நீண்டகாலம் தொடர்ச்சியாக நிலவிய பஞ்சத்தின் காரணமாகவும் பிளேக் தொற்றுநோயின் காரணமாகவும் 1918ஆம் ஆண்டில் குஜராத்தைச் சேர்ந்த கேடா மாவட்ட விவசாயிகள் வரி கொடுக்க இயலாமல் தவித்தனர். அரசாங்கத்தின் கருணையை வேண்டி எழுதிய அவர்களுடைய கோரிக்கைக் கடிதங்களைப் புறக்கணிக்கும் அதிகாரிகள் நிலங்களையும் வீடுகளையும் பறிமுதல் செய்யத் தொடங்கினர்.அதன் விளைவாக படேல் பிற வழக்கறிஞர்களை இணைத்துக்கொண்டு ஒரு பெரிய சத்தியாகிரகத்தை அந்த ஊரில் தொடங்கினார்.அத்தருணத்தில் தோரண என்னும் சிற்றூரில் ஒரு ரெவினியு அதிகாரி இருபத்துமூன்று வீடுகளை ஆக்கிரமித்து பறிமுதல் செய்தார்.பெண்கள் அணிந்திருந்த நகைகளையும் பாத்திரம் பண்டங்களையும் கறவை மாடுகளையும் கூட பறிமுதல் செய்தார்.செய்தி கிடைத்ததும் அந்த இடத்துக்கு ஒரு பெண்மணி ஆசிரமத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்து ஆறுதல் சொன்னார்.அவர்கள் சோர்வுறாதபடி அவர்களிடையே சொற்பொழிவாற்றினார்.
“ஒரு
பெரிய நன்மைக்காக நிகழும் சத்தியாகிரகத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நிற்கவேண்டும்.நமக்கு
ஏற்படும் துன்பங்களை மனவலிமையுடன் எதிர்கொள்ளவேண்டும்.பறிமுதல்களைக் கண்டு அஞ்சிவிடக்
கூடாது.அவர்களிடம் மன்றாடிக் கெஞ்சிக்கொண்டிருக்கவும் கூடாது.அதே சமயத்தில் ஒரு சல்லிக்காசு
கூட வரியாகக் கொடுத்துவிடவும் கூடாது. அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் கணவன்மாருக்கும்
சகோதரர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஆதரவாக நின்று தைரியமூட்ட வேண்டும்” என்ற அப்பெண்மணியின்
சொற்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு எழுச்சியையும் நம்பிக்கையையும்
ஊட்டின. தொடர் போராட்டத்தின் விளைவாகவும் விவசாயிகள் காட்டிய உறுதியின் விளைவாகவும்
அரசாங்கம் இறங்கி வந்து வரியைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்து பறிமுதல் செய்த பொருட்களையெல்லாம்
திருப்பியளித்தது.
காந்தியடிகள்
அப்போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றபோதும் அவருடைய பிரதிநிதியாக ஆசிரமத்திலிருந்து
வந்த பெண்மணி கலந்துகொண்டு விவசாயிகளுக்குத் துணையாக நின்றார். அவர் காந்தியடிகளின்
துணைவியான கஸ்தூர் பா. அந்த நிகழ்ச்சியின்போது அவருக்கு அருகில் நின்று பார்த்த அனுபவத்தை
எழுதியவர் வனமாலா பரீக். கோச்ரப் ஆசிரமத்தில் பா வின் மேற்பார்வையில் வளர்ந்தவர்.பா
வின் மறைவுக்குப் பிறகு, அவரைப் பற்றிய நினைவலைகளை வெவ்வேறு தலைப்புகளில் சிறுசிறு கட்டுரைகளாக அவர் எழுதித்
தொகுத்தார். வார்தா ஆசிரமத்தில் பா வின் அரவணைப்பில் வளர்ந்த மற்றொரு பெண்மணியான சுசிலா
நய்யாரும் அவருடன் இணைந்து தம் நினைவலைகளை சில கட்டுரைகளாக எழுதினார்.பா வின் மறைவுக்குப்
பிறகு இருவருடைய கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு ஒரு நூலாக வெளிவந்தது. அந்த நூலுக்கு காந்தியடிகளே
மிகவும் உருக்கமானதொரு முன்னுரையை எழுதினார்.
