மாற்று பாவாடை தாவணியை தோள்மீது போட்டுக்கொண்டு குளிப்பதற்காக வீட்டுக்குப் பின்னால் இருக்கும் கீற்றுப்படலை நோக்கிச் செல்லும்போது “தேவிகா, ஒரு நிமிஷம், இங்க வந்துட்டு போம்மா” என்று அடுப்பங்கரையிலிருந்து அம்மா அழைத்தாள்.
நின்ற இடத்திலிருந்தே முகத்தைத் திருப்பி “என்ன விஷயம்? சீக்கிரமா
சொல்லும்மா. அந்த நர்சம்மா ஊட்டு பாட்டி அஞ்சி
நிமிஷம் லேட்டா போனாலும் ஆயிரம் பேச்சு பேசும்.
நேரத்துக்கு போனாதான் அதும் வாய்ல மாட்டாம இருக்கமுடியும்” என்றாள் தேவிகா.
“அதெல்லாம் தெரிஞ்ச கதைதானம்மா. ஒரே ஒரு நிமிஷம். இங்க வா” என்று
மீண்டும் அம்மா அழைத்தாள். வாய்க்குள்ளேயே எதையோ முணுமுணுத்தபடி எட்டி நடைபோட்டுச்
சென்று அம்மாவுக்கு அருகில் நின்றாள் தேவிகா.
தன்னைவிட உயரமாக வளர்ந்து நிற்கும் மகளைப் பார்க்கும்போதெல்லாம்
உருவாகும் ஒருவித பரவசமும் பயமும் ஒருங்கே எழுந்து ஒரு கணம் அம்மாவைத் தடுமாறவைத்தன.
பேச்சு திரண்டு வராமல் தேவிகாவின் தோள்மீது மடித்துவைத்திருந்த தாவணியைப் பார்த்தபடி
“இந்த நீலக்கலர் தாவணியை விட்டா, வீட்டுல உனக்கு வேற தாவணியே இல்லையா? போன தீபாவளிக்கு வாங்கினியே அந்த ரோஜா கலர் தாவணி,
அதைக் கட்டிக்கறதுதான?” என்று கேட்டாள்.
“இதைக் கேக்கறதுக்கா கூப்ட்ட? என்ன விஷயம் அதைச் சொல்லும்மா?”
என்று அம்மாவிடம் சலிப்புடன் கேட்டாள் தேவிகா.
“அப்பாவை இன்னிக்கு டி.பி. ஆஸ்பத்திரிக்கு கூப்ட்டுகிட்டு போவணும்டி.
திரும்பறதுக்கு எம்மா நேரமாவுமோ தெரியலைடி. அந்த நர்சம்மா ஊட்டு வேலை முடிஞ்சதுமே நெல்லித்தோப்புல
அந்த பிரான்ஸ்காரம்மா பங்களா வரைக்கும் போய் அப்பாவுக்குப் பதிலா அந்த தோட்டத்து வேலையையும்
முடிச்சிட்டு வரியா?”
“அவ்ளோ தூரம் எப்படிம்மா நடந்துபோவ முடியும்?”
”இன்னைக்கு ஒருநாள் எப்படியாவது சமாளிச்சிக்கம்மா”
“சாய்ங்காலம் வரைக்குமா? அப்ப மதியான சாப்பாடு?”
“தோ, புளிசோறு கிண்டி வச்சிருக்கேன்”
சுவரோரமாக வைத்திருந்த டிபன்பாக்ஸை அம்மா சுட்டிக்காட்டினாள்.
“எல்லாத்தயும் திட்டம் போட்டுட்டுத்தான் சொல்றியா? ஏன், ஒன் பெரிய புள்ளை மாயாண்டியை போவ சொல்றதுதான?”
“அவனத்தான்டி அனுப்பலாம்ன்னு இருந்தேன். பாண்லே கம்பெனியில என்னமோ
தினக்கூலிக்கு ஆள் எடுக்கறாங்களாம். போய் முட்டிப் பார்க்கலாம் வாடான்னு கவுன்சிலர்
கூப்ட்டிருக்காராம். அதுக்குப் போவணும்ன்னு சொல்லிட்டு போயிட்டான் அவன்”
“அப்படின்னா தங்கவேலு போவலாம்ல்ல? அவனுக்கு என்னாச்சி?”
“அவன நம்பி எப்படிடி ஒரு வேலையை சொல்லமுடியும்? விளையாட்டு புத்தி
அவனை விட்டு போவமாட்டுது. நாம அனுப்பன வேலையை மறந்துட்டு எங்கனா கிரிக்கெட் பேட்ட தூக்கிகினு
கெளம்பி போயிட்டான்னா என்னடி பண்றது? அதனாலதான் ஒங்கிட்ட கேக்கறேன்”
தேவிகா ஒருகணம் கண்களை மூடி பெருமூச்சு விட்டாள். ”சரி சரி போய்ட்டு
வரேன். நீ ஒன்னும் மூஞ்சிய தூக்கி வச்சிக்காத” என்றபடி குளியல் மறைப்பை நோக்கி நடந்தாள்.
பிரான்சுக்காரம்மா பங்களா வீடு அவளுக்குப் புதிதல்ல. அது கட்டி
முடித்த காலத்திலிருந்தே அவள் அப்பா அங்குதான் பகல் நேரத்துக் காவல்காரர். சிறுமியாக
அவளை அவள் அப்பா அங்கு பலமுறை அழைத்துச் சென்றதுண்டு. மதிலோரமாக இருந்த தென்னைமரத்தின்
அடியில் அவளை உட்காரவைத்துவிட்டு அவளுக்கு உரத்த குரலில் கதை சொல்லிக்கொண்டே தோட்டத்தைப்
பெருக்கிச் சுத்தப்படுத்துவார். பெரியவளான பிறகு பல சமயங்களில் அவருக்கு மதிய சாப்பாட்டை
ஒரு தூக்குவாளியில் போட்டு நிரப்பி எடுத்துச் சென்று கொடுத்துவிட்டுச் செல்வாள்.
ஒருநாள் சப்போட்டா மரத்தடியில் குவிந்திருந்த இலைக்குப்பைகளை
எல்லாம் அப்பா எடுத்துக்கொண்டிருந்தபோது, அவள் கொட்டைவாழையின் பூக்கள் மீது அமர்ந்திருந்த
தும்பிகளுக்கு பின்னால் நின்று அசைவில்லாமல் கையை மட்டும் முன்னோக்கிச் செலுத்தி தும்பியைப் பிடித்துவிடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள்.
