ஆங்கில எழுத்துக்களின் வரிசையின்படிதான் எங்கள்
நாலாவது வகுப்பு அட்டன்டன்ஸ் புத்தகத்தில் பெயரெழுதி இருந்தார்கள். அடர்த்தியான
பச்சை வர்ணத்தில் பைண்டிங் செய்த அந்த அட்டென்டன்ஸ் புத்தகத்தை பார்ப்பதற்கே
மிரட்சியாய் இருக்கும். வீட்டில் இருந்து பள்ளிக்கூடம் செல்கிற வழியில்கூட இந்த
விஷயம் ஞாபகத்துக்கு வந்த கையோடு பயமும் சேர்ந்துவிடும். ஏற்கனவே அம்மாவும்
ஆயாவும் சொன்ன கதைகளில் இருந்து எமனுக்கு அந்தரங்கக் காரியதரிசியான சித்ரகுப்தன்
பற்றியும் அவன் சகல நேரங்களிலும் சுமந்த ஜனன மரணப் பதிவேடு பற்றியும் ஒரு உருவம்
எனக்குள் திரண்டு உருவாகி இருந்தது. அந்த உருவத்தையும் அட்டன்டன்ஸ் புத்தகத்தையும்
சம்பந்தப்படுத்திப் பார்த்துப்பார்த்து மனசுக்குள் ஒரு கலக்கத்தை
உருவாக்கிக்கொண்டேன்.
ஒன்பது மணிக்குப் பள்ளிக்கூடம். இறைவணக்கம் முடிந்ததும்
வரிசைவரிசையாய் வகுப்பறைக்குச் செல்வோம். கடைசிப் பையன் உள்ளே நுழைகிறபோதே ராமதாஸ்
சார் வந்து விடுவார். ராமதாஸ் சார் என்றாலே சிம்மசொப்பனம். பிள்ளைகள் எல்லாம்
அவரவர்கள் இடத்தில் நின்றுகொண்டே ‘வணக்கம் ஐயா’ சொல்லுவோம். ‘ம்ம்’ என்று சொல்லிக்கொண்டே
அவர் மேசைக்குப் பக்கத்தில் போய் நின்று ‘உட்கார்’ என்கிற மாதிரி சைகை செய்வார்.
அந்தக் குரலும் செய்கையும் அசலான சிங்கத்தையே நினைவுபடுத்தும் எனக்கு. மேலும்
மேலும் மனசு கலக்கத்தில் உழலும்.
பியூன் முனுசாமிதான் அட்டன்டன்ஸ் புத்தகங்களைச்
சுமந்து வருவான். அவன் தோளில் ஏழெட்டுப் புத்தகங்கள் இருக்கும். அவன் தோள்பட்டையிலிருந்து
தலையின் உயரத்துக்குச் சரியாக இருக்கும். இந்த வகுப்புக்கு எந்தப் புத்தகம்
என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது. சார் முன்னால் நின்று ஒவ்வொன்றாய்த் தோளில்
இருந்து எடுத்து நீட்டி ‘இதா?’ என்பான். சார் ‘ம்ஹும்’ என்பார். மறுபடியும்
இன்னொரு புத்தகத்தைத் தோளில் இருந்து இறக்கி ‘இதா?’ என்பான். அந்தப் புத்தகமாகவும் இருக்காது. சார் தலையசைப்பார். இத்தனை
நாழிக்குள்ளேயே அவருக்கு ஆத்திரம் ஏறிவிட்டிருக்கும். ‘முண்டம் முண்டம் கொஞ்சமாச்சும் மூள இருக்கா, படிக்கத்தான் தெரியல. ஒன்னு ரெண்டாவது தெரிஞ்சிக்கறதுக்கு இன்னா கேடு? மாசம் பொறந்தா சம்பளம்
வாங்கற இல்ல? நாலாங்கிளாஸ்க்கு
ஏழாவது எட்டாவது அட்டன்டன்ஸ் நீட்டறியே...’ என்று சத்தம் போடுவார். அவர் திட்டும் சத்தத்தைக் கேட்கிறபோது எங்களுக்கு
அப்படியே வயிற்றில் புளியைக் கரைக்கிறமாதிரி இருக்கும். உடம்புக்குள் சகல
உறுப்புகளும் நடுங்குகிறமாதிரி இருக்கும். குரலின் அதிர்ச்சியில் என்றைக்காவது ஒரு
நாள் இந்தக் கூரையும் விழுந்துவிடும் என்று தோன்றும். ஆனால் முனுசாமிக்கு
அப்படியெல்லாம் தோன்றாதுபோலும். காதிலே எதுவும் விழாததுமாதிரி காவிக்கறையேறிய பற்களைக்
காட்டிச் சிரித்தபடி இன்னொரு புத்தகத்தை நீட்டி ‘இதா?’ என்பான்.
