விடுப்பு நாட்களில் புதுச்சேரிக்குச் செல்லும் நேரங்களில் நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான இளம்பாரதியைச் சந்திப்பதை ஒரு வழக்கமாக வைத்திருந்தேன். அவருடைய வீடு எங்கள் வீட்டிலிருந்து நடந்துசெல்லும் தொலைவில் இருந்தது ஒரு காரணம். அவர் தன் நினைவிலிருந்து பகிர்ந்துகொள்ளும் பழையகாலத்து அனுபவங்கள் கேட்பதற்குச் சுவாரசியமானவை என்பது இன்னொரு காரணம். அவருடைய அறையில் கண்ணாடிச்சட்டமிட்ட நிலைப்பேழைத் தட்டுகளில் அடுக்கியிருக்கும் பழைய, புதிய புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கும் ஆசை மற்றொரு காரணம்.
புத்தாயிரத்தாண்டின் தொடக்கத்தில் வழக்கம்போல அவர் வீட்டுக்குச்
சென்றிருந்தேன். உரையாடலுக்கு நடுவில் அவ்வப்போது அவருடைய படிப்புமேசையில் மீது அடுக்கி
வைக்கப்பட்டிருந்த வார, மாத இதழ்களை ஒவ்வொன்றாக எடுத்துப் புரட்டிப் பார்த்துவிட்டு
வைத்தேன். ஒரு மணி நேரத்துக்கும் மேல் உரையாடிய பிறகு வீட்டுக்குப் புறப்பட்டபோது,
என் மனத்தை அறிந்தவர்போல இளம்பாரதி ஒரு துணிப்பையில் அங்கிருந்த எல்லா இதழ்களையும்
ஒன்றாக வாரிப் போட்டு “வீட்டுக்கு எடுத்தும் போயி நிதானமா படியுங்க. எதையும் திருப்பித்
தரவேண்டியதில்லை” என்று சொல்லிக்கொண்டே கொடுத்தார்.
வீட்டுக்குத் திரும்பி மதிய உணவை முடித்துக்கொண்டு ஒவ்வொரு
இதழாக எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். அமுதசுரபி, கலைமகள், குங்குமம் போன்ற ஜனரஞ்சக
இதழ்கள் இருந்தன. தஞ்சாவூர், மதுரை, கடலூர், சென்னை என பற்பல ஊர்களிலிருந்து வந்த பல
சிற்றிதழ்களும் இருந்தன. சில இதழ்களை அன்றுதான் முதன்முதலாகப் பார்த்தேன். அவற்றில்
ஒன்று ‘புதுவை பாரதி’. பாரதியின் பெயரைத் தாங்கியிருந்ததாலும் உடனே படித்துமுடிக்கும்
அளவுக்கு சிறியதாக இருந்ததாலும் அந்த இதழை முதலில் எடுத்துப் பிரித்தேன். பெரியவர்களுக்குரிய
வகையில் சில பக்கங்களும் சிறியவர்கள் படிக்கும்
வகையில் சில பக்கங்களுமாக புதுமையான வகையில் அந்த இதழ் கட்டமைக்கப்பட்டிருந்தது. கதைகள்,
பாடல்கள், கட்டுரைகள், ஓவியங்கள் என எல்லாப் பக்கங்களிலும் படைப்புகள் நிறைந்திருந்தன.
ஓர் இதழைப் படித்த பிறகு, அந்தப் பையில் இருந்த புதுவை பாரதி இதழ்களை மட்டும் தனியாகப்
பிரித்தெடுத்து வைத்துக்கொண்டு ஒன்றை அடுத்து ஒன்றென எல்லாவற்றையும் வேகமாகப் படித்துமுடித்தேன்.
அன்று மாலை நடைப்பயிற்சிக்குப் பிறகு மீண்டும் இளம்பாரதியின்
வீட்டுக்குச் சென்று உரையாடிக்கொண்டிருந்தேன். புதுவை பாரதி இதழைப் படித்துமுடித்தது
பற்றி அவரிடம் சொன்னேன்.
