Home

Tuesday, 30 June 2020

ஆயிரம் ரூபாய் - சிறுகதை



அனுஷா தென்னைமரத்தில் முகத்தை அழுத்திவைத்தபடி கண்களை மூடிக்கொண்டு ஒன்று இரண்டு மூன்று எண்ணத் தொடங்கியதுமே  இளமதியும் சந்தோஷும் வைக்கோல்போர் பொந்துக்குள் ஒளிந்துகொண்டார்கள். உமாதேவி சுவருக்குப் பின்னால் இருக்கும் கோழிக்கூடைக்குள் மறைந்துகொண்டாள். சசிதரன் தேங்காய் மூட்டைக்குப் பக்கத்தில் முகம் தெரியாதபடி அமர்ந்துகொண்டான். கனகாம்பரம் பூத்திருக்கும் செடிகளுக்கு நடுவில் சென்று சத்தம் காட்டாமல் உட்கார்ந்துகொண்டேன் நான்.


வேலியோரமாக ஆறேழு கோழிகள் சீய்த்துக்கொண்டிருந்தன. திடீரென ஒரு கோழியை இன்னொரு கோழியைத் தாக்கி விரட்டியது. அந்தக் கோழி ஒருகணம் விலகுவதுபோல சென்று மீண்டும் அங்கேயே சீய்க்க வந்ததும் எல்லாக் கோழிகளும் ஒன்றாகச் சேர்ந்து விரட்டின. சில நொடிகள் கல்யாணமுருங்கையைச் சுற்றி தலைமறைவாக இருந்துவிட்டு மறுபடியும் வந்தபோது மீண்டும் ஒன்றாய்த் திரண்டு விரட்டத் தொடங்கின.

நான் கோழிகளைக் கவனித்துக்கொண்டிருந்த நேரத்தில், எண்ணி முடித்துத் திரும்பிய அனுஷா சந்தடியே இல்லாத தோட்டத்தை ஒருகணம் நின்ற இடத்திலிருந்தே பார்வையால் அளந்தாள். அவள் அடிமேல் அடிவைத்து பூனைமாதிரி நடந்து வருவதை செடிகளின் இடைவெளி வழியாகப் பார்த்தேன். அனுஷா அடியெடுத்து வைத்தபோதெல்லாம் கொலுசுச்சத்தம் எழுந்தது. அவள் முதலில்  தொழுவத்தின் பக்கம்தான் சென்றாள். பிறகு தண்ணீர்த்தொட்டியைச் சுற்றிவந்தாள். கழுத்து சங்கிலி டாலரை எடுத்து உதடுகளில் தேய்த்தபடியேஎங்கடா போய்ட்டிங்க பசங்களா, ஒங்க ஆட்டமெல்லாம் இந்த அனுஷாகிட்ட நடக்காதுடாஎன்று சொல்லிக்கொண்டே துளசி மாடம் வரைக்கும் சென்றாள். சட்டென்று இடதுபக்கம் திரும்பி கனகாம்பரச் செடிகளின் பக்கம் வந்துவிட்டாள்.  முடிந்தவரைக்கும் முதுகை வளைத்து தரையோடு தரையாக உட்கார்ந்திருந்தாலும் அவள் என் ஊதா சட்டையைப் பார்த்துவிட்டாள். “சேது, சேதுவ பாத்திட்டனேஎன்றபடி ஓடிவந்து என்னைத் தொட்டாள். இளமதி, சந்தோஷ், உமாதேவி, சசிதரன் நான்கு பேரும் ஓவென்று சத்தமெழுப்பியபடி ஓடி வந்தார்கள்.

டேய் வானரங்களா, வாங்க வாங்க. வந்து சுண்டல் தின்னுட்டு போய் ஆடுங்கபின்கட்டுக் கதவைத் திறந்துகொண்டு வந்த அம்மா எல்லோருக்கும் அழைப்பு விடுத்தாள்.

அம்மா அம்மா, இன்னும் ஒரே ஒரு ஆட்டம்மா. முடிச்சிட்டு வரோம்மா?”

மூனு மணிலேருந்து ஆடறிங்க, இன்னுமாடா ஆச அடங்கல. ஒழுங்கா வந்து சுண்டல தின்னுங்க மொதல்ல

சிணுங்கிக்கொண்டே கூடத்துக்குச் சென்றோம். தாத்தாவுக்குப் பக்கத்தில் தேநீர் மேசையில் சுண்டல் கிண்ணங்கள் வைக்கப்பட்டிருந்தன. நான் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு தூணுக்குப் பகத்தில் அமர்ந்தேன். அனுஷாவும் ஒரு கிண்ணத்தோடு வந்து என் பக்கத்தில் அமர்ந்தாள். ஒரு சின்ன முடிக்கற்றை அவள் புருவத்தை ஒட்டித் தொங்கியது.  தன் கிண்ணத்திலிருந்து ஒரு பிடி சுண்டலை எடுத்து சத்தம் காட்டாமல் என் கிண்ணத்தில் வைத்தாள். “உன் சுண்டல ஏன் என் தட்டுல போடற? ஒனக்கு வேணாமா?” என்றேன். “ஸ். எல்லாம் போதும் எனக்கு. பேசாம சாப்புடுஎன்றபடி கண்களைச் சுருக்கி சிரித்தாள்.