அந்த நேரத்தில் அப்பா மரத்தடியில் வைத்திருந்த கருப்புநிற நோக்கியா கைபேசியில் மணியோசை
எழுந்தது. அப்பா அதை எடுத்து “அலோ” என்றபோது ”யாரு அது சின்ன பொண்ணு? அதையெல்லாம் ஏன்
தோட்டத்துல விட்ட? அங்க என்ன வேலை அதுக்கு?” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்லும்
குரல் கேட்டது. “எம் பொண்ணுதாம்மா. என் பொண்ணு… எனக்கு மதிய சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்குதும்மா”
என்று பதில் சொன்னார் அப்பா.
உரையாடல் முடிந்த பிறகு அப்பாவை நெருங்கி “நான் இங்க விளையாடறது
அந்த அம்மாவுக்கு எப்படிப்பா தெரியுது?” என்று கண்கள் விரிய ஆச்சரியத்தோடு கேட்டாள்
தேவிகா. ”அது ஒன்னும் மாயமந்திரம் கிடையாதும்மா. அதோ பாரு, அந்த இடத்துல கேமிரா வச்சிருக்காங்க.
அதும் வழியா எந்த ஊரா இருந்தாலும் அங்க இருந்துகிட்டே இங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிடலாம்.
“ஓ. நீ வேலை செய்யறியா, சும்மா உக்கார்ந்திருக்கியானு அங்கேர்ந்தே
கவனிப்பாங்களா?”
“அதையும் பார்க்கலாம்” என்று சிரித்தார் அப்பா.
நாலைந்து மாதங்களுக்கு முன்னால் ஒருநாள் இரண்டு ரோஜாச் செடிகளைக்
கொண்டுவந்து குளியல் மறைப்புக்காக கட்டப்பட்ட கீற்றுத்தடுப்பின் ஓரமாக நட்டு வைத்தார்.
”எங்க கெடைச்சிதுப்பா?’ என்று கேட்டதற்கு ”பிரான்ஸ்காரங்க லீவுல வந்திருக்காங்கம்மா.
தோட்டம் பூரா புதுசா தொட்டி வாங்கி செடி நட்டிருக்காங்க. பாத்தி பிரிச்சி ரோஜாத் தோட்டம்
போடிருக்காங்க. சரி, நாமளும் ரெண்டு நடுவமேன்னுதான் ரெண்டு எடுத்தாந்தேன்” என்றார்.
அவர் அச்செடிகளையே கண்மலர சில நொடிகள் பார்த்தபடி நின்றார். “பூப்பூத்து நின்னா பார்க்கறதுக்கு
அழகா இருக்கும்ல?” என்று அவளிடமே கேட்டார்.
தெருக்குழாயிலிருந்து தண்ணீர்க்குடத்தோடு உள்ளே வந்த அம்மா “கெடக்கற வேலைலாம்
கெடக்கட்டும், கெழவன தூக்கி மனையில வைங்கற கதையா, ரொம்ப நேரமா அப்பாவும் பொண்ணும் செடி
மேல பாசத்த பொழியறிங்களே, இங்க கொஞ்சற நேரத்துல ஆளுக்கு ரெண்டு கொடம் தண்ணி எடுத்தாந்து
வச்சா புண்ணியமா இருக்கும்” என்று சொல்லிக்கொண்டே
நடந்துசென்றாள்.
அந்தச் செடிகள் துளிர்க்கவே இல்லை. ஒவ்வொரு இலையாக வாடி வதங்கி
உதிர்ந்துவிழ, கருத்துச் சுருங்கி மடிந்தன. ஒவ்வொரு நாளும் வளர்ந்துகொண்டே வந்த ஆவலும்
கனவும் கரைந்துவிட்டன. ”நமக்கு ஒரு வெடிவுகாலம் வந்தாதான, நாம நடற செடிக்கும் ஒரு வெடிவுகாலம்
வரும். அத உட்டு கெடாசிட்டு வேலைய பாருடி” என்று பெருமூச்சுடன் சொல்லிவிட்டுச் சென்றாள்
அம்மா.
குளித்துக்கொண்டிருக்கும் போது அந்தச் செடிகளின் நினைவு வந்துவிட்டது.
பங்களா வீட்டில் வைத்த செடிகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கவேண்டும் என்று அவள்
விரும்பினாள். அந்த வீட்டுக்குச் செல்ல அவளுக்கென ஒரு காரணத்தை அவள் மனம் கண்டடைந்ததும்
அவள் உடலில் ஒரு பரபரப்பு கூடியது.
தலைமுடியை வாரி ஒழுங்குபடுத்தி பின்னல் போட்டுக்கொண்டு தட்டில்
வைக்கப்பட்டிருந்த பழைய சோற்றை வேகவேகமாகப் பிழிந்து சாப்பிடும்போது அவள் அப்பாவும் ஆஸ்பத்திரிக்குச்
செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். இரு கைகளையும் கோர்த்து மார்போடு அழுத்தமாகப் பிடித்திருந்தார்.
“வெளிய கேட்ட தெறந்து உள்ள போனதும் மறக்காம மூடி உள்தாழ்ப்பாள்
போட்டுக்கணும் புரியுதா? தெறந்திருந்தா போதும், தெருநாய்ங்க உள்ள வந்துடும். அதுக்கப்புறம்
அதுங்கள வெரட்டறது பெரும்பாடாய்டும்.”
மூச்சு வாங்கியபடி பொறுமையாக ஒவ்வொரு வாக்கியமாகச் சொன்னதற்கெல்லாம் “சரிப்பா, சரிப்பா” என்றாள். சாப்பிட்ட
தட்டைக் கழுவி கவிழ்த்துவைத்துவிட்டு “வரேம்மா, வரேம்பா” என்று சொல்லிக்கொண்டே புறப்பட்டாள் தேவிகா.
நர்சம்மா வீட்டு வேலை ஒரு மணி நேரத்தில் முடிந்துவிட்டது. பிறகு
அக்கம்பக்கம் வேடிக்கை பார்த்தபடியே நெல்லித்தோப்புக்கு நடந்துசென்றாள். மீன் மார்க்கெட்டைச்
சுற்றிக்கொண்டு தேவாலயம் வழியாக குறுக்குத் தெருவில் நடந்து பங்களா வீட்டுக்குச் சென்றாள்.
