Home

Thursday, 23 April 2020

ஏரிக்கரையும் பச்சைக்கிளியும் - கட்டுரை



1982இல்மானச சரோவர்என்னும் பெயரில் ஒரு கன்னடத் திரைப்படம் வெளிவந்தது. புட்டண்ணா கனகல் இயக்கிய படம். நாரிஹள்ள ஏரியைச் சுற்றி நடப்பதுபோல அதன் திரைக்கதையை அவர் அமைத்திருந்தார். அந்த ஏரியை அவர் காட்சிப்படுத்தியிருந்த விதம் அதை உடனே பார்க்கத் தூண்டியது. நானும் திவாகரும் அந்தத் திரைப்படத்தைப் பார்த்தோம். திரும்பி வரும்போது நான் அந்த ஏரியின் அழகைப்பற்றியே பேசிக்கொண்டு வந்தேன். அந்த ஏரியையும் கனகல் ஓர் அமைதியான பாத்திரம்போல கதைக்குள் கொண்டு வந்திருந்தார்.


அந்தத் திரைப்படமே அமைதிக்கும் அமைதியின்மைக்கும் இடையிலான முரணைப்பற்றியது. பேரமைதியின் அடையாளமாக படம் நெடுக அந்த ஏரி இடம்பெறுகிறது. மனம் குழம்பிய ஒரு பெண் முதலில் பிச்சியென அதன் கரையோரத்தில் திரிகிறாள். பிறகு அதே கரையோரத்தில்தான் குணப்படுத்தப்படுகிறாள். துரதிருஷ்டவசமாக, அவளைக் குணப்படுத்தும் மருத்துவர் அதே கரையோரம் பித்துப் பிடித்து அலையத் தொடங்குகிறார். அமைதியான ஏரி அனைத்துக்கும் சாட்சியாக எல்லாவற்றையும் கடந்து பார்த்தபடி இருக்கிறது.

நான் அன்று இரவு நெடுநேரம் வரைக்கும் அந்த ஏரியைப்பற்றிப் பேசியபடியே இருந்தேன். அதைக் கேட்டு திவாகர்ஒருநாள் நாம அந்த ஏரிக்கு போய்வரலாமா சார்?” என்று கேட்டார். நான் மகிழ்ச்சியோடு தலையசைத்தேன். “இங்கேருந்து பக்கம்தான் சார். நம்ம வண்டியிலயே போய்வரலாம்என்று புன்னகைத்தார். “அடடா, அவ்வளவு பக்கமா? பக்கத்துல இருக்கிற ஏரியைப்பற்றி இத்தனை நாள் தெரிஞ்சிக்காமலேயே இருந்துட்டமேஎன்றேன் நான். திவாகர் சிரித்தார். “அதைப் பார்க்கிறதுக்கான பயண முகூர்த்தம் இப்பதான் அமைஞ்சிருக்குது போலஎன்றார்.

அந்த வார இறுதியிலேயே அவரும் நானும் இரண்டுசக்கர வாகனத்தில் காலையிலேயே புறப்பட்டுச் சென்றோம். ஹோஸ்பெட்டிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஸண்டூரு என்னும் ஊரை முதலில் அடைந்தோம். பச்சைப்பசேலென்ற காடுகளால் சூழப்பட்ட அழகான ஊர். எந்தப் பக்கம் திரும்பினாலும் கவிழ்த்துவைத்த கூடைகள்போல குன்றுகள்.  எப்போதும் ஏதேனும் ஒரு திசையிலிருந்து காற்று புறப்பட்டு எதிர்த்திசையை நோக்கி வீசிக்கொண்டே இருந்தது. எல்லாத் தருணங்களிலும் உடலைத் தழுவும் காற்று.. அந்தக் காற்றுக்கு கோடையைக்கூட குளிர்ச்சிமிக்கதாக மாற்றிவிடும் சக்தி இருப்பதை உணரமுடிந்தது. ஏதோ கொடிகள் அசைவதுபோல  குன்றின்மீது மேகங்கள் அசைந்து நகர்ந்தபடியே இருந்தன. ஒரு கோணத்தில் அவையனைத்தும் பெரிய சிறகுகளை விரித்தபடி வட்டமிட்டுப் பறக்கும் பறவைகளைப்போலக் காணப்பட்டன. 

