"நாடா கொன்றோ காடா கொன்றோ.." என்று தொடங்கும் ஒளவையாரின் புறநானூற்றுச் செய்யுள் "எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே.." என்று முடிகிறது. வாழ்கிற இடம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம். புறவேறுபாடுகள் வாழ்வின் தன்மையை மாற்றும் முக்கியக் காரணிகளாக இருப்பதில்லை. ஆனால் ஓர் இடத்தில் வாழ்கிற ஆண்மக்களின் பார்வையும் போக்கும் வேறுபாடுகளை சட்டென உருவாக்கிவிடும். பெண்மக்களுக்கும் பார்வையும் போக்கும் உண்டு. ஆனால் அவை இச்சமுதாய மேற்கட்டுமானத்துடன் தொடர்புடையவை இல்லை. அதனால் அவற்றைப்பற்றி ஒளவையார் குறிப்பிடவில்லை.
Tuesday, 20 June 2017
நான்கு தலைமுறைகள் - மாலதி மைத்ரியின் "யானைக் கதை"
சமீபத்தில்
வார இதழொன்றில் எள்ளுப்பாட்டி, கொள்ளுப்பாட்டி, பாட்டி, அம்மா, மகள், குழந்தை என ஆறு
தலைமுறைப்பெண்களை ஒருங்கே நிற்கவைத்து எடுக்கப்பட்ட படமொன்றைப் பார்த்தேன். அதைப் பார்க்கப்பார்க்க
என் மனத்தில் ஒருவித நெகிழ்ச்சியுணர்வும் மகிழ்ச்சியும் எழுந்தன. எனக்கு என் பாட்டியிடம்
பேசிச்சிரித்து கதைகேட்ட அனுபவம்மட்டுமே நினைவில் உள்ளது. பாட்டியின் பாட்டியைப்பற்றிய
விவரம் கொஞ்சம்கூடத் தெரியாது. வேறு சிலருக்கு பாட்டியின் பாட்டிபற்றிய விவரம் தெரிந்திருக்கக்கூடும்.
ஒரு சிலருக்கு அவருடைய கொஞ்சல்களையும் செல்ல முத்தங்களையும் பெற்றிருக்கிற நற்பேறும்
அமைந்திருக்கக்கூடும். ஆனால் நான்கு பாட்டிகளை ஒரே குடும்பத்தில் பெற்றிருப்பது என்பது
மிகப்பெரிய அபூர்வமான பேறு என்றே சொல்லவேண்டும்.
கவிதைத்தேரின் பவனி - பெரியசாமியின் ‘குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்’
”பட்டியிலிருந்து
விடுவிக்கப்பட்ட
கன்றுக்குட்டியின்
துள்ளாட்டத்தோடு
வந்தவன் காட்டினான்
வரைந்த ஓவியத்தை
ஆலமரம் அழகென்றேன்
இல்லப்பா, இது
அலெக்ஸ் மரம் என்றான்
சரிசெய்யும்
பதற்றத்தில்
மீண்டும் வலியுறுத்தினேன்
ஏற்க மறுத்தவன்
கூறினான்
என் மரம்
என் பெயர்தான்”
Wednesday, 14 June 2017
மூன்று சிறுகதைகள் - அசோகமித்திரன் அஞ்சலி
சில ஆண்டுகளுக்கு முன்பாக அசோகமித்திரனுடைய
நாவலொன்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு பெங்களூரில் ஓர் அறிமுக விழா நடைபெற்றது. அதில்
கலந்துகொள்வதற்காக அசோகமித்திரன் பெங்களூருக்கு வந்திருந்தார். நான் என்னுடைய கன்னட
நண்பரொருவருடன் அரங்குக்குச் சென்றிருந்தேன். தற்செயலாக அதற்கு முந்தைய வாரத்தில்தான்
நான் ஒரு மாலை நடையின் சமயத்தில் கண்டோன்மெண்ட் ரயில்வே ஸ்டேஷனின் சித்திரம் இடம்பெற்றிருக்கும்
அசோகமித்திரனுடைய சிறுகதையொன்றை அவருக்குச் சொல்லியிருந்தேன். ‘அப்பாவிடம் என்ன சொல்வது?’