‘ஏ’ என்கிற எழுத்தில்
ஆரம்பமாவது ஆனந்தன் பெயர் மட்டும்தான். அவன் ‘உள்ளேன் ஐயா’ சொன்ன கையோடு என்
பெயர் சொல்லப்பட்டுவிடும். அவர் கூப்பிட்டு நான் கை தூக்கி சொன்ன பிற்பாடுதான்
மனசு திருப்திப்படும். கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது பயம் நீங்கி ஆசுவாசமாக
உணர்கிறமாதிரி இருக்கும். அதைக்கூடக் கெடுத்து விட்டிருந்தான் இந்தச் சின்னச்சாமி
பையன். என் பெயருக்கு அடுத்த பெயர் அவன்தான். என்னைக் கூப்பிட்டு முடித்ததும் கையை
மேலே உயர்த்தி ‘உள்ளேன் ஐயா’ என்று தயாராய் இருக்கவேண்டும்
அவன். அப்படி ஒரு சூழலைத்தான் ராமதாஸ் சாரும் எதிர்பார்த்திருந்தார். இது நடக்காத
பட்சத்தில் அவருக்குக் கண்மண் தெரியாமல் கோபம் வந்துவிடும். மறுபடி பார்க்க
நேரும்போது அறைந்து விடுவார். கால்சட்டை நனைந்து விடுகிறமாதிரி நிற்கவைத்து
திட்டுவார். வராத பையனுக்குத்தான் இந்த நிலைமை என்றாலும் சின்னசாமி வராததற்கு
நானும் அனுபவிக்க வேண்டி இருந்தது துரதிர்ஷ்டம் தான்.
‘பாலாஜி’
‘சார்’
‘ஏன்டா சின்னசாமி வரல?’
‘தெரில சார்...’
‘ஒங்க ஊட்டுக்குப் பக்கத்து ஊடுதானடா அவன்?’
‘ஆமா சார்...’
பக்கத்தூட்டுப் பையன் ஏன் ஸ்கூலுக்கு வரலன்னு
தெரியாதா...?’
‘தெரில சார்’
‘ஊருக்குப் போயிருக்கானா?’
‘தெரில சார்...’
‘ஒடம்பு கிடம்பு சரியில்லியா...’
‘தெரில சார்...’
‘த்தூ. தெரில தெரிலங்கறதுக்கு ஒனக்கு கண்ணு எதுக்கு காது எதுக்கு மூள எதுக்கு? அறுத்துப் போடுடா எல்லாத்தயும். கடவுள் எதுக்குடா குடுத்திருக்கான் இதெல்லாம்? எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும்ன்னுதான். களிமண்ணு மாதிரி நிக்கறதுக்கில்ல. நாளக்கி இன்னா விஷயம்னு
தெரிஞ்சிக்கினு வரணும். புரிதா...?’
‘சரி சார்...’
அந்த நிமிஷத்தில் இருந்து என் பயமும் ஆரம்பித்தது.
சின்னசாமி வராததற்கு என்னை இப்படி ஆட்டுவிக்கிறாரே என்று கலவரப்பட்டது மனசு.