வனமாலாவின் எழுத்தாற்றலும் நுட்பமாகக் கவனித்திருக்கும் குணமும் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது.வனமாலா
தன் கல்வியை முழுக்க முழுக்க ஆசிரமத்திலேயே பெற்றவர் என்பதால் தன் மகிழ்ச்சி பல மடங்காகப்
பெருகியிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.அந்த நூலை கோ.கிருஷ்ணமூர்த்தி என்பவர்
‘எமது பா’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்க, 1950இல் திருப்பூரை மையமாகக் கொண்டு
இயங்கிய சர்வோதயப் பிரசுராலயம் வெளியிட்டது.
ஒத்துழையாமை
இயக்கத்தின் விளைவாக 1922இல் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார்.அவருக்கு அரசாங்கம்
ஆறு ஆண்டு காலம் சிறைத்தண்டனை விதித்தது.அத்தருணத்தில் பா பொதுமக்களுக்கு விடுத்த செய்தியைப்பற்றி
ஒரு தனிக்கட்டுரையே இந்தப் புத்தகத்தில் உள்ளது.“இன்று என் கணவருக்கு ஆறாண்டு காலம்
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அதனால் எனக்குள் கலக்கம் ஏற்பட்டிருந்தாலும், அதை
நான் ஏற்றுக்கொள்கிறேன். நாம் விரும்பினால் அத்தண்டனைக்காலம் முடிவடைவதற்கு முன்பேயே
அவரை நாம் சிறையிலிருந்து விடுவித்துவிட முடியும்” என்ற முன்னுரைக் குறிப்போடு தொடங்குகிறது
அவருடைய செய்தி. இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழையாமை இயக்கத்தை வெற்றியடையச்
செய்வதன் வழியாக நமக்குக் கிடைக்கும் சுயராஜ்ஜிய வெற்றி அவருடைய வெற்றியை உறுதிப்படுத்திவிடும்
என்கிற உட்குறிப்போடு அச்செய்தி காணப்படுகிறது. நிர்மாணப் பணித்திட்டத்தின் கீழ் ராட்டையில்
நூல் நூற்பதன் வழியாகவும் கதர் உற்பத்தி செய்வதன் வழியாகவும் காந்தியடிகளுக்கு அளிக்கப்பட்ட
தண்டனைக்கு நாம் பதில் அளிக்கவேண்டும் என்பதுதான் அவருடைய செய்தியின் மையக்கருத்து.
“எல்லோரும் கதர் உடுத்துவதோடு, பிறரையும் கதர் உடுத்தச் செய்வோம், எல்லோரும் நூல் நூற்போம்,
எல்லா வணிகர்களும் அயல்நாட்டுத் துணி விற்பனையை நிறுத்துவோம்” என்று உறுதிமொழி எடுக்குமாறு
அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டார். அந்தக் காட்சியை வனமாலா ஒரு சொற்சித்திரத்தைப்போல
தீட்டியிருக்கிறார்.
