று தோளைக் குலுக்கிக்கொண்டு சொன்னான்.
அவன்
விடைபெற்றுச் சென்றபிறகும் அவன் குரல் என் காதில் ஒலித்தபடியே இருந்தது.
ஒரு கட்டத்தில் எனது ஆவலைக் கட்டுப்படுத்த இயலாமல் ஒரு மரத்தடியில் நின்று மெதுவாக பெட்டியைத் திறந்து பார்த்தேன். எல்லாமே சவண்டல் மரத்தின் முத்துகள். கரிய நிறத்தில் ஒன்றன்மீது ஒன்றென படுத்துக்கிடக்கும் வண்டுகள்போல காணப்பட்டன. பிறகு அவசரமாக மூடி பைக்குள் வைத்துக்கொண்டு நடந்தேன். ரகசியத்தைத் தெரிந்துகொண்டதில் மனசுக்கு நிம்மதியாக இருந்தது.
அன்று
இரவு தூக்கத்தில்
தொடர்ச்சியாக பல கனவுகள். ஒரு கனவில் தங்கக்கட்டிகளை உருட்டி நாங்கள் இருவரும் கோலி விளையாடினோம். இன்னொரு கனவில் ஏழாங்காய் விளையாடினோம். மற்றொன்றில் பந்துபோல தூக்கிப் போட்டுப் பிடித்தோம். அந்தக் கனவுகளை நினைத்துநினைத்து விடியும்வரைக்கும் சிரித்துக்கொண்டிருந்தேன்.
கனவுகளைப்
பகிர்ந்துகொள்ள
அடுத்தநாள் காலையில் பள்ளிக்கூடம் சென்றதுமே வீரமுத்துவைத் தேடினேன். அவன் வரவில்லை. அடுத்த நாளும் அவன் வரவில்லை. காய்ச்சலாக இருக்குமோ என்று என்னை நானே அமைதிப்படுத்திக்கொண்டேன். ஆனால் பத்து நாட்களுக்கும் மேல் ஓடிவிட்டது. அவன் சுவடே இல்லை. தங்கமாக மாறும் என்று அவன் சொன்ன சவண்டல் முத்துகளும் மாறவில்லை. ஒருபுறம் வருத்தம். இன்னொருபுறம் ஏமாற்றம்.
அன்று
மாலை அவன் வீட்டைத் தேடிச் சென்றேன். அவன் வீட்டில் யாருமே இல்லை.
பூட்டியிருந்தது. அவர்கள் அனைவருமே வெளியூர் போய்விட்டார்கள் என்று பக்கத்து வீட்டிலிருந்தவர் சொன்னார்.
அதிர்ச்சியில்
அடுத்து என்ன பேசுவது என்பதே புரியாமல் திரும்பிவிட்டேன். உண்மையில் அவர் சொல்வதை நம்ப எனக்கு விருப்பமில்லை. அடுத்து, அடுத்து என ஒரு வாரம் தொடர்ந்து சென்று ஏமாற்றத்தோடு திரும்பினேன். ஒரு கட்டத்தில் அவனை இனி பார்க்கமுடியாது என்பது எனக்கே புரிந்துவிட்டது.
தங்கமாக
மாறாத சவண்டல் முத்துகளைப் பார்க்கப்பார்க்க அழுகை பொங்கியது. வத்திப்பெட்டியை கையில் வைத்துக்கொண்டு மனபாரம் குறையும் வரைக்கும் தோப்புக்குள் பல நாட்கள் அலைந்தேன். கடைசியில் ஒருநாள் பொழுது சாய்ந்த வேளையில் தோப்பின் மூலையில் ஒரு பள்ளத்தைத் தோண்டி புதைத்துவிட்டுத் திரும்பினேன்.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பு
நடந்ததெல்லாம்
நேற்று நடந்து முடிந்த சம்பவம்போல நினைவுக்கு வருவது ஆச்சரியமாக இருந்தது. அந்தக் கணத்தில்தான் ஊருக்குள் எங்காவது ஓரிடத்தில் சவண்டல் மரத்தைக் கண்டுவிட வேண்டுமென்றும், கனிந்து சடைசடையாகத் தொங்கும் அதன் விதைக்கொத்தைப் பிரித்து உள்ளங்கையில் ஏந்தவேண்டுமென்றும் திடீரென ஒருவித ஆவல் எழுந்தது.
வீட்டைவிட்டு
இறங்கி தோப்பை நோக்கி நடக்கத் தொடங்கினேன். பழைய காலம்போல எளிதாக இறங்கி உள்ளே சென்றுவிட இயலாதபடி பல இடங்களில் முட்கம்பி வேலி போட்டிருந்தார்கள். கிணற்றுப்பாசனம் இருந்த இடத்தில் இப்போது வாழைத்தோப்பு மட்டுமே இருந்தது. எதிர்ப்புறத்தில் பாசனத்துக்கு வழியில்லாத இடத்தில் புளிய மரங்கள் நின்றிருந்தன. ஒரு நடை நாலுபக்கமும் சுற்றி நடந்து பார்த்தேன்.
