Home

Friday, 17 April 2020

நம்மால் என்ன செய்யமுடியும்? - கட்டுரை



காலைநடையின்போதே காற்றின் வேகம் கூடுதலாக இருப்பதுபோலத் தோன்றியது. ஆனால் அது மழையைக் கொண்டுவரும் வேகமா அல்லது வரவிருக்கும் மழையை நிறுத்தப்போகும் வேகமா என்பதுதான் புரியவில்லை. எதிரில் வந்த வாகனத்தால் எழுந்த புழுதிப்புகை கொடியிலிருந்து உருவிக்கொண்டோடும் ஆடையென வளைந்து வளைந்து போனது. சில கணங்களுக்கு கண்களைத் திறக்கவே முடியவில்லை. சிறிது நேரம் ஓரமாக ஒதுங்கி நின்றபிறகே நடையைத் தொடர்ந்தேன். காற்றின் தாண்டவத்தைக் கவனித்தபடி சூரியன் தன் போக்கில் நகர்ந்துகொண்டிருந்தது.


காற்று வலுத்தபடியே இருந்தது. அதன் ஓசை ஏதோ வாத்தியத்தின் விசித்திரத் தாளம்போல ஒலிக்கத் தொடங்கியது. வீட்டின் சுற்றுச்சுவர்களை அலங்கரித்த தொட்டிச்செடிகள் உடலை நெளித்து வேகவேகமாக விரல்களை நீட்டி நடனமாடின. தாளத்துக்கு இசைவாக நடனமெழுந்தது. நடனத்துக்கேற்றபடி தாளம் ஒலித்தது. ஒன்றின் விரல்களை இன்னொன்று பற்றிக்கொண்டிருக்குமோ என நினைக்கத் தூண்டும் இயக்கம்.

பாதையோரத்து மரங்களின் கிளைகளனைத்தும் விசித்திரமான ஓசையுடன் உடல்வளைத்து எம்பின. இலைகள் ஒவ்வொன்றாக உதிர்ந்தன. பாக்குமரத்தின் ஓலைகள் வளைந்து சுழல குல்மொகர் மரங்களின் கிளைகள் நடுக்கத்தோடு கைநீட்டி ஓசையெழுப்பின. அடிமரத்து மடிப்பின் மறைவில் நாலைந்து பூனைக்குட்டிகள் ஒடுங்கியிருந்தன. சடசடவென ஓசையுடன் முரிந்த இரண்டு கிளைகள் இரு தனித்த துண்டுகளாக மரத்திலிருந்து விடுபட்டு சரிந்துவிழுந்தன.

அக்கணம் நெஞ்சில் அப்படியே உறைந்துவிட்டது. அதை எளிதில் மறக்கமுடியவில்லை. ஒரு மெளனக்காட்சியைப்போல தோன்றித்தோன்றி மறைந்தபடி இருந்தது.  பாதாள சாக்கடைத்திட்டத்துக்காக ஒரு பெரிய கால்வாய் அகலத்துக்கு சாலையின் நடுப்பகுதியில் வெட்டப்பட்ட பள்ளத்தின் ஓரமாக அந்தக் கிளைகள் விழுந்திருந்தன. மரத்திலிருந்து பிரிந்ததையே உணராததுபோன்ற மயக்கத்தில் அவை ஆழ்ந்திருந்தன. ஒவ்வொரு இலையும் கனவில் மிதக்கும் கண்ணைப்போல இருந்தது. ஆறேழு இலைக்கொத்துகள் மடிந்து சேற்றுக்குள் கிடந்தன.

காற்றின் குரலே மாறிப் போய்விட்டது. அருள்வந்து ஆடும் பெண் அடிவயிற்றிலிருந்து எழுப்பும் மூர்க்கம் நிறைந்த குரலாகத் தோன்றியது. அது மெல்லமெல்ல உச்சத்துக்கு எழுந்து விலங்கின் சீற்றமென மாறியதுபோல இருந்தது. அமைதியிழந்த அதன் ஓலமும் துடிப்பும் அச்சமூட்டின.

திரும்பும்போது யாரோ இரண்டுபேர் அந்தப் பள்ளத்தில் இறங்கி கிளைகளைப் பிடித்து மேலே தூக்கிக்கொண்டு ஏறினார்கள். “காத்துக்கு காலங்கார்த்தாலயே வெறி ஏறிடுச்சி போல. இந்தத் தாண்டவம் எங்க போயி முடியுமோ தெரியலைஎன்று சொன்னார் ஒருவர். “போறவங்க வரவங்க தலயில உழாம  இப்படி ஓரமா உழுந்ததே, அத நெனச்சி சந்தோஷப்படணும்என்றார் மற்றொருவர்.

வீட்டுக்குத் திரும்பிய பிறகு கூட அந்தக் காட்சியிலிருந்து விடுபடமுடியவில்லை. அதிலிருந்து விலக நினைக்கும்தோறும் அது எனக்குள் விரிந்து வளரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் என் எண்ணவெளியைக் கிழித்துக்கொண்டு பாய்ந்தோடியது. அதை நினைப்பதே வேதனையளித்தது. அமைதியும் கனிவும் நிறைந்ததாகவே உணர்ந்து பழகிய காற்றுக்கு இப்படியும் ஒரு முகமுண்டு என்ற உண்மை நம்பமுடியததாக இருந்தது.