ராஜ்கோட்
நகரத்தில் நடைபெற்ற சத்தியாகிரகத்திலும் கஸ்தூர் பா வின் பங்கு குறிப்பிடத்தக்கதாக
இருந்ததையும் இன்னொரு சொற்சித்திரமாக வழங்கியிருக்கிறார் வனமாலா.ராஜ்கோட் அவர் பிறந்த
நகரம்.இயல்பாகவே அந்த நகரத்தில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கும் ஆர்வம் அவரிடம்
இருந்தது.யாரும் அவரைத் தூண்டாமலேயே தன்னுடைய இயற்கையான ஆர்வத்தின் காரணமாகவே பா அப்போராட்டத்தில்
கலந்துகொண்டார்.அதைப்பற்றிக் குறிப்பிடும்போது காந்தியடிகள் “பா படிப்பறிவில்லாதவராக
இருந்தபோதும் பல ஆண்டுகளாகவே தன் மனம் போல நடந்துகொள்வதற்கு அவருக்கு பூரண சுதந்திரம்
இருந்தது. தென்னாப்பிரிக்காவாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி, பா தன்
சொந்த விருப்பத்தின் உந்துதலாலேயே போராட்டங்களில் கலந்து வந்திருக்கிறார். ராஜ்கோட்
போராட்டத்திலும் அதுதான் நடைபெற்றது.மணிபென் கைது செய்யப்பட்டதை அவளால் தாங்கமுடியவில்லை.உடனே
அவள் புறப்பட்டுவிட்டாள்.அதற்கு சில நாட்கள் முன்புதான் குளியலறையில் மயக்கம் போட்டு
கீழே விழுந்து அவளுக்கு மருத்துவம் செய்யப்பட்டது.என் மனசாட்சி என்னை அழைக்கிறது. ராஜ்கோட்டின்
பெண்கள் சுதந்திரத்துக்காக பலியாகிவரும் சூழலில் நான் எப்படி சும்மா இருக்கமுடியும்
என்று அவள் கேட்டுவிட்டு போராட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டாள்” என்று தெரிவித்ததாக
வனமாலா ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
1930ஆம்
ஆண்டில் உப்பு சத்தியாகிரகத்தைத் தொடர்ந்து காந்தியடிகளும் பிற தலைவர்களும் கைது செய்யப்பட்டு
வெவ்வேறு சிறைகளில் அடைபட்டிருந்த நேரத்தில் பீஜப்பூர் மாவட்டத்தில் ஜலால்பூர் என்னும்
இடத்தில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அதற்குத் தலைமையேற்று உரையாற்றுவதற்காக பா வருகை
புரிந்திருந்தார். நாடே ஒரு இக்கட்டான சூழலில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த அத்தருணத்தில்
பா அம்மாநாட்டில் தேச ஒற்றுமை குறித்து ஆற்றிய உரையை வனமாலா பரீக் ஒரு கட்டுரையில்
முன்வைத்திருக்கிறார்.
“நீண்ட
சொற்பொழிவாற்றுவதற்கான நேரமல்ல இது.ஒற்றுமையாக நிற்பதன் வழியாக நம் உறுதியை அரசாங்கத்துக்கு
உணர்த்த வேண்டிய நெருக்கடியான நேரம்” என்று தொடங்குகிறது அவருடைய உரை.அரசியல் அனுபவம்
வாய்ந்தவரைப்போல பொருத்தமான சொற்களை பா தேர்ந்தெடுத்துப் பேசியிருப்பதை அறிந்துகொள்ள
முடிகிறது.அந்த உரையில் அவர் போராட்டத்தில் பங்கேற்று ஒத்துழைக்கவேண்டும் என்று பெண்களுக்கு
அழைப்பு விடுக்கிறார். போராட்டத்தில் ஈடுபடும் சகோதரர்களுக்கு சகோதரிகள் தைரியமளிக்க
வேண்டும், எந்தச் சகோதரராவது சுயநலத்தினால் அரசாங்கத்துக்கு உதவி செய்யச் சென்றால்,
சகோதரிகள் அவரை எச்சரித்து, அவர்களோடு ஒத்துழையாமல் இருக்கவேண்டும் என்றும் கள், சாராயம்,
விதேசித்துணி ஆகியவற்றை எதிர்க்கும் வேலைகளை சகோதரிகளே நேரிடையாக மேற்கொள்ள வேண்டும்
என்றும் தொடர்ந்து குரல் கொடுக்கிறார்.
