Home

Thursday, 18 June 2020

கசப்பின் சிறுதுளி - கட்டுரை



பறைச்சியாவது ஏதடா, பணத்தியாவது ஏதடா, இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோஎன்பது சிவவாக்கியரின் வரி. அதுமனிதர்களிடையில் வேறுபாடில்லைஎன்பதை உணர்த்தும் ஞானவாக்கியம். பதினெண்சித்தர்களில் ஒருவர் அவர். சாதிசமய வேறுபாடுகளைப் பெரிதென நினைக்கும் பித்தர்களைச் சாடியவர். மொழி வேறுபாடு, இனவேறுபாடுகளப் பெரிதெனப் பேசித் திரிகிறவர்கள் கேட்டு மனம் திருந்துபவர்களுக்காக சொல்லப்பட்டதாகவும் நாம் இந்த வாக்கியத்தை எடுத்துக்கொள்ளலாம். சங்க காலத்தில் கணியன் பூங்குன்றனார்யாதும் ஊரே யாவரும் கேளிர்என்று சொன்ன மகாவாக்கியத்தின் மற்றொரு வடிவமே இது.
தமிழில் மட்டுமல்ல, இதுபோன்ற அமைதிவாக்கியங்கள் உலகமொழிகள் ஒவ்வொன்றிலும் நிச்சயம் இருக்கக்கூடும். ஆயினும், ஒவ்வொரு நூற்றாண்டிலும் மனிதர்களுக்கு கிறுக்குப்பிடித்து இனத்தின் பெயராலும் மதத்தின் பெயராலும் ஒருவரையொருவர் கொன்றும் கொலையுண்டும் ஆயிரக்கணக்கில் அழிந்துபோகிறார்கள். சமூக வரலாறு அந்தப் புள்ளிவிவரங்களையெல்லாம் தொகுத்தும் பகுத்தும் வைத்திருக்கும்போது இலக்கியம் அந்தப் புள்ளிவிவரங்களை காட்சியளவில் தொகுத்தும் பகுத்தும் காட்டி மானுடத்தின் சாட்சியாக  விளங்குகிறது. சதத் ஹஸன் மண்டோவின் கதைகள் இந்த மண்ணில் நிகழ்ந்த மிகக்கொடூரமான மதமோதல்களின் வரலாற்றுச் சாட்சிகளாக இன்றளவும் உள்ளன.
ஆழ்மனத்தில் ஒரு மனிதனிடம் தன்னை மற்றொருவனுக்குச் சமமானவன் எனக் கருதும் எண்ணமே இல்லை என்றே தோன்றுகிறது. அடுத்தவனிடமிருந்து தன்னை வேறுபட்டவன் என எடுத்துக்காட்ட ஆயிரம் காரணங்களை அது பொழுதெல்லாம் தேடிக்கொண்டே இருக்கிறது. உதடுகள்நாம் அனைவரும் சமமானவர்கள்என உச்சரித்தாலும் உள்ளம் ஏதோ ஒரு புள்ளியில் நாம் வேறுபட்டவர்கள் என உள்ளூர மறுகிக்கொண்டிருக்கிறது. அந்த எண்ணமே, ஒரு புள்ளியில் திடீரென வெடிக்கும்போது வெறுப்பாக, வன்மமாக, பகையாக, கொலைவெறியாக உருமாற்றம் பெறுகிறது. தமிழகத்திலும், இந்தியாவிலும் மட்டுமல்ல, உலகமெங்கும் இந்த வெறி மொழிவெறி, இனவெறி, நிறவெறி என்னும் பெயரில் பாசியெனப் படர்ந்து நிறைந்திருக்கிறது. தஹர் பென் ஜெலூனின் பிரெஞ்சு நாவலானஉல்லாசத் திருமணம்நிறவெறிக்குப் பலியான ஒரு குடும்பத்தின் கதையைச் சித்தரிக்கிறது.