“அந்தப் பத்திரிகைய நடத்தறவர எனக்கு நல்லாத் தெரியும். ரொம்ப
சின்சியரான மனிதர். இங்கதான் மூலகுளத்துல இருக்கறார். பள்ளிக்கூட ஆசிரியர். நல்ல தமிழார்வம்
உண்டு. நல்ல திறமைசாலி. அவருக்காக அவருடைய அப்பா, மனைவி எல்லாருமே சேர்ந்து அந்தப்
பத்திரிகைக்காக வேலை செய்வாங்க. ஒருத்தவங்களுக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கற நல்ல
குடும்பம். சிவான்னு பேரு. முழு பேரு சிவநேசன்னு நெனைக்கறேன். எல்லாருமே சிவா சிவான்னுதான்
கூப்புடுவாங்க”
“புத்தகத்துல பாரதிவாணர் சிவான்னு போட்டிருந்ததே …… “ என்று
இழுத்தேன்.
“ஆமாம். பாரதிவாணர்ங்கறது அவருடைய புனைபெயர். சிவாங்கறது
அவருடைய சொந்தப் பெயருடைய சுருக்கம். ரெண்டையும் சேர்த்து பாரதிவாணர் சிவான்னு வச்சிகிட்டாரு”
அந்த இதழின் ஆசிரியரைப்பற்றிய விவரங்களை சுருக்கமாக இளம்பாரதி
எனக்காகச் சொன்னார். அவர் சொல்வதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
”பத்திரிகை மட்டுமில்லை. சனி, ஞாயிறு நாட்கள்ல ஆர்வமுள்ளவங்க
கத்துக்கிறமாதிரி சின்னதா ஒரு ட்ராயிங் ஸ்கூல் கூட நடத்தறாரு சிவா. அதுலேர்ந்து அவருக்கு
பெரிய வருமானமெல்லாம் கெடையாது. ஏதோ தனக்குத் தெரிஞ்சத ஆர்வமுள்ள பிள்ளைகளுக்குச் சொல்லிக்
கொடுக்கணும்ங்கற நல்ல எண்ணம். அவ்வளவுதான்”
இரண்டு நாட்களில் ஊரில் என் வேலை முடிந்தது. ஊருக்குத் திரும்பும்
முன் விடை பெறுவதற்காக மீண்டும் இளம்பாரதியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அவர் எனக்காக
புத்தகங்களைப் போட்டு வைத்திருந்த இன்னொரு பையை எடுத்துவந்து “இதையும் எடுத்தும் போயி
படியுங்க” என்றபடி என்னிடம் கொடுத்தார். வீட்டுக்குச்
சென்றதுமே மறந்துவிடாமல் இருப்பதற்காக முதல் வேலையாக எல்லாப் புத்தகங்களையும் எடுத்து
பெட்டிக்குள் வைத்துவிட்டேன்.
புதுவை பாரதி இதழின் அறிமுகம் இப்படித்தான் முதலில் நிகழ்ந்தது.
எல்லா இதழ்களையும் படித்த பிறகு, அவருடைய முயற்சியைப் பாராட்டி அவருக்கு ஒரு மின்னஞ்சல்
எழுதினேன். அவரும் மகிழ்சியோடு பதில் எழுதியிருந்தார். இப்படித்தான் ஒருவரையொருவர்
பார்க்காமலேயே நாங்கள் பழகத் தொடங்கினோம்.
புதுவை பாரதி இதழுக்கு சில படைப்புகளை அனுப்பவேண்டும் என்று
விரும்பினேன். ஆனால் என் சிறுகதைகளும் கட்டுரைகளும் சற்றே நீளமானவை. அதிக பக்கங்களை
ஒதுக்கினால்தான் அவற்றை வெளியிடமுடியும். அந்நிலையில் கதைகளையும் கட்டுரைகளையும் அனுப்பி
அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. என்னுடைய ஒரு படைப்பை வெளியிடுவதற்காக,
அவர் வழக்கமாக எழுதும் நாலைந்து படைப்பாளிகளின் படைப்புகளை ஒதுக்கிவைக்க வேண்டியிருக்கும்.
அப்படி ஒரு நிலைக்கு அவரை ஆளாக்கிவிடக் கூடாது என்பது என் எண்ணமாக இருந்தது. அதனால்
இப்போதைக்கு எதையும் அனுப்பவேண்டாம் என முடிவெடுத்து, இதழ்களை வாசிப்பவனாக மட்டும்
இருந்தேன். தொடர்ச்சியான மின்னஞ்சல் தொடர்பின் விளைவாக எனக்கு மாதந்தோறும் அஞ்சல் வழியாக
இதழ்கள் வரத் தொடங்கிவிட்டன.