அண்ணி, கொஞ்சம் வெல்லம் வேணும்ண்ணிபள்ளிக்கூடப் பையன் போல கையை உயர்த்திச் சொன்னார் கந்தசாமி சித்தப்பா. உடனே மூனாவது அறை வாசலிலிருந்துஅக்கா தராதீங்க. சுண்டல்ல தேங்கா துருவி போட்டிருக்கில்ல, அப்பறம் எதுக்கு வெல்லம், கில்லம். நீங்க தராதீங்கக்கா. வரவர எல்லாத்துக்கும் வெல்லம் கேக்கற வேலயா போச்சிஎன்று வனஜா சித்தியின் குரல் எழுந்தது. ”சும்மா இரு. இன்னிக்கு ஒரு நாள்தான். ஒரு துண்டு வெல்லத்தால ஒன்னும் ஆவாது. அதும் பேச்ச கேக்காதீங்கண்ணி. நீங்க எடுத்தாங்கஎன்றார் சித்தப்பா. அம்மா சிரித்துக்கொண்டே இரண்டு கட்டி வெல்லம் எடுத்துச் சென்று கொடுத்தாள். “இப்பிடியே போச்சின்னு  வைங்க, தண்ணிய கூட வெல்லம் கலந்து குடுங்கன்னு ஒருநாள் கேப்பாரு ஒங்க கொழுந்தனாருவனஜா சித்தி சிரிக்காமல் சொன்னாலும் எல்லோருக்குமே சிரிப்பு வந்துவிட்டது.

கதிரேசா, அந்த ட்ராவல் ஏஜென்ட்கிட்ட ஒரு தரம் பேசிடேன். காலையில லேட்டாக்கிட்டான்னா நமக்குத்தான கஷ்டம்?” என்று அப்பாவிடம் சொன்னார் தாத்தா.

சாய்ங்காலமே சொல்லிட்டம்பா. அவுங்களும் வண்டி அலாட் பண்ணி ட்ரைவர் நெம்பர்லாம் குடுத்துட்டாங்க. நானும் ட்ரைவர்கிட்ட பேசி நம்ம வீட்டுக்கு வர்ர வழிய சொல்லிட்டன்

திடீரென கண்ணான கண்ணே கண்ணான கண்ணே பாட்டு கேட்டது. கைபேசியில் அப்பாவை யாரோ அழைக்கும் அடையாளம். அப்பா உட்கார்ந்த இடத்திலிருந்தே கைபேசியின் பக்கமாக முகம் திருப்பினார்.  நான் தலையைத் தூக்கி மேசை மீது பார்த்தேன். அப்பாவின் கைபேசி ஆமை நெளிவதுபோல நெளிந்தது. சட்டென எழுந்து அதை எடுத்துப் பார்த்தேன்.  வடிவுக்கரசி அத்தையின் பெயர் சுடர்விட்டது. ”அப்பா சின்ன அத்ததான் கூப்படறாங்கஎன்றபடி கைபேசியை எடுத்துச் சென்று அவரிடம் கொடுத்தேன். அலோ என்று அப்பா பேசத் தொடங்கினார்.  கூடத்திலிருந்த எல்லோருடைய பார்வையும் அப்பாவின் மீதே பதிந்திருந்தது. தேவகி சித்தியும் அர்ச்சனா அத்தையும் எல்லோருக்கும் டீயும் காப்பியும் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.

அப்பா பேசி முடித்ததும்என்ன சொல்லுது வடிவு?” என்று தொடங்கினார் தாத்தா. “பையன் காலேஜ்ல முக்கியமான  ஒரு செமினார் இருக்குதுன்னு சொல்றானாம். காலையில கட்சி ஆபீஸ்ல ஏதோ மீட்டிங்னு போன மச்சான் இந்த நேரம் வரைக்கும் வீட்டுக்கு திரும்பி வரலையாம். போன் பண்ணா போன எடுக்கமாட்டறாராம். ஒரு விசேஷ நாளுக்கு கூட நிம்மதியா கெளம்பமுடியலைன்னு அழுவுதுஎன்றார் அப்பா.

அப்ப, எப்பதான் கெளம்பறாங்களாம்? கேட்டிங்களா?” அம்மா அவரை நோக்கி வந்தாள்.

ஆறு மணிக்கு கெளம்பனாகூட இங்க வர பத்தாய்டாது?” வனஜா சித்தி பக்கத்திலிருந்த கமலா அத்தையிடம் கேட்டாள். “ட்ராஃபிக் எப்படி இருக்குதோ, அதுக்கு தகுந்தாப்புல நேரம் கூடவும் செய்யலாம், கொறயவும் செய்யலாம். நெலயா எப்பிடி சொல்லமுடியும்?” அத்தை உத்திரத்தைப் பார்த்துக்கொண்டே பதில் சொன்னாள்.

ரெண்டு பேரும் பொழுதோட வந்துட்டா, சீக்கிரமாவே கெளம்பிடுமாம். இல்லன்னா காலையில கெளம்பி நேரிடையா திருக்கடையூருக்கே வருதாம்.”

ஏழு புள்ளைங்களும் ஒரு குடும்பமா இங்கேருந்து ஒன்னா சேர்ந்து கெளம்பறதுதான நல்லது. சேர்ந்துபோய் சேர்ந்து நடத்தி வைக்கறதுதானடா அறுபதாம் கல்யாணம்? ராத்திரி எத்தன மணியானாலும் கெளம்பி இங்க வந்துடச் சொல்லு கதிரேசாபாட்டியின் குரல் சற்றே தளர்ந்திருந்தது.

அப்பறமா சொல்றம்மா, இப்ப அது அழுவுதுஅப்பா கைபேசியை கீழே வைத்துவிட்டு காப்பியை எடுத்து வேகமாகக் குடித்துமுடித்தார். ‘அதுக்குள்ள ஆறிட்டுது

சூடா இன்னொரு தம்ளர் கொண்டுவரட்டுமா?”