காந்தியடிகள்
சிறையில் இருந்த காலத்தில் பல இடங்களில் தொண்டர்களைச் சந்தித்து உரையாடுவதைத் தன் கடமையென
நினைத்து பயணம் மேற்கொண்டபடி இருக்கிறார் பா.ஓய்வற்ற பயணங்களின் விளைவாக ஒரு கட்டத்தில்
அவருடைய உடல்நிலை தளர்ந்துவிடுகிறது.அப்போது போர்சத் என்னும் இடத்திலிருந்து ‘எங்களுக்கு
பா வின் உதவி தேவை’ என்னும் குறிப்போடு ஒரு தந்தி வருகிறது. வரி கொடுக்காத காரணத்தால்
வீடுகளையும் உடமைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துகொண்டு போய்விட்டதையும் வரி கொடுக்கவேண்டாம்
என்று சொன்ன சகோதர சகோதரிகள் தடியடிக்கு இலக்காகி காயமுற்று மருத்துவமனையில் இருப்பதையும்
அந்த தந்திச்செய்தி அறிவிக்கிறது. அதைத் தெரிந்துகொண்டதும் தன் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல்
போர்சத்துக்குச் செல்வதற்காக ரயிலில் புறப்பட்டுவிடுகிறார் பா.அடுத்தநாள் காலையில்
அக்கிராமத்தை அடைந்து மருத்துவமனையில் அடிபட்டுக் கிடந்த சகோதர சகோதரிகளைச் சந்தித்து
ஆறுதல் வழங்குகிறார்.அவருடைய வருகையால் அங்கு நிலவிய அச்ச உணர்வு மெல்ல மெல்ல நீங்குகிறது.அவர்களிடம்
பேசிப் பேசி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார் பா.
தொடர்ச்சியான
வேலைச்சுமையின் காரணமாக அவருடைய உடல்நலம் குன்றி விடுகிறது.அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள்
அவர் ஓய்வெடுக்கவேண்டியது மிகவும் அவசியம் என்று தெரிவிக்கின்றனர்.ஆனால் பா “பாபூ இல்லாத
இச்சமயத்தில் எனக்கு வேலை செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இந்த நேரத்தில் ஓய்வு
எடுத்துக்கொள்வது என்பது என்னால் முடியாத செயல்” என்று அறிவித்துவிட்டு சத்தியாகிரகிக்கே
உரிய வேகத்தோடு தம் வேலையைத் தொடர்கிறார்.பா ஆசிரம வேலைகளோடு மட்டும் நின்றுவிடாமல்
தொடர்ச்சியாக தம் எல்லைக்குட்பட்டு அரசியல் களச்செயல்பாடுகளிலும் செயல்பட்டவர் என்பதற்கு
சாட்சியாக வனமாலா அளிக்கும் சித்திரங்கள் விளங்குகின்றன.
பா
வின் பற்றற்ற குணத்தையும் தியாகத்தையும் காந்தியடிகள் பெரிதும் மதித்தார்.ஒரு சமயம்
ஆசிரமத்துக்கு வந்த ஒருவரோடு காந்தியடிகள் நிகழ்த்திய உரையாடலை அருகிலிருந்து கேட்ட
வனமாலா, அதை ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.காப்பி, தேநீர் போன்றவை உடல்நலத்துக்குக்
கேடு விளைவிப்பவை என்பது காந்தியடிகளின் கருத்து.அதனால் அவை எதுவும் வழக்கமாக ஆசிரமத்தில்
வழங்கப்படுவதில்லை.ஆனால் அருந்தியே தீர வேண்டும் என்று நினைப்பவர்களை அவர் தடுப்பதுமில்லை.காந்தியடிகளைச்
சந்திக்க வந்த நண்பர் அதைக் குறித்து உரையாடும்போது “ஆசிரமத்தில் இருந்துகொண்டே பா
ஏன் காப்பி அருந்துகிறார்?” என்று கேட்டார்.அதற்கு காந்தியடிகள் புன்னகைத்தபடியே “பா
எதையெல்லாம் விட்டிருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?அவளால் விடமுடியாதபடி இந்த
ஒரு பழக்கம்தான் பாக்கியாக இருக்கிறது. இதையும் விட்டுவிடும்படி அவளிடம் நான் சொல்வேனாகில்,
என்னைவிட பெரிய அக்கிரமக்காரன் இந்த உலகத்திலேயே இருக்கமுடியாது” என்று சொன்னதை, வனமாலாவின்
பதிவு வழியாக அறிந்துகொள்ளமுடிகிறது. ஆயினும், பா தன் இறுதிக்காலத்தில் காப்பி அருந்தும்
பழக்கத்தை விட்டுவிட்டார்.தேவையான போது துளசியும் மிளகும் சேர்த்துக் காய்ச்சிய கஷாயத்தை
அருந்தத் தொடங்கினார் என்னும் குறிப்போடு அக்கட்டுரையை முடிக்கிறார் வனமாலா.
