Home

Wednesday 24 June 2020

தனிவழி - 2 - சிறுகதை


பாட்டு முடிந்ததன் அடையாளமாக அவர் தன் தோளிலிருந்து ஆர்மோனியத்தைக் கழற்றி கீழே வைத்தார். ருக்மிணி மாமி தன் பூசைப் பையிலிருந்து ஒரு துண்டு கற்பூரத்தை எடுத்து பிள்ளையாருக்கு முன்னால் வைத்து ஏற்றினாள். தீபம் சுடர்விட்டு எரியும்போது அனைவரும் கண்மூடி வணங்கினார்கள். கற்பூரம் எரிந்து முடிந்ததும் ஒவ்வொருவராக பிள்ளையார் முன்னால் விழுந்து வணங்கிவிட்டு இறங்கி நடந்தார்கள். ”ரொம்ப நன்னா பாடறேள். கேக்கறச்சே பகவானே பக்கத்துல வந்து நின்னாப்புல தோணித்து. மனசு அப்படியே அடங்கி சாந்தமாய்டுத்து. தட்டாம இத நீங்க வாங்கிக்கணும்என்றபடி ருக்மிணி மாமி தன் பையிலிருந்து இரண்டு மாம்பழங்களை எடுத்து பாட்டுக்காரரிடம் கொடுத்தார். பாட்டுக்காரர்  அதை புன்னகையுடன் வாங்கி வைத்துக்கொண்டார். கிழங்குக்கார ஆயா, கூடையில் எஞ்சியிருந்த கிழங்குகளை ஒரு மந்தாரை இலையில் வைத்து எடுத்து வந்து பாட்டுக்காரரிடம் கொடுத்தாள். அவர் அதையும் வாங்கி வைத்துக்கொண்டார். எங்களைத் தவிர ஒவ்வொருவராக அனைவரும் அங்கிருந்து கலையத் தொடங்கினார்கள்.

இருள் கவியத் தொடங்கியது. யாரோ ஒருவர் கோவில் வாசலிலிருந்து இறங்கி வந்து பாட்டுக்காரரிடம்அங்க கோவில் வாசலுக்கு வந்து பாடணுமாம். சொல்லி அனுப்பனாஎன்றார். பாட்டுக்காரர் அவரை நிமிர்ந்து பார்த்துநான் முடிச்சிட்டேனே. இதுக்கு மேல என்ன பாட்டு?” என்று கேட்டார். அவருக்குப் புரியவில்லை. சிறிது நேரம் தடுமாறினார். சரியாகச் சொல்லவில்லையோ என நினைத்துஅங்க வந்து பாடினா நன்னா இருக்கும்னு சொன்னா. ஏதாச்சிம் குடுக்கச் சொல்றேன். வாங்கோஎன்றார். பாட்டுக்காரர் பதிலே சொல்லவில்லை. அவரைப் பார்த்து சிரித்துக்கொண்டேபோ போஎன்றபடி சைகை செய்தார். அவர் அதை நம்பமுடியாதவராக விலகிச் சென்றார்.
முற்றிலும் இருள் கவிந்துவிட்டது. ”பிள்ளைகளா, கெளம்புங்க. இருட்டிடுச்சி. இனிமே நீங்க இங்க இருக்கவேணாம்என்று எங்களிடம் சொன்னார் பாட்டுக்காரர். பிறகு ஒரு பழம், ஒரு கிழங்கை மட்டும் தனக்கென வைத்துக்கொண்டு எஞ்சியவற்றை எங்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டார்.
எங்க படுத்துக்குவிங்க நீங்க?” என்று பீதியுடன் அவரிடம் கேட்டேன்.
இங்கதான். பிள்ளையாருக்கு பக்கத்துலயேஎன்றபடி அவர் புன்னகைத்தார். என் தோள் மீது கை வைத்துஒனக்காக ஒரு பாட்டு யோசிச்சி வச்சிருக்கேன். நாளைக்கு சொல்லித் தரேன்என்று சொன்னார். அதைக் கேட்டு எனக்குள் சற்றே ஏமாற்றம் படர்ந்தாலும் புன்னகையுடன் சரி என்று தலையசைத்துக்கொண்டேன்.
இங்க தனியா படுக்க ஒங்களுக்கு பயமா இருக்காதா?”
நான் தனியா இருப்பேன்னு யாரு சொன்னா? இந்த மரம், இந்த செடி, இந்த மேடை, இந்த பிள்ளையார் எல்லாருமே எனக்கு துணையா இருப்பாங்க. எனக்கு ஒன்னும் பயமில்லை. போய் வாங்க
மறுநாள் காலையில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு பழைய சோற்றைச் சாப்பிட்டுவிட்டு சட்டை மாற்றிக்கொண்டு கிளம்பினேன். “தொர எங்க கெளம்பிட்டாரு? எந்த ஆபீஸ்ல கையெழுத்து போடப் போறாரு?” என்று  கேட்டாள் அக்கா. “நா எங்க போனா ஒனக்கென்ன? நான் ஒன் வழிக்கு வரலை. நீயும் என் வழிக்கு வராதஎன்று கறாராகச் சொன்னேன். அவள் உடனேஅம்மா, இங்க வந்து பாரு. எங்கடா போறன்னு கேட்டா ஒனக்கென்னன்னு கேக்கறான்என்று சத்தம் போட்டு அம்மாவை வரவழைத்துவிட்டாள். “என்னடா சத்தம்? ஒங்க ரெண்டு பேருக்குள்ள என்னடா ஒரே போராட்டமா இருக்குதுஎன்றபடி அம்மா வந்து நின்றாள்.
எங்கடா கெளம்பிட்ட?” என்று அம்மா கேட்டாள்.
வெளயாடறதுக்கும்மா. தண்டபானிலாம் வந்து அங்க காத்துகினிருப்பாங்க. நேத்து சாய்ங்காலமே போவலாம் போவலாம்ன்னு ஆறுமணிக்கு அனுப்பன. அதுக்குள்ள அவுங்கள்லாம் ஆடி முடிச்சிட்டாங்க தெரியுமா?” சொல்லிக்கொண்டு வரும்போதே எனக்கு தொண்டை அடைத்தது. அம்மா ஒன்றும் பேசமுடியாமல் திகைத்து நின்றாள்:.
சரி சரி போடா. போய்ட்டு சாப்பாட்டு நேரத்துக்கு சரியா வந்துரு.”
நான் தலையசைத்துவிட்டு ஓரக்கண்ணால் அக்காவுக்கு அழகு காட்டிவிட்டு கல்மேடைக்கு ஓடினேன். தொலைவிலிருந்து பார்க்கும்போதே பாட்டுக்காரரும் மற்றவர்களும் சேர்ந்திருக்கும் காட்சி தெரிந்தது. நான் வேகமாகச் சென்று சிவலிங்கத்துக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டேன்.