வேணாம் வேணாம்

தரையில் வைக்கப்பட்டிருந்த கைபேசியை எடுத்து ஒளிரவைத்துப் பார்த்தார் காளிமுத்து மாமா. பிறகு எடை பார்ப்பதுபோல கையில் வைத்து பார்த்துவிட்டுதக்கையாதான் இருக்குது. சைஸ பாத்துட்டு வெய்ட்டா இருக்குமோன்னு நெனச்சிட்டன்என்று சிரித்தார்.

இந்த ஜனவரியில ஃப்ளிப்கார்ட்ல ஒரு ஆஃபர் போட்டிருந்தான். அதுல வாங்கனன்.  பத்தொம்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணத்தொம்பது ரூபா.”

உடல் தூக்கிவாரப் போட, மாமா அந்தக் கைபேசியை உடனே கீழே வைத்துவிட்டார். “டெலிபோன், கேமிரா, கம்ப்யூட்டர், வீடியோ, சினிமான்னு எல்லா வசதியும் ஒரே இன்ஸ்ட்ரூமெண்ட்ல வந்துடுதில்ல, அதுக்குத்தான் அந்த வெலஎன்றார் அப்பா. மாமா சந்தேகத்துடன்அப்ப இதுக்கு முன்னால வச்சிருந்த போன என்ன பண்ணீங்க?” என்று கேட்டார். “அத அவன் எடுத்துகிட்டான், கேம் ஆடறதுக்குஅப்பா என்னைக் காட்டினார்.

நீங்க இன்னும் டச்போன் வாங்கலையா?”

எனக்கு எதுக்கு மாமா அதெல்லாம்? நான் செய்யற வேலைக்கு நோக்கியோவே தாராளம்சட்டைப்பையிலிருந்த கைபேசியை அவர் கை தன்னிச்சையாக தொட்டுப் பார்த்துக்கொண்டது.

ராத்திரிக்கு எல்லோருக்கும் என்ன வேணும், சொன்னீங்கன்னா அதுக்கு தகுந்த மாதிரி ஏற்பாடு செஞ்சிடலாம்என்று எழுந்த அம்மாவின் குரலைக் கேட்டு எல்லோரும் அவள் பக்கம் திரும்பினார்கள்.

அண்ணி, வீட்டுல எதுவும் செய்யவேணாம்ண்ணி, ஓட்டலுக்கு போயிடலாம். ராம் இன்டர்நேஷனல்என்றார் சக்கரவர்த்தி சித்தப்பா. “ஆமா, எப்ப பாரு இவருக்கு ஓட்டல் நெனப்புதான்என்று நெற்றியில் அடித்துக்கொண்டாள் தேவகி சித்தி.

நல்லா சம்பாதிக்கணும், நல்லா விதம்விதமா ருசிருசியா  தேடித்தேடி சாப்படணும். அதான் நம்ம பாலிசி. அதுலலாம் எனக்கு கூச்சமில்லப்பாசித்தப்பா இரு கைகளையும் உயர்த்தி சிரித்துக்கொண்டே சொன்னார்.

இன்னைக்கு வேணாம். நாளைக்கி கோவில் விசேஷம் முடிச்சி திரும்பி வந்த பிறகு ஓட்டலுக்கு போலாம். இப்ப என்ன வேணும் சொல்லுங்க.”

பெரியவர்கள் எந்த பதிலும் சொல்லாமல்  ஒருவரையொருவர் பார்த்தபடி அமைதியாகவே இருந்த சமயத்தில், யாரும் எதிர்பாராத விதமாக அனுஷா கையை உயர்த்தினாள். அவளைப் பார்த்துவிட்டு சந்தோஷும் உமாதேவியும் உயர்த்தினார்கள். கடைசியாக இளமதியும் சசிதரனும் உயர்த்தினார்கள்.

பாருங்கப்பா, புள்ளைங்கதான் கேட்ட கேள்விக்கு சரியா பதில் சொல்லுதுங்கஎன்று பாராட்டாகச் சொல்லிவிட்டு மொதல்ல நீ சொல்லு அனுஷாஎன்று கேட்டாள் அம்மா. அனுஷா எழுந்து நின்று மெதுவாக தயிர்சாதம்என்றாள். சட்டென வனஜா சித்தியும் கமலா அத்தையும் சிரிக்கும் சத்தம் கேட்டது. அம்மா சிரிக்காமலேயே அவர்கள் திசையில் ஒருகணம் பார்த்துவிட்டு, பிறகு அனுஷாவிடம்தயிர்சாதம் உண்டும்மா.  அது தவிர இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி அந்த மாதிரி எது வேணும், சொல்லுஎன்று கேட்டாள்.

ஒரு கணம் யோசித்துவிட்டு அனுஷாகுழிப்பணியாரம்என்றாள். ”ஓகே. ஒரு ஐடம் முடிஞ்சது. ஒனக்கு என்ன வேணும், சொல்லுஎன்று சந்தோஷிடம் கேட்டாள். அவன்இட்லிஎன்றான். ”எனக்கும் இட்லிஎன்றாள் உமாதேவி. இளமதியும் சசிதரனும்சப்பாத்திஎன்றார்கள். இறுதியாக என்னைப் பார்த்துநீ ஏன்டா பேசாம பொம்மமாதிரி இருக்கற? ஒனக்கு என்ன வேணும்?” என்று கேட்டாள். நாம் அம்மாவின் கண்களைப் பார்த்தபடியேமுட்டைதோசைஎன்றேன். அம்மா சிரித்தபடியே என் தலைமீது கையை வைத்து அசைத்தாள். ”சரியான தோசை மன்னன். மூணு வேளைக்கும் முட்டதோசையும் மொளகாப்பொடியும் குடுத்தா போதும், அந்தமான்ல கூட இருப்பான் என் புள்ளஎன்றாள்.  பெரியவர்கள்எது வேணுமானாலும் செய்மாஎன்று பொதுவாகச் சொல்லிவிட்டார்கள்.