ஸண்டூரிலிருந்து சிறிது தொலைவு சென்றதுமே நாரிஹள்ளாவைப் பார்த்துவிட்டோம். குன்றை ஒட்டிய பள்ளத்தாக்கில் நீர் தேங்கி ஏரியாக நின்றிருந்தது. மழை பெருகினால் ஆறுபோலப் பெருகி ஓடலாம் என்று தோன்றியது. அந்த ஓட்டத்தைத் தடுக்கும் விதமாக பாறைகளாலேயே தடுப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அதனால் ஓர் அணைபோலவும் அது தோற்றமளித்தது. தெளிந்த நீர். ஆழ்ந்த அமைதி. வானம், மேகம், மரங்கள், பறவைகள் எல்லாவற்றையும் அந்தத் தண்ணீர்த்திரை அருகிலிருப்பதுபோல, கைநீட்டித் தொட்டுவிடலாம் என்பதுபோல காட்டி மாயம் செய்தது. அதைப் பார்க்கப்பார்க்க மனம் பொங்கியபடி இருந்தது.

பாதையோரமாக வண்டியை நிறுத்திவிட்டு, ஒரு பெரிய ஆலமரத்தின் வேர்ப்புடைப்பில் அமர்ந்து ஏரியையே பார்த்தபடி கதை பேசி பொழுதுபோக்கினோம். மரக்கிளையில் ஏராளமான பச்சைக்கிளிகள் கிறீச்சிட்டபடியே இருந்தன. நாலைந்து கிளிகள் மரத்திலிருந்து விர்ரென இறங்கிவந்து எங்களுக்கு அருகில் நின்றன. ஒரு கிளி தரையில் உதிர்ந்திருந்த பழத்தைக் கொத்தியபடிஉங்களை நம்பலாமா மனிதர்களே?’ என்று கேள்வி கேட்பதுபோல எங்கள் பக்கமாகப் பார்த்ததன. செதுக்கியதுபோன்ற அதன் சிவந்த அலகை ஒருகணம் தொட்டுப் பார்க்கும் ஆசையெழுந்தது.

பாறைகளிடையே மெல்ல இறங்கி நடந்து ஏரிக்கு அருகில் சென்றோம். நெடுந்தொலைவுக்கு ஆள்நடமாட்டமே இல்லை. காற்றில் குளிர் அதிகரித்தது. நீண்ட நேரத்துக்கு அங்கே நிற்கமுடியவில்லை. திரும்பி கரையோரமாகவே பாறைகளின் ஊடாக நடக்கத் தொடங்கினோம். பச்சைக்கிளிகளின் சத்தம் கேட்டபடி இருந்தது.

ஒரு திருப்பத்தில் திவாகர் என் முதுகைத் தட்டி நிறுத்தி தொலைவான ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டி பார்க்கும்படி கண்களை அசைத்தார். அங்கே பாறையோடு பாறையாக ஒட்டியபடி ஒருவர் நின்றிருப்பதைப் பார்த்தேன். அவருடைய முதுகுப்பக்கத்தை மட்டுமே நாங்கள் பார்த்ததால் அவர் என்ன செய்கிறார் என்பதை முற்றிலும் புரிந்துகொள்ள இயலவில்லை. நாங்களும் நடக்காமல் அப்படியே நின்றுவிட்டோம். வெகுநேரம் அசைவே இல்லாததைக் கண்டு ஒருசில கணங்கள் அச்சமாகவும் இருந்தது.

