சமீபத்தில்
நடந்து முடிந்த யட்சகானச் செய்திகளில் குறிப்பிட்ட ஒரு விஷயத்துக்கு அதிக
முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் அக்கலைவிழாவில்
யட்சகானத்தை ஆடும் குடும்ப உறுப்பினர்கள் பணியின் காரணமாக கனடாவில்
குடியேறிவிட்டவர்கள். ஒவ்வொரு ஆண்டும் இக்கலைவிழா நடைபெறும் தருணத்தில்
விடுப்பெடுத்துக்கொண்டு தாய்மண்ணுக்குத் திரும்பி வருகிறார்கள். அரிதாரம் பூசி, சலங்கை கட்டிக்கொண்டு யட்சகானம்
ஆடுகிறார்கள். ஒருவார விழா முடிந்ததும் கனடாவுக்குத் திரும்பி வருகிறார்கள்.
தலைமுறை தலைமுறையாக யட்சகானம் ஆடிவரும் அக்குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரின்
நேர்காணலும் வெளியிடப்பட்டிருந்தது. யட்சகானத்தின்மீது தனக்கு உருவான
நாட்டத்தைப்பற்றி ஆழ்ந்த ஈடுபாட்டோடு விடையளித்திருந்தார் அவர்.
Monday, 27 July 2020
எம்.வி.வி.யின் சிறுகதைகள் : கோணல்களின் புன்னகை
நாங்கள் பெருநகரத்துக்கு இடம்மாறி வந்தபோது ஒரு வீட்டின் முதல் தளத்தில்தான் தொடக்கத்தில்
வாடகைக்குக் குடியிருந்தோம். மாடிச்சுவரை ஒட்டி ஆறு தொட்டிகள் வைத்து அவற்றில்
ரோஜாக்கன்றுகளையும் செம்பருத்திக்கன்றுகளையும் நட்டுவைத்தோம். வெகுவிரைவில் அவை உயிர்பெற்று பசுமையாக வளரத் தொடங்கின. ஒவ்வொன்றும் வெகுவிரைவில் புதிய கிளைகளோடும் இலைகளோடும் செழித்தோங்கி தோள்
உயரத்துக்கு நின்றன. பெரும்பாலான கிளைகள் வீட்டுப்பரப்புக்குள்
வானத்தை நோக்கி நிற்க, ஒருசில கிளைகள் மட்டும் வெட்டவெளியை நோக்கி
வளைந்து ஒயிலுடன் அசைந்தபடி இருந்தன. அவை ஏன் மற்ற கிளைகள்போலல்லாது
தனக்கென ஒரு திசையை வகுத்துக்கொண்டு வளைந்துசெல்லத் துடிக்கின்றன என்பது புரியவில்லை.
இன்றைய நெருக்கடி நிலையில் காந்தியடிகள் என்ன செய்திருப்பார்?
இன்றைய உலகளாவிய
நெருக்கடி பல அடுக்குகளைக் கொண்டது. அரசியல் தலைமையிலும் அறத்தலைமையிலும் உள்ள வெற்றிடத்தின்
காரணமாக சமூகமெங்கும் பரவிவரும் கோவிட்-19, பொருளாதாரத் தேக்கம்,
வெப்பமயமாகும் உலகம் ஆகிய அனைத்துப் பிரச்சினைகளும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துவிட்டன.
இன்றைய நெருக்கடி நிலையைச் சந்திக்க நேர்ந்திருந்தால் காந்தியடிகள் என்ன
செய்திருக்கக்கூடும்?
Labels:
அபய் பங்,
இமாலயத் தவறு,
காந்தியடிகள்
Wednesday, 22 July 2020
கோவை ஞானியின் பார்வை - விதையும் உரமும்
1957ஆம் ஆண்டில் முதல் ஐந்து தமிழ் நாவல்கள் என்னும் தலைப்பில்
ஒரு கட்டுரைத்தொடரை குமுதம் இதழில் க.நா.சு. எழுதினார். பிறகு அமுதநிலையம்
அக்கட்டுரைகளை ஒரு நூலாக வெளியிட்டது.
வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம், பி.ஆர்.ராஜம்
ஐயரின் கமலாம்பாள் சரித்திரம், அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம், எஸ்.எம்.நடேச
சாஸ்திரியின் தீனதயாளு, தி.ம.பொன்னுசாமிப்பிள்ளையின்
கமலாட்சி ஆகிய நாவல்களை முன்வைத்து இக்கட்டுரைகள் எழுதப்பட்டன. அந்தக் காலத்தில்
நாவல் கலை என்பது தமிழுக்குப் புதிது. அதற்கு ஒரு மரபை ஏற்படுத்தித் தரமுயன்றவர்கள்
இந்த நாவல்களின் படைப்பாளிகள். இலக்கியத்திலே எந்த ஒரு முயற்சிக்கும் மரபு
என்பதுதான் ஆணிவேர். இன்று தமிழ்க்கலையுலகில் நாவல் என்னும் ஆலமரம் எல்லாத்
திசைகளிலும் விழுதுவிட்டு வேரூன்றி உறுதியாக நிற்கிறது. அதற்கு வழிசெய்து
கொடுத்தவர்கள் இந்த நாவல் முன்னோடிகள் என்கிற மதிப்புள்ளவராக இருந்தார் க.நா.சு.
அவர்களுடைய முயற்சிகளை வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்கிற எண்ணத்தோடு இந்தத்
தொடரை எழுதியதாக அந்தப் புத்தகத்துக்காக எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்
க.நா.சு.
Labels:
க.நா.சு.,
கோவை ஞானி,
மார்க்சிய அழகியல்
Monday, 20 July 2020
பழுது - சிறுகதை
“இந்தாங்க எளநி. சூடு சூடுனு ரெண்டு நாளா பொலம்பினேங்களேன்னு
ஒங்களுக்காவத்தான் வாங்கியாந்தன். குடிங்க”
ரேவதியின் குரலைக்
கேட்டபிறகுதான் திரும்பிப் பார்த்தேன். அவள் கொடுத்த சொம்பிலிருந்து இரண்டு வாய்
குடித்த பிறகுதான் கோவிலுக்குப் போய்வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றிருந்த அவள்
திரும்பி வந்ததை நான் கவனிக்கவே இல்லை என்பது உறைத்தது.
“எப்ப வந்த நீ? நான் ஒன்ன பாக்கவே இல்லியே.”
Labels:
தமிழ்ச்சிறுகதை,
பதாகை,
பழுது
தாய்மையுள்ளம் கொண்ட தலைவர் - கட்டுரை
1962 ஆம் ஆண்டு. கல்லூரியிலும் பல்வேறு அலுவலகங்களிலும் பணிபுரிபவர்களுக்கு மதிய உணவுப் பெட்டிகளை அவரவர் வீட்டிலிருந்து கொண்டுவந்து கொடுத்துவிட்டு, அவர்கள் உண்ணும்வரைக்கும் அங்கேயே காத்திருந்து வெற்றுப்பெட்டிகளை திரும்ப வாங்கிக்கொண்டு மீண்டும் அவரவர் வீடுகளில் ஒப்படைக்கும் பணியைச் செய்வதற்கென்றே கூடைக்காரர்கள் வாழ்ந்த காலம். கூடைக்காரர்களில் ஆண்களும் உண்டு. பெண்களும் உண்டு. அனைவரும் நடுவயதைக் கடந்தவர்கள். பெரும்பாலும் ஆதரவில்லாதவர்கள். வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள். முதியவர்கள்.
Labels:
ஆகட்டும் பார்க்கலாம்,
காங்கிரஸ்,
காமராஜ்,
நேரு
அன்புள்ள அய்யனார்- சுந்தர ராமசாமியின் கடிதங்கள் - நட்பின் தடம்
தமிழின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவர் சுந்தர ராமசாமி.
தமிழில் எழுதப்படுகிற சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் அனைத்தும் உயர்ந்த தரத்தில் கலையாழத்துடன் அமைந்து
வாசகர்களின் சுவையுணர்வையும் வாழ்க்கையைப்பற்றிய பார்வையையும்
மேம்படுத்தக்கூடியவையாக அமையவேண்டும் என்று வாழ்நாள் முழுதும் வலியுறுத்தி
வந்தவர். அதையொட்டி விவாதங்கள் எழுந்தபோதெல்லாம் கலையாழத்தின் தரப்பில் நின்று
தொடர்ச்சியாகக் கருத்துகளை முன்வைத்தவர்.