ஏற்கனவே சீக்குக்கோழி மாதிரி என் உடம்பு காற்றோ மழையோ கொஞ்சம் அதிகமானாலும் கூட
உடம்புக்கு எந்த வியாதியாவது வந்து சேரும். சின்னசாமி வராததைப் பெரிய விஷயமாக்கி
மிரட்டப்பட்டதும் மீண்டும் வியாதி வரும்போல இருந்தது எனக்கு. சாயங்காலம்
வீட்டுக்குத் திரும்பியபோது உற்சாகமிழந்திருந்தாலும் எப்படியும் ஆறுமணி சங்கு
ஊதுவதற்குள் சின்னசாமி பற்றி புலன் விசாரணை செய்துவிடவேண்டும் என்று பரபரத்தது
எனக்கு. ஆறுமணிக்குப் பிறகு வெளியே இறங்கிப் போகமுடியாது. ராமசாமி சார் மாதிரியே
அம்மா காலை ஒடித்து விடுவாள். புத்தகப்பையை ஆணியில் தொங்கவைத்துவிட்டு அம்மா
கொடுத்த கேழ்வரகு அடையைத் தின்றுவிட்டு பாப்பாவோடு கொஞ்ச நேரம் ஆடுகிறமாதிரி ஆடி
இருந்துவிட்டு மெதுவாய் வெளியேறினேன்.
சின்னசாமி வீடு சாத்தி இருந்தது. கதவை மூடிக்கொண்டு
தூங்கினாலும் தூங்கக்கூடும் என்று நினைத்து பெயரைச் சொல்லி கூப்பிட்டபடியே கதவைத்
தள்ளித் திறந்தேன். உள்ளே யாரும் இல்லை. அடுப்புக்குப் பக்கத்தில் படுத்துக்கிடந்த
பூனை ஒன்று என்னைக் கண்டு மிரண்டு டக்கென்று சுவரில் ஏறி இறவாணத்தின் வழியே இறங்கி
ஓடியது. பழைய பாய் ஒன்று மூலையில் கிடந்தது. முதலில் இருந்த மாதிரியே கதவை
இழுத்துச் சாத்திவிட்டு வெளியே வந்து நின்றுகொண்டேன்.
சின்னசாமிக்குக் கணக்கும், ஆங்கிலமும் விஞ்ஞானமும் எப்போதும் கஷ்டமான பாடங்கள். மாதாந்திர டெஸ்ட்டுகளில்
எல்லாம் நூற்றுக்கு ஏழு எட்டு என்றுதான் எடுப்பான். இங்கிலீஸ் டிக்டேஷன் கொடுத்தால்
பட், கட் என்று எப்பவாவது
சுலபமான வார்த்தைகள் வரும்போது மாத்திரம் ஒன்று, இரண்டு என்று எடுப்பான். மீதி நேரங்களில் எல்லாம் சைபர்தான். இதனாலேயே ராமதாஸ்
சாரிடம் எக்கச்சக்கமாக, திட்டும் உதைகளும்
வாங்குவான். ‘முண்டம் முண்டம்’ என்று குனியவைத்து முதுகில் பட் பட்டென்று துணிதுவைக்கிறமாதிரி சரமாரியாய் அடித்து விடுவார்.
சில சமயங்களில் சுவரோடு ஒட்ட வைத்து நாற்காலி போடவைத்து விடுவார். இதனால்தான்
சின்னசாமி ஸ்கூலைவிட்டு நின்றுவிட்டானோ என்று சந்தேகம் வந்தது. கூடவே ‘அடிச்சிஅடிச்சி
வெரட்டிட்டு எதுக்கு வரலன்னு என்னயே மெரட்றாரு’ என்று சார் மேல் கோபமாய் வந்தது. ஆனாலும் வெளியில் இதையெல்லாம் காட்ட
சாத்தியமில்லை. அதன் விளைவுகள் எல்லாம் பயங்கரமாய் இருக்கும். கிறுவி, கர்வி என்று பட்டங்கள்
வரும். சார் உதைப்பது போதாதென்று அம்மாவும் அடிப்பாள். எனவே கூடியவரைக்கும்
சின்னச்சாமியைச் சமாதானப்படுத்தி பள்ளிக்கூடத்துக்கு அழைக்கவேண்டும் என்று
நினைத்தேன். அடியின் வலியிலும் வேதனையிலும் மேலும்மேலும் பிகு செய்து ஒருவேளை
சின்னசாமி மறுத்தாலும்கூட ‘இனிமே சாயங்காலம்
வௌயாடற நேரத்துல இங்க்லீஷ் கணக்குல்லாம் சொல்லிக்குடுக்கறண்டா சின்னசாமி.
பத்துக்கு அஞ்சி ஆறுன்னு வாங்கற அளவுக்காவது கத்துக் குடுக்கறன்டா, கவலப்படாத’ என்று தேற்றி
தைரியப்படுத்தி அழைக்க வேண்டும் என்று முடிவுசெய்தேன்.