ஒருமுறை புதுவை பாரதி இதழில் தங்கப்பாவின் பாடல் வந்திருந்தது.
அப்பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தங்கப்பாவுக்கு எழுதிய கடிதத்தில் அப்பாடலைப்
பற்றிக் குறிப்பிட்டு எழுதினேன். அவர் எனக்கு எழுதிய பதில் கடிதத்தில், என்னையும் அந்த
இதழுக்கு பாடல்களை அனுப்பிவைக்கும்படி குறிப்பிட்டிருந்தார். அதுவரை நான் சிறுகதையை
அனுப்புவது, கட்டுரையை அனுப்புவது பற்றி மட்டுமே யோசித்திருந்தேனே தவிர, பாடல் அனுப்புவது
பற்றி யோசித்திருக்கவில்லை. தங்கப்பாவின் கடிதம் எனக்கு ஒரு தூண்டுதலைக் கொடுத்தது.
அன்றே அவருக்குச் சில பாடல்களை அனுப்பிவைத்தேன்.
அடுத்த மாத இதழிலேயே அப்பாடல்கள் வெளிவந்தன. அவருடைய ஓவிய மாணவர்களிலேயே யாரோ
ஒருவர் அப்பாடலுக்கு ஓவியம் தீட்டிருந்தார். தங்கப்பா அப்பாடலைப் படித்ததாக தன் கடிதத்தில்
குறிப்பிட்டு எழுதியிருந்தார். அதற்கடுத்த மாத புதுவை பாரதி இதழில் அப்பாடல் குறித்து
ஒரு வாசகர் கடிதமும் வந்திருந்தது. அதுதான் தொடக்கம். அதற்குப் பிறகு அடுத்தடுத்து
பல பாடல்கள் வரத் தொடங்கின.
நான் பெரிதும் விரும்பிப் படிக்கிற பிரபஞ்சன், ராஜ்ஜா, வில்லியனூர்
பழநி என பலரும் கட்டுரைத்தொடர்களை எழுதி புதுவை பாரதி இதழுக்கு வலிமை சேர்த்துக்கொண்டிருந்தனர்.
சுவாரசியமான பல புதிய தகவல்களை அவற்றைப் படித்துத் தெரிந்துகொண்டேன்.
இருபதாண்டுகளுக்கும் மேலாக நான் புதுவை பாரதி இதழைப் படித்து
வருகிறேன். அந்த இதழின் வழியாக சிவா தன் வாழ்க்கையை நிறைத்துக்கொண்டார் என்று பலமுறை
எனக்குத் தோன்றியிருக்கிறது. இலக்கியத்தின் வழியாக அடையக்கூடிய ஆற்றலையும் பெருமிதத்தையும்
அடைந்தவர் அவர். அதற்கு வாழும் எடுத்துக்காட்டாக இன்று அவர் திகழ்கிறார். ஒன்றை இரண்டாக்கி,
இரண்டை நாலாக்கி பெரிதுபடுத்திப் பார்க்கும் லெளகிகச் சூத்திரங்களில் சிக்காமல், தன்
இதழையும் மகிழ்ச்சியையும் புராதனக் கலைச்செல்வத்தைப் பாதுகாப்பதுபோல பாதுகாத்துவருகிறார்.
அதன் பொருட்டு ஏற்படும் இழப்புகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவருக்கு இருக்கிறது.
அவருடைய இயல்பைப் புரிந்துகொண்ட அவருடைய மனைவியும் பிள்ளைகளும், அவருடைய போக்கில் வளர்ந்துயர
மகிழ்ச்சியோடு அனுமதித்திருக்கிறார்கள். மகிழ்ச்சி என்பது எப்போதும் தானும் மகிழ்ந்து,
பிறரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதாகும். சிவாவின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும்
மகிழ்ச்சியாக வாழும் கலையின் பொருளைப் புரிந்துகொண்டவர்களாக இருக்கிறார்கள். சிவாவின்
வாழ்க்கையில் இது மிகப்பெரிய பேறு.