அவளைவிட உயரமான இரும்புச் சட்டங்களிட்ட பெரிய கதவின் பூட்டை தன்னிடம் இருந்த திறவுகோலால்
திறந்துகொண்டு உள்ளே சென்றாள். மறுகணமே, ஞாபகமாக கதவுகளை இழுத்து உட்பக்கமாகத் தாழிட்டு
பூட்டினாள்.
வீட்டுக்கதவுக்கும் நுழைவாயில் கதவுக்கும் இடைப்பட்ட இடம் முழுதும்
தோட்டம் பரந்து விரிந்திருந்தது. மதிலோர மூலைப்பகுதிகளில் தென்னை மரங்கள் நின்றிருந்தன.
நடுநடுவே நாவல், கொய்யா, சப்போட்டா மரங்கள்
காணப்பட்டன. மரத்தடியில் விழுந்திருக்கும்
இலைகளையும் சருகுகளையும் அகற்றி சுத்தப்படுத்தி முடிக்கவே அரைநாள் போய்விடும் என்று
தோன்றியது.
அப்போதுதான் நடுவில் நடப்பதற்குப் போதுமான இடைவெளிடை விட்டு
இருபுறங்களிலும் சதுரமாக பாத்திகளை உருவாக்கி, அவற்றில் சீரான இடைவெளியில் நடப்பட்டு
வளர்ந்து காற்றில் குலுங்கிக்கொண்டிருக்கும் ரோஜாச்செடிகளைப் பார்த்து பரவசமுற்றாள்.
மகிழ்ச்சியில் துள்ளிச் சென்று அச்செடிகளின் அருகில் சென்று நின்றாள். இளம்பச்சை படர்ந்த
அதன் இலைவிளிம்புகளைத் தொட்டு வருடினாள். தம் வீட்டில் வளர மறுத்த அதே செடிகள் அந்த
மண்ணில் வளர்ந்து நின்றிருப்பதைக் காண ஆச்சரியமாக இருந்தது.
டிபன் பாக்ஸ் வைத்திருந்த பையை சுவரோரமாக நிழலில் வைத்துவிட்டு
துடைப்பத்தைத் தேடி எடுத்தாள். பின்மதிலில் இருந்து முன்மதில் வரைக்கும் பெருக்கிச்
சுத்தமாக்கினாள். பிறகு குப்பையை ஒரு கூடையில் வாரி எடுத்துச் சென்று பின்மதில் மூலையிலிருந்த
குப்பைக் குழியில் கொட்டினாள். தண்ணீர்க்குழாயைத் திறந்துவிட்டு, நீளமான பிளாஸ்டிக்
பைப் வழியாக எல்லா செடி, கொடி, மரங்களின் வேரைச் சூழ்ந்து அகழப்பட்டிருந்த பள்ளங்களில்
நிறைந்துநிற்கும்படி செய்தாள்.
அந்தக் குழாய்த்தண்ணீரையே உள்ளங்கைகளில் ஏந்தி முகம் கழுவிக்கொண்டு
நிமிர்ந்தபோதுதான் பசியை உணர்ந்தாள். அண்ணாந்து பிரகாசமான வானத்தைப் பார்த்தாள். நேரம்
இரண்டு மணியைத் தொட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.
பையைத் திறந்து டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு நிழலான இடம் தேடி
அமர்ந்தாள். மூடியைத் திறந்ததும் புளிச்சோற்றின் மணம் வீசியது. அதன் மீது அம்மா வைத்திருந்த
மிளகாய் வற்றல்களைப் பார்த்தாள். சோறு எப்படி இருந்தாலும், காரசாரமான மிளகாய் வற்றலைக்
கடித்துக்கொண்டு அவள் சாப்பிட்டுவிடுவாள் என்பதை அறிந்துவைத்திருந்த அம்மாவை நினைத்தபோது
அவளை அறியாமல் அவள் உதடுகளில் ஒரு புன்னகை படர்ந்தது. அதைத் தொடர்ந்து விழியோரத்தில்
கண்ணீர்த்துளிகள் தேங்கின.
பள்ளிக்கூடம் சென்ற நாட்களில் தயிர்சோறு, எலுமிச்சைச்சோறு, புளிச்சோறு
என நாளுக்கொன்றாக டிபன் பாக்ஸில் நிரப்பி ஆறேழு மிளகாய் வற்றல்களை வைத்து சாப்பிட்ட
நினைவுகள் நெஞ்சில் மோதின. பத்தாம் வகுப்பு வரைதான் அவளால் படிக்கமுடிந்தது. கல்லூரியில்
படித்து பட்டம் வாங்கி, பெரிய வேலைக்குச் செல்லவேண்டும் என்று நினைத்த அவள் கனவுகள்
எல்லாம் அத்தோடு பொடிப்பொடியாக நொறுங்கிச் சிதறிவிட்டன.
அம்மாவுக்கு தீடீரென வயிற்றுப் பிரச்சினை. ஆஸ்பத்திரிக்கும்
வீட்டுக்கும் வாரக்கணக்கில் நடந்தாள். கடைசியில் கருப்பையை நீக்கும் அறுவைசிகிச்சையை
மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதற்குப் பிறகே அவள் மெல்ல மெல்ல தெளிந்துவந்தாள். ஆனால்
துரதிருஷ்டவசமாக, அவளுடைய உடலில் தெம்பு வற்றிவிட்டது. அம்மாவும் அப்பாவும் ஆளுக்கு
சில வீடுகளில் வேலை செய்து பெறும் வரும்மானத்தில்தான் குடும்பம் நடைபெற்றுவந்தது. ஒரு
வருமானம் நின்றதும் குடும்பம் தடுமாறியது. தேவிகா தன் கல்விக்கனவைத் துறந்து வீட்டு
வேலைக்குச் சென்றே ஆகவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. அவளைத் தொடர்ந்து சில ஆண்டுகளிலேயே
அண்ணனும் தம்பியும் கூட படிப்பை நிறுத்தி ஆளுக்கு ஒரு வேலையைத் தேடிக்கொண்டார்கள்.