கடந்த நூற்றாண்டின் முப்பதுகளின் பின்னணியில் மொராக்கா தேசத்தில் உள்ள ஃபேஸ் என்னும் நகரத்தில் நாவல் தொடங்குகிறது. வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தேசம் மொராக்கா. வடக்கில் மத்தியதரைக்கடலுக்கும் மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் கிழக்கில் அல்ஜீரியாவுக்கும் தெற்கில் சஹாரா பாலைவனத்துக்கும் இடையில் மொராக்கா இருக்கிறது.  அரபு, பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகள் அங்கு பேசப்படுகின்றன. ஃபேஸ் என்பது மொராக்காவில் உள்ள ஒரு நகரம். ஜிப்ரால்டர் ஜலசந்திக்கு அருகில் உள்ள நகரம்.  இஸ்லாமியர்கள் வாழும் நகரம். அவர்கள் அனைவரும் வெள்ளை நிறம் கொண்டவர்கள். அடிமைமுறை வழக்கத்தில் இருந்த காலம் என்பதால் ஆப்பிரிக்காவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட அடிமைகள் அவர்களிடம் கூலிகளாக வேலை செய்கிறார்கள். அவர்களும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றபோதும் கருப்பு நிறம் கொண்டவர்கள். மொராக்காவே ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடென்ற போதும், மொராக்காவின் வெள்ளைநிற இஸ்லாமியர்கள் கருப்புநிற இஸ்லாமியர்களை ஆப்பிரிக்கக் கருப்பர்கள் என்றும் நீக்ரோ என்றும் அழைக்கிறார்கள். நேரம் கிட்டும்போதெல்லாம்ஆப்பிரிக்கன் ஆப்பிரிக்கன்என்று சொல்லி அவமானப்படுத்துகிறார்கள்.  இந்த நிறவெறி ஒவ்வொருவரின் ஆழ்மனத்திலும் ஆழமாகப் பதிந்துள்ளது.
கருப்பு இஸ்லாமியர்களை அவர்கள் வெறுத்தபோதும், அவர்கள் இல்லாமல் வெள்ளை இஸ்லாமியர்களால் வாழ முடிவதில்லை. குடும்ப வேலைகளுக்கும் கடினமான புற வேலைகளுக்கும் கூலி வேலைகளுக்கும் அவர்கள் தேவைப்ப்டுகிறார்கள். அந்தத் தேவையை ஒட்டியே அவர்கள் அங்கு வந்து சேர்கிறார்கள். ஒருவித வெறுப்பு-விருப்புக்கு நடுவிலேயே அவர்கள் உறவு அங்கு நிலவுகிறது.
ஃபேஸ் நகரத்தைச் சேர்ந்த ஓர் எளிய வெள்ளை இஸ்லாமிய வணிகன் அமீர். திருமணமானவன். நான்கு பிள்ளைகளுக்குத் தகப்பன்.  தன் மதநூலான குரானின் சொற்படி நடப்பவன் என்பதால் மனிதர்களிடையில் பேதம் பார்ப்பதை பாவம் என்று நினைப்பவன். அவன் வீட்டிலும் கருப்பு இஸ்லாமிய வேலைக்காரர்கள் உண்டு என்றபோதும் அவர்களிடம் நியாய உணர்வோடு நடந்துகொள்பவன். ஆனால் அவன் மனைவி லாலா ஃபாத்மா அப்படிப்பட்டவள் அல்ல. அவளால் பேத உணரவிலிருந்து ஒருநாளும் விடுபட முடிந்ததில்லை.
