”நாகராஜன் ரொம்ப திமுரு காட்டிகினு திரியறான்டா” என்று பொருமினான் சிவலிங்கம். “புள்ளு எந்தப் பக்கம் பறந்து வந்தாலும் புடிச்சி இன்னைக்கு அவன் கொட்டத்த அடக்கணும்”
எங்களை
எச்சரித்துவிட்டு
உத்திக்குழிக்கு
நேராக இருபதடி தொலைவில் உறுதியாக நின்றான் சிவலிங்கம். கிரிதரன் இலுப்பை மரத்தின் திசையில் நகர்ந்து சென்றான். தண்டபானி கள்ளிச்செடிக்குப் பக்கத்தில் நின்றுகொண்டான். பெருமாள் கோவில் மதிலுக்கு அருகில் போய் நின்றான் வடிவேலு. நான் அரசமரத்தைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த மண்மேடைக்கு அருகில் சென்று நின்றுகொண்டேன்.
எல்லோருடைய
கண்களும் நாகராஜனின் மீதே பதிந்திருந்தன. தன்னைச்சுற்றி வியூகம் வகுத்து நின்றிருக்கும் அனைவரையும் ஒருமுறை கண்ணால் அளந்துவிட்டு உத்திக்குழியைப் பார்த்துக் குனிந்தான் அவன். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் கிட்டிக்கோலால் தெண்டி அடித்த கிட்டிப்புள் ஒரு சிட்டுக்குருவி போல காற்றில் விர்ரென பறந்தது.
அது
தாவியெழுந்த கோணத்தை வைத்தே என்னை நோக்கித்தான் வருகிறது என்பது புரிந்துவிட்டது. உடனே எல்லோரும் “ஆனந்தா விடாதே ஆனந்தா விடாதே” என்று கூவி எச்சரிக்கத் தொடங்கினார்கள். பதற்றத்தில் கைகால்களெல்லாம் எனக்குப் பரபரத்தன. கண்களை அதன் மீதே பதித்திருந்தேன். ஒரு பறவைபோலத் தாவி அதைப் பிடித்துவிட மாட்டோமா என்று துடித்தேன். அது நெருங்கிவரும் நேரத்தைக் கணித்து சரியான
தருணத்தில் கையை உயர்த்தியபடி என்னால் முடிந்த அளவுக்கு உயரமாக எகிறினேன். பிடிக்கு அகப்படாமல் என் கைவிரலுக்கு மேல் இரண்டடி உயரத்தில் பறந்துபோன கிட்டிப்புள் அரசமரத்தில் பட்டென்று மோதித் தெறித்தது. , முதலில் கீழே இருந்த பிள்ளையார் மீது பட்டு உருண்டு சென்று இறுதியாக ஆடுபுலி ஆட்டத்தில் மூழ்கியிருந்த தாடிக்காரரின் தொடையில் முட்டி நின்றது. அவர் எரிச்சலுடன் திரும்பிப் பார்த்து என்னை முறைத்துவிட்டு “போய் வேற பக்கத்துல ஆடுங்கடா” என்றபடி கிட்டிப்புள்ளை எடுத்து வீசினார்.
எல்லோரும்
அடித்த தொலைவைவிட நாகராஜன் அடித்த தொலைவு அதிகமானது என்பதால் அவனே வெற்றி பெற்றவனாக அறிவிக்கப்பட்டான். நாங்கள் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவராக அரசமரத்தின் கல்மேடையிலிருந்து உத்திக்குழி வரைக்கும் அவனை முதுகில் சுமந்துசென்று இறக்கினோம். “கிட்டிப்புள் ஆட்டத்துல நம்மள அடிச்சிக்க ஆளே கெடயாது தெரியுமா?” என்று கொக்கரித்தான் நாகராஜன்.
அடுத்த
ஆட்டத்தைத் தொடர எங்களுக்கு ஆர்வம் இல்லாததால் மனம் சோர்ந்து கல்மேடைக்கு வந்து அமர்ந்தோம். நாகராஜன் தன் வெற்றியைக் கொண்டாடும் விதமாக மேடையின் மற்றொரு மூலையில் கூடை நிறைய அவித்த கடலைக்கூடையோடு அமர்ந்திருந்த ஆயாவிடம் நாலணாவுக்கு கடலையை வாங்கிக்கொண்டு வந்து எல்லோருக்கும் பகிர்ந்துகொடுத்தான்.
அந்தக்
கல்மேடை மேட்டுத்தெருவும் ஸ்டேஷன் தெருவும் அக்ரஹாரமும் சந்திக்கும் புள்ளியில் இருந்தது. கோலியனூர் சந்தைக்கும் சிறுவந்தாட்டுக்கும் போகக்கூடிய மாட்டுவண்டிகள் அந்த இடத்தில்தான் சற்றே நின்று இளைப்பாறும். புறப்படும்போது வண்டிக்காரர்கள் இரண்டடி உயர கல்கூடாரத்துக்குள் அரையடி உயரத்தில்
கருகருவென்றிருக்கும்
பிள்ளையாரைப் பார்த்து வணங்கியபடியே
காதுகளைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட்டுவிட்டுச் செல்வார்கள். கிழங்கோ கடலையோ விற்கவரும் ஆயாக்கள் நடந்து வரும் வழியில் பறித்துவந்த இரண்டு செம்பருத்திப்பூக்களையோ நந்தியாவட்டைப் பூக்களையோ பிள்ளையார் முன்னால் வைத்து ஒரு துண்டு கற்பூரத்தையும் ஏற்றிய பிறகே வியாபாரத்தைத் தொடங்குவது வழக்கம். கருங்கல் பதிக்கப்பட்டதால்
கோடையில் கூட
அந்த இடம் குளுமையாக இருந்தது. அதனால் எப்போதுமே நான்கு பேர் படுத்துக்கொண்டும் மூன்று பேர் வேர்ப்புடைப்பில் சாய்ந்துகொண்டும் வம்பு பேசிக்கொண்டிருப்பார்கள்.