சாணிக்கூடையை தூக்கிக்கொண்டு வந்த சின்னச்சாமியின்
அம்மாதான் என்னை முதலில் பார்த்தாள். வாசலிலேயே நின்றிருந்த என் கோலம் அவளுக்கு ஆச்சரியம்
தந்திருக்க வேண்டும்.
‘யாரு...?’
‘நான்தான் பாலாஜி...’
‘எதுக்கு நிக்கற இங்க’
‘சின்னசாமி இல்லியா...?’
‘இல்ல’
‘அவனத்தான் பாக்கணும்னு நிக்கறன்.’
‘எதுக்கு?’
‘நாலு நாளா அவன் பள்ளிக்கூடத்துக்கு வரல. அதான் சார் அவனப் பாத்து
கூப்பிட்டாரச் சொன்னாரு...’
‘அதல்லாம் வரமாட்டான்னு போய்ச் சொல்லு’
ரொம்ப சாதாரணமாய் அவள் சொன்ன பதில் எனக்கு பயத்தைத்
தந்தது. இத்தனை நேரம் வரைக்கும் சின்னசாமியைச் சமாதானப்படுத்துகிற கற்பனை மறைந்து
மனசுக்குள் சார் பற்றியும்,
இந்த பதில் மூலம் நேரப் போகிற சம்பவங்கள் பற்றியும் பயம் பரவி உடம்பு உதறியது
எனக்கு.
‘நாளக்கித்தான் வரமாட்டானா? இல்ல எப்பவும் வர மாட்டானா...?’
‘எப்பவும்தான்டா போ...’
அப்புறம் பேச எதுவுமில்லை என்கிற மாதிரி முந்தானையை
உதறி முகத்தைத் துடைத்தபடி போய்விட்டாள் அவள். கொஞ்ச தூரம் நடந்து தந்திக்
கம்பந்தோறும், கோயில் வாசல்படியில், பாலத்துப் பக்கம்
என்று என்னமோ தெருவை வேடிக்கை பார்க்கிறமாதிரி மாறிமாறி நின்று சின்னசாமி
வரமாட்டானா என்று பதைபதைப்போடு எதிர்பார்த்தேன் நான். அவனைப் பார்த்து ஒரு
வார்த்தையாவது கேட்க மனசு துடித்தது.
‘வௌக்கு வச்சப்றமும் தொரைக்கு ஆட்டம் கேக்குதா...?’
பின்பக்கமாகவே வந்த அம்மா மடேர் என்று பிரம்பால்
அடித்த பிற்பாடுதான் சுயநினைவு வந்தது. வலியில் ‘ஐயோ, ஐயோ’ என்று அழுதேன். ‘இன்னாடா ஆட்டம் ஒனக்கு?’ என்று அம்மா மீண்டும்
அடிக்க விசையுடன் கையை ஓங்கினாள். தப்பிக்க நகர்ந்த என் முயற்சிகள் பயனற்றுப்
போயின. கொத்தாக மயிரைப் பிடித்து மறித்து அந்தப்பக்கம் இந்தப்பக்கம் அரைஅடிகூட நகர
முடியாமல் செய்துவிட்டாள் அம்மா. ‘சும்மாதாம்மா...’
சின்னச்சாமியின் விஷயத்தைச் சொல்ல எனக்குப் பயமாய்
இருந்தது.
‘நட ஊட்டுக்கு’
வீட்டுள் கொஞ்ச நேரம்கூட எனக்கு இருப்புகொள்ளவில்லை.
பக்கத்து வீட்டில் சின்னசாமியின் குரல் எப்பவாவது கேட்காதா என்று கூர்மையாய்க்
காது கொடுத்து கேட்டபடி இருந்தேன். ராத்திரி தூங்கப் போகிற வரைக்கும் கூட எந்தத்
தடயமும் இல்லை. நேரம் ஆக ஆக என் பயமும் அதிகமாகியது. நடுநடுவில் ராமதாஸ் சாரின்
முகம் ஓரிரு நிமிஷங்கள் மனசுக்குள் ஓடியது.
மறுநாள் தூங்கி எழுந்தபோது எந்த ஞாபகமும் இல்லை.