இன்னைக்கு காலையிலயே அவர் ஏரியில குளிச்சாராம்டா. இந்தக் கரையிலேந்து அந்தக் கரை வரைக்கும் போய் வந்தாராம்சிவலிங்கம் ஆச்சரியத்தைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் சொன்னான். நான்அப்படியா?” என்று கேட்டபடி பாட்டுக்காரரை நோக்கித் திரும்பினேன். “தம் கட்டி நீச்சலடிச்சிகினே போய்ட்டேன். நான் பார்க்காத ஏரியா ஆறா?” என்றார் அவர்.
அப்ப மத்யானம் குளிக்க முடியாதா?” என்று ஏக்கத்துடன் கேட்டான் சிவலிங்கம்.
யாரு சொன்னா? ஏரியில காலையில குளிச்சவங்க மத்தியானம்  குளிக்கக்கூடாதுனு சட்டம் ஏதாச்சிம் இருக்குதா என்ன? நாம எல்லாருமே போய் மத்யானம் குளிக்கறோம். சரிதானா?”
என்று மகிழ்ச்சியில் எல்லோரும் சத்தமிட்டோம். அவர் தன் பையிலிருந்து புதிதாக அவர் செய்து வைத்திருந்த பந்து உருளையை எடுத்து வெளியே வைத்தார். உருண்டையாக அது அழகாக பந்து போலவே இருந்தது.
சரி, இப்ப பந்து விளையாடலாமா, ஆனந்தனுக்கு பாட்டு சொல்லிக்கொடுக்கலாமா?”
நான் உடனேபாட்டு பாட்டுஎன்றேன். மற்றவர்கள்பந்து பந்துஎன்றார்கள். அவர் சிரித்துக்கொண்டார். “சரி, ஒரு சின்ன பாட்டுதான். அவன் கத்துகிடட்டும். அப்பறமா ஆடலாம்என்றபடி என்னைப் பார்த்தார். 
நாங்கள் அவர் முன்னால் நெருங்கி உட்கார்ந்தோம். அவர்தீராத விளையாட்டு பிள்ளைஎன்று தொடங்கினார். அவர் ஒவ்வொரு சரணமாகப் பாடி முடித்ததும் நான் அதைத் திருப்பிப் பாடினேன். மிக எளிய சொற்கள். இரண்டு முறை மீண்டும் மீண்டும் பாடியதுமே மனத்தில் பதிந்துவிட்டது. பழத்தைக் கொடுத்துவிட்டு தட்டிப் பறிக்கிற காட்சியையும்  எட்டாத உயரத்தில் தின்பண்டங்களை வைத்துவிட்டு ஏமாற்றும் காட்சியையும் அந்த விவரிப்பிலேயே உணர முடிந்தது. ”இவ்ளோ போதும். இந்தப் பாட்டு ரொம்ப நீளமான பாட்டு. நீ சின்ன பையன்தான? உனக்கு அவ்ளோ வேணாம். சுருக்கமா போதும். சரியா?” என்றபடி அவர் அத்துடன் நிறுத்திக்கொண்டார்.
பாட்டை முடித்ததுமே நாங்கள் பந்து விளையாடத் தொடங்கினோம்.  பந்துக்காக எம்பிக் குதிக்கும்போதெல்லாம் எனக்கு தேனொத்த பண்டங்கள் கொண்டுஎன்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்என்னும் வரியே மனத்தில் ஓடியது. அந்தப் பண்டத்துக்கு எம்பிக் குதிப்பவனாகவே நான் என்னை நினைத்துக்கொண்டேன்.
பந்து விளையாட்டு நடந்துகொண்டிருக்கும்போதே மேட்டுத் தெருவிலிருந்து ஒரு ஆயா வந்து பாட்டுக்காரருக்கு  வணக்கம் சொன்னாள். அவளுக்குப் பின்னால் ஒரு சிறுவன் நின்றிருந்தான். அவன் முகம் சற்றே கோணலாகி வேறொரு திசையில் பார்ப்பதுபோல இருந்தது.
என்ன ஆயா?”
ஆயா ஒரு பதிலும் சொல்லாமல் சட்டென்று வளைந்து பாட்டுக்காரரின் பாதங்களில் விழுந்துவிட்டாள். ”ஆயா, என்ன செய்றீங்க? ஏந்திருங்க ஏந்திருங்கஎன்றபடி அவளைத் தொட்டு தூக்கி நிறுத்தினார் பாட்டுக்காரர்.
சாமி, இது என் பேரப்புள்ள சாமி. அம்மா அப்பா இல்லாத புள்ள சாமி. மூள சரியில்ல. நின்னா நின்ன இடம். உக்காந்தா உக்காந்த இடம். அவன் யாருக்கும் சம்பாதிச்சி கிம்பாதிச்சி கொட்ட தேவல. அவன் வேலய அவனா பாத்துக்கற அளவுக்கு கொஞ்சம் மூள இருந்தா போதும் சாமி. நீங்கதான் அவனுக்கு ஒரு வழிய காட்டணும்ஆயா அழுதுகொண்டே மீண்டும் அவர் காலில் விழப்போனாள்.
பாட்டுக்காரரின் முகத்தில் ஒரு வேதனை படர்ந்தது. ஒன்றும் பேச முடியாமல் ஒருகணம் தலை குனிந்திருந்தார். ஆயாவுக்குப் பின்னால் நின்றிருந்த சிறுவனுக்கு அருகில் சென்று அவனை அணைத்துத் தழுவி முத்தம் கொடுத்தார்.
அம்மா, நீங்க ஒரு நல்ல வைத்தியர பாருங்கம்மா. அவராலதாம்மா இத குணப்படுத்த முடியும்.  நான் வெறும் பாட்டுக்காரன். நான் என்னம்மா செய்யமுடியும்?”
அப்படி சொல்லாதீங்க சாமி. நீங்க பாடனா சாமிக்கு கேக்கும். இந்த புள்ளைக்காக நீங்க சாமிகிட்ட ஒரு பாட்டு பாடணும்.”
அவர் அதைக் கேட்டு பெருமூச்சு விட்டார்.