என்பது அந்தக் கதையின் தலைப்பு. அந்தக் கதையின் சிறப்பம்சத்தைக் கேட்டுவிட்டு சில
நிமிடங்கள் பேச்சே இல்லாமல் அமைதியில் உறைந்துவிட்டார் அவர். அவருக்கு அந்தக் கதை மிகவும்
பிடித்துவிட்டது. ’க்ரேட் ஸ்டோரி’ என்று மீண்டும் மீண்டும் சொன்னார். அசோகமித்திரனே
நேரில் வந்து நாவலின் ஓர் அத்தியாயத்தைப் படிக்கவிருக்கிறார் என்ற செய்தியை அவரிடம்
தெரியப்படுத்தியதுமே என்னுடன் கிளம்பி வந்துவிட்டார். அசோகமித்திரனிடம் அவரை அறிமுகப்படுத்தினேன்.
‘அப்பாவிடம் என்ன சொல்வது?’ சிறுகதையை அவருடன் பகிர்ந்துகொண்டதையும் சொன்னேன். நண்பர்
தன் உற்சாகமான குரலில் இரண்டு மூன்று முறை ‘க்ரேட் ஸ்டோரி சார்’ என்று சொல்லி கைகுலுக்கினார்.
அசோகமித்திரன் புன்னகையோடு தலையசைத்தபடி நண்பரைப் பார்த்துவிட்டு அவர் கைகளைப் பல கணங்கள்
பற்றிக்கொண்டிருந்தார்.
Monday, 12 June 2017
இயற்கையும் செயற்கையும் - ராஜ மார்த்தாண்டனின் "நிகழாத அற்புதம்"
நட்சத்திரத் தகுதியுள்ள ஓர்
உணவு விடுதிக்கு நண்பரொருவர் அழைத்துச் சென்றார். நாங்கள் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு
அருகில் பச்சைப்பசேலென ஒரு கொடி பற்றிப் படர்ந்திருந்தது. சின்னச்சின்ன மொட்டுகளும் மலர்ந்திருந்தன. கண்ணைப்
பறிக்கும் அதன் அழகில் மனம்சொக்கி தொட்டுப் பார்க்க ஆசையாக இருந்தது. சூரிய வெளிச்சமும்
இயற்கையான காற்றும் நுழையமுடியாத குளிரூட்டப்பட்ட அறைக்குள் இந்த அளவுக்கு புத்தம்புதுசாக
பச்சைப்பசேலென ஒரு கொடி எப்படி இருக்கமுடியும் என்று உள்ளூர ஒரு கேள்வி ஓடியபடி இருந்தாலும்
ஒருவேளை ஏதாவது குளிர்த்துருவத் தேசத்துக் கொடியாக இருக்கலாமோ என்றொரு பதிலும் அதற்கிணையாக
ஓடிவந்தது.
வாழ்க்கையும் வன்முறையும்- மனுஷ்யபுத்திரனின் "நீரடியில் கொலைவாள்"
கோடை விடுமுறையில்
ஊரூராகச் சுற்றிக்கொண்டிருந்த ஒருநாள் தற்செயலாக சோளிங்கபுரம் நரசிம்மர் கோயிலைப் பார்க்கச்
சென்றிருந்தேன். அங்கே இருந்த ஒரு குளத்துக்கு சக்கரத்தீர்த்தம் என்று பெயர். பெயரின்
புதுமை உருவாக்கிய ஆர்வத்தால் கோயில் நடையில் உட்கார்ந்திருந்த பெரியவர் ஒருவரிடம்
விவரம் கேட்டேன். முன்னொரு காலத்தில் அசுரர்களின் தொல்லை அதிகமான சமயத்தில் அவர்களை
அழிப்பதற்காக மகாவிஷ்ணு ஆஞ்சநேயரை அனுப்பியதாக ஒரு கதை இருக்கிறது. ஆயுதமாகப பயன்படுத்திக்கொள்ள தன் சக்கரத்தையே ஆஞ்சநேயரிடம்
கொடுத்தனுப்புகிறார் விஷ்ணு. யுத்தத்தில் அசுரர்களை அழிக்கிறார் ஆஞ்சநேயர். வெற்றியுடன்
திரும்பிய அவர் ரத்தம் படிந்த சக்கரத்தை குளத்தில் போட்டுவிட்டு விஷ்ணுவைச் சந்திப்பதற்காகக்
காத்திருக்கிறார். நீரடியிலேயே சக்கரம் கிடந்த குளம் சக்கரத்தீர்த்தமாகப் பெயர்பெற்றுவிட்டது.