படிப்பும் எழுத்துமாய் கொஞ்ச நேரம் ஓட்டிவிட்டு குளித்து உடைமாற்றி பள்ளிக்கூடப்பையை
எடுக்கப் போகும்போதுதான் சுரீர் என்று சின்னசாமியின் விஷயம் ஞாபகம் வந்தது.
எல்லாச் சூழல்களிலிருந்தும் சட்டென்று மனம் விலகி பதட்டம் கூடியது.
மெதுவாய் வீட்டை விட்டிறங்கி சின்னசாமியைப் பார்க்க
ஓடினேன். நல்லவேளை, நான் போன நேரத்துக்கு
சின்னசாமி திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தான். பள்ளிக்கூடம் கிளம்புகிற நேரத்தில்
துளிக்கூட அவசரமில்லாமல் அவன் தூங்கிக்கிடப்பதைப் பார்க்க ஆச்சரியமாய் இருந்தது.
அருகில் நெருங்கி மேலே கிடந்த போர்வையை இழுத்தேன். கொஞ்சம் கூட அசைவில்லாமல்
கிடத்தான் சின்னசாமி. ஒல்லிக்குச்சியான உடம்பு. அரிசி அளக்கிற மாகாணி மாதிரி
கழுத்து சிறுத்துக் கிடந்தது. கறுத்த முகம், மந்தரித்துக் கட்டிய தாயத்து. எலும்பு தெரிகிற மார்பு. கம்பந்தட்டை மாதிரி
துருத்திக்கிடந்த தோள்பட்டை எலும்பு. என்னமோ இரவு முழுக்க பாரத்தைச்
சுமந்துகிடந்தவன்மாதிரி அசைவில்லாமல் கிடந்தான்.
‘சின்னசாமி...’
மெதுவாய் கிசுகிசுத்தேன். ஒன்றும் பதில் இல்லாமல் போக
நாலைந்து தரம் தொடர்ந்து கிசுகிசுத்தேன். அதற்கும் பதிலற்றுப் போனதும் உடம்பைத்
தொட்டு உலுக்கினேன். சின்னதாய்க் கண் விழித்த சின்னசாமியைப் பார்க்க சந்தோஷமாய்
இருந்தது. இனி எழுந்து உட்கார்வான் என்று எதிர்பார்க்கும்போது அவன் மீண்டும்
கண்களை மூடிக்கொண்டான். அதிர்ச்சியாய் இருந்தது எனக்கு. மீண்டும் சத்தமிட்டு
உலுக்கினேன். இந்த முறை என் சத்தத்தைக் கேட்டு உள்ளிருந்து அவனுடைய அம்மா
வந்துவிட்டாள்.
‘யாரது தூங்கறவன
எழுப்றது...?
‘நான் தா பாலாஜி...’
‘எதுக்கு அவன எழுப்ற?’
‘பள்ளிக்கூடத்துக்கு...’
‘அவன் வரமாட்டான்னு நேத்தே சொன்னன்ல்ல. போ.. போ.. அவன தூங்க உடு...’
இப்போதாவது அவன் எழுந்து விடுவான் என்று நப்பாசையாய்
இருந்தது எனக்கு. ஆனாலும் அப்படி எந்த ஆச்சர்யமும் நடக்கவில்லை. அசையாமல் ஒரு
கன்றுக்குட்டி மாதிரி தூங்கிக்கிடந்தான் அவன். அவனையும் அவன் அம்மாவையும்
மாறிமாறிப் பார்த்துவிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போய்விட்டேன் நான்.
அட்டன்டன்ஸ் புத்தகத்தைக் கையால் புரட்டும் ராமதாஸ்
சார்க்கு என்ன பதில் சொல்வது என்று குழப்பமாய் இருந்தது. என் வார்த்தைகளில்
நம்பிக்கை அற்றுப் போகும் பட்சத்தில் அனாவசியமாய் வசவுகள் வாங்க வேண்டுமே என்று
கலவரப்பட்டது மனசு.
‘பாலாஜி...’
‘உள்ளேன் ஐயா...’
அடுத்த பெயரைக் கூப்பிடாமலேயே என்னை நிமிர்ந்து
பார்த்தார். சிங்கம் சுண்டெலியைப் பார்க்கிற மாதிரி இருந்தது.