மேடையின்
விளிம்பில் அமர்ந்து கால்களைத் தொங்கப்போட்டபடி கடலையைத் தின்றுகொண்டே மனம்போன போக்கில் சினிமாக்கதைகளைப் பேசிக்கொண்டிருந்தோம். சிவலிங்கம் இரண்டு நாட்கள் முன்பு பார்த்த ராமு சினிமாவின் கதையை ஒவ்வொரு காட்சியாக விவரித்தான். ஒவ்வொரு காட்சியும் நம் கண் முன்னால் நிகழ்வதுபோல கதைசொல்வதில் பெரிய கெட்டிக்காரன் அவன். வாய் பேச முடியாத ஒரு சிறுவனாக அவனே எங்களுக்கு முன்னால் நடித்துக் காட்டினான். அவன் பாடிக் காட்டிய துயரம் தோய்ந்த ’பச்சை மரம் ஒன்று’ பாடலின் வரிகளின்
ஆழத்தில் நாங்கள் மூழ்கிவிட்டோம். எங்களுக்கு அருகில் ஒருவர் ஈஸ்வரா என்றபடி கையை ஊன்றி எம்பி மேடைமீது அமர்ந்த ஓசையைக் கேட்ட பிறகே எங்கள் கவனம் திசைதிரும்பியது. சிவலிங்கம் சொன்ன கதையின் சுவாரசியத்தில் அவர் எந்தத் திசையிலிருந்து வந்தார், எப்படி வந்தார் என்பதை நாங்கள் கவனிக்கவில்லை.
இரண்டு
தோள்களிலிருந்தும்
இரண்டு பைகளை இறக்கி வைத்துவிட்டு மூச்சு வாங்கினார் அவர். ஒரு கை அகலத்துக்கு பட்டையாக இருந்த அந்தப் பைகளின் பட்டிகள் விசித்திரமாக இருந்தன. ஒன்று பெரிய பை. மற்றொன்று சின்ன பை. அழுக்கான வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார். பரட்டைத்தலை. தாடி வைத்திருந்தார். வெயிலில் முகத்திலும் கழுத்திலும் ஊறி வழிந்த
வேர்வையை கழுத்திலிருந்த துண்டை எடுத்து துடைத்துக்கொண்டார்.
“என்ன பாட்டு சொன்ன?” என்று கேட்டார் அவர்.
அப்படி
ஒரு கேள்வியோடு எங்கள் உரையாடலுக்கு நடுவில் அவர் குறுக்கிடுவார் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. அவரைப் பார்த்தால் சினிமா பார்க்கிற மனிதரைப்போலவே தெரியவில்லை. எங்கோ காட்டிலிருந்து விறகு வெட்டி எடுத்து வந்து சந்தையில் விற்றுவிட்டுத் திரும்பும் கிராமத்தானைப்போலத்தான் இருந்தது.
பதிலை
எதிர்பார்த்து
அவர் எங்கள் முகத்தைப் பார்த்தபடியே இருந்ததால் சிவலிங்கம் “பச்சை மரம் ஒன்று இச்சைக்கிளி “ என்று முதல் வரியைப் பாடினான்.
”சுசிலாம்மாவும் சீனிவாசும் பாடற பாட்டா?”
“ஆமா”
“சீனிவாசுக்கு ரொம்ப இளகின குரல். சோகத்துக்கு பொருத்தமான குரல் உள்ளவரு. சோகப்பாட்டுன்னாவே சீனிவாசத்தான் போடுவாங்க”
அவருக்கு
ஏதாவது தகுந்த பதிலைச் சொல்லவேண்டும் என்று பரபரத்தான் சிவலிங்கம். எனினும் சொல்லெழாவதனாக தவித்தபடி அவரையும் வானத்தையும் மாறிமாறிப் பார்த்தான். எதிர்பாராத கணத்தில் “சந்தோஷமா ஆடிப் பாடற பாட்டு கூட அவர் பாடியிருக்காரே” என்றேன் நான்.
“ஆமா. அதுவும் பாடியிருக்கார். ஆனா அவருக்குன்னு ஒரு தனித்துவம் இருக்குதில்ல, அது சோகப்பாட்டுதான்.”
சட்டென்று
என் வேகம் அடங்கிவிட்டது. அவர் என்னை மறுக்காமல் ஏற்றுக்கொண்ட விதம் என்னை ஊமையாக்கிவிட்டது. தொடர்ந்து என்ன பேச என்று தெரியவில்லை.
“பாட்டுல கீழ் ஸ்தாயி, மேல் ஸ்தாயினு ரெண்டு இருக்குது. கீழ் ஸ்தாயி சோகத்துக்கு பொருத்தமா இருக்கும். சீனிவாசு கீழ் ஸ்தாயிலயே இருக்கறவர். அவரால அத ரொம்ப சுலபமா பாடமுடியும். மேல் ஸ்தாயில இருக்கற ஒருத்தர் கீழ் ஸ்தாயிக்கு மெனக்கிட்டு எறங்கிவந்து பாடனாதான் அவுங்களுக்கு சோகப்பாட்டு வரும்”
அவர்
என் தோள்மீது கைவைத்து அருகில் இழுத்துக்கொண்டார்.
“நீ மயக்கமா கலக்கமா கேட்டிருக்கியா? அப்படியே மனச உருக்கறமாதிரி இருக்குதில்ல? அது சோகப்பாட்டுதான?”