ஒருமுறை அமீர் கொள்முதலுக்காக தன் பதின்மூன்று வயதுடைய கரீம் என்னும் சிறுவனுடன் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த செனகல் என்னும் ஊருக்குப் புறப்படுகிறான். வட ஆப்பிரிக்க முனையிலிருந்து மேற்கு ஆப்பிரிக்கா வரைக்கும் செல்லும் அந்தப் பயணம் மிகமிகக் கடுமையானது. செனகலில் சிறிது காலம் அவன் தங்கியிருக்க நேர்கிறது. செனகலுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும்  ஒரு வீடெடுத்து தங்குவது அவன் வழக்கம். அதேபோல இடைக்காலத் துணையாக ஓர் இளம்பெண்ணை மதமுறைப்படி பணமும் நகைகளும் கொடுத்து உல்லாசத்திருமணம் செய்துகொள்வதும் வழக்கம். தற்காலிகத் திருமணத்துக்கு உல்லாசத்திருமணம் என்று பெயர். அமீர் உல்லாசத்திருமணம் செய்துகொள்பவளின் பெயர் நபு. அவளும் இஸ்லாமியப்பெண்ணே. ஆனால் கருப்புநிறம் கொண்டவள். அவள் வழியாக அவன் அடையும் இன்பம் அவனை மயக்கம் கொள்ளவைக்கிறது. இல்லறம் என்பது இத்தனை இன்பமயமானதா என்பதை முதன்முதலாக அவள் வழியாக அவன் அறிந்துகொள்கிறான்.
கொள்முதல் காலம் முடிந்து அவன் தன் சொந்த ஊருக்குத் திரும்பும் நாள் நெருங்குகிறது. நபு மீது காதல் வசப்பட்டு விடுகிறான் அமீர். அவளைப் பிரிந்து செல்ல அவன் மனம் ஒப்பவில்லை. அவளைத் தன்னோடு அழைத்துச் சென்று இரண்டாவது மனைவியாக ஆக்கிக்கொள்ள அவன் நினைக்கிறான். தன் மகன் கரீமின் எண்ணத்தை அறிய அவன் முதலில் விரும்புகிறான். அப்பாவின் மகிழ்ச்சியைப் பார்க்கும் சிறுவன் அதற்குச் சம்மதிக்கிறான். நபுவுக்கும் அதில் சம்மதமே. அதனால் திரும்பும் காலத்தில் அவளையும் அவன் அழைத்துக்கொண்டு ஊருக்குப் புறப்படுகிறான்.
ஃபேஸ் நகரத்தை நோக்கிய அவர்களுடைய பயணம் தொடங்குகிறது. மெக்னெஸ், ஸகோரா, தாஞ்சியர், ஜிப்ரால்டர், காஸாபிலான்கா, உவர்ஸஸாத், தெத்துவான், மராக்கேஷ், நதூர், செத்தாத், ரபாத் என பல இடங்களை மோட்டார் வாகனம், கால்நடை வாகனம் என பல விதங்களில் பயணம் செய்து கடந்து இறுதியாக அவர்கள் ஃபேஸ் நகருக்கு வந்து சேர்கிறார்கள். இந்தக் கொள்முதல் பயணத்தை மிகநீண்ட காட்சிச் சித்திரமாக தீட்டிக் காட்டியிருக்கிறார் தஹர் பென் ஜெலூன். வாகனத்துக்குள் இருக்கும்போது முதன்முறையாக அவன் மனம் தன் வெள்ளைநிற மனைவி நபுவை எப்படி எதிர்கொள்வாள் என்று நினைத்துக் கலங்குகிறான். அவளுடைய எதிர்ப்புணர்வை தான் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற எண்ணமும் அவனுக்குக் கலக்கத்தை அளிக்கிறது.