ஒருவித பதற்றத்துடன் நாங்கள் அந்தத் திசையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவர் விசைகொண்டதுபோல சட்டென்று திரும்பினார். ஒரு கேமிராவின் வழியாக மறுபுறத்தை அவர் பார்ப்பதையும் படமெடுப்பதையும் அப்போது பார்த்தேன். அவருக்கு எதிரில் ஒரு கிளி மட்டும் பறந்துபோனது. வெகுதூரம் பறந்துபோவதுபோல போக்குக் காட்டிய கிளி ஒரு வட்டமடித்து அதே இடத்துக்குத் திரும்பிவந்து எதிரிலிருந்த வாதுமை மரக்கிளையில் அமர்ந்தது. அவர் சட்டென வேகம் கொண்டு நாலடி தூரம் முன்புறமாக நடந்து கோணம் பார்த்து க்ளிக் செய்தபடி இருந்தார்.

அவர் ஆட்களைப் படமெடுக்கவில்லை, கிளிகளைப் படமெடுக்கிறார் என்பதை திவாகர்தான் முதலில் கண்டுபிடித்துச் சொன்னார். அந்தக் கிளி தொலைவில் பறந்து சென்றதும், நின்ற இடத்திலிருந்து கேமிராவுடன் அவர் திரும்பிய சமயத்தில் நாங்கள் அவரைப் பார்த்துப் புன்னகைத்தோம். மெதுவாக அருகில் சென்று பேச்சுக்கொடுத்தோம்.

அவர் பெயர் ரங்கநாத். அவர் வீடு குன்றையொட்டி இருந்தது. பெல்லாரியில் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை. சனி, ஞாயிறு விடுமுறை. விடுமுறைக்காலத்தில் குன்றுக்கு ஓடிவந்துவிடுவதாகச் சொன்னார். புகைப்படம் எடுப்பது அவருக்குப் பிடித்த பொழுதுபோக்கு. கிளிகளை மட்டுமே நூற்றுக்கணக்கில் படமெடுத்திருப்பதாகச் சொன்னார். அவர் கையிலிருந்த கேமிராவை ஒரு குழந்தையை வருடுவதுபோல  அவர் கைவிரல்கள் வருடியபடி இருந்தன. ”ஒரு ஜூம் கேமிரா வாங்கணும்ன்னு ஆசை சார். ரொம்ப தூரத்துல இருக்கிற கிளியைக் கூட எய்ம் பண்ணி படம் புடிச்சிடலாம். ரொம்ப சுலபம். அதுக்காகத்தான் பணம் சேத்துகிட்டிருக்கேன்என்று சொல்லும்போது அவர் முகம் பிரகாசத்தில் மின்னியது.

வேகமாக ஒரு கிளி அவருடைய தலைக்கு மேல் பறந்துபோனது. எதிரிலிருந்த கிளையில் அமர்ந்துகொண்டு இந்தப் பக்கமாகப் பார்த்து தலையசைத்தது. மறுகணமே சட்டென எழுந்து அவரைக் கடந்து ஒரு பாறைமீது அமர்ந்துகொண்டது.

இங்கே கிளிகள் ரொம்ப அதிகம்னு நினைக்கிறேன்என்று நான் சொல்லிமுடிக்கும் முன்பேரொம்ப ரொம்ப அதிகமாத்தான் ஒரு காலத்துல இருந்தது. இப்ப குறைஞ்சி போச்சுஎன்று வருத்தம் தொனிக்கச் சொன்னார். நாங்கள் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தோம்.

நாங்க ஸ்கூல் படிக்கிற காலத்துல எங்க திரும்பனாலும் கிளியைப் பார்க்கலாம். வாசல்ல காயவைக்கிற சோளத்தையெல்லாம் தின்னுட்டு போவுதேன்னு எங்க அம்மா திட்டாத நாளே கிடையாது. என்னைத்தான் சின்ன வயசுல சோளத்துக்கு காவல் வச்சிட்டு போவாங்க. நான் அதுங்கள வேடிக்கை பார்க்கிற வேகத்துல சோளத்த மறந்துடுவேன். நான் கிளிகளை கையில புடிச்சி விளையாடியிருக்கேன் தெரியுமா?” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் ரங்கனாத். தன் உள்ளங்கையை எங்கள் பக்கமாக அவர் நீட்டியபோது, உண்மையிலேயே அதன்மீது ஒரு கிளி வந்து உட்கார்ந்திருப்பதுபோல இருந்தது. ”சில சமயத்துல எங்க தோள் மேல கூட வந்து உட்கார்ந்துட்டு போவும்என்றார் ரங்கனாத்.