“ஆமா”
”நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், இந்த மன்றத்தில் ஓடி வரும், யார் சிரித்தால் என்ன எல்லாமே அவர் பாடனதுதான?”
“ஆமா”
“அப்படி ஒரு நூறு பாட்டு இருக்கும். பெரிய சோகக்களஞ்சியம்.”
அவருடைய
புன்னகையில் ஏதோ ஒரு வசீகரம் இருந்தது. இவரிடமா வம்பிழுக்க நினைத்தோம் என்று தோன்றியது. அவர் என்னிடம் “உன் பேரென்ன?” என்று கேட்டார்.
“ஆனந்தன்”
அவர்
திரும்பி மற்றவர்களைப் பார்த்தார். நான் அவர்களுடைய பெயர்களை ஒவ்வொருவராகச் சொன்னேன்.
“முழுப்பரீட்ச லீவுல இங்கதான் ஆட்டமா?”
நாங்கள்
கூச்சத்தோடு ஆமாம் என்று தலையசைத்தோம்.
“அந்த பச்சைமரம் ஒன்று பாட்ட ஒருதரம் நீங்க பாடறீங்களா?” என்று கேட்டேன்.
“ஓ. அதுக்கென்ன? பாடறனே” என்று சிரித்தார். “ஆனா நான் ஒரு பாட்டு பாடனா, நீ ஒரு பாட்டு பாடணும். அந்த ஒப்பந்தத்துக்கு சம்மதம்னா நான் பாடறேன். சரியா?”
நானே
வலையை விரித்து நானே மாட்டிக்கொண்டேனே என்று தோன்றியதில் நாக்கைக் கடித்துக்கொண்டேன். நண்பர்கள் எல்லோரும் என்னைப் பார்த்து “ம்னு சொல்லுடா. ம்னு சொல்லுடா” என்று தூண்டினார்கள். சிவலிங்கம் சற்று சத்தமாகவே ”பள்ளிக்கூடத்துல பாட்டுப்போட்டிக்கு பாடனியே தமிழுக்கும் அமுதென்று பேர். அத பாடுடா” என்று சொல்லிவிட்டு முதுகைத் தட்டினான். நான் வேறு வழியில்லாமல் சரியென்று தலையசைத்தேன். “அப்ப நானும் தயார்” என்று அவர் சிரித்தார்.
திரும்பி
தனக்கு அருகிலிருந்த பெரிய பையைப் பிரித்தார். அதிலிருந்து என்ன எடுக்கப்போகிறார் என்பதை அறிந்துகொள்ள ஆவலோடு காத்திருந்தோம். வெள்ளைவேட்டியால் மூடிக் கட்டிய ஒரு மூட்டை அந்தப் பைக்குள் இருந்தது. அந்த மூட்டையையும் பிரித்து அதிலிருந்து அவர் ஆர்மோனியப்பெட்டியை எடுத்தார். பளபளவென அது கரிய நிறத்தில் மின்னியது. அதை எடுத்து தனக்கு எதிரில் வைத்துக்கொண்டு எங்களைப் பார்த்து புன்னகைத்தபடி துடைத்தார். மெதுவாக அவர் துருத்தியை அசைத்தபடி வெண்மையும் கருமையும் கலந்த அதன் வெவ்வேறு மரக்கட்டைகளில் விரல்களை அழுத்திய போது இசை எழுந்தது. ஆறேழு அசைவுகளிலேயே அவர் பச்சைமரம் ஒன்று
பாட்டுக்குப் பொருத்தமான தாளத்தைக் கொண்டுவந்துவிட்டார். அவர் பச்சை மரம் ஒன்று பாடத் தொடங்கியபோது எங்கிருந்தோ ஒரு வானொலிப்பெட்டி பாடுவதுபோலவே தோன்றியது. அந்த அளவுக்கு வரிகளுக்குப் பொருத்தமான குரல். எங்களால் அமர்ந்திருக்க முடியவில்லை. தன்னிச்சையாக எழுந்து அவரைச் சூழ்ந்துகொண்டு நின்றோம்.
பாட்டுச்சத்தம் கேட்டதுமே
கல்மேடையில் ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தவர்களும் நிழலுக்கு அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தவர்களும் உறங்கிக்கொண்டிருந்தவர்களும் எழுந்து வந்து எங்களைச் சூழ்ந்துவிட்டார்கள். அவர் பாடி முடித்ததுமே சந்தோஷத்தில் எல்லோரும் கைதட்டினார்கள்.
“இப்ப நீ. இப்ப நீ” என்று ஒரு சிறுவனுக்குரிய உற்சாகத்துடன் அவர் என் பக்கமாக விரலை நீட்டி புன்னகைத்தார். நான் மெளனமாக தலையைக் குனிந்துகொண்டு அவ்வரிகளை நினைவுகூர்ந்தேன். பிறகு நாணத்துடன் அவரைப் பார்த்து தயார் என்பதுபோல தலையசைத்துவிட்டு குனிந்துகொண்டேன். அவருடைய விரல்கள் உடனே ஆர்மோனியத்தில் கட்டைகளின் மீது படர்ந்து அழுத்தம் கொடுத்து விடுவித்தன. ’தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று நான் தொடங்கினேன். பாடலை முடிக்கும் வரை தலையை உயர்த்தவே இல்லை. இறுதிச் சொல்லுக்குப் பிறகுதான் அவரைப் பார்த்தேன். அவர் குதூகலத்துடன் இரு கைகளையும் மார்பளவுக்கு உயர்த்தி வேகவேகமாகத் தட்டினார். அவரைத் தொடர்ந்து சுற்றியிருந்தவர்கள் அனைவருமே கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
“ஏற்ற இறக்கம்லாம் ரொம்ப நல்லா இருக்குது ஆனந்தா. உனக்கு ரெண்டு ஸ்தாயியும் வருது. அது பெரிய வரம். உண்மையிலேயே நீ பெரிய பாட்டுக்காரன்” என்று என்னை அருகில் வரச்சொல்லி தட்டிக் கொடுத்தார்.