சரி, நான் பாடறன். ஆனா நீங்க நல்ல வைத்தியருகிட்ட காட்டணும். அத செய்விங்கன்னு சொன்னாதான் நான் பாடுவேன்
செய்றன் சாமி. நிச்சயமா செய்றன்
பாட்டுக்காரர் அந்தச் சிறுவனை தூக்கிக்கொண்டு கல்மேடைக்குச் சென்றார். பிள்ளையார் முன்னால் உட்காரவைத்துவிட்டு ஆர்மோனியப் பெட்டியை எடுத்தார். அவர் கண்கள் தளும்புவதை என்னால் பார்க்க முடிந்தது. துருத்தியை அழுத்தி கட்டைகளை மீட்டி சுரங்களை எழுப்பினார். ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோஎன்று பாடத் தொடங்கினார். அதைப் பாடி முடிக்கும்போது எல்லோருடைய விழிகளிலும் கண்ணீர் வழிந்தபடி இருந்தது. யாரும் எதிர்பாராத விதமாக அவர்எங்கு நான் செல்வேன் ஐயா நீர் தள்ளினால் எங்கு நான் செல்வேன் ஐயா  என்று தொடங்கிவிட்டார். அதையும் முடித்துதசரதாத்மஜம்பாடிய பிறகே நிறுத்தினார். அங்கிருந்த திருநீற்றை எடுத்து சிறுவனின் நெற்றியில் பூசிவிட்டார்.
ஆயா தன் பையிலிருந்து இரண்டு ரூபாயை எடுத்து அவர் காலடியில் வைத்துவிட்டு வணங்கிய பிறகு சிறுவனை அழைத்துக்கொண்டு மேடையிலிருந்து இறங்கினார். மேட்டுத்தெருவிலிருந்து இருபது முப்பது பேர்களுக்கும் மேற்பட்ட ஒரு கூட்டம் வந்து அங்கு நின்றிருப்பதை அப்போதுதான் பார்த்தேன்.
அவர்கள் அனைவரும் ஒரே குரலில்ஐயா, எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்க ஐயாஎன்று கேட்டனர். அதைக் கேட்டு அவர் முகத்தில் சற்று முன்னர் திரண்டிருந்த துயரம் மறைந்து புன்னகை அரும்பியது.
பாட்டுதான? இதோ பாடறேன்என்றபடி ஆர்மோனியத்தை மீட்டத் தொடங்கினார். அந்த மீட்டல் ஒரு தாளமாக மாறிய கணத்தில்பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குதுஎன்று பாடல் வரியை இணைத்துக்கொண்டார்.
பாட்டு முடிந்ததும் அனைவரும் நின்ற இடத்திலேயே பாட்டுக்காரரைப் பார்த்து கும்பிட்டபடி தரையில் விழுந்து வணங்கினர். ஒரு சொல்லும் இல்லாமல் பாட்டுக்காரர் அனைவரையும் பார்த்து தலைதாழ்த்தி வணங்கினார். பிறகு ஆர்மோனியப் பெட்டியை இறக்கி துணிக்குள் வைத்து மூடி பைக்குள் வைத்தார். நான் அதை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டேன்.
பிள்ளைகள் ரொம்ப நேரமா நீச்சலடிக்கறதுக்கு எனக்காக காத்திட்டிருக்காங்க. நான் கெளம்பறேன்?” என்று சொல்லிவிட்டு எங்களோடு வேகவேகமாக ஏரிக்கரைக்கு நடந்தார்.  மேட்டுத்தெரு மக்களும் அங்கிருந்து கலைந்து  சென்றார்கள்.
போன வேகத்தில் அனைவரும் ஆடைகளைக் களைந்துவிட்டு ஏரிக்குள் இறங்கிவிட்டனர். ஒரே கொண்டாட்டம்.
உண்மையாவே காலையில நீங்க அந்தக் கரை வரைக்கும் போனீங்களா?” என்று சத்தமாகக் கேட்டான் சிவலிங்கம்.
ஆமா
நடு ஏரில ரொம்ப ஆழமா?”
ஆமா
இப்ப இன்னொரு தரம் போவலாமா?”
இப்ப வேணாம். வெயில்ல உடம்பு சோர்ந்து போயிடும்.”
அவர்கள் முகம் வாட்டமடைவதைப் பார்த்துவிட்டுஇப்ப நான் உங்களுக்கு ஒரு வேடிக்க செஞ்சி காட்டறன், வாங்கஎன்றார்.
வேடிக்கை என்றதும் அவர்கள் முகம் மலர்ந்தது.
இங்க பாருங்க, நான் இங்க முழுகி அதோ அங்க எழுந்திருப்பேன். பாக்கறீங்களா?” என்று கேட்டார். “உண்மையாவா?” என்று வாயைப் பிளந்தான் வடிவேலு.
இப்ப பாருஎன்றபடி அவர் தண்ணீருக்குள் முழுகினார். அவர் எந்தப் பக்கம் சென்றிருப்பார் என எல்லோரும் திகைத்துக்கொண்டிருக்கும் போது அவர் ஏற்கனவே சொன்ன புள்ளியில் தண்ணீருக்கு மேலே வந்தார். அதே போல மீண்டும் அங்கே மூழ்கி இந்தப் புள்ளிக்கு வந்து தண்ணீருக்கு மேலே எழுந்தார்.
கண்கள் சிவக்கும் வரைக்கும் தண்ணீருக்குள்ளேயே கிடந்துவிட்டு அவர்கள் மெதுவாக கரைக்கு வந்தார்கள்.
கல்மேடைக்கு வந்ததும் எங்களுக்கு அவர் ஒரு கதையைச் சொன்னார். அதற்குப் பிறகு பையிலிருந்து கொய்யாப்பழங்களை எடுத்து ஆளுக்கொன்று கொடுத்தார்.
மதிய உணவுக்காக அனைவரும் அவரவர் வீட்டுக்குப் பிரிந்து செல்ல, நானும் சிவலிங்கமும் பேசிக்கொண்டே ஸ்டேஷன் தெருவில் இறங்கி வீட்டுக்கு நடந்தோம்.
திண்ணையில் உலக்கையைத் தடுப்பாக்கி மறுபக்கத்தில் அக்கா திண்ணையில் சாய்ந்தபடி தனியாக பல்லாங்குழி விளையாடிக்கொண்டிருந்தாள்.
என்னக்கா, ஒத்தையில நீயே பல்லாங்குழி ஆடிக்கற?”
சத்தத்தைக் கேட்ட பிறகே அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். சலிப்போடுஎன்ன செய்யமுடியும் தம்பி, நீ எப்ப பார்த்தாலும் கூட்டாளிங்க கூட்டாளிங்கன்னு ஏரிக்கரை பக்கமா ஓடிடற? என் கூட வேற யாரு இருக்காங்க ஆடறதுக்கு?” என்று கேட்டாள்.
அவள் பதிலை நான் பொருட்படுத்தவில்லை. அவளிடம் அடங்கிய குரலில்இன்னைக்கு நான் ஒரு பாட்டு கத்துட்டு வந்திருக்கேன் தெரியுமா?” என்றேன்.
அவள் ஆர்வத்தோடு பாட்டா, என்னடா பாட்டு?” என்று கேட்டாள்.