‘சின்னச்சாமிய பாத்தியாடா...?’
‘ம் சார்’
‘பின்ன எதுக்கு கூப்ட்டாரல...?
‘தூங்கனான் சார். எழுப்பிஎழுப்பிப் பாத்திட்டு வந்துட்டன் சார்...’
‘பொய் சொல்லாதடா. பொய் சொல்ற வாய்க்கு போஜனம் கெடைக்காது...’
‘சத்தியமா, தூங்கனான் சார்’
‘சிச்சீ. எல்லாத்துக்கும் சத்தியம் செய்யாதடா முண்டம்’
‘நெஜமா பாத்தன் சார். தூங்கனான் சார், கண்ண தெறந்துட்டு மறுபடியும் தூங்கிட்டான் சார்’
‘நாளக்கி இட்டாறியா...?’
‘ம் சார்’
‘அவன இட்டுக்னுதா உள்ள நொழயணும் நீ. இல்ல திருப்பி
அனுப்ச்சிடுவேன்...’
‘சரி சார்!’
சாயங்காலம் திரும்பி வரும்போது கொஞ்சம்கூட உற்சாகம்
இல்லை. களையற்றுக் கிடக்கிற முகத்தைப் பார்த்து ‘ஜொரம் அடிக்குதாடா’ என்று பத்து
தரமாச்சும் கேட்டாள் அம்மா. கழுத்திலும் மார்பிலும் தொட்டுத் தொட்டு உடம்புச்
சூட்டைச் சோதித்தாள். எதிலும் அக்கறையில்லாமல் வெளியே வந்தேன். பிள்ளைகள் எல்லாம்
பம்பரம் ஆடிக்கொண்டிருந்தார்கள். மெதுவாய் நடந்து சின்னச்சாமியின் வீட்டுப்பக்கம்
பார்த்தேன். வீடு சாத்தி இருந்தது. வருத்தத்தோடு கோயில் பக்கம் போய்
உட்கார்ந்தேன். எந்தத் திசையிலிருந்தாவது சின்னசாமி வந்துவிடமாட்டானா என்று
நினைத்தேன்.
எதேச்சையாய் திரும்பியபோது கிராமணி கடைப்பக்கமிருந்து
சின்னசாமி வந்துகொண்டிருந்தான். இரண்டு கைகளாலும் அணைத்தபடி தலையில் பெரிய
பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு வந்தான். முதலில் அவன் சின்னசாமிதானா என்று சந்தேகம்
வந்து கால் நிஜார் நிறத்தையும், எலும்பான உடம்பையும் வைத்துத்தான் அடையாளம் காணமுடிந்தது.
‘சின்னசாமி...’
அவசரமாய் எழுந்து ஓடினேன். நொடியில் எனது கஷ்டங்கள்
எல்லாம் மறைந்துவிட்ட மாதிரியும் எல்லாப் பிரச்சனைகளும் தானாகவே ஒரு முடிவுக்கு
வந்த மாதிரியும் தோன்றியது. மூச்சு இரைக்கஇரைக்க அவன் பக்கத்தில் போய் நின்றேன்.
அவனும் நின்று என்னைப் பார்த்தான். அந்தப் பெரிய பாத்திரத்தைத் தூக்கமுடியாமல்
உடம்பு தள்ளாடுகிற மாதிரி இருந்தது. சோனியான அவன் நெஞ்சக்கூடும் உள் வாங்கிய
கண்களும் சங்கடப்படுத்தியது.
‘இன்னாடா...?’
‘காலைல எழுப்பஎழுப்ப ஏன்டா அப்பிடி தூங்கன? நா கூப்ட்டது காதுல உழலியா...?’
‘ம்ஹும்...’
‘ஒங்கம்மா சொல்லலியா...’
‘ம்ஹும்...’
‘நேத்லேந்து ஒன்னத் தேடறேன் தெரிமா...?’
‘சீக்கிரம் சொல்டா பாலாஜி. தல வலிக்குது. போவணும்’
‘எதுக்குடா ஸ்கூலுக்க வரமாட்டற...?’
‘எதுக்கு கேக்கற...?’