ஒருவர்
ஆயாவிடமிருந்து
ஒரு மந்தாரை இலை நிறைய கடலையை வாங்கி மடித்து எடுத்துவந்து பாட்டுக்காரர் முன்னால் வைத்து “சாப்புடுங்க சாமி” என்றார். பாட்டுக்காரர் அதை எங்கள் பக்கமாக இழுத்துவைத்து “ம், எடுத்துக்குங்க” என்றார். மேலும் தன்னுடைய தோள் பையைத் திறந்து அதிலிருந்து கொய்யாப்பழங்களை எடுத்து “இந்தாங்க, இதயும் எடுத்துக்குங்க” என்றார்.
எந்த
வகுப்பிலிருந்து
எந்த வகுப்புக்குச் செல்கிறோம், எந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறோம், எந்தப் பாடம் மிகவும் பிடிக்கும், எங்களுக்கு விருப்பமான பாடல்கள் எவைஎவை என்றெல்லாம் அவர் கேட்கக்கேட்க நாங்கள் பதில் சொல்லிக்கொண்டே இருந்தோம்.
திடீரென
அவர் “இங்க இவ்வளவு பெரிய இடம் இருக்குதே, நீங்க இங்க தாராளமா விளையாடலாமே. ஏன் சும்மா இருக்கீங்க?” என்று கேட்டார்.
“நீங்க வரவரைக்கும் விளையாடிட்டுதான் இருந்தோம்.”
“அப்படியா, என்ன விளையாட்டு?”
“கிட்டிப்புள்ளு”
“ஓ, அப்ப யாரு ஜெயிச்சி குதிரை ஏறனது?”
“அவன்தான்” நான் நாகராஜனைச் சுட்டிக் காட்டினேன்.
“சரி சரி. இன்னைக்கு நாம புதுசா பந்து விளையாடாமா?”
நாங்கள்
மெளனமாகி ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். எங்களிடம் பந்து இல்லை என்பதுதான் காரணம். “ஏன் முழிக்கறீங்க?” என்று கேட்டார் அவர்.
“எங்ககிட்ட பந்து இல்லயே”
அவர்
கொஞ்சம் கூட யோசிக்காமல் “அது ஒரு பிரச்சினையா? பந்த நாம உண்டாக்குவோம் ஆனந்தா” என்றார். உடனே மேடையிலிருந்து கீழே குதித்து உதிர்ந்திருந்த இலைகளையெல்லாம் சேகரித்தார். பக்கத்தில் வேலியோரமாக முளைத்திருந்த செடிகளிலிருந்தும் இலைகளைப் பறித்தார். தரையில் ஒரு அடி உயரத்துக்கும் மேலாக முளைத்திருந்த புற்களையெல்லாம் பிடுங்கியெடுத்தார். பிறகு பையில் வைத்திருந்த ஒரு துண்டில் அவையனைத்தையும் குவித்து அழுத்தி அழுத்திச் சுருட்டி
உருட்டி முடிச்சுபோட்டு ஒரு பந்துபோல மாற்றிவிட்டார். ”நல்லா இருக்குதா?” என்று எங்களைப் பார்த்து கேட்டுவிட்டு சிரித்தார்.
நான்
அதை வாங்கி உயரமாக தூக்கிப் போட்டுப் பிடித்தேன். அசலாக பந்துபோலவே இருந்தது. நாகராஜனும் வடிவேலும் வாங்கி ஒருவருக்கொருவர் தூக்கிப் போட்டு பிடித்தார்கள்.
“மூனு பேரு இந்த பக்கம் நில்லுங்க, மூனு பேரு அந்தப் பக்கம் நில்லுங்க. நான் நடுவுல. என்னால புடிக்க முடியாத அளவுக்கு ஒரு பக்கத்துலேந்து இன்னொரு பக்கத்துக்கு பந்த தூக்கி போடணும். நான் புடிச்சிட்டா யாரு போட்டாங்களோ, அவுங்க இந்த இடத்துக்கு வந்துடணும். சரியா?”
“இது குரங்கு பந்து ஆட்டம். எங்களுக்கு தெரியுமே”
“அப்பறமென்ன, ஆடுங்க”
மறுகணமே
அவர் நடுவில் நின்றுகொள்ள, நானும் சிவலிங்கமும் நாகராஜனும் ஒருபக்கம் நின்றோம். தண்டபானியும் கிரிதரனும் வடிவேலும் மற்றொரு பக்கம் நின்றார்கள்.
பந்து
மாறிமாறிப் பறந்தபடி இருந்தது. பாட்டுக்காரர் தாவித்தாவி முயற்சி செய்தார். ஆனால் அவர் ஒரு பந்தைக்கூட தடுத்துப் பிடிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவரைக் கடந்து பறந்துபோனது பந்து. அவர் உண்மையிலேயே குரங்கின் உடல்மொழியில் தாவித்தாவி ஏமாந்தார். பந்து தப்பிப் போகும் ஒவ்வொரு முறையும் ஐயையோ என்று கைகளை உதறியபடி தவித்துச் சிரித்தார். அதைப் பார்க்கப்பார்க்க எங்கள் வேகம் கூடியது. கடைசி
வரைக்கும் அவர் ஒருமுறை கூட பந்தை கைப்பற்றவே இல்லை. நாங்கள் வெற்றியில் துள்ளிக் குதித்தோம்.