தீராத விளையாட்டு பிள்ளை
அப்படின்னா?” என்று என்னை கிண்டலுடன் பார்த்தாள்.
அவளுக்கு முதல் இரண்டு வரிகளை மட்டும் பாடிக் காட்டிவிட்டு  புடிச்சிருக்குதா?” என்று கேட்டேன்.
ரொம்ப நல்லா இருக்குதுடா தம்பி. ரேடியோவுல பாடறமாதிரி இருக்குது.”
நாளைக்கி உனக்கு முழுசா பாடிக் காட்டறேன்என்று சொல்லிவிட்டுஅம்மா அம்மாஎன்று ஆவலோடு அழைத்தபடி வீட்டுக்குள் சென்றேன்.
அதற்குள் அக்கா வாசலிலிருந்தேஅம்மா இல்லைடா. தேவி அக்கா வீட்டுக்கு போயிருக்காங்க. அங்க தட்டுல சோறு போட்டு மூடி வச்சிருக்காங்க பாரு. நீயே எடுத்து வச்சிகினு சாப்புடுஎன்று சொன்னாள். “சரி சரிஎன்று பதில் சொல்லிவிட்டு கைகழுவிக்கொண்டு வந்து சாப்பாட்டைச் சாப்பிட்டு முடித்தேன்.
திண்ணைக்கு வந்து அக்காவுடன் பல்லாங்குழி விளையாடினேன். “டேய், அந்த பாட்ட இன்னொரு தரம் பாடிக் காட்டுடாஎன்று கேட்டாள் அக்கா. நான் விளையாடிக்கொண்டே அந்தப் பாட்டின் மூன்று சரணங்களையும் பாடிக் காட்டினேன். “டேய் தம்பி, உண்மையிலயே நீ ரொம்ப நல்லா பாடறடாஎன்றாள் அக்கா. அம்மா ஒரு கூடையில் கேழ்வரகோடு வீட்டுக்கு வந்தாள்.
மாலை பொழுது இறங்கியதும் நான் கல்மேடைக்குச் சென்றேன்.  பிள்ளையாருக்கு எதிரில் ஏராளமான பூக்கள் குவிந்திருந்தன. செம்பருத்தி. நந்தியாவட்டை. மகிழம்பூ. அல்லி. அஞ்சுமல்லி. மூன்று தெருக்களைச் சேர்ந்தவர்கள் பலரும் ஏதோ ஊர்ப்பஞ்சாயத்துக்குக் கூடியிருப்பதைப்போல மேடைக்கு அருகில் நிறைந்திருந்தார்கள். சிலர் உட்கார்ந்திருந்தார்கள். சிலர் மரத்தடிகளில் நின்றிருந்தார்கள். அனைவரும் அமைதியாக பாட்டுக்காரரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். என்னால் கல்மேடைக்கு அருகில் செல்லமுடியவில்லை. மேடையில் தண்டபானி, சிவலிங்கம், நாகராஜன் அனைவரும் நிற்பதைப் பார்த்ததும் பிந்திவிட்டோமே என்று வருத்தமாக இருந்தது. என்ன செய்வது என்று தவிப்போடு சுற்றுமுற்றும் பார்த்தேன். அதற்குள் பாட்டுக்காரர் என்னைப் பார்த்துவிட்டார். பக்கத்தில் வா என்பதுபோல கையை அசைத்தார். அதைக் கேட்ட பிறகே எனக்குள்  நிம்மதி பிறந்தது. அங்கே அமர்ந்தவர்களின் தோள்களைத் தொட்டுத் தொட்டு நடுவில் வழியை உருவாக்கிக்கொண்டு நடந்து சென்று மேடைக்குச் சென்றுவிட்டேன்.
என்ன வீட்டுல பாடிப் பாத்தியா?” என்று கேட்டார் பாட்டுக்காரர். அதைக் கேட்டதும் வெட்கம் வந்தது. ஆச்சரியத்தோடு அவரைத் திரும்பிப் பார்த்து ம்என்றேன்.
. அப்படித்தான் இருக்கணும். அப்பறமா எழுதி வச்சிக்கோ. அப்பதான் நல்லா பாடமாவும். தெனமும் பாடு. பாடப் பாடத்தான் பாட்டு. ஆட ஆடத்தான் ஆட்டம். நீச்சல் வேணாம்னு நிக்கறமாதிரி பாட்ட ஒதுக்கக்கூடாது.”
ம்
இப்ப பாடறியா?”
இப்பவா?”
அதிர்ச்சியில் திகைப்புடன் நான் அவரைப் பார்த்தேன்.
ஆமா. இப்பத்தான். பாடு.”
அவர் என் பதிலை எதிர்பார்க்காமலேயே ஆர்மோனியப்பெட்டியை எடுத்து துருத்தியை அழுத்த ஆரம்பித்துவிட்டார்.
நான்...... இங்க...... எப்பிடி....” என்று சொற்கள் கூடி வராமல் நான் இழுத்தேன்.
நீதான். இங்கதான். சும்மா ஆரம்பி.....”
அவருடைய புன்னகை எனக்குத் தெம்பைக் கொடுத்தது. நான் திரும்பி என் நண்பர்களையும் பிள்ளையாரையும் பார்த்துவிட்டு மீண்டும் பாட்டுக்காரரின் முகத்தைப் பார்த்தேன். அவர் கண்களை அசைத்துவிட்டு ஆர்மோனியத்தின் மரக்கட்டைகள் மீது விரல்களைப் படரவிட்டார். தரையிலிருந்து ஒரு பறவை சிறகுகளை அசைத்து மேலெழுந்து வட்டமிட்டு வானத்தை நோக்கிப் பறப்பதைப்போல மெல்லிய இசை பொங்கி எழத்தொடங்கியது. நான்தீராத விளையாட்டுப் பிள்ளைஎன்று தொடங்கி அந்த இசையுடன் சேர்ந்துகொண்டேன். வானத்தில் மேகங்களுக்கு நடுவில் பறப்பதுபோல நான் உணர்ந்தேன். காலையில் அவர் சொல்லிக் கொடுத்த ஏற்ற இறக்கங்கள் எனக்கு துல்லியமாக நினைவில் எழுந்தன. நான் அதுபோலவே பாடினேன். ’மனமகிழும் நேரத்திலே கிள்ளிவிடுவான்என்று நிறைவு செய்த பிறகுதான் அங்கு நிறைந்திருந்தவர்களின் முகங்களைப் பார்த்தேன்.