தொலைபேசியில் தனபாலை அழைத்து நிகழ்ந்ததையெல்லாம் சொன்னேன். ஊருக்குள் எனக்குள்ள ஒரே ஆறுதல் அவன் மட்டுமே.  எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு தன்னுடைய குடியிருப்புப் பகுதியில் செய்திருக்கும் காற்று அலங்கோலங்களை அடுக்கத் தொடங்கினான் அவன். தன் வீட்டின் பின்பக்கத்தில் கம்பி பொருத்தாத ஒரு ஜன்னல் கண்ணாடி உடைந்துவிட்டதாகச் சொன்னான். நான் எந்தப் பதிலையும் சொல்லாமல் அவன் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்.

சரி, இன்றைய பொழுது இப்படி தொடங்கியிருக்குதுன்னு நெனச்சி வேலையை பாக்க வேண்டிதுதான்என்றான். பிறகு அவனே தொடர்ந்துகொஞ்ச நேரம் மனசுக்கு கஷ்டமாதான் இருக்கும். அப்புறம் போகப்போக எல்லாம் சரியாகிடும்என்றான். இறுதியில் அடங்கிய குரலில்நம்மால வேற என்ன செய்யமுடியும்?” என்று கேட்டான்.

அதற்குப் பிறகுஉனக்குத் தெரியாததையா புதுசா சொல்லப் போறேன்?” என்று அவன் தொடங்கிய உரையாடல் எப்படியோ பள்ளிக்கூட நாட்களுக்குள் புகுந்துவிட்டது. நிகழ்காலத்தில் நடைபெறும் ஒவ்வொரு விஷயத்துக்கும் இணையான இன்னொரு விஷயத்தை அவன் ஐம்பது வருஷங்களுக்கு முந்தைய காலத்திலிருந்து எப்படி எடுக்கிறான் என்பது ஒரு பெரிய ஆச்சரியம்.

தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் தொடங்கிய நேரம். அவனும் நானும் பள்ளிக்கூடம் விட்டு திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போதெல்லாம் எங்களிடையே ஒரு பழக்கமிருந்தது. வழியில் தோப்புக்குள் புகுந்து மாங்காய் அடித்துத் தின்றுவிட்டு, குட்டைக்கு பக்கத்தில் உட்கார்ந்து சினிமா கதை பேசிவிட்டுத் திரும்புவோம். கதை சொல்வதில் அவனுக்குத் திறமை அதிகம். திரையில் நடித்த நடிகரின் குரலிலேயே ஒவ்வொரு வசனத்தையும் பேசிக் காட்டுவான். அன்று அவன் குரலில் ஏராளமான காட்சிகள் அரங்கேறின. ஏற்ற இறக்கங்களுடன் எண்ணற்ற வசனங்கள். மன்னனாக, கலைஞனாக, துறவியாக,  ஓடக்காரனாக அவனுடைய குரல் கணத்துக்குக் கணம் மாறியபடி இருந்தது. அந்த சுவாரச்சியத்தில்தான் நேரம் போவது தெரியாமல் அமர்ந்திருந்துவிட்டோம். ஒரு கட்டத்தில் அந்த நடிகர் பேசிய வீரவசனத்தைப் பேசிவிட்டு இடி இடிப்பதுபோலச் சிரித்தான்.  உண்மையிலேயே அப்போது வானத்தில் இடி எழுந்து எங்களை நடுங்கவைத்தது. ஆளையே தூக்கி வீசிவிடுவதுபோல வேகம் கொண்ட காற்று நாலு திசையிலும் சீற்றம் கொண்டு ஆடியது. சுற்றி என்ன நடக்கிறது என்கிற சுய உணர்வே அற்றுப் போகிற அளவுக்கு கதைப்பேச்சில் மூழ்கிவிட்டதை உணர்ந்து பைகளை எடுத்துக்கொண்டு ஓடத் தொடங்கினோம்.

ஒரு பெரிய தென்னையோலை சர்ரென்று இறங்கி எங்கள் முன்னால் விழுந்தது. சட்டென்று நாங்கள் அப்படியே நின்றுவிட்டோம். தரையோடு ஓலை மோதிய வேகத்தில் பறந்த புழுதி எங்கள் பார்வையை மறைத்தது. உடல்நடுங்க அதைப் பார்த்தோம். ஒரே கணத்தில் அவற்றைத் தாண்டி ஓட்டமாக ஓடி வீட்டையடைந்தோம்.