அந்தப் பயணத்தில் ஓவ்வொருவருமே நபுவின் கருப்புநிறத்தை ஒருவித ஒவ்வாமையுடன் பார்க்கிறார்கள். ஆனால் அந்நிறத்தை முன்னிட்டு அதை உடனடியாக ஒரு சமூகப்பிரச்சினையாக யாரும் மாற்றவில்லை. அப்படி ஒரு எண்ணமே அப்போது யாரிடமும் இல்லை. நிறப்பிரச்சினை ஒரு குடும்பம் சார்ந்த பிரச்சினையாக மட்டுமே சுருங்கியிருக்கிறது. ஃபேஸ் நகரத்திலிருந்து செனகலுக்கும் செனகலிலிருந்து ஃபேஸ் நகரத்துக்குமான பயணத்தை மட்டுமே விவரிக்கும் முதல் ஐந்து அத்தியாயங்கள் வழியாக நாம் அடையும் எண்ணம் இதுவே. மொராக்கா இஸ்லாமிய மக்களிடையே நிறம் சார்ந்த வேறுபாட்டுணர்வு, வெறுப்பூட்டும் அளவுக்கு ஆழமாகப் பதிந்துள்ளது. ஆனால் குடும்ப அளவிலான வெறுப்பு என்கிற அளவில் மட்டுமே அது படிந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, வெள்ளை நிறத்திலொன்று, கருப்பு நிறத்திலொன்று என நபுவுக்கு இரட்டைக்குழந்தை பிறக்கும்போது, முதல் மனைவியான லாலா, சூனியம் வைத்து நபுவைக் கொல்லும் அளவுக்குக்கூட செல்கிறாள்.   அதுதான் அவள் செல்லும் வெறுப்பின் எல்லை.
அடுத்த ஐம்பது பக்கங்களில் அமீரின் குடும்பத்தில் பல எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு விடுகின்றன. அமீரின் முதல் மனைவிக்குப் பிறந்த மகளுக்குத் திருமணம் நடக்கிறது. ஆண்பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்றுவிடுகிறார்கள். உடல்நலம் குன்றி லாலா இறந்துவிடுகிறாள். வணிகமும் சரிந்துவிடுகிறது. வீட்டை வந்த விலைக்கு விற்றுவிட்டு ஃபேஸைவிட பெரிய நகரமான தாஞ்சியருக்குச் சென்று வணிகத்தைத் தொடங்குகிறான் அமீர். அவன் எதிர்பார்த்த அளவு அதில் பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. எதிர்பாராத விதமாக அவனும் மரணமடைந்துவிடுகிறான். நபுவுடைய இரு பிள்ளைகள் ஹுசேனும் ஹசனும் அமீரின் வணிகத்தைத் தொடர்ந்து நடத்துககிறார்கள்.
கருப்பு நிறம் கொண்ட ஹசன் செல்லுமிடங்களிலெல்லாம் இடர்கள் காத்திருக்கின்றன. நகரத்தில் எங்கெங்கும் நிறவெறி தாண்டவமாடுகிறது.  ஹசனும் ஹுசேனும் தாமே தமக்குப் பிடித்த பெண்ணைத் தேடிக்கொள்கிறார்கள். ஹுசேனுக்கு ஒரு வெள்ளை இஸ்லாமியப்பெண் கிடைக்கிறாள். ஹசனுக்கு ஒரு கலப்பின இஸ்லாமியப்பெண் கிடைக்கிறாள். ஹசனுக்கு ஒரு மகன் பிறக்கிறான். அவன் பெயர் சலீம்.  அவனும் கருப்பு நிறம் கொண்டவனாக இருக்கிறான். அவனும் வளர்ந்து இளைஞனாக நகரில் வலம் வருகிறான்.  நகரத்தில் முன்பிருந்ததைவிட நிறவெறி உச்சத்தில் இருக்கிறது. நடைபாதையில், பேருந்துப் பயணத்தில் அவனைப் பார்க்கிறவர்கள் அருவருப்புடன் பார்த்து வசைபாடுகிறார்கள். அவனை மதிப்பவர்கள் யாருமே இல்லை. அவனை இஸ்லாமியனாக ஒருவரும் ஏற்றுக்கொள்வதில்லை. பொதுமக்கள் தொல்லை என்பதற்கும் அப்பால், அரசு நிர்வாகமும் காவல் துறையும் கருப்பு நிறத்தவரை அந்நியர்களாக கட்டமைக்கின்றன. தகுந்த ஆவணங்கள் இல்லாத சமயங்களில் கருப்பு நிறத்தவரை கேள்விமுறை இல்லாமல் கைது செய்கிறது. ஒரு படி மேலே சென்று அவர்களை அடையாளம் கண்டு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிவைக்கிறது. துரதிருஷ்டவசமாக காவலர்களிடம் அகப்பட்டுக்கொள்ளும் கருப்பு நிற சலீம் கைது செய்யப்பட்டு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்படுகிறான். காவல் துறையிடம் அவன் மன்றாடல்கள் எதுவும் பலிக்கவில்லை.