ஏரியைப் பார்க்கவந்த இடத்தில் கிளிகளைப்பற்றிய கதைகள் கிடைத்ததை நினைத்து விசித்திரமாக இருந்தது. “பிரஜாவாணி நடத்திய  புகைப்படப் போட்டியில என் படத்துக்கு ரெண்டு வருஷம் முன்ன முதல் பரிசு கிடைச்சது. பெங்களூருக்கு போய் வாங்கிட்டு வந்தேன்என்று உற்சாகமாகச் சொன்னார். ”அப்படியா, வெரிகுட், வெரிகுட்என்றபடி நான் அவர் கைகளைப் பற்றிக் குலுக்கினேன்.

இங்க பக்கத்துலதான் எங்க வீடு இருக்குது. வரீங்களா, கிளிகளை எடுத்த படங்களை மட்டும் பன்னெண்டு ஆல்பம் போட்டு வச்சிருக்கேன்என்று சொன்னபடி எங்கள் முகங்களையே ஆர்வத்துடன் பார்த்தார். திவாகரின் கண்கள் என்னை நோக்கித் திரும்பின. “சரி, பார்க்கலாம்என்றேன் நான். உடனே ரங்கனாத் முகம் மலர்ந்தது. திவாகரின் இரு சக்கர வாகனத்திலேயே மூன்று பேரும் நெருக்கியடித்து அமர்ந்து. சென்றோம்.

படத்தொகுப்பைப் பிரித்ததுமே ஆச்சரியத்தில் உறைந்துபோனேன்.  எல்லாமே கிளிமயம். பற்பல கோணங்களிலும் கிளியைக் காட்சிப்படுத்தியிருந்தார். பறப்பதுபோல, பழம் கொத்துவதுபோல, நடப்பதுபோல, திரும்புவதுபோல என எத்தனை எத்தனை தோற்றங்கள். கிளிகள் மீது இவ்வளவு நேசமா என்று நினைக்கத் தோன்றியது. மணிக்கணக்கில் உட்கார்ந்து பார்த்தால்மட்டுமே அவற்றை முழுமையாகப் பார்க்கமுடியும் என்று தோன்றியது. ஒரே ஒரு முறை புரட்டிப் பார்த்துவிட்டுக் கிளம்புகிறோமே என நினைத்து வருத்தமாகத்தான் இருந்தது. இன்னொருமுறை வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.

வழியனுப்புவதற்காக அவரும் வெளியே வந்தார். அவர் விழிகளில் ஒரு பித்து இருப்பதை என்னால் உணரமுடிந்தது. “உங்க ஒவ்வொரு ஆல்பமும் கல்வெட்டு மாதிரி. பாதுகாப்பா வச்சிக்குங்க ரங்கனாத்என்று சொன்னபடி அவர் தோளை அழுத்தினேன். “நூத்துக்கு நூறு உண்மை சார். இப்பவே கொஞ்சம் கொஞ்சமா கிளிங்க குறைஞ்சிட்டே வருது. இந்தக் குன்றுல ஏதோ இரும்புத்தாது இருக்குதாம். வெளிநாட்டுக்காரங்க வந்து எடுக்கப் போறாங்கலாம். உண்மையா பொய்யா தெரியலை. ஒருவேளை, அப்படி நடந்துட்டா, கிளிங்க போக்கிடமில்லாம அழிஞ்சி போனாலும் போவலாம். அப்ப இங்க கிளிகள் வாழ்ந்துதுன்னு சொல்ல இந்த படங்கள்தான் ஒரே சாட்சியா இருக்கும்என்று சொல்லிவிட்டு எங்களுக்கு விடையளித்தார் அவர்.

திரும்பும் பாதையில் வழிநெடுக கிளிகளின் ஓசை ஒலித்தபடியே இருந்தது. ஒரு மெளன சாட்சியாக ஏரி மல்லாந்து படுத்து பார்த்தபடியே இருந்தது.