தனக்குத்
தெரிந்த விஷயங்களில் பா சொந்தமான கருத்துகளைக் கொண்டவராக இருந்தார்.அதே சமயத்தில் பொது
வாழ்விலும் ஆசிரம வாழ்க்கையிலும் காந்தியடிகளைப் பின்பற்றி வந்தார்.அதில் அவருக்கு
எவ்விதமான குழப்பமும் இல்லை.அது அவ்வளவு எளிதான செயலல்ல. அதற்கு மிகுந்த ஆத்மபலமும் தியாக உணர்ச்சியும் தேவை. பா
இவ்விரண்டையும் தம்முள் வளர்த்துக்கொண்டார். காந்தியடிகள் பா வைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்
என்றும் அவருடைய தனிப்பட்ட விருப்பங்களை மதிக்காமல் தன்னலத்தோடு நடந்துகொண்டார் என்றும்
வெளியுலகத்தில் பலர் நினைத்தனர். பலர் அதைக் குறிப்பிட்டு பா வுக்குத் தனிப்பட்ட விதத்தில்
கடிதங்களும் எழுதினர்.அவர்களுக்கு பா தகுந்த விதத்தில் பதிலையும் எழுதியிருக்கிறார்.பா
வின் மறைவுக்குப் பிறகு அப்படி பா எழுதிய ஒரு பதில் கடிதத்தின் பிரதி கிடைத்தது.அஞ்சல்
செய்ய மறந்து அவருடைய பெட்டியிலேயே தங்கிவிட்ட கடிதம்.அதைக் கண்டெடுத்து எடுத்துவந்து
காந்தியடிகளிடம் காட்டிய வனமாலா அதைத் தன் நூலில் பயன்படுத்த அனுமதி கேட்டிருக்கிறார்.பா
வின் மன ஓட்டத்தை பொதுமக்கள் புரிந்துகொள்ள அக்கடிதம் வழிவகுக்கும் என்று கருதி அனுமதி
கொடுத்திருக்கிறார்.அது லீலாவதி என்பவருக்கு பா எழுதிய கடிதம்.முழுக் கடிதத்தியும்
ஒரு கட்டுரையில் இணைப்பாகக் கொடுத்திருக்கிறார் வனமாலா.“உன்னுடைய கடிதம் எனக்கு மிகவும்
அருவருப்பை அளிக்கிறது.காந்திஜி எனக்கு மிகுந்த துன்பம் அளிக்கிறார் என்று நீ எப்படித்
தெரிந்துகொண்டாயோ? எனக்குக் கிடைத்துள்ள கணவரைப்போல உலகத்தில் எவருக்கும் கிடைக்கமட்டார்”
என்று தொடங்கும் அக்கடிதம் ஒன்றரைப்பக்க அளவில் நீண்டு”ஆயிரக்கணக்கானவர்கள் அவரிடம்
ஆலோசனை கேட்க வருகிறார்கள். அவரும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.நான்
குற்றம் செய்யாதபோது அவர் என்றும் என்னைக் குறைகூறியதில்லை” என்ற குறிப்போடு முடிவடைகிறது.வனமாலாவின்
இந்தக் கட்டுரை பா வின் மனநிலையைப் புரிந்துகொள்ள மிகவும் உதவியாக இருக்கிறது.
தென்னாப்பிரிக்காவில்தான்
காந்தியடிகளின் வாழ்க்கை மாறத் தொடங்கியது.குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் 1904ஆம்
ஆண்டு என்று சொல்லலாம்.புதிய வாழ்க்கையை செறிவாக்குவதற்காக அவர் சில புதிய விதிமுறைகளை
வகுத்தார்.அவற்றையே அவர் பின்பற்றினார்.அவரைச் சூழ்ந்திருந்த பிறரும் அவற்றைப் பின்பற்ற
வேண்டும் என்றும் வேண்டினார்.சுய சிந்தனையுள்ள பா வுக்கு, தொடக்க காலத்தில் அவ்விதிமுறைகளைப்
பின்பற்றுவது சிரமமாக இருந்தது.நாளடைவில் கணவரின் ஆழ்மனப்போக்கைப் புரிந்துகொண்டதும்
அவர் தன்னை அக்கொள்கைகளுக்கு இணங்க தம்மைத் தகவமைத்துக்கொண்டார்.அந்த் நடவடிக்கைகளை
கருத்துத்திணிப்பு என்றோ, வன்முறை என்றோ புரிந்துகொள்வதைப்போன்ற அறியாமை வேறெதுவும்
இருக்கமுடியாது.
