கோடை விடுமுறையில்
ஊரூராகச் சுற்றிக்கொண்டிருந்த ஒருநாள் தற்செயலாக சோளிங்கபுரம் நரசிம்மர் கோயிலைப் பார்க்கச்
சென்றிருந்தேன். அங்கே இருந்த ஒரு குளத்துக்கு சக்கரத்தீர்த்தம் என்று பெயர். பெயரின்
புதுமை உருவாக்கிய ஆர்வத்தால் கோயில் நடையில் உட்கார்ந்திருந்த பெரியவர் ஒருவரிடம்
விவரம் கேட்டேன். முன்னொரு காலத்தில் அசுரர்களின் தொல்லை அதிகமான சமயத்தில் அவர்களை
அழிப்பதற்காக மகாவிஷ்ணு ஆஞ்சநேயரை அனுப்பியதாக ஒரு கதை இருக்கிறது. ஆயுதமாகப பயன்படுத்திக்கொள்ள தன் சக்கரத்தையே ஆஞ்சநேயரிடம்
கொடுத்தனுப்புகிறார் விஷ்ணு. யுத்தத்தில் அசுரர்களை அழிக்கிறார் ஆஞ்சநேயர். வெற்றியுடன்
திரும்பிய அவர் ரத்தம் படிந்த சக்கரத்தை குளத்தில் போட்டுவிட்டு விஷ்ணுவைச் சந்திப்பதற்காகக்
காத்திருக்கிறார். நீரடியிலேயே சக்கரம் கிடந்த குளம் சக்கரத்தீர்த்தமாகப் பெயர்பெற்றுவிட்டது.
ஆழ்ந்து அமைதியாகப் பரந்திருக்கும் குளம். அதனடியில் கொலைஆயுதமாகப் பயன்பட்ட சக்கரம்.
நினைத்துப் பார்த்த கணத்தில் உடல் சிலிர்த்தது.