Home

Friday, 17 April 2020

உயர்ந்த உள்ளம் - கட்டுரை




கடந்த பத்தாண்டுகளில் சொல்வனம், திண்ணை, பதாகை போன்ற இணைய இதழ்களில் அவ்வப்போது சிறுகதைகளை எழுதி வருபவர் ரா.கிரிதரன். மிகக்குறைவாவே அவர் எழுதி வந்தாலும் அவர் படைப்புகள் நம்பிக்கையூட்டும் விதமாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.  படைப்பாக்கம் சார்ந்து அவரிடம் வெளிப்படும் அக்கறையின் மீது எனக்கு எப்போதும் மதிப்புண்டு. குறிப்பாக ஏராளமான நுண்தகவல்களை, எந்த இடத்திலும் துருத்திக்கொண்டு தெரியாதபடி மிக கச்சிதமாகவும் பயன்படுத்தும் கலை அவரிடம் தென்படுவதை உணர்ந்தேன். பத்தாண்டு கால கனவின் வெளிப்பாடாகவும் உழைப்பின் விளைவாகவும் வெளிவந்திருக்கும் ரா.கிரிதரனின் முதல் தொகுதி காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை.

தொகுப்பின் முதல் மூன்று சிறுகதைகள் இசை சார்ந்தவை. மூ. ன்று சிறுகதைகளும் ஜெர்மனி, டிரஸ்டன், புதுச்சேரி என வெவ்வேறு நிலப்பரப்பைச் சார்ந்தவை. மூன்று கதைகளின் மனிதர்களுமே வெவ்வேறு வகைப்பட்டவர்கள். ஒரு கதையில் சிறைக்கைதிகள். இன்னொரு கதையில் காதல் எண்ணங்களில் தோய்ந்தவர்கள். மற்றொரு கதையில் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு இசை உதவக்கூடுமா என்று நினைப்பவர்கள். ஆனால் அடிப்படைத்தளம் ஒன்றே. அது இசை. ஒவ்வொரு கதையும் இசை என்றால் என்ன என்னும் கேள்விக்கான விடையையே வெவ்வேறு விதமான முன்வைக்கிறது.
காலத்தின் முடிவுக்காக ஒலிக்கும் இசை சிறுகதை ஒரு சிறைக்கூடத்தில் நடைபெறுகிறது. இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம். ஜெர்மனிய சிறைக்கூடத்தில் நிரம்பி வழியும் சிறைக்கதைகளிடையே கதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள் அந்தக் கைதிகள். சிறையைக் கண்காணிக்கும் அதிகாரிகளும் இன்னொரு வகையில் சூழல் கைதிகளே. ஊருக்குத் திரும்பமுடியாமல் உறவினர்களோடு கலந்து வாழ முடியாமல் அவர்களும் அச்சிறையோடு சிறைப்பட்டிருக்கிறார்கள். இரவும் பகலும் ஓயாமல் பொழியும் பனி அவர்களை வாட்டியெடுக்கிறது. கிரிதரனின் சிறைக்கூடச் சித்தரிப்பு துல்லியமாக இருக்கிறது.
பனிக்காற்று கைதிகளை நடுங்கவைக்கிறது. அல்லும்பகலும் பாதையை அடைத்துக் கிடக்கும் பனிப்பொழிவை அகற்றிச் சரிசெய்துகொண்டே இருக்கிறார்கள்.  தாகத்துக்கு அருந்துவதற்கு அந்தச் சிறைக்கூடத்தில்   தண்ணீர் கூட இல்லை. பல சமயங்களில் தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்துவிடுகிறது. அந்தப் பனியின் ஊளையையே அவர்கள் கேட்டுக் கேட்டு, அதை நல்லதொரு துணையாக நினைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ஒரு கூடத்தில் நான்கு நடுவயதுக்காரர்கள் ஓய்வு நேரத்தில் கிளாரினெட் இசைத்து பயிற்சி செய்கிறார்கள். பனியின் ஊளையை துணையாக நினைப்பவர்களுக்கு கிளாரினெட் இசை கொடுமையாகத் தோன்றுகிறது. கவலையின்றி கூத்தடிப்பவர்களாக அவர்களை மற்ற கைதிகள் நினைக்கிறார்கள். தண்ணீரில்லாமல் ஒரு பெண் செத்துக்கொண்டிருக்கும் நிலையில் இசைக்கு என்ன அவசியம் என்று அவர்கள் வெகுண்டெழுந்து கலைஞர்களைக் கேட்கிறார்கள். இசைக்காமல் இருந்தால் நான் செத்துவிடுவேன் என்று பதில் சொல்கிறான் ஒருவன். அவர்களைச் சுற்றியும் வசைகள். ஏளனப்பார்வைகள். உங்கள் இசையால் இவர்களைக் காப்பாற்றமுடியுமா என்று கேட்கிறான் ஒருவன்.