ஒரு
சமயம் கோகலே காந்தியடிகளிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது “நீங்கள் பெரிய அக்கிரமக்காரராக
இருக்கின்றீர்கள்.ஒரு பக்கத்தில் உங்களுடைய அன்பும் இன்னொரு பக்கத்தில் உங்கள் வற்புறுத்தலுமாகச்
சேர்ந்து பிறரைக் கட்டுப்படுத்திவிடுகிறது.அவ்விதமாகக் கட்டுண்டவர்களுக்கு உங்கள் விருப்பம்போல
நடந்து உங்களை நிறைவு செய்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விடுகிறது” என்று புன்னகைத்தபடி
குறிப்பிட்டார்.ஏறத்தாழ காந்தியடிகளைப்பற்றி இதே பொருள் வெளிப்படும்படி, ‘அன்பான அக்கிரமக்காரன்’
என்ற அழைப்பு விளியோடு சரோஜினி தேவி தன்னுடைய சில கடிதங்களைத் தொடங்குகிறார்.அதுபோன்ற
குறிப்புகளையெல்லாம் கூட தேடியெடுத்து தம் கட்டுரையில் வரிசைப்படுத்தியிருக்கிறார்
வனமாலா.இதுபோன்ற பல தகவல்களின் வெளிச்சத்தில் பா வின் முகத்தை மேன்மேலும் ஒளிபெற்று
பிரகாசம் கொள்ள வைக்கிறார் அவர்.
பா
வின் கண்காணிப்பிலேயே ஆசிரமத்தில் வளர்ந்துவந்தவர் என்பதால் வனமாலாவுக்கு அவரோடு நெருங்கிப்
பழகும் வாய்ப்பு அமைந்திருக்கிறது.அந்த அனுபவங்களையெல்லாம் அவர் அசைபோட்டு, ஒவ்வொரு
அனுபவத்தையும் ஒவ்வொரு கட்டுரையாகத் தொகுத்திருக்கிறார். காந்தியடிகளின் சத்தியசோதனை,
தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம் நூல்களிலும் பிற நூல்களிலும் படிக்க நேர்ந்த பா
தொடர்பான குறிப்புகளையெல்லாம் பொருத்தமான இடங்களில் தம் குறிப்புகளோடு இணைத்திருக்கிறார்.
இளம்வயது மனைவியாக இருந்து, நான்கு குழந்தைகளின் அன்னையாக மலர்ந்து, கொள்கைகளின் கூடமான
ஆசிரமங்களின் பொறுப்புகளை ஏற்று வழிநடத்தும் தாயாக வாழ்ந்து, அரசியல் போராட்டங்களில்
துணிவோடு கலந்துகொண்டு சிறைக்குச் செல்லும் தியாகியாகவும் நடமாடிய கஸ்தூர் பா என்னும்
மூதன்னையுடைய வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை
உணர்ந்துகொள்ளும் வகையில் வனமாலா மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார்.
குஜராத்தி
மொழியிலும் இந்தி மொழியிலும் 1945ஆம் ஆண்டில்
வெளிவந்த இந்தப் புத்தகம் அடுத்த ஐந்தாண்டு இடைவெளியிலேயே தமிழில் வெளிவந்துவிட்டது.
அதற்குப் பின்பு கடந்த முக்கால் நூற்றாண்டில் மறுபதிப்பு வந்ததா இல்லையா என்பது தெரியவில்லை.
(சர்வோதயம் மலர்கிறது – செப்டம்பர் 2024)