அவனை விடுவிக்கும் இடம் ஒரு காலத்தில் நபு வாழ்ந்த செனகல் நகரம். அவனோடு சேர்ந்து விடுவிக்கப்பட்ட இளைஞர்கள் செனகலிலிருந்து  எங்கெங்கோ சென்றுவிட, அவன் மட்டுமே போக்கிடமின்றி செனகலில் சுற்றியலைகிறான். அவனால் அந்த ஊருடன் ஒட்டிக்கொள்ள இயலவில்லை. மீண்டும் தாஞ்சியாருக்கே செல்லவேண்டும் என்று தோன்றுகிறது. தான் பிறந்த இடத்திலேயே வாழவேண்டும் என அவன் நினைக்கிறான். மசூதிகளிலும் விடுதிகளிலும் சிறுசிறு வேலைகள் செய்து பணமீட்டிக்கொண்டு தாஞ்சியாருக்குப் புறப்படுகிறான்.
அமீரும் நபுவும் பயணம் செய்த அதே பழைய பாதை. அரைநூற்றாண்டுக்குப் பிறகு அதே பாதையில் அவன் புறப்படுகிறான்.  இந்த இரண்டு பயணங்களைப்பற்றிய குறிப்புகளே நாவலின் முக்கியமான அடையாளம். நபுவுக்கு வாய்த்ததுபோல சலீமின் பயணம் அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. எங்கெங்கும் வசைகள். அவமானங்கள். புறக்கணிப்புகள். அவனுடைய கருப்பு நிறமே எல்லோருடைய பார்வையிலும் முதலில் பட்டு முகம் சுளிக்கவைக்கிறது. உணவும் தங்குமிடமும் இல்லாமல் ஒவ்வொரு இடத்திலிருந்தும் துரத்தப்படுகிறான்.  கிடைக்கும் வேலைகளைச் செய்து  பணம் ஈட்டலாம் என்று முயற்சி செய்தபோதும், அவனுக்கு வேலை கொடுப்பவர்கள் யாருமில்லை. அவனைத் துரத்தியடிப்பதிலேயே ஒவ்வொருவரும் குறியாக இருக்கிறார்கள்.
வழியில் இரக்கமுள்ளவர்கள் சிலரையும் அவன் சந்திக்கிறான். அவர்களே அவன் ஆசுவாசம் கொள்ள சிறிதளவு உணவை அளிக்கிறார்கள். தங்க இடமும் அளிக்கிறார்கள். பணம் வாங்கிக்கொள்ளாமல் தன் வாகனங்களில் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரம் வரைக்கும் கொண்டுவந்து விட்டுவிட்டுச் செல்கிறார்கள். எஞ்சிய தொலைவை அவன் கால்நடையாகவே கடந்து பல மாதங்களுக்குப் பிறகு ஊருக்குத் திரும்புகிறான். ஆயினும் குடும்பத்துடன் நீண்ட காலம் அவனால் சேர்ந்து வாழ வழியில்லாமல் போய்விடுகிறது. நருக்குள் கருப்புநிறத்தவர்களின் நடமாட்டத்தை காவல் துறை மட்டுமல்ல, ஒவ்வொருவருமே கண்காணிக்கிறார்கள். அவர்களுடைய பார்வையில் படும்போதெல்லாம் விரட்டுகிறார்கள்.  கருப்பு நிறத்தவர்களின் நடமாட்டத்தை மற்றவர்கள் அவமானமாகக் கருதுகிறார்கள். நகரத்தின் அழகை கருப்பர்கள் களங்கப்படுத்துவதாக நினைக்கிறார்கள். கருப்பு நிறத்தவர்களுக்கு நகரத்திலும் இடமில்லை, குடும்பத்திலும் இடமில்லை, மனிதர்களின் நெஞ்சிலும் இடமில்லை என்னும் நிலை உருவாகிறது. துரதிருஷ்டவசமாக மீண்டும் அவனை காவல்துறை வேட்டையாடுகிறது. இந்த முறை அவர்களுடைய துப்பாக்கிக்குண்டுக்கு அவன் பலியாகிவிடுகிறான்.