“என்னங்க, தனியா சாப்புடறீங்களா? வயிறு வலிக்கப் போவுது”
எதிர்பாராத குரலைக் கேட்டதும் அதிர்ந்து முகம் திருப்பி, குரல்
வந்த திசையைக் கண்டுபிடித்தாள் தேவிகா. நாவல் மரத்துக்கருகில் சுற்றுச்சுவரின் மறுபக்கத்தில்
இளைஞனொருவன் நின்றிருந்தான். தலையைப் படிய வாரிச் சீவியிருந்தான். அவள் பார்வை தான்
நின்றிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்ததுவிட்டது என்பதை அறிந்ததும் அவன் புன்னகைத்தவாறே
அதே கேள்வியை மீண்டும் கேட்டான்.
முதலில் வராத வெட்கம் அவளுக்கு அப்போது வந்தது. வேகமாக பாக்ஸை
மூடிவைக்கப் போனாள்.
“பயப்படாதீங்க. நான் இந்தத் தோட்டத்த பார்த்துக்கிற ஆள்தான். சாப்பிடறத விட்டு பாதியில எழுந்திருக்காதீங்க. முடிங்க.
முடிங்க. அவசரமில்லை”
“முடிச்சிட்டேன். கடைசி வாய். அவ்ளோதான்” என்றபடி அவன் முன்னாலேயே
கடைசி உருண்டையை விழுங்கிவிட்டு வெறும் பாக்ஸை
அவன் முன்னால் திருப்பிக் காட்டினாள். அவன் அதைப் பார்த்து புன்னகைத்தான். அவள் எழுந்து
சென்று குழாயில் வழிந்தோடும் தண்ணீரில் பாக்ஸைக் கழுவி எடுத்துவந்து வெயில் படிந்திருக்கும்
இடத்தில் கவிழ்த்து வைத்தாள்.
“நீங்க சாப்ட்டீங்களா?” என்று நிதானமாக அவனைப் பார்த்துக் கேட்டாள்.
“நான் சாப்ட்டு ஒரு மணி நேரம் ஆவுது. காலையிலயே பார்த்தேன் உங்கள.
வேகவேகமா வேலை செஞ்சிட்டிருந்தீங்க. புதுசா வந்திருக்கீங்களா?” என்றான் அவன்.
அவள் “ம்” என்று தலையசைத்தாள்.
“ஒரு மீசைக்கார கவுண்டர்தான நேத்துவரைக்கும் வேலை செஞ்சாரு.
நேத்துகூட அவரை நான் பார்த்தனே. ஒரு ராத்திரியிலயே ஆள மாத்திட்டாங்களா?”
“ஆளயெல்லாம் மாத்தலை. நான் அவரு பொண்ணு. அப்பா ஆஸ்பத்திரிக்கு
போயிருக்காரு. அதனால நான் வந்தேன்”
”ஓ” என்று தலையசைத்தபடி அவன் ஒருகணம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
பிறகு “ஏன் அண்ணன் தம்பிங்க யாரும் இல்லையா?” என்று கேட்டான்.
“இருக்காங்க இருக்காங்க. எல்லாருக்கும் அவுங்கவுங்க வேலை. கடைசியில
நான் வந்து நிக்க வேண்டியிருக்குது” சொல்லி முடிக்கும்போது அவள் குரலில் அவளை அறியாமல்
ஒரு சலிப்பின் தொனி கலந்துவிட்டது. அதை அக்கணமே அவன் புரிந்துகொண்டான்.
“ஏங்க அப்படி சொல்றீங்க? இதுவும் நல்ல வேலைதாங்க.”
அந்தச் சிறு இடைவெளியில் அவள் சுதாரித்துக்கொண்டாள். தன்னைத்
தானே திரட்டிக்கொண்டு புன்னகைத்தாள். “நல்ல வேலை இல்லைன்னு நான் எங்க சொன்னேன்?” என்றாள்.
அவன் உடனே பேச்சைத் திசைதிருப்பும் விதமாக “நான் பிகாம் படிச்சிருக்கேன்.
கவுர்ன்மெண்ட் வேலைக்காக பரீட்சை எழுதியிருக்கேன். சீக்கிரமா பாஸாயி நல்ல வேலைக்கு
போயிடுவேன்”
“பி.காம். படிச்சிட்டா இந்த வேலைக்கு வந்திருக்கீங்க?”
“உங்க அப்பாவும் இதே கேள்வியைத்தான் கேட்டாரு. சொல்லி வச்சமாதிரி
நீங்களும் அதே கேள்வியை கேக்கறீங்க. எனக்கு அம்மா அப்பா இல்லைங்க. அந்தக் காலத்துல
அளவுக்கு மீறி கடன் வாங்கிட்டு அவமானம் தாங்காம தற்கொலை செஞ்சி செத்துப் போயிட்டாங்க.
எங்க அத்தைதான் என்னை வளர்த்து படிக்க வச்சாங்க. டிகிரி முடிச்சாச்சி. இனிமேலயும் அவுங்களுக்கு
பாரமா இருக்கக்கூடாது இல்லையா? நம்மால முடிஞ்ச அளவுக்கு நாலு காசி சம்பாதிக்கணும்.
நம்ம தேவையை நாம கவனிச்சிக்கணும். அவுங்களுக்கும் மனசு திருப்தியாவுற மாதிரி கொடுக்கணும்னு
நெனச்சேன்.”
“அதுக்காகத்தான் இந்த வேலைக்கு வந்திங்களா?”
“நானா வரலை. எங்க தெருவுல ராஜமாணிக்கம் மாமான்னு ஒருத்தர் இருக்காரு.
வீடு வாங்கறது, நெலம் வாங்கறது, விக்கறது மாதிரியான வேலைங்கள்ல சின்னதா ஒரு கமிஷன்
வாங்கிட்டு ஒத்தாசை செய்றவரு. அவருகிட்ட தற்காலிகமா ஒரு வேலை வேணும்ன்னு சொல்லி வச்சிருந்தேன்.
அவருதான் இங்க அழைச்சிட்டு வந்து விட்டாரு”
“சரி”
“இதுவும் பிரான்ஸ்காரங்க ஊடுதான். கூட்டறது, பெருக்கறது, தோட்டத்த
பராமரிக்கறதுன்னு பாதி நாள்தான் வேலை இருக்கும். மிச்ச நேரத்துல ஏதாச்சிம் புஸ்தகம்
படிப்பேன்.”
“சரி”
“எனக்கு எந்த ஊருல வேலை கெடைச்சாலும் சரி, உடனே போய் சேர்ந்துடுவேன்.