அந்த இசையை மீட்டிக்கொண்டே அதே பாட்டின் தொடர்ச்சியாக அவர்அழகுள்ள மலர்கொண்டு வந்தேஎன்று அடுத்த சரணத்தைத் தொடங்கினார். நான் ஒவ்வொரு சொல்லாக அந்தச் சரணத்தைப் பின்தொடர்ந்தேன். ’பின்னலைப் பின்னின்றிழுப்பான்என மற்றொரு சரணத்தையும் அவர் பாடிவிட்டு மீண்டும் தீராத விளையாட்டுப் பிள்ளை வரிக்கு வந்து சேர்ந்தார்.
பெருமாள் பாட்டு ஒன்னு பாடுங்கநின்றிருப்போர் வரிசையிலிருந்து ஒரு அம்மா கேட்டார். “பெருமாள் பாட்டாம்மா, பாடிருவோம்மாஎன்று சிரித்துவிட்டுஊரிலேன் காணியில்லை உறவுமற்றொருவர் இல்லைஎன்று தொடங்கினார்.
அதை முடிப்பதற்காகவே காத்திருந்த மாதிரிஐயா, ஒரு சிவன் பாட்டுஎன்று கேட்டார் ஒரு முதியவர். “சிவன் பாட்டுதான? அந்த சுடுகாட்டு சுடலைக்கு ஒரு வணக்கம் சொன்னாதான நாளைக்கு நம்ம கட்ட வேகும். பாடிருவோம்ய்யாஎன்றபடி புன்னகைத்துக்கொண்டேசங்கரனைத் துதித்தாடு இனி  ஜனனமில்லைஎன்று தொடங்கினார்.
நேற்று எங்களுக்கு அவர் சொன்ன கீழ் ஸ்தாயி, மேல் ஸ்தாயி விளக்கங்கள் அக்கணத்தில் சட்டென தானாகவே என் நினைவுக்கு வந்தன. அவர் குரலில் சட்டென ஒரு தவிப்பும் மன்றாடுதலும் சேர்ந்துகொள்வதைப் பார்த்தேன். என்னவென சரியாகப் புரிந்துகொள்ள முடியாத பாரம் நெஞ்சை அழுத்தியது.
ஐயா, தாயாரப் பத்தி ஒரு பாட்டு
சரிங்கம்மா. அம்மாவுக்கும் ஒரு வணக்கத்த சொல்லிடுவோம்
அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம் ஆகம சம்ப்ரதாய நிபுணே ஸ்ரீஎன்று தலையசைத்துக்கொண்டே பாடினார்.
முருகருக்கும் ஒரு பாட்டு பாடுங்க சாமி
ஆமா. மறந்தே போச்சில்ல. ஆண்டிக்கு இல்லாத பாட்டா? அவன் நம்ம ஆளாச்சே. இப்ப பாடிடுவோம்
அவர் ஒரு சிறுவனைப்போல நாக்கைக் கடித்தபடி கண்களைச் சிமிட்டியதைப் பார்க்க அழகாக இருந்தது. கண்களை மூடி சில கணங்கள் யோசித்த பிறகுமுத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்என்று தொடங்கினார். ஒரு குன்றில் ஒவ்வொரு படியாக ஏறிச் செல்லும் மயிலைப்போல  அவர் குரல் அடுத்தடுத்த உயரங்களுக்குப் போய்க்கொண்டே இருந்தது.
அவர் பாடி முடித்தபோது மரத்தடியில் நிறைந்திருந்தவர்கள் தாமாகவே உணர்ச்சிவசப்பட்டுஆறுமுகனுக்கு அரோகராஎன்று குரலெழுப்பியபடி கைதட்டினார்கள். ஒருவர் கூடை நிறைய மாம்பழங்களைக் கொண்டு வந்து அவர் முன்னால் வைத்துவிட்டுச் சென்றார். அவரைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் ஆரஞ்சு, சாத்துக்குடி, வாழைப்பழம் என பழங்களைக் கொண்டுவந்து கூடையில் வைத்தார்கள். சிலர் சில்லறை நாணயங்களை  வைத்துவிட்டுச் சென்றார்கள். அவர் ஆர்மோனியப்பெட்டியை இறக்கிவைத்துவிட்டு தரையில் உட்கார்ந்துவிட்டார்.
என்னையும் சிவலிங்கத்தையும் அழைத்து பழக்கூடையை எடுத்துச் சென்று அங்கு கூடியிருப்பவர்கள் அனைவருக்கும் ஒவ்வொன்றாக வழங்கும்படி சொன்னார். வடிவேலுவும் நாகராஜனும் ஓடி வந்து கூடையை ஆளுக்கொரு பக்கம் தூக்கிக்கொண்டு நடந்தார்கள். நானும் சிவலிங்கமும் தண்டபானியும் ஒவ்வொரு பழமாக எடுத்து எல்லோருக்கும் கொடுத்தோம்.
என்னடா ஜெகதலப்பிரதாபா? நீதான் இங்க விநியோகமா?” என்ற குரலைக் கேட்டுத் திரும்பியபோதுதான் அங்கு ருக்மிணி மாமி நிற்பதைப் பார்த்தேன். எனக்கு அவரைப் பார்த்ததுமே மகிழ்ச்சி ஊற்றெடுத்து நெஞ்சை நிரப்பியது. ”இந்தாங்க மாமிஎன்று ஒரு பழத்தை அவருக்கும் மற்றொரு பழத்தை அவரை ஒட்டி நின்றுகொண்டிருந்த நந்தகுமாருக்கும் கொடுத்தேன். “ஆத்துப் பக்கம் ஏன்டா வரமாட்டற? ஒருநாள் வாடாஎன்றாள் மாமி. தொடர்ந்துதீராத விளையாட்டுப் பிள்ளையை நானும் கேட்டேன்டா. ஒன் குரல் திவ்யமா இருக்கு. விட்டுடாதடா, பாடிண்டே இருஎன்று சொன்னாள். ”சரிங்க மாமிஎன்றபடி அடுத்தவரை நோக்கி நகர்ந்தேன்.
சில்லறைகளை மட்டும் எடுத்து கைக்குட்டையில் வைத்துச் சுற்றி எடுத்துக்கொண்டு மேடைக்குத் திரும்பும் சமயத்தில் அக்ரகாரத்திலிருந்து ஒருவர் வேகமாக பாட்டுக்காரருக்குப் பக்கத்தில் வந்து நின்றார். நேற்று பார்த்த அதே முகம்.
அங்க வந்து பாடச் சொல்றாங்க.”
பாட்டுக்காரர் புன்னகைத்தபடிஅடடா, இப்பதான முடிச்சேன்என்றார்.
எங்களுக்காக இல்லைன்னாலும் சாமிக்காக வந்து பாடலாமே
சாமியா, அவர் அங்க மட்டுமா இருக்காரு? அவர் இல்லாத இடம்னு ஒன்னு இருக்கா என்ன? எல்லா இடத்துலயும் இருந்து பாடறதயெல்லாம் கேட்டுகினுதான இருக்காரு.”