நபுவுக்குக் கிடைத்த பாதுகாப்பு, நபுவின் பேரப்பிள்ளைகளுக்கு இல்லாமல் போய்விடுகிறது. அப்படியென்றால் நாகரிகம் என்பதற்கு என்ன பொருள்? கல்வி, வளர்ச்சி என்பதற்கெல்லாம் என்ன பொருள்? நிறமாற்றத்தை சகித்துக்கொள்ள இயலாத குணத்தைத்தான் நாகரிகத்தின் பெயராலும் வளர்ச்சியின் பெயராலும் நாம் பெற்றிருக்கிறோம் என்பதுதான் மிகப்பெரிய கசப்பான உண்மை. அந்தக் கசப்பின் சிறுதுளி  உல்லாசத்திருமணத்தில் திரண்டு நிற்கிறது. பிரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கும் சு..வெங்கட சுப்பராய நாயகர் பாராட்டுக்குரியவர். சிக்கலான இடங்களில் கூட புழங்குதளத்தில் உள்ள சொற்களைக்கொண்டு மிகவும் நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார். புனைவு நூலுக்குப் பொருத்தமான ஒரு மொழி அவருக்கு வசப்பட்டிருக்கிறது.
மனவளர்ச்சி குறைந்த கரீம் என்னும் சிறுவனுக்கு ஒரு பூனை கதை சொல்லும் தருணமொன்று இந்த நாவலில் இடம்பெற்றிருக்கிறது. அந்தப் பூனை ஒரு செல்வந்தர் வீட்டில் தங்கியிருந்தபோது நேரில் பார்த்த நிகழ்ச்சியை கதையாகச் சொல்கிறது. அந்தச் செல்வந்தர் ஊரிலேயே பெரிய மனிதர். பாஷா. பாஷாவுக்கு இளம்பெண்களை மிகவும் பிடிக்கும். அந்த ஊர் மரபின்படி ஒவ்வொரு முலூத் பண்டிகையின்போதும் கன்னி கழியாத ஒரு பெண்ணை பரிசாக அனுப்பிவைக்கவேண்டும். அது ஒரு கட்டாய விதி.
மெலிந்து, கச்சிதமான தோற்றத்துடன் நீண்ட கூந்தலுடன் கூடிய ஒரு இளம்பெண் பண்டியை தினத்தன்று வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுகிறாள். நள்ளிரவை நெருங்கும் நேரத்துக்கு சற்றுமுன் பெரியதொருபுயிர் நோஸ்என்னும் அரேபிய அங்கியை அணிந்துகொண்டு செல்வந்தரின் முன்னால் வந்து நிற்கிறாள் ஒரு பெண்.