வேலை செஞ்சிகிட்டே போஸ்டல்லயாவது, ஈவனிங் காலேஜ்லியாவது எம்.ஏ., எம்.காம்னு படிப்பேன்.
இன்னும் பெரிய போட்டித்தேர்வு எழுதி, பெரிய வேலைக்குப் போவேன்”
உறுதியும் தெளிவும் கொண்ட அவன் பேச்சைக் கேட்டு அவள் அவனை ஆச்சரியமாகப்
பார்த்தாள். அவன் நிறுத்தாமல் தொடர்ந்து பேசினான்.
“கைநிறைய சம்பாதிச்சிகிட்டு இதே ஊருக்குத் திரும்பி வருவேன்.
இதேபோல ஒரு பெரிய தோட்டத்தோட ஒரு பெரிய பங்களா கட்டுவேன்”
அவன் சொல்லி முடிப்பதற்குள் இடையில் குறுக்கிட்ட தேவிகா “பணக்காரியா
ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா வாழப்போறீங்க, அதான சொல்லப் போறீங்க?”
என்று புன்னகைத்தாள். அவன் அமைதியாக “இல்லை” என்பதுபோல தலையை அசைத்தான். அதைக் கேட்டு
தேவிகா சற்றே குழம்பினாள். அதனால் “அப்படி இல்லைன்னா, வேற எப்படி?” என்று சந்தேகத்தோடு
கேட்டாள்.
“பங்களாவுல ஒரே ஒரு அறையை மட்டும்தான் நான் எனக்காகன்னு வச்சிக்குவேன்.
இந்த ஊருல படிக்க ஆர்வம் இருக்கிற ஏழைப் பிள்ளைங்களும் ஆதரிக்க ஆளே இல்லாத அனாதைப்
பிள்ளைங்களும் தங்கிப் படிக்கிற மாதிரி ஒரு ஏற்பாடு செய்வேன்”
அவள் புருவங்கள் உயர்ந்தன. “செய்ங்க. செய்ங்க. தாராளமா செய்ங்க.
இந்த ஊருலயே நான் இருந்தா, நானே அந்தப் பங்களாவுல தோட்டம் வச்சிக் கொடுத்து நல்லபடியா
பார்த்துக்கறேன்” என்றாள்.
“ஒரு மரம்ன்னா பத்து காக்காய்ங்களுக்கு கூடு கட்டறதுக்கு இடம்
தருது. பத்து பேருக்கு நிழல் தருது. பத்து பேரு பசியாறுகிற மாதிரி காயோ கனியோ கொடுக்குது.
ஒரு மனுசனா பொறக்கறவன் ஒரு மரத்தைவிட மேலானவனா இருந்தாதான அவனுக்கு ஒரு மதிப்பு இருக்கும்.
வாழறதுக்கு அதுதான அர்த்தம்?”
“உண்மைதான்”
அவன் பேசிக்கொண்டே இருந்தான். அவன் ஆழ்மனத்தில் உருவமின்றி அடைத்துக்கொண்டிருந்த
கனவுகள் ஒவ்வொன்றாக உருப்பெற்று வெளியே வந்தன. மாலையில் பொழுது சாயும் வரைக்கும் அவன்
இடைவிடாமல் பேசிக்கொண்டே இருந்தான். அந்த உரையாடல் அவளுக்கு இதுவரை அனுபவித்தறியாத
ஒருவித மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தன.
“சரி, நான் கெளம்பணும். ஆறு மணி ஆயிருக்கும் போல. பொழுது சாயற
நேரம் ஆயிருச்சி”
“ஆமாம். நானும் கெளம்பணும். பேசிட்டே இருந்ததுல நேரம் போனதே
தெரியலை”
“நீங்க வாட்ச் கட்டறதில்லையா?”
“சொந்தமா சம்பாதிச்சி, சொந்தக் கால்ல நிக்கற சமயத்துலதான் அதைப்பத்தியெல்லாம்
நெனச்சிப் பார்க்கணும்னு ஒரு வைராக்கியம்.”
“சரி சரி” என்றபடி கனிந்த பார்வையோடு அவனைப் பார்த்தாள்.
“இவ்ளோ நேரம் லொடலொடன்னு உங்ககிட்ட பேசிட்டே இருக்கேன். என்
பெயரையே உங்ககிட்ட நான் சொல்லலை. என் பேரு சங்கர்”
“சரி”
“உங்க பேரு சொல்லலையே”
அவள் சிரித்தாள். “அப்புறமா சொல்றேன். ஒரு இடைவெளி விட்டு சொன்னாதான்
சுவாரசியமா இருக்கும்” என்றாள்.
“எப்ப சொல்லுவீங்க?”
அவள் உடனே அக்கம்பக்கம் பார்த்தாள். பாத்திகளில் வரிசையாக நின்றிருந்த
ரோஜாக்கன்றுகள் மாலைக்காற்றில் அசைந்தன. உடனே அவன் பக்கமாகத் திரும்பி “இந்த ரோஜாச்செடி
பூக்கிற அன்னைக்கு சொல்றேன், போதுமா?” என்றாள்
“அது எப்ப பூக்கும்?” என்று அப்பாவியாக திகைப்போடு கேட்டான்
அவன்.
“இந்த உலகத்துல ஒரு செடின்னு உருவான பிறகு ஏதாவது ஒரு கட்டத்துல
பூத்துதான ஆகணும்?”
அவன் சிறிது நேரம் அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான். அவள்
முகம் சிவந்து கனிந்திருந்தது. “சரி, அப்படியே
ஆகட்டும். அது பூக்கிற அன்னைக்கே நான் தெரிஞ்சிக்கறேன்” என்று அமைதியானான். சில கணங்களுக்குப்
பிறகு “ஒருவேளை அது பூக்கிற அன்னைக்கு நீங்க வரலைன்னா, உங்க பேரே எனக்குத் தெரியாம
போயிடுமே?” என்று கேட்டான்.
”கவலைப்படாதீங்க. அது பூக்கப் போற அன்னைக்கு, அந்தப் பூவே என் கனவுல வந்து சொல்லிடும்” என்று வாய்திறந்து சிரித்துக்கொண்டே
சொன்னாள். பிறகு தலையசைத்தபடி அவனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு சென்றாள். அவன் பித்துப்
பிடித்தவனாக அவள் சென்ற திசையையே பார்த்துக்கொண்டு நின்றான்.