எட்டுமாதப் பயிற்சிக்குப் பிறகு பியானோ, வயலின், கிளாரினெட் சூழ அவர்களுடைய இசை ஒலிக்கிறது. கரடுமுரடான பாதையில் ஓடும் வண்டிச்சத்தத்துக்கு நடுவில் கேட்கும் பறவையொலியென அவர்கள் இசை எழுகிறது. பனியில் ஏற்படும் உறைவைப்போல மனம் அந்த இசையில் உறைந்துவிடுகிறது. அந்த இசை மெல்ல மெல்ல இறைவனை நோக்கிய ஆன்ம ஓலம் என அனைவருக்கும் புரியத் தொடங்குகிறது. மன்றாடுவதுதான் அதன் மையம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணமும் சொற்களை இறைத்து இறைவனை நோக்கி மன்றாடும்போது, இரக்கத்தை யாசிக்கும் மன்றாட்டையே கலைஞர்கள் இத்தனை காலமும் இடைவிடாத பயிற்சியின் வழியாக சேர்ந்து உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை அக்கணம் புரியவைத்துவிடுகிறது.
நாடு, மொழி வேறுபாடின்றி காலம்தோறும் கலை எதிர்கொள்ளும் சிக்கலையே ஜெர்மனியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆலிவர் மெஸ்ஸையன் என்னும் இசைக்கலைஞர் எழுதிய இசைத்தொகுப்பை மையச்சரடாகக் கொண்டு எழுதியிருக்கிறார் கிரிதரன். சொல்லின் துணையின்றி உணர்வால் மட்டுமே வெளிப்படுத்தவும் உணரவும் முடிந்த ஆற்றல் இசையில் அடங்கியிருப்பதை காலம் சற்று பிந்தியே புரிந்துகொள்கிறது.  
இருள் முனகும் பாதை சிறுகதை இசைக்கலைஞர்களால் நிறைந்த ஒன்று. இக்கதையில் மையமெனத் தோற்றமளிக்கக்கூடிய ஒரு காட்சி அழகான சிற்பமென செதுக்கப்பட்டுள்ளது. இசைக்கலைஞர்களான ஐசக், ஷூமன் இருவரும் காட்டுப்பாதையில் நடந்துசெல்கிறார்கள். இசை என்றால் என்ன என்னும் ஆர்வமூட்டும் உரையாடல் அவர்களிடையில் நிகழ்கிறது. அதைத் தொடர்ந்து ஒரு மரத்தடியில் நின்று ஐசக் பாடத் தொடங்குகிறார். இனிமையான அவர் குரல் காடெங்கும் பரவி நிறைகிறது. மான், முயல், மரங்கொத்தி, நரி, ஆந்தை, குயில்கள் என ஒவ்வொரு உயிரனமும் வெவ்வேறு வழிகள் வழியாக அங்கு வந்து சேர்கிறது. ஒரு போர்வையென மயக்கம் காட்டின்மீது கவிகிறது. அதை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார் ஷூமன். அங்கு கணநேரத்தில் நிகழ்ந்த ஒத்திசைவைக் கண்டு  திகைப்பில் உறைந்துவிடுகிறார். ஐசக் பாட்டை நிறுத்தியதும் காடு மெல்ல மெல்ல தன் இயல்பான நிலைக்குத் திரும்பிவிடுகிறது.   கதைநெடுக காதலும் விலகலும் உருகலும் விரக்தியும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கின்றன. அனைத்துக்குப் பின்னாலும் இசையைப்பற்றிய கேள்வி ஒட்டியபடியே வருகிறது.