அந்த அறையில் ஓரமாக ஒதுங்கியிருந்து அக்காட்சியைக் கண்டதாகச் சொல்கிறது அப்பூனை. அவளுடன் பேசிச் சிரித்து பொழுதுபோக்கி உறவு கொள்ள முற்படும் சமயத்தில் வந்திருப்பவள் பெண்ணல்ல என்பதையும், பெண்வேடத்தில் வந்திருக்கும் ஆண் என்பதையும் அப்பூனை பார்த்துவிடுகிறது. ஏதோ ஒரு தருணத்தில் பூனை தம்மைப் பார்ப்பதைப் பார்த்துவிடுகிறார் செல்வந்தர். உண்மைக்கு ஒரு சாட்சி உருவாவதை அவர் விரும்பவில்லை. உடனே அந்தப் பூனையை அடித்துத் துரத்திவிடுகிறார்.
மாளிகையைவிட்டு துரத்தப்பட்ட பூனை தெருவில் இறங்கி நடக்கத் தொடங்குகிறது. வழியில் ஓர் ஆங்கிலேயப்பயணி அந்தப் பூனையைக் கண்டு அதைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு செல்கிறார். பயணி அந்தப் பூனையை நல்லபடியாகவே பார்த்துக்கொள்கிறார். எதிர்பாராத விதமாக ஒருநாள் அவர் இறந்துவிடுகிறார். அவருடைய உறவினர்கள் வந்து சேரும்வரை அப்பயணியை அருகிலேயே இருந்து கவனித்துக்கொள்கிறது பூனை. வந்தவர்கள் அவரை அடக்கம் செய்துவிட்டு அப்பூனையை விரட்டியடித்துவிட்டுச் செல்கிறார்கள்.
நாவலைப் படிக்கும் போக்கில் ஒரு வேடிக்கைக்கதை போல இந்தப் பூனைக்கதை தோற்றமளித்தாலும், நாவலின் மையத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு  முக்கியக்குறிப்பை அது வழங்குகிறது. விரட்டப்படும் பூனை வெறுத்து, ஒதுக்கி, ஒடுக்கப்படும் இனத்தை அடையாளப்படுத்தும் படிமமாக நாவலில் விரிகிறது. இந்த நாவலில் நிறைந்திருக்கும் நிறவெறித் துன்பங்களையும் சதாகாலமும் மீண்டும் மீண்டும் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்தை நோக்கித் துரத்தப்படும் வேதனைகளையும் புரிந்துகொள்ள இந்தப் பூனைக்கதை நமக்கு உதவியாக இருக்கிறது.
பூனைக்கதையைப் போலவே மற்றொரு இடத்தில் ஒரு பாம்புக்கதையும் நாவலில் இடம்பெற்றிருக்கிறது. பகலில் மனிதனாகவும் இரவில் பாம்பாக மாறி வேட்டையாடும் ஒருவனைப்பற்றிய கதை அது. விரட்டப்படும் பூனை ஒதுக்கப்படும் இனத்தினரைக் குறிப்பிடும் படிமமென நாம் எடுத்துக்கொண்டால், வேட்டையாடிக் கொல்லத் துடிக்கும் பாம்பு இனவெறி கொண்ட கூட்டத்தைக் குறிப்பிடும் படிமமாகும்.
பூனைக்கும் பாம்புக்குமான மோதல் ஒவ்வொரு கட்டத்திலும் வலுத்தபடியே செல்கிறதே, ஒரு தருணத்திலும் அது தீர்வை நோக்கி நகரவில்லை. பூனை பாம்பைக் கண்டு அஞ்சி ஓடுகிறது. ஓடிஓடி ஒளிவதே அதன் வாழ்க்கைவிதியாகிறது. தருணம் கிடைத்தால் பாய்ந்து பாம்பை ஒருமுறை கடித்துக் குதறவும் செய்கிறது. ஆனால் கூட்டமாக வந்து சூழ்ந்துகொள்ளும் பாம்புகளின் நஞ்சுக்கு இறுதியில் இரையாகி மடிகிறது. ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கைநிலையும் கிட்டத்தட்ட இதுபோலவே இருக்கிறது என்று சொல்லவேண்டும்.
