Home

Sunday, 20 October 2024

விட்டல்ராவுக்கு விளக்கு விருது

 அமெரிக்காவில் வசிக்கும் தமிழிலக்கிய ஆர்வலர்களின் அமைப்பு கடந்த 27 ஆண்டுகளாக  கலை இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றியவர்களைக் கெளரவிக்கும் விதத்தில் புதுமைப்பித்தன் நினைவாக விளக்கு விருது அளித்து வருகிறது. இவ்விருது ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் பாராட்டுப்பத்திரமும் கொண்டது.

விளக்கு விருது பெற்ற முதல் படைப்பாளர்  சி.சு.செல்லப்பா. அவரைத் தொடர்ந்து பிரமிள், கோவை ஞானி, நகுலன், பூமணி, ஹெப்சிபா ஜேசுதாசன், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், எம்.ஏ.நுஃமான், திலீப்குமார், கோணங்கி, கலாப்ரியா என தமிழின் சிறந்த  படைப்பாளர்கள் பலர் இதுவரை இவ்விருதைப் பெற்றிருக்கிறார்கள். 2023ஆம் ஆண்டுக்குரிய விளக்கு விருது, எழுத்தாளர் விட்டல்ராவ் அவர்களுக்கு வழங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எழுத்தாளர் விட்டல்ராவ் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் தொடர்ந்து பங்காற்றிவரும் முக்கியமான படைப்பாளர். வற்றாத ஊக்கத்துடனும் படைப்பாற்றலுடனும் எழுதி வருபவர்.  எழுத்தாளர், ஓவியர், கலை விமர்சகர், திரைப்பட ஞானம் மிக்கவர், ஏராளமான வரலாற்றுத்தகவல்களை அறிந்தவர் என பன்முகம் கொண்டவர்.

சேலம் மாவட்டத்தோடு ஒசூர் நகரம் இணைந்திருந்த காலத்தில் 22.05.1942 அன்று விட்டல்ராவ் பிறந்தார். இவருடைய தந்தையார் கிருஷ்ணராவ். தாயார் சரஸ்வதி. சேலத்தில் பள்ளிப்படிப்பையும் சென்னையில் எக்ஸ்ரே பட்டயப்படிப்பையும் முடித்த பிறகு எக்ஸ்ரே டெக்னிஷியனாகவும் பள்ளியாசிரியராகவும் சேலம் ஈரோடு மின்சார நிறுவனத்தில் எழுத்தராகவும் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு 1963இல் சென்னை தொலைபேசித் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். ஓவியக்கலையின் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக மெட்ராஸ் கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கலை, இலக்கியத்திலும் அவருடைய ஆர்வம் வளர்ந்தது. 1967இல் அவருடைய முதல் சிறுகதை ஆனந்த விகடன் இதழில் வெளியானது. அதைத் தொடர்ந்து அமுதசுரபி, தினமணி கதிர், தீபம், கணையாழி, புதிய பார்வை, சுபமங்களா போன்ற இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார்.

1976ஆம் ஆண்டில் விட்டல்ராவ் எழுதிய போக்கிடம் என்னும் நாவல் கையெழுத்துப்பிரதியாகவே இலக்கியச்சிந்தனை நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்று வெளியானது. 1981ஆம் ஆண்டில் வெளிவந்த அவருடைய  நதிமூலம் மிகச்சிறந்த தமிழ் நாவல் வரிசையில் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது. இதுவரை இவருடைய ஆக்கங்களாக பன்னிரண்டு நாவல்களும் ஐந்து குறுநாவல்களும் ஐந்து சிறுகதைத்தொகுதிகளும் பன்னிரண்டு கட்டுரைத்தொகுதிகளும் வெளிவந்துள்ளன.  இந்த நூற்றாண்டின் சிறுகதைகள் என்னும் தலைப்பில் விட்டல்ராவ் உருவாக்கிய மூன்று தொகைநூல்கள், தமிழ்ச்சிறுகதையின் வளர்ச்சிப்போக்கை அறிய எண்ணும் வாசகர்களுக்குச் சிறந்த உறுதுணையாக விளங்குகின்றன. 2021இல் விட்டல்ராவ் எழுதிய ஓர் அன்னாடுகாச்சியின் சேலம் புத்தகம் எழுபது ஆண்டுகளுக்கு முந்தைய சேலத்தைப்பற்றிய அனுப்பவச்சித்திரங்களைக் கொண்ட தொகுதியாக வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.

2018இல் பாரதி புத்தகாலயம் வழியாக வெளிவந்த அவருடைய நிலநடுக்கோடு என்னும் நாவல் விடுதலைக்குப் பிறகு வசித்த ஆங்கிலோ இந்திய மக்களின் அவலம் நிறைந்த வாழ்க்கைச்சூழலைப் பதிவு செய்திருக்கும் ஆவணமாகும். வாழ்க்கைப்படிநிலையில் அவர்கள் மெல்ல மெல்ல சரிந்து உதிரி மனிதர்களாக உயிர்த்திருந்து மறைந்துவிட்ட சோக வாழ்வின் பதிவாக அந்த நாவல் விளங்குகிறது.

விட்டல்ராவின் வாழ்வின் சில உன்னதங்கள் புத்தகம், சென்னை மூர்மார்க்கெட்டிலும் பிற பகுதிகளிலும் இருந்த பழைய புத்தகக்கடைகளைப்பற்றியும் அங்கே தேடித்தேடி எடுத்துப் படித்த பழைய அரிய நூல்களைப்பற்றியும் பல நினைவலைகளைக் கொண்ட புத்தகமாகும்.  அவருடைய கலை இலக்கியச் சங்கதிகள் என்னும் புத்தகம் தமிழ் எழுத்தாளர்கள்,  ஓவியர்கள்,  சிற்பிகள் பற்றிய மிகச்சிறந்த ஆவணம். விட்டல்ராவ் எழுதிய தமிழகக் கோட்டைகள் பயண அனுபவங்களையும் வரலாற்றுத்தகவல்களையும் இணைத்து எழுதப்பட்ட மிகச்சிறந்த புத்தகமாகும்.  

’பேசும் புதிய சக்தி’ இதழில் விட்டல்ராவ் எழுதிவந்த ‘கலையும் காலமும்’ என்னும் கட்டுரைத்தொகுதியும் ‘புக் டே’ என்னும் இணையதளத்தில் எழுதிவந்த ‘பயாஸ்கோப்காரன்’ என்னும் கட்டுரைத்தொகுதியும் ‘நிழல்’ என்னும் இதழில் எழுதிவந்த ‘இந்திய சினிமா வரலாறு’ என்னும் கட்டுரைத்தொகுதியும் அவர் இதுவரை எழுதிய எல்லாச் சிறுகதைகளையும் கொண்ட ஒரு பெருந்தொகுதியும் இவ்வாண்டு இறுதிக்குள் நூல்வடிவம் பெறவிருக்கின்றன.

விளக்கு விருது பெறவிருக்கும் மூத்த எழுத்தாளர் விட்டல்ராவ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

(புக் டே –இணைய இதழ்- 16.10.2024)