அடுத்ததாக தமிழ்ச்சூழல் பின்னணியில் இடம்பெற்றிருக்கும் திறப்பு சிறுகதை.. தன் மகள் ஜெயந்தியை மிகச்சிறந்த இசைக்கலைஞராக உருவாக்க விழைகிறார் வரதன். ஜெயந்தி இசையார்வம் மிக்கவள். நல்ல குரல்வளம் உள்ளவள். கேட்கிறவர்கள் மனம் உருகும் வகையில் பாடக்கூடியவள். அவள் பாடி ஒரு கேசட் கூட வெளிவந்திருக்கிறது. அங்கங்கே சில திருமணங்களில் கச்சேரி பாடும் வாய்ப்பும் கிடைக்கிறது. அவள் திறமைக்கு அவள் செல்லவேண்டிய உயரம் இன்னும் அதிகம் என்று நினைக்கிறார் வரதன். அந்த உதவிக்காக யாரை நாடுவது என கணக்கிடுகிறது அவர் மனம். அந்த உயரத்துக்குச் செல்லும் விழைவு அவளுக்கும் இருக்கிறது. ஆனால் அது ஏன் தனக்கு நிகழவில்லை என்பது அவளுக்குப் புரியவில்லை. ஒருநாள் ராமர் உற்சவத்தேர் அலங்காரத்தை வேடிக்கை பார்க்கச் செல்கிறாள் அவள்.  கோவில் மண்டபத்தில் ஒருவர் பாடுவதைக் கேட்டு நிற்கிறாள். அக்கணமே அவள் மனம் கரைகிறது. பக்தியைக் கடந்து அவருடைய பாடல் வேறெங்கோ சஞ்சரிப்பதை அவள் முதல்முறையாக உணர்கிறாள். ஒவ்வொரு ஸ்வரத்திலும் அவர் செலுத்தியிருக்கும்  உணர்வையும் அன்பையும் உணர்ந்து அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்து தளும்புகின்றன. அவள் உலகமே இசைமயமாக நிறைந்து நிற்கிறது. மேலும் மேலும் இழைத்து மெருகேற்றுவதால் நிகழும் ஒருங்கிணைவை அவள் முதன்முறையாக அக்கணம் உணர்ந்துகொள்கிறாள். உயரத்துக்குச் செல்வதற்கான வழி எது என்பதை அக்கணம் அவளுக்குப் புரியவைத்துவிடுகிறது. கிரிதரனின் மிகச்சிறந்த சிறுகதையாக திறப்பு அமைந்திருக்கிறது. 
இக்கதையின் அடுக்குமுறையில் உள்ள பல நுண்தகவலகள் மிகமுக்கியமானவை. வரதனின் வீட்டு முகப்பைச் சித்தரிக்கும் முதல் வரியிலேயே இணைந்திருக்கவேண்டிய ஒன்று இசைவில்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கும் செருப்புகள் காட்டப்படுகின்றன. அவள் பயின்ற இசையும் அப்படித்தான்.  எங்கோ ஒருங்கிணைவு பிசகிய கோலம்.