மேடையில்
அமர்ந்திருந்தவர்கள்
எங்கள் திசையில் கைகாட்டிப் பேசிக்கொள்வதைக் கேட்டேன்.
“எந்த ஊரு இந்த ஆளு? கிறுக்கு மாதிரி இங்க வந்து இந்த புள்ளைங்களோட ஆடிகினிருக்கான்?”
“யாரோ நாடோடி. புள்ள இல்லாதவன்போல. புள்ளைங்கள பாத்ததும் ஏதோ வேகத்துலயும் பாசத்துலயும் ஆடறான்.”
“உடுங்கய்யா, நம்மாலதான் முடியல. யாரோ ஒருத்தன் செய்யறான். சந்தோஷமா செஞ்சிக்கடா சாமினு உட்டுட்டு போவாம, இதயெல்லாமா ஒரு பேச்சுனு பேசுவாங்க?”
எதிர்த்திசையிலிருந்து தண்டபானி பந்து வீசியபோது அது எங்கள் பிடிக்கும் அகப்படாமல் பறந்து சென்று கல்மேடையில் அவர்கள் முன்னால் சென்று விழுந்தது.
“கண்ணுமண்ணு தெரியாம என்னடா ஆட்டம் வேண்டிக் கெடக்குது? அடக்கம் ஒடுக்கமா ஆடுங்க. இல்லைன்னா வால ஒட்ட நறுக்கிடுவன்” என்று எச்சரித்துக்கொண்டே ஒருவர் தன்னிடமிருந்த பந்தை வீசினார்.
அவர்
வீசிய வேகத்தில் துண்டின் முடிச்சு தளர்ந்து அவிழ்ந்து இலைகள் விழுந்து சிதறின. காற்றுபோன பந்துபோல நாங்களும் தளர்ந்துவிட்டோம்.
“அடடா, பிரிஞ்சிடுச்சே” என்றபடி அதை எடுத்துக்கொண்டு பாட்டுக்காரருக்கு முன்னால் போய் நின்றேன். எனக்கு மூச்சு வாங்கியது. அவருக்கும் மூச்சு வாங்கியது. நெற்றியிலும் கழுத்திலும் வேர்வை கோடாக அரும்பியது.
”இன்னைக்கு இது போதும். நாளைக்கு பிஞ்சி போகாத அளவுக்கு கெட்டியா பந்து செஞ்சி வைக்கறேன். அதுக்கப்பறம் விளையாடலாம். சரியா?” என்றபடி சாலையோரமாகச் சென்று துண்டை உதறினார். உள்ளேயிருந்த இலைகள் தரையில் சிதறி விழுந்தன.
மறுபடியும்
அனைவரும் மேடைக்குச் சென்று அமர்ந்து பேசத் தொடங்கினோம்.
வெப்பம்
தாளாமல் அவர் உடலிலிருந்து வியர்வை வழிந்துகொண்டே இருந்தது. “புழுக்கத்துல வேர்த்துகினே இருக்குது. எங்கனா ஏரியில கொளத்துல எருமைக்கன்னுக்குட்டி மாதிரி கெடந்தா நல்லா இருக்கும்னு தோணுது” என்றார்.
“இங்க பக்கத்துலதான் ஏரி இருக்குது. அதுல குளிக்கலாம்” என்றான் சிவலிங்கம்.
“ரொம்ப தூரமா?”
“அதெல்லாம் இல்ல. அதோ அங்க பனைமரங்கள் வரிசையா தெரியுது பாருங்க. அதுதான் ஏரிக்கரை”
நான்
கைகாட்டிய இடத்தை அவர் அப்போதே திரும்பிப் பார்த்துவிட்டார்.
“இப்ப கோடை காலமாச்சே. தண்ணி இருக்குதா?”
“எங்க ஊர் ஏரியில எல்லா காலத்துலயும் தண்ணி இருக்கும்”
“அப்ப கெளம்புங்க போவலாம்” அவர் சட்டென்று ஆர்மோனியத்தைக் கட்டி பைக்குள் வைத்தார். நான் அந்தப் பையை கையை நீட்டி வாங்கி என் கழுத்தில் முன்பக்கமாக தொங்கும்படியாக மாட்டிக்கொண்டேன். சிவலிங்கம் இரண்டாவது பையை எடுத்துக்கொண்டான்.
பாட்டுக்காரர் முன்னால்
செல்ல, நாங்கள் அனைவரும் அவரைப் பின்தொடர்ந்து நடந்தோம்.
“ஆளு பெரிய மாயக்காரனா இருப்பான்போல. ஒரு மணி நேரத்துல நம்ம ஊரு புள்ளைங்களைலாம் வாரி தூக்கி தோள்மேல வச்சிகிட்டான்.”
“எந்த ஊருகாரன்னு கூட தெரியல. இங்க வந்ததுமே இங்கயே நாலஞ்சி பரம்பரயா வாழற ஆளுமாதிரி நடந்துக்கறான்.”
மேடையில்
அமர்ந்தவர்கள்
தமக்குள் எதைஎதையோ பேசிக்கொண்டார்கள்.
ஏரி
கடல்போல விரிந்திருந்தது. காற்றில் படபடத்து நெளியும் பட்டாடைபோல சிற்றலைகள் அசைந்தபடி இருந்தன. கரையை ஒட்டி ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. ஏராளமான புதர்கள். ”ஐயோ, இவ்வளவு தண்ணியா? இந்த வெயில் காலத்துலயும் இந்த மாதிரி தண்ணிய பாக்கறதுக்கே சந்தோஷமா இருக்குது” என்றார் பாட்டுக்காரர்.
கரைக்குச்
சென்றதும் எல்லோரும் ஆடைகளைக் களைந்தார்கள். பாட்டுக்காரரின் பைகள் இறக்கிவைக்கப்பட்டன. எல்லோரும் வேகவேகமாக ஆடைகளைக் களைந்த சமயத்தில் நான் அமைதியாக நின்றிருந்தேன்.