ஏறத்தாழ நாற்பது ஆண்டு காலமாக சிவா புதுவை பாரதி இதழை நடத்திக்கொண்டு வருகிறார். ஏராளமான
மன நெருக்கடிகளையும் பொருளியல் நெருக்கடிகளையும் அவர் இக்காலத்தில் சந்தித்திருக்கக்
கூடும். ஆனால் அவற்றையெல்லாம் சிவா ஏதோ ஒருவகையில் கடந்துவந்திருக்கிறார். அவருடைய
குன்றாத ஊக்கம் அவருக்கு அந்த வலிமையை வழங்கியிருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மதிய வேளையில் சிவா ஒருமுறை
என்னை கைபேசியில் அழைத்தது நினைவிருக்கிறது. ஓரிரு சொற்களில் நல விசாரிப்புகளை முடித்துக்கொண்டு
அன்று நேரிடையாகவே உரையாடலை அவர் தொடங்கினார். என்னுடைய சிறுகதையொன்று ஏழாம் வகுப்புக்குரிய
தமிழ்ப்புத்தகத்தில் ஒரு பாடமாக இருக்கிறது. அந்தக் கதையை அவருடைய வகுப்புப் பிள்ளைகள்
படித்திருக்கிறார்கள். ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஏதோ உரையாடல் நிகழ்ந்திருக்கிறது.
அந்த உரையாடலின் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தவும் உரையாடவும் அவர்
உடனடியாக என்னை அழைத்துவிட்டார். கைபேசி வழியாகவே ஒவ்வொரு மாணவரும் அந்தக் கதையைப்பற்றி
என்னிடம் ஒன்றிரண்டு வரிகள் சொன்னார்கள். அன்று அந்த வகுப்பு மாணவர்களுடன் உரையாடிய
அனுபவம் ஈடு இணையற்றது. அந்தப் பொன்னான தருணத்தை எனக்கு வழங்கிய சிவாவை என்றென்றும்
நன்றியுடன் நினைத்துக்கொள்வேன்.
பள்ளிக்கூட ஆசிரியர் பணியாக இருந்தாலும் சரி, பத்திரிகை ஆசிரியர்
பணியாக இருந்தாலும் சரி, இரண்டும் அடிப்படையில் ஒரே விதமானவை. வரலாற்றில் ஆசிரியரின்
பெயரை நிலைநிறுத்துபவர்கள் அவருடைய மாணவர்களே. அவர்களே தம் ஆசிரியரின் பெருமையையும்
ஆற்றலையும் மீண்டும் மீண்டும் சொல்லியும் எழுதியும் இம்மண்ணில் நிலைநிறுத்துபவர்கள்.
சிற்சில சமயங்களில் அந்த ஆசிரியர்களுக்கு அச்சொற்களைக் காதாரக் கேட்கும் வாய்ப்புகள்
அமையலாம். அமையாமலும் போகலாம். அது ஊழ் வகுக்கும் விதி.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஏராளமான தோத்திரமாலைகளையும்
பாடல்களையும் எழுதியவர். ஆனால் அவற்றையெல்லாம் கடந்து, அவருடைய மாணவரான உ.வே.சாமிநாத
ஐயர் எழுதிய வாழ்க்கைவரலாறும் நினைவுப்பதிவுகளும் இன்றும் நிலைத்து நிற்கின்றன. நாடெங்கும்
விடுதலைப்போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் தேசபக்திச் செய்திகளுக்காகவும்
இலக்கிய வளர்ச்சிக்காகவும் தொடங்கப்பட்டு நடைபெற்ற இதழ் மணிக்கொடி. மூன்று வெவ்வேறு
காலகட்டங்களில் வெவ்வேறு ஆசிரியர் குழுவால் நடத்தப்பட்டது. அவ்விதழில் எழுதிய படைப்பாளிகளின்
நினைவுகூர்தல் வழியாகவே அப்பெயர் இன்றளவும் நிலைபெற்றிருக்கிறது. ஓர் ஆசிரியரின் உழைப்பும்
அர்ப்பணிப்பும் மண்ணோடு மண்ணாகிக் கலந்து உரமாக மாறிவிடுகிறது. எதிர்காலத்தில் புதுவைபாரதியின்
வரலாறு எழுதப்படும் நாளில் சிவாவின் பெயரும் பேருரு கொண்டு எழும்.
இது சிவநேசன் – இராஜேஸ்வரி இணையரின் மணிவிழாத்தருணம். இருவருக்கும்
என் அன்பார்ந்த வாழ்த்துகள். அவர்களுடைய ஆர்வமும் அர்ப்பணிப்பும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.
(புதுவை பாரதி – இதழாசிரியரான
பாரதிவாணர் சிவா அவர்களுடைய மணிவிழா மலருக்காக எழுதிய கட்டுரை )