பூரி, சப்பாத்தி, ரவாதோசை, குழிப்பணியாரம், முட்டைதோசை, தயிர்சாதம் செய்றேன். போதுமா?”

அப்பாவின் கைபேசி மீண்டும்கண்ணான கண்ணே கண்ணான கண்ணேபாடிக்கொண்டே அசைந்தது. “மறுபடியும் வடிவுதான்என்றபடி அப்பா கைபேசியை எடுத்து அலோ என்றார். அவர் எதையும் சொல்லவில்லை. சொல்வதற்கெல்லாம் ம் கொட்டினார். இறுதியாகசரிஎன்றபடி பேச்சை நிறுத்தினார்.

என்னவாம்?” என்று கேட்டார் அப்பா.

மச்சானுக்கு கட்சி மீட்டிங் இன்னும் முடியலையாம். பையன் வந்தா அவன கூப்டுகினு நீ மட்டும் கெளம்பும்மான்னு சொல்றாராம். காலையில் நேரா திருக்கடையூர் கோவிலுக்கு வந்துடறேன்னுன்னு சொல்றாராம். அதெல்லாம் முடியாது, மீட்டிங் முடிச்சிட்டே வாங்க, சேர்ந்து போவலாம்னு சொல்லிடுச்சாம் வடிவு.”

சரி, வரும்போது வரட்டும். அம்மாடி அஞ்சலிதேவி, ராத்திரி டிஃப்ன் அவுங்களுக்கும் சேத்து பண்ணிடும்மா

அப்பா கைபேசியை தரையில் வைத்தபோதுகாலர் ட்யூன் ரொம்ப நல்லா இருக்குதே, ஒங்களுக்குப் புடிச்ச பாட்டா?” என்று வளையாபதி மாமா மீசையைத் தடவிக்கொண்டே கேட்டார்.  இதுவா? எனக்கு புடிச்சதெல்லாம் ரஜினி பாட்டுதான். அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா அந்த மாதிரி. இது சேது வச்சி குடுத்தான்என்றபடி என்னைக் காட்டினார். “இந்த காலத்து புள்ளைங்க எல்லாத்தயும் வேகமா கத்துக்கறாங்கஎன்றார் வளையாபதி மாமா.

நம்ம அனுஷா இந்த பாட்ட ரொம்ப நல்லா பாடும்என்று முகமெல்லாம் மலரச் சொன்னார் காளிமுத்து மாமா. உடனே எல்லோருடைய கவனமும் அனுஷாவின்மீது திரும்பியது. “அப்படியா, அனுஷா பாடு அனுஷா பாடுஎன்று எல்லாப் பக்கங்களிலிருந்தும் குரல் எழுந்தது. தாத்தாவும்அனுஷா குட்டி, பாடும்மாஎன்றார். வெட்கத்தில் அனுஷாவின் முகம் சிவந்தது. ஒருகணம் என்னைத் திரும்பிப் பார்த்தாள்.

எனக்குப் புடிச்ச பாட்டு இது. ஒனக்கும் ரொம்ப புடிக்குமா?”

அவள் வெட்கத்துடன் மேலும் கீழும் தலையை அசைத்தபடி தொண்டையைச் செருமிவிட்டு பாடத் தொடங்கினாள். முதல் நான்கு வரிகளை அவள் பாடியதுமே அனைவரும் அவள் குரலில் மயங்கத் தொடங்கிவிட்டார்கள். அவள் பாடி முடித்ததுமே கைத்தட்டலில் கூடமே அதிர்ந்தது. பாட்டி தன் நாற்காலியிலிருந்து எழுந்து வந்து அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

குட்டி, இன்னொரு பாட்டு பாடுடிஎன்று கேட்டார் தாத்தா. அனுஷா யோசிப்பதுபோல ஒருகணம் குனிந்திருந்துவிட்டு அர்ச்சனா அத்தையைத் திரும்பிப் பார்த்தாள். சம்மதம் கொடுப்பதுபோல அத்தை ம் என்று புன்னகையோடு தலையசைத்தாள். பிறகு யமுனை ஆற்றிலே யமுனை ஆற்றிலேஎன்று பாடத் தொடங்கினாள். அந்தப் பாட்டை முடிக்கும் வரை அவள் தலை நிமிரவே இல்லை. முடித்த பிறகே நிமிர்ந்து சிரித்தாள். மீண்டும் கூடம் கைத்தட்டலால் நிறைந்தது.
இங்க பாருங்க, அனுஷா எவ்வளவு அழகா நல்லா பாடினா. அதே மாதிரி சின்ன புள்ளைங்க எல்லாருமே ஆளுக்கொரு பாட்டு பாடணும். இதுவே என் கட்டளை, இதுவே சாசனம்என்றார் அப்பா. “ஆமாம், ஆமாம், பாடணும். பாட்டுக்குப் பிறகு நான் எல்லோருக்கும் ஒரு டைரிமில்க் சாக்லெட் குடுப்பேன்என்று உற்சாகத்துடன் சொன்ன கந்தசாமி சித்தப்பாடேய், சேது, நீ ஆரம்பிடா முதல்லஎன்றார்.