கதையின் இறுதிப்பகுதியில் கோவிலுக்குச் செல்லும் வழியில் காணப்படும் ஒரு பூக்கடையின் சித்தரிப்பும் மிகமுக்கியமானது. பழைய ரோஜாப்பூக்களைத் திருப்பிப்போட்டு தண்ணீரைத் தெளித்து அப்போது பூத்தவைபோல காட்சிப்படுத்துகிறாள் பூக்காரி. விற்பனைக்காக அவள் செய்யும் தந்திரத்தை நேருக்கு நேர் பார்க்கிறாள் ஜெயந்தி. அவள் மனம் அக்கணத்தில் விழித்துவிடுகிறது. ஒருவகையில் அவளும் பூக்காரியைப் போன்றவளே. அவள் வெயிலின் தன்மைக்கு ஏற்றபடி பூக்கள் மீது தண்ணீர் தெளிப்பதும் அவள் தேவைக்குத் தகுந்தபடி இசையை வளைத்து உயர்த்துவதும் ஒன்றே என்னும் தெளிவை நோக்கி அவள் மனம் திறந்துகொள்கிறது. அதனால்தான் வரதன் பைரவி கச்சேரியைக் கேட்க அழைக்கும்போதுஅவர் பாடி நான் என்ன கேக்கறது அப்பா?” என்று அவள் பதில் சொல்கிறாள்.
ஒத்திசைவின் தடத்தைத் தேடும் பயணத்தில் இடையிடையே காணப்படும் இப்படிப்பட்ட தகவல்கள் மிகமுக்கியமானவை. எந்த இடத்திலும் இவை வலிந்து இணைக்கப்பட்டதாக தெரியவில்லை.  மிக இயல்பாக, போகிறபோக்கில் சொல்லப்படுகின்றன.
தொகுப்பின் மற்றொரு சிறந்த சிறுகதை நந்தாதேவி. இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய சிகரம் அது. வில்லியம்ஸ் தலைமையில் ஒரு மலையேற்றக்குழு நந்தாதேவி சிகரத்தில் ஏறுகிறது. பனிப்பள்ளத்தாக்குகள் உள்ள இடம். ரேடியோ டவர்கள் நிறுவுவதற்காக ரேடியோ ஆப்பரேட்டரான முத்துகிருஷ்ணனும் மலையேற்றக்குழுவினரோடு செல்கிறான். இந்த அசைன்மென்ட் முடிந்ததும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊரான ஸ்ரீமுஷ்ணத்துக்குச் செல்லவேண்டும் என்பது அவன் திட்டம். ஆனால் அத்திட்டத்தை அவன் ரகசியமாக வைத்திருக்கிறான். அவன் நல்லவன். நம்பிகைக்கு உரியவன். நல்ல உழைப்பாளி. இது அனைவரும் தெரிந்த விஷயம். மலையேற்றத்தின்போது திடீரென ஒரு செய்தி ரேடியோவில் வருவதை முத்துகிருஷ்ணன் கேட்கிறான். நாலாவது முகாமில் உள்ள ஜெனரலுக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. அவரை அழைத்துவந்து வேறொரு முகாமில் காத்திருக்கும் மருத்துவரிடம் ஒப்படைக்கவேண்டும். அந்தக் கட்டளையை ஏற்றுக்கொண்டு அவன் மேலே உள்ள முகாமை நோக்கிச் செல்கிறான். நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு ஜெனரலைச் சந்தித்து அழைத்துக்கொண்டு திரும்புகிறான். திரும்பும் வழியில் தவறி ஒரு பள்ளத்தாக்குக்குள் விழுந்துவிடுகிறான். அங்கிருந்து வெளியேறுவது பெரும்போராட்டமாக இருக்கிறது. ஒருவழியாக ஜெனரலை முதுகில் சுமந்தபடி பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற முயற்சி செய்கிறான். ஆனால் இதோ வெளியே வந்துவிட்டோம் என்னும் கணத்தில் மீண்டும் விழுந்து சுயநினைவை இழந்துவிடுகிறான். வேறொரு குழுவினரால் இருவரும் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். முத்துக்கிருஷ்ணன் பிழைத்துவிடுகிறான். கண்விழித்ததுமே அவன் ஜெனரலைப்பற்றித்தான் கேட்கிறான். ஜெனரல் உயிருக்குப் போராடுவதாகச் சொல்லப்படும் செய்தியைக் கேட்டு அவன் துயரத்தில் ஆழ்ந்துவிடுகிறான்.  மயக்கம் தெளிந்திருந்த சமயத்தில் அவர் அவனுக்கு ஒரு குறிப்பைக் கொடுத்ததாக உதவியாளர்  தெரிவிக்கிறார். அக்குறிப்பை ஆவலுடன் வாங்கிப் படிக்கிறான் அவன். “இந்த வேலைக்கு நீ தகுதியானவல்ல. நீ ஊருக்குப் போய்விடு. இது என் ஆர்டர்என்று சொல்லப்பட்டிருக்கிறது.