‘ராமதாஸ் சாருக்கு ரொம்பக் கோவம். நீ வரலன்னு ஒரே ஆத்தரம். பாத்து கையோட
கூப்ட்டாரணும்னு எங்கிட்ட
சொன்னாரு. இன்னிக்கு நீ தூங்கனன்னு சொன்னப்போ நம்பவே இல்ல தெரிமா...’
சின்னசாமியின் முகம் மிகவும் துக்கம் கொள்கிற மாதிரி
இருந்தது. உணர்வே இல்லாமல் சில நிமிஷங்கள் நின்றிருந்தான். கண்ணின் கோடியில்
வருத்தம் தேங்கியது.
‘ஸ்கூலுக்கெல்லாம் நா இனிமே வரமாட்டன்டா பாலாஜி...’
‘சார் ஒன்ன இனிமே அடிக்க மாட்டார்டா வாடா’
‘அதுக்கில்லடா பாலாஜி...
‘கஷ்டமான பாடத்தயெல்லாம் நான் சொல்லிக் குடுக்கறன்டா. டெஸ்ட்ல நெறயா மார்க்
வாங்கலாம்டா’
‘த்ச். அதுக்கில்லடா பாலாஜி...’
‘பின்ன எதுக்குடா...?’
‘சினிமா கொட்டாய்ல முறுக்கு விக்கறன்டா நானு. ஸ்கூல்லாம் இனிமே கெடையாதுன்னு
அம்மா சொல்லிடுச்சி. இப்பகூட முறுக்கு மாவுதா அரச்சிம் போறன்.’
எனக்கு வருத்தமாய் இருந்தது. நம்புவது கஷ்டமாய்
இருந்தது. எதனுடன் இதைச் சம்பந்தப்படுத்திக்கொள்வது என்று புரியவில்லை. அவன்
பேசப்பேசக் குரலின் ஏறிய வருத்தமும், முகத்தில் படிந்த கோடுகளும், கண்களில் தெரிந்த விவரம் புரியாத அச்சமும் என்னை ஒடுங்கச் செய்தது.
‘நா வரன்டா பாலாஜி, மொதலாளி திட்டுவாரு’
மரம் மாதிரி நான் நின்றிருந்தபோதே சின்னசாமி நகர்ந்து
விட்டான். பாதங்களை அழுத்திஅழுத்தி வைத்து இடுப்பை ஒடித்து சுமப்பதற்கான உறுதியை
உண்டாக்கிக்கொண்டு அவன் நடந்து சென்ற விதம் மனத்தில் பதிந்தது.
மறுநாள் காலையில் எதிர்பார்த்தமாதிரி ராமதாஸ் சார்
அட்டென்டன்ஸ் புத்தகத்தை வைத்துக்கொண்டு சின்னசசாமியைப் பற்றிக் கேட்டார்.
‘அவன் பள்ளிக்கூடம்லாம் வரமாட்டானாம் சார். வேலைக்கிப் போறான் சார்.’
‘அவனப் பாத்தியா நீ?’
‘அவனேதான் சார் சொன்னான்’
‘இன்னான்னு சொன்னான்?’
‘சினிமா கொட்டாய்ல முறுக்கு விக்கறன். ஸ்கூலுக்குல்லாம் வரமாட்டன்னு...’
அடுத்த நொடி திடுதிடுவென்று நடந்துவந்து என்
வார்த்தைகளில் நம்பிக்கையற்று உச்சந்தலையைப் பிடித்து உலுக்கி நாலு சாத்து சாத்தப்
போகிறார் என்று நினைத்தபடி கலக்கத்தோடு ராமதாஸ் சாரைப் பார்த்தேன். அட்டென்டன்ஸ்
புத்தகத்தை அப்படியே மேசைமேல் சரித்துவிட்டு நாற்காலியின் உட்கார்ந்தார் சார்.
கொஞ்சநேரம் அந்தப் புத்தகத்தையே வெறித்தபடி இருந்தார். ஒரு வார்த்தைகூட இல்லாமல்
வெட்டி விழுந்த கிளை மாதிரி சாய்ந்திருந்தார்.
அன்றைய தினத்துக்கு அட்டென்டன்ஸை எடுக்கவே இல்லை.
எதுவும் புரியாமல் குழப்பத்தோடு சாரின் முகத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன்
நான்.
(இந்தியா டுடே 1989)