Labels:
அய்யனார்,
சுந்தர ராமசாமி
பறவையின் தடங்கள் - மலாய் மொழிக்கவிதைகள்
கோட்டோவியமாக ஒரு
கருங்குருவியின் சித்திரம். மழையில் நனைந்ததைப்போன்ற அதன் இறகுகள். தரையில்
பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகள். அருகில் ஒரு வேலித்தடுப்பு. வெளிர்மஞ்சள்
நிறப்பின்னணியில் இக்காட்சி. படிப்பதற்கு இத்தொகுப்பை கையில் எடுத்ததுமே இந்தப்
படம்தான் முதலில் என்னைக் கவர்ந்தது. தலைப்பும் அதில் இடம்பெற்றிருக்கும் பறவை
என்னும் சொல்லும் என்னைக் கவர்ந்த அடுத்தடுத்த அம்சங்கள். பறவை ஒருபோதும் சலிப்பை
வெளிப்படுத்தாத உயிரினம். சுறுசுறுப்பும் சுதந்திரமும் அதன் பண்புகள். பறவையை
விரும்பாத மனம் உலகிலேயே இருக்காது என்பது என் நம்பிக்கை. பார்க்கும் கண்ந்தோறும்
நம் மனத்தில் ஊற்றெடுக்கும் உற்சாகத்துக்கு அளவே இல்லை. பூமிக்கு ஒரு
சுழல்வட்டப்பாதை இருப்பதுபோல பறவைக்கும் ஒரு பாதை இருக்கிறது. வட
துருவத்திலிருந்து தென்துருவத்தை நோக்கியும், பிறகு
தென்துருவத்திலிருந்து வடதுருவத்தை நோக்கியும் மாறிமாறிப் பறந்தபடி உள்ளது
பறவையினம். வலசைபோதல் அதன் வாழ்வியல் பண்பு. தொகுப்பின் தலைப்பு பல திசைகளில்
சிந்தனையைத் தூண்டிவிடுகிறது.
Wednesday, 15 July 2020
மீராவின் கனவுகள் - கட்டுரை
கல்லுாரியில் படித்துக்கொண்டிருந்த நேரம். நல்ல
கவிதைகளை எழுதுவதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். எழுதி முடிக்கும் ஒவ்வொரு
கவிதையையும் என் ஆசிரியராக இருந்த தங்கப்பாவிடம் வாசிக்கக்கொடுப்பேன். படித்தபிறகு
அவர் சொல்லும் வார்த்தைகள் தொடக்கத்தில் என் கவிதையைப்பற்றியனவாக இருந்தாலும்
மெல்லமெல்ல அவை கவிதைகளைப்பற்றிய பொதுவான கருத்துகளுக்கும்
எதிர்பார்ப்புகளுக்குமானதாக மாறிவிடும். கவிதைகள் முதலாவதாக புத்தம்புதிதாக
இருக்கவேண்டும். எப்பாதையில் நடப்பதாக இருந்தாலும் அப்பாதையில் பதிக்கப்படுகிற முதல்தடமாக
ஒரு கவிதை இருக்க வேண்டும். சிறப்பான சொற்கட்டு மிகவும் அவசியம். நயம்பட
சொல்லவேண்டும். அகத்துாண்டுதல் இல்லாமல் ஒருவரி கூட எழுதக்கூடாது. இப்படி நிறையச்
சொல்லிக்கொண்டே இருப்பார்.
வாழும் விருப்பமுள்ள மனிதர்கள் ( நாஞ்சில்நாடனுடைய கதையுலகம்) - கட்டுரை
விழுந்தால் வாய்பிளந்திருக்கும் பாழுங்கிணற்றுக்குள்
விழவேண்டும். மேலேறி வந்தால் கொத்துவதற்குத் தயாராக படமெடுத்திருக்கும் பாம்புக்கு
இரையாகவேண்டும். இப்படி இரு விளிம்புகளிலும் விழுங்கக் காத்திருக்கிறது மரணம்.
இடையில் விழுதைப் பிடித்தபடி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறான் ஒருவன்.
எக்கணத்திலும் மரணம் நிகழலாம் என்ற நிலையிலும் மரஉச்சியில் காணப்பட்ட ஒரு
தேன்கூட்டிலிருந்து சொட்டுச்சொட்டாக விழும் தேன்துளிகளை விருப்பத்தோடு
சுவைக்கிறான் அவன். பழைய தமிழ்ப் பாடலொன்றில் இடம்பெற்றிருக்கும் இக்காட்சி மனித
மனத்தில் காலம்காலமாக உறைந்திருக்கும் வாழும் விருப்பத்தை முன்வைக்கும்
மிகமுக்கியமான ஒரு குறியீடு.