அவர் எதுவும் பேசாமல் திரும்பித்திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றார். கூடியிருந்தவர்களும் எழுந்து கலைந்துசெல்லத் தொடங்கினர்.
மறுநாள் காலையில் சிவலிங்கம் வீட்டுக்கே வந்துவிட்டான். நானும் குளித்து முடித்து பழைய சோற்றைச் சாப்பிட்டு முடித்துவிட்டு அவனுக்காகக் காத்திருந்தேன். இருவருமாகச் சேர்ந்து கல்மேடைக்குச் சென்றோம்.
தொலைவிலிருந்தே பாட்டுக்காரர் புதுச்சட்டை அணிந்திருப்பதைப் பார்த்தோம். நேற்று அவர் அணிந்திருந்த சட்டை துவைக்கப்பட்டு வேலியோரமாக ஒரு கிளைமீது தொங்கி வெயிலில் உலர்ந்துகொண்டிருந்தது. “டேய், இன்னைக்கும் ஏரிக்கு போய் வந்திருக்காருடாஎன்று ரகசியமாகச் சொன்னான் சிவலிங்கம்.
நாங்கள் சென்று மேடையில் உட்கார்ந்திருந்த பாட்டுக்காரருக்கு வணக்கம் சொன்னோம். ”வாங்க வாங்க. வந்துட்டீங்களாஎன்று சிரித்தார் அவர். “இவனுங்க இன்னைக்கு ஒங்களுக்கு முன்னாலயே வந்துட்டாங்கஎன்று வடிவேலையும் நாகராஜனையும் கிரிதரனையும் சுட்டிக் காட்டிச் சொன்னார். அவர்கள் எருக்கம்பூக்களை ஒரு மாலையாகத் தொடுத்துக்கொண்டிருந்தனர்.
இந்த மாலை எதுக்கு?” என்று புரியாமல் பாட்டுக்காரரிடம் கேட்டேன்.
நம்ம புள்ளயாருக்குத்தான்.”
இன்னைக்கும் ஏரில அடுத்த கரை வரைக்கும் போய் வந்தீங்களா?” என்று ஆவலோடு நான் பாட்டுக்காரரிடம் கேட்டேன். ”ஆமாஎன்று தலையசைத்துச் சிரித்தார் அவர்.
இருட்டா இருக்கும்போதே குயில்சத்தம் கேட்டு எழுந்துட்டேன். இந்த மரத்துக்கு நெறய குயில்ங்க வருது. என்ன மாதிரியான சங்கீதம் தெரியுமா? அந்த குரலுக்கு முன்னால நான் பாடறதெல்லாம் பாட்டே இல்ல. பாட்டுல அந்தத் தாளத்த  கொண்டுவர முடியாமதான் நாம வார்த்தைங்கள போட்டு அடச்சிடறோம்
அவர் கண்களில் படர்ந்த பரவசத்தைப் பார்த்தபோது எதுவுமே தெரியாத எங்களுக்கே பரவசமாக இருந்தது.
ஒருசில நிமிடங்களுக்குள் மேடை நிறைந்துவிட்டது. மண்ணை ஏற்றிக்கொண்டு வந்த இரண்டு வண்டிகளை தொடர்ந்து ஓட்டிச் செல்ல முடியாமல் வண்டிக்காரர்கள் நிறுத்திவிட்டனர். கூட்டத்தைப் பார்த்து மாடுகள் மிரண்டன. நானும் தண்டபானியும் ஓடிச் சென்று மக்கள் கூட்டத்தை ஒதுங்கவைத்து வண்டிகள் செல்ல வழியை ஏற்படுத்திக் கொடுத்தோம்.
எருக்கமாலையைக் கட்டி முடித்ததும் நாகராஜன் அதை எடுத்துச் சென்று பிள்ளையார் கழுத்தில் சூட்டினான். “இப்ப பாரு, நம்ம புள்ளயார் எவ்வளவு அழகா இருக்காருஎன்று சிரித்துக்கொண்டே சொன்னார் பாட்டுக்காரர். கூட்டத்திலிருந்து எழுந்து வந்த ஒரு ஆயா  தன் மடியிலிருந்த பூக்களையெல்லாம் பிள்ளையார் முன்னால் வைத்துவிட்டு கற்பூரம் ஏற்றி வணங்கினாள். பாட்டுக்காரர் அந்தச் சுடரைத் தொட்டு வணங்கினார். நாங்களும் வணங்கிவிட்டு கீழே தரையில் விழுந்து எழுந்து காதுகளைப் பற்றிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டோம்.
ம், நாம ஆரம்பிக்கலாமா?” என்று என் தோளைத் தட்டினார் பாட்டுக்காரர். நான் ஆவலோடு சென்று ஆர்மோனியப் பையை எடுத்து வந்து அவருக்கு முன்னால் வைத்தேன். அவர் பிள்ளையார் முன்னால் அமர்ந்து துணிமூட்டையிலிருந்து ஆர்மோனியத்தை எடுத்து முன்னால் வைத்துக்கொண்டார். விரல்கள் அங்குமிங்கும் படரவிட்டு இசையைக் கூட்டினார். ஒருகணம் என்னை அருகில் வருமாறு சைகை காட்டிவிட்டுஅந்தக் குயில் எப்படி கூவிச்சி தெரியுமா?” என்று கேட்டார். நான்எப்படி?” என்பதுபோல அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் துருத்தியை மெல்ல இழுத்தபடி ஒரு மரக்கட்டையை ஒரு பூவைத் தொடுவதுபோல மெல்லமெல்லத் தொட்டார். அப்போது எழுந்த ஓசை உண்மையிலேயே அங்கு ஒரு குயில் வந்து கூவுவதைப்போல இருந்தது. நம்ப முடியாதவனாக நான் அவர் விரல்களையே பார்த்தேன். அது குயிலின் குரலேதான். ஆச்சரியத்தில் வாய் பிளந்தபடி அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அற்புதமா இருக்குது. கண்ண மூடினா குயில்தான் தெரியுது.”
சங்கீதத்தையே அப்பிடித்தான் கண்டுபுடிச்சாங்க. எல்லாமே ஒரு சேர்மானம்தான். குயில், மயில், ஆடு, காளை, குதிரை, யானை, அன்றில்னு பறவைகளுடைய குரல்களையும் விலங்குகளுடைய குரல்களையும் கூட்டிக் கொறச்சி செய்ற வித்தை. இதான் ராகம் தாளம்.”
குயிலின் குரலோசையிலிருந்தே விடுபட முடியாமல் திகைத்திருந்த என்னை பாட்டுக்காரரின் பேச்சு மேலும் மேலும் பரவசத்தில் ஆழ்த்தியது.