“ஏன் தம்பி, நீ குளிக்க வரலையா?” என்று கேட்டார் பாட்டுக்காரர்.
“எனக்கு நீச்சல் தெரியாது.”
“ஓ. அப்ப பாட்டுதான் தெரியும். நீச்சல் தெரியாதா?”
“நான் இந்த துணிமணிங்க, பொட்டி எல்லாத்தயும் பாத்துகிட்டு கரையிலயே இருக்கறேன். நீங்க எல்லாரும் சீக்கிரமா குளிச்சிட்டு சீக்கிரமா வாங்க”
அவர்கள்
ஒவ்வொருவராக ஏரிக்குள் தாவினார்கள். பாட்டுக்காரர் மல்லாந்து படுத்துக்கொண்டு கைகளை விரித்து நீந்தியபடி வட்டமடித்தார். அதைப் பார்த்ததும் சிவலிங்கமும்
மற்றவர்களும் அவரைப் போலவே நீந்திக்கொண்டு அவரோடு வட்டமடித்தார்கள்.
நாகராஜன்
மட்டும் தனியாகக் கரைக்கு நீந்திவந்து ஆலமரத்தின் மீதேறி தண்ணீர்ப்பரப்பின் மீது தாழ்வாக வளைந்து சென்ற கிளையின் மீது நடந்து சென்று அங்கிருந்து செங்குத்தாக தண்ணீருக்குள் குதித்தான். உடனே ஊற்றென தண்ணீர் மேலே பொங்கித் தணிந்தது. பாட்டுக்காரர் கைதட்டிச் சிரித்தார். நாகராஜன் தண்ணீருக்குள்ளேயே நீந்தி அவருக்கு அருகில் சென்று நின்றான்.
சிவலிங்கமும்
கிரிதரனும் தண்டபானியும் வடிவேலும் ஒவ்வொருவராக கரைக்கு வந்து நாகராஜனின் வழியைப் பின்பற்றி ஆலமரத்தில் ஏறி கிளையில் நடந்து சென்று ஒவ்வொருவராக எம்பிக் குதித்தார்கள்.
சிறிது
நேரத்தில் அவர்கள் அனைவரும் தண்ணீருக்குள்ளேயே பிடிக்கிற ஆட்டத்தைத் தொடங்கிவிட்டதுபோலத் தெரிந்தது. ஒவ்வொருவராக தண்ணீருக்குள் மூழ்கி மறைய ஒருவர் மட்டும் ஆளைத் தேடி நான்கு திசைகளிலும் அலைந்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில் நீச்சலைக் கற்றுக்கொள்ளாமல் போனோமே என்று மனம் வேதனையில் ஆழ்ந்தது. அதையெல்லாம் கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று தொடக்கத்திலேயே தடுத்துவிட்ட அம்மாவின் மீது கோபமாக வந்தது.
தண்ணீருக்குள் யாரோ
ஒருவர் அகப்பட்டுவிட்டார். ஓவென்ற சத்தத்திலிருந்து உணரமுடிந்தது. பாட்டுக்காரர் சின்னப் பையனைப்போல எல்லோருக்கும் நடுவில் நீந்திக்கொண்டிருந்தார்.
கண்கள்
சிவக்கச்சிவக்க
நீண்ட நேரத்துக்குப் பிறகு ஒவ்வொருவராக கரைக்கு வந்து சட்டையாலேயே ஈரத்தைத் துடைத்துக்கொண்டு, பிறகு அதையே உதறிவிட்டு அணிந்துகொண்டார்கள். நான் ஆர்மோனியப் பெட்டியை வைத்திருக்கும் பையை கழுத்தில் மாட்டிக்கொண்டேன்.
ஏரிக்கரையில்
இறங்கும் நேரத்தில் சிவலிங்கம் என்னைப் பார்த்து “டேய், இந்த ஆர்மோனியப் பொட்டிய கழுத்துல தொங்க உட்டுகினு நடக்கும்போது எப்பிடி இருக்குது தெரிமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.
“எப்பிடி இருக்குது?” நான் ஆச்சரியத்தோடு அவன் பக்கம் திரும்பினேன்.
“நாடோடி படத்துல இந்த மாதிரிதான் ஒரு பொட்டிய கழுத்துல மாட்டிகினு எம்ஜியாரு பாட்டு பாடுவாரு”
“டேய்..” ஆட்காட்டி விரலை அவனை நோக்கி நாணத்துடன் அசைத்தேன்.
“நாடு, நாடு, அதை நாடு, அதை நாடு, அதை நாடாவிட்டால் ஏது வீடு?”
“சிவலிங்கம், இப்ப நீ அடிவாங்க போற?”
“பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு, மானம் பெரிதென்று வாழும் பண்பாடு”
நான்
அவனைப் பார்க்கவே இல்லை. அவன் பாடுவது எதுவும் என் காதில் விழவே இல்லை என்பதுபோல எங்கோ வேறு திசையில் பார்த்தபடி நடந்தேன்.
பாட்டுக்காரர் சிவலிங்கத்தின் தோளைத்
தொட்டு “நீயும் சின்ன பையன்தான? கிண்டல் போதும் விடு. சங்கீதம் கத்துக்கறதுக்கு முன்னால நாம கத்துக்க வேண்டிய விஷயம் இங்கிதம். தெரியுதா?” என்றார்.
அக்கணமே
அவன் ஏற்றுக்கொள்வதுபோன்ற புன்னகையுடன்
தலையசைத்து நிறுத்திவிட்டான். பிறகு நாணத்துடன் தலைகுனிந்தான்.