வீட்டுக்குத் திரும்பியபோது வாசலில் அம்மா முறத்தில் அரிசியைப்
பரப்பி கல் பொறுக்கிக்கொண்டிருந்தாள். அப்பா திண்ணையில் போட்டிருந்த கட்டிலில் படுத்திருந்தார்.
“ஆஸ்பத்திரியில என்னம்மா சொன்னாங்க? ஏன் அப்பா படுத்திருக்காரு?”
என்று அம்மாவிடம் கேட்டாள் தேவிகா.
“சோதனை பண்ணி பார்த்துட்டு மருந்து மாத்திரை கொடுத்தாங்க. என்னமோ
ஒரு ஊசியாம். ரெண்டு வாரத்துக்கு ஒவ்வொரு நாளும் ஆஸ்பத்திரிக்கு வந்து தொடர்ச்சியா போட்டுக்கணுமாம்”
அதைக் கேட்டு ஒரு கணம் வாயடைந்த்து நின்றாள் தேவிகா. “ஏன்?”
என்று கேட்டாள்.
“நுரையீரலுக்கு நல்லதாம். எனக்கு என்னம்மா தெரியும்? டாக்டருதான்
சொன்னாரு.”
தேவிகா தலையசைத்தபடியே வீட்டுக்குள் சென்று முகம் கை கால் கழுவிவிட்டு
துணிமாற்றிக்கொண்டு வந்தாள்.
“அதுவரைக்கும் அந்த பங்களா வீட்டுக்கு நான்தான் போவணுமா?” என்று
அம்மாவிடம் மெதுவாகக் கேட்டாள். “வேற வழி இல்லடி தேவிகா. அப்பா நல்லாயிட்டாருன்னா,
நீ போவவேண்டிய அவசியம் இருக்காது” என்று சொல்லிவிட்டு முறத்தைப் பார்த்தாள் அம்மா. நேருக்கு நேர் பார்க்கமுடியாமல் தவியாய்த் தவிக்கும்
அம்மாவின் கண்களையே ஒருகணம் பார்த்தாள் தேவிகா. பிறகு “சரி, நானே போறேன்” என்று பதில்
சொல்லிவிட்டு எழுந்து சென்றாள்.
அடுத்தநாள் காலையில் அவள் வெளிக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே
நுழைந்தபோது, அந்தச் சத்தத்தைக் கேட்டுவிட்டு சங்கர் மதிலோரம் நெருங்கி வருவது தெரிந்தது.
“என்ன, சீக்கிரமாவே வந்துட்டீங்களா?”
“ஆமாம். பூ பூத்திருக்குதா இல்லையான்னு பார்க்கணுமில்ல? அதுக்காகத்தான்
சீக்கிரமா வந்தேன்”
அதைக் கேட்டு அவள் முகம் சிவந்தது.
“ஐயா, ஆள விடுங்க. மொதல்ல எல்லா வேலையையும் செஞ்சி முடிக்கறேன்.
பேச்சையெல்லாம் அப்புறமா மதிய சாப்பாட்டுக்குப் பிறகு வச்சிக்கலாம்.”
அவள் வேகமாக நடந்து சென்று சாப்பாட்டுப் பையை ஓரமாக வைத்துவிட்டு
துடைப்பத்தை எடுத்துக்கொண்டு வந்தாள்.
“நான் வேணும்ன்னா வந்து உதவி செய்யட்டுமா?”
“உங்க வேலையை நீங்க அங்க செய்ங்க. என் வேலையை நான் இங்க செய்றேன்.
உதவியெல்லாம் ஒன்னும் வேணாம்”
“சரி, இங்க பாருங்க. இங்க ரெண்டு மாம்பழம் வச்சிருக்கேன். அப்புறமா
எடுத்து சாப்புடுங்க. புதுப் பழம். கீழ விழறதுக்கு முன்னயே ஏறி பறிச்சேன். அப்புறமா
சாப்ட்டு பாருங்க. தேன் மாதிரி இருக்கும்”
அவன் தன் கையிலிருந்த பழங்களை மதில் மீது வைத்துவிட்டுச் சென்றான்.
அவள் அப்பழங்களை எடுத்துச் சென்று சாப்பாட்டுப் பைக்குள் வைத்துவிட்டு பெருக்கியெடுக்கும்
வேலையைத் தொடர்ந்தாள். ஏராளமான நாவல்பழங்கள் தரையில் விழுந்து உடைந்ததால் அங்கங்கே
வட்டவட்டமாக நீலக்கறைகள் தெரிந்தன.
மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு பாத்திரங்களைக் கழுவி உலரவைத்துவிட்டு
மாம்பழங்களோடு மதிலருகில் வந்து நின்றாள். அவள் வருவதைத் தெரிந்துகொண்டு சங்கரும் வந்து
நின்றான். அவள் ஒரு மாம்பழத்தை எடுத்து ”இந்தாங்க, நீங்களும் சாப்பிடுங்க” என்றபடி
அவனிடம் நீட்டினாள். “என்னங்க இது? நான் கொடுத்த
பழத்தை எனக்கே திருப்பிக் கொடுக்கறீங்களா?” என்றான் அவன். “நான் சாப்பிடணும்ன்னா நீங்களும்
சாப்பிடணும்” என்றாள் அவள். மறுபேச்சில்லாமல் அவன் அவளிடமிருந்து பழத்தை வாங்கிக் கடித்தான்.
அவளும் அவன் மீது பார்வையைப் பதித்தபடியே தன் கையிலிருந்து மாம்பழத்தைக் கடித்துத்
தின்றாள்.
அவள் முகம் மலர்வதைக் கண்டு ”என்ன, பழம் தித்திக்குதா?” என்று
கேட்டான். அவள் வெட்கத்தோடு “ஆமாம்” என்பதுபோலத் தலையசைத்தபடி பழத்தை ருசித்தாள்.
“இதும் பேரு அல்போன்சா. மாம்பழத்துலயே தித்திப்பான வகை”
“மனுஷங்களுக்கு இருக்கற மாதிரி மாம்பழத்துக்குக் கூட தனித்தனியா
பேரு இருக்குதா? ஆச்சரியமா இருக்குதே”
ஒவ்வொரு நாளும் அவன் அவளுக்காக மாம்பழங்களை எடுத்து வைத்திருப்பதும்,
அவற்றை அவர்கள் மதிய உணவுக்குப் பிறகு உரையாடிக்கொண்டே ரசித்து ருசிப்பதும் தொடர்ந்தது.