என்ன ஞாபகம் வருதா?” என்று அவன் மறுமுனையில் கேட்ட கணத்திலேயே பழைய காட்சி மனத்தில் விரியத் தொடங்கிவிட்டது. தனபாலின் நினைவாற்றல் பத்து கணிப்பொறிகளுக்குச் சமம் என்பதற்கு அன்றைய உரையாடலும் ஒரு சாட்சி. எப்போதோ தூண்டிலில் சிக்கித் துடித்த மீனையும் ஆழ்கிணற்றிலிருந்து எடுத்துவந்த அடிமண்ணையும் கடற்கரைக் கிளிஞ்சல்களையும் கூட அவன் ஒருபோதும் மறந்ததே இல்லை. அறுந்துபோன ஒயர்களைத் தேடியெடுத்து இணைப்பு கொடுப்பதுபோல காலங்களை இணைத்துப் பேசுவதில் உள்ள அவன் திறமை ஆச்சரியம் நிறைந்தது.

வேகமாகக் குளித்து, வேகமாக உடைமாற்றி, சிற்றுண்டி முடித்து ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துவிட்டேன். காற்றின் வேகம் பெருகியிருந்ததே தவிர குறையவே இல்லை. கோபத்தில் திசைமறந்து சீறியோடும் குதிரையென தாறுமாறாக வீசியபடி இருந்தது. அரசமரத்தின் பக்கத்திலிருந்து  கூட்டமாக எழுந்த பச்சைக்கிளிகள் வானத்தில் அவசரமாக ஓர் அரைவட்டமடித்த பிறகு மீண்டும் கிளைக்குத் திரும்பி அமர்ந்தன.

சடசடவென ஒரு கிளை முரிந்த சத்தத்தை ஒருகணம் தாமதமாகத்தான் என் மனம் உள்வாங்கியது. .புங்கமரத்திலிருந்து ஒரு பெரிய உறுமலுடன் விடுபட்டுப் பறந்துவந்த கிளை  தரையை நோக்கிச் சரிந்துவிழுவதைப் பார்த்தேன். காலையில் பார்த்ததைப்போலவே மற்றுமொரு காட்சி. என் அடிவயிற்றில் பரவிய நடுக்கத்தை உணர்ந்தபடி அந்த இடத்தை நோக்கி ஓடினேன்.

விழுந்திருந்த கிளைக்கு அடியில் ஒரு பெண்மணி சிக்கிக்கொண்டிருந்தார். அவர் மடியில் குழந்தை கிடந்தது. நான் பக்கத்தில் சென்று சேர்வதற்குள் இருபது முப்பது பேர் சேர்ந்து அந்தக் கிளையை அப்படியே தூக்கி ஓரமாக ஒதுக்கிவிட்டார்கள். அவரைத் தூக்கி உட்காரவைத்து தண்ணீர் பருகவைத்தார்கள். நெற்றியின் பக்கத்தில் தலை அடிபட்டிருந்த்தால் ரத்தம் ஒழுகியது. கூட்டத்தையும் தனக்கு அருகில் பீதியில் உறைந்துபோயிருந்த குழந்தையையும் ஒரு முறை பார்த்துவிட்டு மயக்கத்தில் ஆழ்ந்துவிட்டார் அவர். ஒன்றிரண்டு பெண்கள் வந்து கைக்குட்டைத் துணியை தண்ணீரில் நனைத்து அவருடைய ரத்தக்காயத்தைத் துடைத்துவிட்டு அழுத்தி கட்டுக்கட்டினார்கள்.

உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்லை. ஆனாலும் காயத்த அப்படியே விடமுடியாது. ஒரு நேரம்போல இன்னொரு நேரம் இருக்காது. ஆஸ்பத்திரிக்கு போயிடறதுதான் நல்லது. யாராச்சிம் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணுங்க

நாலு பேர் ஸ்டேஷன் மாஸ்டரிடம் தகவல் சொல்ல ஓடினார்கள்.

நடுவயதுள்ள ஒரு பெண்மணிஅந்த அம்மாவுக்குத்தாங்க அடி. கொழந்தைக்கு ஒன்னுமில்ல. பூமாதிரி பக்கத்திலயே கெடக்குது. ஒரு தூசு கூட அதும்மேல படலஎன்று சொன்னபடியே அந்தக் குழந்தையை விலக்கியெடுத்து ஓரமாக உட்கார்ந்தார். “பயப்படாதம்மா, இந்தா ஒருவாய் தண்ணி குடிச்சிக்கோஎன்று தன்னிடமிருந்த தண்ணீர்ப் பாட்டிலிலிருந்து தண்ணீரைச் சாய்த்து பருகவைத்தார். அவசர சிகிச்சை வாகனம் வந்து செல்லும்வரை தன் மார்பிலேயே அக்குழந்தையை சாய்த்துவைத்துக்கொண்டிருந்தார் அவர்.

முந்தானையை உதறி முகத்தை அழுத்தமாகத் துடைத்துக்கொண்டே தெற்குப்பக்கம் திரும்பி கையுயர்த்திக் கும்பிட்டபடிதாயயும் புள்ளயயும் காப்பாத்துங்கடா சாமிகளாஎன்று முணுமுணுத்தார். சற்றே தொலைவிலிருந்த பெஞ்சை நோக்கி நடக்கத் தொடங்கியவர் தற்செயலாக என் பக்கம் திரும்பிநம்மால வேற என்ன செய்யமுடியும்?” என்றார்.