நான் எதைப் பாடுவது என்ற யோசனையில் தடுமாறியபடி அனுஷாவின் பக்கம் திரும்பியபோது அவள் என்னையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் குழப்பத்தில் தடுமாறுவதை உணர்ந்ததும் அவள் அடங்கிய குரலில் உதட்டை அசைத்துகண்ணே கலைமானே பாடுஎன்றாள். அந்தப் பாட்டின் வரிகள் சடசடவென என் நினைவில் உருண்டுவரத் தொடங்கின. என்னைத் தொடர்ந்து இளமதி, சந்தோஷ், உமாதேவி அனைவருமே பாடினார்கள்.

சின்ன புள்ளைங்க பாடி முடிச்சிட்டாங்க, இப்ப பெரியவங்க பாடுவாங்கஎன்று அறிவித்தார் சக்கரவர்த்தி சித்தப்பா. “சும்மா இல்லாம என்ன சொல்றாரு பாரு இவரு, இவருக்கு வேற வேலயே இல்லஎன்று கூச்சத்தில் முகம் சிவந்தாள் தேவகி சித்தி. அதற்குள் சக்கரவர்த்தி சித்தப்பாதேவகி, நீதான் ஆரம்பிக்கணும்என்று சத்தமாகவே சொன்னார். வெட்கத்தில் சித்தியின் முகம் மேலும் சிவந்தது. பிறகு மெதுவாகபுல்லாங்குழலில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்பாட்டைத் தொடங்கினார். அடுத்தடுத்து கமலா அத்தையும் சந்தியா அத்தையும் பாடினார்கள். அம்மா அடுப்பங்கரையிலிருந்து அர்ச்சனா அத்தையை அழைத்துவந்து நிறுத்தினாள். “ம், பாடுஎன்றாள். “எனக்கு என்னண்ணி பாடத் தெரியும்?” என்று சிணுங்கினாள் அர்ச்சனா.  தாய் எட்டடி பாயாம, குட்டி பதினாறடி பாயமுடியாதுடி தெரிஞ்சிக்கொ. அனுஷாவ இந்த அளவுக்கு தயார் பண்ணியிருக்கே, உனக்கு பாடவராம போயிடுமா?” என்றாள் தேவகி சித்தி. அர்ச்சனா பெருமூச்சுடன் சில கணங்கள் குனிந்திருந்தாள். பிறகுபார்த்த முதல் நாளேபாடி முடித்தாள். அதற்குப் பிறகு அம்மாவும்திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்பாடினாள்.

கந்தசாமி சித்தப்பாஅம்மா, இப்ப நீஎன்று சொன்னார். “சும்மா இருடா, ஒனக்கு எல்லாமே விளையாட்டுதான்என்று அடிப்பதுபோல கையை ஓங்கியபடி வெட்கத்துடன் பார்த்தார் பாட்டி.

அம்மா இன்னும் சின்ன பொண்ணுமாதிரியே வெக்கப்படறாங்க பாருடா. நாளைக்கு அறுபதாம் கல்யாணத்துல மால மாத்திக்க போறவங்கன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா?”

நீ ஒத வாங்க போறடா இப்ப

நீ எத கொடுத்தாலும் வாங்கிக்கறேன்மா. அந்த காலத்துல கோலம் போடும்போது, சமைக்கும்போதுலாம் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் பாடுவியே, அந்த பாட்ட பாடும்மா

ஒன்ன..” என்றபடி ஆட்காட்டி விரலை உயர்த்தி அடிக்க இருப்பதுபோல அசைத்தாள் பாட்டி. “புள்ளைங்க ஆசைப்படுதில்ல, பாடேன்என்று பாட்டியைப் பார்த்துச் சொன்னார் தாத்தா. “என்ன பாடச் சொல்றீங்க, உங்கள கேட்டா பாடுவீங்களா?” என்று தாத்தாவை முறைத்தார் பாட்டி. ”நீ பாடு முதல்ல, அப்பறமா நானும் பாடறேன்என்றார் தாத்தா. அதைக் கேட்ட மகிழ்ச்சியில் நாங்கள் தன்னிச்சையாக கைதட்டி ஓசை எழுப்பினோம். “பாட்டி பாட்டி பாட்டிஎன்று கூச்சலிட்டோம். பாட்டி அந்த இடைவெளியில் பாடுவதற்கு தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டாள். சில கணங்களில்பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோபாடலால் அந்தக் கூடம் நிறைந்தது. பாடிமுடித்ததும் எல்லோரும் ஒரு நிமிஷம் நிறுத்தாமல் கைதட்டினோம். அனுஷா ஓடிச் சென்று பாட்டிக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு வந்தாள். நான் பாட்டியின் கையைப் பிடித்து குலுக்கினேன். என்னைத் தொடர்ந்து எல்லோரும் கைகுலுக்கினார்கள்.

கந்தசாமி சித்தப்பாவைப் பார்த்து தாத்தாஅந்த காலத்துல ஒரு ஸ்கூல் விழாவுல இந்தப் பாட்ட பாடனாங்கடா ஒங்க அம்மா. அந்த விழாவுல நான் சீஃப் கெஸ்ட். அதுலதான் பழக்கம் ஆரம்பம்என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். மீண்டும் சிரிப்பொலி. “சரி சரி, பேசிட்டே இருக்காதீங்க. இப்ப நீங்கதான் பாடணும்என்றார் சித்தப்பா. ”பாடறேன் பாடறேன்என்று தலையசைத்த தாத்தாகாவியமா இல்லை ஓவியமாபாட்டைப் பாடினார். சித்தப்பா வெளியே சென்று எல்லோருக்கும் டைரிமில்க் வாங்கிவந்து கொடுத்தார்.