கதையை இந்தப் புள்ளியுடன் கட்டுப்பாட்டுடன் முடித்துவிடுகிறார் கிரிதரன். ராணுவப்பிரிவின் வேலையிலிருந்து விடுவித்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. அற்பமான ஒரு காரணத்தைக் காட்டிக்கூட நிறுத்திவைத்துவிட முடியும். பிரசவத்துக்குக் காத்திருக்கும் மனைவியைப் பார்க்கவும் அவளோடு வாழவும் வேலையைத் துறந்து செல்லும் அவனுக்கு உள்ளூர உதவவேண்டும் என்பதுதான் ஜெனரலின் விருப்பம். ஒருவேளை தான் மரணமடைந்து, வேறொரு ஜெனரலின் கட்டுப்பாட்டுக்கு அவன் சென்றுவிட்டால் விடுவிப்பில் சிக்கல் நேரிடலாம் என்னும் முன்யோசனையாலேயே அவர் அக்குறிப்பை எழுதி அனுப்பியிருக்கிறார். உயிருக்குப் போராடும் நேரத்திலும் இன்னொரு உயிருக்காக இரக்கப்படும் உயர்ந்த உள்ளத்துக்கு மட்டுமே அது சாத்தியம். அதுவரை உயர்ந்த சிகரத்தைப்பற்றிய கதையாக இருந்த விவரணைகள் எல்லாமே உயர்ந்த உள்ளத்தைப்பற்றியதாக மாற்றம் பெற்றுவிடுகிறது. உயர்ந்த உள்ளமே உலகில் உயர்ந்த சிகரம். பருவடிவிலான நந்தாதேவி இமயமலையில் இருக்கலாம். ஆனால் நுண்வடிவிலான நந்தாதேவி இருக்குமிடம் மானுடநெஞ்சமே.
கிரிதரனின் இன்னொரு முக்கியமான சிறுகதை தர்ப்பை. தலைமுறை இடைவெளிகளைப்பற்றிய கதை. நம்பிக்கை சார்ந்த சடங்குகளில் ஊறிப் போன ஒரு தலைமுறை. நம்பிக்கைகளுக்கு அப்பால் உள்ள உலகத்தைப் புரிந்துகொண்டு வளர்ந்துசெல்லும் மற்றொரு தலைமுறை. இரண்டுக்கும் இடையிலான முரண்களைக் களனாகக் கொண்டிருக்கிறது கதை. தந்தையில்லாமல் பிள்ளையை தனியாக வளர்த்து ஆளாக்கி நிறுத்தும் தாய். சங்குசக்கர முத்திரையை தன் கையில் ஏற்றுக்கொண்டவள். ஒவ்வொரு கணமும் பிரபந்த வரிகளை முணுமுணுத்தபடி வாழ்க்கையை ஓட்டுபவள். நூற்றில் ஒருவனாக ஏதோ அலுவலகத்தில் வேலை செய்கிறான் மகன். தர்ப்பணம் நிகழும் நாள். அம்மாவின் மனநிறைவுக்காக அதைச் செய்கிறான் மகன். மோதிரவிரலில் ஆசமனம் செய்த பவித்ரத்தோடும் மற்றொரு விரலுக்கிடையில் இடுக்கிய மூன்று தர்ப்பைக்குச்சிகளோடும் சடங்குகளைச் செய்துமுடிக்கிறான். தர்ப்பைகளை வீசிவிட்டு பவித்ரத்தை அவசரமாக உருவி எடுக்கும்போது சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் கசிகிறது. வேண்டிய நேரத்தில் பயன்படுத்திவிட்டு வேண்டாத நேரத்தில் தர்ப்பையை வீசியெறிகிற மாதிரி  ஒவ்வொன்றையும் செய்தால் நன்றாக இருக்கும் என்றொரு எண்ணம் தோன்றி மறைகிறது. அலுவலகத்துக்குத் தாமதமாகிறதே என வண்டியில் ஏறிப் புறப்படும்போது மழைத்தூறலில் அவன் நெற்றியில் இட்டிருந்த சூரணம் கரைந்து மறைகிறது.