சரி, இப்ப பிள்ளையாரைப் பத்தி பாடுவோம் என்ன?” என்றபடி மரக்கட்டைகளை அழுத்தி வேறு மாதிரியான இசை எழும்படி செய்தார். சில கணங்கள் கண்களை மூடிவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்என்று தொடங்கினார். அப்புறம் அடுத்தடுத்துஅல்லல்போம் வல்வினைபோம்’, ’முன்னவனே யானை முகத்தானே’ ‘களியானைக்கன்றை’ ’மருப்பையொரு கைக்கொண்டுஎன்று அடுக்கிக்கொண்டே சென்றார்.
அவர் ஆர்மோனியப்பெட்டியை இறக்கியதும் நேற்று போலவே பலரும் வந்து கூடையில் பழங்களை வைத்துவிட்டுச் சென்றனர். நாங்கள் அங்கிருந்தோர் அனைவருக்கும் அந்தப் பழங்களை உடனடியாகப் பிரித்துக் கொடுத்தோம்.
அக்ரகாரத்தெருவிலிருந்து இரண்டு பேர் வேகமாக கல்மேடைக்கு அருகில் வந்து நின்றார்கள். ஆர்மோனியப்பெட்டிக்குப் பக்கத்தில் இருந்த பாட்டுக்காரரிடம்இங்க பாடறவரு யாரு?” என்று கேட்டார் ஒருவர். பாட்டுக்காரர் பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே என்னைப் பார்த்தார். நான் துடுக்காக அவரைப் பார்த்துபாடறவருகிட்டயே வந்து நீங்கதான் பாடறவரானு கேக்கறிங்கஎன்றேன். அதைக் கேட்டு அவர் முகம் சிவந்துவிட்டது. ”சரி சரிஎன்று சமாளித்தார். பிறகுசரி, கெளம்புங்கஎன்று பாட்டுக்காரரைப் பார்த்துச் சொன்னார்.
பாட்டுக்காரர்எங்க?” என்று அவரிடம் கேட்டார்.
ராமசாமி ஐயர் உங்கள கையோட அழச்சிண்டு வரச் சொன்னார்
ஏன்?”
இன்னைக்கு அவா ஆத்துல பெரிய பூஜை நடக்குது. அதுல நீங்க பாடினா நன்னா இருக்கும்ன்னு பிரியப்படறார்.”
சரி
சரின்னு சொல்லிட்டு உக்காந்துண்டா போதுமா? வாங்கோ போவலாம்
எனக்கு யார் வீட்டுக்கும் போய் பாடற பழக்கமில்ல தம்பி. நான் சும்மா இப்படி நாடோடியா பாடிட்டே போற ஆள். போய் சொல்லுங்க.”
அவர் யார்னு தெரியாம நீங்க பேசறேள்னு நெனைக்கறேன். அவர் இந்த அக்ரகாரத்துலயே பெரிய புள்ளி. விழுப்புரம் பெரிய கோர்ட்ல மாஜிஸ்ட்ரேட். இந்த வட்டாரத்துல அவர் பேச்சுக்கு மறுபேச்சே இல்ல.”
பாட்டுக்காரர் எந்த அசைவுமில்லாமல் உட்கார்ந்தபடியே இருந்தார்.
எழுந்து வாங்கோ
தம்பி, நான் சொல்லவேண்டியத சொல்லிட்டேனே. நீங்க கெளம்பலாம்
அந்தப் பதிலைக் கேட்டு அவர் முகம் இருண்டுவிட்டது.  அவர்  முகம் போன போக்கே சரியில்லை. நான்கு பக்கங்களிலும் மாறிமாறிப் பார்த்துவிட்டு திரும்பிச் சென்றார்.
சரி, நாம விளையாடற நேரம் வந்துட்டுது. பந்து விளையாடலாமா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார். நான் உற்சாகமாக தலையசைத்துக்கொண்டே எழுந்தேன்.
மேடையில் அமர்ந்திருந்த கூட்டம் அசைவில்லாமல் அப்படியே அமர்ந்திருந்தது. நாங்கள் குழப்பத்துடன் அவர்களைப் பார்த்தோம்.
எங்க ஊருக்கு யாரும் இந்த மாதிரிலாம் வந்ததில்ல சாமி. நீங்க வந்தது ஒரு பெரிய அதிசயம். கடவுளா பாத்து உங்கள அனுப்பி வச்சிருக்காரு. எங்க கஷ்டம் தீர்ற மாதிரி ஒரு பாட்டு பாடுங்கஎன்று ஒருவர் எழுந்து சொன்னார். உடனேஆமா பாடுங்க” “ஆமா பாடுங்கஎன்று பல குரல்கள் எழுந்தன. ”என்ன செய்யலாம்?” என்பதுபோல என்னையும் சிவலிங்கத்தையும் பார்த்தார் பாட்டுக்காரர். “சரி, சாய்ங்காலமா வெளயாடிக்கலாம். பாட்டே பாடுங்கஎன்று சொன்னோம்.
பாட்டுக்காரர் ஆர்மோனியத்தை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டார். சில கணங்களிலேயே இசையைக் கூட்டிஉனது திருவடி நம்பிவந்தேன் எனக்கு ஒருவருமில்லை நான் ஏழைஎன்று பாடத் தொடங்கினார். அந்தக் குரலைக் கேட்கும்போதே நெஞ்சு அடைப்பதுபோல இருந்தது. கண்களில் நீர் தளும்பத் தொடங்கியது. அரசமரத்தைவிட உயரமான உருவத்துடன் யாரோ ஒருவர் அங்கு நின்று எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருப்பதுபோலத் தோன்றி என் உடல் அதிர்ந்தது. அந்தப் பாடல் முடித்ததும்காணாத கண்ணென்ன கண்ணோ வீணான கண்மயில் கண்ணது புண்ணோஎன்ற பாட்டு தொடங்கியது. கிட்டத்தட்ட அனைவருடைய கண்களும் குளமான நிலையில்கண்டேன் கலிதீர்ந்தேன் கருணைக்கடலை நான் கண்டேன்என்று பாடத் தொடங்கினார் பாட்டுக்காரர். அந்த வரிகள் வழியாகவும் ஆர்மோனியத்திலிருந்து பீறிட்ட இசை வழியாகவும் பாய்ந்த ஒரு பரவசத்தில் திளைத்திருந்தேன்.
அந்தப் பாட்டு முடியும் தருணத்தில் அக்ரகாரத் தெருவிலிருந்து இருபதுமுப்பது பேர் கூட்டமாகத் திரண்டு வந்தார்கள். எல்லோருக்கும் முன்னால் வந்தவர் வெள்ளை வெளேரென வேட்டி அணிந்திருந்தார். ஒரு துண்டுமட்டும் தோளில் இருந்தது. நெற்றியுலும் மார்பிலும் தோள்களிலும் திருநீற்றின் பட்டைகள் உலர்ந்து படிந்திருந்தன. கழுத்தில் ருத்திராட்ச மாலை தொங்கியது. அவருக்குப் பக்கத்தில் சற்று முன்னால் வந்து சென்றவர் நின்றிருந்தார்.