பாட்டுக்கச்சேரி முடிஞ்சிதா, சரி, நாங்க போயி வயித்துக் கச்சேரிக்கு வழி செய்யறோம்என்றபடி அம்மா சமையலறைக்குள் சென்றாள். அம்மாவின் பின்னாலேயே அத்தைகளும் சித்திகளும் பெரியம்மாக்களும் சென்றார்கள்.

கதிரேசா, வடிவுக்கு ஒரு போன் பண்ணிப் பாரேன்என்றார் தாத்தா. “அப்பா, நாம அவளுக்கு போன் பண்ணப்பண்ண அவளுக்கு இன்னும் கொஞ்சம் எரிச்சல்தான் அதிகமாவும். இருங்க, அதுவா செய்யுதா, பாப்பம்

மணி ஏழாய்டுச்சேடா.”

ஆவட்டுமே, என்ன இப்ப. ஹைவேஸ்ல கார்ல வர்ரதுக்கு என்ன பயம்? மச்சான் இல்லாம வடிவு கார்ல ஏறாதுப்பா.”

சரி, நாம கொஞ்ச நேரம் பொழுதுபோக்கா கேரம்போர்ட் ஆடலாமா?” என்று கேட்டார் காளிமுத்து மாமா. “ தாராளமா, கேரம்போர்ட் என்ன,  செஸ், கார்ட்ஸ் கூட விளையாடலாம்?” என்றார் கந்தசாமி சித்தப்பா.

எங்க இருக்குது சொல்லுங்க, நான் எடுத்தாரேன்

அதோ, எங்க அறையிலதான் இருக்குது. நீங்க இருங்க பசங்க யாரயாச்சிம் அனுப்பிவைக்கலாம்

இதுக்கு போயி பசங்க எதுக்குங்க மாமா? நானே எடுத்தாரேன்

என்ட்ரன்ஸ்லயே லைட் ஸ்விட்ச் இருக்குது பாருங்க, போட்டுக்குங்க.”

காளிமுத்து மாமா எழுந்து அறைக்குள் சென்றார். சில நொடிகளுக்குப் பிறகுபோர்ட் இருக்குது, கண்டுபிடிச்சிட்டேன். காய்ன் பாக்ஸ காணமே மாமாஎன்னும் குரல் கேட்டது.

அங்கதான் கட்டிலுக்கு கீழ இருக்கும் பாருங்க

சிறிது நேரத்துக்குப் பிறகு கேரம்போர்டை ஒரு கையாலும் மறுகையில் சீட்டுக்கட்டு பெட்டியும் காய்ன் பாக்ஸும் வைக்கப்பட்ட செஸ் போர்டுமாக வந்து சேர்ந்தார் காளிமுத்து மாமா. அப்பாவும் வடிவேல் மாமாவும் செஸ்போர்டை பிரித்து வைத்துக்கொண்டு காய்களை அடுக்கினார்கள். வளையாபதி மாமாவும் சக்கரவர்த்தி சித்தப்பாவும் சீட்டுக்கட்டை எடுத்துக்கொண்டு சுவரோரமாகச் சென்றார்கள். கந்தசாமி சித்தப்பாவும் காளிமுத்து மாமாவும் கேரம்போர்ட் ஆடத் தொடங்கினார்கள். மற்றவர்கள் அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தோம்.

நேரம் போனதே தெரியவில்லை. அம்மா வந்துஎல்லாரும் சாப்ப்ட வரலாம்என்று அழைத்த பிறகுதான் மணி ஒன்பதாகிவிட்டதை உணர்ந்தோம். ஆட்டத்தை நிறுத்திவிட்டு எல்லாவற்றையும் சுவரோரமாக ஒதுக்கிவைத்துவிட்டு கைகால் கழுவிக்கொண்டு வர தயாரானோம்.

கதிரேசா, வடிவுகிட்டேருந்து ஒரு தகவலும் வரலையேப்பா, ஒருதரம் நீ கூப்டடு கேக்கக்கூடாதா?” என்றபடி தாத்தா அப்பாவைப் பார்த்தார். அப்பா சுவர்க்கடிகாரத்தையும் தாத்தாவையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு கைபேசியை எடுத்து வடிவு அத்தையை அழைத்தார். நீண்ட நேரத்துக்குப் பிறகு இணைப்பு கிடைத்தது. “என்னம்மா கெளம்பிட்டிங்களா?” என்று பேச்சைத் தொடங்கினார் அப்பா. பிறகு அந்தப் பக்கம் சொல்லப்படுவதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டார். கடைசியில்சரிம்மா, ஜாக்கிரதையா வாங்கஎன்று சொல்லிவிட்டு கைபேசியை கீழே வைத்தார்.

இப்பதான் மச்சான் வந்தாராம். சாப்ட்ட உடனே கெளம்பிடுவாங்களாம். எப்படியும் ரெண்டுமணி ஆவுமாம். நால்ரைக்குதான் நாம கெளம்பணும். அதுக்குள்ள வந்தா சரிதான்

தூணில் சாய்ந்தவாக்கில் அமர்ந்திருந்த அனுஷாமொளகாப்பொடி ஒனக்கு ரொம்ப புடிக்குமா?” என்று என்னிடம் கேட்டாள். நான் ம்ம் என்று வேகமாக தலையசைத்தேன். “ரொம்ப சாப்டாத, வயித்துல புண்ணு வந்துடும்என்றாள்.

