இருபதாண்டுகளுக்கு முன்பு குற்றாலத்தில் நண்பர் தர்மராஜனுடன் சில நாட்கள் தங்கியிருந்தபோது வண்ணநிலவன் எழுதிய ‘குளத்துப்புழை ஆறு” கவிதையைப்பற்றி ஒரு பேச்சு வந்தது. உடனே தர்மராஜன் உத்வேகம் கொண்டு “வருகிறீர்களா, அந்த ஆற்றைப் பார்த்துவிட்டு வருவோம், இங்கிருந்து பக்கம்தான்” என்று அழைத்தார்.
உடனே நாங்கள் புறப்பட்டுவிட்டோம். முதலில் செங்கோட்டை சென்று, அங்கிருந்து புனலூர் செல்லும் ரயிலில் பயணம் செய்து மாலையில் அந்த ஆற்றங்கரையில் இறங்கி வேடிக்கை பார்த்தோம். வண்ணநிலவன் கவிதையை அசைபோட்டபடி நீரிலலையும் அந்த மீன்களுக்கு நாங்களும் பொரி வாங்கிப் போட்டோம். சுற்றியும் மரங்களடர்ந்த காடு. காட்டைக் கிழித்துக்கொண்டுதான் அந்த ரயில் ஊர்ந்துபோனது. அங்கங்கே நீண்ட குகைகள். அவற்றைக் குடைந்து ரயில் தடம் போடப்பட்டிருந்தது. குகைக்குள் ரயில் நுழைந்து வெளியே வரும்போதெல்லாம் பிரயாணிகள் ஓவென்று குரலெழுப்பினார்கள்.
மலையேறும் மகிழ்ச்சிக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் நண்பர் மகேஷிடம் ஒருநாள் இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டேன். பதிலுக்கு அவர் கொங்கண் ரயில்வே பாதையில் உள்ள குகைகளைப்பற்றியும் கல்கா- சிம்லா தடத்தில் கடந்துபோகும் குகைகளைப்பற்றியும் தன் அனுபவத்தை நினைவுபடுத்திப் பேசத் தொடங்கிவிட்டார். சிறிது நேரம் கழித்து பெங்களூரிலிருந்து கார்வார் செல்லும் வழியில் சக்லேஷ்புர – குக்கே சுப்ரமண்யா வழித்தடம் ஏறத்தாழ ஐம்பது குகைகளையும் நூற்றுக்கும் மேற்பட்ட மேம்பாலங்களையும் கடந்து செல்கிறது என்றும் சொன்னார். இடையிடையே இருபதுக்கும் மேற்பட்ட அருவிகள் காற்றிலலையும் வெள்ளையாடையென காட்சியளிப்பதை கண்குளிரப் பார்க்கலாம் என்றும் விரிவாகச் சொன்னார்.
அருவிகள் என்றதுமே என் மனத்தில் கனவுகள் துளிர்க்கத் தொடங்கின. “ஒருமுறை நாம் அங்கே சென்று வரலாமா?” என்று அவரிடம் கேட்டேன். ”இன்னும் சில நாட்கள். ஏற்கனவே போட்ட திட்டங்களை முடித்துவிடுகிறேன். பிறகு போய்வரலாம்” என்றார்.
எதிர்பாராத விதமாக ஒருநாள் தொலைபேசியில் அழைத்து மறுநாள் காலை யஷ்வந்தபுர ரயில்நிலையத்துக்கு வந்துவிடும்படி சொன்னார். இரண்டுநாட்களுக்குத் தேவைப்படும் ஆடைகளை ஒரு சின்னப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு அவர் சொன்ன நேரத்துக்கு ரயில்நிலையத்துக்குப் போய்விட்டேன். நிலையத்திலேயே ஒரு காப்பியை அருந்திவிட்டு அங்கிருந்து கார்வார் செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்துவிட்டோம். காலைக்குளிர் இதமாக இருந்தது.
நாலைந்து மணிநேரத்துக்குள் சக்லேஷ்புரத்தை ரயில் தொட்டது. புறப்பட்டதிலிருந்து சமவெளியில் ஊர்களையும் வயல்வெளிகளையும் கடந்துவந்த ரயில் சக்லேஷ்புரத்துக்குப் பிறகு மேற்குத்தொடர்ச்சி மலையின் ஊடுருவிக்கொண்டு செல்லத் தொடங்கியது.
எங்கெங்கும் பச்சைப்பசேலென இருந்தது. மடிந்து மடிந்து உயரும் குன்றுகள். மேகங்களையே இறகுகளென விரித்து சுற்றிச்சுற்றி வட்டமிடும்
வெண்பறவைகள். அந்தக் கண்கொள்ளாக் காட்சியில் திளைத்து பித்துற்றவன்போல அங்குமிங்கும் பார்த்தபடி இருந்தேன்.
எப்போது வரும் எப்போது வருமென நான் எதிர்பார்த்திருந்த அருவி ஒருவழியாக கண்ணில் பட்டது. குன்றில் எங்கோ ஓரிடத்தில் செதுக்கிவிட்டதுபோல ஒரு மலை தெரிந்தது. அதன் உச்சியிலிருந்து வெள்ளைவெளேரென கவிழ்க்கப்பட்ட பாலென அந்த அருவி பொழிந்துகொண்டிருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு கோடென சிறுத்துப் பிறகு மறைந்தது.
ரயிலின் ஓட்டத்தில் ஒரு வித்தியாசமான ஓசை கேட்டது. ஒருகணம் உறைந்து எட்டிப் பார்த்தேன். மிகநீண்டதொரு பாலத்தை ரயில் கடந்துகொண்டிருந்தது. அந்த தடக் தடக் ஓசை ஒரு சங்கீதத்தைப்போல ஒலிக்க, கதவோரம் நின்று படம் பிடித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் அதற்கு இணையாக ஓசையெழுப்பிச் சிரித்தார்கள்.
சட்டென பெட்டிக்குள் இருள் சூழ ரயில் ஒரு குகைக்குள் நுழையத் தொடங்கியது. ஒருகணம் என் மனம் பழைய செங்கோட்டைப்பயணத்தை நினைத்துக்கொண்டது. பெட்டிக்குள் இருந்தவர்கள் அந்த இருளை சத்தமிட்டு ரசித்துக் கொண்டாடினார்கள். ஏறத்தாழ மூன்று நான்கு நிமிடங்களுக்குப் பிறகே வெளிச்சத்தைப் பார்த்தோம்.
திரும்பிய பக்கமெல்லாம் காப்பித்தோட்டங்களே காணப்பட்டன. சில இடங்களில் பாக்குத்தோட்டங்கள் காற்றில் அசைந்தாடுவதைப் பார்த்தேன். பள்ளத்தாக்கைப்போன்றை ஓரிடத்தைச் சுட்டிக் காட்டிய மகேஷ் “அங்கே முழுக்கமுழுக்க ஏலக்காய், மிளகுத்தோட்டங்கள்” என்று சொன்னார்.
அருவிகள், குகைகள் என அடுத்தடுத்துத் தோன்றி அந்தப் பயணம் மெல்ல மெல்ல கொண்டாட்டமாக மாறிக்கொண்டிருந்தது. இவையனைத்தும் மண்ணுலகத்திலா உள்ளன என்று நினைத்து மயங்கிக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரபயணம் போனதே தெரியாதபடி எங்கள் காட்டிடைப்பயணம் ஒரு முடிவுக்கு வர நாங்கள் குக்கே சுப்ரமண்யாவில் இறங்கிக்கொண்டோம்.
தங்குவதற்கென மகேஷ் ஏற்கனவே ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அங்கு பெட்டிகளை வைத்துவிட்டு குமாரதாரா நதியைப் பார்க்கச் சென்றோம். சற்றே மண்நிறத்தில் நுரையோடு வேகமாகக் கரைபுரண்டோடிக்கொண்டிருந்தது நதி.
வானில் மேகங்கள் கவிந்திருந்ததால் இளவெயில் இதமாக இருந்தது. கரையோரமாகவே நெடுந்தூரம் நடந்து சென்றோம். நினைவுக்கு வந்த ஏதேதோ பழைய
கதைகளையெல்லாம் பேசிப்பேசி
பொழுதைப் போக்கினோம். கூட்டமில்லாத ஓரிடத்தில் ஆற்றில் இறங்கி மூழ்கிக் குளித்தோம். பொழுது சாய்ந்த வேளையில் கோவிலுக்குள் சென்று கார்த்திகேயனை வணங்கிவிட்டு அறைக்குத் திரும்பினோம்.
மறுநாள் காலையிலேயே எழுந்து அருகிலிருக்கும் ஒரு குன்றின் மீது ஏறி இறங்கிவிடவேண்டுமென்று திட்டமிட்டிருந்தோம். பெங்களூரிலிருந்து ஐந்து நண்பர்கள் வரவேண்டும். அவர்கள் அன்று இரவு கிளம்பி காலையில் வந்து சேர்ந்துவிடுவதாகத் திட்டம். புறப்பட்டுவிட்டார்களா என்பதை அறிந்துகொள்ள அனைவரிடமும் கைபேசியில் பேசினான் மகேஷ். எல்லோரும் பேருந்து நிலையத்தில் சந்தித்துவிட்டார்கள் என்னும் செய்தி கிடைக்கும்வரை அவன் பரபரப்பாகவே இருந்தான். பிறகுதான் அவன் முகத்தில் நிம்மதி படர்ந்தது. குக்கேவில் இறங்கிய பிறகு பேருந்து நிலையத்திலிருந்து தங்குமிடத்துக்கு வரும் வழியை தெளிவாகச் சொல்லிவிட்டுத்தான் உரையாடலை முடித்தான்.
எங்கோ வேடிக்கை பார்த்தபடி நடந்ததில் எதிர்பாராத கணமொன்றில் பாதையில் புடைத்திருந்த ஒரு மரத்தின் வேர் தடுக்கி நான் கீழே விழுந்தேன். பெருவிரல்
நகம் கிழிந்து ரத்தம் வந்தது. மகேஷ் பதற்றமுற்றார். “ஒன்னுமில்லை, ஒன்னுமில்லை” என்றபடி
அவர் நீட்டிய கரங்களைப் பற்றிக்கொண்டு மெதுவாக எழுந்து நின்றேன். “காலை நீட்டி உதறுங்க” என்றார் மகேஷ். நான் உதறினேன். சற்றே தேவலாம் போல இருந்தது. கால்களை மெதுவாக ஊன்றி நடந்து எப்படியோ அறைக்கு வந்து சேர்ந்தோம்.
காலையில் பெங்களூரு நண்பர்கள் வந்துவிட்டார்கள். எனக்கு காலில் வீக்கம்
கண்டிருந்ததைப் பார்த்து வருத்தமுற்றார்கள். ”நிறுத்திவிடலாமா?”
என்று கேட்டார் ஒருவர். என் பொருட்டு மலையேற்றத்தை
நிறுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. உள்ளூர வலியிருந்தாலும் அவர்களை
சிரிப்போடு அனுப்பிவைத்தேன்.
காலைச்சிற்றுண்டி முடித்த பிறகு கூடத்தில் வந்து உட்கார்ந்து காற்றில் அலையலையாக
நெளியும் காப்பித்தோட்டத்தைப் பார்த்தபடி பொழுதுபோக்கினேன். உருவமற்ற
ஒருவன் துளிரிலைகளையே மஞ்சமென நினைத்து படுத்து உருண்டு செல்வதுபோல இருந்தது.
அப்போதுதான் சுவரோரமாக வெந்நீர்ப்பாத்திரம் வைக்கப்பட்ட ஒரு பெரிய மண்ணடுப்பின்
முன்னால் அமர்ந்து நெருப்பைத் தள்ளிக்கொண்டிருந்த சிறுவனொருவனைப் பார்த்தேன். சிறிது
நேரம் கழித்த பிறகுதான் அவனுக்கருகில் நெருப்புக்காக குவிக்கப்பட்டிருந்த பனை மட்டைகளையும்
பனங்கொட்டைகளையும் பார்த்தேன். நான் உடனே கூவியழைத்தேன்.
“ஏது இதெல்லாம்?” என்று கேட்டேன். “காட்டுல கெடச்சது. அடுப்புக்குள்ள இத வச்சா, நல்லா கேஸ் அடுப்புமாதிரி புஸ்ஸ்னு நின்னு எரியும்” என்றான்
அவன். அந்தப் பனங்கொட்டை என் சின்ன வயது நினைவுகளைக் கிளறிவிட்டன.
அவனை ஒரு கொட்டையை எடுத்துக்கொண்டு அருகில் வருமாறு சொன்னேன்.
பனங்கொட்டையை கையில் வாங்கி உருட்டியபடி “சின்ன வயசில இதுல நான் பொம்மை செய்து விளையாடுவேன்”
என்று அவனிடம் சொன்னேன். அவனால் நம்பமுடியவில்லை.
வெட்கத்தோடு “உண்மையாவா?” என்று கேட்டான். “உண்மைதான், வேணும்ன்னா
செஞ்சி காட்டட்டுமா?” என்று கேட்டபடியே வேலையைத் தொடங்கிவிட்டேன்.
முதலில் கொட்டையின் ஒரு பக்கத்தை நன்றாக அழுத்தித் தேய்த்து பளபளப்பாக்கினேன். ஒரு
சின்ன பிசிறுகூட இல்லாமல் ஒரு வட்டம் உருவாகியது. அந்தச் சிறுவன்
என்னையே பார்த்தபடி நின்றிருந்தான். பிறகு என் கையிலிருந்த பேனாவை
எடுத்து அதில் ஒரு குரங்கின் முகத்தை வரைந்தேன். பத்து நிமிஷத்தில்
ஒரு குட்டிக்குரங்கு என் கையில் இருந்தது. சிறுவன் ஆச்சரியம்
தாங்காமல் என் கையிலிருந்த பொம்மையையே பார்த்தான். “சின்னதா வால்
மட்டும் செஞ்சி பின்னால பெவிகால் போட்டு ஒட்டிட்டா, பார்க்கறதுக்கு
இன்னும் நல்லா இருக்கும்” என்றேன் நான். “இந்தா வச்சிக்கோ” என்றபடி அவனிடமே அந்தப் பொம்மையை கொடுத்துவிட்டேன்.
அவன் மகிழ்ச்சியில் சத்தம் போட்டு எல்லோரையும் அங்கே அழைத்துவிட்டான்.
எல்லோரிடமும் அந்தப் பொம்மையைக் காட்டிப் பெருமைப்பட்டுக்கொண்டான்.
சிறிது நேரத்துக்குப் பிறகு “நான் தனியா செஞ்சி பார்க்கறேன்” என்று சொல்லிவிட்டு
சுவரோரமாகச் சென்று உட்கார்ந்துகொண்டான். இரண்டு மணிநேரம் அவன்
யாரையும் நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. கிட்டத்தட்ட பொம்மை செதுக்கும்
வேலை அவனுக்கு வசப்பட்டுவிட்டது என்றே சொல்லவேண்டும். “அருமை”
என்றபடி அவன் முதுகைத் தட்டிக்கொடுத்தேன். அவன்
அதை எடுத்துக்கொண்டு தன் பெற்றோரிடம் காட்டுவதற்கு ஓடினான். மாலையில்
மகேஷ் அணியினர் திரும்பி வந்ததும் அவர்களிடமும் ஓடோடிச் சென்று பொம்மையைக் காட்டினான்.
இரவு ரயிலைப் பிடித்து பெங்களூருக்குத் திரும்பி அவரவர்கள் வேலைகளில் மூழ்கிவிட்டோம். எங்கள்
பயணமே மறந்துபோகும் அளவுக்கு வேலை அழுத்தம். ஒரு மாதம் கழித்து
எனக்கொரு பார்சல் வந்தது. உள்ளே குரங்கு பொம்மையும் ஒரு கடிதமும்
இருந்தது. குக்கே சிறுவனின் முகம் ஒரு மேகமென மனத்தில் ஒருகணம்
படர்ந்து விரிந்தது.