ஆழ்ந்து அமைதியாகப் பரந்திருக்கும் குளம். அதனடியில் கொலைஆயுதமாகப் பயன்பட்ட சக்கரம்.
நினைத்துப் பார்த்த கணத்தில் உடல் சிலிர்த்தது.
Sunday, 4 June 2017
நம்பிக்கையின் ஊற்று- கி.விஜயலட்சுமியின் "நான் இளைப்பாற"
"கடல்சூழ் மண்டிலம் பெறினும் விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே" என்பது குறுந்தொகைப் பாடலொன்றின் வரி. "தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணன் உலகு" என்பது திருக்குறள். ஆணும் பெண்ணும் காதலோடு இணைந்து வாழ்கிற இன்பத்துக்கு இணையான ஒன்று இவ்வுலகிலேயே இல்லை என்பதுதான் இவ்வரிகளின் சாரம். ஒருவர் அன்பில் மற்றவர் கரைந்து, ஒருவர் சொல்லில் மற்றவர் துன்பமும் சோர்வும் நீங்கி, ஒருவர் மனம் மற்றவர் இளைப்பாறும் இடமாக மாறி வாழ்கிற வாழ்வில் கிட்டுகிற அமைதியும் இன்பமும் மிகப்பெரிய மரத்தின் இனிய நிழலில் இளைப்பாறும்போது கிட்டுகிற அமைதிக்கும் இன்பத்துக்கும் இணையானவை. இருந்தபோதிலும் எல்லாருடைய இல்வாழ்வும் இளைப்பாறும் நிழலாக இருப்பதில்லை. மாறாக, வெப்பம் மண்டிய பாதையாக மாறிவிடுகிறது.
பெருமூச்சின் வெப்பம்- தேவமகளின் "காணவில்லை"
அலுவலகத்தில் மதிய உணவுக்குப் பிறகான சின்ன உரையாடலில் ஒரு நாள் கலாச்சாரக் காவலர்கள்பற்றிய பேச்சு இடம்பெற்றது. பத்து நாட்களாக எல்லாப் பத்திரிகைகளிலும் அதுவே மையப்பொருளாக அமைந்து பற்பல கட்டுரைகளும் பல முக்கியஸ்தர்களின் கருத்துகளும் தொகுக்கப்பட்டு வெளிவந்தபடி இருந்தன. அதை முன்வைத்துத்தான் எங்கள் உரையாடல் தொடங்கியது. கணக்கு அதிகாரியாக இருக்கிற நடுவயது அம்மா ஒருவர் திடீரென இடைமறித்து "ஊருல இருக்கற ராம சேனதான் ஒங்க கண்ணுக்குத் தெரியுதா?" என்றபடி எங்களைப் பார்த்தார்.
Labels:
தேவமகள்,
நவீன தமிழ்க்கவிதை,
பாவண்ணன்
நாபிக்கமலம் - கவித்துவம் மிக்க சிறுகதைகள்
அசோகமித்திரன், சுந்தர ராமசாமி,
தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன் போன்றோரைத் தொடர்ந்து எழுத வந்த தலைமுறையைச் சேர்ந்த முக்கியமான
படைப்பாளி வண்ணதாசன். தமிழின் மிகச்சிறந்த சிறுகதையாசிரியர்கள் வரிசையில் அவருடைய இடம்
மிகவும் உயர்வானது. அவர் உருவாக்கிய தமிழ்
உரைநடை மிகமுக்கியமானது. பலவிதமான ஊடுபாவுகளை ஒரே கதையின் தளத்தில் அவர் எவ்விதமான
சிக்கலுமின்றி நேர்த்தியுடன் கையாளும் விதம் ஆச்சரியத்துக்குரியது. ஒரே நேரத்தில் குழந்தையின்
கண்களாளும் மேதையின் கண்களாலும் பார்க்கும் ஆற்றல் அவருக்கு கைவந்த கலை.
Subscribe to:
Posts (Atom)