இந்த டச்போன்ல ஒனக்கு எல்லா விஷயமும் தெரியுமா?” என்று கைபேசியைக் காட்டி என்னிடம் கேட்டார்  மாமா. “ரொம்ப சுலபம் மாமா. ஈசியா கத்துக்கலாம்என்றபடி பக்கத்திலிருந்த கைபேசியை எடுத்து செட்டிங்ஸ் பகுதியைத் திறந்து விளக்கினேன். அதையெல்லாம் நான் தெரிந்துவைத்திருக்கிறேன் என்பதில் அவருக்கு ஆச்சரியம். “பெரிய புத்திசாலிடா நீஎன்று என்னைப் பாராட்டினார்.

தன் அறையிலிருந்து வனஜா வனஜாஎன்று கந்தசாமி சித்தப்பா சித்தியை அழைக்கும் குரல் கேட்டது. ”என்னங்க?” என்று சமையலறையிலிருந்து சித்தியின் குரல் கேட்டது. “இங்க ஒரு நிமிஷம் வந்துட்டு போஎன்று அவசரமான குரலில் சொன்னார் சித்தப்பா. ”அப்படி என்னங்க தலபோவற அவசரம்?” என்றபடி சித்தி வேகமாக வந்து அறைக்குள் சென்றாள். அவர்கள் பேசுவது கூடம் வரைக்கும் தெளிவாகக் கேட்டது.

இங்க ஆயிரம் ரூபா வச்சிருந்தனே, நீ எடுத்தியா?”

நான் எதுக்குங்க பணத்த எடுக்கப்போறேன்? தனியா எனக்கென்ன செலவு இருக்கப் போவுது?”

மதியானம் நாலாயிரம் ரூபா எடுத்தும் போனேன். தேங்காகடையில மூவாயிரம் ருபா கொடுத்துட்டு மிச்சம் ஆயிரம் ரூபா எடுத்தாந்து இங்கதான் டேபிள் மேல வச்சன்.”

நல்லா பாருங்க, எங்கனா காத்துல பறந்துபோய் உழுந்திருக்கும்.”

கட்டில் கீழ, டேபிள் கீழ, அலமாரி கீழ எல்லா எடத்துலயும் பாத்தாச்சி. எங்கயும் காணம். வேணும்னா நீயே பாரு.”

அப்பா, சித்தப்பா, மாமா அனைவரும் அந்த அறைக்குச் சென்றார்கள். நான் கதவை ஒட்டி நின்றுகொண்டேன்.

பதட்டப்படாத யோசிச்சி பாரு கந்தசாமி. கடைத்தெருவுல வேற யாருக்காவது அட்வான்ஸ், கிட்வான்ஸ்னு குடுத்தியோ என்னமோஎன்று அமைதியாகச் சொன்னார் அப்பா. அவர் கண்களும் அறை மூலைகளில் தேடின.

தாத்தா, பாட்டி, அம்மா, சித்திகள், அத்தைகள் அனைவருமே ஒவ்வொருவராக வந்து அறையின் முன்னால் நின்றுவிட்டார்கள்.

யாருக்கும் ஒன்னும் தரலைண்ணே. பணத்த கொண்டாந்து இங்கதான் வச்சன். இப்ப பாத்தா காணம்  எரிச்சலையும் கோபத்தையும் அடக்கிக்கொண்டு பேசுவதுபோலப் பேசினார் சித்தப்பா.

இவ்வளவு பேரு இங்கதான்டா ஒக்காந்திருக்கம். நம்மள மீறி யாருடா உள்ள வரமுடியும்?. நல்லா யோசிச்சி பாருடா

சித்தப்பா சட்டென்று நினைவுக்கு வந்தவராகமச்சான்தான் ரூமுக்குள்ள வந்து கேரம்போர்ட்லாம் எடுத்துகினு வந்தாரு……” என்று இழுத்தபடி மாமா நின்றிருக்கும் திசையில் பார்த்தார். அவர் அடிபட்டவர்போல மிரண்டுநான் போர்ட் காய்ன்ஸ்ங்களத்தான் தேடி எடுத்துகினு வந்தன் மாமா. பணத்த ஒன்னும் பாக்கலையேஎன்றார். அவர் குரல் அக்கணமே உடைந்துவிட்டது. “எனக்கு அடுத்து நீங்கதான் அறைக்குள்ள வந்திங்க. வேற யாரும் வரலையேஎன்று சங்கடப்படுபவர் போல முனகினார் சித்தப்பா. அதையும் எங்கோ பார்த்தபடி சொன்னார்.  இருக்கலாம் மாமா, ஆனா நான் பணத்த பாக்கவே இல்லயேஎன்று கைகளை விரித்தார் மாமா. அவர் உடல் நடுங்கியது. “யாரும் எடுக்கலைன்னா, தானா றெக்க மொளச்சி பறந்து போயிடுச்சா?” என்று சுவரைப் பார்த்தபடி சொன்னார் சித்தப்பா. அப்பா அவரிடம் வேகமான குரலில்கந்தசாமி, வாய வச்சிகினு செத்த நேரம் சும்மா இருக்கமாட்ட?” என்று அதட்டினார். அதே நேரத்தில் அர்ச்சனா அத்தை ரோஷமான குரலில்என்னண்ணே, என் ஊட்டுக்காரு மேல  திருட்டுப்பட்டம் கட்டலாம்னு பாக்கறிங்களா? நாங்க ஏழைங்கதான். ஆனா அடுத்தவங்க பணத்துமேல ஆசப்படறவங்க கெடயாது. அத புரிஞ்சிக்குங்க. விசேஷத்துல கலந்துக்க வந்ததுக்கு இதுதான் நீங்க குடுக்கற வெகுமானமாண்ணே?” என்று பொங்கினாள். அவள் கண்கள் சிவந்துவிட்டன. “அர்ச்சனா, அவன்தான் புத்தியில்லாம பேசறான்னா, நீயும் சரிசமமா வார்த்தய உடறியேம்மாஎன்று பேச்சு வராமல் தடுமாறினார் அப்பா. ”பொறுமையா இருடி, பொறுமையா இருடிஎன்று அம்மா, சித்திகள், அத்தைகள் அனைவருமே சென்று அர்ச்சனா அத்தையின் கைகளைப் பற்றினர். ஒரு வேகத்தில் அனைவருடைய கைகளையும் உதறிவிட்டுஇனிமே ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டுல இருக்கக்கூடாது. வாங்க போவலாம்என்றபடி காளிமுத்து மாமாவை கையைப் பிடித்து இழுத்தாள். ஒருகணம் வேகமாகத் திரும்பி சமையல்கட்டுக்குள் சென்று தன் பையை எடுத்துக்கொண்டு திரும்பிஏந்து வாடிஎன்று அனுஷாவை இழுத்தாள். அனுஷா அச்சத்தோடு என் பக்கம் திரும்பிப் பார்த்தாள். தாத்தாவும் பாட்டியும் மற்றவர்களும் அழைக்க அழைக்க அக்கணமே அவர்கள் வீட்டைவிட்டு வெளியே போனார்கள்.