கல்மேடைக்கு
வந்ததும் ஆர்மோனியப்பெட்டியை இறக்கி வைத்தேன். அவர் அதை துணியில் வைத்துச் சுருட்டி தன் பைக்குள் வைத்துக்கொண்டார்.
“என்னடா வானரங்களா, ஆட்டத்துல யாருக்கும் பசிக்கலயா? வீடுன்னு ஒன்னு இருக்கறதயே மறந்துட்டிங்களா?”
கிழங்கு
விற்கும் ஆயா குரல் கொடுத்த பிறகுதான் எங்களுக்கு வீட்டின் நினைவே வந்தது. உடனே மேடையிலிருந்து கீழே குதித்தோம்.
“சாய்ங்காலமா வெயில் அடங்கனதுமே வந்துருவேன், நீங்க இங்கயே இருப்பீங்களா?” என்று பாட்டுக்காரரிடம் கேட்டேன்.
“ஏன் ஆனந்தா, என்ன சங்கதி?”
“அடுத்த வருஷம் பாட்டுப்போட்டியில பாடறதுக்கு எனக்கு ஒரு நல்ல பாட்டு சொல்லிக் கொடுக்கறீங்களா?”
“ஒன்னு என்ன? ரெண்டாவே சொல்லிக் கொடுக்கறன். போய்வா ஆனந்தா”
அதைக்
கேட்டதும் எனக்கு போட்டியில் அப்போதே வென்று பரிசைத் தட்டிக்கொண்டு வந்துவிட்ட மகிழ்ச்சி ஏற்பட்டது.
பாட்டுக்காரர் தானாகவே
அருகில் நின்றிருந்த மற்றவர்களிடம் “உங்களுக்கும்
கத்துக்கணுமா?” என்று கேட்டார். அவர்கள் உடனே ”ம்ஹூம்” என்று தலையசைத்தார்கள். “பாட்ட காதால கேக்கறதோட சரி. அதுக்கு மேல எந்த ஆசையும் இல்ல”
“ஏன்?”
“நமக்குலாம் ஃபுட் பால், பேஸ்கெட் பால், வாலி பால் மட்டும்தான். இறைக்க இறைக்க ஓடணும். குனியனும். நிமிரணும். மூச்ச இழுத்துக் கட்டி பாடறதுலாம் நமக்கு சரிப்பட்டு வராது” என்று தோளைக் குலுக்கினார்கள்.
பாட்டுக்காரர் சிரித்துக்கொண்டார்.
செல்லமாக அவர்கள் முதுகில் தட்டினார். நாங்கள் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம். நாகராஜனும் கிரிதரனும் அக்ரகாரத்தின் பக்கம் செல்ல வடிவேலுவும் தண்டபானியும் மேட்டுத்தெருவின் பக்கமாகச் சென்றார்கள். நானும் சிவலிங்கமும்
ஸ்டேஷன் தெருவில் இறங்கி நடந்தோம்.
வீட்டுக்குச்
சென்று திண்ணையில் உட்காரும்போதே வீட்டுக்குள்ளிருக்கும் அம்மாவை அழைத்து “காலையில மெட்ராஸ் ரயில் போவற நேரத்துக்கு போன ஆளு இப்பதாம்மா உள்ள வரான். எங்க போய் வரான்னு வந்து கேளும்மா. வேப்பூரானாட்டம் எங்கயோ சுத்தி அலஞ்சிட்டு வந்திருக்கான் பாரு” என்று சத்தமுடன் சொன்னாள் அக்கா.
அம்மா
வெளியே வந்து “வெயில்ல சுத்தாத, வெயில்ல சுத்தாதனு ஒனக்கு எத்தன தரம்டா சொல்றது? கருத்து கருவாடுமாதிரி வந்து நிக்கற? எங்க போன?” என்றாள்.
“எங்கயும் போவலைம்மா. அங்கதான் அரசமரத்துங்கிட்ட பசங்களோட நெழல்லதான் ஆடிகினிருந்தன்.”
நான்
கைகால்களைக் கழுவிக்கொண்டு வந்து சாப்பிட உட்கார்ந்தேன். தட்டில் சோற்றைப் பார்த்ததுமே பசித்தீ கொழுந்துவிட்டெரிந்தது. நெத்திலி மீன் குழம்பை ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டு முடித்தேன்.
“அம்மா, இன்னும் கொஞ்சம் சோறு”
“மீன் குழம்புன்னா ஒன் கொடலு கூட ரெண்டடி நீண்டு போய்டுமே?”
அம்மா
சிரித்துக்கொண்டே
வந்து சோற்றை வைத்து குழம்பூற்றினாள். “தாராளமா ஊத்தும்மா” என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன். “கொஞ்சமாச்சிம் வெக்கம் இருக்குதா பாரு, ஒம் புள்ளைக்கு? என்ன சொன்னாலும் இந்த காதுல வாங்கி அந்த காதுல உட்டுருவான்” என்று திண்ணையிலிருந்தே பழித்தாள் அக்கா.
கைகழுவிக்கொண்டு திண்ணைக்கு
வரும்போதே அம்மா என்னை மடக்கி பக்கத்தில் உட்காரவைத்தாள். “எங்கயும் போயிடாத ராசா? அரிசியும் உளுந்தும் நெறய வந்திருக்குது அரைக்கறதுக்கு. நீதான் அம்மாவுக்கு கொஞ்சம் ஒத்தாசயா ஏந்திரம் சுத்தணும்” என்றாள்.
“ஏன் அக்காவுக்கு என்னாச்சி? நல்லா உலக்கை மாதிரிதான இருக்குது” நான் அவளைப் பார்த்தேன். திண்ணையில் குறுக்காக ஒரு உலக்கையை வைத்துவிட்டு அதன் மறுபக்கத்தில் அவள் பாயில் படுத்திருந்தாள்.