சட்டென எனக்குள் ஒரு பயம் படர்ந்தது. என்ன நடக்குமோ என்று மனத்துக்குள் பதறத் தொடங்கினேன். திரும்பி பாட்டுக்காரரைப் பார்த்தேன். அவர் அங்கு எதுவுமே நிகழாததுபோல தன் பாட்டின் உலகத்துக்குள் இருந்தார். ருத்ராட்சமாலை அணிந்தவர் பாட்டு முடியும் வரைக்கும் காத்திருந்து பாட்டுக்காரருக்கு வணக்கம் சொன்னார்.
நான் ராமசாமி. நீங்க நன்னா பாடறேள்னு கோவில்ல சொன்னா. இன்னைக்கு நம்ம ஆத்துல சத்யநாராயண பூஜை. நீங்க வந்து பாடனா நன்னா இருக்கும்ன்னுதான் அழச்சிண்டு வரச்சொன்னேன். என் மனசில வேற எந்த எண்ணமும் இல்ல. ஆத்துக்கெல்லாம் நீங்க வரமாட்டேள்னு தம்பி வந்து சொன்னான். அதான் நானே கெளம்பி வந்துட்டேன்.”
உக்காருங்க
பாட்டுக்காரருக்கு முன்னால் அவர் காலை மடித்து அமர்ந்தார். “அண்ணா நாற்காலிஎன்று அவசரமாக எழுந்த குரலை திரும்பியே பார்க்காமல் கையை உயர்த்தி அடக்கினார். அவரைத் தொடர்ந்து வந்தவர்கள் அனைவரும் கீழே அமர்ந்தனர்.   மேடையில் இடம் கிடைக்காதவர்கள் தரையில் அமர்ந்திருந்த கூட்டத்தோடு அமர்ந்தனர்.
கங்கையை பாக்க நாமதானே கங்கைகிட்ட போவணும். கங்கையை நம்ம பக்கத்துக்கு இழுக்க நெனைக்கலாமோ. பெரிய தப்பு பண்ணிட்டேன்.”
பாட்டுக்காரர் ஆர்மோனியப்பெட்டியைத் தொட்டு சுருதி கூட்டியபடியேஎன்ன பாட்டு வேணும், சொல்லுங்கஎன்று கேட்டார்.
நீங்க சுதந்திரமா எது பாடினாலும் சரி
ராமசாமி பாட்டுக்காரரின் முகத்திலேயே கவனத்தை குவித்திருந்தார். பாட்டுக்காரர் மெல்லயாருக்கு பொன்னம்பலவன் கிருபை இருக்குதோ அவனே பெரியவனாம்என்று அடியெடுத்து பாடத் தொடங்கினார். பார்வைக்குத் தென்படாத ஒரு பேருருவம் எங்களுக்குப் பக்கத்திலேயே உயர்ந்து நிற்கும் உணர்வை நான் மறுபடியும் அடைந்தேன். அந்தப் பாட்டை முடித்ததுமே அவர்ஆடும் சிதம்பரமோ ஐயன் கூத்தாடும் சிதம்பரமோஎன்று தொடங்கினார். அதைத் தொடர்ந்துபாதமே துணை ஐயமே’ ‘பாடுவாய் மனமே சிவனைக் கொண்டாடுவாய் தினமே’ ‘வாருங்கள் வாருங்கள் சொன்னேன் நீங்கள் வாயாடாது ஓடி வருவீர் என் முன்னே’ ‘உத்தாரம் தாரும் ஐயே எனக்கு ஒருவருமில்லை நான் பரகதி அடைய’ ‘தில்லையம்பலத் தலமொன்று இருக்குதாம்’ ‘தில்லை வெளியிலே கலந்துகொண்டால்’ ‘ஆடிய பாதத்தைத் தாரும் உம்மைத் தேடி வந்தோம் இதோ பாரும்’ ‘கைவிடலாது காமதேனு அல்லவோஎன்று பாடிக்கொண்டே சென்றார். எல்லாவற்றையும் பாடி முடித்துவிட்டு புன்னகைத்தபடியே ஆர்மோனியத்தை இறக்கினார்.
நான் ராமசாமியைப் பார்த்தேன். அவர் கண்களிலிருந்து நீர் பெருகி கோடாக வழிந்தபடி இருந்தது. அவருக்கு எவ்விதமான சுய உணர்வும் இல்லை. ஆர்மோனியம் நின்று வெகுநேரத்துக்குப் பிறகே அவர் மனம் இந்த உலகத்துக்குத் திரும்பி வந்தது. சுற்றி அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தபடி துண்டின் நுனியால் கண்களைத் துடைத்துக்கொண்டார்.
அந்த நடராஜன அப்படியே கண்முன்னால கொண்டுவந்து நிறுத்திட்டேள். என்ன சொல்றதுனே தெரியலை. வார்த்தயே வரலை.  வார்த்தைகள் எல்லாம் எங்கயோ காணாம போய்ட்டமாதிரி இருக்கு.  மனசே லேசாய்ட்டுது. நீங்களே இங்க தேடி வந்து பாடனதுலாம் இந்த ஊர் செஞ்ச புண்யம்.”
குரல் இடற ராமசாமி திரும்பினார். யாரோ ஒருவர் முன்னால் வந்து ஒரு மாலையை நீட்டினார். இன்னும் மூன்று பேர் தம்மிடம் இருந்த பழத்தட்டுகளையும் வேட்டி துண்டு வைத்த தட்டையும் எடுத்துச் சென்று ஆர்மோனியத்துக்கு அருகில் வைத்துவிட்டுத் திரும்பினர்.
ராமசாமி மாலையை உயர்த்தி பாட்டுக்காரரின் கழுத்தில் அணிவிக்க கைகளை உயர்த்தினார்.
ஹா, எனக்கா?” என்றபடி ஒரு கணத்தில் நின்ற இடத்திலிருந்து பின்வாங்கிய பாட்டுக்காரர்அங்க, அங்க அவருக்கு போடுங்கஎன்றபடி பிள்ளையாரின் பக்கம் சுட்டிக் காட்டினார். ராமசாமி மாலையை பிள்ளையாருக்குச் சூட்டிவிட்டு பாட்டுக்காரரைப் பார்த்து புன்னகையுடன் வணங்கினார். பிறகு வணங்கிய நிலையிலேயே மேடையிலிருந்து இறங்கி நடந்து சென்றார்.
(பதாகைமே 2020)