பாட்டும் பேச்சுமாக கலகலப்பாக இருந்த வீட்டின் கோலம் ஒரே கணத்தில் மாறிவிட்டது. திகைப்பிலிருந்து வெளிவரவே முடியாமல் அனைவரும் துயரத்தில் ஆழ்ந்திருந்தோம். யாருக்கும் பசியுமில்லை. தாகமுமில்லை. மணி பதினொன்றுக்கும் மேலாகிவிட்டது. அப்பாவும் சக்கரவர்த்தி சித்தப்பாவும் நாடாக்கட்டில்களை எடுத்துக்கொண்டு வாசல் பக்கமாகச் சென்றார்கள். தாத்தாவும் பாட்டியும் இடிந்துபோய் ஈச்சரிலேயே உட்கார்ந்துவிட்டனர். அவர்கள் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. அம்மாவும் மற்றவர்களும் அங்கங்கே படுத்துக்கொண்டனர். எப்போது தூங்கினேன் என்று தெரியாமல் நானும் தூங்கிவிட்டேன்.

பசியில் திடீரென விழிப்பு வந்துவிட்டது. என்ன செய்வதென்றே புரியவில்லை. வயிற்றை யாரோ முறுக்கிப் பிழிவதுபோல இருந்தது.  தண்ணீராவது குடித்துவிட்டு வரலாம் என எழுந்திருந்து விளக்கு போடாமலேயே சமையல்கட்டுக்குள் சென்றேன். குடத்திலிருந்து ஒரு தம்ளர் தண்ணீரை எடுத்துக்கொண்டு திரும்பியபோது ஸ்டவ் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த தட்டில் முட்டைதோசையைப் பார்த்துவிட்டேன். அதைப் பார்த்ததுமே பசி நெருப்புபோல எரிந்தது. என்ன செய்கிறேன் என்பதே புரியாமல் வேகமாக தோசையை எடுத்துச் சாப்பிட்டுமுடித்தேன்.

வயிறு நிறைந்தபிறகுதான் உடலும் மனமும் ஒரு நிதானத்துக்கு வந்தன. அனுஷாவையும் அர்ச்சனா அத்தையையும் காளிமுத்து மாமாவையும் ஒருகணம் நினைத்துக்கொண்டேன். கண்ணீர் முட்டியது. கண்களைத் துடைத்துக்கொண்டே தண்ணீர் அருந்திவிட்டு வெளியே வந்தேன். படுத்திருந்த இடத்தை நோக்கிச் செல்லும்போதுதான் என் கண்கள் கந்தசாமி சித்தப்பாவின் அறையில் விளக்கு எரிவதைப் பார்த்தேன். நிறுத்திவிட்டு வரலாம் என நினைத்து அறையை நோக்கிச் சென்றேன். கதவுக்கருகே ஸ்விட்ச்சை நெருங்கும் சமயத்தில் அறைக்குள் பேச்சுக்குரல் கேட்டு ஒருகணம் அச்சத்தில் உறைந்து நின்றுவிட்டேன்.

அவசரத்துல இப்படி அறிவுகெட்டத்தனமா நடந்துகிட்டிங்களே. என்னங்க ஞாயம்? பணமே போயிருந்தாலும் நம்ம ஊட்டு மாப்பிள்ளய முன்னால வச்சிகிட்டு யாராச்சிம் இப்படி பேசுவாங்களா? தலகாணி கீழ பணத்த வச்சிட்டு டேபிள்ள வச்சன் டேபிள்ள வச்சன் காணம்னு ஆர்ப்பாட்டம் பண்ணி அந்த அப்பாவிய சந்தேகப்பட வச்சிட்டிங்களே. அவ வயித்தெரிச்சல் நம்மள சும்மா உடுமா? தோ, பணம் கெடச்சிடுச்சி. இப்ப போய் ஒங்களால அவள திருப்பி கூப்ட்டுகினு வரமுடியுமா, பதில் சொல்லுங்க. ஏன் தலய நட்டுகினிருக்கிங்க?”

அமைதியாக சந்தடி காட்டாமல் அடிமேல் அடிவைத்துத் திரும்பிவந்து தூணுக்குப் பக்கத்தில் படுத்துக்கொண்டேன்.


(13.06.2020 புக் டே இதழில் வெளிவந்த சிறுகதை )