புளியம்பழங்கள் சடைசடையாகத்
தொங்கின. பழத்தின் காம்பை இரு விரல்களுக்கிடையில் பிடித்து அசையவிட்டு “தொங்கட்டான்மாதிரி ஆடுது பார்த்தாயா?” என்று கண்கள் மின்ன சொல்லும் வீரமுத்துவின் குரல் காதருகில் கேட்பதுபோல உடல்சிலிர்த்தது. . நாக்கில் எச்சிலூறவைக்கும் அந்தப் பழங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒருவர் என்னை நோக்கி வந்து “நம்ம தோப்பு புளி அப்படியே தேன்மாதிரி இருக்கும் சார். இந்த வருஷம் அடிச்சி உரிச்சி பானையில போட்டு அடச்சி பழம்புளியாக்கி அடுத்த வருஷம் எடுத்து நீங்க ரசம் வச்சாலும் சரி, மீன்குழம்பு வச்சாலும் சரி, நம்ம தோப்பு புளியுடைய ருசி அப்பதான் புரியும்” என்று சொன்னார். நான் ஒரு மரியாதைக்காக அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். “ஏபாரத்துக்குப் பார்க்கறீங்களா சார்? இத ஏற்கனவே குத்தகைக்கு எடுத்துட்டாங்களே. வேணும்ன்னா மலராஜன்குப்பத்துல ஒரு தோப்பு இருக்குது, பார்க்கறீங்களா?” என்று மேலும் நெருங்கி வந்தார். “நான் சும்மா வேடிக்கை பார்க்க வந்த ஆள்தான்” என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினேன்.
ஒரு
மூலையில் ஆறேழு குட்டைப்பப்பாளி மரங்கள் நின்றிருந்தன. பழங்கள் மிகவும் தாழ்வான உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்தன. ஏற்கனவே சில பழங்கள் அவற்றின் வேரடியில் மண்குவியலில் விழுந்து கிடந்தன. யாரோ ஒரு சிறுவன் புதர்களையும் முட்செடிகளையும் விலக்கியபடி அந்தக் குவியலைநோக்கிச் செல்வதைப் பார்த்தேன். விழுந்திருக்கும் பழங்களை எடுத்து முகர்ந்துபார்த்துவிட்டு, இரண்டைமட்டும் எடுத்துக்கொண்டு திரும்பி நிழலிருக்கும் இடத்தைத் தேடிக்கொண்டு சென்றான்.
மரங்களைப்
பார்த்துக்கொண்டே
வந்ததில் ஊர் எல்லையையே
அடைந்துவிட்டேன். நாலைந்து அரசமரங்களின் நிழலில் ஐயனாருக்கு விடப்பட்ட மண்குதிரைகள் நின்றிருந்தன. உடைந்த அவற்றின் காதோரமாக குயில்கள் அமர்ந்து கூவிக்கொண்டிருந்தன. புல்தரையில் சிதறிக்கிடக்கும் நாவல் பழங்களை காக்கைகள் கொத்தின.
எந்த
இடத்திலும் சவண்டல் மரம் இல்லை என்பது விசித்திரமாக இருந்தது. ஒரு காலத்தில் பார்க்கும் இடங்களிலெல்லாம் நின்றிருந்த சவண்டல் மரங்களில் ஒன்றுகூட பார்வையில் தென்படவில்லை. அவை எப்படி தானாக அழியக்கூடும் என்பதே புரியவில்லை.
நான்
திரும்பி மேற்குநோக்கி நடந்தேன். காவல் நிலையத்தைச் சுற்றி ஏராளமான வேப்பமரங்களும் ஒதியமரங்களும் நின்றிருந்தன. சாலையோரப் பூவரசமரங்களில் குரங்குகள் ஏறி விளையாடிக் கொண்டிருந்தன. வீட்டுமனைகளாக சமீபத்தில் பிரிக்கப்பட்ட தென்னந்தோப்புக்குள் வியாபாரத்துக்காகவே ஒரு தற்காலிகக்கொட்டகையை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். புற்றுகளால் சூழப்பட்ட ஒரு வேப்பமரம் வழிபாடும் இடமென மாறிக்கொண்டிருந்தது.
அத்தி,
இலுப்பை, வாதுமை, மூங்கில், புங்கன் என எல்லா மரங்களும் ஏதேனும் ஒரு வீட்டு வாசலிலோ தோப்பிலோ படும் சூழலில் எந்தவொரு இடத்திலும் சவண்டல் மரமே இல்லை என்பதை ஒவ்வொரு கணமும் அதிர்ச்சியுடன் மனம் குறித்துக்கொண்டே இருந்தது. ஆயினும் நம்பிக்கையை இழக்காமல் ஏதோ ஒரு திருப்பத்தில் எதிர்ப்படக்கூடும், ஏதோ ஒரு பள்ளத்திலோ மேட்டிலோ காற்றில் அசைந்தபடி நின்றிருக்கக்கூடும் என எனக்கு நானே சொன்னபடி இருட்டும் வரைக்கும் போய்க்கொண்டே இருந்தேன்.
எங்கும் சவண்டலே இல்லை.