“அவளால ஒக்காந்து அரைக்கமுடியாதுடா தங்கம். அம்மா சொல்ற பேச்ச கேளுடா”
“சரி சரி, சுத்தறன். ரொம்ப கொஞ்சாத. ஆனா அஞ்சி மணிக்குலாம் என்ன விட்டுடணும். அங்க வெளயாடறதுக்கு பசங்க வந்து காத்திட்டிருப்பானுங்க”
சாக்கையும்
செய்தித்தாட்களையும்
விரித்து அதன் மீது எந்திரத்தையும் உருட்டிச் சென்று வைத்துவிட்டு அம்மா எனக்காகவே காத்திருந்தாள். நான் அக்காவைப் பார்த்து முணுமுணுத்தபடி எந்திரத்தின் அச்சைப் பிடித்து சுற்றத் தொடங்கினேன். அம்மா அரிசியை சீராக குழிக்குள் போட்டபடி இருந்தாள்.
எல்லாவற்றையும் மாவாக்கி,
பைகளில் நிரப்பி ஒவ்வொருவருடைய வீட்டுக்கும் சென்று கொடுத்துவிட்டு திரும்புவதற்குள் பொழுது சாய்ந்துவிட்டது.
சாமிக்கண்ணுக்
கவுண்டர் வீட்டைக் கடக்கும்போது குனிந்து அவர் வீட்டுக் கடிகாரத்தில் மணி பார்த்தேன். இரண்டு முள்களும் சேர்ந்து ஒரே குத்துக்கோடாக தெரிந்தது. மணி ஆறு.
கால்களில்
ஒட்டியிருந்த மாவுப்புழுதியை எல்லாம் கழுவித் துடைத்துவிட்டு கல்மேடைக்கு ஓடினேன். நெருங்க நெருங்க ஆர்மோனியத்தை இசைக்கும் சத்தம் கேட்டது. நண்பர்கள் ஐந்து பேரும் அங்கே நிற்பதைப் பார்த்தேன். ஓட்டமாக ஓடி மேடை மீது ஏறி நின்றேன். ஆர்மோனியத்தின் மீது பாட்டுக்காரரின் விரல்கள் தன்னிச்சையாக படர்ந்தபடி இருக்க அவர் பிள்ளையாரையே பார்த்துக்கொண்டிருந்தார். பிள்ளையாரின் முன்னிலையில் ஓர் அகல்விளக்கு எரிந்தது. ’சரணம் சரணம் கணபதியே சக்தியின் மைந்தா கணபதியே’ என்று மனமுருகிப் பாடிக்கொண்டிருந்தார் அவர். நான் சிவலிங்கத்துக்கு அருகில் நின்று ”எத்தனாவது பாட்டு?” என்று சைகையால் கேட்டேன். “இதான் முதல் பாட்டு” என்று அவனும் சைகையாலேயே பதில் சொன்னான். நான் பாட்டின் இனிமையில் மூழ்கத் தொடங்கினேன். மேடையில் எங்கள் ஆறு பேரைத் தவிர கிழங்கு விற்கும் ஆயாவும் இன்னும் இரண்டு ஆண்களும் நின்றிருந்தனர். மேட்டுத் தெருவிலிருந்து இரண்டு கிழவர்கள் மெதுவாக நடந்து வந்து சேர்ந்துகொண்டார்கள்.
நான்
பாட்டுக்காரரின்
கண்களைப் பார்த்தேன். கனிவும் பக்தியும் கலந்த பார்வை. அவர் இந்த உலகத்திலேயே இல்லை. முதல் பாட்டு முடிந்ததுமே ’ஆனை முகத்தான், அரன் ஐந்து முகத்தான் மகன், ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்’ என அடுத்த பாட்டைத் தொடங்கிவிட்டார் அவர். அகல்விளக்கின் சுடரொளியில் பிள்ளையாரின் தந்தத்தின் மேட்டிலும் நெற்றியிலும் பளீரென மின்னுவதுபோல ஒரு கோடு படிந்திருந்தது.
தற்செயலாக
என் பார்வை திரும்பிய சமயத்தில் அக்ரகாரத்திலிருந்து நந்தகுமாரை துணைக்கு அழைத்துக்கொண்டு ருக்மிணி மாமி வருவதைப் பார்த்தேன். அவர் கல்மேடையை நெருங்கி படிக்கட்டு வழியாக மேடையில் ஏறி பிள்ளையாருக்கு முன்னால் நின்று கைகுவித்தாள். நீண்ட நேரத்துக்குப் பிறகு தற்செயலாகத் திரும்பும்போது என்னைப் பார்த்து ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்தினாள். புன்னகையுடன் நான் மாமிக்கு வணக்கம் சொன்னேன். நந்தகுமாரின் உதடுகளிடையில் ஒரு கோடுபோல புன்னகை பரவி விரிந்தது.
ஆர்மோனியத்தின் இசை
மட்டுமே சில கணங்கள் நீடித்தன. மேல்கட்டைகளை மாறிமாறி அழுத்தியபடி அவர் வேறொரு பாட்டை யோசிப்பதுபோலத் தோன்றியது. அடுத்த கணமே அவர் ‘ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன சந்நிபம் லம்போதரம் விசாலாட்சம் வந்தேம் கணநாயகம்’ என்று தொடங்கினார். அந்த அமைதியான பொழுதில் அவர் குரல் எங்கெங்கும் பரவி நிறைந்தது. அக்ரகாரத் தெருவிலிருந்து இன்னும் சிலர் வந்து
கூட்டத்தில் நின்றார்கள்.
(தொடரும்)