சூரணம் நல்லதொரு படிமமாக கதையில் வளர்ந்து நிற்கிறது. அவன் தன் நெற்றியில் நாமக்குச்சியால் சூரணம் தீட்டிக்கொள்வதில்தான் கதையே தொடங்குகிறது. அதை அழித்துக்கொண்டு புறப்படவேண்டும் என அவன் நினைத்தும் தன் அம்மாவுக்காக அஞ்சிப்   புறப்பட்டாலும், வழியில் பொழிந்த மழைத்தூறல் அதைப் பொட்டுப்பொட்டாக அழித்துவிடுகிறது. சூரணத்தில் தொடங்கி சூரணத்தில் முடிகிறது கதை. நினைவும் நன்றியுணர்ச்சியும் மட்டுமே மனத்தில் நிறைந்திருக்கவேண்டுமே தவிர நம்பிக்கையும் சடங்குமல்ல. இளைய தலைமுறை அதற்கு இணங்கிச் செல்ல நினைக்கிறது. மூத்த தலைமுறை அதை மறுக்கிறது.
நீர் பிம்பத்துடன் ஓர் உரையாடல் பிரெஞ்சு வரலாற்றுத் தகவலொன்றின் பின்னணியில் எழுதப்பட்ட கதை. .வெ.சு. ஐயரின் கதையில் அரசமரம் கதை சொல்வதுபோல, இந்தக் கதையில் ஒரு வண்ண ஓவியம் கதை சொல்கிறது. 1820 காலகட்டத்தில் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி  முறை சார்ந்து கிடைத்திருக்கும்  வரலாற்றுத்தகவல்களைச் சார்ந்து நீள்கிறது கதை. ஒரு வீடு ஒருவருடைய ஆதிக்கத்திலிருந்து இன்னொருவருடைய ஆதிக்கத்துக்கு வரும்போது பார்த்த நிகழ்ச்சிகளையும் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு இடம்மாறி வந்தபோது பார்த்த நிகழ்ச்சிகளையும் நினைவிலிருந்து சொல்கிறது ஓவியம். ஆள்பவர்களின் ஆணவம், துரோகம், படையெடுப்பு, ஆண்டான் அடிமை பார்வை, அடிமைகளின் சாவு, போர், கலகம், சாபம், திருமணங்கள், பிரிவுகள், வஞ்சம் என பல வாழ்க்கைத்தருணங்களை ஒருங்கிணைத்துக் காட்டுகிறது. பளபளப்பாக இருந்த ஓவியம் ஈரத்தில் ஊறி வண்ணம் வெளுத்துப்போவதுபோல, ஓங்கியிருந்த ஆட்சி அதிகாரமும் செல்வாக்கும் சரிந்துவிடுகிறது. மிகுந்த ஈடுபாட்டோடு எழுதப்பட்ட கதை.
இந்த ஆறு கதைகளும் இத்தொகுப்பில் முக்கியமான கதைகள். ஓர் இளம் எழுத்தாளரின் முதல் தொகுப்பிலேயே சிறந்த சிறுகதைகளென சுட்டிக்காட்டும் அளவுக்கு ஆறு கதைகள் அமைந்திருப்பது நம்பிக்கையூட்டும் அடையாளம். அவர் சிறுகதைத்துறையில் நல்லதொரு ஆளுமையாக எதிர்காலத்தில் வளரக்கூடும். கிரிதரனுக்கு வாழ்த்துகள்.

(காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை. சிறுகதைகள். ரா.கிரிதரன். வெளியீடு: தமிழினி பதிப்பகம், சென்னை -14. விலை. ரூ.160)


(12.04.2020 சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரை )