Home

Thursday, 30 April 2020

இனிய குரல் - கட்டுரை



என் இளமைப்பருவத்தில் தெருக்கூத்து பார்ப்பதிலும் பாட்டுக்கச்சேரி கேட்பதிலும் அதிக ஆர்வமிருந்தது. எங்கள் ஊரைச்சுற்றி எந்த இடத்தில் நடந்தாலும் முதல் ஆளாகப் போய் நின்றுவிடுவேன். என்னைப்போலவே ஆர்வமுள்ள குணசேகரும் என்னோடு சேர்ந்துகொள்வான். என் மனத்துக்கு இசைவான நண்பன் அவன்.


ஒருமுறை எங்கள் கிராமத்துக்கு அருகில் இருந்த சிறுவந்தாட்டில் பாட்டுக்கச்சேரி நிகழவிருப்பதாக செய்தியைப் பார்த்தேன். பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் கடைத்தெருவோரம் விளம்பரத்தட்டி வைத்திருந்தார்கள். விழுப்புரம் நீலமலர் இசைக்குழு என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது.

எங்கள் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான குழு அது. எங்கள் கிராமத்துக்குப் பலமுறை வந்து பாடியிருக்கிறார்கள். திருமண வரவேற்பு, பூப்புனித நீராட்டுவிழா போன்ற குடும்பவிழாக்களையொட்டி அடிக்கடி பாட்டுக்கச்சேரிகள் நிகழ்ந்தபடி இருக்கும். சில சமயங்களில் அரசியல் கூட்டங்கள் நிகழும்போதும் துணைநிகழ்ச்சியாக நடத்தப்படும். பேர்பெற்ற பேச்சாளர்கள் எப்போதுமே ஒன்பது, பத்துமணிக்குத்தான் மேடைக்கு வருவார்கள். அதுவரை கூடியிருக்கும் மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடாமல் இருக்கும் வகையில் பாட்டுக்கச்சேரிகள் அமைக்கப்பட்டிருக்கும். அநேகமாக எல்லாத் தருணங்களிலும் நீலநிலா இசைக்குழுவினர் பங்கெடுத்துக்கொள்வார்கள். ஒன்றிரண்டு தருணங்களில் மட்டும் புதுவை சிவப்புரோஜா இசைக்குழு வந்து சென்றதுண்டு.

இரவு உணவு முடிந்த கையோடு குணசேகர் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டான். போர்வையை மடக்கிச் சுருட்டிவைத்த பையை கையில் வைத்திருந்தான். நானும் ஒரு போர்வையை எடுத்து சுருட்டி அவன் பையிலேயே திணித்துவிட்டு அம்மாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினேன்.

பேருந்து நிலையத்தில் வண்டிக்காக வெகுநேரம் காத்திருந்தோம்.  அது தாமதமாக ஆடி அசைந்து வந்து சேர்ந்தது. நாங்கள் ஏறி இருவர் மட்டும் அமரும் இருக்கையாகப் பார்த்து உட்கார்ந்து ஜன்னலோரம் வேடிக்கை பார்த்தபடி பயணம் செய்தோம். எங்கும் இருள். மரங்கள், செடிகள், வீடுகள் எல்லாமே கரிய போர்வையைப் போர்த்திக்கொண்டு நிற்பதுபோலக் காணப்பட்டன. வானமெங்கும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டின. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்பாடல் வரிகள் மனத்துக்குள் நகர்ந்தன.

சிறுவந்தாட்டில் இறங்கும்போதே பாட்டுச்சத்தம் கேட்கத் தொடங்கிவிட்டது. ”ஆரம்பிச்சிட்டாங்கபோலடா. ச்சே. எத்தன பாட்டு போச்சோ தெரியலையேஎன்று நாக்கை சப்புக்கொட்டினான் குணசேகர். ‘உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்லவேண்டும்என்ற பாடலின் வரி காற்றில் மிதந்து வந்தது.  கேக்கறவரைக்கும் லாபம், வாடாஎன்றபடி நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு நடந்து சென்றோம். அதற்குள்ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்என்று பாட்டு தொடங்கிவிட்டது. லலிதா அக்காவின் குரல். நீலநிலா நிகழ்ச்சியில் கேட்டுக்கேட்டு அந்த அக்காவின் குரல் நெஞ்சிலேயே பதிந்துவிட்டது. திலகா என்று இன்னொரு அக்காவும் அந்தக் குழுவில் உண்டு. பி.சுசிலா குரலுக்கு லலிதா. எல்.ஆர்.ஈஸ்வரி குரலுக்கு திலகா.

நிகழ்ச்சி மேடையை நெருங்கிவிட்டோம். நான் நினைத்ததுபோலவே லலிதா அக்காதான் பாடிக்கொண்டிருந்தார். மேடையில் இருப்பவர்கள் நன்றாகத் தெரியும் விதமாக ஓர் இடத்தைக் கண்டுபிடித்து நாங்கள் உட்கார்ந்தோம்.

பாடல் முடிந்ததும் கைதட்டல் எழுந்தது. அதற்குள் பார்வையாளர்களின் ஒருசிலர்நெஞ்சமுண்டு, நெஞ்சமுண்டு பாடுங்கஎன்று குரல் கொடுத்தார்கள். சிறிய ஒலிவாங்கியுடன் மேடையில் நடமாடிக்கொண்டிருந்தவர் கூட்டத்தினரைப் பார்த்து புன்னகையுடன்அமைதி, அமைதிஎன்று கையமர்த்தினார். லலிதா அக்கா தன் இருக்கைக்குச் செல்ல, புதிதாக ஓர் அண்ணன் ஒலிவாங்கியின் அருகில் வந்து நின்றார். “நெஞ்சமுண்டு நேர்மையுண்டுஎன்று பாடத் தொடங்கினார். பின்பகுதியிலிருந்து யாரோ ஒருவர் ஓடும் குதிரையின் குளம்புச்சத்தத்தை தன் வாயசைவாலேயே உருவாக்கி எழுப்பினார். பார்வையாளர்களிடம் மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றது அந்தப் பாட்டு.

அதைத் தொடர்ந்து அவர் தானாகவேநாணமோ இன்னும்  நாணமோஎன்று தொடங்கிவிட்டார். கூட்டம் இன்னும்  வெவ்வேறு திசையிலிருந்தும் வந்தபடி இருந்தார்கள். நாங்கள் மெதுவாக இடத்தைவிட்டு எழுந்து கடைபோடப்பட்டிருக்கும் பகுதியின் திசையில் நடந்தோம். ஒருபக்கம் சுக்கு டீ, இன்னொரு பக்கம் சுண்டல், கடலை, முறுக்கு, எள்ளடை வியாபாரம் களைகட்டியது. ஒரு மரத்தடியில் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் பெரிய தார்ப்பாய் விரித்து , அதன் மீது பாட்டுப்புத்தகங்களைப் பரப்பிவைத்திருந்தார் ஒருவர். புதையலைக் கண்டதுபோல நாங்கள் அதை நோக்கி ஓடினோம். நான் அந்தக் குவியலில் தேடித்தேடி அலிபாபாவும் நாற்பது திருடர்களும், ஆயிரத்தில் ஒருவன் படங்களின் பாட்டுப்புத்தகங்களை வாங்கினேன். குணசேகர் கர்ணன், பாலும் பழமும் பாட்டுப்புத்தகங்களை வாங்கினான். பிறகு இருவரும் பழைய இடத்துக்கே வந்து உட்கார்ந்துவிட்டோம்.

அதற்குள் மேடையில் ஆட்கள் மாறினார்கள். ’ஆடாத மனமும் ஆடுதே, ஆனந்த கீதம் பாடுதேஒலிக்கத் தொடங்கியது. அதை அடுத்துஓடும் மேகங்களே’ ‘நான் ஆணையிட்டால்’ ’திருடாதே பாப்பா திருடாதே’ ’தண்ணீரில் பிறக்கவைத்தான்  என பாடல்கள் திகட்டத்திகட்டத் தொடர்ந்தன.

நள்ளிரவுக்கு மேல்தான் நிகழ்ச்சி முடிந்தது. அனைவரும் கலைந்து போனதும் நாங்கள் அகன்ற படிக்கட்டுகளோடிருந்த ஒரு கடைவாசலில் போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்தோம். தூக்கமே வரவில்லை. வானத்தைப் பார்த்தபடி எதைஎதையோ பேசினோம்.  பொரியை இறைத்ததுபோல வானெங்கும் நட்சத்திரங்கள் சிதறிக் கிடந்தன. குரல்களின் இனிமையால் மனம் நெகிழ்ந்துகிடந்தது.  பாடல் வரிகள் முன்னெழுந்து ஒளிர்ந்தன. ஒவ்வொரு வரியும் அதற்குரிய காட்சியையும் நினைவுக்குக் கொண்டு வந்து நெஞ்சை நிறைத்ததால். ஒருவித பரவசத்தில் மனம் திளைத்தது. விழித்திருக்கிறோமோ அல்லது எண்ணங்களில் திளைத்திருக்கிறோமா என்பதே புரியவில்லை.

அதிகாலையில் கிளம்பும் முதல் பஸ்ஸின் ஹார்ன் சத்தத்தைக் கேட்டபிறகுதான் விழிப்பு வந்தது. குணசேகரைத் தட்டி எழுப்பினேன். இருவருமே அவசரமாக போர்வையைச் சுருட்டி பைக்குள் வைத்துக்கொண்டு நடந்தோம். வழியில் புதரோரமாக சிறுநீர் கழித்துவிட்டு, தெருக்குழாய்த் தண்ணீரில் முகம் கழுவிக்கொண்டு வண்டிக்குள் சென்று உட்கார்ந்துகொண்டோம். போக்குவரத்தே இல்லாத சாலையில் பேருந்து வேகமாகப் பறந்து பத்து பதினைந்து நிமிடங்களிலேயே எங்கள் கிராமத்தை அடைந்துவிட்டது.

வீட்டைநோக்கி நடக்கும் சமயத்தில் ஆறுமணி சங்கு ஊதும் சத்தம் கேட்டது. தக்கா தெரு திருப்பத்தில் ஒரு பெரியவர் நாலைந்து பசுக்களை ஓட்டிக்கொண்டு பால் ஸ்டோர் பக்கமாகச் சென்றுகொண்டிருந்தார். பசுக்களின் கழுத்துமணிச்சத்தம் அசைந்தசைந்து சங்கீதம்போல ஒலித்தது. குணசேகர் அந்தப் பசுக்களைப் பார்த்ததுமேசத்தியம் நீயே தர்மத்தாயேஎன்று தன்னிச்சையாக முணுமுணுத்தான்.

போஸ்ட் ஆபீஸ்க்குப் பக்கத்தில் ஒரு பெரிய பாழடைந்த வீடு இருந்தது. அரைகுறையாக நின்றிருக்கும் சுற்றுச்சுவரில் அங்கங்கே செங்கல் சரிந்து ஓட்டைகள் காணப்பட்டன. அடர்த்தியான புதர்களை அந்த ஓட்டைகள் வழியே பார்க்கலாம். அந்தச் சுவரில் யாரோ புதிய சுவரொட்டியை ஒட்டியிருந்தார்கள். எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பதுபோல நான் அந்தச் சுவரொட்டியையும் பார்த்தபடி நடந்தபோது, சுவரோரமாக ஒரு அம்மா நடந்துசெல்வதைப் பார்த்தேன்.

அவருடைய முகம் தெரியவில்லை. ஆனால் அவர் பாடியபடி செல்லும் பாட்டைக் கேட்கமுடிந்தது.  அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜா’. அதிகாலை வேளையில் அந்தக் குரலில் படிந்திருந்த துயரம் என்னைத் தடுமாறவைத்தது.  அதைப் பாடிக்கொண்டே அவர் எங்கு செல்கிறார் என்பது புரியாமல் மனம் பதறியது. ஒருகணம் எதுவும் புரியவில்லை. தூக்கக்கலக்கத்தில் இருந்த குணசேகரின் தோளை அசைத்து அந்தச் சுவர்ப்பக்கமாகக் கவனிக்கும்படி சொன்னேன். அவனும் அந்த உருவத்தைப் பார்த்தான்.  குரலையும் கேட்டான். பிறகு என் பக்கம்  திரும்பி உதடுகளைப் பிதுக்கிஎன்ன?’ என்பதுபோலப் பார்த்தான். நான் அவர் பாடிய பாடல் வரியை மீண்டும் கேட்டேன். அவர் அடுத்த வரிக்கே செல்லவில்லை. அந்த ஒரே வரியையே தாளம் பிசகாமல் மீண்டும் மீண்டும் பாடியபடி இருந்தார்.

அந்த அம்மா மதில்நெடுக பள்ளங்களும் ஓட்டைகளும் காணப்பட்ட இடங்களிலெல்லாம் மடியில் வைத்திருந்த அரிசியை அள்ளியள்ளி வைத்துக்கொண்டே சென்றார். இடையிடையே மதிலுக்கு உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் பல இடங்களில் தூவவும் செய்தார். கடைசி பிடி அரிசியை எடுத்து மதிலோரம் ஒரே குவியலாக வைத்த பிறகு துணிமடிப்பை உதறிக்கொண்டு திரும்பினார். அவர் புடவை பல இடங்களில் கிழிந்து தொங்கியிருப்பதை அப்போதுதான் நான் கவனித்தேன்.

டேய், இந்த அம்மாவ நான் எங்கயோ பார்த்திருக்கன்டாஎன்று மெதுவாகச் சொன்னபடி என்னைத் தட்டினான் குணசேகர். நான் அவன் பக்கமாக ஆவலோடு திரும்பி அவன் தோளைத் தொட்டேன். அவன் விரல்களை மடக்கி நெற்றியில் தேய்த்தபடி யோசித்தான்.

சட்டென ஏதோ நினைவு வந்தவனாகடேய், இது கொஞ்சம் லூசு அம்மாடா. எங்க அப்பா கடைப்பக்கமா நான் ரொம்ப தரம் பார்த்துருக்கேன். எல்லார்கிட்டயும் காசு வேணும்ன்னு கைநீட்டும்என்றான். ”டேய். சும்மா ஒளராத. சரியா பாத்து சொல்லு. அவுங்கள பார்த்தா அப்படியா இருக்குது?” என்றபடி முறைத்துப் பார்த்தேன். அவன் ஒருகணம் மீண்டும் அவரைப் பார்த்துவிட்டுசந்தேகமே இல்ல, அவுங்களேதான்என்று முடிவாகச் சொன்னான்.

அழைக்காதே என்று பாடியபடியே மதிலிலிருந்து விலகி எங்கள் பக்கமாக வந்து சாலையில் இறங்கிக் கடந்துபோனார் அந்த அம்மா. ஒடுங்கிய முகம். கன்னத்தில் பெரிய பள்ளம். கீழ்ப்பக்க உதட்டில் அரைப்பகுதி வாய்க்குள்ளேயே மடிந்திருந்தது. இரவில் கேட்ட எல்லாக் குரல்களைவிடவும் அக்கணத்தில் இனிமை மிக்கதாக இருந்தது அவர் குரல்.

அதே நேரத்தில் வானத்தின் ஒரு மூலையிலிருந்து கூட்டம்கூட்டமாக புறாக்கள் வந்து சுற்றுச்சுவர் மதில் மீது அமர்ந்து அரிசிமணிகளைக் கொத்தித் தின்றன. பார்த்துக்கொண்டிருக்கும்போதே எல்லா மூலைகளிலிருந்தும் அணியணியாகப் புறாக்கள் வந்து இரையைக் கொத்தியெடுத்தன. கண்கொள்ளாக் காட்சி. என் உடல் சிலிர்த்தது.