மரத்தடியில் இருந்த புத்தகக்குவியலைப் பார்த்துவிட்டு அவள்
“படிச்சி முடிச்சி பட்டம் வாங்கிட்டேன்னு சொன்னீங்க, இன்னும் என்ன படிக்கிறீங்க?” என்று
கேட்டாள். “அடுத்த மாசம் ஒரு பேங்க் எக்சாம் வருது. அதுக்காக தயார் பண்ணிட்டிருக்கேன்”
என்றான் அவன்.
“என்னமோ ஒரு ஆர்டர் வரும்னு சொன்னீங்க”
“வரும்னுதான் நானும் காத்திருக்கேன். எல்லா நேரமும் எனக்கும்
அதே சிந்தனைதான். என்ன காரணமோ தெரியலை, தாமதமாவுது. அதுவரைக்கும் ஏன் சும்மா இருக்கணும்ன்னுதான்
இந்த எக்சாம எழுதலாம்னு தயார் பண்ணிட்டிருக்கேன். எப்படியாவது நுழைஞ்சி அந்தப் பக்கமா
போறதுக்கு ஒரு வாசல் வேணுமில்லையா?”
“நீங்க சொல்றது சரிதான்”
”உங்க தோட்டத்துல ஏன் இன்னும் ஒரு பூ கூட பூக்கலை?”
அதைக் கேட்டு அவள் சிரித்தாள்.
“உங்களுக்கு ஏன் ஆர்டர் வரலைங்கறதுக்கு காரணம் ஏதாவது தெரியுமா?”
“அதுவும் இதுவும் ஒன்னா?”
“நான் அப்படி சொல்லலை. சில விஷயங்களுக்குக் காரணம் சொல்லத் தெரியாதுங்கறதுக்காகச் சொல்றேன். பொறுத்ததே
பொறுத்தீங்க. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்குங்க”
“சரி” என்று தலையசைத்துக்கொண்டான் அவன்.
பத்து நாட்கள் பறந்துவிட்டன. ஒவ்வொரு நாளும் பகல் பொழுதுமுழுக்க
என்ன பேசுகிறோம் என்பது தெரியாமலேயே இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். என்ன பேசினாலும்
திருப்தியில்லாததுபோல இருவருமே உணரத் தொடங்கினார்கள்.
அன்று மாம்பழம் சுவைத்தபடி உரையாடும்போது அவன் திடீரென “உங்க
முகத்துல ஏதோ ஒரு மாற்றம் தெரியுது” என்றான். அதைக் கேட்டு சட்டென அவள் முகம் சிவந்தது.
“இல்லையே, எப்பவும் போலத்தான் இருக்குது” என்று சொல்லிக்கொண்டே சாதாரணமாக இருக்க முயன்றாள்.
“இல்லை இல்லை. ஏதோ ஒரு மாற்றம் தெரியுது” என்று அவன் அழுத்தமாகச்
சொன்னான்.
“என்ன மாற்றத்தைப் பார்க்கறீங்க?”
அவன் அவள் முகத்தையே ஒரு கணம் உற்றுப் பார்த்தான். பிறகு “முன்னால
இருந்ததைவிட முகத்துல கூடுதலா ஒரு மினுமினுப்பு வந்திருக்குது. பார்க்கிற பார்வையில
ஏதோ ஒரு பரவசம் தெரியுது. பேச்சுல கூட படபடப்பு எதுவும் இல்லாமல் ரொம்ப சகஜமா, சந்தோஷமா,
நிம்மதியா பேசற மாதிரி இருக்குது…..”
அவன் அடுக்கிக்கொண்டே சென்றான். அவள் அக்கணமே குறுக்கிட்டு
“போதும் போதும், உங்க முகத்துல அசடு வழியுது. துடைச்சிக்குங்க” என்று கேலி பேசி சூழலை
மாற்ற முயற்சி செய்தாள். மெல்ல அவன் கவனத்தைத் திருப்பும் விதமாக ரோஜாத் தோட்டத்தின்
பக்கம் கையைக் காட்டி “அங்க பார்த்தீங்களா?” என்று கேட்டாள்.
அவன் உடனே அவள் கை சென்று நின்ற திசையில் திரும்பிப் பார்த்தான்.
“என்ன?” என்று புரியாமல் கேட்டான்.
“செடியில மொக்கு விட்டிருக்குது”
“உண்மையாவா? ஆகா, எவ்வளவு சந்தோஷம். ஆனா இங்கேருந்து பார்க்கறதுக்கு
ஒன்னுமே தெரியலையே”
“தூரத்துலேர்ந்து பார்த்தா தெரியாது. எனக்குத் தெரியுது. அங்கங்க
சின்னதா மொட்டு அரிசிமணி மாதிரி முட்டிகிட்டு நிக்குது.”
“அப்படின்னா, பூக்கறதுக்கு இன்னும் எத்தனை நாளாவும்?”
“அதிகபட்சமா ரெண்டுநாள், இல்லைன்னா மூனு நாள்”
“உங்க பெயரை தெரிஞ்சிக்கிற நாள் நெருங்கிடுச்சி”
“அதெல்லாம் சரி, என் பேரை தெரிஞ்சிகிட்டு என்ன செய்ய போறீங்க?
அது என்ன பெரிய உலக அதிசயமா?”
அந்தக் கேள்விக்கு அவனால் நேருக்கு நேர் பதில் சொல்ல இயலவில்லை.
ஒப்புக்குச் சொல்கிறோம் என்று ஆழ்மனத்துக்குப் புரிந்தாலும் கூட அந்த நேரத்துக்கு
“சும்மா தெரிஞ்சிக்கறதுக்குத்தான்” என்று இழுத்தான். பிறகு சூழலின் இறுக்கத்தை நெகிழவைப்பதற்காக “எப்படியும்
இன்னும் ரெண்டுமூனு நாள்ல தெரியத்தான் போவுது. உங்க பேருல ஏதாவது ஒரு எழுத்தை சொல்லுங்க.
என்னால கண்டுபுடிக்கமுடியுதான்னு பார்க்கறேன்” என்று கெஞ்சுவதுபோலக் கேட்டு திசைதிருப்பினான்.
“அந்த விளையாட்டுலாம் வேணாம். ரெண்டு நாள்தான, பொறுத்துக்கக்கூடாதா?”
“பொறுத்துக்குவேன். ரெண்டு நாள் என்ன, ரெண்டு வருஷம் கூட பொறுத்துக்குவேன்.