தம் கருப்பு நிறத்தை மறைத்துக்கொள்ள முடியாத ஏழைகள் காலமெல்லாம் ஆதரவைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள், முடிந்தவரை எதிர்த்து நிற்கிறார்கள். மோதல் வலுக்கும்போது தோற்கடித்து கொல்லப்படுகிறார்கள். அவ்விதமாக கொல்லப்பட்ட ஓர் எளிய இளைஞனான சலீம் வாழ்க்கையை இந்த நாவலில் தஹர் பென் ஜெலூன் சித்தரித்துக் காட்டுகிறார்.
ஹஃபீத் என்னும் இளைஞன் கதையின் தொடக்கத்தில் இடம்பெறுகிறான்.  அமீருக்கு நெருங்கிய உறவினன் அவன். கினியா நாட்டுக்கு கொள்முதலுக்காகச் சென்றிருந்த அவன் தந்தை கினியா நாட்டிலிருந்து அழைத்து வந்திருந்த கருப்பு அடிமைப்பெண்ணோடு சேர்ந்து வாழ்ந்தார். அவர்களுக்குப் பிறந்தவன் அவன். கலப்புக்குழந்தை. தூய இனவாதம் பேசும் மக்கள் பார்வையில் வெறுப்புக்கும் அவமதிப்புக்கும் ஆளானவன்.  தொடக்கத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு அதிகாரபூர்வமற்ற வழிகாட்டியாக வேலை செய்து கிடைத்த வருமானத்தில் வாழ்ந்துவந்தான். எங்கும் தொடர்ந்து துரத்தும் இனவாதப் பிரச்சினை அங்கும் வந்து அவனை வெளியேற்றுகிறது. அவன் அந்த வழிகாட்டி வேலையை உதறுகிறான். வேறு சில்லறை வேலைகள் செய்து பொருளீட்டுகிறான். தன் தகுதியை வளர்த்துக்கொள்ள வீட்டிலேயே ஒரு நூலகத்தை ஏற்படுத்தி ஏராளமான நூல்களைப் படித்து தன் அறிவை வளர்த்துக்கொள்கிறான். இறுதியில் வாய்ப்பு கிடைத்ததும் கடவுச்சீட்டு பெற்று நாடைவிட்டு வெளியேறி ஸ்டாக்ஹோமுக்குச் சென்றுவிடுகிறான். ஹஃபீத்தை உயிர்பிழைக்க வைத்தது அவனுடைய கல்வியும் நுட்பமான திட்டமிடலும். ஆவேசமும் மோதலும் மூர்க்கரின் முன்னால் எடுபடாது என்பதை அவன் தொடக்கத்திலேயே புரிந்துகொள்கிறான். உயிர்வாழ்வதற்கு உத்தரவாதம் உள்ள இடம் தேடி பறந்துபோய்விடுகிறான். ஹஃபீத்தின் நிலைமைக்கும் சலீமின் நிலைமைக்கும் வேறுபாடு எதுவுமில்லை. ஹஃபீத் சென்ற பாதை வாழ்க்கையை நோக்கி அழைத்துச் சென்றது. சலீம் சென்ற பாதை மரணத்தை நோக்கி அழைத்துச் சென்றது. ஜெலூன் தன் நாவலில் எதைப்பற்றியும் தீர்ப்பு சொல்லவில்லை. மாறாக, தன் நாவலை வரலாற்றின் சாட்சியாக மாற்றுகிறார்.

(உல்லாசத்திருமணம். ஆப்பிரிக்க நாவல். தஹர் பென் ஜெலூன். பிரெஞ்சிலிருந்து தமிழில் சு..வெங்கட சுப்பராய நாயகர். தடாகம் பதிப்பகம், 112, முதல் தளம், திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை – 600041- புக் டே - மே 2020 இணைய இதழில் வெளியான கட்டுரை)