மாற்றமும் மாற்றமின்மையும் - கட்டுரை
நாவலின் தொடக்கத்தில் நாடு சுதந்திரமடைந்த தகவலும் அதற்குப்
பிறகு நடைபெற்ற முதல் தேர்தலின் தகவலும் பாத்திரங்களின் உரையாடல்களின் வழியாக
முன்வைக்கப்படுகின்றன. அழகிரிப்பகடை தன் இரண்டுவயது மகளோடும் முதல் மனைவியோடும்
துரைச்சாமிபுரத்திலிருந்து மணலு¡த்துக்குக்
குடியேறிய காலகட்டம் அது. ஏறத்தாழ கால்நூற்றாண்டுக் காலம் நகர்ந்து செல்வதை
வெவ்வேறு மாற்றங்களின் ஊடாக உணர்த்தி, இறுதியில் தாயைப்
பறிகொடுத்துவிட்டு தனிமையில் வந்து நிற்கிற பேரப்பிள்ளை சுடலையை எடுத்து வளர்த்து
பள்ளிக்குப் படிக்க அனுப்புகிற காலகட்டத்தோடு படைப்பு நிறைவெய்துகிறது.
Labels:
திண்ணை இணைய இதழ்,
பாவண்ணன்,
பிறகு,
பூமணி
Tuesday, 7 July 2020
வண்டல் - சிறுகதை
ஆய்
ஆய் என்று தலைக்கு ஒருபுறம் இழுக்கும் மாடுகளை அதட்டும் முனுசாமி மாமாவின் குரல் வீட்டு வாசல் வரைக்கும் கேட்டது. அதற்கப்புறம் நாலைந்து நிமிடங்கள் கழிந்த பிறகுதான் எருவேற்றிய வண்டி வந்தது. கருப்பு சிவப்பு கொடியையே மாமா தலைப்பாகையாக கட்டியிருந்தார். வலது கை வண்டிக்கயிற்றைப் பிடித்திருக்க இடதுகையால் ஒரு மாட்டின் முதுகைத் தட்டிக்கொடுத்தபடி இருந்தார்.
“என்ன மாப்ள, யாரயோ எதிர்பார்த்து நிக்கற மாதிரி இருக்குது.”
“தயிர்க்கார அத்தைக்காக நிக்கறேன் மாமா.”
“யாரு, அந்த சாலையாம்பாளையத்து கொண்டக்காரம்மாதான? அது எங்க இப்ப வரப்போவுது? அங்க டாக்டரூட்டமா ஊட்டுல இப்பதான் ஒரு கதைய ஆரம்பிச்சிருக்குது. இங்க வந்து சேர இன்னும் நேரமாவும். நீ எதுக்குடா வெயில்ல நின்னு வீணா கருத்துப் போற.”
Labels:
அந்திமழை,
தமிழ்ச்சிறுகதை,
பாவண்ணன்,
வண்டல்
ரோஜாப்பூக்கள் - சிறுகதை
மொட்டைமாடியிலிருந்து
ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு பூந்தொட்டியை விளிம்பைப் பிடித்தபடி எடுத்துக்கொண்டு
படியிறங்கி வந்தவனைப் பார்த்து “ஒனக்கு எதுக்குடா சுப்பையா இந்த வீண்வேல?” என்று
கேட்டார் கந்தசாமி.
”தண்ணி ஊத்தி வளத்தவனே செடியும் வேணாம் கொடியும் வேணாம்னு உட்டுட்டு
போயிட்டான். அத காப்பாத்தணும்னு ஒனக்கு என்ன தலயெழுத்தா?
ஒனக்கு என்ன மனசுல பெரிய பாரிவள்ளல்னு நெனப்பா?”
வாசலில்
இருந்த இரும்புக்கதவு இடித்துக் கழற்றப்பட்டு ஏற்கனவே ஓரமாக அடுக்கப்பட்டிருந்த
ஜன்னல் சட்டகங்களோடு சேர்த்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அகலமாகத் திறந்திருந்த வாசல் சுவரை
ஒட்டியபடி வெளியே தொட்டிகளை வைத்தான்
சுப்பையா. பிறகு அசட்டுச் சிரிப்போடு ”அப்டிலாம்
ஒன்னுமில்லண்ணே. போறவங்க வரவங்க கண்ணுல படட்டுமேனுதான் கீழ
எறக்கி வச்சேன். காயற
வெயில்ல மேலயே கெடந்து தண்ணியில்லாம வாடி செத்துப் போவறதவிட வேணும்கறவங்க
எடுத்துட்டு போய் பொழைக்கவச்சா நல்லதுதானண்ணே” என்றான்.
Labels:
கனலி,
பாவண்ணன்,
ரோஜாப்பூக்கள்
Subscribe to:
Posts (Atom)