சும்மா மூளைக்கு ஒரு வேலை கொடுக்கறதுக்காகத்தான் கேட்டேன்”
அவன் ஆர்வத்துடன் அவள் முகத்தையே பார்த்தான். அவனையறியாமல் அவனுடைய
மூச்சின் வேகம் அதிகரித்தது.
அவள் முதலில் ஒரு கணம் ஆழ்ந்து யோசித்தாள். பிறகு “சரி, கடைசி
எழுத்தை மட்டும் சொல்றேன். அதை வச்சி நீங்க கண்டுபிடிக்கணும். சரியா?” என்றாள்.
“சரி”
“ஆனா மூனே மூனு வாய்ப்புதான். அதுக்குள்ள கண்டுபிடிக்கணும்.
முடியலைன்னா இந்த விளையாட்டை முடிச்சிக்கணும். சரியா?”
அவன் அதற்கும் வேகமாக “சரி” என்றான்
அவன் முகத்தில் மெல்ல மெல்ல பரபரப்பு படிவதைப் பார்த்து ரசித்தபடி சில கணங்களைக் கழித்துவிட்டு, மெதுவாக உதடுகளைப்
பிரித்து வெட்கத்தோடு “கா” என்றாள்.
அடுத்த கணமே அவன் பரபரப்போடு “மல்லிகா?” என்றான்.
அவள் “ம்ஹூம்” என்று உதட்டைப் பிதுக்கி தலையசைத்தபடி அவன் முகத்துக்கு
எதிரில் ஒரு விரலை உயர்த்தினாள்.
அவன் சில கணங்கள் தடுமாறிவிட்டு மெல்லிய குரலில் “ராதிகா?” என்றான்.
அவள் மறுபடியும் “ம்ஹூம்” என்று உதட்டைப் பிதுக்கி தலையசைத்துவிட்டு
இரண்டாவது விரலையும் உயர்த்தினாள்.
அவன் தனக்குத்தானே சிரித்தான். குழம்பினான். தன் பின்தலையில்
தன் விரலால் தட்டிக்கொண்டான். நெற்றியில் விரல்வைத்துத் தேய்த்துக்கொண்டான். முகவாயின்
மீது கைவிரல்களால் தட்டியபடி யோசனையில் மூழ்கினான். மெதுவாக “சரிகா?” என்றான்.
அவள் பெருமூச்சுடன் “ம்ஹூம்” என்று உதட்டைப் பிதுக்கி தலையசைத்துவிட்டு
மூன்றாவது விரலையும் உயர்த்தினாள். அவன் தன் தோல்வியை நினைத்து தன்னையே நொந்துகொண்டான்.
“எனக்குத் தெரிஞ்சி இன்னும் ஒன்னுதான் இருக்குது, சொல்லட்டுமா?” என்று கேட்டான். “ம்,
சொல்லுங்க” என்றாள். அவன் உடனே கேலி செய்யும் விதமாக “காக்கா” என்று சொல்லிவிட்டு புன்னகைத்தான்.
அதைக் கேட்டு அவளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. ஆனாலும் செல்லக் கோபத்தோடு ”உங்கள
என்ன செய்யணும், தெரியுமா?” என்றபடி கீழே குனிந்து ஒரு மண்கட்டியை எடுத்து அவன் பக்கமாக
வீசி எறிந்தாள்.
“விடுங்க, விடுங்க. எப்படியும் நீங்களே உங்க வாயால சொல்லப் போறீங்க.
அதுவரைக்கும் காத்திருக்கேன்” என்றான். அவளும் ஏதோ வரம் தருபவள்போல ”காத்திருப்பாய்
மகனே” என்று சொன்னபடி விடைபெற்றுக் கொண்டாள்.
வீட்டுக்குத் திரும்பிய போது அம்மா வழக்கம்போல முறத்தில் அரிசி
வைத்துக்கொண்டு கல் பொறுக்கிக்கொண்டிருந்தாள். அப்பா திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.
“என்னம்மா, இன்னைக்கு ஊசி போட்டாங்களா?” என்று கேட்டபடி வீட்டுக்குள்
நுழைந்தாள் தேவிகா.
“போட்டாங்க. பத்து ஊசி கணக்காயிடுச்சின்னு ஒரு சோதனை பண்ணி பார்த்தாங்க.
குணமாயிடுச்சி, இனிமே ஊசி வேணாம்னு சொல்லிட்டாங்கம்மா” என்றாள் அம்மா.
அம்மாவின் முகத்தில் ஒரு சின்ன பிரகாசத்தைப் பார்க்கமுடிந்தது.
அதைப் பார்த்து தேவிகாவின் மனம் சற்றே தடுமாறியது.
“வேணாம், வேணாம், அவுங்கதான மொதல்ல ரெண்டு வாரம் போடணும்னு சொன்னாங்க? அப்புறம் ஏன் மாத்தறாங்க? நாளைக்கு மறுபடியும்
ஏதாவது பிரச்சினையானால்…..?” என்று படபடப்பாகக் கேட்டாள்.
“அதெல்லாம் ஆவாதுன்னு டாக்டரே சொல்லிட்டாங்கம்மா. அதுக்கு மேல
நாம என்னம்மா செய்யமுடியும்?”
“அதுவும் சரிதான்” என்று அடங்கிய குரலில் சொல்லிவிட்டு வீட்டுக்குள்
சென்றாள் தேவிகா. பின்கட்டுக்குச் சென்று முகம் கைகால் கழுவிவிட்டு உடைமாற்றிக்கொண்டு
வாசலுக்கு வந்தாள்.
“நாளையிலேர்ந்து அப்பாவே பங்களா வீட்டுக்குப் போய் பார்த்துக்குவாரு.
நீ நர்சம்மா வீட்டு வேலையை முடிச்சிட்டு திரும்பிடும்மா. அது போதும்” என்றாள் அம்மா.
“ஆமாமாம். நான் பார்த்துக்கறேன். இந்த வெயில்ல நீ அலையவேணாம்” என்று அப்பாவும் சொன்னார்.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒருகணம் தடுமாறி, பிறகு ஒரு பெருமூச்சுடன் “சரி”
என்று சொல்லிவிட்டு சங்கரின் முகத்தை நினைத்தபடி வீட்டுக்குள் சென்றாள் தேவிகா.
(வாசகசாலை
– 01.10.2024)